ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The struggle of autoworkers against GM, Ford, and Chrysler requires a global strategy

ஜிஎம், ஃபோர்ட் மற்றும் கிறைஸ்லருக்கு எதிரான வாகனத்துறை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஓர் உலகளாவிய மூலோபாயம் அவசியப்படுகிறது

Jerry White
11 September 2019

அமெரிக்காவில் ஜெனரல் மோட்டார் (ஜிஎம்), ஃபோர்ட் மற்றும் கிறைஸ்லர் நிறுவனங்களின் 158,000 தொழிலாளர்களுக்கான நான்காண்டு கால ஒப்பந்தங்கள் செப்டம்பர் 14 இல் முடிய வெறும் ஒரு சில நாட்களே உள்ளன.

சரிந்து வரும் நிஜமான கூலிகள், குறைவூதியம் மற்றும் தற்காலிக வேலைகளின் அதிகரிப்புக்கு எதிராகவும், வேலைகள் மற்றும் சலுகைகள் மீதான தாக்குதலுக்கு எதிராகவும் போராட வாகனத்துறை தொழிலாளர்கள் தீர்மானகரமாக உள்ளனர். இம்மாத தொடக்கத்தில், தொழிலாளர்களில் 96 சதவீதத்தினர் 1976 க்குப் பின்னர் முதல் மிகப் பெரிய வாகனத்துறை வேலைநிறுத்தமாக இருக்கக்கூடிய ஒன்றை தொடங்குவதற்கு வாக்களித்தனர்.

ஒப்பந்தங்கள் முடிவடைகின்ற நிலையில் தொழிலாளர்கள் ஓர் அசாதாரண சூழலை முகங்கொடுக்கின்றனர். அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக் கொள்ளும் அமைப்பு, ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் (UAW) தலைவர் உட்பட அந்த அமைப்பின் உயர்மட்ட நிர்வாகிகள் குற்ற வழக்குகளை முகங்கொடுக்கக்கூடும் என்ற நிலையில், அச்சங்கம் பெருநிறுவன நிர்வாகத்தின் கையூட்டு கருவியாக அம்பலமாகி உள்ளது.

அமெரிக்க தொழிலாளர்கள் இந்த போராட்டத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கையில், தென் கொரியாவில் 10,000 ஜிஎம் தொழிலாளர்கள் 22 ஆண்டுகளில் முதல் முறையாக அந்நாட்டில் முழு அளவிலான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மூன்று நாள் வேலை வெளிநடப்பு மேற்கு சியோலின் இன்சியோன் மற்றும் தலைநகரில் இருந்து 250 மைல் தென்கிழக்கில் உள்ள சாங்வொன் ஜிஎம் உற்பத்தி ஆலைகளையும், ஜிஎம் தொழில்நுட்ப மையத்தையும் பாதித்தது. இதை தொடர்ந்து, தொழிலாளர் செலவுகள் மிகவும் அதிகமாக இருப்பதால் செயல்பாடுகளை நிறுத்த இருப்பதாக ஜிஎம் மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறது.


கொரியாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள வாகனத்துறை தொழிலாளர்கள் (அசோசியெடெட் பிரஸ் புகைப்படம்: அன் யங்-ஜொன்)

அதன் உலகளாவிய சீரமைப்பு திட்டத்தின் பாகமாக, ஜிஎம் நிறுவனம் மே 2018 இல் அதன் தென் கொரிய குன்சன் உற்பத்தி ஆலையை மூடியது, இது 2,000 உற்பத்தி வேலைகளையும் மற்றும் சம்பந்தப்பட்ட தொழில்துறைகளில் இன்னும் ஆயிரக் கணக்கான வேலைகளையும் துடைத்தழித்தது. ஜிஎம் நிறுவன கொரிய கிளையின் கொரிய உலோகத்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் (KMWU) ஆதரவுடன், ஜிஎம் நிறுவனம் எஞ்சிய தொழிலாளர்களுக்குக் கூலி மற்றும் போனஸ் உயர்வின்மையை ஏற்குமாறு அழுத்தமளித்ததுடன், இலாபத்தை அதிகரிப்பதற்காக உற்பத்தி வரம்புகளை உயர்த்தியது.

