Print Version|Feedback
After alleged UK tanker incident in Persian Gulf, EU powers threaten Iran
பாரசீக வளைகுடாவில் குற்றஞ்சாட்டப்படும் பிரிட்டன் எண்ணெய் தாங்கி சம்பவத்திற்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் ஈரானை அச்சுறுத்துகின்றன
By Alex Lantier
12 July 2019
ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒரு பிரிட்டிஷ் எண்ணெய் தாங்கி கப்பலை புதன்கிழமை ஈரானிய படகுகள் குறுக்கிட்டு தடுத்ததாகவும், பின்னர் பிரிட்டிஷ் போர்க்கப்பல் HMS Montrose அவற்றை விரட்டிச் சென்றதாகவும் அமெரிக்க மற்றும் பிரிட்டன் இராணுவ ஆதாரத்தகவல்கள் கூறுகின்றன.
இச்சம்பவம் குறித்த செய்திகளில் எதுவொன்றையும் நம்பகத்தன்மையுடையதாக எடுத்துக் கொள்ள முடியாது. அவ்வாறு ஒன்று நடந்ததை ஈரான் உறுதியாக மறுத்துள்ளது, குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வரும் அமெரிக்க அதிகாரிகளோ அவ்வாறு நடந்ததாக அவர்கள் கூறுவதைக் குறித்து எந்த காணொளிகளையும் பதிவு செய்யவில்லை. இது, 2015 ஈரானிய அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வாஷிங்டன் இடையிலேயே ஒருதலைபட்சமாக விலகி, அப்பிராந்தியத்தில் மிகப் பெரியளவில் இராணுவத்தைக் கட்டமைக்க தொடங்கி, அதை அமெரிக்க கூட்டாளிகளும் ஆதரிக்க வேண்டுமென கோரிய பின்னர், ஈரானை இலக்கில் வைத்துள்ள அமெரிக்க தலைமையிலான போர் முனைவுக்கு மத்தியில் வருகிறது. எது எவ்வாறிருப்பினும் இச்சம்பவம் குறித்து எதுவும் உறுதியாக தெரியவரவில்லை என்ற நிலையில், ஐரோப்பிய சக்திகள் ஈரானுக்கு எதிராக வாஷிங்டனை ஆதரிக்க வேண்டுமெனக் கோரி, ஐரோப்பாவில் ஒரு ஊடக பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நேரப்படி, புதனன்று இரவு, அமெரிக்க மத்திய கட்டளையக செய்தி தொடர்பாளர் கேப்டன் பில் அர்பன் அந்த எண்ணெய் தாங்கி கப்பலை ஈரானிய அதிவேக தாக்குதல் படகு/அதிவேக உள்நாட்டு தாக்குதல் படகு (FAC/FIAC) தாக்கியதாக குற்றஞ்சாட்டினார். "இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையின் கடற்படையினது FAC/FIAC இன் தொல்லைப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும், இன்று ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே பிரிட்டன் கொடியுடனான வணிக கப்பலான பிரிட்டிஷ் ஹெரிடேஜ் (British Heritage) கடந்து செல்வதை அவை இடைமறிக்கும் முயற்சிகள் குறித்தும் [பென்டகனுக்கு] தெரியும்" என்றவர் குறிப்பிட்டார்.
HMS Montrose “ஈரானிய படகுகளை நோக்கி அதன் துப்பாக்கிகளைத் திருப்பியது,” பின்னர் அவை தப்பி சென்றதாக கூறப்படுகிறது. பிரிட்டனின் Independent பத்திரிகை அமெரிக்க இராணுவ அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது, “அது தொல்லைக்கு உள்ளாக்கும் நடவடிக்கை என்பதோடு, கடந்து செல்லும் போது குறுக்கிடும் முயற்சி,” என்று தம்மை அடையாளம் காட்டாது அவர்கள் தெரிவித்தனர்.
பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சக அறிக்கை பின்வருமாறு குற்றஞ்சாட்டியது: “வணிக கப்பலான பிரிட்டிஷ் ஹெரிடேஜ் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்வதை, சர்வதேச சட்டத்திற்கு முரணாக, மூன்று ஈரானிய படகுகள் தடுக்க முயன்றன.” HMS Montrose “ஈரானிய கப்பல்களுக்கும் மற்றும் பிரிட்டிஷ் ஹெரிடேஜ் கப்பலுக்கும் இடையே தன்னை நிலைநிறுத்த நிர்பந்திக்கப்பட்டது, அது ஈரானிய கப்பல்களுக்கு வாய்மொழி எச்சரிக்கைகள் வழங்கியதும், பின்னர் அவை திரும்பிச் சென்றன,” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
அவ்வாறான சம்பவம் நிகழவில்லை என ஈரானிய அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்தனர். “கடந்த 24 மணி நேரத்தில், அங்கே வெளிநாட்டு கப்பல்களுடன் எந்த எதிர்கொள்ளலும் நடக்கவில்லை...” என்று குறிப்பிட்டு Fars செய்தி முகமைக்கு ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படைகளின் கடற்படை ஓர் அறிக்கை அனுப்பியது.
ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் ஜரீஃப் ISNA செய்தி முகமைக்குப் பின்வருமாறு கூறி, ஈரானுடன் பதட்டங்களை தீவிரப்படுத்துவதற்கான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளின் ஒரு முயற்சியாக அந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார்: “அவர்கள் பதட்டங்களை உருவாக்க இவ்வாறு கூறுகிறார்கள், எவ்வாறிருப்பினும் இந்த கூற்றுகள் மதிப்பற்றவை, அவர்கள் இது போல பலவற்றைக் கூறி இருக்கிறார்கள். அவர்கள் அவர்களின் சொந்த பலவீனத்தை மூடிமறைக்க இதுபோன்றவற்றைக் கூறுகிறார்கள்,” என்றார்.
ஹோர்முஸ் ஜலசந்தியில் புதன்கிழமை என்ன நடந்தது என்பதை தீர்மானிப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை; கிடைக்கும் அனைத்து விபரங்களின்படி, துப்பாக்கிச்சூடு எதுவும் நடக்கவில்லை. இருப்பினும் பின்புலத்தில் மற்றொரு இராணுவ மோதலுக்கான அழுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய கிழக்கு போர்கள் மக்களிடையே மதிப்பிழந்திருப்பதற்கு மத்தியில், ஐரோப்பா மற்றும் அதைக் கடந்தும் ட்ரம்ப் மற்றும் அவர் நிர்வாகம் தொழிலாளர்களிடையே மதிப்பிழந்து இருப்பதற்கு மத்தியில், வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே நிலவும் வெடிப்பார்ந்த வெளிநாட்டு கொள்கை மோதல்களுக்கு மத்தியில், ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் சக்தி வாய்ந்த குரல்கள் ஈரானுக்கு எதிரான அமெரிக்க போர் முனைவை ஐரோப்பா ஆதரிக்க வேண்டுமென கோரி வருகின்றன.
பாரசீக வளைகுடாவில் இலண்டன் அதன் கடற்படை பிரசன்னத்தை தீவிரப்படுத்துமா என்று வினவிய போது, பிரிட்டிஷ் பிரதம மந்திரி அலுவலக செய்தி தொடர்பாளர் ஒருவர் அது தீவிரப்படுத்தும் என்பதைச் சுட்டிக்காட்டினார்: “வளைகுடாவில் நீண்டகாலத்திற்கு முன்பிருந்தே எங்களின் கடல்சார் பிரசன்னம் உள்ளது. நாங்கள் அங்கே தொடர்ந்து பாதுகாப்பு நிலைமைகளைக் கண்காணித்து வருகிறோம் என்பதோடு, சர்வதேச சட்டத்திற்கு இணங்க சுதந்திர கடல் போக்குவரத்தை பேணுவதற்கு நாங்கள் பொறுப்பேற்றுள்ளோம்,” என்றார்.
மலைப்பூட்டும் பாசாங்குத்தனத்துடன், அமெரிக்காவின் கட்டளைகளுக்கேற்ப செயல்பட்டு வரும் பிரிட்டிஷ் துருப்புகள், சிரியாவுக்கு ஈரானிலிருந்து எண்ணெய் எடுத்துச் செல்வதாக குற்றஞ்சாட்டி, ஜிப்ரால்டருக்கு அருகே ஜூலை 4 இல் ஒரு எண்ணெய் தாங்கி கப்பலை முற்றுகையிட்டன, ஒரு கடற்கொள்ளை நடவடிக்கையான இதற்கு பின்னர் தெஹ்ரான் "எதிர்நடவடிக்கைகளை" குறித்து எச்சரித்திருந்த நிலையில், ஈரானுக்கு எதிரான அமெரிக்க-பிரிட்டிஷ் குற்றச்சாட்டுக்கள் நம்பகமானவை என்பதற்கு ஆதாரமாக இந்நிகழ்வு மேற்கோளிடப்படுவது ஒரு ஏமாற்றாகும்.
