Print Version|Feedback
French transit workers strike against attack on pensions
ஓய்வூதியங்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பிரெஞ்சு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
By Will Morrow
14 September 2019
பாரீஸ் மற்றும் பாரிஸை சுற்றியுள்ள பகுதிகளின் பொது போக்குவரத்து முறை அண்மித்து முற்றிலுமாக நேற்று ஸ்தம்பித்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. பேருந்து மற்றும் இரயில்வே தொழிலாளர்கள் மக்ரோன் நிர்வாகம் முன்மொழிந்த ஓய்வூதிய சீர்திருத்தங்களை எதிர்க்க 24 மணி நேர வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்.
பத்து மெட்ரோ பாதைகள் முற்றிலும் மூடப்பட்டன, வெகு சில பாதைகளில் நெரிசலான நேரங்களில் மூன்றில் ஒரு பங்களவே செயல்பாட்டில் இருந்தன, ஓட்டுனர்கள் இல்லா இரயில்கள் நாள் முழுவதும் இரண்டு பாதைகளில் தொடர்ந்து செயல்பட்டன. பேருந்து போக்குவரத்து, பிராந்திய பாதைகளைப் போலவே, முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்து. Le Monde கருத்துப்படி, கடந்த பன்னிரெண்டு வருட RATP [பாரீஸ் பொது போக்குவரத்து ஆணையம்] தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில் இது அதிகபட்சமான பங்களிப்புடன் இருந்தது. வெவ்வேறு துறைகளில் வேலைநிறுத்த பங்களிப்பு 60 மற்றும் 98 சதவீதத்திற்கு இடையே இருந்ததாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
நேற்று காலை RATP அலுவலகங்களுக்கு வெளியே தொழிலாளர்களின் பேரணி
இந்த அணித்திரள்வு ஓய்வூதிய திட்டம் மீதான மக்ரோன் நிர்வாகத்தினது தாக்குதலுக்கு தொழிலாள வர்க்கத்தில் நிலவும் அளப்பரிய எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது. அவர் முன்மொழிவின் கீழ், RATP மற்றும் தேசிய இரயில்வே தொழிலாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பொதுத்துறை பணியாளர்கள் உட்பட வெவ்வேறு துறை தொழிலாளர்கள் வென்றெடுத்திருந்த 42 வகையான வெவ்வேறு ஓய்வூதிய உரிமை திட்டங்கள் உடனடியாக ஒன்றும் இல்லாமல் ஆக்கப்பட்டுவிடும். RATP உட்பட பல தொழிலாளர்கள் மாதத்திற்கு நூற்றுக் கணக்கான யூரோக்கள் இழப்பார்கள் என்பதோடு, இதன் விளைவாக ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் வரை கூடுதலாக பணியாக நிர்பந்திக்கப்படுவார்கள்.
இச்சட்டம் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் நோக்கி இயக்கப்பட்டுள்ளது. ஒரேமாதிரியான புதிய ஓய்வூதிய முறையின் கீழ், கொடுப்பனவுகள், தொழிலாளர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட பணத் தொகையின் வடிவத்தில் அல்ல, மாறாக ஈட்டிய "புள்ளிகள்" வடிவில் ஒருதலைபட்சமான முறையில் வழங்கப்படும். தொழிலாளர்கள் ஓய்வூ பெறுகையில், இந்த புள்ளிகள் இதுவரையில் வெளியிடப்படாத ஒரு இயங்குமுறையில் பணத்தொகையாக மாற்றப்படும், இது எதிர்காலத்தில் வரும் ஒவ்வொரு அரசாங்கமும் தொடர்ந்து ஓய்வூதிய பலன்களைக் குறைக்க அனுமதிக்கிறது. ஓய்வுபெறும் வயதை உடனடியாக இரண்டாண்டுகள் அதிகரிப்பதற்கும் நிர்வாகம் முயன்று வருகிறது.
இத்தகைய கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தில் ஆதரவு இல்லை. நேற்று ஒரு கருத்துக்கணிப்பு வெளியிட்ட இந்த ஓய்வூதிய சீர்திருத்தத்தை ஆதரிக்கும் வலதுசாரி Le Figaro நாளிதழ், மக்களில் 72 சதவீதத்தினர் பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப் முன்மொழிந்த சட்டமசோதாவுக்கு எதிராக இருப்பதைக் கண்டறிந்தது.
