Print Version|Feedback
French unions meet with Macron administration to organize attack on pensions
ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல்களை ஒழுங்கமைக்க பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் மக்ரோன் நிர்வாகத்தை சந்திக்கின்றன
By Will Morrow
7 September 2019
பிரான்சில், ஓய்வூதிய உரிமைகளில் பெரும் வெட்டுக்களை அறிவிப்பதற்கான தயாரிப்பின் ஒரு பகுதியாக, பிரதான தொழிற்சங்க கூட்டமைப்புக்கள் மற்றும் நாட்டின் வேலை வழங்குநர் அமைப்பு (மெடெஃப்) ஆகியவற்றுடனான இரண்டு நாள் பேச்சுவார்த்தைகளை வெள்ளியன்று மக்ரோன் நிர்வாகம் நிறைவு செய்துவிட்டது. புதிய ஓய்வூதிய சீர்திருத்த சட்டத்தை இலையுதிர்காலத்தில் எந்த நேரத்திலும் அரசாங்கம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பு, எதிரிகளின் பேச்சுவார்த்தை என ஊடகங்களில் பரவலாக முன்வைக்கப்பட்டது: தொழிற்சங்கங்களுடன், குறிப்பாக தொழிலாளர் சக்தி (FO) மற்றும் தொழிலாளர் பொது கூட்டமைப்பு (CGT) ஆகியவை தங்களது உறுப்பினர்களை எதிர்மறையாக பாதிக்கும் என்று வேலை வழங்குநர்கள் கோரிய எந்தவொரு நடவடிக்கையையும் இது நிராகரிப்பதாக கூறப்படுகிறது. உண்மை என்னவென்றால், அனைத்து தொழிற்சங்கங்களும் அரசாங்கத்தின் வணிக சார்பு திட்டத்துடன் உடன்படுகின்றன, மேலும் இந்த வரலாற்றுத் தாக்குதலுக்கு தொழிலாள வர்க்கத்தின் கோபத்தையும் எதிர்ப்பையும் எவ்வாறு கழுத்தை நெரிப்பது என்பது பற்றியே கூட்டம் கவனம் செலுத்தியது.
தேசிய ஓய்வூதிய முறையின் மறுசீரமைப்பு என்பது ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் சிக்கன திட்டத்தின் முக்கிய பகுதியாக உள்ளது. 18 மாத கால ஆலோசனைகளைத் தொடர்ந்து ஜூலையில், “ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கான உயர் ஆணையர்” என்ற புதிய பதவிக்கு மக்ரோன் நியமித்த குடியரசுக் கட்சியின் ஒரு நீண்டகால அரசியல்வாதியான ஜோன் போல் டுலுவ்வா தயாரித்த ஒரு அறிக்கையை அரசாங்கம் வெளியிட்டது. செவ்வாயன்று, அதே பதவியில் இருந்தவாறே, அரசாங்க அமைச்சரவையில் ஒரு நிரந்தர பதவிக்கு டுலுவ்வா பதவி உயர்த்தப்பட்டார்.
சீர்திருத்தத்தின் முழு விபரங்களும் வெளியிடப்படவில்லை என்றாலும், முன்மொழியப்பட்ட ஓய்வூதிய முறை சில முக்கிய கூறுகளை உள்ளடக்கியதாக இருக்கும். முதலாவதாக, இது பல்வேறு தொழில்களுக்கு பொருந்துவதாக இருக்கும் 42 ஓய்வூதிய திட்டங்களை இரத்து செய்து அவற்றை ஒரு திட்டத்துடன் மாற்றும். 20 ஆம் நூற்றாண்டில், இரயில்வே தொழிலாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார பணியாளர்கள் உட்பட, வேறுபட்ட பொதுத்துறை ஊழியர்களின் பிரிவுகளால் நடத்தப்பட்ட பெரும் போராட்டங்களின் மூலம் வென்றெடுக்கப்பட்ட ஓய்வூதிய உரிமைகள் இனிமேல் செல்லுபடியாகாது. இந்த மாற்றம், ஓய்வு பெற்றவர்களுக்கு இடையிலான சமத்துவத்தை மேம்படுத்துவதாக அரசாங்கத்தால் கோரமான முறையில் முன்வைக்கப்படுகிறது, இந்த மாற்றம், குறிப்பாக நிதி மற்றும் முதலாளிகளின் வட்டங்களால் கோரப்படுகிறது.
