Print Version|Feedback
Amid revelations of fascist network at Customs and Border Protection
Ocasio-Cortez, other Congress members threatened by border police
சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பில் பாசிச வலையமைப்பு இருப்பது வெளிப்படுவதன் மத்தியில்
ஒக்காசியோ-கோர்டெஸூம், ஏனைய காங்கிரஸ் உறுப்பினர்களும் எல்லை பாதுகாப்பு பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டனர்
By Barry Grey
3 July 2019
காங்கிரஸில் உள்ள ஹிஸ்பானிக் பிரிவின் ஒரு டசினுக்கு அதிகமான உறுப்பினர்கள் அடங்கிய பிரதிநிதிகளின் குழு, டெக்சாஸில் உள்ள புலம்பெயர்வு தடுப்புக்காவல் மையங்களுக்கு திங்களன்று விஜயம் செய்தபோது, எல்லை ரோந்து முகவர்களிடம் இருந்து பாதுகாப்பற்ற தன்மையை உணர்ந்ததாகவும், அவதூறுகளுக்கும் பரிகசிப்புக்களுக்கும் முகம் கொடுத்ததாகவும் அக்குழு கூறியது.
ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களில் பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்டெஸூம் இதில் அடங்குவார், இவர் சுங்க மற்றும் எல்லை ரோந்து (Customs and Border Patrol-CBP) முகவர்களின் இரகசிய முகநூல் பக்கத்தின் பாலியல் ஆபாசமான மற்றும் வன்முறையான இடுகைகளில் குறிப்பாக குறிவைக்கப்பட்டு வந்தார் என்பது ProPublica அமைப்பின் திங்கள்கிழமை வெளியீட்டின் மூலம் அம்பலமானது.
தடுப்புக் காவல் மையங்களுக்கான அவர்களின் சுற்றுப்பயணத்தின் போது, டெக்சாஸின் எல் பாசோ மற்றும் கிளின்ட் நகரில் உள்ள எல்லை ரோந்து நிலையங்களில் உள்ள பெண் கைதிகளின் கொடூரமான நிலைமைகள் மற்றும் அவர்கள் மீதான துன்புறுத்தல்கள் பற்றி இவ் அங்கத்தவர்கள் தெரிவித்தனர். அந்த மையங்களில் எல்லை ரோந்து முகவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களை ஆத்திரமூட்டும் வகையில் நடத்திய விதமானது, முகநூல் பக்க இடுகைகளில் வெளிப்படுத்தப்பட்டதான தற்போதைய மற்றும் முன்னாள் CBP முகவர்களின் பாசிச உணர்வுகள் குடிவரவுபிரிவு அமைப்புக்கள் எங்கிலும் பரவலாக காணப்படுவதை நிரூபிக்கின்றது. ஜனநாயகக் கட்சியின் உடந்தையுடன் ஜனாதிபதி ட்ரம்ப், மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கும் துன்புறுத்துவதற்குமான அவரது உந்துதலின் ஒரு பகுதியாக இந்த சக்திகளை வளர்த்தும் ஊக்குவித்தும் வருகிறார்.
