Print Version|Feedback
India’s unprecedented lockdown of Kashmir in eleventh day
காஷ்மீர் மீதான முழு அடைப்பை, இந்தியா முன்நிகழ்ந்திராத வகையில் பதினொன்றாவது நாளாக தொடர்கிறது
By K. Ratnayake
15 August 2019
இந்தியாவின் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதி இன்றுவரை தொடர்ந்து பதினொன்றாவது நாளாக, பத்தாயிரக் கணக்கான இந்திய சிப்பாய்கள் மற்றும் துணை இராணுவபடையினர், அத்துடன் உள்ளூர் பொலிசார் ஆகியோரால் செயல்படுத்தப்பட்டுவரும் முன்நிகழ்ந்திராத வகையிலான பாதுகாப்பு அடைப்பின் கீழ் உள்ளது. அதன் 13 மில்லியன் மக்கள் எங்கும் செல்ல முடியாத வகையில் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர் என்பதுடன், அவர்களது அனைத்து இணைய மற்றும் செல்போன் மற்றும் வீட்டு தொலைபேசி தொடர்புகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) அரசாங்கம், இந்திய கட்டுப்பாட்டிலான காஷ்மீர் பகுதியை நிரந்தரமாக மத்திய அரசாங்க பொறுப்பின் கீழ் கொண்டுவருவது குறித்து எழும் என எதிர்பார்த்த பெரும் எதிர்ப்பை ஒடுக்க கொடூரமான அடைப்பை திணித்துள்ளது.
ஆகஸ்ட் 5 அன்று, பிஜேபி அரசாங்கம், இந்தியாவின் ஒரே முஸ்லீம்-பெரும்பான்மை மாநிலமான ஜம்மு-காஷ்மீரின் (J&K) ஒரு பாதி தன்னாட்சி அரசியலமைப்பு சிறப்பு அந்தஸ்தை சட்டவிரோதமாகவும், ஆலோசனை செய்யாமலும் அல்லது எவ்வித முன்னெச்சரிக்கையும் விடுக்காமலும் நீக்கியதுடன், அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு ஒடுக்குமுறை பிரதமர் நரேந்திர மோடியும் மற்றும் அவரது பிஜேபி யும் புது தில்லியில் மேற்கொண்ட அரசியலமைப்பு சதியினால் முழுக்க முழுக்க நடந்தேறியது.
இந்திய அதிகாரிகள் கூறுவதன்படி, ஐநூறுக்கும் மேற்பட்டோர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில், ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்களான உமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்தி ஆகியோரும், மேலும் காஷ்மீர் முஸ்லீம் உயரடுக்கின் பாரம்பரிய இந்திய-சார்பு கன்னையின் ஏனைய முக்கிய தலைவர்களும் அடங்குவர்.
மோடியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கடந்த வாரம் முதல், இந்த பிராந்தியத்தின் மிகப்பெரிய நகரமான ஸ்ரீநகரில் இருந்து அனைத்து இடங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் பாதுகாப்பு அடைப்பை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறார்.
ஜம்மு-காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பது பற்றி சக கட்சி உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்க அங்கு வருகை தரும் முக்கிய இந்திய அரசியல் தலைவர்கள் தடுக்கப்படுகின்றனர். சிபிஐ மற்றும் சிபிஎம் போன்ற இந்தியாவின் இரண்டு முக்கிய ஸ்ராலினிச கட்சிகளின் தலைவர்கள் முறையே சீதாராம் யெச்சூரி மற்றும் டி. ராஜா ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் கூட, ஸ்ரீநகர் விமான நிலையத்தை அவர்கள் வந்தடைந்த போது தடுத்து வைக்கப்பட்டனர் என்பதுடன், புது தில்லிக்கு திரும்பிச் செல்லும் படி கட்டாயப்படுத்தப்பட்டனர்.
செவ்வாயன்று, இந்தியாவின் உச்ச நீதிமன்றம், அரசாங்கம் அதன் அவசரகால தடைகளை இரத்து செய்ய வேண்டுமென்று, அல்லது குறைந்தபட்சம் அவற்றை மீண்டும் சரிசெய்ய வேண்டுமென்று கோரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது. பிஜேபி அரசாங்கம் அங்கு “இயல்பான நிலையை மீட்டெடுக்க… குறிப்பிட்ட அவகாசம்” அதற்கு வழங்கப்பட வேண்டுமென்றும், மேலும், “ஒரு சதவிகித அளவிற்கு கூட எவரும் அங்கு வன்முறையில் ஈடுபட முடியாது,” என்றும் கூறி, இந்திய உச்ச நீதிமன்றம் இந்த மனுவை மேலும் பரிசீலிப்பதை இரண்டு வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்திய அரசாங்கத்தின் தகவல் தடையின் காரணமாக, ஜம்மு-காஷ்மீர் மக்கள் வெளியுலகைப் பற்றியும் அங்கு என்ன நடக்கிறது என்பது பற்றி சிறியளவில் கசிந்த தகவல்களைப் பற்றியும் அறிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றனர்.
