Print Version|Feedback
இலங்கையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் கோரிக்கைகளை அலட்சியப்படுத்துவதற்கு எதிராக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்
Vimal Rasenthiran
24 August 2019
இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஒரு வருடமாக பட்டமளிப்பு இடம்பெறாத பீடங்களுக்கு விரைவாக பட்டமளிப்பு நடத்தப்பட வேண்டும், கடந்த மூன்று மாத காலத்திற்குள் வழங்கப்படாதுள்ள சில பரீட்சைகளின் பெறுபேறுகளை வழங்க வேண்டும் மற்றும் நிரந்தர துணை வேந்தர் ஒருவரை விரைவாக நியமிக்க வேண்டும் போன்றவையே மாணவர்களின் கோரிக்கைகளாகும்.
இந்தப் வகுப்பு பகிஷ்கரிப்பிற்கு அழைப்புவிட்டிருந்த யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது, மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணாவிட்டால் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக ஆகஸ்ட் 7 அன்று கடிதம் மூலம் பல்கலைக்கழக அதிகாரிக்கு தெரியப்படுத்தி இருந்தது. அந்தக் கடிதத்தால் மாணவர்களுக்கு எதுவித தீர்வும் எட்டப்படாத நிலையிலேயே மாணவர் ஒன்றியம் பகிஷ்கரிப்பை நடத்தியது. இந்த வகுப்பு பகிஷ்கரிப்பை செய்தியாக்குவதற்காக நிருபர்கள் பல்கலைக்கழகத்துக்குள் செல்வதை நிர்வாகம் தடை செய்திருந்தது.
பட்டமளிப்பு நடத்தப்படாத காரணத்தால் உரிய காலத்தில் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி வேலை தேடமுடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும் தொடர்ந்தும் பெற்றோரின் வருமானத்திலேயே தங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். அவர்கள் அதிருப்தி மற்றும் அமைதியின்மையை உணர்கின்றனர்.
பரீட்சை முடிவுகள் உரிய காலத்தில் வழங்கப்படாமையால், தங்கள் மதிப்பெண்களை அறிய முடியாமலும், குறிப்பாக அடுத்த கட்ட படிப்பை எவ்வாறு ஒழுங்கு செய்துகொள்வது என்று தெரியாமல் மாணவர்கள் தடுமாற்றத்தில் உள்ளனர். குறைந்த மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் மாணவர்கள் அடுத்த கட்டத்தில் அதை சரி செய்துகொள்ள வேண்டும்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர். விக்கினேஸ்வரன், மே 5 அன்று உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவால் திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டு, “தகுதிவாய்ந்த அதிகாரியாக” கதிர்காமநாதன் கந்தசாமி நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. ஒரு நிரந்தர துணை வேந்தர் நியமிக்கப்படாமை இந்த நிர்வாக அலட்சியங்களுக்கான காரணம் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறெனினும், துணை வேந்தர் பதவி நீக்கம் செய்யப்பட்டது ஒரு நிச்சயமான சூழ்நிலையிலயே ஆகும். ஏப்பிரலில் ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த பங்கரவாத குண்டுத் தாக்குதல்களை உடனடியாக பற்றிக்கொண்ட அரசாங்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட சகல கட்சிகளதும் ஒத்துழைப்புடன் பொலிஸ்-இராணுவ அரச திட்டத்தை நோக்கி முன்னநகர்வதற்காக கொடூரமான அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியது. இதன் கீழ், சோதனை செய்வது, கைது செய்வது உட்பட மிகப் பரந்தளவிலான அதிகாரங்கள் பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதல் குறித்து அரசாங்கம் ஏற்கனவே அறிந்திருந்தும் அதைத் தடுக்க நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து நாடு பூராகவும் முஸ்லிம்களுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பல்கலைக்கழகங்களிலும் தேடுதல்கள் நடத்தப்பட்டன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தேடுதல் நடத்திய இராணுவமும் பொலிசும் மே 3 அன்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரையும் செயலாளரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தது.
மாணவர் ஒன்றிய காரியாலத்தில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்துடன் கூடிய சுவரொட்டிகள் இருந்தமைக்காக குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டனர். மாணவர்களின் போராட்டங்களின் பின்னர் மே 16 அன்று அவர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டது பிணையிலேயே ஆகும்.
புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக மாணவர்களை நினைவு தூபி அமைத்தமை, குறித்த சுவரொட்டிகள் மாணவர் ஒன்றிய அலுவலகத்தில் இருந்தமை மற்றம் மாணவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை போன்ற விடயங்களை விக்னேஸ்வரன் கட்டுப்படுத்தவில்லை என்பதே அவர் பதவி விலக்கப்பட்டதற்கான காரணமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.
