ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

CHAPTER FIVE

The Soviet Thermidor

அத்தியாயம் ஐந்து

சோவியத் தேர்மிடோர்

 

ஸ்ராலின் வெற்றி பெற முடிந்தது ஏன்

தலையாய பிரச்சினைகள் மீதான ஆளும் அதிகாரத்துவத்தின் கொள்கை என்பது முன்னுக்குப் பின் முரணான ஊசலாட்டங்களின் தொடர்ச்சியாகவே இருந்து வந்திருக்கிறது என்ற முடிவுக்கு சோவியத் ஒன்றியம் பற்றிய ஒரு வரலாற்றாசிரியர் வராமலிருக்க முடியாது. அவற்றை "மாறும் காலச்சூழ்நிலைகளின்" மூலம் விளக்குவதற்கான அல்லது நியாயப்படுத்துவதற்கான முயற்சி எதுவும் விமர்சனரீதியாக தாக்குப் பிடிக்க முடியாது. வழிகாட்டுவது என்றால், சற்றேனும் தொலைநோக்கு திறனை கொண்டிருந்தாக வேண்டும். ஸ்ராலின் கன்னைகள் விளைவுகள் ஒவ்வொருமுறையும் தலைக்குமேல் போனபின் நிகழ்வுகளின் தவிர்க்கவியலாத விளைவுகளை சற்றும் முன்ஊகித்துப் பார்த்திருக்கவில்லை; வெறும் நிர்வாக ரீதியான உணர்திறன்களைக் கொண்டுதான் அவர்கள் ஒவ்வொரு முறையும் எதிர்வினையாற்றியிருக்கிறார்கள். அடுத்தடுத்த ஒவ்வொரு திருப்பத்திற்குமான தத்துவம், உண்மை கண்முன்னே வந்ததிற்குப் பின்னால் உருவாக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதுடன் அச்சமயத்தில் நேற்று வரை தாங்கள் உபதேசித்துக் கொண்டிருந்தவை குறித்து அவர்கள் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை. அதே மறுக்கவியலாத உண்மைகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் தான் அந்த வரலாற்றாளர், இடது எதிர்ப்பாளர்கள் எனப்பட்டவர்கள்தான் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் குறித்த கூடுதல் துல்லியமான மற்றும் சரியான பகுப்பாய்வை அளித்தனர், அத்துடன் அவற்றின் மேலதிக அபிவிருத்தியையும் மிக அதிக சரியான விதத்தில் முன்கணித்திருந்தனர் என்ற முடிவுக்கு வரத் தள்ளப்படுவார்.

தொலைநோக்குப் பார்வையில்லாதிருந்த கன்னை தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருந்தது, அதேசமயத்தில் ஊடுருவும் பார்வை கொண்ட குழு தோல்வி மேல் தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருந்தது என்ற சாதாரண உண்மை முதல் பார்வையில் அந்த திடமான கூற்றுடன் முரண்படுவதாகத் தோன்றும். ஆயினும், உடனடியாக சிந்தனையில் தோன்றும் இந்த வகை ஆட்சேபம், பகுத்தறிவுரீதியாக மட்டும் சிந்திப்பவர்களுக்கும், அரசியலை ஒரு தர்க்க ரீதியான விவாதமாக அல்லது ஒரு சதுரங்க ஆட்டமாக காண்பவர்களுக்கும் மட்டுமே வலுவுள்ளதாக தோற்றமளிக்கும். ஒரு அரசியல் போராட்டம் என்பது சாரத்தில் நலன்கள் மற்றும் சக்திகளின் போராட்டமே அன்றி, விவாதங்களுக்கான போராட்டம் அல்ல. தலைமையின் தரம் என்பது, மோதலின் விளைவினை சம்பந்தமில்லாததாகக் கூறி அலட்சியப்படுத்துவதற்கு அப்பாற்றபட்ட ஒன்று என்றாலும் அது மட்டுமே ஒரே காரணி அல்ல, இறுதிப் பகுப்பாய்வில் அது தீர்மானகரமானதும் இல்லை. மேலும், போராடும் தரப்பு ஒவ்வொன்றும் தமது தோற்றங்களுக்கு பொருத்தமான தலைவர்களையே கோருகிறது.

பிப்ரவரி புரட்சி கெரென்ஸ்கியையும் ட்செரடெல்லியையும் அதிகாரத்துக்கு கொண்டுவந்தது என்றால், அவர்கள் ஆளும் ஜார் கூட்டத்தைக் காட்டிலும் "கூடுதல் புத்திக் கூர்மையுடன்" அல்லது "கூடுதல் மேதாவித்தனத்துடன்" இருந்தார்கள் என்பதனால் அல்ல, மாறாக குறைந்தபட்சம் தற்காலிகமாகவேனும், பழைய ஆட்சிக்கு எதிராக இருந்த புரட்சிகர பரந்த வெகுஜனங்களின் பிரதிநிதிகளாக அவர்கள் இருந்தார்கள் என்பதால் தான். லெனினை தலைமறைவாக போகச்செய்யவும் பிற போல்ஷிவிக் தலைவர்களை சிறையிலடைக்கவும் கெரென்ஸ்கியால் முடிந்ததென்றால், அதற்குக் காரணம் அவர்களை விட அவர் தனிமனித குணநலன்களில் சிறந்து விளங்கியதால் அல்ல, மாறாக தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களின் பெரும்பான்மையினர் அந்த நாட்களில் இன்னும் தேசப்பற்றுமிக்க குட்டி முதலாளித்துவத்தையே பின்பற்றிக் கொண்டிருந்தார்கள் என்பதால் தான். கெரென்ஸ்கியின் தனிநபர் “மேன்மைத்தன்மையானது” —இப்படி ஒரு வார்த்தையை இது விடயமாய் உபயோகிப்பது பொருத்தமென்றால்— அவர் அறுதிப் பெரும்பான்மை என்பதற்கு அப்பால் வேறெதனையும் பார்க்கவில்லை என்ற உண்மையில் அடங்கியிருந்தது. போல்ஷிவிக்குகள் தங்களது முறை வந்தபோது குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளை வெற்றி கண்டனர் என்றால், தங்கள் தலைவர்களின் தனிமனித குணநல மேன்மைகளால் அல்ல, மாறாக சமூக சக்திகளின் ஒரு புதிய இடைத்தொடர்பின் மூலமாகவே. அதாவது, அதிருப்தியுற்றிருந்த விவசாயிகளை முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராக தலைமை ஏற்று நடத்துவதில் இறுதியில் பாட்டாளி வர்க்கம் வெற்றி பெற்றிருந்தது.

மகத்தான பிரெஞ்சுப் புரட்சியின் எழுச்சியின் போதும் மற்றும் அதன் வீழ்ச்சியின் போதும், அதன் அடுத்தடுத்த கட்டங்களில், ஒருவரை பிரதியீடு செய்த அடுத்தவர் என "தலைவர்கள்" மற்றும் "நாயகர்களின்" பலம் என்பது பிரதானமாக, அவர்களை ஆதரித்த வர்க்கங்கள் மற்றும் அடுக்குகளின் குணாம்சத்திற்கு அவர்கள் பொருந்தியிருந்த விதத்திலேயே அடங்கியிருந்தது என்பதை அக்கட்டங்கள் மிக உறுதியான முறையில் எடுத்துக்காட்டுகின்றன. இவர்கள் ஒவ்வொருவரையும் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தின் மீது தமது ஆளுமையின் முத்திரையைப் பதிக்க அனுமதித்தது இந்த பொருந்திய தன்மையே தவிர, வேறு எந்த சம்பந்தமற்ற மேன்மையும் அல்ல. அடுத்தடுத்து வந்த மீராபோ, பிரிஸ்சோ, ரொபேஸ்பியர், பார்ரஸ் மற்றும் போனபார்ட் (Mirabeau, Brissot, Robespierre, Barras and Bonaparte) ஆகியோரின் அடுத்தடுத்த உயர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த புறநிலை விதிகளே அந்த வரலாற்று நாயகர்களின் தனிச்சிறப்பான குணநலன்களை விடவும் ஒப்பிடமுடியாத அளவுக்கு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்திருக்கின்றது.

இன்று வரையிலும் ஒவ்வொரு புரட்சியையும் பின்தொடர்ந்து ஒரு பிற்போக்குத்தனமோ அல்லது இன்னும் மோசமாய் ஒரு எதிர்ப்புரட்சியோ வந்திருக்கிறது என்பது போதுமான அளவுக்கு நன்கறிந்த ஒன்றே. அது நிச்சயமாக தேசத்தை மீண்டும் அதன் ஆரம்பப் புள்ளிக்கே திருப்பி வீசிவிடவில்லை என்பது உண்மை தான், என்றாலும் எப்போதும் அது வெகுஜனங்கள் பெற்ற வெற்றிகளின் மிகப்பெரும் பகுதியை அவர்களிடம் இருந்து அபகரித்து விடுகிறது. ஒரு பொது விதியாகவே, புரட்சிகரத் தாக்குதலின் காலகட்டத்தில் பரந்த வெகுஜனங்களின் தலைமையில் இருந்த முன்னோடிகள், தொடக்கமளித்தவர்கள் மற்றும் வினையூக்கிகள் ஆகியோரே முதல் பிற்போக்குத்தன அலைக்குப் பலியாவாரோய் இருந்து வந்திருக்கின்றனர். அவர்களின் இடத்திற்கு, புரட்சியின் முன்னாள் எதிரிகளுடன் கூடிக் குலாவிய இரண்டாம் வரிசைத் தலைவர்கள் முன்னணிக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். வெளிப்பட்ட அரசியல் காட்சியில், இந்த "இரண்டாம்நிலை ஆட்டக்காரர்கள்" இடையிலான வெளிப்படையான சண்டை நடந்துகொண்டிருந்த நேரத்தில், கீழே, வர்க்கங்களுக்கு இடையிலான உறவுகளில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன, அத்துடன் அதேஅளவுக்கு முக்கியமாக, சமீபத்தில் புரட்சிகரத் தன்மை பெற்ற வெகுஜனங்களின் உளவியலில் ஆழமான மாற்றங்கள் உண்டாகியிருக்கின்றன.

போல்ஷிவிக் கட்சி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் செயல்பாடுகளுக்கு என்ன ஆனது மற்றும் அதன் புரட்சிகர முன்னெடுப்பு, சுய-தியாக மனப்பான்மை மற்றும் தாங்கள் சாமானிய மக்களெனும் பெருமிதம் ஆகிய குணங்கள் எங்கே, ஏன் அந்த இடத்தில் இத்தனை இழிநிலை, கோழைத்தனம், பயந்தாங்கொள்ளித்தனம் மற்றும் பிழைப்புவாதம் எல்லாம் வந்து சேர்ந்திருக்கின்றன என்று பல தோழர்கள் திகைப்புடன் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ரகோவ்ஸ்கி பதினெட்டாம் நூற்றாண்டின் பிரெஞ்சு புரட்சியின் வாழ்க்கைச் சரிதத்தை குறிப்பிட்டுக் காட்டினார். அபெயி (Abbaye) சிறையில் இருந்து வெளிவந்த பாபெஃவ் (Babeuf) பாரிசின் புறநகர்ப் பகுதிகளின் தீரமிக்க மக்களுக்கு என்னவாயிற்று என்று இதேபோல் ஆச்சரியப்பட்டதை உதாரணம் காட்டினார். ஒரு புரட்சி என்பது தனிமனித அளவிலும் சரி மக்கள்கூட்டத்தின் அளவிலும் சரி பெரும் அளவிலான மனித சக்தியை விழுங்கிச் செரித்து விடக்கூடிய ஒன்றாய் இருக்கிறது.

நரம்புகள் தொய்வடைகின்றன. நனவு உலுக்கப்படுகிறது, குணாதிசயங்கள் தேய்ந்து போகின்றன. புதிய சக்திகளின் வருகையின் மூலம் இந்த இழப்பை முழுமையாக ஈடுகட்ட அவகாசம் தராத வேகத்தில் நிகழ்வுகள் மிகத் துரிதகதியில் கட்டவிழ்கின்றன. பசி, வேலைவாய்ப்பின்மை, புரட்சிகர காரியாளர்களின் மரணம், நிர்வாகத்தில் இருந்து வெகுஜனங்கள் அகற்றப்பட்டமை இவையெல்லாம் சேர்ந்து பாரிஸ் புறநகர்ப் பகுதிகளின் இத்தகையதொரு சரீரரீதியான மற்றும் அறநெறிரீதியான வறுமைப்படலுக்கு இட்டுச் சென்றன. மீண்டும் ஒரு புதிய கிளர்ச்சிக்குத் தயாராவதற்கு அவர்களுக்கு மூன்று தசாப்தங்கள் தேவைப்பட்டது.