ஆயினும் பல விடயங்கள் தெளிவாக உள்ளன. அனைத்து எதிர்ப்புக்களையும் வெற்றிகரமாக அடக்கிவிட்டது பற்றியும் மக்கள் அச்சுறுத்தப்பட்டிருப்பது குறித்தும் அரசாங்கம் பெருமை பீற்றிக் கொள்வது, பொய் என்பதை இடையறாத அடக்குமுறை அத்துடன் இங்கும் அங்கும் நிகழும் ஆர்ப்பாட்டங்கள் குறித்த அறிக்கைகள் நிரூபித்துள்ளது.
சென்ற வார இறுதியில், முஸ்லீம் பண்டிகையான ஈத் பண்டிகைக்கு தேவையான உணவுகளை வாங்கவும், அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யவும் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை அதிகாரிகள் சற்று தளர்த்தினர். என்றாலும் சிறிது நேரத்திலேயே ஒலிபெருக்கிகள் மூலம் மக்கள் அவர்களது வீடுகளுக்கு திரும்ப வேண்டுமென்றும் கடைக்காரர்கள் கடைகளை மூட வேண்டுமென்றும் பொலிசார் உத்தரவிட்டதுடன், நான்கு பேருக்கு அதிகமாக மக்கள் ஒன்றுகூடும் பட்சத்தில் அவர்கள் மீது 144 தடைச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தனர்.
கடந்த வெள்ளியன்று பிரார்த்தனைகளில் கலந்து கொள்ள மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, ஸ்ரீநகர் வீதிகளில் பெரும் மக்கள் கூட்டம் அணிவகுத்துச் செல்வதைக் காட்டும் காணொளியை பிபிசி வெளியிட்டது. அவர்கள், “எங்களுக்கு எங்கள் சுதந்திரம் வேண்டும்,” என்ற சுலோக அட்டைகளை கையிலேந்தியும், “இந்தியாவிற்கு திரும்பிச் செல்லுங்கள்,” என்று கோஷமிட்டபடியும் சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 10,000 பேர் கலந்து கொண்டதாக அறிக்கைகள் தெரிவித்தன, ஆர்ப்பாட்டம் அமைதியாக நடைபெற்ற போதிலும், பாதுகாப்பு படையினர் கண்ணீர்ப்புகை வீசியும், உருண்டை துப்பாக்கியால் சுட்டும் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கினர்.
இந்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிபிசி அறிக்கை “முற்றிலும் புனையப்பட்டது என்பதுடன் தவறானது” என்று அதை நிராகரித்தார். மேலும், “ஸ்ரீநகர்/பாராமுல்லாவில் ஒரு சில தவறான போராட்டங்கள் நடந்துள்ளன என்பதுடன், அதில் 20 பேருக்கு அதிகமாக மக்கள் கலந்து கொள்ளவில்லை” என்றும் கூறினார்.
என்றாலும், பாதுகாப்புப் பணியாளர்கள் கடந்த சனியன்று “பெரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து வெடிக்கின்றன,” என்று தங்களிடம் கூறியதாக நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை நிருபர்கள் கூறியதானது, புது தில்லியில் அதிகாரிகள் நெரிசலான தெருக்களையும், செழிப்பான சந்தைகளையும் வளைத்து வளைத்துக் காட்டும் புகைப்படங்களை பொய்யாக்குகின்றது.
பாராமுல்லா நகரில் உள்ள ஒரு சிப்பாய், டைம்ஸ் பத்திரிகைக்கு இவ்வாறு தெரிவித்தார்: “பகல் அல்லது இரவு எந்த நேரத்திலும், தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், ஒரு டசின், இரண்டு டசின், அதற்கும் கூடுதலான கூட்டத்தினர், சில சமயங்களில் நிறைய பெண்களுடன், வெளியே வந்து, எங்களை நோக்கி கற்களை வீசிவிட்டு ஓடிவிடுகிறார்கள்.” மேலும், “மக்கள் மிகவும் கோபமாக உள்ளனர். அவர்கள் விடாப்பிடியாக இருக்கிறார்களே தவிர, பயப்படுவதில்லை” என்றும் கூறினார்.