தற்போதைய பேரம்பேசல்களில், ஜிஎம் நிறுவனம் சம்பள உயர்வின்மையை நீடிப்பதற்குக் கோரி வருகிறது. கடந்த மாதம் கொரியாவிற்கான விஜயத்தின் போது, ஜிஎம் நிறுவன சர்வதேச செயல்பாடுகளுக்கான துணை தலைவர் கூறுகையில், நிறுவனம், திட்டமிட்ட வேலைநிறுத்தத்தால் "முற்றிலும் ஏமாற்றம்" அடைந்திருப்பதாகவும், உற்பத்தி இழப்பைச் சரிக்கட்ட உற்பத்தியை வேறு நாடுகளின் அதன் ஆலைகளுக்கு மாற்றக்கூடும் என்றும் அறிவித்தார். வரவிருக்கும் வாகன ரகங்களை அதன் கொரிய ஆலைகளுக்கு ஒதுக்கீடு செய்வதன் மீது ஜிஎம் மறுபரிசீலனை செய்யவிருப்பதாகவும் அவர் அச்சுறுத்தினார்.

வட அமெரிக்காவில் மத்திய மெக்சிகோவின் மிகப்பெரிய Silao உற்பத்தி வளாக ஜிஎம் ஆலை தொழிலாளர்கள் கூறுகையில், வட்டார நிர்வாகம் உற்பத்தியை அதிகரித்திருப்பதாகவும், அதை எதிர்க்கும் போர்குணமிக்க தொழிலாளர்களைப் பழிவாங்கி வருவதாகவும் கூறினர். அமெரிக்காவில் வேலைநிறுத்தம் ஏற்படலாம் என்பதால் அந்நிறுவனத்திற்கு அதிக இலாபமீட்டி தரும் சுமையேற்றும் வாகனங்களின் உற்பத்தியை முன்கூட்டியே அதிகரிப்பதற்கான ஜிஎம் ஆலையினது சர்வதேச திட்டத்தின் பாகமாக இந்த வேகப்படுத்தல் செய்யப்பட்டிருப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மெக்சிகன் தொழிலாளர்கள் ஜிஎம் நிறுவனத்திற்கு கருங்காலிகளாக செயல்பட மறுப்பதால் அவர்கள் பழிவாங்கப்பட்டு வருகிறார்கள். வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களில் ஒருவர், Israel Cervantes, உலக சோசலிச வலைத் தளத்திற்கு கருத்துரைக்கையில், “நாங்கள் அமெரிக்க மக்களுக்கு ஆதரவளிக்கவும், அங்கிருந்து ஆதரவைப் பெறவும் கருதுகிறோம்.” அவரின் ஒரு சக தொழிலாளி கூறுகையில், அமெரிக்க தொழிலாளர்களுடன் இணைந்த ஒரு கூட்டு போராட்டம் "ஒரு மிகப்பெரிய மூலோபாயமாக இருக்கும்" என்பதை சேர்த்துக் கொண்டார்.

போர்த்தோ ரிக்கோ மற்றும் ஹாங்காங்கின் வெகுஜன போராட்டங்களில் இருந்து, இவ்வாரம் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன 4,000 விமானிகளின் வேலைநிறுத்தம் வரையில், உலகம் எங்கிலும் சமூக மோதல் மற்றும் வர்க்க போராட்டத்தின் ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு இடையே வாகனத்துறை தொழிலாளர்களின் போராட்டம் நடக்கிறது.

