Print Version|Feedback
Assange’s father speaks to the WSWS: “Julian’s resolve is fierce”
“ஜூலியனின் தீர்மானம் கடுமையானது” என்று அசான்ஜின் தந்தை உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவிக்கிறார்
By Oscar Grenfell
5 August 2019
நேற்று சிட்னியில், ஜூலியன் அசான்ஜின் தந்தையும் அவரது விடுதலைக்காக போராடும் ஒரு முன்னணி பிரச்சாரகருமான ஜோன் ஷிப்டன் தனது மகன் பிரிட்டன் சிறையிலடைக்கப்பட்டிருக்கும் நிலைமைகள் மற்றும் அவர் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படுவதை எதிர்க்கும் போராட்டம் ஆகியவை பற்றி உலக சோசலிச வலைத் தளத்திடம் (WSWS) பேசினார். விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் அமெரிக்க போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியதில் தனது பங்கிற்கு அமெரிக்காவில் 175 ஆண்டுகால சிறை தண்டனைக்கான வாய்ப்பை எதிர்கொள்ளவிருக்கிறார்.
வருடாந்திர ஆஸ்திரேலிய-அமெரிக்க அமைச்சர்களின் ஆலோசனை கூட்டத்திற்கு அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பொம்பியோவை ஆஸ்திரேலிய அரசாங்கம் வரவேற்ற இடமான நியூ சவுத் வேல்ஸ் மாநில நூலகத்திற்கு வெளியே நடந்த ஒரு சிறிய ஆர்ப்பாட்டத்தில் ஷிப்டன் உரையாற்றினார். ஈரானுக்கு எதிரான அமெரிக்க போர் தயாரிப்புக்களுக்கும், மற்றும் சீனாவுடனான அதன் மோதலுக்கும் ஆதரவைத் திரட்டுவதற்கு பொம்பியோ முயன்று வருகிறார்.
அசான்ஜை துன்புறுத்துவதில் பொம்பியோ ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளார். 2017 இல், சிஐஏ இயக்குநராக, விக்கிலீக்ஸ் ஒரு “அரசு சாரா விரோத உளவுத்துறை சேவை” என்றும், அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்த பாதுகாப்புகளுக்கு அசான்ஜ் தகுதியற்ற ஒரு “பேய்” என்றும் அவர் அறிவித்தார். அத்துடன், வெளியுறவு செயலராக, அசான்ஜின் அரசியல் அடைக்கலத்தை சட்டவிரோதமாக நிறுத்துமாறு ஈக்வடோருக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்க பிரச்சாரத்திலும் நெருக்கமாக ஈடுபட்டிருந்தார்.
ஜோன் ஷிப்டன்
ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய ஷிப்டன், பொம்பியோவின் விஜயம் மற்றொரு “வகையில் ஒரு போர்வெறியரை அல்லது வெகுஜன கொலைகாரனை ஆஸ்திரேலியா ஆத்மார்த்தமாக வரவேற்பதாக இருந்ததுடன், அவரை இறுக்கமாக பிடித்துக் கொண்டுள்ளது என்ற நிலையில் அந்த விரியன் பாம்பினால் அது கடிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
உலக சோசலிச வலைத் தளத்திற்கு பேசுகையில், அவர் இவ்வாறு கூறினார்: “அரசாங்கம் பொம்பியோவுக்கு விருந்தளிப்பது குறித்து நாங்கள் அதிர்ச்சியடைகிறோம். அமெரிக்கா மீதான விமர்சனத்தை எங்கு நீங்கள் தொடங்குவீர்கள், மேலும் எங்கு முடிப்பீர்கள்? எந்தவொரு புவிசார்-அரசியல் மட்டத்திலும் அமெரிக்காவை கையாள்வதில் உள்ள சிரமங்கள் பற்றிய புத்தகங்களால் நூலகங்களைத்தான் இது நிரப்பும்.”
“பொம்பியோவை ஆஸ்திரேலியாவில் நாங்கள் உரக்க கூச்சலிடுபவர் என்றும் காட்டுமிராண்டி என்றும் அழைப்போம். அவர் கூறுவதை பெரிதாக யாரும் கவனிப்பதில்லை. விக்கிலீக்ஸ் ஒரு ‘அரசு சாரா விரோத உளவுத்துறை சேவை,’ என்று அவர் விடுத்த அறிக்கை, ஜூலியன் ஒரு பத்திரிகையாளர் மற்றும் வெளியீட்டாளர் என்பதாக அவரது நிலையை உறுதிப்படுத்தியுள்ள அவருக்கு எதிராக தொடங்கப்பட்ட நீதிமன்ற வழக்குகளில் பிரதிபலிக்கவில்லை.”
