Print Version|Feedback
Protests in Hong Kong continue despite escalating police violence
தீவிரப்படுத்தப்பட்டு வரும் பொலிஸ் வன்முறைக்கு மத்தியிலும், ஹாங்காங்கில் போராட்டங்கள் தொடர்கின்றன
By Ben McGrath
29 July 2019
சர்ச்சைக்குரிய நாடு கடத்தல் சட்டமசோதாவை முழுமையாகத் திரும்பப் பெறுதல், தலைமை செயலர் கேரி லாமின் (Carrie Lam) இராஜினாமா, மற்றும் அனைவருக்கும் வாக்குரிமை உட்பட ஜனநாயக சீர்திருத்தங்களைத் தொடரக் கோரியும் பொலிஸ் வன்முறையைக் கண்டித்தும் ஹாங்காங்கில் தொடர்ந்து எட்டாவது வாரமாக போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்நகரமெங்கிலும் வெவ்வேறு இடங்களில் பேரணிகள் நடத்தப்பட்டன.
வெள்ளிக்கிழமை, சுமார் 15,000 பேர் ஹாங்காங் சர்வதேச விமானநிலையத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி, பரந்த சர்வதேச பார்வையாளர்களை எட்டுவதற்கான அவர்களின் முயற்சிகளை விரிவாக்கினர். அவர்கள் விமான நிலையத்தின் வந்திறங்கும் இரண்டு வளாகங்களை ஆக்கிரமித்ததுடன், துண்டறிக்கைகளை வினியோகித்தனர் மற்றும் பதாகைகளை ஏந்தியிருந்தனர். சென்ற ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போராட்டக்காரர்கள் மீது Yuen Long ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்தியதில் சம்பந்தப்பட்டுள்ள குண்டர்களை அரசு அதிகாரிகள் கைது செய்ய வேண்டுமென கோரும் மனுவில் போராட்டக்காரர்கள் 14,600 இக்கும் அதிகமான கையெழுத்துக்களையும் பெற்றிருந்தார்கள்.
ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் [ஆதாரம்: ட்வீட்டர்—டெனிஸ் ஹோ (@hoccgoomusic)]
“ஹாங்காங் குறித்து உலகிற்குத் தெரியும் விதத்தில் நாங்கள் இந்த செய்திகளைச் சுற்றுலா பயணிகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்,” என்று அப்பேரணியை ஒழுங்கமைத்தவர்களில் ஒருவரும் விமானச்சேவை சிப்பந்தியுமான ஒரு பெண்மணி South China Morning Post க்கு தெரிவித்தார். “எங்களுக்கு சர்வதேச சமூகம் அவசியப்படுகிறது. எங்களுக்காக குரல் எழுப்ப எங்களுக்கு மக்கள் தேவை. தொலைக்காட்சியில் ஒருவேளை, உங்களுக்கு முழு விபரம் தெரிந்திருக்காது, ஆனால் இங்கே எங்களிடம் காணொளிகளும் நிறைய தகவல்களும் உள்ளன, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் குறித்து விவரிக்க நாங்கள் மக்களுடன் பேசுவதற்குத் தயாராக உள்ளோம்,” என்றார்.
சிலியிலிருந்து சுற்றுப்பயணம் வந்திருந்த 24 வயதான மார்கரிடா டுகோ போராட்டக்காரர்களுக்கு அவரின் ஆதரவை வெளிப்படுத்தி கூறுகையில், “அங்கே அமைதியான வெளிப்பாடுகளின் போது அளவுக்கதிமாக வன்முறை பயன்படுத்துவதானது, என் நாட்டிலும் இது மிகவும் பொதுவானது என்பதால் என்னால் அவர்கள் எதனூடாக சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒப்பிட முடிகிறது,” என்றார்.
அப்போது தான் வேலை முடித்து திரும்பியவர்கள் உள்ளடங்கலாக விமானச் சேவை சிப்பந்திகளும் விமான நிலையப் பணியாளர்களும் அந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்தனர். ஹாங்காங்கின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமான கத்தே பசிபிக் (Cathay Pacific) விமானச் சிப்பந்திகள் தொழிற்சங்கம் குறிப்பிடுகையில் அதன் அங்கத்தவர்கள் பங்கெடுப்பதை அது ஊக்குவிப்பதாக குறிப்பிட்டது. அந்நகரில் நாடுதழுவிய ஜனநாயகவாத குழுக்களை ஆதரிக்கும் ஹாங்காங் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இந்த தொழிற்சங்கம், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகவோ அல்லது பொலிஸ் வன்முறைக்கு எதிராகவோ பரந்த தொழிலாள வர்க்க நடவடிக்கையை ஒழுங்கமைக்கவில்லை.