இது, புலம்பெயர்ந்தோர் மீதான பரந்த மக்கள் அனுதாபத்தையும் மற்றும் புலம்பெயர்ந்தோர் சித்திரவதை முகாம்கள் அமைக்கப்படுவதற்கு எதிரான எதிர்ப்பையும் எதிர்கொள்கையில் செயற்படுத்தப்பட்டு வருகிறது. ட்ரம்பின் புலம்பெயர்வு எதிர்ப்பு மற்றும் சர்வாதிகார நடவடிக்கைகள் மீதான பரந்த விரோதப்போக்கு குறித்த ஒரு சிறிய பிரதிபலிப்பாக, செவ்வாயன்று, புலம்பெயர்ந்தோர் முகாம்களை மூடுமாறு கோரிக்கை விடுத்து நாடெங்கிலுமாக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
டெக்சாஸில், மெக்கெல்லன் நகரில் உள்ள எல்லை ரோந்து தடுப்புக்காவல் மையத்தில் அளவுக்கு அதிகமாக நெரிசலாக அடைத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த குடும்பங்கள் [OIG க்கு நன்றி]
அனைத்திற்கும் மேலாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் நலன்களைக் கீழறுப்பதும் மற்றும் பெருநிறுவன கட்டுப்பாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேற அச்சுறுத்துவதான பரந்த சமூக எதிர்ப்பின் வெளிப்பாடு குறித்து ஜனநாயகக் கட்சியினர் அச்சமடைகின்றனர். அவர்கள், ஒக்காசியோ-கோர்டெஸ் போன்ற “முற்போக்குவாதிகள்” என்று அழைக்கப்படுபவர்கள் உட்பட, புலம்பெயர்தோர் மீதான போருக்கு எதிராக இதுவரை பெரிதும் ஊக்கமற்று இருக்கும் எதிர்ப்பைத் அணிதிரட்டுவதற்கு கூட எதையும் செய்யவில்லை.
திங்களன்று எல்லையில் நடந்த இந்த நிகழ்வு, ட்ரம்பினது எல்லை போருக்கு நிதியளிக்க அவரது நிர்வாகத்திற்கு 4.9 பில்லியன் டாலர் கூடுதல் நிதியை வழங்கி இரு கட்சி நடவடிக்கைகளை நிறைவேற்றுவதை ஜனநாயகக் கட்சி உறுதி செய்த சில நாட்களுக்குப் பின்னர் நடந்தேறியது, புலம்பெயர்ந்தோர் தடுப்புக்காவல் நிலையங்களில் உள்ள நிலைமைகளை மேம்படுத்துவதற்கான ஒரு “மனிதாபிமான” விருப்பத்தால் இது ஊக்குவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் நிறைவேற்றுதலை உறுதி செய்வதற்காக, சபாநாயகர் நான்சி பெலோசியை சந்தித்ததற்குப் பின்னர் எல்லை நிதியளிப்பு நடவடிக்கையை கொண்டு வருவதற்கு சபை வாக்கெடுப்புக்கு விட ஒக்காசியோ-கோர்டெஸ் ஒப்புக்கொண்டார்.
ஜனநாயகக் கட்சியினரின் இந்த மனிதாபிமான சாக்குப்போக்கு என்பது, திங்கள்கிழமை எல்லை முகவர்களின் அச்சுறுத்தும் நடத்தை, அத்துடன், நிதி மசோதாவில் கையெழுத்திடுவது தொடர்பாக, லிங்கன் நினைவிடத்தில் ஜூலை 4 அன்று நடைபெறும் இராணுவவாத கொண்டாட்டத்தை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தவர்களை கைது செய்யவும் பின்னர் நாடுகடத்தவும் என முக்கிய நகரங்களில் இராணுவ பாணியிலான திடீர் சோதனைகளைத் தொடர்வதற்கு அவர் திட்டமிடுகிறார் என்ற ட்ரம்பின் கூற்று ஆகியவற்றின் மூலம் சிதறிப்போனது.
இதற்கிடையில், மத்திய அமெரிக்காவில் நிலவும் வறுமை மற்றும் வன்முறையில் இருந்து தப்பியோடும் தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திங்களன்று இரவு, புலம்பெயர்வு மற்றும் சுங்க அமலாக்கம் (Immigration and Customs Enforcement-ICE), அதன் காவலில் இருந்த 30 வயதான ஹோண்டுராஸை சேர்ந்த நபர் ஒருவர் ஞாயிறன்று ஹூஸ்டன் பகுதி மருத்துவமனை ஒன்றில் இறந்தார் என அறிவித்தது. Yimi Alexis Balderramos-Torres என்ற அவர் அக்டோபர் 1 க்கு பின்னர் ICE காவலில் இறந்த ஆறாவது நபராவார்.