அடக்குமுறை அன்றாட வாழ்வில் அதிகரித்தளவில் இடைஞ்சல்களை விளைவிப்பதாக பத்திரிகை அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. உணவு மற்றும் மருந்து பற்றாக்குறை அங்கு பரவலாக உள்ளது என்பதுடன், ஊரடங்கு என்ற பேரில் மக்கள் மருத்துவமனைக்கு செல்லவோ அல்லது மருந்துகளைப் பெறவோ முடியாத நிலையும் உள்ளது.
ஸ்ரீநகரில் உள்ள லல்லா டெட் மருத்துவமனையில், நோயாளிகள் தரையில் கிடப்பதையும், வேலைக்கு வர முடியாத மருத்துவர்களுக்காக அவர் காத்திருப்பதையும் டைம்ஸ் பத்திரிகை கண்டறிந்தது. “இது வாழும் நரகமாக உள்ளது,” என்று ஜமீலா என்ற மருத்துவர் தெரிவித்தார்.
அரசு விதித்த தகவல் இருட்டடிப்பு இல்லையென்றால், நிச்சயமாக முறையான சுகாதார வசதியின்மையின்மையின் காரணமாக இறப்புகள் ஏற்பட்டன என்ற அறிக்கைகள் வந்திருக்கும்.
முதலீட்டாளர் சார்பு “சீர்திருத்தம்,” வெறித்தனமான இந்து வகுப்புவாதம் மற்றும் சீனாவுக்கு எதிராக வாஷிங்டனின் இந்திய-பசிபிக் இராணுவ கட்டமைப்பை மேலும் ஒருங்கிணைப்பது போன்ற அவர்களது வலதுசாரி திட்டநிரல்களுக்கு இருக்கும் அனைத்து எதிர்ப்புக்களையும் மோடியும் அவரது பிஜேபி அரசாங்கமும் தேசப்பற்று இல்லாதவை என்றும் அப்படியில்லை என்றால் தேசத்துரோகம் என்றும் எப்போதும் எதிர்க்கின்றனர். நேற்று ஒரு நேர்காணலில், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டவிரோதமாக நீக்கப்பட்டதை விமர்சிப்பவர்களை மோடி கண்டித்ததுடன், “அவர்களது இதயங்கள் மாவோயிஸ்டுகள் மற்றும் பயங்கரவாதிகளுக்காக மட்டுமே துடிக்கின்றன” என்றும் கூறினார்.
கடந்த வியாழனன்று தேசத்துக்கு ஆற்றிய உரையில், காஷ்மீரை அடிமைப்படுத்தியது தற்காலிகமானது என்றும் ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் விரைவில் நடைபெறும் என்றும் காட்ட முயற்சித்தார் -ஆயினும் அந்த சட்ட சபை மிகக் குறைந்த அதிகாரங்களை கொண்டதாக இருக்கும், அதன் ஒவ்வொரு செயலையும் புதி தில்லியால் இரத்து செய்ய முடியும்– மற்றும் பிஜேபி இன் பாதுகாப்பின் கீழ் காஷ்மீர் மக்களுக்கு அமைதியும் செழிப்பும் கொண்டு வரப்படும் என்றார்.
இவையனைத்தும் பொய்யே. காஷ்மீர் மீதான பிஜேபி இன் தாக்குதல், ஜம்மு-காஷ்மீரில் முப்பது ஆண்டுகால பாகிஸ்தான் ஆதரவிலான இந்திய விரோத கிளர்ச்சிக்கு விரைவான மற்றும் இரத்தக்களரியான முடிவைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அரசு தாக்குதலுக்கான அடித்தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. மேலும், பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராகவும், கிழக்கில் காஷ்மீரின் எல்லையாகவுள்ள சீனாவுக்கு எதிராகவும் புது தில்லியின் கைகளை பலபடுத்துவதையும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும் அச்சுறுத்துவதற்கும் இந்து வகுப்புவாதத்தையும், போர்க்குணமிக்க தேசியவாதத்தையும் தூண்டிவிடுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்ய வேண்டும் என்பது இந்து வலதின் நீண்டகால கோரிக்கை என்பதுடன், இந்தியாவை ஒரு இந்து ராஸ்ட்ரா அல்லது நாடாக மாற்றுவதற்கான ஒரு முக்கிய கூறாகவும் அது உள்ளது.
