Print Version|Feedback
Fourth of July 2019: Militarism and the specter of dictatorship
ஜூலை நான்கு 2019: இராணுவவாதமும் சர்வாதிகார பேராபத்தும்
Patrick Martin
4 July 2019
வெளிநாட்டு அபாயத்திற்கு எதிரான பாதுகாப்பு வழிவகைகள் என்பது எப்போதுமே உள்நாட்டில் சர்வாதிகாரத்திற்கான கருவிகளாக இருந்துள்ளன. இது, ரோமர்கள் ஆட்சியின்போது, எப்போதெல்லாம் ஒரு கிளர்ச்சி ஏற்படுமென உணரப்படுகிறதோ அப்போதெல்லாம் ஒரு போரைத் தூண்டுவதற்கு நிலையான பொதுவிதியாக இருந்தது. மொத்த ஐரோப்பா எங்கிலும், பாதுகாக்கிறோம் என்ற சாக்குப்போக்கின் கீழ் நிலைநிறுத்தப்பட்ட ஆயுதப்படைகள் மக்களை அடிமைப்படுத்தி உள்ளன. (ஜேம்ஸ் மாடிசன், ஜூன் 1787)
வாஷிங்டனில் இன்று உத்தியோகப்பூர்வ ஜூலை நான்கு கொண்டாட்டம் முன்னொருபோதும் இல்லாதளவில் இராணுவத்தின் பிரசன்னத்தால் குறிக்கப்பட உள்ளது, அதேவேளையில் இதன் பின்புலத்தில், ட்ரம்ப்பின் பிரதான பிரச்சாரத்தில் பங்ககெடுப்பவர்கள் உட்பட அரசியலுடன் தொடர்புபட்ட முக்கிய பிரமுகர்களின் பார்வையாளர்களை நோக்கி ட்ரம்ப் ஓர் உரை வழங்குவார்.
ட்ரம்பினது உத்தரவுகளின் பேரில், இரண்டு M1-A1 ஆப்ராம்ஸ் டாங்கிகள் மற்றும் இரண்டு பிராட்லெ சண்டையிடும் வாகனங்கள் (கவச வாகனங்கள்) ஆகியவை அந்நிகழ்வுக்காக ஜோர்ஜியாவின் ஸ்டீவர்ட் கோட்டையிலிருந்து அனுப்பப்பட்டன. ரயில்சாலை வாகனங்கள் மற்றும் நீண்ட நெடிய ட்ரக்குகள் மூலமாக நகர்த்தப்படும் இத்தகைய பாரிய போர் துணைக்கருவிகள் போக்குவரத்தை முடக்காமல் இருப்பதற்காக நள்ளிரவு வாஷிங்டனுக்குள் நுழையும் என்கின்ற நிலையில், இது தான் பல நாட்களாக அமெரிக்க தொலைக்காட்சி செய்திகளை ஆக்கிரமித்துள்ளது.
இந்த வாகனங்கள் இடம் பெயர்த்தப்படாமல் லிங்கன் ஞாபகார்த்த மண்டபத்திற்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளன ஏனென்றால் அவற்றை Constitution Avenue அல்லது வேறு எந்த வீதியின் வழியாகவும் செலுத்த முடியாதவாறு மிகவும் பாரமானவையாகும். அவற்றின் பிரசன்னம் ஒரு முக்கிய அரசியல் நோக்கத்திற்குச் சேவையாற்றுகிறது: அதாவது, வாஷிங்டனில் ஜூலை நான்கு கொண்டாட்டத்திற்கு ஒரு இராணுவவாத மற்றும் ஒடுக்குமுறை தன்மையை வழங்குவதற்காக ஆகும். 2003 இல் பாக்தாத்திற்குள் அவற்றின் வழி நெடுகிலும் வன்தாக்குதல் நடத்திய இந்த வாகனங்கள், புலம்பெயர்ந்தோர்-விரோத ஒடுக்குமுறை மற்றும் வன்முறையை அடிப்படையாக கொண்டு ஒரு பாசிசவாத இயக்கத்தைக் கட்டமைப்பதற்கான ட்ரம்பினது அரசியல் முயற்சிகளுக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்டுள்ளன.
