Print Version|Feedback
පාස්කු ප්රහාරයෙන් පසු අහිංසක මුස්ලිම් ජනයා ඉවබව නැතිව අත්අඩංගුවට ගැනුනු බව සනාථ වෙයි
இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் அப்பாவி முஸ்லிம்கள் கண்மூடித்தனமாக கைது செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது
By Sakuna Jayawardane
1 July 2019
அண்மையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட "அப்பாவிகள்" என அடையாளம் காணப்பட்ட நபர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு அறிவித்தார்.
ஜனாதிபதியின் இந்த கருத்தானது அரசாங்கத்தின் அணுசரனையுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட முஸ்லீம் விரோத வன்முறைகள் சம்பந்தமாக வளரும் வெகுஜன எதிர்ப்பைத் தடுக்கும் நோக்கமாக இருந்தபோதிலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கண்மூடித்தனமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதையே அம்பலப்படுத்தியுள்ளது.
"உயிர்த்த ஞாயிறு தாக்குதலிலுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக" கைது செய்யப்பட்ட 2,289 பேரில் 1,820 பேர் முஸ்லிம்கள் என்றும் அதில் 1,665 பேர் விடுவிக்கப்பட்டதாகவும் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ருவான் குணசேகர சமீபத்தில் தெரிவித்தார். குணசேகரவின் கூற்றுப்படி, மீதமுள்ள 634 பேர் விளக்க மறியலிலும் பொலிஸ் காவலிலும் உள்ளனர். விளக்கமறியலில் உள்ள 423 பேரில் 358 பேர் முஸ்லிம்கள் ஆவர்.
ஜேடிஎஸ் லங்கா இணையத் தளத்தின் படி, குற்றப் புலணாய்வுத் துறையின் பயங்கரவாத புலனாய்வு பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப் படை, விமானப்படை, தேசிய புலனாய்வு தகவல் பணியகம் மற்றும் உள்ளூர் பொலிசாராலும் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பல்லேகேலவில் தும்பர, கேகாலை உட்பட பல சிறைச்சாலைகளிலேயே ஏராளமான முஸ்லிம்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இந்த வலைத் தளம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், மே 27 அன்று சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம், வெலிசர கெமுனு கடற்படை முகாமை ஒரு தடுப்பு மையமாக குறித்ததுடன் அங்கும் இவர்களில் ஒரு பகுதியினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு சிறிசேன நேரடியாக பொறுப்பாகிறார். முஸ்லீம் விரோத பிரச்சாரத்தின் முன்னணியில் உள்ள அவர், முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் மற்றும் பர்காவையும் கூட தடை செய்தார்.
சிறிசேன தலைமையிலான அரசாங்கமே, பயங்கரவாத தாக்குதலை உடனடியாக பற்றிக்கொண்டு, அவசரகால நிலையை அமல்படுத்தி, குற்றச்சாட்டுகள் இன்றி மக்களை கைது செய்யவும், தேடுதல் ஆணை இல்லாமல் தேடுதல் நடத்தவும், நச்சுத்தனமான அதிகாரங்களை பொலிசுக்கும் இராணுவத்திற்கும் வழங்கியது. இதற்கு மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உட்பட முதலாளித்துவ ஸ்தாபகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் முழுமையாக ஆதரித்தன.
குற்றச்சாட்டு இன்றி கைது செய்யப்பட்டவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கானவர்கள் விடுதலையானது, இந்த கண்மூடித்தனமான கைதுகள் எந்த முன் விசாரணைகளும் இன்றி மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது.
முப்பது ஆண்டுகால இனவாத யுத்தத்தின் போது, இந்த கொடுரமான சட்டங்களையே பயன்படுத்திக்கொண்டு, கண்மூடித்தனமான கைதுகள், விசாரணையின்றி நீண்டகாலமாக தடுத்து வைத்தல் மற்றும் நீதிமன்றத்தில் பயன்படுத்தக் கூடிய ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுவதற்கு சித்திரவதைகளைப் பயன்படுத்துதல் போன்ற கொடூரமான ஜனநயாக விரோத நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதில் ஒரு மோசமான வரலாற்றை இலங்கையின் அரசு மற்றும் இராணுவம் கொண்டுள்ளது. இனவாதப் போரின்போது கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் இன்னமும் குற்றச்சாட்டுகள் இன்றி விசாரணையின்றி சிறைகளில் தவிக்கின்றனர்.
ஏப்ரல் 21 அன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து முஸ்லிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறைப் பிரச்சாரத்தின்போது மேற்கொள்ளப்பட்ட இந்த கைது நடவடிக்கைகளில் வைத்தியர் ஷியாப்தீன் சாஃபி கைது செய்யப்பட்டிருப்பதும் மிகவும் குறிப்பிடத்தக்கது. அவரது சொத்துக்கள் குறித்து மேலும் விசாரிப்பதாகக் கூறியே மே 24 அன்று அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் இப்போது அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த மகப்பேற்று மருத்துவ நிபுணர் "சிசேரியன்" அறுவை சிகிச்சைகள் செய்யும்போது, சிங்கள பெண்களுக்கு கருத்தடை செய்ததாக பொய்யாக குற்றம் சாட்டி, ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகமும் முஸ்லீம் எதிர்ப்பு பிரச்சாரத்தை உயர்த்தின. இருப்பினும், ஜூன் 27 அன்று, பொலிஸ் குற்றவியல் புலனாய்வு பிரிவானது, சாஃபியின் நிதி முறைகேடு மற்றும் கருத்தடை செய்தமை தொடர்பாக நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று குருநாகல் நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்தது.