அமெரிக்காவுடனான அசான்ஜின் பிரச்சினை குறித்து பேசவோ, அல்லது அவரை பாதுகாப்பதற்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்கவோ ஆஸ்திரேலிய அரசாங்கம் மறுப்பது குறித்து ஷிப்டன் கண்டனம் தெரிவித்தார். “மவுனம் குற்றத்திற்கு உடந்தையாக இருப்பது,” என்றும் அவர் தெரிவித்தார்.
அசான்ஜூக்கு எதிராக அமெரிக்க ஜனநாயகக் கட்சி தேசிய குழு (DNC) தொடுத்திருந்த ஒரு சிவில் வழக்கு சென்ற வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது பற்றி ஷிப்டனிடம் உலக சோசலிச வலைத் தளம் கேட்டது.
வோல் ஸ்ட்ரீட் வங்கிகளுக்கு ஹில்லாரி கிளின்டன் வழங்கிய இரகசிய உரைகளுடன் சேர்த்து, தன்னைத்தானே ஜனநாயக சோசலிசவாதி எனக் கூறிக்கொள்ளும் பேர்னி சாண்டர்ஸூக்கு எதிராக ஜனநாயகக் கட்சி முதன்மை தேர்தல் போட்டியாளர்களை மோசடி செய்வதற்கான DNC இன் முயற்சிகளையும் அம்பலப்படுத்தி கசியவிடப்பட்ட மின்னஞ்சல்களின் விக்கிலீக்ஸின் 2016 பிரசுரம் சட்டவிரோதமானது என்று இந்த வழக்கு வாதிட்டது.
தீர்ப்பு “வியக்கத்தக்கதாக இருந்தது என்று ஷிப்டன் குறிப்பிட்டார். விக்கிலீக்ஸ், ஜூலியன் அசான்ஜ் மற்றும் மிகவும் குறிப்பிடத்தக்கது அல்லாத ட்ரம்ப் மற்றும் ரஷ்யா போன்ற ஏனைய இருவருக்கு எதிராக சிவில் வழக்கு ஒன்றை DNC தொடுத்தது. நீதிபதி, பென்டகன் ஆவணங்களின் முன்மாதிரிகளை அடிப்படையாக வைத்து, பொதுநலன் கருதி விக்கிலீக்ஸ் பிரசுரித்தது என்று கூறி, DNC தொடுத்த சிவில் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். விக்கிலீக்ஸ் வெளியிட்ட மின்னஞ்சல்கள் நிரூபித்த படி, DNC ஒரு கடும் ஊழல் நிறைந்த அமைப்பாக தெரிகிறது.
“உளவு பார்ப்பு தொடர்பான ஜூலியனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் இது பிரதிபலிக்கும் என்பதாக வழக்கறிஞர்கள் மத்தியிலான சில நடவடிக்கைகள் உள்ளன. ஆயினும், இந்த நேரத்தில், இங்கிலாந்தில் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வரும் அசான்ஜ் நாடுகடத்தல் வழக்கில் விக்கிலீக்ஸ் வழக்கறிஞர்கள் இதுபற்றி விவாதிக்க வேண்டும். அதுதான் முதல் விடயம். அவர்கள் அங்கு வெற்றியடைய வேண்டும், அல்லது இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆனால் எனது பார்வையில், அமெரிக்க குற்றச்சாட்டுக்களின் அடித்தளங்கள் ஒருபோதும் போதுமானதாக இல்லை.”
பிரிட்டனின் அதிகபட்ச பாதுகாப்புள்ள பெல்மார்ஷ் சிறையில் அசான்ஜ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கொடுமையான நிலைமைகள் பற்றி ஷிப்டன் சுருக்கமாக விவரித்தார். “இந்த நேரத்தில், அசான்ஜ் நூலகங்களையோ, கணினிகளையோ அணுக முடிவதில்லை என்பதுடன், ஒரு நாளில் 23 மணித்தியாலங்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதுடன் வழக்கறிஞர்களை மட்டுப்படுத்தப்பட்ட வகையில் அணுகும் நிலைமையிலேயே அவர் உள்ளார்,” என்று அவர் கூறினார். “அது வேண்டுமென்றே செய்யப்படுவதாக நான் கருதுகிறேன். சிறையின் ஆளுநர்கள் தங்களது அதிகாரத்தைக் காட்ட விரும்புகின்றனர், எனவே அவர்கள் முடிந்த அளவிற்கு விடயங்களை இக்கட்டாக்குகின்றனர்.”
