Print Version|Feedback
Sri Lankan opposition party picks Gotabhaya Rajapakse as presidential candidate
இலங்கை எதிர்க்கட்சி கோடாபய இராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்கிறது
By K. Ratnayake
19 August 2019
நாட்டின் முக்கிய எதிர்க் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.மு.), முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய இராஜபக்ஷவை டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக தேர்வு செய்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் (ஸ்ரீ.ல.சு.க.) இருந்து பிரிந்த கன்னையால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீ.ல.பொ.மு. உருவாக்கப்பட்டது.
முன்னாள் இராணுவ கர்னலாக இருந்த கோடாபய இராஜபக்ஷவின் தேர்வு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். பாதுகாப்பு செயலாளராக இருந்த அவர், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி கட்டங்களில் நடந்த போர்க்குற்றங்களில் நேரடியாக குற்றம் சாட்டப்பட்டவர். அத்தோடு தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீதான இரத்தக்களரி அடக்குமுறைக்கும் அவர் சம்பந்தப்பட்டவர். ஸ்ரீ.ல.பொ.மு. மற்றும் ஒட்டுமொத்த இலங்கை ஆளும் வர்க்கமும் பொலிஸ்-அரசு ஆட்சி முறைகளை நோக்கி வேகமாகச் செல்கின்றன என்பதை இது தெளிவாகக் குறிக்கிறது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ ஆகஸ்ட் 11 அன்று நடைபெற்ற ஸ்ரீ.ல.பொ.மு. தேசிய மாநாட்டில் அதன் தலைமையை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டு தனது சகோதரரின் வேட்புமனுவை அறிவித்தார்.
மாநாட்டில் உரையாற்றிய கோடாபய இராஜபக்ஷ "தீவிரவாத பயங்கரவாதிகள் தலையை தூக்க அனுமதிக்காமல் நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கே நான் முன்னுரிமை கொடுப்பேன்," என்று அறிவித்தார்.
கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தனது சகோதரரை அறிமுகப்படுத்திய மஹிந்த இராஜபக்ஷ, “இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் மற்றும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் ஒரு தலைவர் தேவை. அதற்கு, எங்களுக்கு ஒழுக்கமும் சட்டமும் தேவை. ஒழுக்கம் இல்லாமல், எந்த நாட்டையும் அபிவிருத்தி செய்ய முடியாது.”
"தேசிய பாதுகாப்பை" பாதுகாப்பது பற்றிய அறிவிப்புகள் மற்றும் "ஒழுக்கத்தையும் சட்டத்தையும்" நிறுவுவது என்பது பொலிஸ்-அரசு ஆட்சிக்குத் தயாராகும் தலைவர்களின் சொல்லாட்சியாகும், மேலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சர்வதேச அளவில் தீவிர வலதுசாரி தலைவர்களின் மொழி மற்றும் செயல்களை எதிரொலிக்கிறது.
சமீபத்திய தேர்தல்களின்போது மோடி "தேசிய பாதுகாப்பை" தனது கூக்குரலாகப் பயன்படுத்தினார், இப்போது காஷ்மீரின் இராணுவ அடைப்பு மற்றும் இந்திய மக்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகளை நியாயப்படுத்த அதைப் பயன்படுத்துகிறார்.
இஸ்லாமிய அதிதீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்திய பயங்கரவாத தாக்குதல்களை கோடாபய இராஜபக்ஷ மற்றும் ஸ்ரீ.ல.பொ.மு. தமது சட்டம் ஒழுங்கு பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல திட்டமிட்டு சுரண்டிக்கொள்கின்றனர். இந்த தாக்குதல்களில் கிட்டத்தட்ட 300 பேர் கொல்லப்பட்டதுடன் 500 பேர் வரை காயமடைந்தனர். உண்மையில், சிறிசேன, விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த இராஜபக்ஷ உள்ளிட்ட மூத்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் வரவிருக்கும் தாக்குதல்கள் குறித்து இந்திய உளவுத்துறை முன்கூட்டியே தெரிவித்ததற்கான சான்றுகள் வெளிவந்துள்ளன.
அனைத்து இலங்கை நாடாளுமன்றக் கட்சிகளும், குறிப்பாக ஸ்ரீ.ல.பொ.மு., சிறிசேன அவசரகால ஆட்சியை சுமத்துவதற்கும், முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதப்படைகளை நிறுத்துவதற்கும், உழைக்கும் மக்களையும் ஏழைகளையும் அச்சுறுத்துவதற்கும் உடனடியாக ஆதரவளித்தன. தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி பலவீனப்படுத்தும் முயற்சியில் முஸ்லீம்-விரோத உணர்வைத் தூண்டுவதற்கு ஸ்ரீ.ல.பொ.மு. வழிவகுத்தது.
விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) ஆதரவுடன், 2015 இல் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ ஆட்சி மீதான பாரிய அதிருப்தியைப் பயன்படுத்திக்கொண்டு ஜனாதிபதி சிறிசேன அதிகாரத்திற்கு வந்தார். முதலாளித்துவ தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகள், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடது குழுக்களும் சிறிசேனவின் "நல்லாட்சி" பிரச்சாரத்தில் மாயைகளை ஊக்குவிப்பதன் மூலம், வெகுஜன எதிர்ப்பைக் கட்டுப்படுத்தவும் தடம் புரளச் செய்யவும் செயற்பட்டன.
எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கோரிக்கைகளை சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் செயல்படுத்தத் தொடங்கியவுடன் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளின் எதிர்ப்பு விரைவில் மீண்டும் வெளிப்பட்டது.
பிப்ரவரி 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐ.தே.க., ஸ்ரீ,ல.சு.க. ஆகியவை அவமானகரமான தோல்வியை சந்தித்தபோது, விக்ரமசிங்க நிர்வாகத்திற்கு அளித்த ஆதரவை சிறிசேன விலக்கிக் கொண்டு தனது போட்டியாளரான மஹிந்த இராஜபக்ஷவுடன் அணிசேர்ந்தார். சிறிசேன கடந்த அக்டோபரில், விக்ரமசிங்கவை பிரதமர் பதவில் இருந்து நீக்கி அவருக்கு பதிலாக இராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார்.
இருப்பினும், மஹிந்த இராஜபக்ஷவை சீன சார்புடையவர் என்று கருதிய வாஷிங்டன், சிறிசேனவின் அரசியல் சதியை எதிர்த்தது. சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்தமை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஐ.தே.க., ஸ்ரீ.ல.சு.க. ஆகியவை பரவலாக மதிப்பிழந்த நிலைமைகளின் கீழ், ஆளும் உயரடுக்கின் பிரிவுகள் ஸ்ரீ.ல.பொ.மு. பக்கமும் மற்றும் "தேசிய பாதுகாப்பை" பாதுகாக்கும் மற்றும் "வலுவான அரசாங்கத்தை" அமைப்பதற்கான அதன் பிற்போக்குத்தனமான பிரச்சாரத்தை நோக்கியும் திரும்பியுள்ளன.
"தீவிரவாத பயங்கரவாதிகளை" நிறுத்துவது பற்றிய கோடாபய இராஜபக்ஷவின் வாக்குறுதிகள் தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகள் மற்றும் அரசியல் எதிரிகளின் வெகுஜன நடவடிக்கைகளைத் தடுப்பதை இலக்காகக் கொண்டதாகும்.
அமெரிக்காவில் பல ஆண்டுகள் கழித்த கோடாபய இராஜபக்ஷ, 2005 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அவரது சகோதரர் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இலங்கைக்குத் திரும்பினார். 2006 ஜூலையில் கொழும்பு பிரிவினைவாத புலிகளுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்குவதற்கு சற்று முன்னர் அவர் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கும் பயன்படுத்தப்பட்ட கிட்டத்தட்ட 30 ஆண்டுகால யுத்தம் 2009 இல் புலிகளின் தோல்வியுடன் முடிந்தது.
இராஜபக்ஷக்களின் கீழ், இராணுவம், ஐ.நா. மதிப்பீடுகளின்படி, போரின் இறுதி மாதங்களில் 40,000 தமிழ் பொதுமக்களைக் கொன்றது. இந்த போர்க்குற்றங்களுடன் வடக்கு மற்றும் கிழக்கில் திணிக்கப்பட்ட அடக்குமுறை நடவடிக்கைகளுடன், இராணுவம், துணை இராணுவ குழுக்கள் மற்றும் குண்டர்களுடன், இராஜபக்ஷ அரசாங்கத்தின் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக, குறிப்பாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
ஜூன் 2011 இல், தொழிலாளர்கள் தங்கள் ஓய்வூதிய நிதியைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தபோது, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலைய ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டார், மேலும் பலர் காயமடைந்தனர். 2012 இல், பொலிஸ் கமாண்டோக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். 2013 ஆம் ஆண்டில், கொழும்பின் புறநகர் பகுதியான வெலிவேரியவில் நீர் மாசுபாட்டிற்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று இளைஞர்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
ஜனவரி 2009 இல் சண்டே லீடர் ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்க கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கோடாபய மீது குற்றம் சாட்டப்பட்டதோடு, மற்ற முக்கிய பத்திரிகையாளர்களை கடத்தி அடித்து உதைத்த, இராணுவத்தால் நடத்தப்பட்ட இரகசிய கொலைப் படையுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, கொழும்பை "அழகுபடுத்தும்" பொறுப்பில் தனது சகோதரரை நியமித்தார், இதில் நகர குடிசைகளிலிருந்து நூறாயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஸ்ரீ.ல.பொ.மு. மற்றும் அதன் பேரினவாத கூட்டாளிகளும், சிங்கள-பௌத்த பேரினவாதிகளை அணிதிரட்டுவதற்கும் இராணுவத்துக்குள் தமது ஆதரவை விரிவுபடுத்திக்கொள்வதற்கும் ஒரு ஆக்கிரமிப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தனர்.