விமானச் சிப்பந்தியான 29 வயதான மெர்ல் யெங் கூறுகையில் முக்கியமாக போராட்டக்காரர்களைக் குறித்த மக்களின் எண்ணத்தைச் சிதறடிக்க வேறெதுவும் அல்ல வன்முறையே பயன்படுத்தப்படுகிறது என்றார். “அவர்களுக்குச் சிந்தனையே இல்லை, அவர்கள் ஒருதலைபட்சமாக மட்டுமே தகவல்களைப் பெறுகிறார்கள். ஒரு போராட்டத்திற்கு, ஒரு பேரணிக்கு வரும் ஒவ்வொருவரும் மொத்தத்தில் கலகக்காரர்கள் என்றும் அல்லது ஹாங்காங் சுதந்திரத்தை ஊக்குவிப்பதாகவும் அவர்கள் நினைக்கிறார்கள்.”
போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் பூர்த்திச் செய்யப்படவில்லை என்றால் அவர்கள் நடவடிக்கை எடுக்க இருப்பதாக விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் ஒரு குழு அறிவித்தது. “பண்டங்கள் ஏற்றிச் செல்வதில் உலகின் மிகவும் சுறுசுறுப்பான நுழைவாயிலாக விளங்கும் (ஹாங்காங்) விமான நிலையம், உலகின் மிகவும் சுறுசுறுப்பான பயணியர் விமான நிலையங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது,” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. செயல்பாடுகளை நிறுத்துவதென அவர்கள் முடிவெடுத்தால் அது "மிகப்பெரிய பொருளாதார இழப்பாக" இருக்குமென அது எச்சரித்தது.
கூடுதல் ஆர்ப்பாட்டங்கள் சனிக்கிழமை யென் லாங்கில் நடக்கவிருக்கின்றன. பேரணி ஒழுங்கமைப்பாளர்கள் கொவ்லூனில் திட்டமிட்டிருந்த ஒரு அணிவகுப்பை நகரத்திற்கு மாற்றினர், ஆனால் பொலிஸ் அனுமதி வழங்கவில்லை. பெய்ஜிங்-ஆதரவாளரான சட்ட வகுப்பாளர் ஜூனியஸ் ஹோவுடன் இணைந்துள்ள குண்டர்கள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலுக்கு எதிராக போராட்டக்காரர்கள் பேசினர்.
மாலை சுமார் 2:30 இக்குத் தொடங்கிய அந்த பேரணியில் பங்கெடுத்தவர்களின் எண்ணிக்கை 300,000 வரை அதிகரித்தது. மாலை 5:30 வாக்கில், பொலிஸ் கூட்டத்தின் மீது கண்ணீர் புகைகுண்டுகள் மற்றும் இரப்பர் தோட்டாக்களை வீசி, போராட்டக்காரர்களைக் கலைக்க நகர்ந்தனர். பொலிஸ் அதன் வன்முறையைக் கூர்மையாக தீவிரப்படுத்துவதை நியாயப்படுத்துவதற்காக, அதிகாரிகள், அணிவகுப்பாளர்களை வன்முறையானவர்கள் என்றும், இரும்பு குழாய்களை அல்லது பிற அப்பட்டமான ஆயுதங்களைப் பிடித்திருந்ததாகவும் சித்தரிக்க முயன்றனர். மாலை நேர முடிவில், கலைந்து சென்று கொண்டிருந்த போராட்டக்காரர்கள் மீது பொலிஸ் தடியடி பிரயோகம் செய்தது.
18 வயதான ஓர் ஆர்ப்பாட்டக்காரர் மாத்திவ் லாம் அக்காட்சி குறித்து விவரித்து கூறுகையில், “பொலிஸ் எந்தவொரு எச்சரிக்கையும் இல்லாமல் விரைந்தது. அவர்கள் அடித்தார்கள் அடித்துக் கொண்டே இருந்தார்கள், அவர்கள் குறைந்தபட்சம் 20 நொடிகளாவது தொடர்ந்து போராட்டக்காரர்களையும் சாதாரண மக்களையும் அடித்துக் கொண்டிருந்தார்கள்,” என்றார். மொத்தத்தில், 24 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர், காயமடைந்தவர்களில் 15 இல் இருந்து 60 வயதானவர்கள் இருந்தனர். கூடுதலாக கைது செய்யப்பட்ட 13 பேரில் 18 இல் இருந்து 68 வயதானவர்கள் இருந்தனர்.