காஷ்மீர் மீதான மோடியின் தாக்குதல், ஒரு அதிக ஆபத்து நிறைந்த சூதாட்டம் போன்றது என முக்கிய பத்திரிகைகள் ஒப்புக்கொண்ட போதிலும் கூட, இந்திய ஆளும் உயரடுக்கு அதை கடுமையாக ஆதரித்து வந்துள்ளது. இந்தியாவின் செல்வ வளமிக்க கோடீஸ்வரரும் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவருமான முகேஷ் அம்பானி செவ்வாயன்று, நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி ஜியின் அழைப்புக்கு,” பதிலளிக்கும் விதமாக அவரது நிறுவனம் ஜம்மு-காஷ்மீரில் ஒரு பெரும் முதலீட்டிற்கு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று தெரிவித்தார்.
அமெரிக்காவும் ஏனைய மேற்கத்திய சக்திகளும் தங்களது பங்கிற்கு, புது தில்லியின் புவிசார் அரசியல் ரீதியிலான ஆத்திரமூட்டும் தன்மை மற்றும் காஷ்மீரில் அதிகரித்துவரும் இந்திய அடக்குமுறை ஆகிய இரண்டு குறித்தும் உறுதியாக மவுனம் சாதிப்பதன் மூலம் இந்தியாவுக்கு தங்களது ஆதரவை சமிக்ஞை செய்தனர். வாஷிங்டன் மற்றும் டோக்கியோ மட்டுமல்லாமல், இலண்டன், பாரிஸ் மற்றும் பேர்லின் ஆகியவையும் சேர்ந்து சீனாவுக்கு எதிரான ஒரு இராணுவ மூலோபாய எதிர் சக்தியாக இந்தியாவை கட்டியெழுப்ப ஆர்வமாக உள்ளன.
இதற்கிடையில், புது தில்லி தனது “உள்” விவகாரங்களை ஒழுங்குபடுத்துவதற்கான உரிமையை வலுவாக ஆதரிக்கும் ஒரு அறிக்கையை ரஷ்யா விடுத்துள்ளது. இந்நிலைமைகளின் கீழ், அமெரிக்காவும் மற்றும் நேட்டோ சக்திகளும் ரஷ்யா மீதான இராணுவ-இராஜதந்திர அழுத்தத்தை அதிகரித்து வருகின்ற அதேவேளை, புது தில்லியுடனான நீண்டகால இராணுவ-பாதுகாப்பு கூட்டாண்மையை பாதுகாக்க மாஸ்கோ ஆர்வமாக உள்ளது.
பெய்ஜிங் ஒரு குழப்பநிலையில் இருப்பதாக தன்னைக் காண்கிறது. பாகிஸ்தான் அதன் நெருங்கிய சர்வதேச நட்பு நாடுகளில் ஒன்றாகும், என்றாலும் கூட அது புது தில்லியை வாஷிங்டனின் அரவணைப்பிற்குள் மேலும் தள்ளும் நடவடிக்கைகளை எடுக்க தயங்குகிறது. திங்களன்று, இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் முன்னரே திட்டமிடப்பட்ட மூன்று நாள் சீன விஜயத்தைத் தொடங்கினார்.
காஷ்மீரில் இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளைப் பற்றி ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு வருவது தொடர்பாக இஸ்லாமாபாத்துக்கு ஆதரிவளிக்க பெய்ஜிங் உறுதியளித்ததாக பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கூறியுள்ளார்.
தெற்காசியாவின் போட்டி அணுவாயுத சக்திகளுக்கிடையில் பதட்டங்கள் அதிகரித்திருக்கும் கடுமையான ஆபத்தை சுட்டிக்காட்டும் ஒரு போர்வெறிமிக்க உரையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரைத் தாக்கும் திட்டம் புது தில்லிக்கு இருப்பதாக நேற்று குற்றம்சாட்டியதுடன், அது நடந்தால் பாகிஸ்தான் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கும் என்று கூறினார். மேலும், “இந்தியா எந்தவிதமான மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், நாங்கள் கடைசி வரை அதை எதிர்த்துப் போராடுவோம்,” என்றும் கான் அறிவித்தார்.
போர் வெடிக்குமானால் அது உலக சக்திகளின் செயலற்ற தன்மையால் மட்டுமே உருவெடுக்கும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் சேர்த்துக் கூறினார்.
இந்திய துணைக்கண்டத்தின் பிற்போக்குத்தனமான 1947-48 வகுப்புவாதப் பிரிவினையால் ஒரு முஸ்லீம் பாகிஸ்தானும் முக்கியமாக இந்து இந்தியாவும் உருவாக்கப்பட்டன என்பதால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மூலோபாய போட்டியின் மையமாக காஷ்மீர் சச்சரவு இருந்து வருகிறது.