Print Version|Feedback
India: Motherson autoworkers strike indefinitely in Tamil Nadu
மதர்சன் வாகனத் தொழிலாளர்கள் தமிழகத்தில் காலவரையின்றி வேலைநிறுத்தம் செய்கிறார்கள்
By Sasi Kumar and Moses Rajkumar,
2 September 2019
மதர்சன் ஆட்டோமோட்டிவ் டெக்னாலஜிஸ் அண்ட் இன்ஜினியரிங் (MATE) நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 500 நிரந்தரத் தொழிலாளர்கள் அவர்கள் புதிதாக அமைத்த தொழிற்சங்கமான செங்கை அண்ணா மாவட்ட ஜன நாயக தொழிலாளர் சங்கத்தை அங்கீகரிக்கக் கோரி ஆகஸ்ட் 26 ஆம் தேதியிலிருந்து காலவரையின்றி வேலைநிறுத்தத்தில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
குறைந்த ஊதியங்கள், கடுமையான வேலை நிலைமைகள் மற்றும் தரமற்ற உணவு ஆலையின் உணவகத்தில் வழங்கப்படுவதை எதிர்த்துப் போராடுவதற்காக MATE தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை நிறுவினர். இந்தியாவின் உள்நாட்டு வாகனத் தொழிலுக்கு வடிவமைக்கப்பட்ட பாகங்கள், சேர்க்கைகள் மற்றும் தொகுதிகள் ஆகியவற்றின் மிகப்பெரிய விநியோகஸ்தராக இந்நிறுவனம் இருக்கிறது.
மாவோயிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிச லெனினிச-விடுதலை அல்லது சிபிஐ-எம்.எல்-விடுதலை ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படும் கூட்டமைப்பான அகில இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சிலுடன் (ஏ.ஐ.சி.சி.டி.யு) இணைந்திருக்கும் தொழிற்சங்கத்தை கம்பனி நிர்வாகம் சட்டபூர்வமாக அங்கீகரிக்க மறுக்கிறது.
ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியினர்
MATE, போந்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது மற்றும் இது தமிழக மாநிலத்தின் தலைநகரான சென்னையிலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள ஒரகடம் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் ஒரு பகுதியாகும். இங்கு 2,000 க்கு சற்று அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஆனால் அதில் 568 பேர் மட்டும் தான் நிரந்தர ஊழியர்கள். மேலும் 1,000 தொழிலாளர்கள் ஒப்பந்தத்தில் பணியாற்றுகின்றனர், மேலும் 500 பயிற்சியாளர்கள் அரசாங்கம் நடத்தும் வழங்கப்படும் திட்டத்தின் கீழ் பணிபுரிகின்றனர்.
நிரந்தர ஊழியர்களுக்கு மாதத்திற்கு 11,500 ரூபாய் (160 அமெரிக்க டாலர்) மட்டுமே வழங்கப்படுகிறது, ஒப்பந்த தொழிலாளர்கள் 10,500 ரூபாய் பெறுகிறார்கள். ஆலையில் பணிபுரியும் 450 பெண் தொழிலாளர்களில் 40 பேர் மட்டுமே நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர்.
மதர்சன் சுமி சிஸ்டம்ஸ் லிமிடெட் (எம்.எஸ்.எஸ்.எல்) இன் பாலிமர் பிரிவான MATE, 1986 ஆம் ஆண்டில் சம்வர்தனா மதர்சன் குழுமம் (SMG) மற்றும் ஜப்பானை தளமாகக் கொண்ட சுமிட்டோமோ வயரிங் சிஸ்டம்ஸ் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாக நிறுவப்பட்டது. இந்தியாவைத் தவிர, இது 42 நாடுகளில் இயங்குகிறது, 135,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைப் பயன்படுத்துகிறது, 2018 ஆம் ஆண்டில் 11.7 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டியது.
ஜூலை 31 ம் தேதி, வேலைக்கு வந்த தொழிலாளர்களை தற்காலிகமாக வேலை செய்யவிடாமல் தடுத்த கம்பனி நிர்வாகம், எந்த தொழிற்சங்கத்திலும் சேரமாட்டோம் என்ற உறுதிமொழியில் கையெழுத்திடுமாறு அவர்களை கோரியது, பெரும்பான்மையான தொழிலாளர்கள் இந்த ஜனநாயக விரோத தாக்குதலை நிராகரித்து, இரண்டு நாள் உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தை நடத்தினர்.