பாரீஸ் வேலைநிறுத்தம், ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தீவிரப்படுத்தப்பட்டு தாக்குதலுக்கு எதிராக அதன் அதிகரித்து வரும் எதிர்ப்பு இயக்கத்தின் பாகமாக உள்ளது. மூன்று நாட்களுக்கு முன்னர், 4,000 பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் ஆண்டு கணக்கிலான கூலிகள் மற்றும் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக இரண்டு நாட்கள் அனைத்து விமானங்களையும் நிறுத்தினர். இது அமெரிக்கா எங்கிலும் வாகனத்துறை தொழிலாளர்களின் ஒப்பந்தம் முடிவடைவதற்கு ஒரு நாள் முன்னதாக நடந்தது, இவர்கள் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் ஊழல் மீது பாரிய சீற்றம் நிலவும் நிலைமைகளின் கீழ், வேலைநிறுத்த நடவடிக்கையை அங்கீகரித்து அண்மித்து ஒருமனதாக வாக்களித்துள்ளனர். இந்த ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் "பேரம்பேசுகிறோம்" என்று கூறியவாறு அந்த நிறுவனங்களிடம் இருந்து மில்லியன் கணக்கில் கையூட்டுக்கள் பெற்றிருந்ததாக அம்பலமாகி உள்ளது.
RATP இல் 16 ஆண்டுகள் பணியாற்றி உள்ள ஒரு பராமரிப்பு தொழிலாளி போரிஸ், வயது 41, நேற்று RATP தலைமையகத்திற்கு வெளியே தொழிலாளர்கள் பேரணியில் அறிக்கை ஒன்றின் நகல்களை வினியோகித்துக் கொண்டிருந்த சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரகர்களிடம் கருத்துரைத்தார். “என் ஓய்வூதியத்தில் குறைந்தது 20 சதவீதத்தையாவது இழக்க இருக்கிறேன்,” என்று கூறிய அவர், “குறைந்தபட்சம் இரண்டரை ஆண்டுகள் கூடுதலாகவும் வேலை செய்ய வேண்டியிருக்கும். 50 மற்றும் 55 வயதுக்கு இடையே, ஐந்தாண்டுகள் நான் வேலை செய்தால், என் ஓய்வூதியமாக 7.5 வீதம் கூடுதலாக ஈட்டுவேன். இந்த சீர்திருத்தத்தால், நாங்கள் அவை அனைத்தையும் இழப்போம். இதற்கு எதிராக நாம் போராடவேண்டியது இயல்பானதே. அங்கே நிறைய பணம் இருக்கிறது, ஆனால் அவர்கள் அதை மருத்துவமனை, ஓய்வூதியங்கள், பள்ளிகளுக்குச் செலவிட விரும்பவில்லை. அவர்கள் அதை நிறுவனங்களுக்கு உதவவும் அவர்களின் போர்களுக்கும் செலவிட விரும்புகிறார்கள்,” என்றார்.
போரீஸ்
“நிலைமைகள் படுமோசமாகி மாறிவிட்டன,” என்ற அவர் தொடர்ந்து கூறுகையில், “சிறிது சிறிதாக நாங்கள் ஒவ்வொன்றையும் இழந்து வருகிறோம். RATP இன் சில பகுதிகள் 2024 இல் தனியார் நிறுவனங்களுக்கான ஒப்பந்த அழைப்புகள் மூலம் போட்டிக்கு திறந்து விடப்பட உள்ளது. அதன் பின்னர் எங்களின் உரிமைகள் மற்றும் நிலைமைகள் அனைத்தையும் நாங்கள் இழந்துவிடுவோம். சொல்லப் போனால் RATP விரைவிலேயே இல்லாமல் போய்விடும்.”
தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச போராட்டத்திற்கு SEP அறிக்கை அழைப்புவிடுத்திருப்பதற்கு பதிலளித்து, போரீஸ் தொடர்ந்து கூறினார், “முதலாளித்துவ அமைப்புமுறை சர்வதேசமானது என்பது உண்மை தான். சீனாவில் தொழிலாளர்கள் நிறுவனங்களுக்காக நிறைய நிறைய பணம் சம்பாதித்து கொடுப்பதையும், அவர்களுக்கு மிகக் குறைவாக ஊதியம் கொடுக்கப்படுவதையும் நாம் பார்க்கிறோம்.”