முதலாளித்துவப் புரட்சியின் விதிகள் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு “பொருந்த முடியாதவை” என்று சொல்லும் விதமாக சோவியத் இலக்கியத்தில் இருப்பவற்றிற்கு துளியும் விஞ்ஞானபூர்வ உள்ளடக்கம் இல்லை. அக்டோபர் புரட்சியின் பாட்டாளி வர்க்கத் தன்மையானது, உலக சூழ்நிலையாலும் உள்முக சக்திகளின் ஒரு தனித்துவமான இடைத்தொடர்புகளாலும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் வர்க்கங்களும் கூட ஜாரிச மற்றும் பின்தங்கிய முதலாளித்துவத்தின் காட்டுமிராண்டித்தனமான சூழ்நிலைகளுக்குள் தான் உருவாக்கம் கண்டன என்பதால் ஒரு சோசலிசப் புரட்சியின் கோரிக்கைகளுக்கேற்ப அளவெடுத்துத் தைத்தவையாக அவை இல்லை. அதற்கு நேரெதிரானதே உண்மையாக இருந்தது. பல அம்சங்களில் அப்போதும் பின்தங்கியதாக இருந்த ஒரு பாட்டாளி வர்க்கம் சில மாத கால இடைவெளியில் ஒரு பாதி நிலப்பிரபுத்துவ முடியாட்சியில் இருந்து ஒரு சோசலிச சர்வாதிகாரத்திற்கு முன்கண்டிராத ஒரு பாய்ச்சலை சாதித்திருந்த அந்த காரணத்தினால் தான், அதன் மட்டங்களில் பிற்போக்குத்தனம் தவிர்க்கமுடியாததாக இருந்தது. இந்த பிற்போக்குத்தனம் தொடர்ச்சியான அடுத்தடுத்த அலைகளில் அபிவிருத்தி கண்டிருக்கிறது. அதற்கு உரம் போடுவதில் புறநிலைமைகளும் நிகழ்வுகளும் போட்டி போட்டுக் கொண்டு செயலாற்றியிருக்கின்றன. குறுக்கீட்டைத் தொடர்ந்த குறுக்கீடாய் பின்தொடர்ந்தன. புரட்சிக்கு மேற்கில் இருந்து எந்த நேரடி உதவியும் கிட்டவில்லை.

நாட்டில் வளம் கொழிக்கும் என்று இருந்த எதிர்பார்ப்புக்கு மாறாக அச்சுறுத்தும் வறுமை நெடுங்காலத்திற்கு ஆதிக்கம் செலுத்தியது. அது தவிர, தொழிலாள வர்க்கத்தின் ஆகச்சிறந்த பிரதிநிதிகள் ஒன்று உள்நாட்டு யுத்தத்தில் இறந்து போயிருந்தனர் அல்லது சில படிகள் உயர்ந்து வெகுஜனங்களிடம் இருந்து விலகிச் சென்று விட்டிருந்தனர். இவ்வாறாக ஒப்புமை கூறமுடியாத அளவில் சக்திகளுக்கிடையேயான பதட்டமும், நம்பிக்கைகளும் மற்றும் பிரமைகளும் நிலவியதன் பின்னர், புரட்சியின் விளைவுகள் குறித்த ஒரு தளர்ச்சி, சோர்வு மற்றும் அப்பட்டமான ஏமாற்றம் ஆகியவற்றின் ஒரு நெடிய காலகட்டம் வந்து சேர்ந்திருந்தது. "சாமானியனெனும் பெருமித”த்தின் அலையெழுச்சி வீழ்ந்து பயந்தாங்கொள்ளித்தனம் மற்றும் பிழைப்புவாதம் வெள்ளமெனப் பாய்வதற்கு வழிவிட்டது. புதிய கட்டளையிடும் சாதியானது இந்த அலையின் மேலேறி அதன் இடத்தைப் பிடித்திருந்தது.

ஐந்து மில்லியன் பேர் கொண்ட செம்படையை சிதறடித்தமை அதிகாரத்துவத்தின் உருவாக்கத்தில் வகித்த பாத்திரம் கொஞ்சமும் சிறிதல்ல. வெற்றி பெற்ற தளபதிகள் உள்ளூர் சோவியத்துக்களில், பொருளாதாரத்தில், கல்வித்துறையில் தலைமைப் பதவிகளைப் பிடித்துக் கொண்டனர், உள்நாட்டு யுத்தத்தில் வெற்றியை பெற்றுத்தந்த அதே நிர்வாகமுறையை அவர்கள் ஒவ்வொரு இடத்திலும் தொடர்ந்து அறிமுகம் செய்யலாயினர். இவ்வாறாக அத்தனை பக்கங்களிலுமே வெகுஜனங்கள், நாட்டின் தலைமையில் உண்மையாகப் பங்கேற்பதில் இருந்து சிறிது சிறிதாக வெளித்தள்ளப்பட்டுக் கொண்டு வந்தனர்.

புதிய பொருளாதாரக் கொள்கை (NEP) மூலமாக புதிய வாழ்க்கை எழப் பெற்றிருந்த நகர்ப்புறத்திலும் கிராமப்புறத்திலும் இருந்த குட்டி முதலாளித்துவ தட்டுகளுக்கு, பாட்டாளி வர்க்கத்தினுள்ளான பிற்போக்குத்தனம் அசாதாரணமான நம்பிக்கையையும் மனஉறுதியையும் பெருக்கெடுக்கச் செய்தது; அத்தட்டுகள் மேலும் மேலும் துணிச்சல் பெற்றன. முதலில் பாட்டாளி வர்க்கத்தின் முகவரைப் போல எழுந்திருந்த இளம் அதிகாரத்துவம் இப்போது தன்னை வர்க்கங்களுக்கிடையேயான மத்தியஸ்தராக உணரத் தொடங்கியது. அதன் சுயாதீனம் மாதத்திற்கு மாதம் அதிகரித்துச் சென்றது.

சர்வதேச சூழ்நிலையும் பெரும் வலிமையுடன் அதே திசையில் தள்ளிக் கொண்டிருந்தது. உலகப் பாட்டாளி வர்க்கத்திற்கு ஒவ்வொரு கனமான அடி விழும்போதும் சோவியத் அதிகாரத்துவத்தின் தன்னம்பிக்கை அதிகரிக்கலாயிற்று. இந்த இரண்டு உண்மைகளுக்கும் இடையில் காலவரிசைப் பட்டியிலான தொடர்பு மட்டுமல்ல, ஒரு காரணகாரியத் தொடர்பாகவும், இரு திசைகளிலும் இயங்கிய ஒன்றாகவும் இருந்தது. அதிகாரத்துவத்தின் தலைவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் தோல்விகளுக்கு ஊக்கம் காட்டினர்; அந்தத் தோல்விகள் அதிகாரத்துவத்தின் எழுச்சிக்கு ஊக்கமளித்தன. பல்கேரியக் கிளர்ச்சி நசுக்கப்பட்டமை, ஜேர்மன் தொழிலாளர்களின் கட்சி 1923 ஆம் ஆண்டில் இழிந்த விதத்தில் பின்வாங்கியமை, 1924 ஆம் ஆண்டில் எஸ்தோனிய கிளர்ச்சி முயற்சி நிலைகுலைந்தமை, இங்கிலாந்தில் பொது வேலைநிறுத்தம் துரோகமயமான விதத்தில் கலைக்கப்பட்டமை மற்றும் போலந்தில் 1926 ஆம் ஆண்டில் பில்சுட்ஸ்கியை அமர்த்தியதில் போலந்துத் தொழிலாளர் கட்சிகளின் உதவாக்கரைத்தனமான நடத்தை, 1927 ஆம் ஆண்டில் சீனப் புரட்சி படுபயங்கர விதத்தில் படுகொலை செய்யப்பட்டமை, மற்றும் இறுதியாக ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் மிகச் சமீபத்தில் நிகழ்ந்த கூடுதல் திகிலூட்டுகின்ற சமீபத்திய தோல்விகள் —— வரலாற்றின் இந்த துயரகரமான பெருநிகழ்வுகள் தான் உலகப் புரட்சியில் சோவியத் வெகுஜனங்கள் கொண்டிருந்த நம்பிக்கையைக் கொன்றதுடன்; காப்பாற்றக் கூடிய ஒரே வெளிச்சமாக அதிகாரத்துவம் மேலும் மேலாய் உயர்ந்து செல்லவும் அனுமதித்தன.

கடந்த பதின்மூன்று வருடங்களில் உலகப் பாட்டாளி வர்க்கம் சந்தித்த தோல்விகளுக்கான காரணங்களைப் பொறுத்தவரை, ஆசிரியர் தனது ஏனைய எழுத்துக்களை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். கிரெம்ளின் தலைமையானது வெகுஜனங்களிடம் இருந்து தனிமைப்பட்டும் இப்போதுள்ள ஆழமான பழமைவாத நிலையிலும், ஒவ்வொரு நாட்டிலுமான புரட்சிகர இயக்கத்தில் ஆற்றிய நாசகரமான பாத்திரத்தை அங்கே அம்பலப்படுத்துவதற்கு ஆசிரியர் முயன்றிருக்கிறார். இவ்விடத்தில் நாம், ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் புரட்சிக்குக் கிடைத்த தொடர்ச்சியான தோல்விகள் சோவியத் ஒன்றியத்தின் சர்வதேச நிலையை பலவீனப்படுத்திய அதேவேளையில் சோவியத் அதிகாரத்துவத்தை பரந்த அளவில் வலுப்படுத்தியிருக்கிறது என்ற மறுக்கமுடியாத தெட்டத்தெளிவான உண்மையில் மட்டுமே பிரதானமாய் கவனம் குவிக்கிறோம். இந்த வரலாற்று வரிசையில் இரண்டு தேதிகள் குறிப்பாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. 1923 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில், சோவியத் தொழிலாளர்களின் கவனம் உணர்வுபூர்வமாக ஜேர்மனியை நோக்கியதாக இருந்தது, அங்கே பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றி விடும் போல் தென்பட்டது. ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி பீதியடைந்து பின்வாங்கியமையானது சோவியத்தின் உழைக்கும் மக்களுக்கு உள்ளதிலேயே மிகப்பெரும் ஏமாற்றமாக அமைந்தது. சோவியத் அதிகாரத்துவம் உடனடியாக ”நிரந்தரப் புரட்சி” தத்துவத்திற்கு எதிராக ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கி, இடது எதிர்ப்பாளர்களுக்கு தன் முதல் கொடூரமான அடியைக் கொடுத்தது. 1926 மற்றும் 1927 ஆம் ஆண்டுகளில் சோவியத் ஒன்றிய மக்கள் ஒரு புதிய நம்பிக்கை அலையை அனுபவித்தனர். இப்போது அத்தனை கண்களும் சீனப் புரட்சியின் காட்சி கட்டவிழ்ந்து கொண்டிருந்த கிழக்கு நோக்கி பார்த்துக் கொண்டிருந்தன. இடது எதிர்ப்பாளர்கள் அணி அது பெற்றிருந்த முந்தைய அடிகளில் இருந்து மீண்டிருந்தது, புதிய ஆதரவாளர்களின் ஒரு படையை சேர்த்துக் கொண்டிருந்தது. எந்த சியாங்-கேய் ஷேக்கின் கரங்களில் சீனத் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் கம்யூனிச அகிலம் ஏறக்குறையக் காட்டிக் கொடுத்திருந்ததோ அந்தக் கொலைபாதகரின் மூலமாக 1927 ஆம் ஆண்டின் இறுதியில் சீனப் புரட்சி படுகொலை செய்யப்பட்டது. சோவியத் ஒன்றிய மக்களை உறையச் செய்யும் ஏமாற்ற அலை ஒன்று ஆட்கொண்டது. ஊடகங்களிலும் கூட்டங்களிலும் தங்குதடையற்ற வேட்டையாடலின் பின்னர், அதிகாரத்துவம் இறுதியாக 1928 இல் இடது எதிர்ப்பாளர்களை பாரியளவில் கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியது.

போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் பதாகையைச் சூழ்ந்து பத்தாயிரக்கணக்கான புரட்சிகரப் போராளிகள் திரண்டனர் என நிச்சயமாக கூறலாம். முன்னேறிய தொழிலாளர்கள், எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு காட்டினர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த ஆதரவு செயலூக்கமற்றதாக இருந்தது. ஒரு புதிய போராட்டத்தின் மூலம் இந்த சூழ்நிலையை உண்மையாகவே மாற்றி விட முடியும் என்பதில் வெகுஜனங்கள் நம்பிக்கை இன்றி இருந்தார்கள். இதனிடயே "ஒரு சர்வதேசப் புரட்சியின் நலனுக்காக, நம்மை ஒரு புரட்சிகரப் போருக்குள் இழுத்து விடுவதற்கு எதிர்ப்பினர் ஆலோசனை சொல்கிறார்கள் என்று அதிகாரத்துவம் ஆர்ப்பரித்தது. அதிர்ச்சிகள் போதும்! ஓய்வுக்கான உரிமையை நாம் பெற்றிருக்கிறோம். நாம் நமது தாயகத்தில் சோசலிச சமுதாயத்தைக் கட்டியெழுப்புவோம். உங்கள் தலைவர்களான எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்!" இந்த அமைதிக்கான பிரச்சாரம் கட்சியின் குருட்டு விசுவாசிகளையும் மற்றும் இராணுவ மற்றும் அரசு அதிகாரிகளையும் உறுதியாக ஒருங்கிணைத்ததுடன் தளர்ந்து போயிருந்த தொழிலாளர்கள் மத்தியிலும், அதனினும் அதிகமாய் விவசாயிகளின் பரந்த எண்ணிக்கையினர் மத்தியிலும் ஆதரவை பெற்றுக்கொண்டது.

ஒருவேளை உண்மையிலேயே எதிர்ப்பாளர் அணி "நிரந்தரப் புரட்சி" என்ற சிந்தனைக்காக சோவியத் ஒன்றியத்தின் நலன்களைத் தியாகம் செய்யத் தயாராயிருக்கிறதோ? என்று அவர்கள் தம்மை தாமே கேட்டுக் கொண்டனர். உண்மையில், அந்தப் போராட்டம் சோவியத் அரசின் உயிர்வாழ்க்கை நலன்களைக் குறித்ததாக இருந்தது.

ஜேர்மனியில் அகிலத்தின் தவறான கொள்கையானது, பத்து வருடங்களுக்குப் பின்னர் ஹிட்லரின் வெற்றியில், அதாவது மேற்குத் திசையிலிருந்தான அச்சுறுத்தலான போர் அபாயத்தில் முடிந்திருந்தது. சீனாவில் அதற்குச் சளைக்காத தவறான கொள்கையானது ஜப்பானிய ஏகாதிபத்தியத்திற்கு வலுவூட்டி கிழக்குத் திசையில் இருந்தான அபாயத்தை வெகு அண்மைக்கு கொண்டு வந்திருந்தது. எவ்வாறாயினும் பிற்போக்குத்தனத்தின் காலகட்டங்கள் அனைத்துக்கும் மேலாக துணிவான சிந்தனை பற்றாக்குறையால் பண்பிடப்பட்டு காட்டப்படுகின்றன.