தொழிற்சங்க விண்ணப்பத்தை தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் தொடர அனுமதிக்கும்படி நிறுவனத்திற்கு தமிழகத்தின் தொழிலாளர் ஆணையர் "அறிவுறுத்தினார்", மேலும் அவர்கள் எந்தவிதமான தண்டனை நடவடிக்கைகளினாலும் பாதிக்கப்படக்கூடாது என்றும் கூறப்பட்டது.
தொழிலாளர் ஆணையரின் ஆலோசனையை ஏற்றுக் கொள்வதாக MATE பாசாங்கு செய்த அதே சமயம், தொழிற்சங்க பிரதிநிதிகளை அங்கீகரிக்க மறுத்து தொழிலாளர்களை அச்சுறுத்த முயன்றது. நிறுவன மேலாளர்கள், தொழிலாளர்களின் பெற்றோருக்கு போன் செய்து, தங்கள் மகன்களும் மகள்களும் நிறுவனத்திற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்வதால் வேலை இழக்க நேரிடும் என்று அவர்களிடம் தெரிவித்தனர். இப்படியான ஆத்திரமூட்டல்கள் குறித்த கோபம் தான் ஆகஸ்ட் 26 அன்று காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்ய தொழிற்சங்கத்தை கட்டாயப்படுத்தியது.
எதிப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள்
“நாட்டின் தொழிலாளர் சட்டங்களை அவமதிப்பதற்காக", MATE நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு AICCTU அழைப்பு விடுத்து பதிலளித்துள்ளது.
இந்த விண்ணப்பங்கள் ஒரு முட்டு சந்தில் தான் நிற்கிறது. பெருவணிக சார்பு கொள்கைகளை ஈவிரக்கமின்றி திணிக்க வலதுசாரி அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அதிமுக) நிர்வாகம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது இந்து மேலாதிக்க தேசிய அரசாங்கத்துடன் நெருக்கமாக ஒத்துழைக்கிறது.
ஜூன் மாதத்தில், வாகன உதிரிப்பாக தொழிலை "பொது பயன்பாட்டு சேவை" என்று அறிவிப்பதன் மூலம் அத்துறையில் அனைத்து வேலைநிறுத்தங்களையும், அதிமுக திறம்பட தடை செய்தது. அதற்கு, மெட்ராஸ் (சென்னை) உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 1 ம் தேதி இடைக்கால உத்தரவை பிறப்பித்தது, அது, இந்த ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தியது, இந்த சட்டம் மீண்டும் விதிக்கப்படும் என்று அச்சுறுத்தல் உள்ளது.
"உற்பத்தியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக", அஸ்ஸாம், ஒடிசா மற்றும் ஆந்திரா போன்ற பிற இந்திய மாநிலங்களில் இருந்து ஏழை தொழிலாளர்களை பணியமர்த்த, புதிய ஆள் சேர்ப்பில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக AICCTU தலைவர் ராஜகுரு கண்டித்துள்ளார், மேலும் இந்த ஆட்சேர்ப்பை நிறுத்துமாறு நிறுவனத்தை கட்டாயப்படுத்த அதிமுக அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ராஜகுருவின் வேண்டுகோள்கள், MATEஆலையில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அஸோசியேட்டுகள் அனைவரையும் ஒன்று திரட்ட மறுத்து அல்லது தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் வேறு இதர பகுதிகளுள்ள அவர்களது சக தொழிலாளர்களை அணிதிரட்ட மறுத்து கவனத்தைத் திசை திருப்புவதையும், தொழிலாளர்களை பிளவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான ஸ்ராலினிச இடது முன்னணியின் வட்டத்திற்குள் இருக்கும் AICCTU மற்றும் CPI-ML- விடுதலை, வாகனத் தொழில்துறையின் இலாபங்களை பாதுகாக்கிறது மேலும் அவற்றுக்கு தொழிலாள வர்க்க ஆதரவைத் திரட்டும் எண்ணம் எதுவும் கிடையாது. இந்த மாவோயிச குழு பீகார் மாநிலத்தில் பெருவணிக காங்கிரஸ் கட்சியுடன் ஒரு தேர்தல் கூட்டணியை உருவாக்கி மாற்று அரசாங்கத்தை அமைப்பதற்கு உதவுவதாக உறுதியளித்தது.