மக்ரோனின் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதில், தொழிலாளர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் அரசியல் சக்திகளைப் புரிந்துகொள்வது அவசியம். நேற்று வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த தொழிற்சங்கங்கள் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு முயற்சிக்கவில்லை. அவை அந்த சட்டத்தை எவ்வாறு திணிப்பது, அதற்கு எதிராக தொழிலாளர்களின் எந்தவொரு போராட்டத்தையும் எவ்வாறு ஒடுக்குவது என்று மக்ரோனுடன் செயலூக்கத்துடன் பேரம்பேசி விவாதித்து வருகின்றன.
நேற்றைய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த சுதந்திர குழுக்களின் தேசிய சங்கத்தின் (UNSA) பொதுச் செயலாளர் Laurent Escure வியாழக்கிழமை மாலை France Inter உடனான ஒரு பேட்டியில் இதை உளறிக் கொட்டினார். RARP தொழிலாளர்களைக் கொண்டுள்ள மிகப்பெரிய சங்கமான UNSA, மிக அதிக தேசிய இரயில்வே தொழிலாளர்களைக் கொண்ட இரண்டாவது சங்கமாகவும் உள்ளது.
தொழிற்சங்கத்தின் அக்கறையைப் பொறுத்த வரையில் மக்ரோனின் சட்டம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பது தான் என்று Escure தெரிவித்தார். “விசயங்கள் மாற்றப்பட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்,” என்று கூறிய அவர், “ஜனாதிபதி அவர் சீர்திருத்தங்களை நிறைவேற்ற தீர்மானகரமாக உள்ளார் என்று நினைக்கிறேன். ஆகவே முன்கூட்டியே தோற்றுவிடும் என்று தெரியும் சண்டைகளில் நாங்கள் இறங்கப் போவதில்லை,” என்றார்.
“செல்வந்தர்களின் ஜனாதிபதி,” மக்ரோனும் மற்றும் பிரதமர் பிலிப்பும் "இந்த சீர்திருத்தத்தால் தொழிலாளர்கள் தண்டிக்கப்படாத வகையில் குறிப்பாக குறிப்பிட்ட துறைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருப்பதைப் புரிந்து வைத்திருப்பதாக Escure வலியுறுத்தினார். அந்த தொழிற்சங்கம் "வெற்று நாற்காலி அரசியலை நம்பவில்லை,” என்று கூறிய அவர், ஆகவே புதிய சட்டத்தின் மீது பேச்சுவார்த்தை நடத்தும் என்றார். தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசிக்கப்படும் என்று பிலிப் ஒரு பொது உரையில் அறிவித்து ஒரு நாளுக்குப் பின்னர், இந்த வேலைநிறுத்தம் நடக்கும் தருணம், “தற்செயலாக" ஏற்பட்டது என்பதையும் மன்னிப்பு கோரும் தொனியில் அவர் சேர்த்துக் கொண்டார். “ஒருவேளை இறுதியில், எங்களுக்கு அச்சட்டத்தில் விருப்பம் இல்லை என்றால், அதற்கு பதிலாக குறைந்தபட்சம் அதை நாங்கள் மேம்படுத்துவோம் ... இதுவும் கூட ஒரு நல்ல விஷயம்" என்றார்.
உரிய நபரின் வார்த்தைகளிலேயே வெளிப்பட்டு விட்டது. தொழிற்சங்கம் அச்சட்டத்தை ஆதரிக்கிறது, அது நிறைவேற்றப்பட வேண்டும் என்று விரும்புகிறது, எந்தவொரு போராட்டத்திற்கும் முன்னரே அது வேண்டுமென்று வலியுறுத்துகிறது. ஆகவே வேலைநிறுத்தங்கள் மக்ரோனுக்கு எதிராக நடத்தப்படவில்லை, மாறாக தொழிலாளர்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படுகின்றன.
