ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Syriza’s election defeat: A balance sheet of a political betrayal

சிரிசாவின் தேர்தல் தோல்வி: ஓர் அரசியல் காட்டிக்கொடுப்பின் இருப்புநிலைக் கணக்கு

Alex Lantier
9 July 2019

ஞாயிறன்று சிரிசா (“தீவிர இடதின் கூட்டணி") அரசாங்கத்தின் தேர்தல் தோல்வி கிரேக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மூலோபாய அனுபவத்தைக் நெருக்கமாக கொண்டு வருகிறது.

ஐரோப்பிய ஒன்றிய சிக்கன திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக சூளுரைத்து, நான்காண்டுகளுக்கு முன்னர் பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் பதவியேற்ற போது, ஒட்டுமொத்த நடுத்தர வர்க்க போலி இடதும் அக்கட்சியின் வெற்றியை தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய வெற்றியாகவும், அதை முதலாளித்துவத்திற்கு ஒரு "தீவிர" மாற்றீடாகவும் அறிவித்தன.

ஸ்பெயினின் பொடெமோஸ் கட்சியில் இருந்து பிரிட்டனின் தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின் மற்றும் அமெரிக்காவின் சுய-பாணியிலான "சோசலிச" வேட்பாளர் பேர்ணி சாண்டர்ஸ் வரையில், இந்த சக்திகள், “99 சதவீதத்தினரின்" அனைத்து கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கான ஒரு முன்மாதிரியாக சிரிசாவைத் தூக்கிப் பிடித்தன.

ஆனால் அதற்கு மாறாக சிரிசா, ஸ்ராலினிச கம்யூனிச கட்சி சோவியத் ஒன்றியத்தைக் கலைத்ததை தவிர, நவீன வரலாற்றில் வேறெந்த அரசாங்கத்தையும் விட ஆழமான பல சிக்கன நடவடிக்கைகளைத் திணித்து, அதேவேளையில் பகுதியளவில் அந்நாட்டை பொலிஸ் அரசாக மாற்றி, ஐரோப்பா எங்கிலும் மிகவும் கடுமையான அகதிகள்-விரோத கொள்கையை முன்னெடுத்தது.

நான்காண்டுகளுக்குப் பின்னர், வெறுப்புற்ற, வறுமைப்பட்ட வாக்காளர்கள் சிப்ராஸை தூக்கியெறிந்துள்ளனர். பாரியளவிலானோர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாததற்கு மத்தியில், வெறுக்கப்படும், வலதுசாரி புதிய ஜனநாயக கட்சி (ND) மீண்டும் பதவிக்கு வந்துள்ளது.

ஸ்பெயினின் Cuarto Poder, பிரிட்டனின் சோசலிஸ்ட் வேர்க்கர் மற்றும் அமெரிக்காவின் ஜாக்கோபின் சஞ்சிகைகளில் இந்த தோல்விக்கான காரணங்கள் மீது காதடைத்த மௌனம் நிலவுகிறது. ஆனால் இது அதன் தேர்தல் வாக்குறுதிகளை சிரிசா தொடர்ச்சியாக காட்டிக்கொடுத்ததன் அனுமானிக்கத்தக்க விளைவு தான். ஜனவரி 2015 இல் அது பதவியேற்றதற்குப் பின்னர், அது ஐரோப்பிய ஒன்றியம் கோரிய சிக்கன நடவடிக்கைக்கான, வங்கி பிணையெடுப்பு மற்றும் சமூக வெட்டுக்கான ஒவ்வொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முற்றுப்புள்ளியிடப்பட்ட வரியிலும் அடிமைத்தனமாக கையெழுத்திட்டுள்ளது.

