Print Version|Feedback
Sri Lankan prime minister promotes US defence agreement
இலங்கை பிரதமர் அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஊக்குவிக்கிறார்
By Vijith Samarasinghe and K. Ratnayake
15 July 2019
இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கொழும்புக்கும் வாஷிங்டனுக்கும் இடையில் திட்டமிடப்பட்டுள்ள படைகளை நிலைநிறுத்துவதற்கான ஒப்பந்தத்தின் (Status of Forces Agreement - SOFA) புவி-மூலோபாய தாக்கங்கள் குறித்து விளக்க முயன்றார். இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டால், அது மூலோபாய ரீதியாக அமைந்துள்ள இந்து சமுத்திரத் தீவு தேசத்தை தனது இராணுவப் படைகள் சுதந்திரமாகப் பயன்படுத்துவதற்கான உரிமையை அமெரிக்காவிற்கு வழங்கும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்காவின் அரசாங்கம் 1995 நடுப்பகுதியில் வாஷிங்டனுடன் ஒரு சோஃபா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தத்தை சீனாவுக்கு எதிரான அதன் ஆக்கிரமிப்பு இராணுவ தயாரிப்புகளுக்கு ஏற்ற ஒரு ஒப்பந்தத்துடன் பதிலீடுசெய்ய வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரா குமார திஸாநாயக்கவின் கேள்விக்கு பதிலளித்த விக்ரமசிங்க, உத்தேச சோஃபா குறித்து கருத்து தெரிவித்தார். முன்னர் 2015 இல் அமெரிக்க சார்பு அரசாங்கத்தை ஆதரித்த ஜே.வி.பி., இப்போது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பாளராக காட்டிக்கொள்ள முயற்சிக்கிறது.
பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாக பாராளுமன்றத்தில் கூறிய விக்ரமசிங்க, ஆனால் "இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் எந்தவொரு ஒப்பந்தமும் கையெழுத்திடப்படாது, [மேலும்] நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத சில விஷயங்கள் உள்ளன" என்று கூறினார். அவர் எந்தவொரு கருத்து வேறுபாடுகளையும் விவரிக்கவில்லை, ஆனால் தயாரிக்கப்படுவது ஒரு "அமைதி கால ஆவணம்" ஆகும் என்று கேலிக்கூத்தாக கூறினார்.
எவ்வாறாயினும், “இந்த ஒப்பந்தம் பொதுவாக ஒரு வெளிநாட்டு நாட்டில் செயல்படும் அமெரிக்க இராணுவ வீரர்களுக்கான கட்டமைப்பை நிறுவுகிறது, வெளித்தெரியாத நபர்களுக்கு அதிகாரங்கள் மற்றும் சலுகைகளையும் சோஃபா வழங்குகிறது,” என்று விக்ரமசிங்க ஒப்புக்கொண்டார்.
ஜூன் 30 அன்று கொழும்பின் சண்டே டைம்ஸில் வெளியிடப்பட்ட 15 பக்க ஆவணத்தின் வெளிக்கசிந்த பகுதிகள், அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கும் அமெரிக்க இராணுவத்திற்கும் வழங்கப்படும் சில விரிவான அதிகாரங்களை வெளிப்படுத்துகிறது. இவை பின்வருமாறு:
* இராஜதந்திர உறவுகள் சம்பந்தமான வியன்னா உடன்படிக்கையின் கீழ் இராஜதந்திர பணிகளில் உள்ள நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளவற்றுக்கு சமமான சலுகைகள், விலக்குகள், சட்ட விலக்களிப்புகளும் அனைத்து அமெரிக்க சிப்பாய்களுக்கும் வழங்கப்படும்; அமெரிக்க அடையாள அட்டையுடனும் கூட்டு பயணம் அல்லது தனிப்பட்ட பயண உத்தரவுகளுடன் அமெரிக்க சிப்பாய்கள் இலங்கைக்குள் நுழையவும் வெளியேறவும் முடியும்; அமெரிக்கா, அதன் அரசியல் உட்பிரிவுகள் அல்லது மாநிலங்களால் வழங்கப்பட்ட அனைத்து தொழில்முறை உரிமங்களும் இலங்கையில் செல்லுபடியாகும் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது; மற்றும் உத்தியோகபூர்வ கடமைகளைச் செய்யும்போது சீருடை அணியவும், கடமையில் இருக்கும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்லவும் அமெரிக்க சிப்பாய்களுக்கு அதிகாரம் உண்டு.
* அமெரிக்க சிப்பாய்கள் மீது அமெரிக்க அரசாங்கமே குற்றவியல் அதிகாரங்களைக் கொண்டிருக்கும். அவர்களை இலங்கை சட்டத்திற்கு உட்படுத்த முடியாது.
