Print Version|Feedback
“Water has been made a commodity for profit”—Chennai residents speak out on city’s water crisis
“இலாபத்திற்கான ஒரு பண்டமாக தண்ணீர் மாற்றப்பட்டுள்ளது.” - நகரத்தின் தண்ணீர் பிரச்சனை குறித்து சென்னை குடியிருப்பாளர்கள் பேசுகிறார்கள்
By a WSWS Reporting Team
25 June 2019
உலக சோசலிச வலைத்தள நிருபர்கள் இந்தியாவின் நான்காவது பெரிய பெருநகரமான சென்னையின் கடுமையான தண்ணீர் நெருக்கடி பற்றி வேளச்சேரி மற்றும் வியாசர்பாடி பகுதிகளிலுள்ள தொழிலாளர்களுடனும் மற்றும் வறிய குடிசைவாசிகளுடனும் பேசினர்.
கோபமும் சீற்றமும் அவர்களின் குரல்களில் ஒலித்தன, தண்ணீர் பிரச்சனைக்கு மத்திய மற்றும் மாநில அளவில் இருக்கும் பெரும் கட்சிகளிலிருக்கும் முதலாளித்துவ அரசியல்வாதிகளை அப்பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டினர்.
ஒரு முக்கிய தேவையான தண்ணீரை வழங்குவதற்கு தவறியிருப்பதானது முதலாளித்துவ அமைப்பின் இயலாமையை தெளிவுபடுத்தியிருக்கிறது எனவும் முதலாளித்துவ தன்னலக்குழுவை வளப்படுத்துவதற்காக அல்லாமல் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு, சமூக பொருளாதார வாழ்க்கையை மாற்றியமைப்பதற்காக ஒரு தொழிலாளர்களின் அரசாங்கம் தேவையாக இருக்கிறது என உலக சோசலிச வலைத்தள நிருபர்கள் அவர்களிடம் விளங்கப்படுத்தினர்.
ஹசீனா
வியாசர்பாடி பிற்படுத்தப்பட்ட குடியிருப்பொன்றில் இருக்கும் ஒரு குடும்ப நிர்வாகியான ஹசீனா, 31, தண்ணீர் பற்றாக்குறை குறித்த மக்களின் கோபத்திற்கு அதிகாரிகளின் சிடுமூஞ்சித்தனமான விடையிறுப்புகள் பற்றி உலக சோசலிச வளைத் தளத்திற்கு கூறினார். “உள்ளூர் அதிகாரிகளை கேள்வி கேட்பதற்காக இந்தப் பகுதியின் மக்களுடன் சேர்ந்து நான் போயிருந்தேன். அதற்கு அங்கிருந்த அதிகாரி எல்லா இடமும் மோசமான தண்ணீர் பற்றாக்குறையிருக்கிறது, ஒவ்வொரு நாளும் இப்பொழுது இருப்பதுபோல் தண்ணீர் வழங்குவது தொடரும் என்று கூறினார். ஓடுகிற தண்ணீரில் கழிவுநீர் கலந்திருப்பதை பற்றி புகார் அளித்தபோது நான் அதுபற்றி அறிந்திருக்கவில்லை என்று கூறியதுடன் எங்களுக்கு மேலும் அதிக தண்ணீர் தேவை என்றால் தனியார் டேங்கர்களால் வழங்கப்படும் தண்ணீருக்கு அதிக கட்டணம் செலுத்துவதன் மூலம் அதைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஆணவத்துடன் கூறினார். ”
தண்ணீர் டேங்கர்கள் ஒரு குடம் தண்ணீரை 3 இலிருந்து 4 ரூபாய்க்கு விற்கிறார்கள். எங்களுக்கு இது பெரும் செலவாக இருக்கிறது, நாங்கள் இவ்வளவு பெரிய தொகையை இலகுவாக கொடுக்க முடியாது. ஏனென்றால் தினசரி சாப்பாட்டைக்கூட வாங்கமுடியாத நிலையில் பெரும்பாலான மக்கள் இருப்பதால் அதை வாங்குவதில்லை என்று ஹசினா விவரித்தார்.
