Print Version|Feedback
Johnson to suspend UK parliament to push through Brexit in a major assault on democratic rule
பிரெக்ஸிட் மூலமாக ஜனநாயக ஆட்சி முறை மீது ஒரு மாபெரும் தாக்குதலை முன்னெடுக்க, ஜோன்சன் பிரிட்டன் நாடாளுமன்றத்தை இடைநிறுத்த உள்ளார்
By Chris Marsden
29 August 2019
நாடாளுமன்றத்தை இடைநிறுத்தி வைப்பதற்கான பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனின் கோரிக்கையில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணி நேற்று கையெழுத்திட்டார்.
கூட்டத் தொடர் ஒத்திவைப்பது தொடர்பாக கடுமையான பிரெக்ஸிட் ஆதரவாளர் ஜேகப் ரீஸ்-மொக் தலைமையிலான அரசவைக்குழுவின் மூன்று உறுப்பினர்களின் விஜயத்தின்போது மகாராணிக்கு முன்மொழியப்பட்டது. இதன் அர்த்தம், நாடாளுமன்றம் செப்டம்பர் 9 திங்கட்கிழமைக்கு முன்னர், செப்டம்பர் 12 வியாழக்கிழமைக்குப் பின்னர் அக்டோபர் 14 திங்கட்கிழமை வரையில் ஒன்றுகூடாது என்பதாகும். ஐரிஷ் இன் "கடும் எல்லை தடுப்பு" உள்ளடங்கிய நடவடிக்கைகளைப் புரூசெல்ஸ் கைவிடவில்லை என்றால், இப்போதிருக்கும் வர்த்தகம் மற்றும் சுங்க உடன்படிக்கை இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் உடன்பாடு எட்டப்படாத பிரெக்ஸிட் குறித்த ஜோன்சனின் அச்சுறுத்தலைப் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்க முயல்வதற்கான அடித்தளத்தைக் குலைப்பதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் இரண்டாம் எலிசபெத் மகாராணி ஜூலை 24, 2019 புதன்கிழமை இலண்டனின் பக்கின்ஹாம் மாளிகை பார்வையாளர் சந்திப்பின் போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த பழமைவாத கட்சி போரீஸ் ஜோன்சனை வரவேற்கிறார் (படம்: அசோசியெடெட் பிரஸ் மூலமாக விக்டோரியா ஜோன்ஸ்/பூல்)
23 வேலை நாட்களுக்கு நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதானது, கூட்டத்தொடர் கோடைகால விடுமுறை முடிந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் செப்டம்பர் 3 இல் திரும்பிய பின்னர், உடன்பாடு எட்டப்படாத பிரெக்ஸிட்டைத் தடுப்பதற்கான திட்டங்களைத் தீட்டுவதற்கு அவர்களுக்கு வாரங்களை அல்ல, வெறும் சில நாட்கள் கால அவகாசத்தை மட்டுமே வழங்கும். பின்னர் அரசாங்கத்தின் சட்டமன்ற திட்டநிரலை விவரிக்கும் மகாராணியின் உரையைக் கேட்க நாடாளுமன்றம் மீண்டும் அக்டோபர் 11 இல் ஒன்றுகூடும். எந்த விட்டுக்கொடுப்புகளும் வழங்கவில்லை என்றால் அக்டோபர் 31 இல் ஐரோப்பாவிலிருந்து முறித்துக் கொள்ள அச்சுறுத்த, அக்டோபர் 17-18 பேச்சுவார்த்தைகளுக்காக ஜோன்சன் புரூசெல்ஸ் பயணிப்பார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரின் புதிய உடன்பாட்டையோ அல்லது உடன்பாடு எட்டப்படாத பிரெக்ஸிட்டையோ எதிர்க்க, மகாராணியின் உரை மீது அக்டோபர் 21-22 இல் வாக்களிக்கும் ஒரு வாய்ப்புடன் விடப்படுவார்கள்.