ட்ரம்ப் உரையாற்றுகையில் அவருக்கு வான்வழி பாதுகாப்பும் வழங்கப்பட உள்ளது. சிஎன்என் உடன் பேசிய பென்டகன் ஆதாரநபர்களின் தகவல்படி, நாடெங்கிலும் இருந்து போர்விமானங்கள் பறந்து வரும். கலிபோர்னியாவின் கடற்படை விமானத்தளம் லீமூர் இல் இருந்து கடற்படையின் F-35C விமானங்கள்; கென்டக்கியின் காம்ப்பெல் கோட்டையில் இருந்து துப்பாக்கி குண்டுகள்-சுடும் அப்பாச்சி ஹெலிகாப்டர்; மிசொரியின் வொயிட்மென் விமானப்படை தளத்திலிருந்து B-2 கண்டறியவியலா குண்டுவீசிகள்; மற்றும் புளோரிடாவின் பென்சகோலாவின் கடற்படை விமானத்தளத்தில் இருந்து "புளூ ஏஞ்சல்ஸ்" F/A-18 விமானங்கள் ஆகியவை அவற்றில் உள்ளடங்கி இருக்கும். F-22 ரப்டார்ஸ், VC-25s, செங்குத்தாக எழவும் இறங்கவும் கூடிய ஓஸ்ப்ரே விமானங்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான F/A-18s உட்பட மற்ற போர்விமானங்கள் வேர்ஜீனியா மற்றும் மேரிலாந்தின் அண்மையிலுள்ள தளங்களில் இருந்து வரும்.
இந்த “அமெரிக்காவுக்கு வீரவணக்கம்" என்பது வானவேடிக்கைகள் தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக அந்தி மாலையில் திட்டமிடப்பட்டுள்ளது. குடியரசு கட்சியின் தேசிய குழு மற்றும் ட்ரம்ப் மறுதேர்வு பிரச்சாரக் குழு மூலமாக வினியோகிக்கப்பட்ட நுழைவுச்சீட்டுக்களுடன் நெடுமேடைக்கு அருகில் அமர்ந்திருக்கும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆயிரக் கணக்கான இராணுவச் சிப்பாய்களை உள்ளடக்கிய மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு ட்ரம்ப் அவர் கருத்துக்களை வழங்குவார். நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள் பென்டகனுக்கு 5,000 நுழைவுச்சீட்டுக்கள் வழங்கி இருந்தனர்.
இந்நிகழ்வின் இராணுவவாத தன்மையை மீளவலுப்படுத்த, ட்ரம்ப் இராணுவ தலைவர்களின் அணிவகுப்புடன் ஒரு அரங்கில் இணைந்திருப்பார். படைத் தலைமை தளபதிகளின் ஐந்து உறுப்பினர்களில் நால்வர் கலந்து கொள்ளவில்லை என்றாலும்—ட்ரம்பின் ஏவலர்களாக காட்டப்படுவதைத் தவிர்ப்பதாக கலந்து கொள்ளவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன—அவர்களின் துணை-அதிகாரிகளும் ஏனைய பல இராணுவ அதிகாரிகளும் மற்றும் பென்டகன் நிர்வாகப்பணி அதிகாரிகளும் ட்ரம்ப் சொற்பொழிவின் போது உற்சாகமூட்டும் பிரிவில் சேவையாற்றுவார்கள்.
ஜூலை நான்கு 2019 ஓர் அரசியல் வெற்றிடத்தில் நடக்கவில்லை. ட்ரம்ப் அமெரிக்க-மெக்சிகோ எல்லைக்கு இராணுவத்தை அனுப்பிய பின்னர் முப்படைகளின் தலைமை தளபதியாக அவரின் பாத்திரத்தை ஸ்திரப்படுத்தி வருகிறார், அங்கே அவர் புலம்பெயர்ந்த கைதிகளுக்கான தடுப்பு முகாம்களை அமைக்க சிப்பாய்கள் மற்றும் எல்லையோர காவல்படைகள் இரண்டையும் பயன்படுத்தி வருகிறார். அவரின் எல்லைச்சுவர் கட்டுவதற்கு, காங்கிரஸை எதிர்த்து பென்டகன் நிதியைப் பயன்படுத்துவதற்காக "தேசிய அவசரநிலையை" பிரகடனப்படுத்தி உள்ளார். புலம்பெயர்ந்தோர்-விரோத இனவாதத்தில் மூழ்கிய பாசிசவாத உயிர்ப்பிப்புடனும் அவரின் அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக வன்முறைக்கு அழைப்புவிட்டும் அவர் தனது மறுதேர்வு பிரச்சாரத்தைச் சமீபத்தில் தொடங்கியுள்ளார்.
