Print Version|Feedback
මහින්ද රාජපක්ෂ තමන්ට බලය ලැබුනොත් ඇමරිකාව සමඟ සහයෝගයෙන් ක්රියා කරන බවට ඉඟි කරයි
இலங்கை: மஹிந்த இராஜபக்ஷ தான் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பதாக சமிக்ஞை செய்கிறார்
By Dilruwan Vithanage
8 August 2019
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.மு.) தலைவர் மஹிந்த இராஜபக்ஷவின் சமீபத்திய அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பதற்கான தயார் நிலையை சமிக்ஞை செய்துள்ளன.
இராஜபக்ஷவின் கைத்தேங்காயாக செயல்படும் விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன மற்றும் உதய கம்மன்பிலா தலைமையிலான சிங்கள பேரினவாதிகள், மக்கள் மத்தியில் நிலவும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை சுரண்டிக்கொள்வதற்காகவும் பொது தளங்களிலும் மற்றும் பாராளுமன்றத்திலும் அமெரிக்க எதிர்ப்பு கூச்சலை கட்டவிழ்த்து விட்டனர். ஆனால் இராஜபக்ஷ, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத போரில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தனக்கு கிடைத்த ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறார்.
அமெரிக்க இராஜதந்திரிகளை இராஜபக்ஷ அன்புடன் வரவேற்கிறார். 2015 ஜனாதிபதித் தேர்தலில் தன்னை அகற்றுவதற்கு வாஷிங்டன் திரைக்குப் பின்னால் இருந்து செயற்பட்டது என்பதை அறிந்த அவர், பழைய பிரச்சினைகளை மறக்க அழைப்பு விடுக்கிறார்.
ஆகஸ்ட் 4 அன்று வெளியான லங்காதீப பத்திரகைக்கு அளித்த பேட்டியில் இராஜபக்ஷ இவ்வாறு கூறினார்:
"போருக்கு அமெரிக்காவிடம் இருந்து கிடைத்த ஆதரவு மிகப்பெரியது. இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ஆதரவு மகத்தானது. சீனாவிலிருந்து எவ்வளவு ஆதரவு கிடைத்தது? எனவே, இந்த நாடுகளின் ஆதரவு எங்களுக்கு தேவை.”
இதேபோல், 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது இராஜபக்ஷவுக்கு எதிராக வாஷிங்டனும் புது டெல்லியும் நடத்திய “சதி” பற்றி கேட்டபோது, “அந்த வரலாறு மறந்துபோய்விட்டது. ஒவ்வொரு நாடும் செய்த காரியங்களை மறந்து, எல்லா நாடுகளுடனும் ஒற்றுமையுடன் செயல்பட நாம் தயாராக உள்ளோம்,” என அவர் கூறினார்.
பெய்ஜிங்குடனான இராஜபக்ச அரசாங்கத்தின் நெருங்கிய உறவை முறிப்பதற்கும், சீனாவை பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் சுற்றி வளைக்கும் அமெரிக்காவின் “ஆசியாவிற்கு முன்னிலை” கொள்கையின் ஒரு பாகமாக, இலங்கையை அதன் மூலோபாயத் திட்டங்களில் இணைக்கும் நோக்கில், 2015 இல் இராஜபக்ஷைவை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற வாஷிங்டன் முயன்றது.
கடந்த நான்கு ஆண்டுகளில் சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது பாரிய தாக்குதல்களை நடத்தியுள்ள அதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகள் அமெரிக்க போர் திட்டங்களுக்கு ஏற்ப முன்னெப்போதும் இல்லாத அளவு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.
சிறிசேன-விக்ரமசிங்க ஆட்சி மீதான வெகுஜன எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதோடு, ஜனாதிபதித் தேர்தலும் நெருங்கி வருவதால், அடுத்து வரும் எந்தவொரு அரசாங்கத்துடனும் போர் திட்டங்களைத் தொடர அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. மேலும், சிறிசேன, விக்ரமசிங்க மற்றும் இராஜபக்ஷ தலைமையிலான முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்து பிரிவுகளும், அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய சக்திகளுடன் உறவை மேம்படுத்த தங்கள் தயார்நிலையை வெளிப்படுத்தியுள்ளன.