இது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் போய் முடிந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, ஜோன்சன் ஒரு "மக்கள் எதிர் நாடாளுமன்றம்" என்ற பிரெக்ஸிட் ஆதரவு திட்டநிரலுக்காக போராவதற்காக ஏறக்குறைய நவம்பர் 7 க்கு முன்னதாக ஒரு முன்கூட்டிய பொது தேர்தலுக்கு அழைப்பு விடுக்கக்கூடும் என்ற ஊகம் நிலவுகிறது. அவரை ஜனநாயக ஒன்றியக் கட்சி ஆதரிக்கக்கூடும், அதேவேளை ஜோன்சன் அவருக்கு முன்பிருந்த தெரேசா மேயின் விலகுவதற்கான உடன்பாட்டை மாற்றும் திட்டங்களைக் கைவிட்டால், ஒரு பிரெக்ஸிட் கட்சியின் "தாக்குதல்விலக்க-உடன்படிக்கை" ஒன்றை நைஜல் ஃபாராஜ் முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தை கடந்து முன்நகர்வதற்கான ஜோன்சனின் முயற்சிகள் அரசியலமைப்பு சார்ந்த ஓர் அரசியல் நெருக்கடியை அச்சுறுத்துகின்றன. அதிலேயே தங்கியிருப்பதை ஆதரிக்கும் சர் ஜோன் மேஜர் மற்றும் சர் மல்கம் ரிஃப்கைன்ட் போன்ற முன்னணி பழமைவாதிகள் ஜோன்சனுக்கும் முதலாம் சார்லஸிற்கும் இடையே சமாந்தரங்களை வரைந்தும், அவரும் அவர் தலையை இழக்கக்கூடும் என்று எச்சரித்தும் உள்நாட்டு போர் குறித்து பேசினர். ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் நிகோலா ஸ்டர்கன் கூறுகையில், “நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பங்களுக்கு மாறாக நாட்டுக்குக் கூறவியலாத நீண்டகால நாசங்களை ஏற்படுத்தும் உடன்பாடு எட்டப்படாத பிரெக்ஸிட்டைப் பலவந்தமாக முன்நகர்த்துவதற்காக நாடாளுமன்றத்தை முடக்குவது ஜனநாயகம் கிடையாது. இதுவொரு சர்வாதிகாரம், ஜோன்சன் அவரின் பாதையில் செல்வதை நிறுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த வாரம் ஒன்றுகூட முன்வரவில்லை என்றால் பின், வரலாற்றில் இன்றைய தினம் பிரிட்டனில் ஜனநாயகம் மரணித்த தினமாக இருக்குமென கருதுகிறேன்,” என்றார்.
தொழிற்கட்சி நிழலமைச்சரவை சான்சிலர் ஜோன் மெக்டொன்னெல் ஜோன்சனின் நகர்வை "அதே பிரிட்டிஷ் அரசியல் சதி...” என்று விவரித்ததுடன், "நமது ஜனநாயக அமைப்புகளின் முழு சுதந்திர செயல்பாட்டை ஒரு பிரதம மந்திரி தடுப்பதற்கு நீங்கள் அனுமதித்தீர்கள் என்றால், நீங்களும் அதே அபாயகரமான பாதையில் தான் செல்கிறீர்கள்,” என்றார்.
இப்போது வரையில், நாடாளுமன்ற விவாதங்கள் தொடர்ந்து ஜோன்சனின் திட்டத்தைத் தடுக்கும் சிக்கலான சட்ட நடைமுறை முயற்சிகள் மீது தான் ஒருமுனைப்பட்டுள்ளன. “ஓர் இறையாண்மை நாடாளுமன்றத்தை கடந்து செல்வதற்கான" திட்டங்களை எவ்வாறு தடுப்பது என்பதன் மீது அவர் தொடர்ந்து சட்ட ஆலோசனை பெறவிருப்பதாக மேஜர் தெரிவித்தார். ஸ்காட்டிஷ் தேசிய கட்சியின் (SNP) நீதித்துறை பேச்சாளர் ஜோன்னா செர்ரி ஸ்காட்டிஷ் நீதிமன்றங்களில் தாக்கல் செய்த ஒரு சட்ட வழக்கு நடந்து வருகிறது, இதை சுமார் 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கின்றனர்.