எதிர்ப்பாளர்கள் அணி தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. காற்றுள்ளபோது தூற்றிக் கொண்ட அதிகாரத்துவம், தொழிலாளர்களின் மிரட்சியையும் செயலூக்கமின்மையையும் சுரண்டிக் கொண்டது; அவர்களைக் கொண்ட மிகவும் பின்தங்கிய தட்டினை முன்னேறிய தட்டுக்கு எதிராய் நிறுத்தியது; மேலும் மேலும் தைரியமாக குலாக்குகளையும் பொதுவாக அதன் குட்டி-முதலாளித்துவ கூட்டாளிகளையும் சார்ந்திருக்கத் தொடங்கியது. இவ்வாறாக சில வருடங்களிலேயே அதிகாரத்துவம் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர முன்னணிப்படையை உருக்குலைத்து விட்டிருந்தது.

வெகுஜனங்கள் முன்பு அறிந்திராத ஸ்ராலின், திடீரென்று ஒரு முழுமையான மூலோபாயத் திட்டத்துடன் எங்கிருந்தோ பறந்து வந்து குதித்தார் என்று சிந்திப்பது அப்பாவித்தனமாய் இருக்கும். அப்படியில்லை. ஸ்ராலின் தன்னுடைய பாதையை உணர்ந்து கொள்ளும் முன்னதாக, அதிகாரத்துவம் அவரை உணர்ந்து விட்டிருந்தது. அதற்குத் தேவையான அத்தனை உத்தரவாதங்களையும் —பழைய போல்ஷிவிக்குக்குரிய கவுரவம், ஒரு வலிமையான ஆளுமை, குறுகிய கண்ணோட்டம், மற்றும் அரசியல் எந்திரத்துடன் கொண்டிருந்த நெருக்கமான பிணைப்புகளை மட்டுமே தனது செல்வாக்கிற்கான ஒட்டுமொத்த ஆதாரமாகக் கொண்டிருந்தமை— அவர்  கொண்டிருந்தார். ஸ்ராலினிக்குக் கிடைத்த வெற்றிகள் முதலில் அவருக்கே ஆச்சரியமளிப்பதாக இருந்தது. பழைய கோட்பாடுகளில் இருந்தும் வெகுஜனங்களின் கட்டுப்பாட்டில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்த, தனது உள்விவகாரங்களில் ஒரு நம்பகமான மத்தியஸ்தருக்கான தேவையைக் கொண்டிருந்த புதிய ஆளும் குழுவின் நட்புரீதியான வரவேற்பாக அது இருந்தது. வெகுஜனங்களின் முன்பாகவும் மற்றும் புரட்சியின் நிகழ்வுகளிலும் இரண்டாம்நிலை ஆளுமையாக இருந்த ஸ்ராலின், அதன் மத்தியில் இருந்தவர்களில் முதலாமானவராக, தேர்மிடோரிய அதிகாரத்துவத்தின் சந்தேகத்திற்கப்பாற்பட்ட தலைவராக, தன்னை வெளிப்படுத்தினார்.

புதிய ஆளும் சாதி வெகுவிரைவில் அதன் சொந்த சிந்தனைகளையும், உணர்வுகளையும், அதைவிட முக்கியமாக, அதன் நலன்களையும் வெளிப்படுத்தியது. இப்போதைய அதிகாரத்துவத்தின் பழைய தலைமுறையின் பெருவாரியானோர் அக்டோபர் புரட்சியின் போது தடுப்பரண்களின் மறுபக்கத்தில் நின்றிருந்தவர்களாவர். (உதாரணத்துக்கு சோவியத் தூதர்களை மட்டும் நீங்கள் எடுத்துப் பார்க்கலாம்: ட்ராயானோவ்ஸ்கி, மாய்ஸ்கி, பத்தோம்கின், சூரிட்ஸ், ஹின்ச்சுக்2, மற்றையவர்கள்). அல்லது அதிகபட்சம் போனால் போராட்டத்தில் இருந்து ஒதுங்கி நின்றிருந்தவர்களாய் இருந்தார்கள். இப்போதைய அதிகாரத்துவத்தின் மனிதர்களில் அக்டோபர் நாட்களில் போல்ஷிவிக் பக்கம் இருந்தவர்கள் அந்நாட்களில் அநேக சந்தர்ப்பங்களில் எந்த முக்கிய பங்களிப்பையும் செய்தவர்களல்லர். அதிகாரத்துவத்தில் இருக்கும் இளம் வயதினரைப் பொறுத்தவரை, அவர்கள் மூத்தவர்களால், பெரும்பாலும் தங்கள் சொந்த வாரிசுகளில் இருந்தே தெரிவு செய்யப்பட்டுக் கல்வியூட்டப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இந்த மனிதர்களைக் கொண்டு நிச்சயமாக அக்டோபர் புரட்சியைச் சாதித்திருக்க முடியாது, ஆனால் அதனைச் சுரண்டுவதற்கு கச்சிதப் பொருத்தமானவர்கள் இவர்கள் தான்.

இந்த இரண்டு வரலாற்று அத்தியாயங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நடந்திருந்த தனிமனித நிகழ்வுகளும் நிச்சயமாக பாதிப்பு செலுத்தாமல் இல்லை. இவ்வாறாக லெனின் நோய்வாய்ப்பட்டு இறந்தமையானது சந்தேகத்திற்கிடமில்லாமல் இறுதிக்காட்சியை துரிதப்படுத்தியது. லெனின் இன்னும் சற்றுகாலம் வாழ்ந்திருந்தால், அதிகாரத்துவ சக்தியின் அழுத்தம், குறைந்தபட்சம் ஆரம்ப ஆண்டுகளிலேனும், இதைவிட மெதுவாகத்தான் உருவாகியிருக்கும். ஆயினும் 1926 ஆம் ஆண்டு வாக்கிலேயே குருப்ஸ்கயா இடது எதிர்ப்பாளர் வட்டத்தில் பேசுகையில் கூறினார்: "இலிச் உயிரோடு இருந்திருந்தால், அவர் அநேகமாக ஏற்கனவே சிறையில் தான் இருந்திருப்பார்". லெனினுடைய அச்சங்களும் எச்சரிக்கையூட்டும் தீர்க்கதரிசனங்களும் அப்போதும் அந்த அம்மையாரின் நினைவில் பசுமையாக இருந்தன, வரலாற்றின் சாதகமற்ற காற்றையும், நீரோட்டத்தையும் எதிர்த்து நிற்பதில் லெனினின் தனிப்பட்ட சகலவல்லமை குறித்த எந்த பிரமைகளையும் அவர் மதிப்பிட்டுக்கொண்டிருக்கவில்லை.

அதிகாரத்துவம் தோற்கடித்தது இடது எதிர்ப்பாளர்களை மட்டுமல்ல. அது போல்ஷிவிக் கட்சியை தோற்கடித்தது. அரசின் அங்கங்கள் "சமூகத்தின் சேவகர்களாய் இருப்பதில் இருந்து சமூகத்தின் மேலே உயர்ந்து நிற்கும் பிரபுக்களாக" உருமாற்றம் காண்பதில் இருக்கும் பிரதான அபாயத்தை கருதிப் பார்த்திருந்த லெனினின் வேலைத்திட்டத்தை அது தோற்கடித்தது. இடது எதிர்ப்பாளர்கள், கட்சி மற்றும் லெனின் என இந்த அத்தனை எதிரிகளையும் அது சிந்தனைகளாலோ அல்லது வாதங்களாலோ தோற்கடிக்கவில்லை, மாறாக தனது சொந்த சமூக வலுவினைக் கொண்டு தோற்கடித்தது. அசையக்கடினமான எடை பெற்று விட்ட அதிகாரத்துவத்தின் பின்பகுதி புரட்சியின் தலையை விடவும் கனத்து விட்டிருந்தது. இதுதான் சோவியத் தெர்மிடோரின் இரகசியமாகும்.

போல்ஷிவிக் கட்சியின் சீரழிவு

போல்ஷிவிக் கட்சிதான் அக்டோபர் வெற்றிக்குத் தயாரித்ததோடு அதனை உத்தரவாதம் செய்தது. அதுதான் சோவியத் அரசை உருவாக்கியதோடு அதற்கு ஒரு உறுதியான உருத்தோற்றத்தையும் கொடுத்தது. கட்சியின் சீரழிவு என்பது அரசு அதிகாரத்துவமயமானதன் காரணம் மற்றும் விளைவு இரண்டுமாய் ஆனது.

இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் குறைந்தபட்சம் சுருக்கமாகவேனும் எடுத்துக்காட்டுவது அவசியம்.

போல்ஷிவிக் கட்சியின் உள்முக நிர்வாகமுறை ஜனநாயக மத்தியத்துவ வழிமுறையால் குணாம்சப்படுத்தப்பட்டிருந்தது. ஜனநாயகம் மற்றும் மத்தியத்துவம் என்ற இந்த இரண்டு கருத்தாக்கங்களின் சேர்க்கை என்பது கொஞ்சமும் முரண்பாடானதல்ல. கட்சியின் எல்லைக்கோடுகள் எப்போதும் கண்டிப்புடன் வரையறை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதில் மட்டுமன்றி, அந்த எல்லைகளுக்குள் நுழைந்தவர்கள் கட்சிக் கொள்கையின் திசைவழியை வரையறை செய்யும் உண்மையான உரிமையை அனுபவிக்க வேண்டும் என்பதிலும் கட்சி மிகவும் கவனமான அக்கறை எடுத்துக் கொண்டது.

விமர்சனத்திற்கும் புத்திஜீவிதப் போராட்டத்திற்குமான சுதந்திரம் என்பது கட்சி ஜனநாயகத்தின் மாற்றவியலாத உள்ளடக்கமாய் இருந்தது. போல்ஷிவிசம் கன்னைகளை சகித்துக் கொள்வதில்லை என்பதாக இப்போது கூறப்படுகின்ற கருத்துக்களானது, வீழ்ச்சி சகாப்தத்தின் ஒரு கட்டுக்கதையாகும். உண்மையில் போல்ஷிவிசத்தின் வரலாறு கன்னைகளிடையேயான போராட்டத்தின் ஒரு வரலாறாகவே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், உலகத்தை மாற்றியமைக்க மிகவும் துணிச்சலாக சமுதாய மரபுவழி பிம்பங்களை உடைப்பவர்களை, போராளிகளை மற்றும் கிளர்ச்சியாளர்களை தனது பதாகையின் கீழ் அணிதிரட்டுவதையும் தனக்கான பணியாக வரித்துக் கொள்கின்ற ஒரு உண்மையான புரட்சிகர அமைப்பு புத்திஜீவித மோதல்கள் இல்லாமல், குழுச்சேர்க்கைகள் இல்லாமல் மற்றும் தற்காலிக கன்னை உருவாக்கங்கள் இல்லாமல் எவ்வாறு வாழ முடியும், அபிவிருத்தியடைய முடியும்? போல்ஷிவிக் கட்சியின் தலைமையின் தொலைநோக்குத் திறனால் பெரும்பாலும் மோதல்கள் தணிக்கப்படுவதும் கன்னைப் போராட்டங்களின் காலஅளவு சுருங்கவும் முடிந்திருந்தது, அதற்கு மேல் ஒன்றும் இல்லை. மத்திய குழுவானது இந்த கொந்தளிப்பான ஜனநாயக ஆதரவைச் சார்ந்திருந்தது. இதில் இருந்தே அது முடிவுகளை மேற்கொள்வதற்கும் உத்தரவுகளை இடுவதற்குமான துணிச்சலைப் பெற்றது. அதிமுக்கிய எல்லாக் கட்டங்களிலும் தலைமையின் இந்த வெளிப்பட்ட சரியான நிலைப்பாடுகள் தான் மத்தியத்துவத்தின் விலைமதிப்பற்ற தார்மீக மூலதனமான உயரதிகாரத்தை அதற்கு வழங்கியிருந்தது.

இவ்வாறாக போல்ஷிவிக் கட்சியின், குறிப்பாக அது அதிகாரத்துக்கு வருவதற்கு முந்தைய, நிர்வாக முறையானது, கம்யூனிச அகிலத்தின் இப்போதிருக்கும் பிரிவுகளின் நிர்வாக முறைக்கு —அவற்றுக்கு “தலைவர்கள்” மேலிருந்து நியமிக்கப்படுவது; மேலிடத்தில் இருந்து ஒரு வார்த்தை வந்தவுடன் கொள்கையை முழுவதுமாக மாற்றிக் கொள்வது; கட்டுப்பாடில்லாத எந்திரத்தைக் கொண்டிருப்பது; சாமானிய அங்கத்தவர்களை நோக்கி அகம்பாவமான மனோபாவமும் கிரெம்ளினை நோக்கி அடிமைத்தன மனோபாவமும் கொண்டிருப்பது— முற்றுமுழுதாக மாறுபட்டதாக இருந்தது. ஆனால் அதிகாரத்தை வென்ற ஆரம்ப வருடங்களில், நிர்வாகரீதியான துருப்பிடித்தலானது ஏற்கனவே கட்சியில் புலப்படத்தக்கதாய் இருந்தது என்றபோதும் கூட, பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்குப் பிந்தைய கட்சியின் சித்திரத்தை யாரேனும் திரையில் காட்டியிருந்தால், ஸ்ராலின் உட்பட, எந்தவொரு போல்ஷிவிக்கும், அவரை தீய நோக்கத்துடன் களங்கம் கற்பிப்பவராகத் தான் தூற்றியிருப்பார்கள்.