விக்னேஸ்வரன் உடனடியாக பதவி விலக்கப்பட்டமை, அடுத்து வரும் துணை வேந்தர் மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலாகும்.
புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்தும் வடக்கு மற்றும் கிழக்கை இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டிருப்தோடு, பல்கலைக்கழக மாணவர்களும் இளைஞர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இலவசக் கல்வி வெட்டுக்கு எதிராக மாணவர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் நாடு பூராகவும் பல்கலைக்கழக மாணவர்கள் கண்காணிக்கப்படுவதோடு அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் உக்கிரமாக்கப்பட்டுள்ளன.
தெற்கில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது, கல்வி வெட்டின் தோற்றுவாயான நெருக்கடியில் மூழ்கிப் போயுள்ள முதலாளித்துவத்துக்கு எதிராக மாணவர்கள் திரும்பி விடுவதை தடுப்பதற்காக, அவர்களது போராட்டத்தை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டத்திற்குள் சிறைப்படுத்தி வைக்கின்றது. இதையே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் செய்து வருகின்றது. இந்த வகுப்பு பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுத்த மாணவர் ஒன்றியம், எந்தவித பிரதிபலனும் இன்றி, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக கூறி, பகிஷ்கரிப்பைக் கைவிட்டமை, இத்தகைய அழுத்தம் கொடுக்கும் அரசியலின் வங்குரோத்தின் வெளிப்பாடே ஆகும்.
அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம் அரச ஒடுக்குமுறையையும் சிக்கன நடவடிக்கைகளையும் தோற்கடிக்க முடியாது என்பதே உலக தொழிலாள வர்க்கத்தின் அனுபவமாகும். உலக முதலாளித்துவத்திற்கு எதிராக சர்வதேச சோசலிசத்திற்காகப் போராடுவதன் மூலம் மட்டுமே அனைத்து சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியும். அரசாங்கத்தின் அடக்குமுறையைத் தோற்கடிப்பதற்கு, அனைத்து சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய ஒரே சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பக்கம் மாணவர்கள் திரும்ப வேண்டும்.
இலங்கையில் இனவாத யுத்தம் நடந்த காலத்திலும் மற்றும் அதற்கு பின்னரும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கல்விமான் பகுதியினரும் மாணவர் ஒன்றியமும் தமிழ் தேசியவாதத்தின் குரலாக இருந்துவந்துள்ளதுடன், தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களைப் பேணுவதற்காக செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் முதலாளித்துவக் கட்சிகளுடன் கூட்டாக செயற்பட்டுள்ளனர். தற்போதைய சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக 2015 ஜனாதிபதி தேர்தலில் வாஷிங்டன் திட்டமிட்ட ஆட்சி மாற்ற சதிக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஆதரவளித்தது.
உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நடவடிக்கைகளை விமர்சித்ததுடன் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விளக்கினர்.
இங்கே நாங்கள் நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றோம் அதற்கு தீர்வு காண்பதற்காகவே இன்று பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளோம் என அரசறிவியல்துறை இறுதியாண்டு மாணவி ரேணுகா தெரிவித்தார். “பல்கலைக்கழகத்தில் பட்டக்கல்வி நிறைவு செய்து ஒரு வருடமாகியும் பட்டமளிப்பு இன்னும் நடைபெறவில்லை. இப்படி காலத்தை நீடித்து எமது வாழ்க்கையுடன் விளையாடுகின்றனர். துணைவேந்தரை எந்த காரணமுமின்றி ஜனநாயக விரோதமாக நீக்கியதன் மூலம் இங்கே பிரச்சனைகளை அதிகரித்துள்ளனர். இந்தப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு, தேர்தலில் அரசியல் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகளைப் போலவே மாணவர் ஒன்றியத்தின் செயற்பாடும் உள்ளது. கடந்த காலத்தில் மாணவர் ஒன்றியத்தில் இருந்தவர்கள் என்ன செய்தார்களோ அதையே இன்று உள்ளவர்களும் செய்கின்றனர். எமது எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடுமோ என்ற பய உணர்வுடனேயே இருக்கின்றோம்” என அவர் விளக்கினார்.