குறிப்பிடத்தக்க வகையில், ஆகஸ்ட் 11 அன்று, தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க மேலதிக உதவி செயலாளர் அலிஸ் வெல்ஸ் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலினா டெப்லிட்சும் மஹிந்த இராஜபக்ஷவை அவரது வீட்டில் சந்தித்தனர். அவர்களது கலந்துரையாடல்கள் பற்றி எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை என்றாலும், இந்த விஜயம் இராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை கையாள்வதற்கான வாஷிங்டனின் சாத்தியமான தயார்நிலையைக் குறிக்கிறது.
சிறிசேன மற்றும் விக்ரமசிங்கவின் கீழ், இலங்கை வெளியுறவுக் கொள்கை வாஷிங்டனுடன் மறு ஒழுங்கமைக்கப்பட்டதுடன் ஒரு புதிய படைகளை நிறுத்தும் ஒப்பந்தமானது தீவை அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கட்டளையுடனான ஒரு “இராணுவ தளவாட மையமாக” மாற்றும்.
பிரபல இந்திய ஆய்வாளர் எம். கே. பத்ரகுமார் சமீபத்தில் ஆசியா டைம்ஸில் எழுதியவாறு, "இராஜபக்ஷ தரப்பு இராணுவ ஒப்பந்தங்களை பூர்த்தி செய்யும் வழியில் நின்றால் மட்டுமே வாஷிங்டன் ஃபாஸ்டியன் ஒப்பந்தத்தை (Faustian deal) முன்னெடுக்க விரும்புகிறது ...."
2015 ஆம் ஆண்டில், போலி இடது மற்றும் தொழிற்சங்கங்கள் இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை, சிறிசேனவுக்கான அரசியல் ஆதரவாக திசை திருப்ப வேலை செய்தன. கடந்த நான்கு ஆண்டுகளில் இதே அமைப்புகள் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன இயக்கத்தையும் எதிர்த்ததுடன், தொழிலாளர்களை அரசாங்கத்திற்கு பயனற்ற வேண்டுகோள்களை விடுக்கும் நிலைக்கு திசை திருப்பி விட்டன. இதுவே ஸ்ரீ.ல.பொ.மு. மற்றும் ஏனைய தீவிர வலதுசாரி கூறுகள் தங்கள் ஆதரவை அதிகரிக்க வாய்ப்பளித்துள்ளது.
சிங்கள-பௌத்த சக்திகள் மற்றும் இராணுவத்தின் ஆதரவைப் பெறக்கூடிய ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஐ.தே.க. இப்போது உட்பிளவுகளால் சிதைந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் கோடாபய இராஜபக்ஷைவைத் தேர்ந்தெடுப்பதைக் கண்டித்துள்ள நிலையில், இந்த அமைப்புகள் தற்போதைய அமெரிக்க-சார்பு அரசாங்கத்தை ஆதரித்ததன் மூலம் தற்போதைய நிலைமைக்கு அரசியல் ரீதியில் பொறுப்பாளிகளாவர்.
தொழிலாள வர்க்கம் ஆளும் உயரடுக்கின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் பிரிந்து ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காக போராடுவதற்கு, அதன் சொந்த சுயாதீன இயக்கத்தை உருவாக்க வேண்டும். தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் முற்போக்கான எண்ணம் கொண்ட புத்திஜீவிகள் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் வேலைத்திட்டத்தைப் படித்து, அதன் அணிகளில் சேர்ந்து இந்த முன்னோக்கிற்கான போராட்டத்தை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.