ஆகவே தான் வெவ்வேறு துறை தொழிலாளர்கள் ஒரே சட்டத்தால் இலக்கு வைக்கப்பட்டிருந்தாலும், தொழிற்சங்கங்கள், அவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட பல தொடர்ச்சியான ஒரு நாள் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்புவிடுக்கின்றன, இந்த மாதம் செப்டம்பர் 16 இல் தொழில்துறை வல்லுனர்களின் கூட்டமைப்பினது ஒரு வேலைநிறுத்தைக் காணும், செப்டம்பர் 21 FO (தொழிலாளர் சக்தி) இன் தேசிய நடவடிக்கை தினமாக இருக்கும், செப்டம்பர் 24 இல் தேசிய இரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் உட்பட தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பின் ஒருநாள் நடவடிக்கை தினமாக இருக்கும்.
இத்தகைய ஒருநாள் நிகழ்வுகளை தொழிலாளர்கள் எண்ணற்ற முறை பார்த்துள்ளனர் என்ற போதும், இவற்றின் நோக்கம் தொழிலாள வர்க்கத்தின் கோபத்தை ஆற்றுப்படுத்துவதும், நிலைக்குலைத்து விடுவதுமாகும். 2017 இல், இரயில்வே தொழிலாளர்களின் மூன்று மாத போராட்டத்தை வீணடிக்கவும் மற்றும் SNCF ஐ தனியார்மயமாக்கலுக்குத் திறந்துவிடவும் மற்றும் இரயில்வே தொழிலாளர்களின் சட்ட சாசன பாதுகாப்பை அழிக்க மக்ரோனுக்கு உதவும் வகையில், CGT இதே மாதிரியான ஒரு நாள் நடவடிக்கைகள் மற்றும் வேலை மெதுவாக்கும் நடவடிக்கைகளைப் பயன்படுத்தியது.
ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்குத் தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் எதிர்ப்பை முகங்கொடுத்து, தொழிற்சங்கங்களுடன் அதன் கூட்டுறவை ஆழப்படுத்துவதே மக்ரோன் நிர்வாகத்தின் மூலோபாயமாகும். வியாழனன்று காலை தேசிய வணிக கூட்டமைப்புக்கு பிலிப் வழங்கிய உரையில், அவர் அறிவிக்கையில், அரசாங்கம் 2020 கோடை வரையில் அச்சட்டத்தை அறிமுகப்படுத்துவதைத் தாமதிக்கும், அதேவேளையில் அது பல தொடர்ச்சியான "கூட்டு கலந்தாலோசனைகள்" மற்றும் "மக்கள் ஆலோசனைகளை" நடத்தும் என்றும், இது இந்தாண்டு இறுதி வரையில் தொடரும் என்றும் அறிவித்தார். ஆனால் "தொழிலாளர்கள் அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும்,” என்றும் பிலிப் அறிவித்தார்.
போராட்டத்தை முன்னெடுக்க, தொழிலாளர்கள் போராட்டத்தின் கட்டுப்பாட்டை அவர்களின் சொந்த கரங்களில் எடுத்தாக வேண்டும் என்பதோடு, பெருநிறுவன-ஆதரவு தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான தொழிலாளர்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படும், அவர்களின் சொந்த சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டும். ஓர் ஒருங்கிணைந்த போராட்டத்திற்காக, தங்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீது இதேபோன்ற தாக்குதலை எதிர்கொண்டுள்ள ஐரோப்பா எங்கிலுமான மற்றும் சர்வதேச அளவிலான தொழிலாளர்களுக்கும், மருத்துவத்துறை மற்றும் கல்வித்துறை தொழிலாளர்கள் உள்ளடங்கலாக பிரான்ஸ் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளுக்கு ஒரு முறையீடு செய்யப்பட வேண்டும்.
அனைத்திற்கும் மேலாக ஒரு புதிய அரசியல் முன்னோக்கு அவசியப்படுகிறது. தொழிலாள வர்க்கத்தின் மிகவும் அடிப்படை சமூக உரிமைகளுக்கான போராட்டத்திற்கு பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கின் செல்வவளம் மீது ஒரு கடுமையான தாக்குதலும் மற்றும் சர்வதேச அளவில் சோசலிச சமூக மாற்றமும் அவசியமாகிறது.
கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:
மக்ரோனுக்கு எதிராக ஓய்வூதியங்களை பாதுகாக்க ஒரு சர்வதேச அரசியல் மூலோபாயம் அவசியமாகிறது
[14 September 2019]