செவ்வாயன்று அமெரிக்க பத்திரிகை Foreign Policy குறிப்பிடுகையில், பிரிட்டனும் பிரான்சும் சிரியாவில் அவற்றின் துருப்பு பிரசன்னத்தை 10-15 சதவீதம் அதிகரிக்க உடன்பட்டிருப்பதாகவும், இது, ரஷ்யா மற்றும் ஈரானால் ஆதரிக்கப்படும் சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் ஆட்சிக்கு எதிராக சிரிய குர்திஷ் போராளிகள் குழுக்களுடன் சேர்ந்து செயல்பட்டு வரும் அமெரிக்க துருப்புகளின் ஆதரவாக போராடுவதற்காக கூடுதல் துருப்புகளை அனுப்ப தற்காலிகமாக திங்களன்று மறுத்திருந்த பேர்லினுக்கு நெருக்கடி உண்டாக்கியதாகவும் குறிப்பிட்டது.
இலண்டனும் பாரீசும் "ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் ஏனைய முக்கிய தடுப்பு இடங்களில், வணிக கப்பல்கள் தடுக்கப்படாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கடல்போக்குவரத்து பங்காண்மையான சென்டினெல் (Sentinel) காவல் நடவடிக்கைக்குப் பங்களிப்பதிலும் ஆர்வத்தை வெளியிட்டுள்ளன,” என்பதையும் அப்பத்திரிகை சேர்த்துக் கொண்டது. இலண்டனும் பாரீசும் இரண்டுமே, சிறப்பு படைகளது நடவடிக்கைகளின் இரகசியத்தன்மையைக் கூறி, இந்த முடிவைக் குறித்து கருத்துரைக்க மறுத்தன. இவ்விதத்தில் அவற்றின் போர் முனைவு பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு மக்களின் முதுகுக்குப் பின்னால் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.
சிரியா மற்றும் மத்திய கிழக்கு எங்கிலுமான மோதலுக்கு குறிப்பாக ஜேர்மனி அதன் முந்தைய எதிர்ப்பை மாற்றிக் கொள்ள வேண்டுமென அங்கே அழைப்புகள் வேகமாக மேலெழுந்து வருகின்றன. புதன்கிழமை சம்பவத்திற்குப் பின்னர், ஈரானுக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான போர் முனைவில் இணைய பேர்லினுக்கு அழைப்பு விடுக்கும் கட்டுரைகளின் ஓர் அலை ஜேர்மன் பத்திரிகைகளில் காணப்பட்டது.
“ஈரான் பிரச்சினையில், ஐரோப்பா ட்ரம்பை ஆதரிக்க வேண்டும்,” என்று தலைப்பிட்ட ஒரு கருத்துரையில் Die Welt, 2015 ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையை ட்ரம்ப் ஒருதலைபட்சமாக முறித்துக் கொண்டதை பேர்லின் ஆதரிக்க வேண்டுமென வாதிட்டது. “ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தம் உண்மையில் சரியாகவே இருந்தது,” என்று எழுதிய அது, “ஆனால் அப்பிராந்தியத்தை அமைதிப்படுத்துவது என்ற கண்கூடாக தெரிந்த அதன் இலக்கு, தோல்வி அடைந்துள்ளது. அந்த ஆட்சி முன்பினும் அதிக ஆக்ரோஷமாக உள்ளது. ஆகவே அந்த ஒப்பந்தம் மீதான அமெரிக்க ஜனாதிபதியின் விமர்சனம் நியாயமானதே,” என்று குறிப்பிட்டது.
