ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

තැපැල් සේවකයන් පැය 24 ක සංකේත වර්ජනයක

இலங்கை தபால் ஊழியர்கள் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் செய்தனர்

By Kapila Fernando 
22 April 2019

ஆட்சேர்ப்பு செயல்முறை தொடர்பாக அரசாங்கத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான ஒப்பந்தங்களை அமுல்படுத்தாமை, 18 கனிஷ்ட பணியாளர் பதவிகளை ஒரு பதவிக்குள் அடக்கும் அநீதியை நீக்குதல் உட்பட பல காரணங்களுக்காக அஞ்சல் தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 26,000 தபால் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலை நிறுத்தத்தை, தபால் தொழிலாளர் சங்கத்தின் கூட்டு முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. எனினும், தொழிற்சங்கத் தலைமைகளின் நோக்கம், தபால் ஊழியர்களின் உரிமைகள் தொடர்பாக உண்மையான போராட்டத்தை ஏற்பாடு செய்வதல்ல. அவர்களின் நீண்டகால பிரச்சினைகள் தீர்க்கப்படாமை மற்றும் அரசாங்கம் அதன் வாக்குறுதிகளை அடுத்தடுத்து கைவிட்டுள்ளமை சம்பந்தமாக தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் வெறுப்பை தணித்து அவர்களை தடம்புரளச் செய்வதே தொழிற்சங்க தலைமைத்துவத்தின் நோக்கமாகும்.

அஞ்சல் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் கடந்த வாரம் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஒரு வேலைநிறுத்தத்துக்கு அழைத்தனர். ஆனால் அதை மத்திய அஞ்சல் பரிமாற்ற மையத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தியதுடன், மீதமுள்ள தொழிலாள வர்க்கத்தின் ஆதரவைப் பெற எந்தவொரு வர்க்க நடவடிக்கையையும் ஏற்பாடு செய்ய மறுத்ததுடன், சுகயீன விடுமுறை எடுத்துவிட்டு வீட்டிலேயே அடைந்து கிடக்க அங்கத்தவர்களுக்கு கட்டளையிட்டனர். இம்முறை 24 மணி நேர வேலைநிறுத்தத்தின் போதும் அவர்களின் கொள்கை இதுவே ஆகும்.

தபால் அமைச்சர் ஏ.எச்.எம். ஹலீமுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த பிறகே, கடந்த வாரம் இரண்டு நாள். வேலைநிறுத்தத்துக்கு தபால் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு முன்னணி அழைப்பு விடுத்தது. வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்த உடனேயே, “பாதுகாப்பு” என்ற போர்வையில் இராணுவத்தை மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்துக்கு அனுப்பியதன் மூலம் தொழிலாளர்கள் மீது அரசாங்கம் ஒரு பரந்த தாக்குதலுக்குத் தயாரிக்கிறது என்பதை சமிக்ஞை செய்தது.

"13 ஆண்டுகளாக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களும் தபால் நிர்வாகமும் அஞ்சல் ஊழியர்களை கடுமையாக சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளன" என்று தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் சிந்தக பண்டாரா ஊடகங்களுக்கு தெரிவித்தார். ஆனால் தொழிற்சங்கங்களின் முழு ஆதரவோடுதான் அரசாங்கத்தால் அவ்வாறு செய்ய முடிந்தது என்பதை பண்டாரா வேண்டுமென்றே மூடிமறைத்தார். 13 ஆண்டுகளாக, அவரும் அவரது அஞ்சல் தொழிற்சங்க அதிகாரத்துவமும் அரசாங்கத்தின் போலி வாக்குறுதிகளுக்கு அடிபணிந்து அஞ்சல் ஊழியர்களின் போராட்டங்களுக்கு ஆப்பு அடித்து வந்துள்ளன. ஜனாதிபதியின் "வாக்குறுதிகளுக்கு" உடன்பட்டு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16 நாட்கள் நடந்த தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான போராட்டத்தை அவர்கள் காட்டிக்கொடுத்தனர்.