ஹரியானா மாநிலத்தின் மானேசரில், மாருதி-சுசுகி வாகனம் தயாரிக்கும் ஆலைத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் படிப்பினைகளை MATE வாகன உதிரிப்பாக தொழிலாளர்கள் படிக்க வேண்டும். மாருதி சுசுகி வாகன தொழிலாளர்கள் 2011-12 ஆம் ஆண்டில் தங்கள் சொந்த தொழிற்சங்கத்தை நிறுவி, ஜப்பானுக்கு சொந்தமான நாடுகடந்த நிறுவனத்திற்கு எதிராக வெளிநடப்பு மற்றும் உள்ளிருப்பு வேலைநிறுத்தங்களை உள்ளடக்கிய ஒரு உறுதியான போராட்டத்தை நடத்தினர்.
நிறுவனமும் உள்ளூர் அதிகாரிகளும் 2012 ஜூலை மாதம் வன்முறை ஆத்திரமூட்டலைத் தொடங்கினர், இது நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்வதற்கும், ஆலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதற்கும் வழிவகுத்தது.
மார்ச் 2017 இல், தொழிற்சங்க செயற்குழுவின் அனைத்து 12 உறுப்பினர்களும் உட்பட 13 தொழிலாளர்கள், கொலை குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர்.
இந்தியாவின் ஸ்ராலினிச கட்சிகள் தலைமையிலான அனைத்து இந்திய தொழிற்சங்கங்களும் மாருதி-சுசுகி தொழிலாளர்களை தனிமைப்படுத்தி நிறுவனத்தின் தயவில் விட்டுவிட்டன.
இந்திய வாகனத் துறையும், அதன் உலகளாவிய சகாக்களைப் போலவே, பெருகிவரும் நெருக்கடியை எதிர்கொள்கிறது. தானியங்கி உபகரண உற்பத்தியாளர்கள் சங்கம் வின்னி மேத்தா, தொழில் ஒரு "மந்தநிலை கட்டத்தில்" இருப்பதாகக் கூறினார். இந்திய வாகன உற்பத்தியாளர்கள், பகுதி உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஏப்ரல் முதல் 350,000 தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்ததாக, ஆகஸ்ட் 7 ம் தேதி ராய்ட்டர்ஸ் அறிவித்தது, இதில் பெரும்பான்மையானவர்கள் ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியர்கள் ஆவார் என்றும் அறிவித்தது.
வேலைநிறுத்தம் செய்யும் MATE தொழிலாளர்கள் நிறுவனத்தின் தாக்குதல்களை எதிர்த்துப் போராட வேண்டுமாயின் ஸ்ராலினிச கட்டுப்பாட்டில் உள்ள, முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களிலிருந்து விலகி, தங்களது சொந்த சாமானிய குழுக்களை நிறுவு வேண்டும் மேலும் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தில், இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள வாகனத் தொழிலாளர்களை அணிதிரட்ட போராடுவதன் மூலமும் தான் அவர்களின் வேலைகளையும் நிலைமைகளையும் பாதுகாக்க முடியும்.
WSWS நிருபர்கள் கடந்த மாதம் வேலைநிறுத்தம் செய்த MATE தொழிலாளர்களிடம் பேசினர், வாகனத் தொழில்துறை நிறுவனங்கள் மீதான ஆழ்ந்த உலகளாவிய தாக்குதல் மற்றும் அதிக ஊதியங்கள் மற்றும் மேம்பட்ட நிலைமைகளுக்காக வேலைநிறுத்தம் செய்ய பெருமளவில் வாக்களித்த அமெரிக்க வாகனத் தொழிலாளர்கள் மத்தியில் அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சி நடத்தி வரும் சர்வதேச பிரச்சாரம் குறித்து பேசினர்.
வி.பாலகிருஷ்ணன்
வி.பாலகிருஷ்ணன், 44, அவர் 12 ஆண்டுகளாக MATE நிறுவனத்தில் பணிபுரிந்தார், ஆனால் அவரது சம்பளம் மாதத்திற்கு 11,500 ரூபாயாக தான் இன்னும் உள்ளது என்று விளக்கினார். அவர் ஒவ்வொரு நாளும் ஷோலிங்கர் கிராமத்திலிருந்து பயணம் செய்ய வேண்டும், அதற்கு ஒவ்வொரு மாதமும் 3,500 ரூபாயை போக்குவரத்துக்காக செலவிடுகிறார். இவரது மாத வாடகை 2,000 ரூபாய்.
