ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

දුම්රිය සේවකයන් 3000ක් දෙදින වර්ජනයක

இலங்கையில் 3,000 புகையிரத ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்

By our reporters
22 June 2019

இலங்கையில் வியாழக்கிழமை மாலை தொடங்கிய இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் சுமார் 3,000 புகையிரத ஓட்டுநர்கள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள், நிலையப் பொறுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களும் பங்கேற்றனர். வேலைநிறுத்தத்தால் புகையிரத சேவை கிட்டத்தட்ட முழுமையாக பாதிக்கப்பட்டது.

வேலைநிறுத்தம் புதன்கிழமை நள்ளிரவில் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், நிதியமைச்சருடன் ஒரு சந்திப்புக்கான வாய்ப்பில் எதிர்பார்ப்பு வைத்து தொழிற்சங்கங்கள் அதை வியாழக்கிழமை இரவுக்கு ஒத்திவைத்தன. எனினும் அன்று நடந்த பேச்சுவார்த்தைகள் கவிழ்ந்த பின்னர், ஊழியர்களின் அமைதியின்மை காரணமாக தொழிற்சங்கங்கள் அன்று மாலையே வேலைநிறுத்தத்தை நடத்த வேண்டிய கட்டாயம் தொழிற்சங்கங்களுக்கு ஏற்பட்டது.

வேலைநிறுத்தம் செய்த புகையிரத தொழிலாளர்கள், தங்கள் பிரிவுகளில் சம்பள முரண்பாடுகள் தொடர்பான பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கோருகின்றனர். பாதுகாப்பு வழங்கும் போர்வையில், அரசாங்கம் அனைத்து முக்கிய புகையிரத நிலையங்களிலும் இராணுவத்தை நிறுத்தி வைத்திருந்த அதே வேளை, இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டிருந்தன. இந்த வேலை நிறுத்தத்துக்கு புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

2006 ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்ட அரச சேவை சம்பள சுற்றறிக்கை மூலம் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட புகையிரத உதவியாளர்கள் தரத்திற்கான மாதாந்த ஆரம்ப ஊதியம், ரூ. 16.500 வரை அதிகரிக்கப்பட்டிருந்தாலும், தங்களது அடிப்படை ஊதியம் அதிகரிக்கப்படாமையால், பெரும் அநியாயம் நடந்துள்ளதாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவித்தனர். குறித்த பிரச்சினை சம்பந்தமாக போக்குவரத்து அமைச்சர், நிதி அமைச்சு மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே வியாழக்கிழமை நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளன.

புகையிரத தொழிற்சங்கத் தலைவர்கள், வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில், ஜனாதிபதியும், பிரதமரும், போக்குவரத்து அமைச்சரும் பிரச்சினையைத் தீர்க்க ஒப்புக் கொண்டாலும், நிதியமைச்சரும் அமைச்சின் அதிகாரிகளும் அதற்கு எதிராக இருந்தனர், எனத் தெரிவித்தனர். சம்பள முரண்பாடுகள் குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த அமைச்சரவை துணைக் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரம் அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும், நிதியமைச்சர் எதிர்ப்புத் தெரிவிப்பதால் அதை அமுல்படுத்துவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். தொழிற்சங்கத் தலைவர்களின் இந்த அறிக்கை, புகையிரத தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்த அரசாங்கத்தின் கொள்கையை மூடிமறைக்கும் முயற்சியாகும்.

புகையிரத திணைக்களம் உட்பட பெருமளவில் நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டாம் என்றும் அவற்றை தனியார்மயமாக்கவோ அல்லது வணிகமயமாக்கவோ வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள நிலையிலேயே, நிதி அமைச்சு நிதி ஒதுக்க எதிர்ப்புத் தெரிவிக்கின்றது.

கடந்த ஆண்டுகளில் இந்த தொழிற்சங்கங்களால் டஜன் கணக்கான எதிர்ப்பு போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் நோக்கம், புகையிரத தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான உண்மையான போராட்டத்தை ஏற்பாடு செய்வதல்ல, மாறாக அவர்களின் உரிமைகளை வழங்காதது தொடர்பாக அவர்கள் மத்தியில் நிலவும் அமைதியின்மையை தணிப்பதே ஆகும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், வேலைநிறுத்தம் செய்யும் புகையிரத குழுவினரின் போராட்டத்தை, ஏனயை புகையிரத தொழிலாளர்களின் போராட்டத்தில் இருந்து தனிமைப்படுத்தி, அரசாங்கத்தின் போலி வாக்குறுதிகளுக்கு அவர்களது எதிர்ப்பை அடிபணியச் செய்து அந்தப் போராட்டங்களை தொழிற்சங்கங்கள் கரைத்துவிட்டுள்ளன.