“ஐரோப்பாவும் ஆசியாவும் வர்த்தக கப்பல்களை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும்” என்று தலைப்பிட்டு Süddeutsche Zeitung இல் வெளியான கருத்துரையிலும் இதேபோன்ற ஒரு கண்ணோட்டம் வெளியானது. “கடல் போக்குவரத்து சுதந்திரம் ஒரு முக்கிய முன்னுரிமையாகும், அதுவும் குறிப்பாக ஜேர்மனி போன்ற ஓர் ஏற்றுமதி-சார்ந்த பொருளாதாரத்திற்கு,” என்றது குறிப்பிட்டது. அதேபோல "அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு இது சாதகமாக இருந்தாலும் கூட" ஈரானிய கடலில் ரோந்து செல்வதற்கு ஒரு சர்வதேச போர்கப்பல்களின் தொகுப்பை உருவாக்குவதற்கும் அது அழைப்பு விடுத்தது.
அப்பத்திரிகை எழுதியது, “ஒரு சர்வதேச போர்க்கப்பல்களின் தொகுப்பு இந்த மோதலை சர்வதேசமயப்படுத்தும், அது அமெரிக்க மூலோபாயத்தின் இலக்காக கூட இருக்கக்கூடும். ஆனால் அதை கைவிடுவதற்கு இதுவொரு காரணமாக இருந்துவிடக் கூடாது. ஐரோப்பா அல்லது ஆசியாவின் போர்க்கப்பல்கள், அமெரிக்கா அல்லது சவூதி ரோந்து படகுகளை விட ஈரானுக்கு குறைவாகவே ஆத்திரமூட்டுவதாக இருக்கும். ஐரோப்பா, அந்த அணுசக்தி உடன்படிக்கையைத் தக்க வைக்க விரும்புகின்றது தான் என்றாலும், அதேவேளையில் அது இஸ்லாமிக் குடியரசின் ஆக்ரோஷமான பிராந்திய கொள்கையை அமைதியாக ஏற்றுக் கொள்ளாது என்று அவை தெஹ்ரானுக்கு மற்றொரு சமிக்ஞையாகவும் இருக்கும்,” என்று குறிப்பிட்டது.
முன்னணி ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் பிரதிநிதிகள் விவரித்த மூலோபாயங்கள் உண்மையில் பென்டகனின் திட்டங்களுக்கு நேரடியாக ஆதரவானதாக அமைகின்றன. ஹோர்முஸ் ஜலசந்தி சம்பவத்திற்கு ஒரு நாள் முன்னதாக, செவ்வாயன்று, அமெரிக்க தளபதிகளின் தலைமை தளபதி ஜோசப் டன்ஃபோர்ட் ஈரானைச் சுற்றி வளைக்கும் அமெரிக்க தலைமையிலான போர் கப்பற்படையில் இணையுமாறு உலகெங்கிலுமான அமெரிக்க இராணுவ கூட்டாளிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
டன்ஃபோர்ட் கூறினார், “ஹோர்முஸ் மற்றும் பாப் அல்-மன்தப் ஜலசந்தி இரண்டிலும் சுதந்திர கடற்போக்குவரத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்து நம்மால் ஒரு கூட்டணியை அமைக்க முடியுமா என பல நாடுகளுடன் இப்போது நாங்கள் பேசி வருகிறோம். இந்த முனைவை ஆதரிக்க எந்தெந்த நாடுகளுக்கு அரசியல் விருப்பம் உள்ளது என்பதை அனேகமாக அடுத்த ஓரிரு வாரங்களில் நாங்கள் அடையாளம் காண்போமென நினைக்கிறேன், பின்னர் அதை ஆதரிக்கும் சிறப்பு தகைமைகளை அடையாளம் காண இராணுவங்களுடன் நாங்கள் நேரடியாக செயல்படுவோம்,” என்றார்.
செயல்பாடுகளை வழி நடத்துவதற்கு பென்டகன் "கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு" கப்பல்களை வழங்குமென அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் கூட்டாளிகள் அமெரிக்க கட்டளை கப்பல்களின் உத்தரவுகளைப் பின்தொடர பாதுகாப்பு வாகனங்களை வழங்குவார்கள்.
இத்திட்டம் ஈரான் பொருளாதாரத்தின் மீது மட்டுமல்ல, மாறாக ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசியாவில் அதன் பிரதான ஏகாதிபத்திய “கூட்டாளிகள்”, மற்றும் ஆசியாவில் மிகவும் மக்கள்தொகை கொண்ட இரண்டு நாடுகளான சீனா மற்றும் இந்தியா ஆகியவற்றின் எண்ணெய் வினியோகத்தின் மீதும் மரணப்பிடியை வைக்க அமெரிக்க கடற்படையை அனுமதிக்கும் என்பதை டன்ஃபோர்ட் கூறவில்லை.
அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகம் (EIA) குறிப்பிடுகிறது, “2018 இல், [ஹோர்முஸ் ஜலசந்தியில்] எண்ணெய் போக்குவரத்து சராசரியாக நாளொன்றுக்கு 21 மில்லியன் பரல்களாக இருந்தது, அல்லது உலகளாவிய பெட்ரோல் எரிபொருள் நுகர்வில் சுமார் 21 சதவீதத்திற்கு சமமாக இருந்தது. ... ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெய் மற்றும் செறிவூட்டப்பட்ட எண்ணெய்யில் 76 சதவீதம் 2018 இல் ஆசிய சந்தைகளுக்குச் சென்றதாக EIA மதிப்பிடுகிறது. ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஆசியாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட கச்சா எண்ணெய்க்கான மிகப்பெரிய இடங்களாக சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகியவை இருந்தன, 2018 இல் சென்ற மொத்த ஹோர்முஸ் கச்சா எண்ணெய் மற்றும் செறிவூட்டப்பட்ட எண்ணெய்யில் 65 சதவீதம் அவற்றின் கணக்கில் வருகிறது,” என்று குறிப்பிடுகிறது.
பாப் அல்-மன்தாப் (Bab al-Mandab) ஜலசந்திகள் வழியாக அன்றாடம் சுமார் 4 மில்லியன் பேரல்கள் ஐரோப்பாவை நோக்கி செல்கின்றன.
இதுபோன்ற புள்ளிவிபரங்கள் மூலோபாய-இராணுவ செல்வாக்கிற்கும் மற்றும் இலாபங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான கடும் போட்டியை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகின்றன, இதுதான் 1991 இல் சோவியத் அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் மூன்று தசாப்தகால மத்திய கிழக்குப் போரின் அடித்தளத்தில் அமைந்திருந்தது. ட்ரம்ப் நூறு பில்லியன் கணக்கிலான டாலர் வர்த்தகப் போர் வரிவிதிப்புகளைக் கொண்டு பிரதான ஆசிய மற்றும் ஐரோப்பிய சக்திகளை அச்சுறுத்துகின்ற அதேவேளையில், இத்தகைய பதட்டங்கள் முன்னொருபோதும் இல்லாத தீவிரத்தன்மையை எட்டி வருகின்றன. இராணுவரீதியில் பலமான அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு மோதலுக்கு அஞ்சி, இப்போதைக்கு, ஐரோப்பிய சக்திகள் அவற்றுக்கான நேரம் வரும் வரையில் காத்திருக்கவும் வாஷிங்டனின் போர் முனைவுக்குத் துணை போகவும் முடிவெடுத்து வருவதாக தெரிகிறது.
சூறையாடுவதில், ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் அடிப்படையில் வாஷிங்டனை விட குறைந்தவை இல்லை என்பதைக் காட்டும் இந்த கொள்கை, ஒரு புதிய முன்பினும் பெரிய இரத்த ஆறு ஏற்படுத்துவதில் இருந்து வாஷிங்டனைத் தடுக்க, தொழிலாளர்கள், அதன் எதிர்விரோத போட்டி முதலாளித்துவ சக்திகளைச் சார்ந்திருக்கலாம் என்ற பிரமைகளின் திவால்நிலைமையையும் அம்பலப்படுத்துகிறது. சூறையாடலில் தங்களின் பங்கைக் கைப்பற்றுவதற்கும் மற்றும் அதிகரித்து வரும் வேலைநிறுத்தங்கள் போராட்டங்களுக்கு மத்தியில் நூறு பில்லியன் கணக்கான யூரோக்களை இராணுவ வரவு செலவு திட்டக்கணக்கிற்கு தொடர்ந்து ஒதுக்குவதற்குமான பெரும்பிரயத்தனத்துடன், ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் அமெரிக்க போர்களை எதிர்க்கவில்லை. அவை மீள்இராணுவமயப்படுவதற்கான அவற்றின் முனைவைத் தீவிரப்படுத்தியும், உள்நாட்டில் அவற்றின் சிக்கன கொள்கைகள் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கியும் அமெரிக்க அழுத்தத்திற்கு விடையிறுக்கின்றன.