ஜூலை 23 அன்று அமெரிக்க தூதர் அலினா டெப்லிட்ஸ் இராஜபக்ஷவைச் சந்திக்கச் சென்றார். எந்தவொரு தரப்பினரும் விரிவான அறிக்கையை வெளியிடவில்லை. ஆனால் அன்று இராஜபக்ஷ வெளியிட்ட ட்வீட்டில், “ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை எவ்வாறு மேம்படுத்தலாம் என்றும் கலந்துரையாடினோம்," என்று குறிப்பிட்டிருந்தார்.
இராஜபக்ஷ கூறாவிட்டாலும், அவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி இன்னும் பலவற்றைப் பேசியிருப்பார்கள்.
இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதர் (2006-2009) ரொபர்ட் பிளேக் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, இராஜபக்ஷ அவருடன் ஒரு சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார். பிளேக் ஒரு உடனடி வாய்ப்பைக் கொடுத்து, இராஜபக்ஷவின் அரசியல் நோக்கங்களைப் பற்றி விரிவாகக் கேட்டார். ஒரு அறிக்கையின்படி, பிளேக் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதருடன் இராஜபக்ஷ உடனான சந்திப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார். டெப்லிட்ஸ் மே மாதம் அவரை சந்திக்கத் தொடங்கினார்.
இலங்கையுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள தனது இராணுவ உறவை ஆழப்படுத்திக்கொள்வதில் வாஷிங்டன் உறுதியாக உள்ளது.
ஆகஸ்ட் 3 நடைபெற்ற இலங்கை வர்த்தக சபையின் 3 வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசிய டெப்லிட்ஸ், கடந்த காலங்களில் அமெரிக்கா இலங்கைக்கு "நன்கொடை அளிப்பவராக" செயற்பட்டிருந்த போதும், இப்போது "இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு வளர வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
"21 ஆம் நூற்றாண்டின் கால்பகுதி நெருங்கி வரும் இந்த நேரத்தில், எங்கள் உறவுகள் வேறு பாதையில் செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நன்கொடையாளருக்கும் பெறுநருக்கும் இடையிலான உறவுக்கு அப்பால், நீங்கள் சம பங்காளிகளாக மாற வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இது ஒரு ஏமாற்றும் பாராட்டு ஆகும். அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் இலங்கை முதலாளித்துவத்தை வெறும் அடிமைத்தனத்தின் வழிமுறையிலேயே கருதுகின்றனர், சமமானதாக அல்ல.
அமெரிக்க அரசின் மில்லினியம் செலஞ்ச் கோர்ப்பரேஷன் (எம்.சி.சி) திட்டத்தின் கீழ், இலங்கையில் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும், விவசாய நில மேம்பாட்டிற்காகவும் 480 மில்லியன் டாலர் மானியத்திற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்ததாக அவர் நினைவு கூர்ந்தார்.
சிறிசேன கடந்த அக்டோபரில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியதால், அவரை மீண்டும் பணியில் அமர்த்துமாறு கட்டாயப்படுத்துவதற்காக எம்.சி.சி. இன் கீழ் கொடுக்கப்படவிருந்த நிதியை அமெரிக்க இடை நிறுத்தியது. பெய்ஜிங்கை ஒரு நட்பு நாடாக இராஜபக்ஷ கருதுவதாலேயே அவர் மீண்டும் பதவிக்கு வருவதை வாஷிங்டன் விரும்பியிருக்கவில்லை.
தான் சம்பந்தமாக மேற்கிடம் உள்ள தவறான கருத்துக்களை அகற்ற, அமெரிக்க தூதர் உட்பட மேற்கத்திய தூதர்களை சந்திக்க ஒரு குழுவை அனுப்பியுள்ளதாக அதே நாளில் இராஜபக்ஷ கூறினார். ஏகாதிபத்திய-எதிர்ப்பு முகமூடி அணிந்த தினேஷ் குணவர்தன தலைமையிலான குழு இந்த குழுவில் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மே மாதம் கொழும்பில் ஆற்றிய ஒரு உரையில், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராணுவ உறவுகளின் வளர்ச்சியை பற்றி பிளேக் பாராட்டினார். "நான் தூதராக இருந்தபின், இப்போது எங்கள் இராணுவங்களுக்கு இடையிலான உறவுகள் மிகப்பெரிய அளவில் வளர்ந்திருப்பதை இட்டு மகிழ்ச்சியடைகின்றேன்," என்று அவர் கூறினார்.