போல்ஷிவிக் அணியினரை அதிகாரத்தில் இருப்பவர்களின் தீமைகளில் இருந்து பாதுகாப்பது குறித்த ஒரு தொடர்ச்சியான கவலை, லெனின் மற்றும் அவரது சகாக்களின் கவனத்தின் மத்தியபுள்ளியாக இருந்தது. ஆயினும், கட்சியும் அரசு எந்திரமும் அசாதாரண நெருக்கம் கொண்டிருந்தமையும், இன்னும் சில சமயங்களில் ஒன்றுகலந்துவிட்டமையும் அந்த முதல் வருடங்களில் கட்சி நிர்வாக அமைப்பின் சுதந்திரத்திற்கும் நெகிழ்வுத்தன்மைக்கும் சந்தேகத்திற்கிடமில்லாத தீங்கை ஏற்கனவே இழைத்து விட்டிருந்தது. சிரமங்கள் அதிகரித்த மட்டத்திற்கு ஜனநாயகம் குறுக்கப்பட்டு விட்டிருந்தது. ஆரம்பத்தில் சோவியத்துக்களின் கட்டமைப்புக்குள் அரசியல் போராட்ட சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு கட்சி விருப்பமும் நம்பிக்கையும் கொண்டிருந்தது. உள்நாட்டுப் போர் இந்த கணிப்பீட்டில் திடமான மாற்றங்களை கொண்டு வந்து விட்டது. எதிர்க்கட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாய் தடை செய்யப்பட்டன. சோவியத் ஜனநாயகத்தின் நோக்கத்துக்கு முரண்பட்ட நன்கு புலப்படக் கூடிய இந்த நடவடிக்கை, போல்ஷிவிசத் தலைவர்களால் ஒரு குறுகிய காலத்திற்கான தற்காப்பு நடவடிக்கையாக கருதப்பட்டதே அன்றி ஒரு கோட்பாடாக அல்ல.

ஆளும் கட்சியின் துரித வளர்ச்சி, அதன் பணிகளின் புதுமை அம்சங்கள் மற்றும் தீவிரத்துடன் சேர்ந்து, தவிர்க்கவியலாமல் உள்முக அதிருப்திகளின் எழுச்சிக்கு வழிவகுத்தது. நாட்டில் இருந்த தலைமறைவு எதிர்ப்பு நீரோட்டங்கள், பல்வேறு வழிகளிலும், இருந்த ஒரே சட்டபூர்வ அரசியல் அமைப்பின் மீது நெருக்குதலைச் செலுத்தி கன்னைப் போராட்டத்தின் கூர்மையை மேலும் அதிகப்படுத்திக் கொண்டிருந்தன. உள்நாட்டு யுத்தம் முடியவிருந்த சமயத்தில், இந்தப் போராட்டமானது அரசு அதிகாரத்தையே ஸ்திரம்குலைக்க அச்சுறுத்தும் அளவுக்கான கூர்மையான வடிவங்களை எடுத்தது. 1921 மார்ச் மாதத்தில், குறிப்பிட்டளவு போல்ஷிவிக் காரியாளர்களையும் கூட தன்னுடைய படையணிக்குள் ஈர்த்திருந்த குரோன்ஸ்டாட் புரட்சியின்3 நாட்களில், கன்னைகளைத் தடைசெய்யும் நடவடிக்கை —அதாவது, அரசில் நிலவி வந்த அரசியல் நிர்வாகமுறையை ஆளும் கட்சியின் உள்வாழ்க்கைக்கும் கொண்டுவருவது— அவசியமாகியிருந்ததாக கட்சியின் பத்தாவது காங்கிரஸ் கருதியது. கன்னைகளைத் தடைசெய்யும் இந்த நடவடிக்கையும் கூட நிலைமையில் உருப்படியான முதல் முன்னேற்றம் ஏற்பட்டதும் கைவிடப்படவிருக்கும் ஒரு விதிவிலக்கான நடவடிக்கையாகவே மீண்டும் கருதப்பட்டது. அதே சமயத்தில், புதிய சட்டத்தை செயலுறுத்துவதில் மத்திய குழு சர்வஜாக்கிரதையுடன் செயல்பட்டது, இல்லாமல்போனால் எல்லாவற்றுக்கும் மேல் அது கட்சியின் உள்வாழ்க்கையின் குரல்வளை நெரிபட இட்டுச் சென்று விடும் என்ற கவலை அதற்கு இருந்தது.

எவ்வாறெனினும், சிரமமான சூழ்நிலையில் மேற்கொள்ள அவசியமாகக் கூடிய ஒரு விட்டுக்கொடுப்பாக மட்டுமே தனது ஆரம்ப வடிவமைப்பின் போது இருந்த ஒன்று, அப்போது கட்சியின் உள் வாழ்க்கையை முழுக்கவும் நிர்வாக வசதி என்னும் கோணத்தில் அணுகத் தொடங்கியிருந்த அதிகாரத்துவத்தின் இரசனைக்கு துல்லியப் பொருத்தம் கொண்டிருந்ததாய் நிரூபணமானது. ஏற்கனவே 1922 ஆம் ஆண்டிலேயே தன் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் தென்பட்ட சமயத்தில், லெனின், அதிகாரத்துவத்தின் அச்சுறுத்தும் வளர்ச்சியை கண்டு திகைத்துப் போனதோடு, அரசு எந்திரத்தைக் கைப்பற்றுவதற்கான முதல் படியாக, கட்சி எந்திரந்தின் அச்சாக தன்னை ஆக்கிக் கொண்டு விட்டிருந்த ஸ்ராலின் கன்னைக்கு எதிரான ஒரு போராட்டத்திற்கும் தயாரிப்பை மேற்கொண்டிருந்தார். ஆனால் வாதநோயின் இரண்டாவது தாக்குதலும் அதன்பின் மரணமும் இந்த உள்முக பிற்போக்குத்தனத்திற்கு எதிராக அவரை போட்டியிட முடியாமல் செய்து விட்டன.

அதுமுதலாக ஸ்ராலினின் மொத்த முயற்சியும் —சினோவியேவும் காமனேவும் அச்சமயத்தில் ஸ்ராலினுடன் கைகோர்த்து செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்— கட்சி எந்திரத்தை கட்சியின் சாமானிய உறுப்பினர்களிடம் இருந்து விடுவிப்பதை நோக்கி செலுத்தப்பட்டது. மத்திய குழுவின் "ஸ்திரத்தன்மை”க்கான இந்த போராட்டத்தில், ஸ்ராலின் அவரது சகாக்களுக்கு இடையே மிகவும் திடமானவராகவும் நம்பிக்கைக்குகந்தவராகவும் நிரூபித்தார். அவர் சர்வதேச பிரச்சினைகளைக் கொண்டு தன் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கவில்லை; அவர் அவற்றைப் பற்றி ஒருபோதும் கவலை இல்லாதவராயிருந்தார். புதிய ஆளும் தட்டின் குட்டி முதலாளித்துவ கண்ணோட்டமே அவரது சொந்தக் கண்ணோட்டமாய் இருந்தது. சோசலிசத்தை உருவாக்கும் பணியானது அதன் இயல்பிலேயே தேசியரீதியானது மற்றும் நிர்வாகரீதியானது என்று அவர் ஆழமாக நம்பினார். அவசியப்படும் மட்டத்திற்கு வெளியுறவுக் கொள்கை நோக்கங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய ஒரு அத்தியாவசியமான தொல்லையாகவே கம்யூனிச அகிலத்தை அவர் கருதினார். அவரது பார்வையில், அவரது சொந்தக் கட்சியானது, அதிகாரத்துவ எந்திரத்திற்கான ஒரு கீழ்ப்படிவான ஆதரவு என்ற மதிப்பை மட்டுமே கொண்டிருந்தது.

தனியொரு நாட்டில் சோசலிசம் என்னும் தத்துவத்துடன் சேர்த்து, போல்ஷிவிசத்தில் மத்திய குழுதான் அனைத்தும், கட்சி என்பது ஒன்றுமேயில்லை என்பதான ஒரு தத்துவமும் அதிகாரத்துவத்தினால் சுற்றில் விடப்பட்டது. எவ்வாறாயினும், இந்த இரண்டாவது தத்துவமானது முதலாவதை விடவும் அதிக வெற்றிகரமானதாய் சாதிக்கப்பட்டது. லெனினின் மரணத்தினை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, ஆளும் குழுவானது ஒரு "லெனினிச படைசேர்ப்பு" (Leninist Levy) ஐ அறிவித்தது. எப்போதும் கவனமாகக் காவல் காக்கப்பட்டு வந்திருந்த கட்சியின் வாயிற்கதவுகள் இப்போது அகலத் திறந்து விடப்பட்டன. தொழிலாளர்கள், குமாஸ்தாக்கள், குட்டிமுதலாளித்துவ நிர்வாகிகள் கூட்டம் கூட்டமாக மொய்க்கத் தொடங்கினர். புரட்சிகர முன்னணிப் படையை அனுபவமற்ற, சுயாதீனமற்ற, ஆயினும் அதிகாரிகளுக்கு பணிந்து போகும் பழைய பழக்கத்தைக் கொண்டிருக்கும் பண்படுத்தப்படாத மனித சடப்பொருளுக்குள் கலைப்பது தான் இந்த தந்திரத்தின் அரசியல் நோக்கமாய் இருந்தது. இத்திட்டம் வெற்றிகரமாக வேலைசெய்தது. அதிகாரத்துவத்தை, பாட்டாளி வர்க்க முன்னணிப் படையின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து விட்டதன் மூலமாய், “லெனினிச படைசேர்ப்பு” லெனினின் கட்சிக்கு ஒரு மரண அடியைக் கொடுத்தது. எந்திரம் அவசியமான சுதந்திரத்தை வென்று விட்டிருந்தது. ஜனநாயக மத்தியத்துவம் அதிகாரத்துவ மத்தியத்துவத்திற்கு வழி விட்டிருந்தது. கட்சி எந்திரத்திலும் கூட, இப்போது உச்சி முதல் அடிமட்டம் வரையிலும் ஆட்களை மாற்றும் வேலை தீவிரமாக நடைபெற்றது. கீழ்ப்படிந்து நடப்பதுதான் ஒரு போல்ஷிவிக்கின் பிரதான நற்தகுதியாக அறிவிக்கப்பட்டது. எதிர்ப்பாளர்கள் உடனான ஒரு போராட்டத்தின் வேடத்தில், புரட்சியாளர்களை, சினோவ்னிக்குகளை* (தொழில்முறை அரசாங்க நிர்வாகிகள்) கொண்டு இடம்பெயர்ப்பது மிகப்பெருமளவில் நடைபெற்றது. போல்ஷிவிக் கட்சியின் வரலாறு அதன் துரிதமான சீரழிவின் வரலாறாக ஆனது.

இடது, மத்திய மற்றும் வலது ஆகிய மூன்று குழுவாக்கங்களின் தலைமைகளுமே கிரெம்ளினில் இருந்த ஒரே மற்றும் அதே ஆட்களாய், பொலிட்பீரோவை (Politburo - அரசியல் குழு) சேர்ந்தவர்களாய் இருந்த நிலையின் மூலமாக, அபிவிருத்திகாணுகின்ற போராட்டம் என்பதன் அரசியல் அர்த்தமே பலருக்கும் இருண்டு போனது. நுனிப்புல் மேயும் மூளைகளுக்கு இது வெறுமனே தனிநபர் போட்டி விவகாரமாய், லெனினின் “பாரம்பரிய”த்திற்கான ஒரு போராட்டமாய் தெரிந்தது.  ஆனால் இரும்பு சர்வாதிகாரத்தின் நிலைமைகளில், சமூக குரோதங்கள் தமது முதல் வெளிப்பாட்டை ஆளும் கட்சியின் ஸ்தாபனங்களின் மூலமாக அல்லாத வேறுவழியில் வெளிக்காட்ட முடியாதிருந்தது. தேர்மிடோரியன்களில் பலரும் ஜாக்கோபின்களின் வட்டத்தில் இருந்துதான் தமது நாளில் தோன்றியிருந்தனர், போனபார்ட்டும் கூட தன் ஆரம்ப வருடங்களில் அந்த வட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தவர் தான்; பின்னாளில் பிரான்சின் முதலாவது நீதியரசரும் சக்கரவர்த்தியுமானவர் தனது உண்மையான சேவகர்களையும் முன்னாள் ஜாக்கோபின்களில் இருந்து தான் தேர்வு செய்து கொண்டார். காலங்கள் மாறுகின்றன, அதோடு சேர்ந்து ஜாக்கோபின்களும் மாறுகின்றனர், இருபதாம் நூற்றாண்டின் ஜாக்கோபின்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

லெனின் சகாப்தத்தின் பொலிட்பீரோவில் இப்போது எஞ்சியிருப்பது ஸ்ராலின் மட்டுமே. சினோவியேவ் மற்றும் காமனேவ் ஆகிய அதன் இரண்டு உறுப்பினர்கள், நாட்டை விட்டு வெளியிலிருந்த அந்த நீண்ட வருடங்களில் லெனினுடன் நெருக்கமாக செயலாற்றி வந்திருந்தவர்கள், இப்போது தாங்கள் செய்யாத குற்றத்திற்காக பத்து வருட சிறைத் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ரைகோவ், புக்காரின் மற்றும் தொம்ஸ்கி ஆகிய மற்றும் மூன்று உறுப்பினர்கள் தலைமையில் இருந்து அகற்றப்பட்டார்கள், ஆனாலும் கீழ்ப்படிதலுக்கான பரிசாக அவர்கள் இரண்டாம் நிலை பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். {**சினோவியேவும் காமனேவும் ஸ்ராலினுக்கு எதிராக "பயங்கரவாத சதியில்" உடந்தையாக இருந்ததாகக் கூறி 1936 ஆகஸ்டில் தூக்கிலிடப்பட்டார்கள்; அதே வழக்கில் ரோம்ஸ்கி தற்கொலை செய்து கொண்டார் அல்லது சுட்டுக் கொல்லப்பட்டார்; ரைகோவ் இந்த சதியில் தொடர்பு இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு அவரது பதவியில் இருந்து அகற்றப்பட்டார்; புக்காரின் சந்தேகப் பட்டியலில் இடம்பெற்றார் என்றாலும் கூட இன்னும் சுதந்திரமாகவே இருக்கிறார்.} மற்றும் இறுதியாக, இந்த வரிகளை எழுதிக் கொண்டிருப்பவரும் நாடு கடத்தப்பட்ட நிலையில் வாழ்கிறார். லெனினை இழந்திருந்த அவரது மனைவியான குருப்ஸ்காயாவும் எவ்வளவு முயற்சித்தும் தேர்மிடோருக்கு தன்னை முழுமையாக தகவமைத்துக் கொள்ள முடியவில்லை என்பதை நிரூபித்து அவரும் பிடிக்காதவராய் ஆகிவிட்டிருக்கிறார்.