மட்டுப்படுத்தப்பட்ட தேசியவாத அடிப்படையில் உலகளாவிய பெருநிறுவனங்களை எதிர்த்து போராடுவது சாத்தியமில்லை என்பதை தொழிலாளர்கள் உணர்ந்து வருகிறார்கள். இந்தாண்டு தொடக்கத்தில், மெக்சிகோவின் மத்தாமோரொஸில் மக்கில்லாடோரா ஆலைகளில் வாகன உதிரி பாகங்கள் மற்றும் மின்னணு பாகங்கள் உற்பத்தி செய்யும் 70,000 தொழிலாளர்கள், நிறுவனங்களுக்கு ஆதரவான தொழிற்சங்கங்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து, வேலைநிறுத்த குழுக்களை அமைத்து, தன்னிச்சையான வேலைநிறுத்தங்களைத் தொடங்கினர். அமெரிக்க தொழிலாளர்களின் நல்லிணக்கத்திற்கு அழைப்புவிட்ட அந்த வேலைநிறுத்த தொழிலாளர்கள், “கிரின்கோஸ் எழுந்திருங்கள்!” என்று கோஷமிட்டவாறு டெக்சாஸ், பிரௌன்ஸ்வில் அருகே அமெரிக்க எல்லை வரையில் பேரணி சென்றனர்.

தொழிலாளர்களின் போராட்டங்களைத் தேசிய எல்லைகளைக் கடந்து புறநிலையாக ஐக்கியப்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்குமான அவர்களின் வேட்கையானது, அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் ஐரோப்பாவில் அதன் அதிவலது சமதரப்புகளில் இருந்து இந்தியாவின் மோடி அரசாங்கம் மற்றும் தென் ஆபிரிக்காவில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வரையில், முதலாளித்துவ அரசாங்கங்கள் ஊக்குவிக்கும் இழிவார்ந்த தேசியவாதம் மற்றும் வெளிநாட்டவர் விரோத மனோபாவத்திற்கு மிகவும் சக்தி வாய்ந்த மாற்றுமருந்தாக உள்ளது.

தொழிலாளர்களின் கோபம் கொதித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் வரவிருக்கும் போராட்டங்கள் நனவுபூர்வமாக சர்வதேச மற்றும் சோசலிச மூலோபாயத்தால் வழிநடத்தப்பட வேண்டும்.

வாகனத்துறை உற்பத்தியாளர்களும் செல்வந்த முதலீட்டாளர்களும் நிச்சயமாக ஓர் உலகளாவிய மூலோபாயத்தைக் கொண்டுள்ளனர். அவர்கள், தொழிற்சங்கங்கள் எங்கே மிகவும் மலிவான உழைப்பு ஆதாரங்களை வழங்குகின்றன என்பதைப் பொறுத்தும், அவர்களின் உலகளாவிய செயல்பாடுகளுக்கு எந்தவொரு தனிநாட்டின் வேலைநிறுத்த பாதிப்பையும் குறைத்துக் கொள்ளும் வகையில் உற்பத்தியை மாற்றிக் கொள்ளவும் முடிவெடுக்கின்றனர். ஜிஎம், ஃபோர்ட், வோல்ஸ்வாகன் மற்றும் நிசான் என அனைத்து நிறுவனங்களுமே மின்சார வாகனங்கள் மற்றும் ஆளின்றி செலுத்தப்படும் வாகனங்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களிலும் மற்றும் சுருங்கி வரும் சந்தைகளிலும் முன்னிலை வகிப்பதற்கான மூர்க்கமான போட்டியில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, ஆலைமூடல்கள், பத்தாயிரக் கணக்கானவர்களை வெளியேற்றுதல் மற்றும் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஈவிரக்கமின்றி மறுசீரமைப்பதில் ஈடுபட்டுள்ளன.