டெக்சாஸில், மெக்கெல்லன் நகரில் உள்ள எல்லை ரோந்து தடுப்புக்காவல் மையத்தில் அளவுக்கு அதிகமாக நெரிசலாக அடைத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த குடும்பங்கள் [OIG க்கு நன்றி]
திங்களன்று எல் பாசோவில் உள்ள எல்லை ரோந்து நிலையத்திலிருந்து வெளியேறிய பின்னர், ஒக்காசியோ-கோர்டெஸ் இவ்வாறு ட்வீட் செய்தார்: “முதலாவது CBP மையத்தை விட்டு இப்போதுதான் வெளியேறினேன். CBP அதிகாரிகள் உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் என்னை ஏன் அச்சுறுத்தி வந்தார்கள் என்பதை நான் பார்க்கிறேன். அதிகாரிகள் சிறைக்கூடத்தில் பெண்மணிகளை தண்ணீரின்றி வைத்திருந்தனர் என்பதுடன், கழிவறையிலிருக்கும் நீரை குடிக்கும்படி கூறினார்கள். இது அவர்களுக்கு காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு முன்னால் அவர்களின் நன்னடத்தையாக இருந்தது.”
அவர் செய்தியாளர்களிடம், “அந்த மையத்தில் உள்ள அதிகாரிகளிடம் இருந்து நான் பாதுகாப்பாக இருக்கவில்லை” என்று கூறினார். காங்கிரஸ் பிரதிநிதிகள் குழுவின் ஏனைய உறுப்பினர்கள், CBP மற்றும் எல்லை ரோந்து முகவர்கள் சட்டமன்ற அங்கத்தவர்களைப் பார்த்து சிரிக்கிறார்கள் என்பதுடன், பின்னணியில் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் செல்ஃபியும் எடுத்துக் கொள்கிறார்கள் என்று விவரித்தனர் என்றார்.
பாசிச முகநூல் இடுகைகள் குறித்தோ அல்லது எல்லை முகவர்களின் ஆத்திரமூட்டும் நடத்தைகள் குறித்தோ கண்டிப்பதற்கு ட்ரம்ப் மறுத்துவிட்டார். வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஹோகன் கிட்லி, “அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்டெஸ் எதைப் பற்றி பேசுகிறார் என்பது எனக்குத் தெரியாது” என்று ஃபாக்ஸ் பிசினஸ் வலையமைப்பிற்கு தெரிவித்தார். மேலும், CBP முகவர்கள் என்பவர்கள் “கிரகத்தில் உள்ள சில துணிச்சலான ஆண்கள் மற்றும் பெண்களாவர்” என்று அவர் குறிப்பிட்டதுடன், “சட்டவிரோதமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் இங்கிருக்கும் மக்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவையும், இடையில் இரண்டு தின்பண்டங்களையும் அவர்கள் வழங்குகின்றனர்” என்றும் சேர்த்துக் கூறினார்.
ஒரு ஃபாக்ஸ் நியூஸ் அறிக்கை, எல்லை முகவர்கள் குறித்து “அச்சுறுத்தும் விதத்தில்” காங்கிரஸ் பெண்மணி “அலறுகிறார்” என்று குற்றம்சாட்டியது.
இதற்கு செவ்வாயன்று, ஒகாசியோ-கோர்டெஸ் இவ்வாறு ட்வீட் செய்து பதிலிறுத்தார்: “அவர்கள் என்னால் “அச்சுறுத்தப்பட்டதாக” உணர்ந்தனர் என்ற CBP அதிகாரிகளின் கூற்றுக்கு – எனது சுற்றுப்பயணத்தில் என்னைத் தாக்கிய ஒரு அதிகாரிக்கு உதவி நிதி ஐ உருவாக்குவது பற்றி உண்மையில் அவர்கள் விவாதித்தனர்.”