இங்கே பொதுவாக மக்கள் ஒருவருக்கொருவர் நல்லவர்களாகவும் நட்பாகவும் இருக்கிறார்கள். என்று அவர் தொடர்ந்தார். “இருப்பினும் தண்ணீரைப் பிடிப்பதற்கு வரிசையில் நிற்கும்போது வாதங்கள் வரும் மேலும் சிலசமயங்களில் கடுமையான வார்த்தைகள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன”.
“அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அவர்களுடைய அரசாங்கங்கள் பணக்காரர்களுக்கு தான் சேவகம் செய்கின்றன மற்றும் ஏழை மக்களின் அவல நிலைகுறித்து அலட்சியத்துடன் இருக்கிறார்கள்” என்று சேர்த்து கூறினார். “நீங்கள் கூறியதுபோல் ஸ்டெர்லைட் நிறுவனம் மாநில மின்சார வாரியத்திற்கு 10 கோடி (100 மில்லியன்) கொடுக்கவேண்டும் அவர்கள்மீது அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காது. ஆனால் நாம் மின்சாரத்துக்கான பணத்தை செலுத்தவில்லையென்றால் அவர்கள் பியுசைக் கழற்றிவிடுவதுடன் மின் இணைப்பையும் துண்டித்துவிடுவார்கள்”.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியால் இந்து பேரினவாத குண்டர்கள் பாதுக்காக்கப்படுவதால் இதில் முஸ்லிம் சிறுபான்மையினர் அச்சுறுத்தப்படுகிறார்கள் இந்த நிலமைகளின் கீழ் பாதுகாப்பின்மையான ஒரு உணர்வை அவர் பிரதிபலித்தார்; “ மோடியின் பெயரைக் கேட்கும்போதே எனக்கு பயமாக இருக்கிறது. மோடி இந்துத்துவாவைப் பற்றி பேசுகிறார் மேலும் குஜராத்தில் (அப்போது அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது) இரண்டாயிரம் அப்பாவி முஸ்லிம்களை கொலைசெய்வதற்கு பொறுப்பாளியாவார், அவர் எனது சொந்த விருப்பத்தை தடைசெய்கிறார். பர்கா அணிவது அல்லது அணியாமல் விடுவது எனது சொந்த விருப்பம். ஆனால் அதனைத் தடைசெய்வதற்கு முயற்சிகள் செய்கிறார்.” என்று ஹசீனா கூறினார்.
“மாற்றம் கட்டாயம் வரவேண்டும். ஒரு சோசலிச மாற்றீட்டிற்கான உங்களுடைய வேலைத்திட்டமிருப்பதால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் மற்ற எந்த கட்சிகளும் இதைப்பற்றிப் பேசவில்லை . ஒரு தொழிலாளர்களின் சோசலிச அரசாங்கத்தை அமைப்பதற்கான உங்கள் கட்சியின் போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன்” என்று அவர் சேர்த்துக் கூறினார்.
உமா மகேஸ்வரி
உமா மகேஸ்வரி 39, ஒரு குடும்ப நிர்வாகி, “உங்களுடைய கருத்துக்களை நான் புதிதாக பார்க்கிறேன். பொதுவாக பத்திரிகையாளர்கள் செய்திகளை சேகரிப்பார்கள், போய்விடுவார்கள். ஆனால் நீங்க இந்த தண்ணீர் பிரச்சனைக்கான மூலகாரணத்தை விளக்கிக்கொண்டிருக்கிறீர்கள் மேலும் இது ஒரு சமூக நெருக்கடியாக பார்க்கவேண்டும் என்று கூறுகிறீர்கள். சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, மிக அடிப்படையான தண்ணீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அடுத்தடுத்துவந்த அரசாங்கங்கள் தவறி விட்டன. இங்கே அஇஅதிமுக மற்றும் திமுக (பிராந்திய போட்டி முதலாளித்துவ கட்சிகள்) அரசாங்கங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அவைகள் இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கு எதுவும் செய்ய தவறிவிட்டன” என்று கூறினார்.