கலைப்பிரிவு மூன்றாம் வருட மாணவரான விஜயன், மத்திய மலையகப் பிரதேசத்தில் இருந்து யாழ். பல்கலைக்கழகத்துக்குத் தெரிவானவர் ஆவார். அவரது வறிய குடும்பத்தால் கல்விச் செலவுகளுக்கு உதவ முடியாத நிலமை இருப்பதால் அவர் பகுதி நேரம் ஒரு கடையில் வேலை செய்கின்றார். “தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள நிலமைகளால் எமது கல்வி கற்கும் காலம் நீண்டு செல்லப்போகின்றது. இதனால் நாங்கள் சகல வழிகளிலும் பாதிக்கப்படப் போகின்றோம். அது மட்டுமன்றி மாணவர்களுக்கான விடுதி வசதிகள் போதுமானவையாக இல்லாத காரணத்தினால், பல்கலைக்கழக விடுதிகளில் முதலாம் வருட மாணவர்களும் இறுதியாண்டு மாணவர்களும் மட்டுமே தங்க முடியும். மற்றவர்கள் வாடகை அறைகளில் தான் தங்கமுடியும். வாடகையாக மாதமொன்றுக்கு 1500/= தொடக்கம் 2000/=வரை செலுத்த வேண்டும். இங்கே பரீட்சைகள் ஆரம்பித்தால் போதுமான கட்டிட வசதியின்மையால் 20-30 நாட்கள் வரை பரீட்சைகள் நடக்கின்றன. தற்போது புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்தாலும் அவை போதுமானதாக இல்லை,” என அவர் விளக்கினார்.
சிலர் தேயிலைத் தோட்டத்தில் தொழில்புரியும் தொழிலளார்களின் பிள்ளைகளை குறைத்து மதிப்பிடுவதாக விஜயன் கவலை தெரிவித்தார். “பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்கின்றார்கள், ஆனால் அதற்குள் நிறைய அரசியல் ஆதிக்கம் உள்ளது. இங்கு பிரதேசவாதம் மிகையாக உள்ளது. மலையகம் என்றதும் எங்களை குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்கின்றனர்.”
நுண்கலைப் பிரிவு மூன்றாம் வருட மாணவரான சீலன், கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் ஆவார். “இரண்டு தங்கைகள் ஒரு தம்பியுடன் எனது குடும்பம் ஆறு அங்கத்தவர்களைக் கொண்டது. யுத்தத்தின் போது நடந்த கொடூரங்களில், 1990களில் எனது தந்தைக்கு இராணுவத்தினர் உடலில் மின்சாரமேற்றி சித்திரவதை செய்தமையினால், அவர் நோயாளியாக உள்ளார். அத்துடன் எனது மைத்துனரை 90களில் இராணுவம் கொன்றது. எம்மை வளர்த்து வந்த எமது மாமா 2000ம் ஆண்டு இராணுவத்தால் கொல்ப்பட்டபோது நாங்கள் திக்கற்றவர்களாக்கப்பட்டோம். இப்படியான ஒடுக்குமுறை நிலமைகளுக்குள் கல்வி கற்று பல்கலைக்கழகத்திற்கு வந்தும் ஒடுக்குமுறைகளுக்கே முகங்கொடுக்கின்றோம்,” என அவர் தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தில் நிலைமைகளைப் பற்றி பேசிய அவர் கூறியதாவது: “இங்கே போதிய வசதிகள் இல்லை. நான் வாடகை அறையில் தங்கியுள்ளேன். மாதமொன்றிற்கு 2000 ரூபா செலுத்த வேண்டும். நுண்கலைப் பிரிவில் மூன்றாம் வருட மாணவர்கள் 300 பேர் உள்ளோம். கலைப் பிரிவில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 2000பேர் வரை உள்ளனர். இது போன்று ஏனைய பிரிவுகளிலும் ஏராளமான மாணவர்கள் உள்ளனர். நிர்வாகத்தினரின் அலட்சியப் போக்கினால் காலங்கள் நீடித்து ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றோம். நான் உணவகம் ஒன்றில் பகுதி நேரமாக மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை வேலை செய்கின்றேன். அங்கே நாளொன்றிற்கு 350 ரூபா தருகின்றனர்.”
அரசியல் கட்சிகள் சம்பந்தமாக அவர் மிகவும் கோபாவேசமாகப் பேசினார். “தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்துமே ஏமாற்றுப் பேர்வழிகளும் தமிழ் மக்களின் இரத்தத்தை குடிப்பவர்களும் தான். இவர்கள் எவர் மீதும் தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்கமுடியாது. மாணவர் ஒன்றியத்திற்குள்ளும் சில அரசியல் கட்சிகளின் தாக்கம் உள்ளது. தமிழ் அரசியல் கட்சிகள் தான் இந்த அரசாங்கத்தை நல்லாட்சி என குறிப்பிட்டார்கள். ஆனால் இது இனவாதத்தை கிளறிவிடுகின்றது. ஜனாதிபதி ஜனநாயக விரோத நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் சர்வாதிகாரியாக மாறி வருகின்றார். மொத்தத்தில் இது சர்வாதிகார ஆட்சி.”