தரமான அரிசி வாங்க என்னால் முடியாது, எனவே எங்கள் குடும்பம் ஒவ்வொரு நாளும் தரமற்ற ரேஷன் அரிசியில் [அரசாங்கத்தால் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது] வாழ வேண்டும், ”என்று அவர் கூறினார். பாலகிருஷ்ணனுக்கு வீட்டில் கேஸ் பர்னர் அல்லது வேறு சரியான சமையல் உபகரணங்கள் கிடையாது.
எனது குடும்பத்தை நிதி ரீதியாக பராமரிப்பது மிகவும் கடினம் என்று நான் உணர்ந்தேன், ஸ்ரீபெரம்புதூர் உள்ளூராட்சி அலுவலகத்திற்கு முன்னால் தற்கொலைக்கு முயன்றேன்” என்று பாலகிருஷ்ணன் கூறினார்.
“வேலைநிறுத்தத்தில் இணையும்படி ஒப்பந்த தொழிலாளர்களை தொழிற்சங்கம் அழைக்கவில்லை, ஏனெனில் அது "அவர்களின் வேலைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும்" என்று கூறியதாக பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
உண்மையில், தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் செய்யும் நிரந்தர தொழிலாளர்களை தனிமைப்படுத்துவது மட்டுமல்லாமல், தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பெருமளவிலான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த இப்போது பயன்படுத்தப்படும் ஒப்பந்த வேலை முறையை ஏற்றுக்கொள்கிறது. இந்த பிரச்சினை குறித்து தொழிற்சங்கத்துடன் பேசப்போவதாகவும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கிய போராட்டங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு உண்மையான சோசலிச மூலோபாயம் தேவை என்றும் பாலகிருஷ்ணன் கூறினார்.
தியாகராஜன்
39 வயதான தியாகராஜன் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும், தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக போராடியதற்காகவும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் 2010 இல் நிறுவனத்தில் சேர்ந்தார், ஆனால் கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக ஊதிய உயர்வு பெறவில்லை.
“தொழிலாளர்கள் பல அடிப்படை சலுகைகளையும் இழக்கின்றனர், ”என்றார் அவர். "எங்கள் மோசமான நிலைமைகளின் காரணமாகவே நாங்கள் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கி எங்கள் கோரிக்கைகளுக்காக போராட முடிவு செய்தோம். ஆகஸ்ட் 24 அன்று நிறுவனம் எனக்கு ஒரு இடைநீக்கக் கடிதத்தை வெளியிட்டது, அதில் ‘ஒழுக்கமற்ற நபர் என்று என் மீது குற்றம் சாட்டியது, ஆனால் நான் அதை ஏற்க மறுத்துவிட்டேன். ”
“நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு போன்ற தொழிலாளர்களுக்காக பூகோள ரீதியாக செயல்படும் உலகக் கட்சியை முழுமையாக ஆதரிப்பதாக தியாகராஜன் கூறினார். "உலகளவில் எங்கள் போராட்டத்தை நீங்கள் எடுப்பீர்களாயின் அதற்கு நான் ஒத்துழைக்க விரும்புகிறேன்."
பழனி
மற்றொரு மதர்சன் தொழிலாளியான பழனி, நிறுவனத்தில் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் வேகமாக குறைந்து வருவது குறித்து பேசினார். "சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெரும்பாலான வாகன உதிரிபாக நிறுவனங்களில் ஒரு நிரந்தர தொழிலாளிக்கு குறைந்தபட்சம் 25,000 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. நான் இந்த நிறுவனத்தில் 14 ஆண்டுகளாக வேலை செய்கிறேன், ஆனால் எனது சம்பளம் இன்னும் 11,000 ரூபாய் தான்.”
“இந்தத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் 12 மணிநேரம் உழைக்கிறார்கள், கூடுதல் நான்கு மணிநேர கட்டாய கூடுதல் நேர வேலை. ஒப்பந்தத் தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் வட இந்தியாவில் இருந்து வந்தவர்கள். [PF மற்றும் ESI] ஓய்வூதிய நிதியைப் பெற அவர்களுக்கு உரிமை இல்லை. இந்த போராட்டத்தில் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருவரும் சேர்ந்து அதை விரிவுபடுத்துவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்
“ஒரு தொழிலாளி என்ற முறையில் நான் அமெரிக்க வாகனத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு எனது ஆதரவைத் தருவேன். உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட போராட்டங்களுக்காக போராடுவதே ஒரே சாத்தியமான திட்டம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.”