ProPublica வெளியீடு, குறைந்தது ஒரு மேற்பார்வையாளரை அடையாளம் காணும் வகையில், “காவலில் இருக்கும் வெளிநாட்டினருக்கான,” சட்ட அமலாக்க குறியீடான “I’m 10-15” என்று அழைக்கப்படும் CBP முகநூல் குழுவில் சுமார் 9,500 உறுப்பினர்கள் இருக்கின்றனர் என்று குறிப்பிட்டது. புலம்பெயர்ந்தோர் இறப்புகள் மற்றும் பாலியல் ரீதியான புகைப்படங்கள் பற்றிய வக்கிரமான மற்றும் இனவெறிமிக்க நகைச்சுவைகளை இந்தப் பக்கம் வழங்கியது, அதில் ஒரு புகைப்படம் ஒக்காசியோ-கோர்டெஸின் முகத்தை புன்னகைக்கும் ட்ரம்பின் கால்களுக்கு இடையே தள்ளுவது போல இருப்பதும் அடங்கும். மேலும் பிற இடுகைகள், ஜனநாயகக் கட்சியின் சட்டமற்ற உறுப்பினரான பெண்களை “விபச்சாரிகள்” என்று அழைத்ததுடன், பார்வையிடும் ஹிஸ்பானிக் பிரிவு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது மெக்சிக்கோ உணவான புரிட்டோக்களை வீசுமாறு முகவர்களை வலியுறுத்தின.
எல்லை நிலையங்களுக்கான திங்கள்கிழமை சுற்றுப்பயணத்தின் போது, ஹிஸ்பானிக் பிரிவின் தலைவரான பிரதிநிதி ஜோவாகின் காஸ்ட்ரோ, எல் பாசோவில் ஒரு நிலையத்தில் தடுப்புக்காவலின்போது தரையில் அமர்ந்திருக்கும் பல பெண்கள் கொண்ட காணொளியை ட்வீட் செய்தார், அவர்களில் ஒருவர் அவருக்கு மருந்து கொடுப்பதற்கு மறுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். அங்கு பெண்கள், குளிக்கும்வசதியை அல்லது ஓடும் நீரை பல வாரங்கள் அணுகமுடியாமல் 50 நாட்கள் வரை நிரப்பிய சிறைக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் விவரித்தார்.
ஒரே சிறைக்கூடத்தில் உள்ள பெண்கள் “அனைவரும், தண்டிக்கப்படுதல், நோய், விரக்தி, தூக்கமின்மை, அதிர்ச்சி, போன்றவை குறித்த பயத்தில் தேம்ப ஆரம்பித்தனர்” என்று ஒக்காசியோ-கோர்டெஸ் ட்வீட் செய்தார். பிரதிநிதி மடெலின் டீன், 50 மற்றும் 60 வயதான 15 பெண்கள் ஒரு சிறிய கான்கிரீட் சிறைக்கூடத்தில் தூங்குகின்றனர் என்பதுடன், அவர்கள் அனைவரும் அவர்களது குடும்பங்களிலிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளனர் என்று விவரித்தார்.
பெண் கைதிகள், காவலர்கள் அவர்களை எல்லா நேரங்களிலும் எழுப்பி “வேசிகள்” என்று அழைப்பதாக காங்கிரஸ் உறுப்பினர்களிடம் கூறினர்.
இந்த நிலைமைகள் பனிப்பாறையின் வெறும் முனை போன்றதுதான். CBP மற்றும் ICE இரண்டின் தாய் முகமையான, உள்நாட்டு பாதுகாப்புத் துறையை சேர்ந்த தலைமையதிகாரி ஜெனரல், எல் பாசோ பகுதி எல்லை நிலையத்திற்கு மே 7 அன்று மேற்கொண்ட சுற்றுப்பயணம் பற்றி திங்களன்று வெளியிட்ட ஒரு அறிக்கை, 756 புலம்பெயர்ந்தவர்களுக்கு வெறும் நான்கு குளிக்கும்வசதி மட்டுமே அங்கிருப்பதைக் கண்டறிந்தது. அதிலும், தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோரில் பாதிப் பேர் டெக்சாஸ் வெப்பத்தில் வெளியே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள், அதே வேளையில், சிறைக்கூடங்களுக்கு உள்ளிருப்பவர்களோ அந்த இடத்தின் கொள்ளளவைக் காட்டிலும் ஐந்து மடங்கிற்கு அதிகமானவர்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
கைதிகள் பல வாரங்களுக்கு அழுக்கடைந்த ஆடைகளை அணிவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு வந்தனர் என்பதுடன், இந்த மையம் பேன்களால் பாதிக்கப்பட்டிருந்தது, மேலும் காய்ச்சல், சின்னம்மை மற்றும் சிரங்கு போன்றவற்றால் அங்கிருந்தவர்கள் எதிர்பாராவகையில் பாதிக்கப்பட்டனர். கலகங்கள் எழுவதற்கான சாத்தியப்பாட்டிற்கு எதிராக எல்லை முகவர்கள் தங்களை ஆயுதபாணிகளாக்கிக் கொண்டிருந்தார்கள் என்றும் இது எச்சரித்தது.