இந்த முறை வேலைநிறுத்தத்தை, 48 மணிநேரத்திற்கு மட்டுப்படுத்தப்படுத்திய தொழிற்சங்கம், போராட்டத்தைச் சூழ தொழிலாள வர்க்கத்தின் பிற பிரிவுகளின் ஆதரவைத் திரட்டுவதற்கு எந்தவொரு வர்க்க நடவடிக்கையையும் எடுக்காமல், முன்னரைப் போலவே புகையிரத ஊழியர்களில் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கச் செய்தது. கடந்த சில ஆண்டுகளாக, அடிக்கடி ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்த தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் மத்தியில் அமைதியின்மை வளரும்போது எந்த முறையிலுமான எதிர்ப்பையும் கையாள்வது கடினம் என கருதுகின்றது. முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு சார்பாக இருக்கும் தொழிற்சங்கங்கள், அவர்களுடன் புகையிர தொழிலாளர்கள் மோதலுக்குச் செல்வதைத் தடுக்க வேண்டுமென்றே முயற்சி செய்கின்றன.

தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள் மற்றும் காத்திரமான போராட்டங்கள் பற்றிய வாய்ச்சவடால்கள், அதிகாரத்துவத்தின் உண்மையான வழிமுறையை மூடி மறைப்பதற்கான ஒரு முயற்சி மட்டுமே. கடந்த ஆகஸ்ட் மாதம், தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தபோது, தொழிற்சங்கத் தலைவர்களின் நடவடிக்கைகளை புகையிரத தொழிலாளர்கள் நினைவுகூர்ந்துகொள்ள வேண்டும்.

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு கபடத்தனமாக சரணடைந்து, இரண்டு மாதங்களுக்குள் பிரச்சினையைத் தீர்ப்பதாக ஜனாதிபதி சிறிசேன கொடுத்த உறுதிமொழியை ஏற்று, ஆறு நாட்களாகத் தொடர்ந்த வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுத்தன. வேலைநிறுத்ததுக்கு அஞ்சி ஊதியத்தை அதிகரிக்க முடியாது என்று நிதியமைச்சர் மங்கள சமரவீரா அறிவித்ததோடு, வேலைநிறுத்தம் ஒரு "பயங்கரவாத செயல்" என்றும் வேலைநிறுத்தம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட விதத்தில் நசுக்கப்படும் என்றும் இளைஞர் விவகார மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகலா ரத்நாயக்க அச்சுறுத்தினார்.

அச்சுறுத்தலின் முன்னிலையில் அவ்வாறு அடிபணிந்த அதிகாரத்துவம், இம்முறை வேலை நிறுத்தத்தை தகர்ப்பதற்கும் இராணுவம் மற்றும் ஒப்பந்த ஊழியர்களை பயன்படுத்தினால் தொழிற்சங்கம் எத்தகைய நடவடிக்கையை எடுக்கும் என உலக சோசலிச வலத் தள நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இலங்கை புகையிரத பயண பாதுகாவலர்கள் சங்க ஒன்றியத்தின் செயலாளர் பி.எம்.பீ. பீரிஸ், “புகையிரதத்தை இராணுவத்தைக் கொண்டு இயக்க முடியாது. ஒடுக்க முயற்சித்தால் நாங்கள் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்,” என வாய்சவடால் விடுத்தார்:

புகையிரத துறையை தனியார்மயமாக்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து கேட்டபோது, ​ “கடந்த அரசாங்கங்கள் அதை செயல்படுத்த முயற்சித்தன, ஆனால் அவை தோல்வியடைந்தன. இந்த அரசாங்கம் அதைச் செய்வை ஒருபோதும் அனுமதிக்க முடியாது,” என அவர் கூறினார்.

புகையிரத தொழிலாளர்களின் கடுமையான எதிர்ப்பால், முந்தைய அரசாங்கங்கள் தனியார்மயமாக்கலை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, எனினும், சர்வதேச நாணய நிதியமானது புகையிரத உள்ளிட்ட அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்க உத்தரவிட்டுள்ளது.