இரண்டாவதாக, ஓய்வூதியங்கள் இனி வருடத்திற்கு உத்தரவாதமான தொகையை வழங்காது. தொழிலாளர்கள் தங்கள் வேலை வாழ்நாள் முழுவதும் "புள்ளிகளை" குவிக்க வேண்டும். அவர்கள் ஓய்வு பெறும்போது, அவர்களின் புள்ளிகள் இன்னும் வெளியிடப்படாத ஒரு தெளிவற்ற பொறிமுறையால் பணத் தொகையாக மாற்றப்படுவதைக் காண்பார்கள். இது, மக்ரோன் அல்லது அடுத்தடுத்த அரசாங்கங்கள் புள்ளிகளின் பண மதிப்பை இடைவிடாமல் குறைக்க அனுமதிக்கும், இதனால் ஓய்வுபெறுவதை சாத்தியமற்றதாக்கி அதிக புள்ளிகளைப் பெற தொழிலாளர்களை நீண்ட காலம் வேலை செய்ய நிர்பந்திக்கும்.
டுலுவ்வா இன் அறிக்கை, முழு ஓய்வூதியத்திற்கான ஓய்வுபெறும் வயதை 62 முதல் 64 ஆண்டுகளாக உயர்த்துவதற்கான பரிந்துரையையும் உள்ளடக்கியது. இது, “முக்கிய” வயது என்றழைக்கப்படுவதன் மூலம் எட்டப்படும், அத்துடன் இதன் நோக்கம் அதிகரிப்பை மறைக்க வேண்டும் என்பதாகும் – இந்நிலையில், 62 முதல் 64 வயதிற்கு இடையில் ஓய்வுபெறும் தொழிலாளர்கள் அவர்களது ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை இழப்பார்கள், மேலும் 64 வயதிற்குப் பின்னர் ஓய்வு பெறுபவர்கள் போனஸ் பெறுவார்கள்.
ஆகஸ்ட் 26 அன்று France 2 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஓய்வுபெறும் வயது 62 என இருப்பதை அவர் எதிர்க்கவில்லை என்றும், மாறாக முழு நன்மைகளுடன் தொழிலாளர்கள் ஓய்வுபெறும் வகையில் அவர்களது ஓய்வூதிய நலன்களுக்கு அவர்கள் தொகை செலுத்துவதற்கான மொத்த வருடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற வேறுபட்ட வழிகளில் அதே முடிவை எட்டுவதற்கு தேர்வு செய்யலாம் என்று மக்ரோன் கூறினார்.
பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு (CFDT) தொழிற்சங்கம் மக்ரோன் நிர்வாகத்தின் கொள்கையை வெளிப்படையாக ஆதரிக்கிறது. CFDT இன் தலைவரான லோரோன்ட் பேர்ஜே வியாழக்கிழமை முதல் நாள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், ஓய்வூதிய முறையின் “தரமான சீர்திருத்தத்தை” தொழிற்சங்கம் ஆதரிக்கிறது என்று தெரிவித்தார். பயனுள்ள ஓய்வூதிய வயதிற்கு பதிலாக தேவையான ஆண்டு சேவையை அதிகரிக்க அரசாங்கத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார், இது இந்த சட்டத்தை ஊக்குவிக்கும் தொழிற்சங்கத்தின் சொந்த பங்கை மேலும் பகிரங்கமாக அம்பலப்படுத்தும் என்பதுடன் பரந்த எதிர்ப்பையும் தூண்டும். “இந்த சீர்திருத்தத்தின் மையமாக இருக்கும் வயது மற்றும் ‘நீண்ட நேரம் வேலை செய்வது’ என்ற கருத்தை மையமாகக் கொண்டிருந்தால், நாம் மாட்டிக் கொள்வோம்,” என்று அவர் கூறினார்.
சீர்திருத்தத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் மத்தியில் நிலவும் பரந்த கோபத்தை அறிந்த CGT மற்றும் FO ஆகியவை, அதற்கு எதிரான எந்தவொரு போராட்டத்தையும் நாசப்படுத்தும் முயற்சியாக, சட்டத்தின் எதிர்ப்பாளர்களாக தம்மை மோசடியாக காட்டிக் கொள்கின்றன. தொழிலாளர்களின் ஒவ்வொரு பிரிவையும் தனிமைப்படுத்தவும், மேலும் ஒன்றுபட்ட போராட்டத்தைத் தடுக்கவும் தொடர்ச்சியான தனிமைப்படுத்தப்பட்ட வேலைநிறுத்தங்களுக்கும், மற்றும் ஒரு நாள் போராட்டங்களுக்கும் அவை அழைப்பு விடுத்துள்ளன.