ஆனால் உடன்பாடு எட்டப்படாத பிரெக்ஸிட்டால் அச்சுறுத்தப்பட்டுள்ள பிரிட்டிஷ் ஏகாதிபத்திய பேரழிவின் அளவு, தொழிற்கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின் முன்நகர்த்தக்கூடிய நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கான ஆதரவுக்கு எதிர்கட்சிகள் மாறுவது மீதான விவாதங்களுக்கும் மற்றும் பிரெக்ஸிட் இக்கான இறுதிநாளை அக்டோபர் 31 வரையில் நீடிக்க கோரும் ஒரு தற்காலிக "காபந்து அரசாங்கத்திற்கு" அவர் தலைமை ஏற்பது மீதான விவாதங்களுக்கும் இட்டுச் சென்றுள்ளது.
அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகத்துடன் ஓர் இராணுவ/அரசியல் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டால் மட்டுமே குறைந்த வரி, சுதந்திர வர்த்தக மண்டலத்தை உருவாக்கும் அவரின் திட்டங்களுடன் ஜோன்சன் முன்நகர முடியும், இதற்காக கோர்பினுக்கு தான் நன்றி கூற வேண்டியிருக்கும். சிக்கன நடவடிக்கைகள், இராணுவவாதம் மற்றும் போரை எதிர்ப்பதாக சூளுரைத்தன் அடிப்படையில் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த தொழிற்கட்சி தலைவர், அதற்கு மாறாக அவரின் சொந்த கட்சியின் பிளேயரிச வலதுசாரிகளைத் தொழிற்கட்சி உறுப்பினர்கள் நியமன-இரத்து செய்வதிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் மற்றும் அவர்களின் கொள்கைகளை ஏற்றும், அவர்களின் முன்னால் அவரே சரணாகதி அடைந்துள்ளார்.
டோரி கட்சி தலைமையை ஜோன்சன் வென்றதற்கு விடையிறுப்பாக, கோர்பின், உடன்பாடு எட்டப்படாத பிரெக்ஸிட்டை நிறுத்துவதற்காக, அங்கே தங்கியிருப்பதை ஆதரிக்கும் கட்சிகள் அனைத்துடனும் கூட்டணி அமைக்க முன்மொழிந்தார், பின்னர் இரண்டாவது கருத்து வாக்கெடுப்பு நடத்துவதற்கான தொழிற் கட்சியின் வாக்குறுதியை வழங்கி ஒரு பொது தேர்தலுக்கு அழைப்புவிடுத்தார். இதுவும் கூட போதுமானதாக இருக்கவில்லை. கோர்பின் செவ்வாயன்று SNP தலைவர்களையும், தாராளவாத ஜனநாயக கட்சியினர் மற்றும் பசுமை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரோலைன் லூகாஸைச் சந்தித்த போது, தாராளவாத ஜனநாயக கட்சி தலைவர் ஜொ ஸ்வின்சன் கூறுகையில் ஒன்றியத்தில் தங்கியிருப்பதை எதிர்க்கும் சக்திகளை ஒருங்கிணைக்கும் ஒரு பிரமுகராக இருப்பதை விட கோர்பின் மிகவும் வேறுவிதமாக இருப்பதாக மீண்டும் வலியுறுத்தியதுடன், டோரி கென் கிளார்க் அல்லது பிளேயரிச ஹர்ரியட் ஹார்மன் தலைமையிலான ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்திற்கு வலியுறுத்தினார். தங்கியிருப்பதை ஆதரிக்கும் டோரிக்கள் விலகி இருந்தனர்.