சீனா, இந்தியா மற்றும் ஏனைய "எழுச்சி பெற்றுவரும் சந்தைகளில்" வாகன உற்பத்தியாளர்கள் செய்த விரிவாக்கமானது, அதிகரித்து வரும் வர்த்தக மோதல்களாலும் மற்றும் உலகளாவிய பின்னடைவுக்குள் வீழ்ந்து கொண்டிருப்பதாலும் ஏற்கனவே வறண்டு வருகின்றன. சீனா மற்றும் இந்தியாவில் நூறாயிரக் கணக்கான வாகனத்துறை தொழிலாளர்கள் ஏற்கனவே அவர்களின் வேலைகளை இழந்துள்ளனர்.

ஜிஎம் நிறுவனம் 2018 இல் 11.8 பில்லியன் டாலர் இலாபத்தைப் பதிவு செய்தது மற்றும் கடந்த ஆறாண்டுகளில் பங்கு வாங்கிவிற்றல்கள் மற்றும் பங்கு ஆதாயத்தொகை வழங்கல்களின் வடிவில் பங்குதாரர்களுக்கு 25 பில்லியனுக்கும் அதிக டாலர்களை வழங்கி உள்ளது. ஆனால் இதுவும் போதுமானதாக இல்லை. திங்களன்று, Moody நிறுவனம் கடன் பெறுவதற்கான தரவரிசை பட்டியலில் ஃபோர்ட் நிறுவனத்தை "பெறுமதியற்ற" அந்தஸ்துக்குக் கீழிறக்கி, வாகனத்துறை உற்பத்தியாளர்கள் தொடர்ந்து தொழிலாளர் செலவுகளைக் குறைக்க வேண்டுமென்ற வோல் ஸ்ட்ரீட்டின் விருப்பத்தைத் தெளிவுபடுத்தியது. தற்காலிக தொழிலாளர்களை அதிகரித்தல் மற்றும் வாகனத்துறை தொழிலாளர்களின் மருத்துவ நல சலுகைகளை வெட்டுவதும் அதில் உள்ளடங்கும், இதை Forbes பத்திரிகை சமீபத்தில் "100 ஆண்டுகளாக அமெரிக்க வாகனத்துறை தொழில்துறையில் மேலோங்கி இருந்த பகுதியளவிலான சோசலிசத்தின் கடைசி எச்சசொச்சங்கள்" என்று கண்டித்திருந்தது.

உலகெங்கிலுமான வாகனத்துறை தொழிலாளர்கள் ஓர் உலகளாவிய உற்பத்தி நிகழ்முறையில் பிணைக்கப்பட்டுள்ளனர். “அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும்" வாகனம் என்றோ, இதற்கும் கூடுதலாக மெக்சிகோ அல்லது சீன வாகனம் என்றெல்லாம் அங்கே எதுவும் இல்லை. பிரபலமான ஃபோர்ட் Mustang வாகனத்தின் உதிரி பாகங்கள் சீனா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் மெக்சிகோவில் உற்பத்தி செய்யப்படுகின்ற நிலையில், அது மிச்சிகனின் பிளாட் ராக்கில் ஒருங்கிணைக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 62 நாடுகள் எங்கிலும் பரவியுள்ள சங்கிலி தொடர் போன்ற உயர்தரமான சிக்கலான உலகளாவிய வினியோக மற்றும் உற்பத்தி முறையில் 8 மற்றும் 9 மில்லியனுக்கு இடைப்பட்ட தொழிலாளர்கள் ஒருவரோடு ஒருவர் பிணைக்கப்பட்டுள்ளனர்.

உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்களிது உழைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தொழிலாளர்கள் புரிந்து கொண்டால், அது அவர்களுக்கு ஓர் அளப்பரிய அனுகூலத்தை வழங்கும்.

இந்த போராட்டத்தை முன்னெடுக்க, அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் வாகனத்துறை தொழிலாளர்கள் போராட்டத்திற்கான புதிய அமைப்புகளாக தொழிலாளர்களாலேயே ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்படும் சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டமைப்பதன் மூலமாக இந்த பெருநிறுவன மற்றும் தேசியவாத தொழிற்சங்கங்களின் இரும்புப்பிடியை உடைக்க வேண்டும்.