இந்த மாதம் மட்டும், செப்டம்பர் 13 அன்று பாரிசியன் போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கும், செப்டம்பர் 16 அன்று பொதுத்துறை தொழில்முறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கும், செப்டம்பர் 23 அன்று FO ஒழுங்கமைக்கும் ஒரு தேசிய “நடவடிக்கை நாளு”க்கும், செப்டம்பர் 24 அன்று CGT ஒழுங்கமைக்கும் மற்றொரு “நடவடிக்கை நாளு”க்கும், மேலும் அதே நாளன்று இரயில்வே தொழிலாளர்களின் ஒரு தேசிய வேலைநிறுத்தத்திற்கும் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
தொழிலாளர்கள் இவையனைத்தையும் எண்ணற்ற முறை பார்த்திருக்கிறார்கள். அரசியல் அரங்கம் மற்றும் எதிர்ப்பு அறிவிப்புக்களுக்குப் பின்னர், மக்ரோன் நிர்வாகத்துடனும் மற்றும் சோசலிஸ்ட் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியை சேர்ந்த அவரது முன்னோடிகளுடனும் பல தசாப்தங்களாக தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளதுடன் பெரும் தாக்குதல்களையும் திணித்துள்ளன. மக்ரோன் ஆட்சிக்கு வந்த பின்னர், தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தை அழிப்பதற்கு அவை கையெழுத்திட்டு, பரந்த பணிநீக்கங்களை எளிதாக்கி வருகின்றன, அத்துடன் தேசிய இரயில்வேயின் தனியார்மயமாக்கலுக்கு வழிவகுக்க இரயில்வே தொழிலாளர்கள் நடத்திய 2017 வேலைநிறுத்தத்தை அவை நாசப்படுத்தின.
சமூக சமத்துவமின்மைக்கு எதிராக சென்ற ஆண்டு நவம்பரில் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் வெடித்தபோது, ஓய்வுபெற்றவர்களுக்கான தற்போதைய மோசமான ஓய்வூதிய விகிதங்களே அந்த ஆர்ப்பாட்டங்களைத் தூண்டும் முக்கிய காரணியாக இருந்தது. தொழிற்சங்கங்கள், CGT இன் தலைவர் பிலிப் மார்டினேஸ் உடன் இணைந்து, அவர்கள் வலதுசாரிகள் மற்றும் பாசிசவாதிகள் என்று பொய்யாகக் கூறி போராட்டங்களை கண்டித்தன. பெறுநிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் — இவற்றிடமிருந்து தங்களின் 90 சதவிகித வருமானத்தை பெறுகின்றன— இலஞ்சம் பெறும் கூட்டாளிகளாக தங்களது புறநிலை செயல்பாட்டை வெளிப்படுத்தும் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களை நெரிக்கும் பணியில் ஈடுபடுகின்றது.
செப்டம்பர் 4 இல் Liberation நாளிதழுக்கு அளித்த பேட்டியில், மக்ரோன் நிர்வாகம் தொழிற்சங்கத்தை ஓரம்கட்டியதாகவும், ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொழிலாளர்கள் மீதான அதன் தாக்குதல்களை ஒழுங்கமைப்பதில் தொழிற்சங்கத்தை நெருக்கமாக இணைத்துக் கொள்ளவில்லை என்றும் மார்டினேஸ் விமர்சித்தார். “நாங்கள் பேச விரும்பவில்லை என்று விமர்சிக்கப்படுகிறோம், ஆனால் பொதுவாக நாங்கள் அழைக்கப்படுவதில்லை!” என்றும், “நேருக்கு நேராக மக்ரோனை நான் கடைசியாக ஜூன் 2017 இல் பார்த்தேன். நாங்கள் மிகப்பெரிய தொழிற்சங்கம் அல்ல என்றாலும், குறிப்பாக சமூக இயக்கங்கள் இருக்கும் இந்நாட்டில் நாங்களும் இன்னும் இருக்கிறோம்” என்றும் அவர் கூறினார்.