சர்வதேச பொதுமன்னிப்பு சபை அந்த பொலிஸ் வன்முறையைக் கண்டித்ததுடன், அந்த வன்முறைக்குப் போராட்டக்காரர்கள் தான் பொறுப்பு என்ற வாதங்களை மறுத்தது. சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் ஹாங்காங் இயக்குனர் மன்-கெ டாம் கூறுகையில், “இங்கே இன்று மீண்டும் மீண்டும் நடந்த சம்பவங்களில் பொலிஸ் அதிகாரிகள் தான் ஆக்ரோஷமாக இருந்தனர்; போராட்டக்காரர்களை அடித்து ஓடவிட்டனர், இரயில் நிலையத்தில் அப்பாவி மக்களைத் தாக்கினர், பத்திரிகையாளர்களை இலக்கு வைத்தனர்,” என்று கூறிய அவர், “இதுபோன்றவொரு இரும்புக்கரம் கொண்ட விடையிறுப்பு இப்போது ஹாங்காங் பொலிஸின் வழக்கமான ஒன்றாக தெரிகிறது, அவர்கள் விரைவாக போக்கை மாற்றிக் கொள்ள வேண்டுமென நாங்கள் வலியுறுத்துகிறோம்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
ஞாயிற்றுக்கிழமை பத்தாயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்ட ஒரு சிறிய ஆர்ப்பாட்டத்தின் போதும் இதேபோன்ற காட்சிகள் தென்பட்டன, மத்திய மாவட்டத்தின் சாட்டெர் பூங்காவில் தொடங்கிய அந்த ஆர்ப்பாட்டமும் பொலிஸ் வன்முறையைக் கண்டிப்பதற்காக இருந்தது. பெய்ஜிங்கின் தகவல் தொடர்பு அலுவலகத்திற்கு அருகே Sheung Wan இல் இரண்டாவது ஆர்ப்பாட்டத்திற்கான கோரிக்கையைப் பொலிஸ் நிராகரித்திருந்தது. பெய்ஜிங்கின் தகவல் தொடர்பு அலுவலகத்தில் கடந்த வாரம் ஒரு சில நூறு ஆர்ப்பாட்டக்காரர்கள் அதைச் சுற்றி வளைத்து அக்கட்டிட சுவர்களில் கிறுக்கி வைத்தனர். கடந்த வார அந்த ஒன்றுதிரள்வின் போது போராட்டக்காரர்களின் பெரும் விகிதத்தினர் மீது கண்ணீர் புகைகுண்டுகள் மற்றும் இரப்பர் தோட்டாக்களைக் கொண்டு பொலிஸ் விடையிறுத்திருந்தது.
நேற்றைய சாட்டெர் பூங்கா பேரணிக்குப் பின்னர், பொலிஸ் தடுத்து நிறுத்துவதற்கு முன்னதாக அண்மித்து 200 போராட்டக்காரர்கள் தகவல் தொடர்பு அலுவலகத்தை நோக்கி அணிவகுக்க தொடங்கினர். ஒரு மிகப்பெரிய குழு காஸ்வே பே வியாபார மாவட்டத்தை நோக்கி அணிவகுத்தது. அணிவகுத்தவர்களைக் கலைக்க பொலிஸ் மீண்டும் கண்ணீர் புகைக்குண்டுகளைப் பயன்படுத்தியது.
“ஹாங்காங்கை மீளக்கோரு, நமது காலத்திய புரட்சி,” என்று 2016 தேர்தலில் எட்வார்ட் லென்ங் (Edward Leung) பயன்படுத்திய அதே வரிகள் உட்பட, பல கோஷங்களைப் பேரணியில் பங்கெடுத்தவர்களில் சிலர் முழங்கினர். லென்ங் வலதுசாரி, பேரினவாத அமைப்பான ஹாங்காங் பழங்குடியினர் அமைப்பைச் (Hong Kong Indigenous) சேர்ந்தவர், இது Civic Passion போன்ற இதே மாதிரியான வலதுசாரி குழுக்களுடன் சேர்ந்து ஹாங்காங் சுதந்திரத்திற்கு வக்காலத்து வாங்குகிறது. இத்தகைய உருவாக்கங்கள், குழந்தைகள் உள்ளடங்கலாக சீன பெருநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஹாங்காங் கலாச்சாரத்தை அழித்து வருவதாக அவர்களைக் குற்றஞ்சாட்டியும், அந்நகரமெங்கிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முகங்கொடுக்கும் பொருளாதார நெருக்கடிக்கு அவர்கள் மீது பழிசுமத்தியும், அவர்களைப் பலிக்கடா ஆக்கி வருகின்றன.