செல்வச்செழிப்பான நடுத்தர வர்க்கத்தின் "இடது வெகுஜனவாத" கட்சிகளில் இருந்து தொழிலாளர்களைப் பிரிக்கும் வர்க்க பிளவு மீதான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினது (ICFI) பகுப்பாய்வை இந்த நான்காண்டுகள் ஊர்ஜிதப்படுத்தி உள்ளன. இந்த அமைப்புகளுக்கும் சோசலிசத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சிரிசாவுக்குத் தலைமை கொடுக்கும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊடக செயல்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள் அவர்களின் பதவிகாலத்தின் பிற்போக்குத்தனமான விளைவுகள் குறித்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று வெளிப்படையாக கூறுவார்களேயானால், அவர்களின் "திட்டம் நிறைவேற்றப்பட்டது,” என்று தான் கூறுவார்கள்.

புதிய ஜனநாயகக் கட்சி (ND) திணித்த ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக அதிகரித்து வந்த தொழிலாள வர்க்க எதிர்ப்புக்கு மத்தியில், 2012 இல் சிப்ராஸ் சிஐஏ இக்கு முன்னால் உரையாற்ற வாஷிங்டனுக்கு பயணித்த போது, WSWS பின்வருமாறு எச்சரித்தது: “எதிர்வரவிருக்கும் வர்க்கப் போராட்டங்களில் சிரிசா, தொழிலாளர்களை ஒரு விரோதி போல் எதிர்கொள்ளும். அது, அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிடினும், சிக்கனக் கொள்கைகளுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதும், தொழிலாள வர்க்கத்தின் மீதான நிதிய மூலதனத்தின் அரசியல் ஆதிக்கத்தைத் தக்க வைப்பதுமே அதன் நோக்கமாகும்.”

சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஓராண்டுகால வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களுக்குப் பின்னர், ஜனவரி 2015 இல் சிரிசா தேர்ந்தெடுக்கப்பட்ட போது WSWS குறிப்பிடுகையில், சிரிசா "ஒரு மிகப்பெரும் அபாயத்தை" பிரதிநிதித்துவப்படுத்துகிறது. “அதன் இடதுசாரி மூடிமறைப்பு இருந்தாலும், சிரிசா ஒரு முதலாளித்துவ கட்சி என்பதோடு அது நடுத்தர வர்க்கத்தின் செல்வச்செழிப்பான அடுக்குகளின் மீது தங்கியுள்ளது... அதன் தலைவர் அலெக்சிஸ் சிப்ராஸ் கிரீஸ் மீதான மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகளில் ஒரு (மிகச் சிறிய) குறைப்பை வாக்காளர்களுக்கு உறுதியளிக்கின்ற அதேவேளையில், வங்கிகள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களின் பிரதிநிதிகள் சிரிசா அரசாங்கத்தைக் குறித்து 'அஞ்சுவதற்கு எதுவுமில்லை' என்று அவர் வாக்குறுதியளிக்கவும் ஒருபோதும் அயரவில்லை,” என்று குறிப்பிட்டது.

இதற்கு முரண்பட்ட விதத்தில், கிங்ஸ் கல்லூரி பேராசிரியரும் முன்னாள் சிரிசா உறுப்பினருமான ஸ்டாதிஸ் குவெலாகிஸ் அந்நேரத்தில் ஜாகோபினில் பின்வருமாறு எழுதினார்: “சிரிசாவின் தேர்தல் வெற்றி ஐரோப்பிய தீவிர இடது மற்றும் தொழிலாளர்களின் இயக்கத்திற்கு நம்பிக்கையூட்டும், இது ஓர் அளப்பரிய வாய்ப்பை அதற்கு வழங்குகிறது,” என்றார். “ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய [சிரிசாவின்] மூலோபாய நோக்குநிலை தெளிவாக இல்லை என்பதையும், அதிவலது சுதந்திர கிரேக்கர்கள் உடனான அதன் அரசாங்கத்தினது கூட்டணி "தீமையானது" என்பதையும் அவர் ஒப்புக் கொண்டிருந்தார். இருப்பினும் அவர், “உண்மையின் தருணம் கரங்களில் உள்ளது,” என்று ஒரு போராட்டத்தை முன்கணித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சிப்ராஸின் தேர்தல் வாக்குறுதியைப் போலவே இதுவும் மோசடியாக இருந்தது. எதிர்த்து போராடுவதற்கு முயல்வதிலிருந்து விலகி, சிரிசா தேர்வானதற்குப் பின்னர் வெடித்த தொழிலாளர்களின் பாரிய ஆர்ப்பாட்டங்களால் ஆச்சரியமடைந்தது மற்றும் தொந்தரவுக்கு உள்ளானது. 1991 இல் சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிசத்தால் முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்டதற்குப் பின்னர் இருந்து, அதுவும் குறிப்பாக 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் இருந்து, தசாப்த காலமாக ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகள் மீதான தொழிலாள வர்க்கத்தின் கோபத்தை அணிதிரட்டுவதற்கு அதற்கு எந்த உத்தேசமும் இருக்கவில்லை.

