Print Version|Feedback
සමාජවාදී ක්රියාමාර්ගයක් මත ගුරුවරුන්ගේ සටන ඉදිරියට ගෙනයමු
இலங்கை: சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர்களின் போராட்டத்தை முன் கொண்டு செல்வோம்
An appeal by the teachers’ group of Socialist Equality Party (Sri Lanka)
6 July 2019
இலங்கை அரச பாடசாலை ஆசிரியர்கள், நியாயமான ஊதியம், சிறந்த வேலை நிலைமைகள் மற்றும் உயர்ந்த தரமான கல்விக்கு போதுமான நிதியும் கோரி, ஜூலை 18 மற்றும் 19 திகதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) ஆசிரியர்கள் குழுவினர், அதை ஆதரிக்கின்றனர். நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது. பி.சி. பெரேரா சம்பள ஆணையத்தால் உருவாக்கப்பட்ட சம்பள முரண்பாடுகளை நீக்குதல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்கு பயன்படுத்தல், 2016 க்குப் பின்னர் நியமனம் பெற்றவர்களின் ஓய்வூதிய வெட்டுக்களை நீக்குதல் மற்றும் ஆசிரியர்கள் மீது தேவையற்ற சுமைகளை திணிப்பதை நிறுத்துதல் ஆகியவை கூட்டணியின் முக்கிய கோரிக்கைகளில் அடங்கும்.
மார்ச் 13 அன்று, 200,000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மேற்கண்ட நான்கு கோரிக்கைகளின் அடிப்படையில் ஒரு நாள் வேலைநிறுத்தத்தை மேற்கொண்டதன் மூலம் தங்கள் போர்க்குணத்தை வெளிப்படுத்தினர். அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளின் கீழ் தசாப்த காலங்காளாக முன்னெடுத்து வரும் சிக்கன நடவடிக்கைகளின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பேரழிவு நிலைக்கு எதிராகவே ஆசிரியர்கள் போராட்டத்துக்கு வந்துள்ளனர்.
வெட்டுக்களுக்கு எதிராக ஆசிரியர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் போராட்டங்கள் இலங்கைக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல. இது ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், சர்வதேச அளவில் வளர்ந்து வரும் வெகுஜன வர்க்கப் போராட்ட அலை ஆகும்.
மே மாத தொடக்கத்தில், போலந்தில் 300,000 ஆசிரியர்கள் 17 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில், அமெரிக்கா, துனிசியா, மொராக்கோ, அல்ஜீரியா, மெக்சிக்கோ, இந்தியா, ஆர்ஜென்டினா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் ஆசிரியர்கள் கல்வித்துறையில் வெட்டுக்களை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.
கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் பேரழிவை மாற்றியமைக்க பாரதூரமான போராட்டம் அவசியமாகும். இது ஊதிய உயர்வுக்கு மட்டுப்படுத்தப்பட முடியாததாகும். பாடசாலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கும், கல்வியில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கும், குடும்ப வருமானத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து சிறுவர்களுக்கும் உயர்ந்த தரமான கல்விக்கான வாய்ப்பை வழங்கவும் பில்லியன் கணக்கான நிதி செலவிடப்பட வேண்டும்.
ஆனால் ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியால் உந்தப்பட்டுள்ள உலக முதலாளித்துவத்தின் கீழ், இந்த நோக்கங்கள் எந்த வகையிலும் சாத்தியமற்றவை. மாறாக, உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் கல்வி மற்றும் சுகாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் பாரிய வெட்டுக்கள் மூலம் தங்கள் நெருக்கடியின் சுமையை தொழிலாளர் வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சுமத்தி வருகின்றன. அதற்கு எதிராக போராடுகின்ற தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் கொடூரமாக அடக்குவதற்காக சர்வாதிகார ஆட்சியை நோக்கி மாறுவது ஒவ்வொரு நாட்டு முதலாளித்துவத்தினதும் கொள்கையாக ஆகியுள்ளது.
தற்போதைய சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் செயல்படுத்துவதையே முந்தைய மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கமும் நடைமுறைப்படுத்தியது. கடந்த பல ஆண்டுகளாக வளர்ந்து வரும் வர்க்கப் போராட்ட அலைகளை அடக்குவதற்காக பொலிஸ் சர்வாதிகாரத்தில் காலடி எடுத்து வைக்க முயன்ற அரசாங்கம், ஏப்ரல் 21 தாக்குதலை உடனடியாக சுரண்டிக்கொண்டு, அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி காவல்துறை மற்றும் இராணுவத்திற்கு கொடூரமான அதிகாரங்களை வழங்கியது.