அதே நேரத்தில் தொழிற்சங்கங்களின் பங்கு, புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி மற்றும் தொழிலாளர்கள் போராட்டம் அமைப்பு உட்பட, அவற்றை தொடர்ந்து ஊக்கப்படுத்தும் வேறுபட்ட போலி இடது அமைப்புக்களையும் அம்பலப்படுத்துகிறது. இந்த கட்சிகள், தொழிலாளர்கள் தமது போராட்டங்களை இந்த திவாலான எந்திரங்களுக்கு அடிபணியச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. அதற்கான காரணம், இந்த இடது அமைப்புகள் தொழிற்சங்க எந்திரங்களின் பிரிவுகளாக இருப்பதும், அவற்றுள் அதிக சலுகை பெற்ற பதவிகளை அவர்கள் பெற்றிருப்பதும், மேலும் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன இயக்கத்தின் வளர்ச்சிக்கும் அவை விரோதமாக இருப்பதுமேயாகும்.
“ஓய்வூதிய சீர்திருத்தங்கள்: நீண்டகால முடிவு,” என்ற தலைப்பில் நேற்று பிரசுரித்த ஒரு தலையங்கக் கட்டுரையில், Le Monde நாளிதழ், ஓய்வூதிய வெட்டுக்களுக்கு ஏற்பாடு செய்ய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனைகளை நடத்த மக்ரோன் நிர்வாகம் முடிவெடுத்திருப்பது குறித்து பாராட்டியது. “இந்த திருப்பத்திற்கு எங்களை நாங்களே வாழ்த்த முனையாமல், சமூக நடவடிக்கையாளர்களை புறக்கணித்து, ஏன் அகற்றிவிட்டு கூட, நாங்கள் அரசு தலைமையை போதுமான அளவு கண்டித்தோம்” என்று ஆசிரியர்கள் திருப்தியுடன் அறிவித்தனர்.
தொழிலாள வர்க்கத்தில் ஒரு சமூக வெடிப்பு ஏற்படும் ஆபத்து இருப்பது பற்றிய எச்சரிக்கையுடன் இது முடிவடைந்தது. “ஆலோசனையை மூடிமறைக்க முடியாது,” என்று அவர்கள் எச்சரித்தனர். “தற்போதுள்ள 42 ஓய்வூதிய முறைகளின் அழிவு வலியை ஏற்படுத்தும் என்பதுடன் தவிர்க்க முடியாமல் பதட்டங்களை அதிகரிக்கும்….” மக்ரோனின் “முயற்சி வெற்றிபெறுவதற்கு வெகு தொலைவில் உள்ளது.”
ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் சிக்கன நடவடிக்கைகளை விரிவாக்குவதன் ஒரு பகுதியாக, மக்ரோன் நிர்வாகம் அதன் சிக்கன திட்டத்தை இப்போது தீவிரப்படுத்தி வருகிறது. தொழிலாள வர்க்கம் அவர்களது சமூக உரிமைகள் மீதான முடிவற்ற தாக்குதல் மூலம் முதலாளித்துவ நெருக்கடிக்கு விலைகொடுக்க வேண்டுமென ஆளும் வர்க்கம் வலியுறுத்துகிறது.
இத்தாலியில், ஜனநாயகக் கட்சியும் மற்றும் ஐந்து-நட்சத்திர இயக்கமும் இணைந்த கூட்டணி அரசாங்கம் வியாழக்கிழமை பதவியேற்றது, இது ஐரோப்பிய ஒன்றியம் கோரிய சமூக வெட்டுக்களை தீவிரப்படுத்துவதில் முனைப்புடன் உள்ளது. இந்நிலையில், அடுத்த மாத வரவு-செலவுத் திட்டத்தில் பல்லாயிரக்கணக்கான யூரோக்களை அது குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேர்மனியில், Suddeutsche Zeitung நாளிதழும், ஏனைய வணிக சார்பு வர்ணனையாளர்களும், 2000 ஆண்டுகளில் சமூக ஜனநாயக – பசுமைக் கட்சி அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஹார்ட்ஸ் IV சிக்கன நடவடிக்கைகளை தொடரும் வகையில், “திட்டநிரல் 2040,” ஐ இந்த பெரும் கூட்டணி அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோருகின்றனர்.