ட்ரம்பின் அரசியல் திட்டநிரல் ஆழமாக மக்கள் மதிப்பிழந்துள்ளது. அவர் தொழிலாள வர்க்கத்தில் போர்குணமிக்க புதிய எழுச்சிகளை முகங்கொடுக்கிறார், இவை ஆசிரியர்கள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களில் வெளிப்பட்டன. ஈரானுக்கு எதிரான போரை நோக்கிய அவர் நகர்வுகளுக்கும் அங்கே பரந்த மக்கள் எதிர்ப்பு உள்ளது. தஞ்சம் கோருவோர்கள் மற்றும் அகதிகளுக்கு அங்கே பரந்த ஆதரவு உள்ளதுடன், அவர்கள் வக்கிரமாக கையாளப்படுவதன் மீதும் சீற்றம் உள்ளது.
இதனால் தான் நிர்வாகம் அதிகரித்தளவில் அதன் அரசியல் உயிர்வாழ்வை பாரம்பரிய தேர்தல் அரசியல் மீது அமைக்காமல், மாறாக பொலிஸ்-இராணுவ எந்திரத்தின் மீது அமைக்க முயல்கிறது.
ட்ரம்ப் அவரின் சமீபத்திய ட்வீட் சேதிகளில் ஒன்றில், “உலகில் வேறெந்த இடத்திலும் இல்லாத மிக பலமான மற்றும் மிகவும் நவீன இராணுவத்தை ... அமெரிக்க மக்களுக்கு காட்டுவதே" டாங்கிகள் மற்றும் போர்விமானங்களைக் காட்சிப்படுத்துவதன் நோக்கம் என்று அறிவித்தார். இது உள்நோக்கமின்றி பின்வரும் கருத்தை வெளிப்படுத்துகிறது: இந்த ஆயுத காட்சிப்படுத்தலுக்கு இலக்கில் உள்ள பார்வையாளர்கள் சாத்தியமான வெளிநாட்டு விரோதிகள் இல்லை, மாறாக அமெரிக்க மக்கள் தான். அப்பட்டமாக இதைக் குறிப்பிடுவதானால், படைகளின் காட்சிப்படுத்தலை ட்ரம்ப் நடத்துவதற்கான நோக்கம், சாத்தியமான உள்நாட்டு எதிர்ப்பை, அதுவும் குறிப்பாக தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வரும் எதிர்ப்பை மிரட்டுவதற்காக ஆகும்.
ஜனநாயக கட்சிக்கோ அல்லது அதனுடன் அணிசேர்ந்த தாராளவாத ஊடக நிறுவனங்களுக்கோ ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிவலது போக்கை உண்மையாக எதிர்க்க தகைமை இல்லை. ஜனநாயக கட்சியினர் 2016 தேர்தல்களில் ரஷ்ய தலையீடு என்ற போலி குற்றச்சாட்டுகளுடனும் ட்ரம்ப் மாஸ்கோவின் கைக்கருவி என்று கூறியும் பிரதானமாக ட்ரம்பை வலதிலிருந்து தாக்குகின்றனர். அவர்கள் வெள்ளை மாளிகையிலிருந்து வெளிப்படும் ஜனநாயக உரிமைகள் மீதான அச்சுறுத்தலைக் குறித்து அமெரிக்க மக்களை எச்சரிக்க எந்த முயற்சியும் செய்யவில்லை.