அவசரகால நிலைமையின் கீழ், அரசாங்கம் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து, கடைசியாக நடந்த இரயில் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை அடக்கியது. ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தை ஒரு அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்த நிலைமைகளின் கீழ் எத்தகைய தலைமைத்துவம் மற்றும் முன்னோக்கை கொண்டு தங்களது போராட்டங்களை முன்நகர்த்திச் செல்ல வேண்டும் என்பதே ஆசிரியர்கள் உட்பட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான கேள்வி ஆகும்.
ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள தொழிற்சங்கங்க கூட்டணியின் முன்னோக்கு, முதலாளித்துவ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து கோரிக்கைகளை வென்றெடுப்பதே ஆகும். அத்தகைய அழுத்தங்களை கொடுப்பதன் மூலம் தங்களது கோரிக்கைகளை வெல்ல முடியாது என்பதே இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் நிலையான அனுபவம் ஆகும்.
தங்களது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு, முதலாளித்துவத்திற்கும் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் எதிரான, முதலாளித்துவ தாக்குதல்களை எதிர்கொள்ளும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களை ஒன்றிணைக்கின்ற, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கம் இன்றயமையாதது ஆகும். எவ்வாறாயினும், முதலாளித்துவ அமைப்போடு உறுதியாக இணைந்திருக்கின்ற, முதலாளித்துவத்தின் கருவிகளாக மாறியுள்ள தொழிற்சங்கங்கள் அத்தகைய போராட்டத்திற்கு முற்றிலும் விரோதமானவை.
மார்ச் மாதத்தில் நடந்த ஆசிரியர் வேலை நிறுத்தத்தில் முன்னிலை வகித்த இலங்கை ஆசிரியர் சங்கம், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் மற்றும் முன்நிலை சோசலிசக் கட்சி தலைமையிலான ஒன்றிணைந்த ஆசிரியர் சேவை சங்கமும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள பொலிஸ்-அரசு நடவடிக்கைகளுக்கு வெளிப்படையாக ஒப்புதல் அளித்தே மே 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்ட வேலைநிறுத்தத்தை காலவரையறை இன்றி ஒத்திவைத்தன. இந்த முறை, வேலை நிறுத்தத்தை குழப்பும் பொருட்டு வேலை நிறுத்தத்தை ஆதரிக்காமல் இருக்க அந்த தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள கூட்டணியின் பங்கு இதற்கு இரண்டாம் பட்சமானதல்ல. அது இரண்டு நாட்களுக்கு சுகயீன விடுமுறை எடுத்துவிட்டு வேலைக்கு வராமல் இருக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதன் நோக்கம் வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களை ஏற்பாடு செய்து, ஏனைய தொழிலாளர்களை ஆசிரியர்களின் போராட்டத்துடன் ஒன்றிணைக்க நடவடிக்கை எடுப்பதைத் தடுத்து, அவர்களை வீடுகளுக்குள் அடைத்து அவர்களது போர்க்குணத்தை நசுக்குவதே ஆகும்.
கூட்டணியை வழிநடத்தும் இலங்கை அரச ஆசிரியர் சங்கம் (இ.அ.ஆ.ச.), அரசியல் கட்சிகளிலிருந்து ஆசிரியர்களை சுயாதீனமாக ஒழுங்கமைப்பதாக பொய்யாகக் கூறிக்கொள்கிறது. ஆசிரியர்கள் அதற்கு ஏமாற்றக் கூடாது. அவர்களின் "சுயாதீனமான" வேலைத் திட்டத்தின் அளவைக் காட்டும் வகையில், இந்த தொழிற்சங்கம் தனது பிரேரணைகளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்திருக்கும் முதலாளித்துவ தொழிலதிபர் ரொஹான் பல்லேவத்தவிடம் வழங்கியுள்ளது.
அனைத்து முதலாளித்துவ வேட்பாளர்களிடமும் தனது கோரிக்கைகளை முன் வைப்பதாக இ.அ.ஆ.ச. கூறுகின்றது. இது தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணத்தை கரைத்துவிட்டு தொழிலாளர்களை முழுமையாக முதலாளித்துவ ஸ்தாபகத்துடன் கட்டிப்போடும் வலதுசாரி முயற்சியே ஆகும்.