கோர்பின், இதற்கு விடையிறுப்பாக, நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு அழைப்புவிடுக்கும் அவர் திட்டங்களை அக்டோபர் வரையில் தாமதிக்கவும் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் மீது கட்டுப்பாட்டை எடுப்பதன் மூலமாக உடன்பாடு எட்டப்படாத பிரெக்ஸிட்டைத் தடுக்க குறுக்கீடு செய்யும் நகர்வுகளை ஆதரிக்கவும் வாக்குறுதி அளித்தார். அன்று இரவு அவர், “உடன்படிக்கை இன்மையைத் தடுப்பதற்கான ஒரு நடைமுறை வழியைக் காண்பதற்காக, சக நட்புடன், கட்சி சார்பற்ற உத்வேகத்துடன் ஒன்றிணைந்து செயலாற்ற முன்வருமாறு", தாழ்மையுடன் கேட்டு மே உட்பட சுமார் 114 டோரிகளுக்கு அவர் ஒரு கடிதம் அனுப்பினார்.
நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்ததன் மூலமாக அதுபோன்ற பின்புல நடவடிக்கைகளுக்கு அங்கே நேரமே இல்லை என்பதில் ஜோன்சன் சத்தமில்லாமல் தீர்மானகரமாக இருப்பதால், இது கோர்பின் மற்றும் அவர் கூட்டாளிகளை ஒன்றுமில்லாமல் ஆக்கியது. கோர்பின் நேற்று, “அரச தனியுரிமைகள் நேரடியாக மக்களவையின் பெரும்பான்மையினர் விருப்பத்திற்கு எதிராக அமைக்கப்பட்டு வரும் அபாயம் உள்ளளது,” என்று குறிப்பிட்டும், “எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்னதாக, அவசர விடயமாக, அந்தரங்க ஆலோசகர்களுடன் சேர்ந்து நான் உங்களைச் சந்திக்க ஒரு வாய்ப்பளியுங்கள்,” என்று அவரிடம் தாழ்மையுடன் கேட்டு கோர்பின் நேற்று இராணிக்கு ஒரு கடிதம் எழுதினார்.
ஜோன்சனுக்கு எதிரான நகர்வுகள் மீது கூடுதல் அரசியல் பிரச்சினைகளை பைனான்சியல் டைம்ஸ் அனுமானித்தது, ஏனென்றால் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு "நடைமுறையளவில் நினைத்தும் பார்க்கவியலாததை நினைத்து பார்க்க வேண்டுமானாலும், அவர்களின் சொந்த அரசாங்கத்தை வாக்களித்து கீழிறக்க சுமார் எட்டு டோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசியப்படுவார்கள், அதுவும் ஜெர்மி கோர்பின் தலைமையிலான ஒரு அரைகுறை-மார்க்சிச தொழிற்கட்சி அரசாங்கத்தின் பதவிக்கான சாத்தியமான விளைவையும் கொண்டிருக்கும்.”
ஆனால் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் —குறைந்தபட்சம் அக்டோபருக்கான ஒரு பின்புல திட்டமாகவேனும்— நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க பகிரங்கமாக பரிசீலித்து வருகிறார்கள். தங்கியிருப்பதை ஆதரிக்கும் மூத்த டோரி உறுப்பினர் டோமினிக் க்ரீவ் கூறுகையில், “நான் உறுப்பினராக இருக்கும் ஒரு கட்சியால் அமைக்கப்பட்டுள்ள இந்த நிர்வாகத்தைக் கீழிறக்கும் எதுவொன்றையும் கடைசி புகலிடமாக இருந்தால் மட்டுமே நான் செய்வேன்... ஆனால் அதை தவிர்க்க வேறு வழியே இல்லை என்றால், நான் செய்யக்கூடிய ஒரே விடயமாக அது இருக்கலாம்,” என்றார்.