இப்போதைய பொலிட்பீரோ உறுப்பினர்கள், போல்ஷிவிக் கட்சியின் வரலாறு முழுவதிலும் இரண்டாம்நிலை பொறுப்புகளையே வகித்தவர்கள். புரட்சியின் ஆரம்ப வருடங்களில் இவர்கள் எவருக்கேனும் தமது வருங்கால உயர்ச்சியை கணிக்க முடிந்திருக்குமானால், அவர்கள் தான் முதலில் ஆச்சரியப்பட்டிருப்பார்கள், அந்த ஆச்சரியத்தில் எந்த போலியான தன்னடக்கமும் இருந்திருக்காது. இந்தக் காரணத்திற்காகவே, பொலிட்பீரோ சொல்வதே எப்போதும் சரி, எந்த ஒரு சமயமும் பொலிட்பீரோவைக் காட்டிலும் சரியானதொரு கருத்தை யாரும் சொல்லி விட முடியாது என்பது இப்போது இன்னமும் உறுதியான விதியாய் இருக்கிறது. ஆனாலும் அதே சமயத்தில், அந்த பொலிட்பீரோவும் கூட ஸ்ராலினுக்கு எதிராக சரியானதாய் இருக்க முடியாது, அவர் தவறுகள் செய்ய முடியாதவர் என்பதால் அவரை விடவும் சரியாக அவரே கூட இருக்க முடியாது.

இந்த காலகட்டம் முழுவதிலும் உட்கட்சி ஜனநாயகத்திற்கான கோரிக்கைகள் அனைத்து எதிர்ப்பாளர்கள் குழுக்களின் சுலோங்களின் மூலமாகவும் வெளிப்பட்டன, அவை எத்தனை நம்பிக்கையற்றதாய் இருந்ததோ அத்தனை அழுத்தமாய் வலியுறுத்தப்பட்டன. மேலே குறிப்பிட்ட இடது எதிர்ப்பாளர்களின் மேடை 1927 இல், “விமர்சனத்திற்காக ஒரு தொழிலாளியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ துன்புறுத்தும் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒரு தீவிரமான அரச குற்றமாக தண்டிக்கப்படுகின்ற” வகையில் ஒரு சிறப்புச் சட்டம் குற்றவியல் சட்டத்தில் கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரியது. ஆனால் அதற்கு மாறாய், இடது எதிர்ப்பாளர்களுக்கே எதிரான ஒரு ஷரத்து தான் குற்றவியல் சட்டத்திற்குள் அறிமுகம் செய்யப்பட்டது.

உட்கட்சி ஜனநாயக விடயத்தில், பழைய தலைமுறையின் ஞாபகங்களில் இருந்தான நினைவுகூரல்கள் மட்டும் தான் மிஞ்சின. அத்துடன் சேர்ந்து சோவியத்துகள், தொழிற்சங்கங்கள், கூட்டுற்பத்தி மையங்கள், கலாச்சார மற்றும் விளையாட்டு அமைப்புகளிலும் ஜனநாயகம் காணாமல் போயிருந்தது.

இந்த ஒவ்வொரு அமைப்புக்கு மேலேயும் எண்ணிலடங்கா கட்சிச் செயலாளர்களின் ஒரு அடுக்கு அமர்ந்து கொண்டு ஆளுகை செலுத்துகிறது. "சர்வாதிபத்தியம்" என்ற வார்த்தை ஜேர்மனியில் இருந்து வந்து சேர்வதற்கு பல வருடங்களுக்கு முன்பே இந்த ஆட்சி முற்றிலும் சர்வாதிபத்திய குணநலனைப் பெற்றுவிட்டிருந்தது. "சிந்திக்கும் ஆற்றல்கொண்ட கம்யூனிஸ்டுகளை எந்திரங்களாக மாற்றுகின்ற விரக்தியேற்றும் வழிமுறைகளின் மூலமாக, விருப்பம், குணநலன் மற்றும் மனித மாண்பு ஆகியவற்றை அழித்தது”, 1928 ஆம் ஆண்டில் ராகோவ்ஸ்கி எழுதினார், “ஆளும் வட்டாரங்கள், வர்க்கம் மற்றும் கட்சியை பிரதியிடுகின்ற அகற்ற முடியாத மற்றும் மீறவியலாத ஒருசிலவராட்சியாக தம்மை உருமாற்றிக் கொள்வதில் வெற்றி பெற்றிருக்கின்றன". வெறுப்புமிக்க இந்த வரிகள் எழுதப்பட்டதற்குப் பிந்தைய காலத்தில், ஆட்சியின் சீரழிவு அளவிட முடியாத அளவுக்கு இன்னும் முன்னேறிச் சென்றிருக்கிறது. கட்சியின் உள்வாழ்க்கையில் GPU ஒரு தீர்மானகரமான அம்சமாக மாறியிருக்கிறது. ஆளும்கட்சியில் இனியும் எந்த கன்னைப் போராட்டங்களும் இல்லை என்று 1936 மார்ச்சில் மோலோட்டோவ் ஒரு பிரெஞ்சு பத்திரிகையாளரிடம் பெருமையடித்துக் கொள்ள முடிந்ததென்றால், அதன் பொருள் அதிருப்திகள் எல்லாம் இப்போது அரசியல் போலிசின் தானியங்குரீதியான தலையீட்டின் மூலமாக தீர்க்கப்பட்டு விடுகிறது என்பதாகும். பழைய போல்ஷிவிக் கட்சி செத்து விட்டது, எந்த சக்தியும் அதற்கு மீண்டும் உயிர்கொடுக்க இயலாது.

• • •

கட்சியின் அரசியல் சீரழிவுக்கு இணையாக, கட்டுப்பாடில்லாத எந்திரத்தின் அறநெறிச் சிதைவும் அங்கே நடந்து கொண்டிருந்தது. சலுகை அந்தஸ்துதாரர்களைக் குறிக்க கூறப்படும் “சோவ்பூர்” (Sovbour - சோவியத் பூர்சுவா) என்ற வார்த்தை தொழிலாளர்களது வார்த்தைக்களஞ்சியத்தில் வெகுஆரம்பத்திலேயே தோன்றி விட்டிருந்தது. NEP க்கான இடைமருவலின் போது, முதலாளித்துவப் போக்குகள் இன்னும் தாராளமான செயல்பாட்டுக் களத்தைப் பெற்றன. 1922 மார்ச்சில், கட்சியின் பதினோராவது காங்கிரசில், ஆளும் அடுக்கின் ஒரு சீரழிவின் அபாயம் குறித்து லெனின் எச்சரித்தார்.

வெற்றிபெற்றவர்கள், வெற்றிகொள்ளப்பட்டவர்களின் கலாச்சாரம்  ஒரு உயர் மட்டத்தில் இருக்குமானால் அவர்களின் கலாச்சாரத்தை எடுத்துக் கொள்வது என்பது வரலாற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நடந்திருக்கிறது என்றார் அவர். ஆனால் ரஷ்ய முதலாளித்துவத்தின் மற்றும் பழைய அதிகாரத்துவத்தின் கலாச்சாரம் என்பது, நிச்சயமாக, பரிதாபகரமானதாய் இருக்கின்ற நிலையிலும் புதிய ஆளும் அடுக்கு அந்தக் கலாச்சாரத்திற்கு அடிக்கடி வளைந்து கொடுக்க வேண்டியதாக இருக்கிறதே. மாஸ்கோவில் இருக்கும் “நான்காயிரத்து எழுநூறு பொறுப்பான கம்யூனிஸ்டுகள்” அரசு எந்திரத்தை நிர்வகிக்கிறார்கள். “யார் யாரை வழிநடத்துகிறார்கள்? வழிநடத்திக் கொண்டிருப்பது கம்யூனிஸ்டுகள் தான் என்று நீங்கள் கூற முடியுமா என்பது எனக்கு மிகவும் சந்தேகமாகவே இருக்கிறது...” அடுத்து வந்த காங்கிரசுகளில் லெனினால் பேசமுடியாமல் போய் விட்டது. ஆயினும், அதிகாரத்துவத்தின் ஒடுக்குமுறைக்கும், பேராசைக்கும் மற்றும் சீரழிவுக்கும் எதிராக தொழிலாளர்களை எச்சரிப்பதும் ஆயுதபாணியாக்குவதும் தான் அவரது செயலியக்கம் கொண்டிருந்த வாழ்க்கையின் இறுதி மாதங்களது அத்தனை சிந்தனைகளுமாய் இருந்தன. ஆயினும், அவர் கண்டிருந்தது நோயின் ஆரம்ப அறிகுறிகளை மட்டுமே.

உக்ரேனின் மக்கள் ஆணையர்கள் சோவியத்தின் தலைவராகவும் பின்னர் லண்டன் மற்றும் பாரிசில் சோவியத் தூதராகவும் இருந்த கிறிஸ்டியான் ராக்கோவ்ஸ்கி, 1928 ஆம் ஆண்டில் —அப்போது அவர் ஏற்கனவே நாடு கடத்தப்பட்டிருந்தார்— தன் நண்பர்களுக்கு சோவியத் அதிகாரத்துவம் குறித்த தனது ஒரு சுருக்கமான ஆய்வினை அனுப்பினார், அதை நாம் மேலே பல இடங்களில் மேற்கோள் காட்டியிருக்கிறோம், ஏனென்றால் இந்த விடயம் தொடர்பாக எழுதப்பட்டிருப்பதிலேயே ஆகச்சிறந்ததாக இப்போதும் அது திகழ்கிறது. "லெனினின் சிந்தனையிலும், எங்கள் அனைவரது சிந்தனையிலும்”, ராக்கோவ்ஸ்கி கூறுகிறார், “அதிகாரத்தில் இருப்பவர்களின் தரப்பில் நடைபெறக் கூடிய சலுகை, அந்தஸ்து மற்றும் விசுவாசி அரவணைப்பு ஆகிய ஊழலடையச் செய்யும் நடவடிக்கைகளில் இருந்தும், பழைய பிரபுத்துவம் மற்றும் வியாபாரத்தனம் ஆகியவற்றின் மிச்சசொச்சங்களுடன் நெருக்கம் பாவிப்பதில் இருந்தும், NEP இன் ஊழலடையச் செய்யும் தாக்கத்தில் இருந்தும், முதலாளித்துவ அறநெறிகள் மற்றும் சித்தாந்தங்களின் தூண்டல்களில் இருந்தும் கட்சி மற்றும் தொழிலாள வர்க்கம் இரண்டையும் பாதுகாப்பது கட்சித் தலைமையின் கடமையாக கருதப்பட்டது. ….. கட்சி எந்திரம் இந்தக் கடமையை நிறைவேற்றவில்லை என்பதையும், பாதுகாவலராகவும் கல்வியூட்டுபவராகவுமான இரண்டு பாத்திரத்திற்கும் முழுக்கத் திறனற்றதாய் இருப்பதை அது வெளிப்படுத்தியிருக்கிறது என்பதையும் நாம் வெளிப்படையாகவும், திட்டவட்டமாகவும் உரத்தும் சொல்லியாக வேண்டும். அது தோல்வியடைந்திருக்கிறது, திவாலடைந்திருக்கிறது.”

அதிகாரத்துவ அடக்குமுறைகளால் உடைந்துபோய், ராக்கோவ்ஸ்கி, அவரது சொந்த விமர்சனரீதியான தீர்ப்புகளை அவரேயும் பின்னாளில் மறுதலித்துக் கூறினார் என்பது உண்மை தான். எழுபது வயது கலிலியோவும் கூட, திருச்சபை விசாரணை மன்றத்தின் கிடுக்கிப்பிடிக்குள் மாட்டி, கோப்பர்நிக்கஸ் முறையை மறுதலித்துக் கூறும் நிலைக்குத் தள்ளப்பட்டார் -— அதைக்கொண்டு பூமி சூரியனைச் சுற்றுவதை தொடராமல் செய்து விட முடிந்ததா என்ன? அறுபது வயதான ராக்கோவ்ஸ்கி பின்வாங்கிப் பேசியதை நாம் நம்பவில்லை, ஏனென்றால் இத்தகைய பின்வாங்கல்கள் குறித்த ஒரு சுட்டெரிக்கும் பகுப்பாய்வை அவரேயும் பலமுறை செய்திருக்கிறார். அவரது அரசியல் விமர்சனங்களைப் பொறுத்தவரை, அவை தங்களுக்கான கூடுதல் நம்பகமான ஆதரவை, எழுதிய ஆசிரியரின் அகநிலை துணிச்சலில் விடவும் அதிகமாய்  புறநிலை அபிவிருத்தியின் உண்மைகளில் கண்டிருக்கின்றன.