அரசாங்கத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் அதிகரித்து வரும் எதிர்ப்பை சுரண்டிக்கொள்வதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த இராஜபக்ஷவின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியும், இலங்கை பொது ஜன கல்விச் சேவை சங்கம் என்ற ஒரு புதிய தொழிற்சங்கத்தை ஸ்தாபித்துள்ளது. இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் ஆசிரியர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்ற மாயையை விதைக்க இந்த தொழிற்சங்கம் முயற்சிக்கிறது. இராஜபக்ஷ ஆட்சியில் இருந்தபோது, கல்வி உட்பட பல துறைகளில் தொடர்ந்து செலவினங்களை வெட்டியதோடு, இப்போது முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை அப்போதும் முற்றிலுமாக நிராகரித்தார்.
தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை முன்னெடுப்பதில் மிகப்பெரிய தடையாக இருப்பது தொழிற்சங்கங்களே என்பது மிகத் தெளிவாக உள்ளது. அனுபவத்திலிருந்து இதை உணர்ந்துகொள்ளும் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை நிராகரித்து, அதன் அதிகாரத்திற்கு வெளியே போராட்டங்களில் இறங்குவது ஒரு சர்வதேச நிகழ்வாக உள்ளது. இலங்கையில் கடந்த ஆண்டு இறுதியில் எழுந்த தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்திலும் இந்த நிலைமை வெளிப்படுத்தப்பட்டது.
ஆசிரியர்கள் உட்பட தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களுக்காக ஜனநாயக முறையில் செயற்படும் நடவடிக்கைக் குழுக்கள் போன்ற புதிய வடிவிலான அமைப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். சோ.ச.க. ஆசிரியர் குழுவினர், ஆசிரியர்களுடன் நடத்திய கலந்துரையாடல்களில், தொழிற்சங்கங்களை கடுமையாக எதிர்க்கும் ஆசிரியர்கள் இதுபோன்ற புதிய அமைப்பு மற்றும் நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறார்கள் என்பது பரவலாக வெளிப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் பிற்பகுதியில் தோட்டத் தொழிலாளர்களின் ஊதியப் போராட்டத்தின் மத்தியில், ஹட்டனில் உள்ள எபோட்சிலி தோட்டத்தின் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக அத்தகைய நடவடிக்கைக் குழுவை அமைத்தனர். சோ.ச.க. இன் வழிகாட்டுதலின் கீழ் ஹட்டனில் நடந்த ஒரு வெற்றிகரமான மாநாட்டில், தமது ஊதியக் கோரிக்கைகள் மற்றும் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்ய தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் போராட்டத்தின் அவசியம் குறித்து அந்தக் குழு கலந்துரையாடியது. ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை அந்த மாநாடு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் எபோட்ஸ்லி தொழிலாளர்களைப் பின்பற்றி தங்களது போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கைக் குழுக்களை அமைக்க முன்முயற்சி எடுக்க வேண்டும். இந்த குழுக்கள், முதலாளித்துவ அரசியல்வாதிகளும் தொழிற்சங்கங்களும் கூறுவது போல் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடியவற்றுக்காக அன்றி, ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் அவசியமான அனைத்திற்காகவும் போராட வேண்டும்.
உயர்ந்த தரத்திலான பொதுக் கல்விக்கான சமூக உரிமையைப் பாதுகாக்க, இந்தக் குழு வெகுஜன ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் மற்றும் பொது வேலைநிறுத்தங்களை ஏற்பாடு செய்து தொழிலாள வர்க்கத்தின் பரந்த அணிதிரட்டலுக்காகப் போராட வேண்டும்.
சோசலிச அடிப்படையில் பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கையை மறுசீரமைக்க ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு ஆசிரியர்கள் உட்பட தொழிலாள வர்க்கம் ஒரு சக்திவாய்ந்த அரசியல் இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்று சோ.ச.க. ஆசிரியர்கள் குழு சுட்டிக் காட்டுகின்றது.
அநியாயமாக சம்பாதிக்கப்படும் செல்வந்தர்களின் பெரும் நிதிக் குவியலை கைப்பற்றுவது, சமூக செல்வத்தை பிரமாண்டமான அளவில் மறுபகிர்வு செய்வது மற்றும் முழு மக்களின் பொருளாதார மற்றும் கலாச்சார நிலைமைகளை உயர்த்துவதற்காக அனைத்து வளங்களையும் பயன்படுத்திக்கொள்வதே தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தின் பணியாகும்.