புலம்பெயர்ந்தோரை வரவிடாமல் தடுக்க வேண்டுமென்றே இந்த கொடூரமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு வருகின்றன என்பதை இந்த அறிக்கை தெளிவுபடுத்தியது. மேலும் இவ்வாறு தெரிவித்தது: “[எல்லை ரோந்து படை] ஒற்றை பெரியவர்களை நீண்ட காலம் தடுத்து வைப்பது குறித்த ஒரு மனிதாபிமான பிரச்சினை இருப்பதை அங்கீகரிக்கின்றனர், ஆனால் குற்றம்சாட்டுதல் அல்லது ICE தடுப்புக்காவல் என்ற வகையிலான ஒரு முறையை அவர்கள் கொண்டிருக்கவில்லை என்று நம்பப்படுகின்ற நிலையில், புலம்பெயர்வோர் வருகை அதிகரிக்கும்.” என குறிப்பிட்டது.
CBP மையங்களில் சங்கிலி-இணைப்பிற்கு பின்னால் நெரிசல் மிகுந்த நிலையில் நிற்கும் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் அடங்கிய புகைப்படங்களை உள்ளடக்கிய தலைமையதிகாரி ஜெனரலின் ஒரு மேம்படுத்தப்பட்ட அறிக்கை செவ்வாயன்று வெளிவந்தது. இது, இந்த நிலைமையை ஒரு “வெடிக்கத்தயாரான நேர வெடிகுண்டு” என்று அழைத்தது.
புலம்பெயர்வு முகமைகளில் உள்ள பாசிச பிரிவுகளின் முன்னெடுக்கப்படுவது வெள்ளை மாளிகையில் இருந்து இயக்கப்படுகின்றன. ட்ரம்பின் தலைமை புலம்பெயர்வு ஆலோசகர் ஸ்டீபன் மில்லர், போதிய தீவிரம் இல்லாதவர்களாக தெரியும் அதிகாரிகளை களையெடுப்பதுடன், பாரிய கைதுகள், நாடுகடத்தல்கள் மற்றும் சட்டபூர்வ புலம்பெயர்வு மீதான ஒடுக்குமுறையை ஆதரிக்கும் மற்றவர்களைக் கொண்டு அவர்களை மாற்றீடு செய்து வருகிறார்.
செயல் CBP ஆணையர் ஜோன் சாண்டர்ஸ் இராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து மேலே இருந்து வந்த அழுத்தத்தின் கீழ், அவருக்கு மாற்றீடாக சென்ற வாரம் பரிந்துரைக்கப்பட்ட மார்க் மோர்கன், ICE இன் செயல் தலைவராக இருந்தபோது அமெரிக்க நகரங்களில் வெகுஜனங்கள் மீது நடத்தப்பட்ட பாரிய திடீர் சோதனைகளுக்கான திட்டத்தின் ஆசிரியராக அவர் இருந்தார். புலம்பெயர்ந்தோரை எல்லையில் சட்டவிரோதமாக தடுத்து வைத்த விழிப்புணர்வு ஆயுதக் குழுக்களை அவர் பாதுகாத்து வந்தார் என்பதுடன், தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த குழந்தைகளின் கண்களூடாகப் பார்க்க முடிகிறது என்று பெருமை பேசியதுடன், “விரைவில் அவர்கள் MS-13 கும்பல் உறுப்பினர்களாக” [தெருக்குழுக்கள்] இருப்பார்கள் என்று தனது நடவடிக்கையை பாதுகாத்தார்.