அதிகாரத்தை வெற்றி காண்பது, பாட்டாளி வர்க்கம் பிற வர்க்கங்களோடு கொண்டிருக்கும் உறவுகளை மாற்றுவது மட்டுமல்ல, அதன் சொந்த உள்முகமான கட்டமைப்பையும் மாற்றுகிறது. தன் சொந்த "சமூக பிரச்சினையை" தீர்ப்பதற்கு மிகப் பொறுமையற்று இருக்கின்ற ஒரு திட்டவட்டமான சமூக குழு, அது தன் சொந்த இலட்சியம் குறித்த உயரிய அபிப்பிராயம் கொண்டிருக்கின்ற மட்டத்திற்கு, அதிகாரத்தை செலுத்துவது அதன் தனிச்சிறப்பம்சமாய் ஆகிவிடுகிறது. "ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு முதலாளித்துவ செல்வக்குவிப்பு தடைசெய்யப்பட்டதாய் இருக்கின்ற ஒரு பாட்டாளி வர்க்க அரசில், பேதவித்தியாசம் ஆரம்பத்தில் நிர்வாகரீதியானதாக இருக்கிறது, பின் அது சமூகரீதியானதாக மாறுகிறது. அது வர்க்க பேதமாகி விடுவதாக நான் சொல்லவில்லை, ஆயினும் அது ஒரு சமூக பேதமாக ஆகி விடுகிறது...." ராக்கோவ்ஸ்கி மேலும் விளக்குகிறார்: "ஒரு வாகனம், ஒரு நல்ல குடியிருப்பு வீடு, அவ்வப்போதான விடுமுறை ஓய்வுகள் ஆகியவற்றின் வாய்ப்புகள் கொண்ட, கட்சியிடம் அதிகபட்ச சம்பளத்தைப் பெறக் கூடிய ஒரு கம்யூனிஸ்டின் சமூக நிலையானது நிலக்கரிச் சுரங்கங்களில் மாதத்திற்கு ஐம்பது முதல் அறுபது ரூபிள்கள் வரை சம்பாதிக்கும் ஒரு கம்யூனிஸ்டின் சூழ்நிலையில் இருந்து வேறுபடுகிறது.”

அதிகாரத்தில் இருந்தபோது ஜாக்கோபின்கள் சீரழிந்ததற்கான காரணங்களை —சொத்துச் சேர்க்க அலைந்தமை, அரசாங்க ஒப்பந்தங்கள் விநியோகங்களில் பங்குபெற்றமை மற்றும் பிற— நினைவுகூர்ந்த ராக்கோவ்ஸ்கி, புதிய ஆளும் அடுக்கின் சீரழிவுக்கு ஜாக்கோபின்கள் மிகவும் மென்மைமனது காட்டிய பிரபுத்துவத்தின் முன்னாள் இளம் பெண்களின் பங்களிப்பு கொஞ்ச நஞ்சமல்ல என்பதான பொருளில் பாபேஃவ் (Babeuf) கூறிய கவலையுடனான கருத்தை மேற்கோள் காட்டுகிறார். "என்ன செய்கிறாய், சிறு இதயம் படைத்த சாமானியனே?" கூக்குரலிடுகிறார் பாபேஃவ். "இன்று அவர்கள் உன்னையும் என்னையும் கட்டித் தழுவுகிறார்கள், நாளை அவர்கள் உன் கழுத்தை நெரிப்பார்கள்". சோவியத் ஒன்றிய ஆளும் தட்டின் மனைவிகள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தினால் இதேபோன்றதொரு சித்திரத்தையே அது காட்டும். புகழ்பெற்ற சோவியத் பத்திரிகையாளரான ஸோஸ்னோவ்ஸ்கி, சோவியத் அதிகாரத்துவத்தின் அறநெறி உருவாக்கத்தில் “வாகன- மகளிர் குழு காரணி” ஆற்றிய சிறப்புப் பங்கினை சுட்டிக் காட்டினார். ஸோஸ்னோவ்ஸ்கியும், ராக்கோவ்ஸ்கியைப் பின்பற்றி, தான் கூறியதில் இருந்து பின்வாங்கினார், பின் சைபீரியாவில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டனர்-பச் செய்யப்பட்டார்- என்பதெல்லாம் உண்மை தான். ஆயினும் அது அதிகாரத்துவத்தின் அறநெறிகளை முன்னேற்றி விடவில்லை. மாறாக, அந்த திருப்பி அழைக்கப்பட்டமை-பின்வாங்கலே- அறநெறிகளது சீரழிவு அதிகரித்துச் செல்வதற்கான சான்றாக இருக்கிறது.

கையெழுத்துப் பிரதிவடிவத்தில் கைக்குக் கை மாறி வந்த ஸோஸ்னோவ்ஸ்கியின் முன்னைய கட்டுரைகள், புதிய ஆளும் தட்டின் வாழ்க்கையில் இருந்தான மறக்கமுடியாத அத்தியாயங்களால் மின்னின. எத்தகைய பரந்த மட்டத்திற்கு வென்றவர்கள் வெற்றிகொள்ளப்பட்டவர்களின் அறநெறிகளை உட்கிரகித்துக் கொண்டு விட்டிருக்கிறார்கள் என்பதை இவை அப்பட்டமாகக் காட்டின. எப்படியோ, கடந்த வருடங்களுக்கு நாம் திரும்ப வேண்டாம். ஏனென்றால் ஸோஸ்னோவ்ஸ்கியே இறுதியாக தன் சாட்டையைக் கொடுத்து விட்டு பதிலுக்கு ஒரு மீட்டும் இசைக் கருவியை 1934 ஆம் ஆண்டில் வாங்கிக் கொண்டு விட்டார். சோவியத் ஊடகங்களில் இருந்தான புதிய உதாரணங்களுடன் நாம் நம்மை மட்டுப்படுத்திக் கொள்வோம். தூற்றல்களையும், மிதமிஞ்சியவையாகக் சொல்லப்படுவனவற்றையும் நாம் தேர்வு செய்யப் போவதில்லை, மாறாக உத்தியோகபூர்வ பொது அபிப்ராயத்தின் அங்கீகரிப்புடைய அன்றாட நிகழ்வுகளையே எடுத்துக் கொள்வோம்.

ஒரு பிரபலமான கம்யூனிஸ்டும் மாஸ்கோ தொழிற்சாலையின் மேலதிகாரியுமான ஒருவர் பிராவ்தாவில், தன் தலைமையில் இயங்கும் நிறுவனத்திலான கலாச்சார வளர்ச்சி பற்றி பெருமை பேசுகிறார்: "ஒரு இயந்திர இயக்குனர் தொலைபேசியில் பேசுகிறார்: 'உங்கள் உத்தரவு என்ன, ஐயா, எரிஅடுப்பை உடனடியாக சோதிக்க வேண்டுமா அல்லது காத்திருக்கட்டுமா?' நான் பதிலளித்தேன்: 'காத்திரு' என்று". இயந்திர இயக்குனர் மேலதிகாரியை அபரிமித மரியாதையுடன் பன்மையில் விளிக்கிறார், மேலதிகாரியோ அவருக்கு ஒருமையில் விளித்து பதிலளிக்கிறார். எந்த கலாச்சாரமிக்க முதலாளித்துவ நாட்டிலும் கூட சாத்தியமில்லாத இந்த கண்ணியமற்ற உரையாடல், முற்றிலும் இயல்பான ஒன்றினைப் போல அந்த மேலதிகாரியாலேயே பிராவ்தாவின் பக்கங்களிலேயே குறிப்பிடப்படுகிறது! ஆசிரியர் இதனை ஆட்சேபிக்கவில்லை, ஏனென்றால் அவர் இதனைக் கவனிக்கவில்லை. வாசகர்கள் ஆட்சேபிக்கவில்லை, ஏனென்றால் அவர்களுக்கு இது பழகி விட்டது. நமக்கும் ஆச்சரியமாக இல்லை, ஏனென்றால் கிரெம்ளினில் நடைபெறும் கோலாகலமான அமர்வுகளில் "தலைவர்களும்" மற்றும் மக்கள் ஆணையர்களும், பதக்கங்களைப் பெறுவதற்காக சிறப்பாக அழைக்கப்பட்ட, தங்களுக்குக் கீழ் பணிபுரியும் தொழிற்சாலை இயக்குநர்களையும், கூட்டுற்பத்திப் பண்ணைகளின் தலைவர்களையும், தொழிற்சாலையின் மேற்பார்வையாளர்களையும் உழைக்கும் பெண்களையும் ஒருமையிலேயே அழைக்கிறார்கள். மேலதிகாரிகள் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களை ஒருமையில் அழைப்பதை தடை செய்ய வேண்டும் என்பது ஜாரிச ரஷ்யாவில் மிகவும் பிரபலமான புரட்சிகரக் கோரிக்கை முழக்கங்களில் ஒன்றாக இருந்தது என்பதை நினைவில் கொள்ள அவர்கள் எவ்வாறு மறந்திருக்க முடியும்!

அவற்றின் பிரபுத்துவ வகை திமிர்த்தனத்தில் திகைக்கச் செய்வதாக இருக்கின்ற, கிரெம்ளின் அதிகாரிகளது "மக்களுடனான" இந்த உரையாடல்கள், அக்டோபர் புரட்சி, உற்பத்தி சாதனங்கள் தேசியமயமாக்கப்பட்டமை, கூட்டுற்பத்தி முறை, மற்றும் "குலாக்குகள் ஒரு வர்க்கமாக இருக்காது கலைக்கப்பட்டமை" இவை அத்தனைக்குப் பின்னரும் கூட, மனிதர்களிடயேயான உறவுகள், சோவியத் பிரமீட்டின் மிக உயர்மட்டங்களிலும் கூட, சோசலிசத்தின் உயரத்திற்கு எழுந்திருக்கவில்லை என்பதோடு மட்டுமல்ல, பல அம்சங்களில் ஒரு கலாச்சாரமிக்க முதலாளித்துவத்திற்கும் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கின்றன என்பதற்கே சந்தேகத்திற்கிடமின்றி சாட்சியமளிக்கின்றன. சமீப வருடங்களில் இந்த முக்கியமான வட்டத்தில் பிரம்மாண்டமான பல பிற்போக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.  உண்மையிலேயே இந்த ரஷ்ய காட்டுமிராண்டித்தனம் புத்துயிர் பெறுவதற்கான ஊற்றுமூலமாக இருப்பது, கலாச்சாரம் குறைந்த அதிகாரத்துவத்திற்கு முழு சுதந்திரத்தையும் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலையையும் கொடுத்திருக்கின்றதும், வெகுஜனங்களுக்கு கீழ்ப்படிவு மற்றும் வாய்பேசாமை ஆகிய நன்கறிந்த வேதவாக்குகளையும் கொடுத்திருக்கின்றதுமான சோவியத் தேர்மிடோர் தான் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை.

வடிகட்டிய சர்வாதிகாரத்தை வடிகட்டிய ஜனநாயகத்துடன் பேதப்படுத்திப் பார்த்து, அவற்றின் சாதகபாதகங்களை முழுப் பகுத்தறிவின் தராசில் எடைபோட்டுப் பார்க்க நோக்கம் கொள்வதெற்கெல்லாம் வெகுதூரத்தில் தான் நாம் இருக்கிறோம். மாற்றம் மட்டுமே நீடிக்கும் இந்த உலகில் அனைத்தும் சார்பியலானவையே. போல்ஷிவிக் கட்சியின் சர்வாதிகாரம் வரலாற்றில் முன்னேற்றத்திற்கான மிகவும் சக்தி வாய்ந்த சாதனங்களில் ஒன்றாக நிரூபணமானது. ஆனால் இங்கும் கவிஞரின் வரிகளில் சொல்வதானால், "நியாயம் அநியாயமாகிறது, பெருந்தன்மை தொந்தரவாகி விடுகிறது".5 எதிர்க் கட்சிகளின் தடையானது, அதன்பின் கன்னைகளின் மீதான தடையை கொண்டுவந்தது. கன்னைகளின் மீதான தடையானது தவறிழைக்க முடியாத தலைவரின் வழியில் அல்லாமல் வேறு வழியில் சிந்திப்பதை தடுப்பதில் முடிந்தது.

போலிஸ் கொண்டு கட்சியின் ஒற்றைத்தூண் பிம்பம் உருவாக்கப்பட்டமையானது, அதிகாரத்துவம் கேள்விகேட்கப்படும் பயமற்றுப் போவதில் விளைந்து, அனைத்து வகையான ஒழுங்கீனங்களுக்கும் ஊழல்களுக்கும் ஊற்றுமூலமாக ஆகியிருக்கிறது.