தங்கள் வேலைகள், ஊதியங்கள் மற்றும் நிலைமைகளைப் பாதுகாக்க புகையிரத தொழிலாளர்கள் முன்னெடுக்கும் போராட்டம் தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டத்துடன் நேரடியாக பிணைக்கப்பட்டுள்ளது. ஆனால் வாய்ச்சவடால்கள் ஒருபுறம் இருக்க, தனியார்மயமாக்கலுக்கு எதிராக போராட புகையிரத தொழிற்சங்கங்கள் தயாராக இல்லை. அதுமட்டுமன்றி, தனியார்மயமாக்கலுக்கான முதல் அடியெடுப்பாக புகையித திணைக்களத்தை ஒரு தனியான சேவையாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளன. வெள்ளிக்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், இந்த தொழிற்சங்கங்கள் புகையிரத தொழிலாளர்கள் மீது அரசாங்கத்தின் திட்டங்களை திணிக்கின்ற ஏஜண்டுகள் என்பது நன்கு நிரூபனமானது.

"எங்களுக்கு ஒரு அரசியல் நோக்கம் இருப்பதாக சிலர் புகார் கூறுகின்றனர். எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. நாங்கள் இந்த அரசாங்கத்தை ஆதரித்தோம். அரசாங்கத்தில் சிரமத்தில் ஆழ்த்தவில்லை. கடந்த சில நாட்களில் பிரதமர் மாறியிருந்தார். ஏப்ரல் மாதத்தில் (பயங்கரவாத தாக்குதல்கள்) பிரச்சினைகள் இருந்தன. அந்த நேரங்களில் நாங்கள் போராடவில்லை”, என்று புகையிரத பயண பாதுகாவலர் சங்க ஒன்றியத்தின் செயலாளர் பீரிஸ் கூறினார்.

முதலாளித்துவ ஆட்சியாளர்களின் அரசியல் நலன்களுக்கு தொழிற்சங்கங்கள் எவ்வாறு அடிபணிந்துள்ளன என்பதை அவரது கருத்து தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் புகையிரத தொழிலாளர்களைப் பொறுத்தவரை, ஊதியப் போராட்டத்தின் நீண்டகால அனுபவம் என்னவென்றால், அரசாங்கக் கொள்கைகளைத் தோற்கடிப்பதற்கான அரசியல் போராட்டம் இன்றி அவர்களின் உரிமைகளை வெல்லவோ பாதுகாக்கவோ முடியாது என்பதே ஆகும்.

அதேபோல், அடுத்தடுத்த அரசாங்கங்களின் அரசியல் நலன்களுக்கு சேவை செய்கின்ற தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் அதிகாரிகளையும் உச்சத்தில் வைத்துக்கொண்டு தொழிலாளர்களால் தங்கள் உரிமைகளை வென்றெடுக்க அல்லது பாதுகாக்க எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாது. பொதுவாக இலங்கையில் உள்ள அனைத்து தொழிலாளர்களின் அனுபவமும் அதுதான். ஒரு துறையில் போராட்டத்தை வலுப்படுத்துவதற்காக ஏனைய பிரிவுகளில் உள்ள தொழிலாளர்களை ஒன்றிணைப்பதையும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமையையும் தொழிற்சங்கங்கள் எதிர்க்கின்றன. சர்வதேச தொழிலாளர்களுடனான ஐக்கியம் என்பது, தொழிற்சங்கங்களுக்கும் அதிகாரத்துவத்துக்கும் உடலில் ஒட்டாத ஒன்றாகும்.

தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக ஒரு உண்மையான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க முன்நிற்கும் புதிய அமைப்புகள் தேவை. இதனாலேயே, சோசலிச சமத்துவக் கட்சி, ஒவ்வொரு வேலைத் தளத்திலும், பெருந்தோட்டங்களிலும் தொழிலாளர்களின் ஜனநாயக வாக்களிப்பிலிருந்து சுயாதீனமான தேர்வு செய்யப்படும் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்ப அழைப்பு விடுக்கின்றது. அந்தக் குழுக்களில் தொழிற்சங்க அதிகாரத்துவத்தை நெருங்க விடக்கூடாது. தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுவதை இந்த குழுக்களே முடிவு செய்ய வேண்டும்.

இரண்டு நாள் வேலைநிறுத்தத்துடன், புகையிரத ஊழியர்கள் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசரத் தேவையாகும்.

இந்த நடவடிக்கை சோசலிச கொள்கைகளுக்கான அரசியல் போராட்டத்துடனும் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அதிகாரத்திற்கு வருவதற்குமான போராட்டத்துடனும் இணைக்கப்பட வேண்டும்.