Print Version|Feedback
Fed signals it will bow to Wall Street’s demands
வோல் ஸ்ட்ரீட்ரின் கோரிக்கைகளுக்கு பெடரல் அடிபணியும் என்பதை அது சமிக்ஞை செய்கிறது
Nick Beams
11 July 2019
அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோமி பவுல் புதன்கிழமை காங்கிரஸிற்கு அவரின் அரையாண்டு அறிக்கையை வழங்கவும் மற்றும் மத்திய வங்கியின் நாணய கொள்கை மற்றும் பொருளாதார நிலை குறித்த அதன் கண்ணோட்டங்களை விளக்கவும் வந்த போது ஒரு பிரச்சினையைச் சந்தித்தார்.
ஒருபுறம், பங்குச்சந்தைகள் மற்றும் அவற்றின் பிரதிநிதியான ஜனாதிபதி ட்ரம்பின் வட்டிவிகித வெட்டுக்களுக்கான கோரிக்கைகளைப் பெடரல் பூர்த்தி செய்யும் என்பதற்கு ஒரு தெளிவான குறிப்பை அவர் வழங்க வேண்டியிருந்தது. இது குறித்து இம்மாத இறுதியில் அதன் அடுத்த கொள்கை கூட்டத்தில் அனேகமாக விவாதங்கள் தொடங்கும். மறுபுறம், வோல் ஸ்ட்ரீட் மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் நேரடியான கருவி என்ற யதார்த்தத்தை மறைத்து மத்திய வங்கி சுதந்திரமாக செயல்படுகிறது என்ற உத்தியோகபூர்வ கட்டுக்கதையை அவர் காப்பாற்ற வேண்டியிருந்தது.
இதற்கேற்ப, பெடரல் "புறநிலை பகுப்பாய்வு மற்றும் தரவின் அடிப்படையில்" அதன் நோக்கங்களைத் தொடரும் விதத்தில் காங்கிரஸ், பெடரலுக்கு "போதுமானளவுக்கு சுதந்திரத்தை" வழங்கி இருப்பதாக குறிப்பிட்டதன் மூலமாக பவுல் அவரின் விளக்கவுரையைத் தொடங்கினார்.
பின்னர், அவரின் தயாரிக்கப்பட்டிருந்த விளக்கவுரையிலும் மற்றும் பிரதிநிதிகள் சபையின் நிதிச் சேவைகள் குழு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலும், இரண்டிலும், அவர் நிதியியல் சந்தைகளின் கோரிக்கைகளை ஆதரிப்பதாக அத்தகைய குறிப்புகளை வலியுறுத்தினார். அவர் செனட் சபையின் அத்துறைக்கு பொறுப்பான குழுவுக்கு உரையாற்றுகையில் இன்றும் இதே மாதிரியான கருத்தே தொடரும்.
"எதிர்கால கண்ணோட்டத்தின் மீது தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு" "அடிப்படையாக உள்ள காரணிகள்" இந்த உலகளாவிய வளர்ச்சி வர்த்தகம் மீதான நிச்சயமற்றத்தன்மையே என்று தெரிவித்த பவுல், பெடரலின் இரண்டு சதவீத இலக்குக்கு குறைவான பணவீக்க விகிதங்கள் முன்னர் அனுமானிக்கப்பட்டதையும் விட மிகவும் உறுதியாக இருக்கும் என்று கூறி, பணவீக்கம் மீதான பலவீனமான புள்ளிவிபரங்களையும் சுட்டிக்காட்டினார். இது முன்னர் தெரிவித்த கருத்தில் இருந்து குறிப்பிடத்தக்க மாற்றமாக இருந்தது. அதில் பெடரல் குறிப்பிடுகையில், “தற்காலிக" காரணிகளின் காரணமாகவே பணவீக்க குறைவு நீடித்திருப்பதாக தெரிவித்தது. குறைந்த பணவீக்கம் "சற்றே அதிகமாக விட்டுக்கொடுப்பு கொள்கைக்கு விடயத்தைப் பலப்படுத்தியதாக" பவுல் தெரிவித்தார்.
வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குவதற்கான ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு இடையிலான உடன்பாட்டை "ஆக்கபூர்வமானதாக" சுட்டிக்காட்டிய அவர், ஆனால் "எதிர்கால கண்ணோட்டத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும், நாம் காணும் நிச்சயமற்றத்தன்மையை" அது நீக்கிவிடவில்லை என்பதையும் கூறினார்.