சிரிசா ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பரந்த எதிர்ப்புக்கு முறையிடவில்லை. அதற்கு மாறாக, அப்போதைய-சிரிசா நிதி அமைச்சர் யானிஸ் வாருஃபாகிஸ் சற்றே மாற்றியமைக்கப்பட்ட சிக்கனக் கொள்கையைக் கொண்டு வருவதற்காக பிரதான ஐரோப்பிய தலைநகரங்களுக்குப் பேச்சுவார்த்தைகளுக்காக பயணம் செய்தார். அந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் Observer பத்திரிகைக்கு வாருஃபாகிஸ் கூறுகையில், அப்போது அவர் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலை ஐரோப்பாவின் "மிகவும் இராஜத்திர அரசியல்வாதியாக" பகிரங்கமாக புகழ்ந்ததுடன், "வழமையான தாட்சரிச அல்லது றேகனிச" பொருளாதார கொள்கைகளை அவர் முன்மொழிந்தார்.

சிக்கன நடவடிக்கைகளைக் கைவிட வேண்டுமென்பதை பேர்லின், இலண்டன் மற்றும் பாரீஸ் ஏற்றுக் கொள்ளாது என்பதை அவை ஒருசமயம் சுட்டிக்காட்டி இருந்த நிலையில், இதனால் தான் சிரிசா அதன் தேர்தல் வாக்குறுதிகளைக் காலடியில் இட்டு நசுக்கி, விரைவாக சரணடைந்து, பெப்ரவரி 20, 2015 இல் ஒரு புதிய ஐரோப்பிய ஒன்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தொழிலாள வர்க்க அதிருப்திக்கு ஒரு சர்வதேச முறையீடு செய்ய சிரிசாவுக்குப் பதவியில் அனைத்து அதிகாரங்களும் இருந்தன என்றாலும், அது அதைச் செய்ய விரும்பவில்லை. 1980 களில் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க தொழிலாளர்களுக்கு எதிராக தாட்சர் அல்லது றேகன் திணித்த தாக்குதல் வகைகளை அமல்படுத்துவதற்காக, அதனால் தொழிலாள வர்க்கத்தின் வேலைநிறுத்த மற்றும் போராட்டங்களின் ஓர் அலையைச் சகித்துக் கொள்ள முடியவில்லை.

2015 வசந்த காலம் முழுவதும், அது தயாரித்து கொண்டிருந்த பத்து பில்லியன் கணக்கான யூரோ சமூக தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கு சிரிசா வழி காண முயன்று கொண்டிருந்தது. ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்க வங்கிகளுக்குக் கடன் வழங்குவதை நிறுத்துவதற்கு அச்சுறுத்தியதுடன் மற்றும் அதன் நிதியியல் அமைப்புமுறையின் ஓர் உடைவைத் தடுப்பதற்கு முன்னைய தேசிய செலாவணியை கிரீஸ் மீள-ஸ்தாபிப்பதை தடுக்க நிர்பந்தித்த நிலையில், சிப்ராஸ் ஜூலை 2015 இல் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகள் மீது ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினார். சிரிசாவின் புகழ்பாடுபவரும் நீண்டகால பப்லோவாதியுமான தாரிக் அலி பின்னர் குறிப்பிட்டார், அந்த சர்வஜன வாக்கெடுப்பு சிப்ராஸைப் பொறுத்த வரையில் "ஒரு கணக்கிட்ட அபாயமாக இருந்தது. அவர் "வேண்டும்" முகமை ஜெயிக்குமென நினைத்தார், இராஜினாமா செய்து விட்டு, ஐரோப்பிய ஒன்றிய தலையாட்டிகளே அரசாங்கத்தை நடத்தட்டும் என விடுவதற்கு திட்டமிட்டிருந்தார்.”