மற்ற தொழிலாளர்களைப் போலவே அஞ்சல் ஊழியர்களிடையேயும், ஊதியங்கள் மற்றும் நிலைமைகளை வெட்டுதல், பதவி உயர்வு வழங்காமை மற்றும் தனியார்மயமாக்கல் ஆகியவற்றிற்கு விரோதமாக அரசாங்கத்தின் மீதும் முழு ஆளும் வர்க்கத்தின் மீதும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

2006 சுற்றறிக்கை மூலம் தபால் ஊழியர்களின் வேலை நிலைமைகள் மற்றும் முழு பொதுத்துறை மீதான மோசமான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதேபோல், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஊதிய ஆணையத்தின் முன்மொழிவுகள் மற்றும் முந்தைய "அமைச்சரவை பிரேரணைகள்", தொழிற்சங்கங்களின் ஆதரவோடு, தொழிலாளர்களை ஏமாற்றுவதை நோக்கமாகக் கொண்டவையாக மட்டுமே இருந்துள்ளன. தொழிலாளர்களின் கோரிக்கைகளை பெற்றுக் கொடுப்பதை குறிக்கோளாகக் கொண்டிருக்கவில்லை.

சம்பள ஆணையத்தின் உறுதிமொழிக் குறிப்பில் பின்வருபவை உள்ளடங்கி இருந்தன: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மூன்றாம் தரத்தின் நிலைய பொறுப்பதிகாரி பதவியை ரத்து செய்து, அவர்களை இரண்டாம் தரத்தில் உள்வாங்குதல் மற்றும் அதன்படி 2018 ஜூலை 7 ஆம் திகதிக்குள் புதிய ஊதிய மட்டத்தை தயாரித்தல்; ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் தகுதிகாண் அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல்; இரத்து செய்யப்பட்ட 18 கனிஷ்ட பணியாளர் பதவிகளை மீண்டும் நிலைநிறுத்துவது. இந்த வாக்குறுதிகளை அரசாங்கம் குப்பையில் வீசியுள்ளது.

தபால் ஊழியர்களுக்கு அவர்கள் கோரும் சம்பள தொகை வழங்கப்பட்டால், அது முழு அரச சேவையின் ஊதியத்திலும் குழப்பத்தை உருவாக்கும் என்று அமைச்சரவை துணைக்குழு அறிக்கை வலியுறுத்தியது. "குழப்பம்" என்பது வேறு ஒன்றும் அல்ல. புகையிரதம், ஆசிரியர்கள் மற்றும் மின்சாரம் போன்ற ஒவ்வொரு துறையிலும் போராட்டங்களின் போது அரசாங்கம் கூறியுள்ளவாறே, தபால் ஊழியர்களின் ஊதிய கோரிக்கையைக் கொடுத்தால் பிற பொதுத்துறை ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க வேண்டும் என்பதே ஆகும்.

தபால் ஊழியர்களின் சம்பள கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், அரச செலவினம் 8 பில்லியன் ரூபாயால் அதிகரிக்கும் என்றும் அதற்காக அரசாங்கத்திடம் நிதி இல்லை என்றும், சம்பள ஆணையம் மேலும் கூறியது.

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதலின் பின்னர் கடுமையான அவசரகால சட்டங்களை அமல்படுத்திய சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், பாதுகாப்புப் படையினருக்கும் பொலிசுக்கும் வரம்பற்ற அதிகாரங்களை வழங்கியது. அரசாங்கத்தின் பேரழிவுகரமான தாக்குதல்களுக்கு எதிராக வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டங்களை நசுக்குவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.

தபால் உட்பட முழு தொழிற்சங்க அதிகாரத்துவமும், அரசாங்கத்தின் அடக்குமுறையை ஆசீர்வாதமாக எடுத்துக்கொண்டு வர்க்கப் போராட்டத்தை அடக்குவதற்கு செயல்பட்டு வருகின்ற போதிலும், தொழில்கள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான தீவிரமான தாக்குதல்களுக்கு மத்தியில் புதிய வர்க்கப் போராட்டங்கள் உருவாகி வருகின்றன. இது உலகளவில் வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியுடன் பிணைந்த ஒரு வளர்ச்சியாகும். அஞ்சல் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் அதன் ஒரு பகுதியாகும்.

தபால் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, சர்வதேச நாணய நிதியத்தால் ஆணையிடப்பட்ட தனியார்மயமாக்கல் உள்ளிட்ட தாக்குதல்களை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் உண்மையான நிகழ்ச்சி நிரல் ஆகும். சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளின்படி, அரசாங்கம் பொதுச் செலவுகளைக் குறைத்து 2020 இற்குள் வரவு செலவுப் பற்றாக்குறையை நூற்றுக்கு 3.5 சதவீதம் குறைக்க வேண்டும். இதன் காரணமாக தொழிலாள வர்க்கத்தின் வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிடப்படும். தபால் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள், முழு தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக முதலாளித்துவ அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும்.