UAW இன் பாரிய ஊழல் வெறுமனே தனிப்பட்ட நிர்வாகிகளின் நடவடிக்கைகளினது விளைவல்ல. அது தொழிற்சங்கங்கள் பெருநிறுவன நிர்வாகத்தின் கருவிகளாக மாறிவிட்டதன் மிகவும் விகாரமான வெளிப்பாடாகும். ஒரு தேசியவாத மற்றும் முதலாளித்துவ-சார்பு முன்னோக்கில் வேரூன்றிய இந்த தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் வேலையிட நிலைமைகளை மோசமாக்குவதில் நிறுவனங்களுடன் ஒத்துழைத்ததன் மூலமாக பூகோளமயப்பட்ட உற்பத்திக்கு விடையிறுத்தன.

UAW, பல தசாப்தங்களாக, வெளிநாட்டு தொழிலாளர்கள் தான் "அமெரிக்க வேலைகளைத் திருடி" வருகிறார்கள் என்ற பொய்யைப் பரப்பி உள்ளது, அதேவேளையில் தொழிலாளர் செலவுகளைக் குறைப்பதிலும் மற்றும் அமெரிக்க தொழிலாளர்களை ஒரு மலிவான, எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு நீக்கத்தக்க தொழிலாளர் சக்தியாக மாற்றுவதிலும் பெருநிறுவனங்களுக்கு உடந்தையாய் இருந்து வந்துள்ளது. இதற்கு பதிலாக, நிறுவனங்களுக்கு சாதகமான தொழிலாளர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, அவற்றை நடைமுறைப்படுத்த UAW நிர்வாகிகளுக்கு நிறுவனங்கள் கையூட்டுக்களாக மில்லியன்களை வழங்கி உள்ளன.

வாகனத்துறை தொழிலாளர்கள், ஒவ்வொரு நாட்டிலும், காலங்கடந்த தேசிய முன்னோக்கையும் மற்றும் முதலாளித்துவ இலாப அமைப்புமுறையையும் பாதுகாக்கும் இந்த தொழிற்சங்கங்களின் நாசவேலைகளை முகங்கொடுக்கின்றனர். பன்னாட்டு பெருநிறுவனங்களை எதிர்த்து போராடி வரும் தொழிலாளர்களை எல்லைக் கடந்து ஒருங்கிணைப்பதற்குப் பதிலாக, UAW, கனடாவில் யூனிஃபொர், ஜேர்மனியில் IG Metall, KMWU மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களைத் தேசிய கோட்டில் பிளவுபடுத்த அவற்றால் ஆன மட்டும் ஒவ்வொன்றையும் செய்கின்றன.

அமெரிக்க வாகனத்துறை தொழிலாளர்கள் பெருநிறுவனங்களிடம் சம்பளம் வாங்கும் இந்த முகவர்களிடமிருந்து தங்களைச் சுதந்திரப்படுத்திக் கொண்டால் மட்டுமே, பன்னாட்டு பெருநிறுவனங்களை எதிர்த்து போராடுவதற்கு, கனடா, மெக்சிகோ, கொரியா மற்றும் உலகெங்கிலுமான அவர்களின் சக-தொழிலாளர்களுடன் பலமான பிணைப்பை ஏற்படுத்த முடியும். தொழிலாளர்களின் இந்த போராட்டத்தில், போராட்டங்களை ஒருங்கிணைப்பதிலும் மற்றும் அவர்களை அரசியல் முன்னோக்கு கொண்டு ஆயுதபாணியாக்குவதிலும் மற்றும் முதலாளித்துவ சுரண்டலை ஒரேயடியாக ஒழிப்பதற்கு அவசியமான புரட்சிகர தலைமையை வழங்குவதிலும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒத்துழைக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) அதன் சக்தியில் அனைத்தையும் செய்யும்.