பிரவீனா, 28, ஒரு ஒப்பந்த மருத்துவ ஊழியர், “உங்களுடைய உலக சோசலிச வலைத் தளம் மற்றவைகளிடமிருந்து வேறாகத் தெரிகிறது. நீங்கள் தண்ணீர் பிரச்சனையை ஒரு பெருகிவரும் சமூகப் பிரச்சனையாகப் பார்க்கிறீர்கள். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். ஆனால் மக்களுக்காக பேச இங்கே கட்சி இல்லை. ஒரு அரசாங்க கல்விநிலையத்தில் நான் ஒப்பந்த அடிப்படையில் மாதம் 8,000 ரூபாய் [114 அமெரிக்க டாலர்] சம்பளத்துக்கு வேலை செய்கிறேன். எனது கணவர் ஹூன்டாய் ஷோரூம் ஒன்றில் வேலை செய்கிறார். சிலநேரங்களில் நாங்கள் தண்ணீர் பிடிப்பதற்கு யார் லீவு எடுப்பது என்பதில் சன்டைபிடிக்கிறோம். இந்த தண்ணீர் பிரச்சனையால் நாங்கள் சரியாக தூங்குவதில்லை.” என்று கூறினார்.
“உங்களுடைய சர்வதேசக் கட்சியைப்பற்றி நாங்கள் தெரிந்துகொள்வது இதுதான் முதல் முறையாக இருக்கிறது. சோசலிச கொள்கைகளை அடிப்படையாகக்கொண்ட தொழிலாளர்களின் அரசாங்கத்தை அமைப்பதற்கான உங்களுடைய திட்டத்தை வரவேற்கிறோம். அனைவருக்கும் சமூக சமத்துவத்தை உருவாக்கும் எண்ணத்தை நான் விரும்புகிறேன். ”
எங்களுடைய நிருபர்கள் வேளச்சேரியில் குடிசைவாசிகளிடமும் பேசினார்கள்.
ஆட்டோ ஓட்டுநர் சரவணன்
சரவணன், 42, ஒரு ஆட்டோ ஓட்டுநர், ஒரு நாளைக்கு சராசரியாக 500 ரூபாய் [7.20 அமெரிக்க டாலர்] சம்பாதிக்கும் அவர் தண்ணீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு மாநில அரசாங்கம் செயலிழந்துவிட்டது என்று சுட்டிக்காட்டினார், மேலும் ”2015 இல் செம்பரம்பாக்கம் அணை திறக்கப்பட்டதால் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது. தண்ணீரை வெற்றிகரமாக சேமித்திருந்தால் தற்போது பிரச்சனை வந்திருக்காது. இப்போது இலாபத்துக்கான ஒரு பொருளாக தண்ணீர் உருவாக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டார்.
“இப்படியான அரசாங்கங்கள் பெரும் வணிகத்திற்கும் பெரு நிறுவனங்களுக்காகவே இருக்கின்றன. அதற்கு உதாரணமாக வால்மார்ட் மற்றும் அமசன் போன்ற பெரும் வணிக நிறுவனங்களுக்காக கடைகளை 24 மணிநேரமும் இயங்கும் அனுமதியை அளிக்கும் சட்டம் மற்றும் பணத்தின் மதிப்பை நீக்குதல் (2016 இல் மோடி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது) மூலம் நான் உட்பட பலருடைய வாழ்க்கையை அழித்துவிட்டது. பெரும் நிறுவனங்கள் தான் எங்களுடைய எதிரிகள். அவை வெளியே போக வேண்டும்! நீங்கள் சொன்னதைப் போன்று சோசலிச எண்ணங்கள் மற்றும் சோசலிச அரசாங்கத்தை நான் வரவேற்கிறேன்” என்று கூறினார்.
சரவணன் இரண்டு பிரதான ஸ்ராலினிச பாராளுமன்றக் கட்சிளை - (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ))- விமர்சித்தார். ”அவர்கள் கம்யூனிஸ்ட்கள் என நினைத்து சிபிஎம் இன் தொழிற்சங்க கூட்டமைப்பான சிஐடியு வில் இணைந்தேன்.“ஆனால் தற்போது அவர்கள் குண்டர்களைப் போல ஆகிவிட்டார்கள். தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்க்க தலையிடுவதற்காக இலஞ்சம் கேட்கிறார்கள்.” என்று கூறினார்.