எவ்வாறிருப்பினும் அதிகாரத்தை மீண்டும் வலதிடமே ஒப்படைப்பதற்கான சிப்ராஸின் முதல் முயற்சி தோல்வியடைந்தது. தொழிலாளர்கள் அதிகரித்தளவில் சிக்கன நடவடிக்கைக்கு எதிராக வாக்களித்ததால், பெருவாரியாக 60 சதவீத “வேண்டாம்" வாக்குகள் வென்றன. பின்னர் சிப்ராஸூம் சிரிசாவும் பேர்லின் மற்றும் புரூசெல்ஸ் கட்டளையிட்ட 13 பில்லியன் யூரோ சிக்கன பொதியைச் சுமத்த முடிவெடுத்து, அவர்களின் சொந்த வாக்கெடுப்பின் முடிவையே அவர்கள் கைவிட்டனர்.

இந்த முடிவானது சிரிசா சேவையாற்றும் வர்க்க நலன்களிலும் மற்றும் அதன் தலைவர்களது குறிப்பிடத்தக்க செல்வவளங்களிலும் வேரூன்றி இருந்தது. WSWS அப்போது குறிப்பிட்டது: “2013 இல் 1 மில்லியன் யூரோவை அவரது தனிப்பட்ட சேமிப்புகளாக அறிவித்த சிரிசாவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிமித்திரிஸ் சுக்கலாஸ் (Dimitris Tsoukalas), 500,000 யூரோவிற்கு அதிக மதிப்பில் பங்குகளைக் கொண்டுள்ள நிதி மந்திரி சக்காலாட்டோஸ் (Tsakalotos), ஜேபி மோர்கனில் 426,000 யூரோ முதலீடு செய்துள்ள பொருளாதார மந்திரி ஜியோர்ஜியோஸ் ஸ்ராதாகிஸ் (Giorgios Stathakis), 350,000 யூரோ சேமிப்பையும், பங்குகளையும் மற்றும் 11 நில/கட்டிடத்துறை சொத்துக்களையும் கொண்டுள்ள முன்னாள் சிரிசா தலைவர் அலேகோஸ் அலவானோஸ் (Alekos Alavanos), முன்னாள் நிதி மந்திரி யானிஸ் வாருஃபாகிஸ் (இவரது மனைவியும் ஒரு மில்லியனர் ஆவார்) ஆகியோர் கிரேக்க ஆளும் உயரடுக்கின் ஏனைய நபர்களை போலவே ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஓர் உடைவைக் கற்பனையும் செய்து பார்க்க முடியாதவர்களாவர் அல்லது சகித்துக் கொள்ளவும் முடியாதவர்களாவர். மேலும் கிரீஸ் யூரோவிலிருந்து வெளியேற்றப்பட்டால், அவர்களது சொத்துக்கள் பெரிதும் மதிப்பிழந்த முன்னைய தேசிய செலாவணிக்கு மாற்றப்படுகையில், அவர்கள் பெரும் செல்வவளத்தை இழக்க வேண்டியிருக்கும்.”