ஜோடிக்கப்பட்ட பிணை மீறல் குற்றச்சாட்டுக்கள் மீதான அசான்ஜின் சிறைத் தண்டனை செப்டம்பரில் முடிவடையும் என்பதால், அதைத் தொடர்ந்து அவர் காவலில் வைக்கப்படுவார். இது, “வாரத்திற்கு மூன்று முறை அவரை யாரேனும் சந்திப்பது, கணினிகளையும் நூலகங்களையும் அணுக முடிவது மற்றும் அவரது வழக்கறிஞர்களையும் சுதந்திரமாக அணுகுவது” போன்ற உரிமைகள் உட்பட அவரது நிலைமைகளை எளிதாக்கும் என்று ஷிப்டன் விவரித்தார்.
அமெரிக்க நாடுகடத்தல் முயற்சியைத் தோற்கடிக்க விக்கிலீக்ஸூம் அதன் வழக்கறிஞர்களும் உறுதிபூண்டிருப்பதை ஷிப்டன் வலியுறுத்திக் கூறினார். மேலும், “இங்கிலாந்தின் பெருநகர காவல்துறை ஆணையருக்கு ஜூலியனின் வழக்கறிஞர் காரேத் பியர்ஸ் பேட்டியளிக்கையில், ‘நீங்கள் ஜூலியன் அசான்ஜை கைது செய்தால், இந்த நாடுகடத்தல் நடவடிக்கையை எதிர்த்து நாங்கள் இறுதி வரை போராடுவோம்,’ என்று தெரிவித்தார். ஜூலியனது தீர்மானம், அத்துடன் என்னுடையது மற்றும் அவரது விடுதலைக்காக போராடும் அனைவரது தீர்மானத்தையும் போல, அவருடைய தீர்மானமும் கடுமையானது” என்று அவர் விவரித்தார்.
அசான்ஜின் தந்தை, அடிப்படை உரிமைகள் மீதான பரந்த தாக்குதலை சுட்டிக்காட்டினார். மேலும், “ஆஸ்திரேலியாவில் சுதந்திரமாக பேசுவதற்கான நமது உரிமையை பாதுகாப்பது குறித்தே நான் கவலைப்படுகிறேன்,” என்றும், “இணையத்தை நாம் அணுகுவதையும் இந்த அரசாங்கம் கட்டுப்படுத்த நோக்கம் கொண்டுள்ளது தெளிவாகின்ற நிலையில், அது குறித்தும் எனக்கு கவலையாக உள்ளது. இது நமது தகவல் அறியும் உரிமை மீதான தாக்குதலாக நான் பார்க்கிறேன்” என்றும் அவர் கூறினார்.
பெருநிறுவன ஊடகங்கள் வகித்த பெருங்கேடுவிளைவித்த பங்கு பற்றி ஷிப்டன் குறிப்பிட்டார்: “ஒரு கிளவுஸவிட்ஸியன் சொல்லை பயன்படுத்துவதற்கு அறிவின் ஈர்ப்பு மையமாக வெகுஜன ஊடகம் உள்ளது. நாம் என்ன நினைக்கிறோம் என்பதையும், நிகழ்வுகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம் என்பதையும் அவை கட்டுப்படுத்துகின்றன, எனவே நமது முதல் தாக்குதல் வெகுஜன ஊடகங்கள் மீதானதாகும், அது, முகநூலைத் தவிர்த்து மாற்று ஊடகங்கள், வலைப்பதிவுகள், மன்றங்கள் மற்றும் சிறிது ட்விட்டர் பதிவுகள் மூலமானதாக இருக்க வேண்டும்.”
ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அசான்ஜ் குறித்த சமீபத்திய Four Corners நிகழ்ச்சியின் இரண்டு பாகங்கள் பற்றி அவர் குறிப்பிட்டார். இரண்டு பாகங்களுமே அசான்ஜின் ஆளுமை மீதான அகநிலை தாக்குதல்களை ஒளிபரப்ப அளவுக்கதிகமான நேரத்தை செலவிட்டன. அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் உட்பட, அசான்ஜின் எதிர்ப்பாளர்கள் அவரை அவதூறு செய்ய கிட்டத்தட்ட சுதந்திரமான ஆளுகையை அவை வழங்கின.