ஜனநாயக கட்சியினர் ட்ரம்பைக் குறித்து அஞ்சுவதை விட அதிகமாக அடிமட்டத்திலிருந்து வரும் ஓர் இயக்கத்தைக் குறித்து அஞ்சுகின்றனர், ஏனென்றால் அது பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான இரண்டு கட்சிகளும் பிரதிநிதித்துவம் செய்கின்ற மற்றும் பாதுகாக்கின்ற ஆளும் உயரடுக்கின் இலாபங்கள் மற்றும் செல்வவளத்தை அச்சுறுத்தும் என்பதால் ஆகும்.
ஜனநாயக கட்சி ஜூலை 4 கேலிக்கூத்து மீதான அதன் எதிர்ப்பை செலவு குறித்து குறைகூறுவதுடன் நிறுத்தி கொண்டுள்ளது, இதே கருத்துரு ஊடகங்களாலும் முன்னெடுக்கப்படுகின்றன. ஊடக விடையிறுப்புக்கு நியூ யோர்க் டைம்ஸ் தொனி அமைத்தது, அது “ட்ரம்ப் அமெரிக்காவுக்காக அவரின் பிறந்த நாளைக் கொண்டாடட்டும்" என்று தலைப்பிட்டு, அதன் ஆசிரியர் குழு உறுப்பினரான அலெக்ஸ் கிங்ஸ்பரி எழுதிய "ஆசிரியர் பார்வை" தலையங்கத்தைப் புதன்கிழமை பிரசுரித்தது.
சுயதிருப்தி, கோழைத்தனம் மற்றும் அக்கறையின்மையுடன் அந்த தலையங்க கருத்துரை பிற்போக்கு அரசியலைக் கொண்டிருந்தது. கிங்ஸ்பரி ட்ரம்பின் ஜூலை நான்கு நிகழ்வின் முன்னொருபோதும் இல்லாத தன்மையை ஒப்புக் கொள்கிறார் என்றாலும், ட்ரம்ப் ஜனநாயக உரிமைகளுக்கு ஓர் அளப்பரிய அச்சுறுத்தல் என்பதற்கு பதிலாக ஒரு ஏளனத்திற்குரிய பிரமுகர் என்பதைப் போல அவரை நையாண்டி ஏளனங்களுடன் உதறிவிடுகிறார்.
கிங்ஸ்பரி தனது வாசகர்களுக்கு ட்ரம்ப் நிகழ்வை நிராகரிக்குமாறும், “முழுமையாக விண்ணில் விமானங்கள் பறக்க கவச வாகனங்களுடன் கூடிய அந்நிகழ்வு, அதன் சொந்த அபத்தங்கள் மற்றும் முரண்பாடுகளின் சுமையின் கீழ் சிக்கி" இருக்க விட்டுவிடுங்கள் என்று வலியுறுத்துகிறார். “நம்மில் மீதமிருப்பவர்களுக்கு, நாம் விரும்பினால் தடத்தை மாற்றுவதற்கான கடுமையாக போராடி வென்ற சுதந்திரம் இருக்கிறது,” என்று நிறைவு செய்கிறார்.
சுயதிருப்திக்குப் பின்னால், டைம்ஸ் ட்ரம்பின் இராணுவ முகஸ்துதிகளைப் பகிர்ந்து கொள்கிறது, இதை கிங்ஸ்பரி "தேசத்தின் மிகவும் நம்பிக்கைக்குரிய கட்சிசார்பற்ற அமைப்புகளில் ஒன்றாக" விவரிக்கிறார். “ஜூலை நான்காம் தேதி நமது ஜனநாயக சிந்தனைகள் மற்றும் சுதந்திரங்களின் மென்பொருட்களைக் (software) கொண்டாடுவதற்காக ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும், உலகின் மிகவும் அருமையான இராணுவத்தின் வன்பொருட்களை (hardware) கொண்டாடுவதற்காக அல்ல" என்று எச்சரித்த முன்னாள் சிஐஏ மற்றும் பென்டகன் அதிகாரி ஒருவருக்கு அவர், “ஒருவேளை இருக்கலாம். ஆனால் அமெரிக்காவுக்கு அவ்விரண்டிலும் ஆற்றல் உள்ளது,” என்று விடையிறுத்து விமர்சிக்கிறார்.