Civic Passion மற்றும் Hong Kong Indigenous அமைப்புகள் ஒரு பெருங்கூட்டத்தில் ஒப்பீட்டளவில் வெறும் மிகச் சிறிய அரசியல் போக்காக உள்ளன, ஆனால் ஒழுங்கமைப்பற்ற இந்த இயக்கங்களில் சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஆட்சி மற்றும் ஹாங்காங்கின் பெய்ஜிங்-ஆதரவு நிர்வாகத்தால் அச்சுறுத்தப்படும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க தீர்மானகரமாக இருக்கும் இளைஞர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் பங்குபற்றி உள்ளனர். விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் தொழில்துறை நடவடிக்கை அச்சுறுத்தல் தொழிலாள வர்க்கம் இதில் இறங்குவதையும், வறுமை, சுகாதாரம் மற்றும் வீட்டுவசதியின்மை, மற்றும் உயர்ந்த வாழ்க்கை செலவுகள் குறித்த ஆழ்ந்த சமூக அக்கறைகளையும் சுட்டிக்காட்டுகிறது.
ஹாங்காங்கில் இந்த இயக்கமானது, அரசாங்கங்களின் சிக்கன திட்டநிரல் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் மிகப் பரந்த மேலெழுச்சியின் பாகமாகும். அந்நகர மக்கள்தொகையின் கணிசமான விகிதத்தினர் இறங்கியுள்ள ஹாங்காங் போராட்டங்கள் உறுதியாக நீடித்திருப்பது பிரான்சில் நீண்டகாலமாக நடந்து வரும் "மஞ்சள் சீருடை" போராட்டங்கள் மற்றும் போர்த்தோ ரிக்கோவில் ஆளுநர் ரிகார்டோ ரொசெல்லோவைப் பதவியிலிருந்து விரட்டிய மிகப்பெரும் பேரணிகளுக்குச் சமாந்தரமாக உள்ளது.
ஹாங்காங் போராட்டங்களில் எண்ணிக்கையும் போர்குணமும் நிறைந்திருந்தாலும், அவற்றுக்கு ஒரு தெளிவான அரசியல் முன்னோக்கு இல்லை. பெரும்பாலான போராட்டக்காரர்கள் Civic Passion மற்றும் Hong Kong Indigenous போன்ற தீவிர வலது குழுக்களின் சீன-விரோத பேரினவாதத்தை நிராகரித்தாலும், சீனப் பெருநிலத்திலிருந்து ஹாங்காங்கின் கலாச்சாரத்தைப் பிரித்து பாதுகாக்க கோரும், ஹாங்காங்கின் உள்ளூர்தன்மை என்றழைக்கப்படுவதைப் பாதுகாப்பதற்காக என்பது ஓர் அரசியல் முட்டுச்சந்தாகவே உள்ளது.
ஹாங்காங் போராட்டங்களை ஒடுக்க இராணுவத்தைப் பயன்படுத்துவதற்குக் கடந்த வாரம் சீனா வெளியிட்ட அச்சுறுத்தலானது, தொழிலாளர்கள் ஒடுக்குமுறையான சமூக நிலைமைகளையும் மற்றும் அவர்களின் ஜனநாயக உரிமைகள் ஈவிரக்கமின்றி ஒடுக்கப்படுவதையும் முகங்கொடுக்கும் சீனப் பெருநிலத்தின் தொழிலாள வர்க்கத்தையும் மற்றும் ஹாங்காங்கின் தொழிலாள வர்க்கத்தையும் ஐக்கியப்படுத்துவதற்கான ஓர் அரசியல் போராட்டத்தின் அவசியத்தை அடிக்கோடிடுகிறது. முதலாளித்துவத்தின் மோசமடைந்து வரும் நெருக்கடியின் பாதிப்புக்கு எதிராக அதுபோன்றவொரு போராட்டம் சர்வதேசியவாத சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் என்பதோடு, ஸ்ராலினிசம் மற்றும் மாவோயிசத்திற்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்று போராட்டங்களது படிப்பினைகளையும் அடித்தளத்தில் கொண்டிருக்க வேண்டும்.