பராக் ஒபாமாவின் கீழ் CBP ஆணையராக பணியாற்றிய மோர்கன் புலம்பெயர்வு எதிர்ப்பு கொள்கையின் இரு கட்சி குணாம்சத்தை உருப்படுத்திக் காட்டுகிறார், அவரது நிர்வாகம் 3 மில்லியன் பேரை நாடுகடத்தியது, இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய எண்ணிக்கை ஆகும்.
சென்ற மாதம் Politico, மில்லரின் கூட்டாளியான ஜோட் ஜத்ரோஸ்னி (John Zadrozny) அமெரிக்க குடியுரிமை மற்றும் புலம்பெயர்வு சேவைகளின் (US Citizenship and Immigration Services-USCIS) –இது புகலிடக் கொள்கை உட்பட சட்டபூர்வ புலம்பெயர்வை கண்காணிக்கிறது- துணைத் தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் புதிதாக நிறுவப்பட்ட USCIS இயக்குனர் கென் குசினெல்லியின் அணியில் இணைவார்.
இந்த தசாப்தத்தின் தொடக்கத்தில் வேர்ஜீனிய அரச வழக்குத்தொடுனராக இருந்த குசிலென்னி, பிறப்புரிமை குடியுரிமையை முடிவுக்கு கொண்டு வருவதையும் ஆங்கிலம் பேசத் தெரியாத தொழிலாளர்களுக்கு வேலையற்றோருக்கான சலுகைகள் மறுக்கப்படுவதையும் ஆதரித்தார்.
வெளியுறவுத்துறை அதிகாரியான ஜத்ரோஸ்னி முன்னர் ட்ரம்பின் உள்நாட்டு கொள்கை கவுன்சிலில் பணியாற்றியவராவார். 2009 இல், அமெரிக்க புலம்பெயர்வு சீர்திருத்தத்திற்கான கூட்டமைப்பிற்கான (Federation for American Immigration Reform – FAIR) சட்டமன்ற ஆலோசகராக அவர் இருந்தார். தெற்கு வறுமை சட்ட மையம், FAIR ஐ ஒரு வெறுப்புக் குழுவாக வரையறுத்தது, ஏனென்றால் “வெள்ளையல்லாத புலம்பெயர்ந்தவர்கள் மீதான கடுமையான மற்றும் தவறான தாக்குதல்களை” அது தொடுத்தது.
இந்த நிகழ்வுகள் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு கூர்மையான எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புலம்பெயர்ந்தோர் மீதான போர் என்பது, மலிவு உழைப்பு கூலிகளுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்யும் அல்லது போராடும் மற்றும் ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான ஒரு வெளிப்படையான உந்துதலைக் கொண்ட தொழிலாளர்களுக்கு எதிரான அரசு வன்முறை தயாரிப்புக்கள் உட்பட ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும். ஜனநாயகக் கட்சியின் எந்தவொரு பிரிவும், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்காது, ஏனென்றால் அதற்கு முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான போராட்டம் அவசியமாகும்.
ட்ரம்பின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஜனநாயகக் கட்சியினர் எவரும், தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்கவும் மற்றும் அனைத்து தொழிலாளர்களும் அவர்கள் விரும்பும் இடத்தில் வாழவும் வேலை செய்யவும் உரிமை வழங்கவும் அழைப்பு விடுக்கவில்லை. அனைத்து தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் ஒன்றிணைப்பதற்கான அவசியமான போராட்டத்திற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் கொள்கையின் ஒரு முக்கிய பகுதியாக இது உள்ளது.