வோல் ஸ்ட்ரீட்டின் ஒட்டுண்ணித்தனமான நடவடிக்கைகளுக்கு நிதி வழங்க, மலிவு பணத்திற்கான அதன் தணியாத கோரிக்கைக்கு நியாயப்பாட்டை வழங்க பவுல் கணக்கிடப்பட்ட ஒரு முன்விளக்கத்தைத் தொகுத்து குறிப்பிடுகையில், வணிக முதலீடு "குறிப்பிடத்தக்களவில் குறைந்து" உள்ளது என்பதையும், இரண்டாம் காலாண்டில் அமெரிக்க பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி "மட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக தெரிகிறது" என்பதையும் சுட்டிக்காட்டினார்.
பவுல் விளக்கவுரைக்கு முன்னதாக, இம்மாதம் வேலைவாய்ப்பு எண்ணிக்கை 224,000 ஆக அதிகரித்துள்ளதாக காட்டிய ஜூன் மாத வேலைகள் அறிக்கை ஒரு வட்டிவிகித வெட்டுக்கான சூழலைப் பலவீனப்படுத்தி இருப்பதாக சந்தைகள் கவலை கொண்டிருந்தன. அது அவ்வாறு இல்லை என்பதை உத்தரவாதப்படுத்த பவுல் அவரின் வழியில் சென்றார்.
அந்த அறிக்கை பெடரலின் கண்ணோட்டத்தை மாற்றியதா என்று வினவிய போது, பவுல் வழமையான பெடரல் உரையின் மழுப்பல்களைத் தவிர்த்துவிட்டு, “இல்லை" என்று “நேரடியான பதில்" அளித்தார்.
பவுலின் விளக்கவுரை வோல் ஸ்ட்ரீட்டில் மனதார வரவேற்கப்பட்டது. அந்நாளின் பங்கு வர்த்தக போக்கின் போது, எஸ்&பி 500 குறியீடு 2014 இல் 2,000 புள்ளிகள் எட்டியபோது அதிகரித்ததைப் போல 50 சதவீத உயர்வை எட்டி, உச்சபட்ச விளிம்பிலிருந்து குறைவதற்கு முன்னதாக, 3,000 அளவைக் கடந்தது, அதேவேளையில் பிற குறியீடுகள் கடந்த வாரம் அவை எட்டிய சாதனையளவிலான உயரங்களுக்கு நெருக்கமாக நிறைவடைந்தன.
பொருளாதாரத்திற்கு உயர்வளிக்க இன்னும் அதிக விட்டுக்கொடுப்பு நாணய கொள்கை அவசியப்படுகிறது என்பதே பெடரலின் உத்தியோகப்பூர்வ தொனியாக உள்ளது. இது அடி முதல் முடி வரை ஒரு பொய்யாகும். ட்ரம்ப் நிர்வாகம் கோரிய பெரிதும்-பேசப்பட்ட வரி வெட்டுக்கள் நன்கு-சம்பளம் வழங்கும் வேலைகளை உருவாக்க ஊக்கமளிக்கும் என்றதைப் போலவே, வட்டிவிகிதங்களில் எந்தவொரு வெட்டும் முதலீட்டை அதிகரிக்கவோ மற்றும் நிஜமான பொருளாதாரத்தை விரிவாக்கவோ எதையும் செய்யப் போவதில்லை.
அதற்கு மாறாக, அவை நிதியியல் செல்வந்த தட்டுக்களின் கரங்களில் அதிக பணத்தை வழங்கியும், வேலைகளை அழிக்கும் கூட்டிணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்களுக்கும் மற்றும் வோல் ஸ்ட்ரீட் பங்குகளின் மதிப்பை அதிகரிக்கும் வகையில் பங்குகளை வாங்கிவிற்பதற்கும் மலிவு நிதிகளை வழங்கியும், அவை சமூகத்தின் உச்சத்தில் முன்பினும் அதிக செல்வவளத் திரட்சிக்கு நிதி வழங்குவதற்கே உதவும்.
பொருளாதார விரிவாக்கத்திற்கு உதவுவதற்குப் பதிலாக, உயர்மட்டத்தில் முன்பினும் அதிக செல்வவளம் உருவாக்கும் நிகழ்வுபோக்கு என்பது இலாபங்களை அதிகரிப்பதற்காக பத்தாயிரக் கணக்கான வேலைகளின் அழிப்பை உள்ளடக்கிய தொழில்துறையின் முக்கிய பிரிவுகளில், அதுவும் குறிப்பாக வாகனத் தொழில்துறையில் முக்கிய சீரமைப்பை உள்ளடக்கி உள்ளது.