அரசாங்கம் உட்பட முழு அரசியல் ஸ்தாபகமும் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்கள் குறித்து அறிந்திருந்த அதேவேளை, அவர்கள் அதை வேண்டுமென்றே அனுமதித்தனர். "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" மற்றும் "தேசிய பாதுகாப்பு" என்ற போலிக்காரணத்தின் கீழ், அரசாங்கமானது அரசியல் ஸ்தாபகத்தில் அனைத்து கட்சிகளதும் ஒத்துழைப்புடன், உடனடியாக அவசரகால விதிமுறைகளை நிறைவேற்றி, ஒரு பொலிஸ் அரசை நோக்கி முன்சென்றது.
"பயங்கரவாத" மற்றும் "பயங்கரவாத தாக்குதல்களுக்கு" முஸ்லீம் சமூகமே காரணம் என்று கூறி, அரசாங்கமும் ஸ்தாபகத்தின் பிற கட்சிகளும் தூண்டிவிட்ட விஷமத்தனமான முஸ்லிம் விரோதத்தின் மத்தியிலேயே, ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். சிங்கள பௌத்த இனவாதத்தின் வன்முறைச் செயல்கள் காரணமாக நீர்கொழும்பில் தங்கியிருந்த பல முஸ்லீம் அகதிகள் அங்கிருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர்.
மே 13 அன்று, குருநாகல் மாவட்டத்தில் குலியாபிட்டி மற்றும் ஹெட்டிபொல பகுதிகளிலும், கம்பாஹா மாவட்டத்தில் மினுவங்கொட மற்றும் முஸ்லீம் கிராமங்களிலும் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் மீது இனவெறி தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன.
முஸ்லீம் சந்தைகளை புறக்கணிக்க வேண்டும் என சிங்கள பௌத்த பேரினவாதிகள் மேற்கொண்ட நீண்டகால பிரச்சாரம் புதிய சுற்றில் தூண்டப்பட்டுள்ளது. இந்த நிலைமையில், வெண்ணப்புவ பிரதேச சபையின் தலைவர் சுசாந்த பெரேரா, ஜூன் 24 அன்று, தன்கொடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு ஒரு கடிம் எழுதி, "அமைதியான சூழலைப் பாதுகாப்பதற்காக, முஸ்லீம் வர்த்தக சமூகத்தை தன்கொடுவ வாராந்திர சந்தையில் தற்காலிகமாக வர்த்தகம் செய்ய தடை விதிக்க வேண்டும்” என்று கோரினார்.
இந்த முஸ்லீம்-விரோத பாரபட்சங்களின் மிக முக்கியமானது என்னவெனில், கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் சார்பாக பெரும்பான்மையான சிங்கள வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாடுவதைப் புறக்கணிப்பதாகும்.
இருப்பினும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி மே 13 அன்று கைது செய்யப்பட்ட சிங்களவர்களைப் பொறுத்தவரை சிங்கள வழக்கறிஞர்களின் நடைமுறை முற்றிலும் வேறுபட்டதாகும். சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க வேண்டாம் என்று பொலிஸ் நிகவரட்டிய நீதிமன்றத்தில் கோரிய போது, அதை வழக்கறிஞர்கள் எதிர்த்திருந்தனர்.
இலங்கையின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் தீபிகா உடகம, இந்த ஜனநாயக விரோத மற்றும் நெறிமுறையற்ற நடைமுறைகளை விமர்சித்து இலங்கையின் சட்டத்தரணிகள் மன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
உடகம எழுதியதாவது: "இத்தகைய சமத்துவமற்ற நடவடிக்கைகள், இலங்கையின் அரசியலமைப்பின் கீழ் வரும் சட்டத்தின் மூலம் சமமான பாதுகாப்பைப் பெறுவதற்குரிய வாய்ப்பு எமது குடிமக்களில் சிலருக்கு கிடைக்காமல் போகின்றது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்."
"இது எங்கள் சட்டத் தொழிலின் முக்கிய மதிப்புகள் கேள்விக்குள்ளாக்கப்படும் ஒரு பாரதூரமான சந்தர்ப்பமாகும்," என அவர் மேலும் எழுதியுள்ளார்.
"தேசிய பாதுகாப்பு" என்ற பெயரில் ஒரு பொலிஸ் அரசை நோக்கிய அரசாங்கத்தின் நகர்வுகளின் மற்றும் முஸ்லீம்-விரோத பிரச்சாரத்தின் உண்மையான நோக்கம், சர்வதேச அளவில் வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாக அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக இலங்கையில் வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டங்களை நசுக்குவதும், தொழிலாள வர்க்கத்தை இன அடிப்படையில் பிளவுபடுத்தி பலவீனப்படுத்துவதும் ஆகும்.