இந்த நிகழ்ச்சிகள் “திகிலூட்டின என்று ஷிப்டன் கூறினார். உண்மையில் ஒரு அதிர்ச்சியூட்டும் அவமானமாக அது உள்ளது. இது குறித்து ABC க்கு முறையான புகார் அளிப்போம்.
“ஒரு கட்டத்தை வைத்து நான் அதை விளக்குகிறேன். டோம்ஷீட்-பேர்க் [நிகழ்ச்சியில் இடம்பெற்ற அசான்ஜின் விமர்சகர்], ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு விக்கிலீக்ஸூடன் தொடர்பில் இருந்தார். 3.5 கிகாபைட்ஸ் கசிவு தகவல்களையும் அவை இருந்த சேவையகங்களையும் அவர் திருடியதால் வேலையிலிருந்து அவர் நீக்கப்பட்டார். கூட்டுக் கொலை காணொளியுடன் அவருக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. அவர் பயந்துபோனதால் ஐஸ்லாந்திலிருந்து ஓடிவிட்டார். அவரை ஒரு குரல் வடிவில் பயன்படுத்துவது அபத்தமானது.
“ஆலன் ரஸ்பிரிட்ஜர் [நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்டியன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்], ஈரான் மற்றும் ஆப்கானிய போர் பதிவுகள் மற்றும் அமெரிக்க இராஜதந்திர சூழ்ச்சிகள் பற்றிய வெளியீடுகளில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு வாரங்களுக்கு ஜூலியன் மற்றும் விக்கிலீக்ஸூடன் ஈடுபட்டிருந்தார். அப்போதிருந்து, அவர்களுக்கு விக்கிலீக்ஸூடன் எந்த தொடர்பும் இல்லை, எனவே அவர்கள் எந்த கருத்தையும் கூறும் நிலையில் இல்லை.
“அசான்ஜிற்கு எதிரான ஆதாரங்களை முற்றிலும் பொய்யாக்கும் அளவிற்கு, கார்டியன் அவரை பின்தொடர்ந்தது.”
அமெரிக்க அரசியல் பரப்புரையாளரான போல் மானஃபோர்ட் 2013, 2015 மற்றும் 2016 தொடக்கத்தில் ஈக்வடோர் தூதரகத்தில் அசான்ஜை சந்தித்தார் என்று கூறும் ஒரு கட்டுரையை கடந்த நவம்பரில் கார்டியன் பிரசுரித்தது பற்றி ஷிப்டன் குறிப்பிட்டார். இந்த வலியுறுத்தல் அசான்ஜை மானஃபோர்டுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டது, பின்னர் அவர் ட்ரம்பின் பிரச்சார ஆலோசகராக பணியாற்றினார் என்பதுடன், ட்ரம்ப் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான கூட்டு குறித்த அமெரிக்க விசாரணையின் மைய இலக்காகவும் அவர் இருந்தார்.
“தூதரகத்தில் ஜூலியன் 24 மணிநேர கண்காணிப்பில் இருந்தார், மேலும் அவரை யாரும் சந்தித்ததற்கான ஆதாரம் எதுவும் அங்கில்லை, எனவே இது ஒரு முழுமையான புனைகதையாக உள்ளது,” என்று ஷிப்டன் தெரிவித்தார்.
முடிவில், விக்கிலீக்ஸ் ஸ்தாபகரை பாதுகாப்பதில் சாமானிய மக்கள் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதன் முக்கியத்துவத்தை அசான்ஜின் தந்தை இவ்வாறு வலியுறுத்தினார். “உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டாட்சி எம்.பி.க்கள், மாநில எம்.பி.க்கள், உள்ளூர் எம்.பி.க்கள் ஆகியோருக்கு அழுத்தம் கொடுங்கள், அவர்களுக்கு எழுதி ‘இங்கே என்ன தயாரிக்கப்படுகிறது?’ என்று கேளுங்கள், இது, வீட்டிற்கு வர விரும்பும் ஒரு ஆஸ்திரேலியர் ஒன்பது ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதாகும். உங்கள் ஊக்கத்தினால் மட்டுமே நமது அரசாங்கத்தால் இதை சரிசெய்ய முடியும்.”