ரமேஷ், 26, ஒரு வங்கி ஊழியர், தண்ணீர் பிரச்சனைக்கான “தீர்வுகள்” என்ற பெயரில் நாம் தமிழர் கட்சியைப் போன்ற மோசமான தமிழ் பேரினவாதக் கட்சிகள் விடுக்கும் வகுப்புவாத விண்ணப்பங்களை எதிர்த்தார். நாம் தமிழர் கட்சி மற்றும் மே 17 இயக்கம் போன்ற தமிழ் தேசியவாத அமைப்புகள் தமிழ் மக்களின் எதிரிகளாக கர்நாடகா மற்றும் கேரளா (இரண்டும் பக்கத்து மாநிலங்கள்) என கூறுகிறார்கள். ஆனால் எந்த தொழிலாளியும் இன்னொருவருக்கு எதிரியல்ல. நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்தப் பகுதியில் ஒரு ஏரியை சுத்தம் செய்வதற்கு வந்தார்கள். ஆனால் ஏரியைச் சுத்தம் செய்வதன் மூலம் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முடியாது. அனைவருக்கும் இலவச தண்ணீரை வழங்க தேவையான உள்கட்டமைப்பை இந்த முதலாளித்துவ அமைப்புக்குள் செய்யமுடியாது” என அவர் கூறினார்.
தேவி, 63, ஒரு விதவை, கூறினார் “இப்பொழுது ஒரு பெரும் தண்ணீர் பிரச்சனை இருக்கிறது. ஆனால் 2015 இல் வெள்ளப்பெருக்கு காரணமாக நாங்கள் பாதிக்கப்பட்டோம். அந்த நேரம் எனது மகள் கர்ப்பினியாக இருந்தார். அவர் உணவுக்காக தண்ணீரில் நீந்திப்போய் காயம்பட்டார். நான் இந்தக் பகுதிக்கு 25 வருடங்களுக்கு முன்னர் வந்தேன். அப்பொழுது இங்கே ஒரு ஏரி இருந்தது அதிலிருந்து நாங்கள் தண்ணீர் எடுத்தோம். இப்போழுது 70 சதவீத ஏரிகள் அழிக்கப்பட்டுவிட்டன மேலும் பல நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுவிட்டன. அவர்கள் பெருமளவிலான தண்ணீரை உறிஞ்சி எடுத்துவிடுகின்றனர்”.
அவருக்கு ஆளும் அஇஅதிமுக அல்லது எதிர்கட்சியான திமுக மீது நம்பிக்கையில்லை. இந்தக் கட்சிகள் எங்களுக்கானது அல்ல” என்று அவர் கூறினார்.
நித்தியா அவரது சகோதரியுடன்
நித்தியா, 28, ஒரு கணக்காளர், “தண்ணீர் இலவசம் என்று அரசாங்கம் சொல்கிறது ஆனால் தண்ணீர் பெறுவதற்கு நாங்கள் மாதம் 100 ரூபாய் செலுத்துகிறோம். அரசாங்கம், ஒரு வணிகவளாகம் மற்றும் படகு இல்லம் கட்டுவதற்கான திட்டத்துடன் உள்ள நிலையில், எங்கள் வீட்டிலிருந்து எங்களை அகற்றுவதற்கு முயற்சிக்கிறது. மற்ற இடங்களிலிருந்து என்னுடைய பணிபுரியும் இடத்திற்கு செல்வது கடினம். எங்களுக்காக எந்த அரசாங்கமும் இல்லை. சோசலிசம் குறித்த உங்களது கருத்து நல்லது மேலும் ஊக்கமளிக்கிறது.” என்று விவரித்தார்.
முருகன், 25, இராமேஸ்வரத்திலிருந்து இங்குவந்து தற்காலிக அடிப்படையில் உபர் கால்டாக்ஸியில் வேலைசெய்கிறார். “உபருக்காக ஒரு நாளில், 25 டெலிவரிகளை செய்கிறோம். நாங்கள் 1000 ரூபாய் (14.40 அமெரிக்க டாலர்) பெறுகிறோம். கோடைகாலங்களில் உடல் வறட்சியினால் 4 இலிருந்து 5 பாட்டில் தண்ணீரைக் குடிக்கிறோம். மேலும் இதற்காக தினமும் 100 ரூபாய் செலவாகிறது. தண்ணீர் ஒரு விற்பனைக்கான ஒரு சரக்காக மாற்றப்பட்டுள்ளது.” என்று அவர் கூறினார்.