தேர்மிடோரின் சமூக வேர்கள்

வெகுஜனங்களின் மீது அதிகாரத்துவம் வெற்றி கண்டதையே சோவியத் தேர்மிடோர் என்று நாம் வரையறை செய்திருக்கிறோம். இந்த வெற்றியின் வரலாற்று நிலைமைகளை எடுத்துக்காட்டவும் நாம் முயன்றிருக்கிறோம். பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர முன்னணிப் படையின் ஒரு பகுதி நிர்வாக எந்திரத்தால் விழுங்கப்பட்டு படிப்படியாக விரக்தியடையச் செய்யப்பட்டது, ஒரு பகுதி உள்நாட்டு யுத்தத்தில் அழிக்கப்பட்டு விட்டது, ஒரு பகுதி வெளியில் தூக்கியெறியப்பட்டு நசுக்கப்பட்டு விட்டது. களைத்துப் போயும் பிரமைவிலகியும் இருந்த வெகுஜனங்கள், உயர் அடுக்குகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து அக்கறை கொள்ளாமல் இருந்தனர். இந்த நிலைமைகள், தன்னளவில் முக்கியமானவையாக இருக்கின்ற போதிலும் கூட, அதிகாரத்துவம் சமூகத்திற்கும் மேலாக தன்னை உயர்த்திக் கொண்டுவிடுவதிலும் அதன் தலைவிதியை தன் சொந்த கரங்களில் உறுதியாக கைப்பற்றிக் கொள்வதிலும் எவ்வாறு வெற்றி பெற்றது என்பதை விளக்குவதற்கு அவை மட்டும் போதுமானவையல்ல. எப்படியும் அதன் சொந்த விருப்பம் மட்டும் இதற்கு போமானதாக இருக்க முடியாது; ஒரு புதிய ஆளும் தட்டின் எழுச்சிக்கு ஆழமான சமூக காரணங்கள் கண்டிப்பாக இருந்தாக வேண்டும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் ஜாக்கோபின்களை தேர்மிடோரியன்கள் வெற்றிகண்ட போதும் வெகுஜனங்களின் களைப்பும் தலைமைக் காரியாளர்களின் விரக்தியும் அதற்கு உதவியிருந்தனதான், ஆனாலும் அடிப்படையில் சந்தர்ப்பவசமான இந்த நிகழ்வுப்போக்குகளுக்கு கீழே ஒரு ஆழமான உயிர்த்துடிப்பான நிகழ்ச்சிப்போக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஜாக்கோபின்கள் மாபெரும் அலையால் உயர்த்தப்பட்டிருந்த கீழ்மட்ட குட்டி முதலாளித்துவத்தின் மீது தங்கியிருந்தனர். ஆயினும், பதினெட்டாம் நூற்றாண்டின் புரட்சியானது, உற்பத்தி சக்திகளது அபிவிருத்தியின் பாதைக்கு ஏற்ப, நீண்டகாலப் போக்கில் மாபெரும் முதலாளித்துவத்தை அரசியல் உயரத்திற்குக் கொண்டு வராமல் இருக்க முடியவில்லை. தவிர்க்கமுடியாத இந்த நிகழ்ச்சிப்போக்கிலான ஒரு கட்டமாக  மட்டுமே தேர்மிடோர் இருந்தது. சோவியத் தேர்மிடோரில் இதைப் போன்ற என்ன சமூக அவசியம் வெளிப்பாடு கண்டது?

ஆயுதம்தரித்த போலிஸ் அமைப்பு (gendarme) ஏன் வெற்றிபெற்றது என்ற கேள்விக்கு ஆரம்பநிலை பதிலை அளிக்க ஏற்கனவே முந்தைய அத்தியாயங்களில் ஒன்றில் நாம் முயற்சி செய்திருக்கிறோம். இப்போது முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசத்திற்கு உருமாறுவதற்கான நிலைமைகள் மற்றும் இந்த நிகழ்ச்சிப்போக்கில் அரசின் பாத்திரம் ஆகியவற்றின் மீதான நமது பகுப்பாய்வை நாம் விரிவுபடுத்தியாக வேண்டும். தத்துவரீதியான மதிப்பீடுகளை திரும்பவும் யதார்த்தத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். “முதலாளித்துவ வர்க்கத்தையும் அதன் எதிர்ப்பையும் ஒடுக்குவது இப்போதும் அவசியமாகவே இருக்கிறது” 1917 இல் லெனின், அதிகாரத்தைக் கைப்பற்றிய உடன் உடனடியாகத் தொடங்கவிருந்த காலகட்டம் பற்றிக் கூறும்போது, எழுதுகிறார், “ஆனால் ஒடுக்கும் அங்கமாய் இங்கே இப்போது பெரும்பான்மை மக்கள் இருப்பார்கள், இதுவரை இருந்து வந்திருப்பதைப் போல ஒரு சிறுபான்மை எண்ணிக்கை இருக்காது .... அந்த அர்த்தத்தில் அரசு உலர்ந்து உதிரத் தொடங்குகிறது". இந்த உலர்ந்து உதிர்தல் எதில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது? பிரதானமாக, "தனிச்சலுகை பெற்ற ஒரு சிறுபான்மை எண்ணிக்கையினரின் (தனிச்சலுகை பெற்ற அதிகாரிகள், நடப்பு இராணுவத்தின் தளபதிகள்) சிறப்பு ஸ்தாபனங்களின் இடத்தில், பெரும்பான்மையினரே நேரடியாக ஒடுக்குமுறை செயல்பாடுகளை மேற்கொள்ள” இயலும் என்ற உண்மையில். இதனைத் தொடர்ந்து மறுக்கமுடியாத மற்றும் பதிலளிக்க முடியாத ஒரு வசனத்தை லெனின் கூறுகிறார்: "அரசு அதிகாரத்தின் செயல்பாடுகள் நிறைவேற்றமானது எவ்வளவு பரவலான கரங்களின் மூலம் நிகழ்கிறதோ, அவ்வளவுக்கு அந்த அதிகாரத்திற்கான தேவை குறைந்து விடுகிறது". உற்பத்தி சாதனங்கள் தனியார் சொத்தாக இருப்பதிலிருந்து தடைசெய்யப்பட்டமையானது எண்ணிலடங்கா பெரும்பான்மையினருக்கு எதிராக சிறுபான்மையினரின் சொத்துடைமை தனிச்சலுகைகளைப் பாதுகாப்பது என்ற வரலாற்றுவழிவந்த அரசின் பிரதான வேலையை அகற்றி விடுகிறது.

லெனினின் கருத்துப்படி, அபகரித்தவர்களிடம் பறிமுதல் செய்த அந்த நாளிலேயே, அதாவது புதிய ஆட்சி அதன் பொருளாதார மற்றும் கலாச்சார பிரச்சினைகளை கையிலெடுக்கும் நேரத்திற்கு முன்னரே, அரசின் உதிர்தல் தொடங்கி விடுகிறது. இந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளில் பெறுகின்ற ஒவ்வொரு வெற்றியுமே அரசின் கலைப்பில், சோசலிச சமூகத்தில் அது கரைக்கப்படுவதில் ஒரு அடுத்த முன்னேற்றம் என்று அர்த்தமாகும். இந்த கரைப்பின் மட்டம் தான் சோசலிச கட்டுமானத்தின் ஆழத்தையும் பலாபலன்களையும் காட்டுகின்ற சிறந்த குறியீடாக இருக்கும். இந்த சமூகவியல் தேற்றத்தை நாம் தோராயமாக இப்படி முன்வைக்கலாம்: ஒரு தொழிலாளர் அரசில் வெகுஜனங்களால் பிரயோகிக்கப்படும் பலவந்தத்தின் வலிமையானது சுரண்டும் போக்குகள் அல்லது முதலாளித்துவ மீட்சி அபாயத்தின் வலிமைக்கு நேர் விகிதாசாரத்திலும், மற்றும் புதிய ஆட்சிக்கான சமூக ஐக்கியம் மற்றும் பொதுவான விசுவாசம் இவற்றின் வலிமைக்கு எதிர் விகிதாசாரத்திலும் இருக்கும். இவ்வாறாக அதிகாரத்துவமானது —அதாவது, “சலுகையுடைய அதிகாரிகள் மற்றும் முழுநேர இராணுவத்தின் தளபதிகள்"— வெகுஜனங்கள் செலுத்த முடியாத அல்லது செலுத்த விரும்பாத, அத்துடன், ஏதேனும் ஒரு வகையில், அந்த வெகுஜனங்களுக்கு எதிராகவே செலுத்தப்படுவதாக இருக்கின்ற, ஒரு தனிவகையான  பலவந்தத்தைக் குறிக்கிறது.

ஜனநாயக சோவியத்துகள் இந்த நாள் வரை தங்களின் உண்மையான வலிமையையும் சுதந்திரத்தையும் பாதுகாத்து வத்திருந்தன என்றால், இருந்தும் ஆரம்ப ஆண்டுகளின் அளவுக்கு அடக்குமுறைகளிலும் பலவந்தங்களிலும் இறங்க வேண்டியிருந்திருந்தால், அந்த சூழ்நிலையே கூட தீவிரமான கவலையளிப்பதாகவே இருக்கிறது. வெகுஜன சோவியத்துகள் ஒட்டுமொத்தமாக காட்சியிலிருந்தே மறைந்து விட்டன என்பதும், பலவந்தத்தின் செயல்பாடு மொத்தமாக ஸ்ராலின், யகோடா மற்றும் குழுவினரின் வசம் கொடுக்கப்பட்டு விட்டிருக்கின்றன என்பதுமான உண்மை எத்தனை பெரிய அபாய எச்சரிக்கையை அளிப்பதாக இருக்க வேண்டும். அத்துடன் எத்தகைய வடிவத்திலான பலவந்தங்கள்! முதலில் நாம் நம்மையே கேட்டுக் கொள்ள வேண்டும்: அரசாங்கத்தின் இந்த பிடிவாதமான கீழிறங்காமையின் பின்னால், குறிப்பாக அதன் அரசியல்மயமாக்கத்திற்குப் பின்னால் இருக்கும் சமூக காரணம் என்ன? இந்த கேள்வியின் முக்கியத்துவம் வெளிப்படையானது: கிடைக்கும் பதிலின் அடிப்படையில் தான், ஒன்று பொதுவாக சோசலிச சமூகம் குறித்து நாம் கொண்டிருக்கும் மரபான பார்வைகளை தீவிரமாக திருத்திக்கொள்ள வேண்டியிருக்கும், அல்லது சோவியத் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ மதிப்பீடுகளை தீவிரமாக நிராகரிக்க வேண்டியதாயிருக்கும்.

இப்போது சமீபத்திய மாஸ்கோ செய்தித்தாள் ஒன்றில் இருந்து, இப்போதைய சோவியத் ஆட்சி குறித்து பல்லவியாக பாடப்படும் சித்தரிப்புகளில் ஒன்றை எடுத்துப் பார்க்கலாம். இவற்றில் நாடு முழுவதும் அன்றாடம் திரும்பத் திரும்ப சொல்லப்படுவதாக இருக்கின்ற ஒன்று, பள்ளிக்குழந்தைகளுக்கும் மனப்பாடமாக பதிந்து விட்ட ஒன்று இது: "சோவியத் ஒன்றியத்தில் முதலாளிகள், நிலப்பிரபுக்கள் மற்றும் குலாக்குகளின் ஒட்டுண்ணி வர்க்கங்கள் முழுமையாக கலைக்கப்படுகின்றன, இவ்வாறாய் மனிதன் மனிதனால் சுரண்டப்படும் நிலைக்கு என்றென்றைக்குமாய் முடிவு கட்டப்படுகிறது. ஒட்டுமொத்த தேசியப் பொருளாதாரமும் சோசலிசமயமாய் ஆகியிருக்கிறது, வளர்ந்து வரும் ஸ்டக்ஹானோவ் இயக்கம் சோசலிசத்தில் இருந்து கம்யூனிசத்திற்கு உருமாறுவதற்கான நிலைமைகளைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது". (பிராவ்தா, ஏப்ரல் 4, 1936). கம்யூனிச அகிலத்தின் உலக ஊடகத்திற்கு இந்த விடயம் பற்றி கூறுவதற்கு வேறொன்றுமிருக்கவில்லை என்பதை சொல்லத் தேவையில்லை.

ஆனால் சுரண்டலுக்கு "என்றென்றைக்குமாய் முடிவு கட்டப்பட்டு” விட்டிருந்தால், நாடு உண்மையிலேயே சோசலிசத்தில் இருந்து அதாவது கம்யூனிசத்தின் முதற்கட்ட நிலையில் இருந்து அதன் உயரிய கட்டத்தை நோக்கி இப்போது நடைபோட்டுக் கொண்டிருக்கிறதானால், சமூகத்திற்கு அரசு எனும் அதன் கட்டுத்தளையை இறுதியாகத் தூக்கியெறிவதைத் தவிர செய்வதற்கு வேறொன்றும் தேவையிருக்காது. அதற்குப் பதிலாக —இந்த முரண்பாட்டை சிந்தனையில் விளங்கிக்கொள்வதுகூட கடினமானது!— சோவியத் அரசு ஒரு சர்வாதிபத்திய-அதிகாரத்துவ குணநலனை அல்லவா கொண்டிருக்கிறது.

இதே மரணஅபாயமிக்க முரண்பாடுதான் கட்சியின் தலைவிதியிலும் காட்சியளிக்கிறது. இங்கே இந்த பிரச்சினை தோராயமாக இவ்வாறு சூத்திரப்படுத்தப்படலாம்: 1917 ஆம் ஆண்டு முதல் 1921 ஆம் ஆண்டு வரை, பழைய ஆளும் வர்க்கங்கள் இன்னும் தங்கள் கைகளில் ஆயுதங்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த வேளையில், அவர்களுக்கு மொத்த உலகத்தின் ஏகாதிபத்தியவாதிகளிடம் இருந்தும் செயலூக்கத்துடன் ஆதரவு கிட்டிய வேளயில், ஆயுதபாணியான குலாக்குகள் இராணுவத்திற்கும் நாட்டின் உணவு விநியோகத்திற்கும் எதிராக சதி செய்த வேளையில், கட்சியில் கொள்கை தொடர்பான அதிமுக்கிய பிரச்சினைகளில் மிக வெளிப்படையாகவும் அச்சமின்றியும் கருத்துமோதல் நிகழ்வது எவ்வாறு சாத்தியமாக இருந்தது? ஏன் இப்போது, தலையீடுகள் எல்லாம் ஓய்ந்து விட்ட பின்னர், சுரண்டும் வர்க்கங்கள் தகர்க்கப்பட்டு விட்ட பின்னர், தொழிற்துறைமயமாக்கத்தின் சந்தேகத்திற்கிடமற்ற வெற்றிகளுக்குப் பின்னர், மிகப் பெருவாரி பெரும்பான்மையான விவசாயிகள் கூட்டுற்பத்திக்கு கொண்டுவரப்பட்டு விட்ட பின்னர், நினைவில் நிற்காத தலைவர்களின் ஒரு சிறு விமர்சன வார்த்தையும் கூட அனுமதிக்கப்பட சாத்தியமில்லாமல் போகிறது? கட்சியின் அரசியல்சட்டத்திற்கு இணங்க அதன் பேரவைக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு அழைப்பு விடக் கோரும் எந்த போல்ஷிவிக்கும் உடனடியாக கட்சியில் இருந்து வெளியேற்றப்படும்படி ஏன் ஆகிறது, ஸ்ராலினின் தவறிழைக்க முடியாத தன்மையில் சந்தேகம் கொள்ளும் எந்தவொரு குடிமகனும் தனது சந்தேகத்தை சத்தமாக வெளிப்படுத்தினால் ஏதோ ஒரு பயங்கரவாத சதியில் பங்கேற்றதைப் போல அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டு குற்றவாளியாக்கப்பட நேர்கிறது? ஒடுக்குமுறையின் மற்றும் போலிஸ் எந்திரத்தின் இந்த மோசமான, பயங்கரமான மற்றும் தாங்கமுடியாத தீவிரம் எங்கிருந்து வருகிறது?