இது கிரீஸில் தொழிலாளர்களுக்கு என்ன அர்த்தப்படுத்துகிறது? சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிசத்தால் முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்டதற்குப் பின்னர் ஐரோப்பாவில் இதுவே மிகப் பெரிய பொருளாதார பொறிவாகும். பொருளாதார உற்பத்தி ஒரு கால்வாசியும், வருவாய் 30 சதவீதத்திற்கு அதிகமாகவும் மற்றும் ஓய்வூதியங்கள் 50 சதவீதமும் வீழ்ச்சி அடைந்தன, அதேவேளையில் வறுமை விகிதம் 35 சதவீதம் அதிகரித்தது. சிரிசாவினால் பெரியளவில் கொண்டு வரப்பட்டிருந்த சிறிய தற்காலிக ஒப்பந்தங்களை கொண்ட நிரந்தரமற்ற தொழிலாளர்களைக் கொண்ட பொருளாதாரம் (gig economy) அதிகரித்தும் கூட, வேலைவாய்ப்பின்மை விகிதம் இன்னமும் 18 சதவீதத்தில் நிற்கிறது, இளைஞர்களுக்கு இது 40 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. மூன்றில் ஒரு கிரேக்க தொழிலாளர் அவரின் பகுதிநேர வேலை சம்பளத்திற்காக மாதத்திற்கு 317 யூரோ அல்லது உத்தியோகப்பூர்வ குறைந்தபட்ச கூலியில் பாதி தொகைக்காக வேலை செய்கிறார்.

சிரிசா நடத்திய ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கத்தைத் தசாப்த காலங்களுக்குப் பின்னோக்கி வீசி, மில்லியன் கணக்கானவர்களின் வாழ்வை நசுக்கியுள்ளது. அனைவருக்குமான மருத்துவக் காப்பீட்டை நிறுத்தியமை தடுக்கக்கூடிய நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் அதிகரிப்பை அர்த்தப்படுத்தி உள்ளது, அல்லது பரிசோதனைகள் கைவிடப்படுவதன் காரணமாக நோய்கள் முற்றிய நிலையில் மட்டுமே புற்றுநோய்கள் கண்டறியப்படுகின்றன. வேலையிடங்களில், தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெறுவதற்கான ஒரு முன்நிபந்தனையாக முதலாளிமார்களுக்கு அவர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியைத் திரும்ப வழங்க உடன்படுவதற்கு வழமையாக நிர்பந்திக்கப்படுகின்றனர் அல்லது தங்களின் சம்பளத்திற்காக நீண்ட நாட்களுக்கு நிராகரிக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். நூறாயிரக் கணக்கான கிரேக்கர்கள் வேலைகளைத் தேடி அவர்களின் நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டிருந்தனர்.

கிரீஸிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான சமநிலையற்ற போராட்டத்தில் இதுவொரு தவிர்க்கவியலாத விளைவென்று கூறுபவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள் அல்லது மற்றவர்களை ஏமாற்றுகிறார்கள். ஐரோப்பா எங்கிலும் மற்றும் அதைக் கடந்தும், தசாப்தங்களில் இல்லாத வேலைநிறுத்தங்கள் மற்றும் சமூக போராட்டங்களின் மிகப்பெரிய எழுச்சியைக் கடந்த சில ஆண்டுகள் கண்டுள்ளன. 1989 இல் ஸ்ராலினிசத்தின் முதலாளித்துவ மீட்டமைப்புக்குப் பின்னர் போலாந்தில் முதல் நாடுதழுவிய ஆசிரியர்கள் வேலைநிறுத்தம், பிரெஞ்சு "மஞ்சள் சீருடை" போராட்டங்கள், மற்றும் ஜேர்மனி, போர்ச்சுக்கல், பெல்ஜியத்தில் ஐரோப்பிய ஒன்றிய கூலி உயர்வின்மைக்கு எதிரான வேலைநிறுத்தங்கள் ஆகியவை அவற்றில் உள்ளடங்கும்.