* அமெரிக்கப் படைகளின் வாகனங்கள், விமானங்கள், கப்பல்கள் மற்றும் உபகரணங்கள் இலங்கை எல்லைக்குள் சுதந்திரமாக நுழைந்து செல்ல முடியும், மேலும் உள்ளூர் அதிகாரிகள் அவற்றில் ஏறுவது மற்றும் விசாரணை செய்வது முடியாது.
* அமெரிக்கப் படைகளுக்கு ஒரு பிரத்யேக வானொலி சேவை ஒதுக்கப்படும், மேலும் அவர்களால் தமது சொந்த தொலைதொடர்பு முறையை இயக்க முடியும்.
* இலங்கையில் அமெரிக்கப் படைகளால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு கட்டுமான அல்லது கொள்முதல் நடவடிக்கைக்கும் உள்ளூர் வரிகளிலிருந்து விலக்களிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
"இந்த ஒப்பந்தம் தீவில் ஒரு நிரந்தர அமெரிக்க இருப்புக்கு வழிவகுக்காது" என்று விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் கூறினார், ஆனால் வாஷிங்டனுக்கு அதன் படைகளுக்கு ஏன் இத்தகைய சுதந்திரம் தேவை என்பதை அவர் விளக்கத் தவறிவிட்டார். புதிய சோஃபா ஒப்பந்தத்தை தரம்குறைத்து காட்டும் விக்ரமசிங்கவின் முயற்சிகளுக்கு மாறாக, ட்ரம்ப் நிர்வாகமானது கொழும்புடனான மிக நெருக்கமான இராணுவ ஒத்துழைப்பை விரும்புகிறது.
கடந்த பெப்ரவரியில் வாஷிங்டனில் நடந்த செனட் ஆயுத சேவைகள் குழுவில் உரையாற்றிய INDOPACOM தலைவர் அட்மிரல் பிலிப் டேவிட்சன், இலங்கை “இந்திய சமுத்திரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மூலோபாய வாய்ப்பாக உள்ளதுடன், எங்களது இராணுவத்துக்கும் இராணுவத்துக்கும் (military-to-military) இடையிலான உறவு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது,” என்று அறிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை 2015இல் வெளியேற்றிய அமெரிக்காவால் திட்டமிடப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்த உறவுகள் வியத்தகு முறையில் விரிவடைந்தன. சிறிசேனவும் விக்ரமசிங்கவும் உடனடியாக இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை வாஷிங்டன் மற்றும் புதுடெல்லிக்கும் மற்றும் சீனாவுக்கு எதிரான அவற்றின் மோதலுக்குரிய புவி-மூலோபாய நிகழ்ச்சி நிரலுக்கும் ஏற்ப வாஷிங்டனின் தெற்காசிய மூலோபாய பங்காளியாக கொண்டு வந்தனர்.
2017 ஆம் ஆண்டில், கொழும்பு அமெரிக்காவுடன் கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவை ஒப்பந்தத்தை (Acquisition and Cross Servicing Agreement - ACSA) காலவரையின்றி நீடித்தது. முதலில் 2007 இல் கையெழுத்தான இது, இலங்கை துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு அமெரிக்க இராணுவம் பிரவேசிப்பதை அனுமதிக்கின்றது.
இந்த ஆண்டு மார்ச் மாதம், ஒரு வலதுசாரி அமெரிக்க சிந்தனைக் குழுவான ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன், 2015 முதல் அனைத்து அமெரிக்க-இலங்கை இராணுவ ஒப்பந்தங்கள் மற்றும் கூட்டுப் பயிற்சிகளை பட்டியலிட்டு, “2018 இன் பிற்பகுதியில் இருந்து, நாடு அமெரிக்க கடற்படைக்கான இந்தியப் பெருங்கடல் தளவாட மையமாக ஒரு புதிய சேவை செய்து வருகிறது,” என்று அறிவித்துள்ளது.
வாஷிங்டனுக்கு மற்றும் யுத்தம் ஏற்பட்டால் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவை பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் தடுப்பதற்கான அதன் தயாரிப்புகளுக்கு இலங்கை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது.
விக்ரமசிங்க அரசாங்கம் சில ஒப்பனை மாற்றங்களுடன் ஒப்பந்தத்தை முன்னெடுக்க முற்படுகையில், ஆளும் உயரடுக்கின் மற்ற பிரிவுகள் அமைதியாக இருக்கின்றன அல்லது பாசாங்குத்தனமான விமர்சனங்களை செய்கின்றன.