ட்ரம்பைப் போலவே ஜனநாயக கட்சியும் மற்றும் டைம்ஸூம், உள்நாடு மற்றும் வெளிநாடு இரண்டிலும், கடலளவிலான தொல்லைகளுக்கு எதிராக அதிகரித்தளவில் இராணுவத்தைக் கடைசி பாதுகாப்பு அரணாக பார்க்கும் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்காக பேசுகின்றனர். ஜனநாயகத்திற்கான நிஜமான கடமைப்பாட்டுக்கான ஒரு சாயலோ, அமெரிக்க குடியரசின் ஸ்தாபகர்களுக்கு உயிரூட்டும் எதேச்சதிகாரவாதத்திற்கு எதிரான எதிர்ப்பின் சாயலோ, அமெரிக்க ஆளும் உயரடுக்கின் எந்தவொரு பிரிவிலும் இல்லை.
ஊடகத்திற்கு உள்ளேயோ அல்லது அரசுக்கு உள்ளேயோ, மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஜேம்ஸ் மாடிசனின் வார்த்தைகள் சுய-கண்டனத்திற்கும் மேலானவை என்று யாரால் கூற முடியும்?
ஜூலை நான்கு மனித வரலாற்றில் விடுதலைக்குரிய தலைச்சிறந்த நிகழ்வுகளில் ஒன்றைக் குறிக்கிறது: அது அமெரிக்க முதலாளித்துவ ஜனநாயக புரட்சியின் ஆரம்ப அடியாக சுதந்திர பிரகடனம் வெளியிடப்பட்ட நாளாகும். இரண்டு நூற்றாண்டுகளுக்கும் அதிகமாக நிலவிய கொடுங்கோல் ஆட்சி மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடியவர்களைக் கவர்ந்திருந்த வார்த்தைகளுடன் தோமஸ் ஜெஃபர்சன் எழுதிய அந்த பிரகடனம் காலத்தால் அழியாத வரிகளாகும்.
ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றில் முதல் முறையாக அது மக்கள் புரட்சியின் உரிமையை வலியுறுத்துகிறது: “எந்தவொரு வடிவிலான அரசாங்கமும் இந்த நோக்கத்திற்கு நாசகரமாக மாறும் போது, அதை மாற்றுவதற்கும் அல்லது அதை அகற்றுவதற்கும், புதிய அரசாங்கம் அமைப்பதற்கும், அது தங்களுக்குப் பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சி கொண்டு வரக்கூடியதாக அவர்கள் கருதும் அத்தகைய கோட்பாடுகளின் மீது அதன் அடித்தளத்தை அமைப்பதற்கும் அத்தகைய வடிவில் அதன் அதிகாரத்தை ஒழுங்கமைப்பதற்கும் மக்களுக்கு உரிமை உள்ளது.”
இந்த வார்த்தைகளில், மாற்ற வேண்டியதை மாற்றி, அவற்றை அமெரிக்க சமூகத்தின் இப்போதைய நிலை மீதான ஒரு கண்டனமாக பார்க்காமல் யாரால் அவற்றை வாசிக்க முடியும்? இறுதியில், ட்ரம்பின் இராணுவவாத கொண்டாட்டம் பலத்தின் வெளிப்பாடு அல்ல, மாறாக பலவீனம் மற்றும் பயத்தின் ஒரு வெளிப்பாடாக உள்ளது. அனைத்து ஆரவார பேச்சுக்களுக்குப் பின்னால், உலகெங்கிலும், அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவுக்கு உள்ளேயே கூட, அதன் மேலாதிக்கத்திற்குச் சவால்களை முகங்கொடுக்கிறது என்பது ஆளும் வர்க்கத்திற்கு நன்றாக தெரியும்.
கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:
ஜூலை நான்காம் தேதிக்காக வாஷிங்டன் டிசியின் வீதிகளில் டாங்கிகள்
[2 July 2019]
America on the Fourth of July: From Thomas Jefferson to Donald Trump
[4 July 2018]