கடந்த நான்கு ஆண்டுகளில், அமெரிக்க இந்தோ-பசிபிக் படை, இலங்கையுடனான இராணுவ உறவுகளை பெரிதும் பலப்படுத்தியுள்ளது. இலங்கையின் கடல் பாதுகாப்பிற்கு 39 மில்லியன் டாலர்களை வழங்க அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது என்று பிளேக் கூறினார்.
கொழும்புடனான இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காக ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதத் தாக்குதலை உடனடியாக பற்றிக்கொண்ட அமெரிக்கா, இலங்கையில் அமெரிக்க ஆயுதப் படைகள் நிலைகொள்வதற்கு, பயணம் செய்ய மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கும் (சோபா) ஒப்பந்தத்தை இலங்கையுடன் கைச்சாத்திடுவதற்கு வாஷங்டன் முயன்று வருகின்றது.
அதே நேரத்தில், வாஷிங்டன் உடனடியாக மத்திய புலனாய்வுப் பிரிவின் (எஃப்.பி.ஐ) அதிகாரிகளையும், அமெரிக்க இந்தோ-பசிபிக் இராணுவ புலனாய்வு நிபுணர்களையும் விசாரணைக்கு உதவுவதற்காக அனுப்பி வைத்தது.
அடுத்து வரும் எந்தவொரு ஆளும் உயரடுக்கையும் அதன் மூலோபாய நலன்களுக்காக செயல்பட கட்டாயப்படுத்தும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க இராஜதந்திரிகளும் இராஜபக்ஷவை சந்திக்கின்றனர். சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் பதட்டங்கள் ஆழமடைந்து வரும் நிலைமைகளின் கீழேயே இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையில் அதிகரித்து வரும் வர்த்தக மற்றும் நிதி யுத்தம் ஒரு இராணுவ மோதலாக வேகமாக அதிகரித்து வருகிறது.
வாஷிங்டனை தளமாகக் கொண்ட ஒரு வலதுசாரி சிந்தனைக் குழுவான ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன் (Heritage Foundation), இந்த ஆண்டு மார்ச் மாதம், “இலங்கை: சுதந்திர மற்றும் வெளிப்படையான இந்து-பசுபிக் மூலோபாய உறவுகளின் பரீட்சார்த்தம்” (Sri Lanka: A Test Case for the Free and Open Indo-Pacific Strategy) என்ற பெயரில் வெளியிட்ட அறிக்கையானது, முடிவில் இலங்கையுடனான மூலோபாய உறவுகளின் முக்கியத்துவத்தை பற்றி சுட்டிக் காட்டியுள்ளது.
"அடுத்த சில மாதங்களில் 2015 இல் கட்டியெழுப்பட்ட இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், அரசியல் நெருக்கடியை நிர்வகிக்கவும் வாஷிங்டன் செயல்பட வேண்டும்," என்று அது கூறியது.
அடுத்த தேர்தலில் இராஜபக்ஷவின் கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது என்று கணக்கிடும் பாரம்பரிய ஆய்வாளர், அவருடன் பணியாற்றுவது கடினம், ஆனால் பொதுமக்களின் தேர்வை "ஒரு குறிப்பிட்ட அளவிற்கு" மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். "ஆனால் மிக முக்கியமானது என்னவெனில், கொழும்பில் எதிர்காலத்தில் உருவாகும் அரசாங்கத்தை ஜனநாயக மற்றும் மனித உரிமை தரங்களின் அடிப்படையில் நிறுவ அமெரிக்கா செயல்பட வேண்டும்," என அது மேலும் கூறுகின்றது.
அமெரிக்க ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் குறித்து எந்த அக்கறையும் இல்லை என்று சொல்லத் தேவையில்லை. ஆனால் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் குறித்த இந்த போலி அக்கறையானது, இராஜபக்ஷ அல்லது வேறு யாராக இருந்தாலும், “கொழும்பில் எதிர்காலத்தில் அதிகாரத்திற்கு வரும் அரசாங்கம்” அமெரிக்காவை அரவனைத்துக்கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கையே ஆகும்.