சிரிசா அரசாங்கம் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் இந்த எதிர்ப்பை அணித்திரட்டவும் இதற்கு முறையீடு செய்யவும் மறுத்தது, ஏனென்றால் அது வங்கிகளின் செல்வவளத்தைப் பாதுகாக்கவும் மற்றும் அவர்களைச் செழிக்க வைக்கவும் தீர்மானகரமாக உள்ள குட்டி-முதலாளித்துவ அடிவருடிகளின் ஒரு கூட்டத்தால் தலைமை தாங்கப்படுகிறது.

தொழிலாளர்களை இலக்கு வைத்து பொலிஸ் ஒடுக்குமுறை நுட்பங்களைச் செம்மைப்படுத்துவதே 2015 இல் இருந்து சிரிசா அரசாங்கத்தின் முக்கிய கவலையாக இருந்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் ஏகாதிபத்திய போர்களில் இருந்து தப்பி வரும் அகதிகளுக்கு சிப்ராஸ் கிரீஸில் அடைப்பு முகாம்களை அமைத்த நிலையில், அவர் கலகம் ஒடுக்கும் பொலிஸையும் பலப்படுத்தி உள்ளதுடன், 2011 எகிப்திய புரட்சியின் கொலைகாரரும், இராணுவ சர்வாதிகாரியுமான தளபதி அப்தெல் பதாஹ் அல்-சிசி உடன் உறவையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். சிப்ராஸ் பதவியிலிருந்து விலகினாலும், தனிப்பட்டரீதியில் விரைவிலேயே அவர் பெரும் செல்வந்தராக ஆவதற்கான திட்டங்கள் நன்கு அமைக்கப்பட்டுள்ளன என்பதை சந்தேகிக்க வெகு குறைவான காரணங்களே உள்ளன.

சிரிசா அரசாங்கத்தின் நான்காண்டுகள் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு, பெரும் விலைகொடுத்து கொண்டு வரப்பட்டுள்ள, நாசகரமான அரசியல் படிப்பினைகளை வழங்குகின்றன. இத்தகைய படிப்பினைகளில் இருந்து கிடைக்கும் அரசியல் தீர்மானங்களை வரைவதே அதிஅவசரப் பணியாகும்.

முதலாளித்துவத்தின் கீழ் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த "இடது வெகுஜனவாத" கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலமாக, திவாலான இந்த முதலாளித்துவ ஒழுங்கமைப்புக்கு எதிராக போராடுவது சாத்தியமே இல்லை என்பதை இந்த மறக்க முடியாத அனுபவம் எடுத்துக்காட்டுகிறது. இதுபோன்ற கட்சிகள் வேறு இடங்களில் அதிகாரத்திற்கு வந்தாலும், செல்வ செழிப்பான குட்டி-முதலாளித்துவத்தில் அதன் வர்க்க அடித்தள வேர்களைக் கொண்டுள்ள சிரிசா நடத்திய காட்டிக்கொடுப்பேதான் மீண்டும் நடக்கும். தொல்சீர் மார்க்சிசத்தின், அதாவது, ட்ரொட்ஸ்கிசத்தின் முன்னோக்கிற்குத் திரும்புவது, பொருளாதார வாழ்வு மற்றும் அரசு அதிகாரத்தின் மீது கட்டுப்பாட்டை எடுக்க சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் முழு தொழில்துறை மற்றும் பொருளாதார சக்தியைப் புரட்சிகரமாக அணிதிரட்டுவதே முன்னோக்கிய பாதையாகும்.

இந்த முன்னோக்கிற்கான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தில் ஒரு புதிய புரட்சிகர தலைமை அவசியப்படுகிறது. அந்த தலைமை ICFI ஆகும், அது சிரிசாவுக்கான அதன் எதிர்ப்பிலும் தொழிலாள வர்க்கத்தை நோக்கிய அதன் வர்க்க முன்னோக்கு மற்றும் அதன் நோக்குநிலையின் அடிப்படையான சரியான தன்மையிலும் எடுத்துக்காட்டியது. கிரீஸிலும் ஒவ்வொரு நாட்டிலும் ICFI இன் பிரிவுகளைக் கட்டமைப்பதே இப்போதுள்ள மத்திய பணியாகும்.