2015 இல் ஆட்சிக்கு வந்தபின், பிராந்தியத்தில் வாஷிங்டனின் இராணுவ கட்டமைப்பை ஆதரித்த ஜனாதிபதி சிறிசேன, இப்போது ஒப்பந்தத்தில் சில உட்பிரிவுகளை விமர்சிப்பதாக பாசாங்கு செய்து வருகிறார்.
அண்மையில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில், சிறிசேன வாய்சவடாலாக கூறியதாவது: “தேசத்தைக் காட்டிக் கொடுக்க முற்படும் சோஃபாவை நான் அனுமதிக்க மாட்டேன்.” 2017 இல் ஏ.சி.எஸ்.ஏ. உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பின்னர், அந்த ஒப்பந்தத்தில் உள்ள உட்பிரிவுகள் குறித்து தனக்குத் தெரியாது என்றும், அதன் ஆசிரியர்கள் மூலம் தான் ஏமாற்றப்பட்டதாகவும் இப்போது கூறுகிறார்.
தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் அவர்களின் ஐக்கிய அரசாங்கம் அவப்பேறு பெற்ற பின்னர் அவர் விக்ரமசிங்கவுடன் முரண்பட்டுக்கொள்வதற்கு முன்னதாக, சிறிசேன “சர்வதேச சமூகத்துடன்” -அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியாவுடனான- தனது “சிறந்த உறவுகள்” பற்றி பெருமையாக பேசினார். சிறிசேன கடந்த அக்டோபரில் ஒரு அரசியல் சதித்திட்டத்தில், விக்ரமசிங்கவை நீக்கி, இராஜபக்ஷவை பிரதமராக நியமித்தபோது, அவரது பிரதிநிதிகள் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தைய தூதர்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை பின்பற்ற இராஜபக்ஷ தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.
இராஜபக்ஷ உட்பட எதிர்க் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) தலைவர்கள், சோஃபா மற்றும் அமெரிக்காவுடனான ஏனைய ஒப்பந்தங்கள் குறித்து வெளிப்படையாக மௌனம் காக்கின்றனர். ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. அல்லது அதனுடன் கூட்டணி வைத்திருக்கும் பேரினவாத மக்கள் ஐக்கிய முன்னணி மற்றும் தேசிய சுதந்திர முன்னணி போன்ற ஏனைய கட்சிகளின் இரண்டாம் தரவரிசை தலைவர்கள் மட்டுமே நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுத்ததாக அரசாங்கத்தை கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
சோஃபா ஒப்பந்தத்திற்கு ஜே.வி.பி. இன் எதிர்ப்பு முற்றிலும் பாசாங்குத்தனமானது. 2007 இல் ஏ.சி.எஸ்.ஏ. உடன்படிக்கையை எதிர்த்ததாக அது கூறுவது பொய். ஜே.வி.பி. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்ததற்கான எந்த ஊடக அறிக்கையிலும் அல்லது பாராளுமன்ற ஹன்சார்ட்டிலும் எந்த ஆதாரமும் இல்லை. ஜே.வி.பி., இலங்கையின் ஏனைய கட்சிகளைப் போலவே, 2001 இல் வாஷிங்டனின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பையும் முழுமையாக ஆதரித்து, இலங்கையில் மேற்கத்திய தூதர்களுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டதுடன் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் போருக்கும் அமெரிக்காவின் ஆதரவைக் கோரியது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இலங்கை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஆழ்ந்த எதிர்ப்பைப் பற்றி கவலைகொண்டுள்ள சிறிசேன மற்றும் எதிர் அரசியல் கட்சிகள், சோஃபா ஒப்பந்தத்தின் எதிர்ப்பாளர்களாக காட்டிக்கொள்கின்றன.
உத்தேச சோஃபா ஒப்பந்தமும், சீனாவிற்கு எதிரான போருக்காக வாஷிங்டனுக்கும் கொழும்பிற்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட பாரதூரமான இராணுவ உறவுகளும், சோசலிச சர்வதேசிய வாதத்திற்கான போராட்டத்தின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜன போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை எழுப்புகின்றன. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை தொழிலாள வர்க்கம் இலங்கை ஆளும் உயரடுக்கின் அனைத்து பிரிவுகளையும் நிராகரிக்கப்பதோடு சோஃபா, ஏ.சி.எஸ்.ஏ. மற்றும் கொழும்புக்கும் வாஷிங்டனுக்கும் மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளுக்கும் இடையிலான வெளிப்படையான மற்றும் இரகசிய ஒப்பந்தங்களை எதிர்க்க வேண்டும்.
ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரை:
Why ISIS launched a terror attack on Sri Lanka
[29 May 2019]