அதேநேரத்தில் முக்கிய சேவைகள் வெட்டப்பட்டு வருகின்றன. ஆசிரியர்களும் ஏனையவர்களும் அவர்களின் சம்பளங்களில் உயர்வையும் மற்றும் அவர்கள் முகங்கொடுக்ககும் மோசமடைந்து வரும் நிலைமைகளைச் சரிசெய்ய செலவினங்களை அதிகரிக்குமாறும் கோரி வருகின்றனர், இதற்கு தொடர்ந்து அங்கே "பணமில்லை" என்று கூறப்பட்டு வருகிறது.
இவ்விரு நிகழ்வுபோக்குகளுக்கும் இடையே ஓர் ஆழ்ந்த புறநிலை தொடர்புள்ளது. முதலாளித்துவ அரசின் அனைத்து பொருளாதார மற்றும் நிதியியல் அமைப்புகளும் தொழிலாள வர்க்கத்தின் உழைப்பால் உருவாக்கப்படும் செல்வவளத்தை உறிஞ்சுவதற்கான ஒரு அமைப்புமயப்பட்ட இயங்குமுறைகளாக செயல்படுகின்றன என்பதால் அங்கே "பணமில்லை என்பது கூறப்படுகின்றது". செல்வவளத்தை அகழ்ந்தெடுக்கும் இந்த நிகழ்வுபோக்கு வோல் ஸ்ட்ரீட்டின் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
பங்குச் சந்தை ஏதோவொரு வகையான நிதியியல் சொர்க்க களமாக தெரிந்தாலும், அங்கே மிகக் குறைந்த வட்டிவிகித பணம் சர்வசாதாரணமாக அதிக பணத்தைக் குவிப்பதாக தெரிந்தாலும், அவ்வாறு தான் நடக்கிறது என்கின்ற நிலையில், இறுதி பகுப்பாய்வில், இதெல்லாம் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து உறிஞ்சப்பட்ட உபரி மதிப்பின் மீதே தங்கியுள்ளது. ஆகவே, நிதியியல் திரட்சிக்கான நிகழ்வுபோக்கானது இந்த சுரண்டலை அதிகரிப்பதற்கான மற்றும் சமூக சேவைகளை வெட்டுவதற்கான, இது நிதியியல் மூலதனத்தால் இலாபத்தின் வடிவில் பெறுவதற்காக கிடைக்கக்கூடிய உபரி மதிப்பு இழப்பை ஈடுகட்டும் நிலையில், இவற்றுக்கான புதிய முறைகளை அவசியத்திற்கேற்ப அபிவிருத்தி செய்வதன் மூலமாக கையாளப்படுகிறது.
இத்தகைய நிகழ்வுபோக்குகள் வெறுமனே ட்ரம்ப் நிர்வாகத்தினது கொள்கைகளின் விளைவு அல்ல, அது சீர்திருத்தங்களைக் கொண்டு பொருளாதாரத்தின் அடியிலிருக்கும் செயல்பாட்டையும் மற்றும் நிதியியல் அமைப்புமுறையின் செயல்பாட்டையும் திருத்திவிட முடியாது. ட்ரம்ப், பல தசாப்தங்களாக நடந்து வரும் ஒரு நிகழ்வுபோக்கின் வெறும் ஆளுருவாக விளங்குகிறார் அவ்வளவு தான்.
இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய முதலாளித்துவ ஒழுங்கமைப்பிற்கு அடித்தளம் அமைப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த 1944 இன் பிரெட்டன் வூட்ஸ் மாநாட்டின் 75 ஆம் நினைவாண்டை இம்மாதம் குறிக்கிறது. போருக்குப் பிந்தைய வளர்ச்சியை ஸ்தாபிக்க உதவிய அது, அதிகரித்த இலாபங்களையும், சமூகத்தின் உற்பத்தி சக்திகளின் விரிவாக்கத்தையும் அதிகரித்ததுடன், அமெரிக்காவிலும் மற்ற ஏனைய பிரதான முதலாளித்துவ பொருளாதாரங்களிலும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரங்களை உயர்த்தி இருந்தது.