SNP ஐ பொறுத்த வரையில், செர்ரி கூறுகையில் எதிர்கட்சிகள் இப்போது ஒரு நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்குச் செல்வதை விட முதலில் பிரதான சட்டமசோதா நோக்கி செல்லும் திட்டங்களை மீளாய்வு செய்யலாம் என்றார். ஆனால் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பானது அக்டோபர் 31 இக்குப் பின்னர் ஒரு பொது தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதற்கு ஜோன்சன் "ஒரு தந்திரமாக" பயன்படுத்தக்கூடும், அதை எதிர்கொள்ள கோர்பின் ஒரு நீட்டிப்பைப் பெறும் வரையில் முன்கூட்டிய தேர்தலுக்கு எதிராக வாக்களிப்பதற்குத் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை முடுக்கிவிட ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதையும் அப்பெண்மணி சேர்த்துக் கொண்டார்.
கோர்பினின் அரசியல் நம்பிக்கை துரோகம் உருவாக்கியுள்ள நிலைமையே அசாதாரணரீதியில் அபாயகரமாக உள்ளது.
பெருவணிகங்களின் நலன்களைப் பாதுகாக்க தொழிற்கட்சியை நம்பலாம் என்பதை நிரூபித்துக் காட்டுவதற்காக, வேலைநிறுத்த நடவடிக்கையை ஒடுக்குவதற்கும் மற்றும் அரசியல் வாழ்வை அழுகிய உபாயங்களுக்குள் அடைப்பதற்காகவும், அவர் தலைவர் ஆனதில் இருந்து நான்காண்டுகளாக தொழிற்சங்கங்களுடன் கூட்டுச்சதியில் ஈடுபட்டதன் மூலமாக, அவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிப்படை ஆட்சி நெருக்கடியில் தொழிலாள வர்க்கம் தலையீடு செய்வதில் இருந்து அதை தடுத்து வைத்துள்ளார்.
பிரெக்ஸிட்டை ஆதரிக்கும் மற்றும் அதிலேயே தங்கியிருப்பதை ஆதரிக்கும் எதிர்விரோத ஏகாதிபத்திய-ஆதரவு மூலோபாயங்களுக்காக ஒரு சோசலிச எதிர்ப்பை முன்னெடுப்பதை அவர் மறுப்பதானது, முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து கன்னைகளும் பொதுவாக கொண்டுள்ள சிக்கன நடவடிக்கைகள், வர்த்தகப் போர் மற்றும் இராணுவவாத திட்டநிரலுக்கு எந்தவித ஒருங்கிணைந்த விடையிறுப்பையும் தடுக்கும் வகையில் தொழிலாளர்களுக்கு இடையே அபாயகரமான பிளவுகளை விதைக்க அனுமதித்துள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் நாடாளுமன்ற கலைப்பை எதிர்க்கும் ஒரு மனுவில் கையெழுத்திட்டுள்ளனர் என்றாலும், கருத்துக்கணிப்புகள் தொழிற்கட்சியை விட டோரிக்களுக்கு 12 புள்ளி முன்னிலையை வழங்குகின்றன, இதற்குப் பிரெக்ஸிட் பிளவுக்குத் தான் நன்றி கூற வேண்டும்.
பொதுவான வர்க்க எதிரிக்கு எதிராகவும் மற்றும் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்காகவும் பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய தொழிலாளர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதற்கான அழைப்பை முன்னெடுப்பதன் மூலமாக மட்டுமே இந்த பிளவுகளக் கடந்து வர முடியும்.
ஆனால் இதற்கு பதிலாக, உடன்பாடு எட்டப்படாத பிரெக்ஸிட் சம்பவத்தின் போது தவிர்க்கவியலாமல் ஏற்படக்கூடிய சமூக அமைதியின்மையைக் கையாள ஆயிரக் கணக்கான துருப்புகள் மற்றும் கலகம் ஒடுக்கும் பொலிஸை நிலைநிறுத்த அங்கே செயலூக்கமான திட்டங்கள் உள்ளன என்கின்ற நிலைமைகளின் கீழ், ஜோன்சன் எதேச்சதிகார ஆட்சிக்கான பாதையில் ஒரு தீவிர படியை எடுக்க துணிந்துள்ளார்.