20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், உலக மக்கள்தொகையில் பாரிய பெருந்திரளான மக்களுக்கு நாசகரமான விளைவுகளுடன் முதலாளித்துவ பொருளாதாரத்தைச் சின்னாபின்னமாக்கி இருந்த முரண்பாடுகள் கடந்து சென்றுவிட்டதாகவும், தொழிலாள வர்க்கம் இந்த இலாபகர அமைப்புமுறையின் கட்டமைப்புக்குள் அதன் நலன்களை முன்னெடுப்பது சாத்தியமே என்பதாகவும் பார்க்கப்பட்டது.
ஆனால் அதுவொரு பிரமையாக இருந்தது, அது ஒப்பீட்டளவில் மிகக் குறுகிய காலத்திலேயே வெடிக்கத் தொடங்கியது. 1971 ஆகஸ்டில் அமெரிக்க டாலரிலிருந்து தங்கத்தைத் துண்டித்து கொண்டு, இது தான் பிரெட்டன் வூட்ஸ் நாணய உடன்படிக்கைக்கு அடித்தளமாக இருந்த நிலையில், அந்த உடன்படிக்கையைக் கைவிட்டதன் மூலமாக அமெரிக்கா அது எதிர்கொண்டிருந்த அதிகரித்த பொருளாதார பிரச்சினைகளில் இருந்து தன்னை ஒருதலைபட்சமாக விடுவித்துக் கொள்ள முயன்றது.
“அமெரிக்கா முதலில்" என்பது ட்ரம்பில் இருந்து தொடங்கவில்லை, மாறாக ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கப்பட்டிருந்தது. அப்போதிருந்து, போருக்குப் பிந்தைய ஒட்டுமொத்த பொருளாதார ஒழுங்கமைப்பும் அதிகரித்த விகிதத்தில் சிதைந்து வந்துள்ளதுடன், இப்போது கந்தல் கந்தலாக கிழிந்து தொங்குகிறது. 1939 இல் இரண்டாம் உலக போர் வெடிப்பதற்கு 1930 இல் இருந்த அதே வகையான வர்த்தகப் போர், சர்வதேச கடமைப்பாடுகள் மற்றும் உடன்பாடுகளைப் பிரதியீடு செய்துள்ளது. உலகளாவிய நிதியியல் அமைப்புமுறை, 2008 உருகுதலில் சித்திரம் போல வெளிக்காட்டப்பட்ட இது முழுமையாக நிலைகுலைந்துள்ளது.
அரசின் நிதியியல் மற்றும் பொருளாதார கருவிகள் அனைத்தும், எல்லாவற்றுக்கும் மேலாக பெடரல், விளைவுகளைக் குறித்து கவலையின்றி, நிதியியல் செல்வந்த தட்டுக்களைச் செழிப்பாக்கும் ஒரே குறிக்கோளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
ஆனால் ஆழமடைந்து வரும் பொருளாதார உடைவும் வரலாற்றுரீதியில் முன்னொருபோதும் இல்லாத சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பும் சர்வதேச அளவில் வர்க்க போராட்டத்தைப் புத்துயிரூட்டி வருகின்றன. இந்த இயக்கம் அதன் ஆரம்ப கட்டத்தில் மட்டுமே இருந்தாலும், இது வரவிருக்கும் காலத்தில் முன்னேறும். அதுவொரு சோசலிச முன்னோக்கைக் கொண்டு ஆயுதபாணியாக்கப்பட்டுள்ளதா என்பதே முக்கிய பிரச்சினையாகும்.
பல்வேறு "இடது" போக்குகள், ஜனநாயக கட்சிக்குள் செயல்பட்டு வரும் அதுபோன்றவை மற்றும் பிரிட்டனில் கோர்பின் தலைமையிலான தொழிற் கட்சி ஆகியவை முன்னெடுக்கும் சீர்திருத்தங்கள் என்றழைக்கப்படுபவை முற்றிலும் போதுமானவை இல்லை என்பது மட்டுமல்ல, அவை தொழிலாள வர்க்கத்தை தற்போதைய ஒழுங்கமைப்புக்கு உள்ளேயே அடைத்து வைக்க நோக்கம் கொண்டவையாகும்.
முதலாளித்துவ இலாப அமைப்புமுறையின் சூறையாடல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அவசியமான முதல்படியாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் ஒரு வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கை நெறிப்படுத்தி அபிவிருத்தி செய்வதே தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் இயக்கத்திற்கான முக்கிய கேள்வியாகும்.