தத்துவம் என்பது, யதார்த்தத்தின் எந்த சமயத்திலும் செல்லுபடியாகக் கூடியதாய் நீட்டத்தக்க ஒரு நோட்டு அல்ல. ஒரு தத்துவம் பிழை என்று நிரூபணமானால், நாம் அதனைத் திருத்த வேண்டும் அல்லது அதன் ஓட்டைகளை அடைக்க வேண்டும். சோவியத் யதார்த்தத்திற்கும் மரபுவழியான மார்க்சிச கருத்தாக்கத்திற்கும் இடையிலான பேதத்திற்கு வழிவகுத்த உண்மையான சமூக சக்திகளை நாம் கண்டுபிடித்தாக வேண்டும். எப்படியாயினும் நாம் சம்பிரதாயமான வாசகங்களை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு, இருட்டில் உலாவிக் கொண்டிருக்கக் கூடாது, அது தலைவர்களின் கவுரவத்தைக் காக்க வேண்டுமானால் உபயோகப்படலாமே தவிர, வாழுகின்ற யதார்த்தத்தை கன்னத்தில் அறைவதாகவே அது இருக்கும். இது குறித்த ஒரு நம்பிக்கையளிக்கும் உதாரணத்தை இப்போது பார்ப்போம்.

மக்கள் ஆணையர்கள் கவுன்சிலின் தலைவரான மோலோடோவ், 1936 ஜனவரியில் மத்திய நிறைவேற்றுக் குழுவின் ஒரு அமர்வில் பேசுகையில், அறிவித்தார்: "நாட்டின் தேசியப் பொருளாதாரம் சோசலிசமயமானதாகி விட்டது (கைதட்டல்). அந்த அர்த்தத்தில் [?] வர்க்கங்கள் கலைக்கப்படுவதான பிரச்சினையை நாம் தீர்த்திருக்கிறோம் [கைதட்டல்]". இருப்பினும் கடந்த காலத்தின் “இயல்பிலேயே நமக்குக் குரோதமான கூறுகள்” முன்னாள் ஆளும் வர்க்கங்களின் எச்சசொச்சங்கள் இன்னும் மிஞ்சியிருக்கின்றன. இதுதவிர, கூட்டுற்பத்தி விவசாயிகள், அரசு அலுவலர்கள் மற்றும் சில சமயங்களில் தொழிலாளர்களிலும் கூட "குட்டி ஊகவணிகர்கள்" காணப்படுகிறார்கள், “கூட்டுற்பத்தி மற்றும் அரசின் சொத்து தொடர்பாக கையூட்டு பெறுபவர்கள் மற்றும் சோவியத்-விரோத கிசுகிசுக்களை பரப்புவர்கள் போன்றவர்கள்” இருக்கிறார்கள். எனவே தான் சர்வாதிகாரத்தை இன்னமும் வலுப்படுத்துவதற்கான அவசியம் உண்டாகிறது. ஏங்கெல்ஸ் கூறியதற்கு மாறாக, தொழிலாளர் அரசு "தூங்கி விடக் கூடாது", மாறாக இன்னும் கூடுதலான விழிப்புடன் இருக்க வேண்டும்.

சோவியத் அரசாங்கத்தின் தலைவரால் காட்டப்பட்ட இந்த சித்திரம், ஒருவேளை மரணகரமான சுய-முரண்பாடு கொண்டதாக இல்லாமல் இருந்திருக்குமாயின், மிகப்பெரும் அளவில் நம்பிக்கையளிப்பதாக இருந்திருக்கும். நாட்டில் சோசலிசம் முழுமையாக நிலவுகிறது: "அந்த அர்த்தத்தில்" வர்க்கங்கள் ஒழிக்கப்பட்டு விட்டன என்கிறார் (அந்த அர்த்தத்தில் ஒழிக்கப்பட்டு விட்டதென்றால், மற்ற எல்லா அர்த்தத்திலும் அவை இருக்கின்றன). கடந்த காலத்தின் மிஞ்சிய துண்டுகள் மற்றும் எச்சசொச்சங்களால் சமூக அமைதி அங்கொன்றும் இங்கொன்றுமாய் உடைகிறது என்பது நிஜம்தான், ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக்கிடக்கின்ற, முதலாளித்துவ மீட்சி குறித்த கனவு காணுவோர், அவர்களது அதிகாரம் மற்றும் உடைமைகள் எல்லாம் பறிக்கப்பட்டு விட்ட நிலையில், "குட்டி ஊகவணிகர்கள்" (வெறுமனே ஊக வணிகர்கள் கூட இல்லை!) மற்றும் "கிசுகிசு பரப்புபவர்கள்" உடன்சேர்ந்து, வர்க்கமற்ற சமுதாயத்தை தூக்கியெறியுமளவுக்கு திறம்படைத்தவர்களாய் இருக்கிறார்கள் என்று கற்பனை செய்வது சாத்தியமில்லை அல்லவா. எல்லாமே நீங்கள் எண்ணிப்பார்க்கத்தக்க ஆகச்சிறந்த வகையில் சிறப்பாக சென்று கொண்டிருப்பதாக தென்படுகிறதென்றால் பின் அதிகாரத்துவத்தின் இரும்புப்பிடி சர்வாதிகாரத்தின் பயன்பாடு எதற்காக?

அந்த பிற்போக்குத்தனமான கனவுகாண்போர் கொஞ்சம் கொஞ்சமாய் உதிர்ந்து காணாமல் போய் விடுவார்கள் என்றுதானே நாம் நம்பவேண்டும். "குட்டி முதலாளித்துவ ஊக வணிகர்”களும் "கிசுகிசு"க்களும் உச்ச ஜனநாயக சோவியத்துகளால் சிரித்து புறந்தள்ளப்படக் கூடியதாக அல்லவா இருக்க வேண்டும்.

"நாங்கள் கற்பனாவாதிகள் அல்ல" அதிகாரத்துவ அரசு குறித்த முதலாளித்துவ மற்றும் சீர்திருத்தவாத தத்துவாசிரியர்களுக்கு 1917 ஆம் ஆண்டில் பதிலிறுத்தார் லெனின்.  "தனிநபர்கள் வரம்பு மீறி நடந்து கொள்வதற்கான சாத்தியம் மற்றும் தவிர்க்கமுடியாத தன்மையையோ அதேபோல இத்தகைய வரம்புமீறல்களை ஒடுக்குவதற்கான அவசியம் இருப்பதையோ நாங்கள் எவ்விதத்திலும் மறுக்கவில்லை. ஆனால் அதற்கு தனியாக ஒரு எந்திரம், ஒரு சிறப்பு ஒடுக்குமுறை எந்திரம் அவசியமில்லை. ஆயுதபாணியாக இருக்கும் வெகுஜனங்கள் தாங்களே அதை செய்து கொள்ள முடியும். எப்படி சமகால சமுதாயத்திலும் நாகரிகமடைந்த எந்த மக்கள் கூட்டமும், சண்டைபோடும் சிலரை விலக்கி விட முடிகிறதோ அல்லது ஒரு பெண்ணிற்கு எதிரான ஒரு வன்முறைச் செயலைத் தடுத்து நிறுத்த முடிகிறதோ அதேயளவுக்கு எளிமையாக மற்றும் சுலபமாக". தனக்குப் பின்னால் அரசாங்கத் தலைமைக்கு  வரவிருப்பவர்களில் ஒருவர் கூறவிருப்பதை முன்கூட்டியே எதிர்பார்த்து பதிலளித்ததைப் போல இருக்கிறதல்லவா. லெனின் சோவியத் ஒன்றியத்தின் மக்கள் பள்ளிகளிலே கல்விபெற்றாரே அன்றி, மக்கள் ஆணையர்கள் கவுன்சிலில் அல்ல. இல்லாவிடின், லெனின் எந்தக் கட்டுமானத்திற்கு எதிராக தனது நன்கு கூர் தீட்டப்பட்ட ஆயுதங்களை செலுத்தினாரோ அந்தக் கட்டுமான வழியிலேயே மனக்கிலேசமின்றி பயணிக்கத் துணிந்த மோலோடோவின் செயலை விளக்குவது சாத்தியமில்லாது போயிருக்கும். ஸ்தாபகருக்கும் அவரது இழிபாசாங்கினருக்குமான உறுத்தலான முரண்பாடு நம் முன் நிற்கிறது! சுரண்டும் வர்க்கங்களின் கலைப்பே கூட ஒரு அதிகாரத்துவ எந்திரமின்றி சாதிக்கப்பட முடியும் என்று லெனின் தீர்ப்பளித்தார் என்றால், மோலோடோவோ, வர்க்கங்களைக் கலைத்த பின்னரும் அதிகாரத்துவ எந்திரம் மக்களின் சுதந்திரத்தை ஏன் கழுத்து நெரிக்க வேண்டும் என்பதை விளக்குவதற்கு, கலைக்கப்பட்ட வர்க்கங்களின் "எச்ச சொச்சங்களை" கைகாட்டுவதை விட வேறு மேம்பட்ட சாக்கினைக் காண முடியாதவராக இருக்கிறார்.

இந்த "எச்ச சொச்சங்களின்" மீது தங்கியிருப்பதும் கடினமாய் ஆகிவருகிறது ஏனென்றால், அதிகாரத்துவத்தின் அதிகாரபூர்வமான பிரதிநிதிகளே ஒப்புக்கொண்டதன்படி, நேற்றைய வர்க்க எதிரிகள் வெற்றிகரமாக சோவியத் சமூகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு விட்டார்கள். கட்சியின் மத்திய குழுவின் செயலாளர்களில் ஒருவரான போஸ்டிஷெவ், 1936 ஏப்ரலில் கம்யூனிச இளைஞர் கழகத்தின் ஒரு மாநாட்டில் இவ்வாறு தெரிவித்தார்: "சதிகாரர்களில் பலரும் உண்மையாக வருந்தித் திருந்தி சாமானிய சோவியத் மக்களுடன் இணைந்து விட்டார்கள்". கூட்டுற்பத்தியை வெற்றிகரமாக நடத்துவதைப் பொறுத்தவரை, "குலாக்குகளின் செயல்களுக்கு அவர்களின் பிள்ளைகள் பொறுப்பாக்கப்படக் கூடாது". இன்னும் சொன்னார்: "குலாக்குமே கூட கிராமத்தில் பழைய சுரண்டல் நிலைக்குத் திரும்ப முடியும் என்பதில் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்கிறார்". சமூக மூலத்துடன் தொடர்புடைய வரம்புகளை அரசாங்கம் தடை செய்ததில் காரணமில்லாமல் இல்லை! ஆனால் மோலோடோவ் முழுமையாய் உடன்பட்ட போஸ்டிஷெவின் திட்டவட்டமானது ஏதாவது அர்த்தம் கொடுக்கிறது என்றால் அது இதுதான்: அதிகாரத்துவம் காலத்திற்கு ஒவ்வாத அசுரனாய் ஆகியிருக்கிறது என்பது மட்டுமல்ல, பொதுவாக அரசின் பலவந்தத்திற்கு சோவியத்துகளின் மண்ணில் செய்வதற்கு எதுவொன்றும் இல்லை. ஆனால், மோலோடோவும் சரி அல்ல போஸ்டிஷெவும் சரி இந்த மறைக்கமுடியாத தேற்றமுடிவை ஒப்புக் கொள்வதாக இல்லை. சுய முரண்பாட்டை விலையாகக் கொடுத்தேனும் தமது அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதே அவர்களது தெரிவாய் இருக்கிறது.

நிஜத்திலும் கூட அவர்கள் அதிகாரத்தை நிராகரிக்க முடியாது. அல்லது அதனை புறநிலையின் மொழியில் மொழிபெயர்த்தால்: தற்போதைய சோவியத் சமூகமானது ஒரு அரசு இல்லாமல், ஏன் சில வரம்புகளுக்குள்ளாக ஒரு அதிகாரத்துவம் இல்லாமல் என்றும் சொல்லலாம், நடக்க முடியாது. ஆனால், அதன் காரணம் எந்த வகையிலும் பரிதாபகரமான கடந்த கால எச்சசொச்சங்கள் அல்ல, மாறாக நிகழ்காலத்தின் வலிமையான சக்திகளும் போக்குகளும் தான். இப்போதைய இடைமருவுக் கட்டுமானம் சமூக முரண்பாடுகளால் நிரம்பி இருக்கிறது, நுகர்வு மண்டலத்தில் அனைவராலும் மிக நெருக்கமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் உணரப்படுவதாய் இருக்கின்ற இவை மிகவும் பதட்ட நிலைமைகளில் இருப்பதோடு, உற்பத்தி மண்டலத்திற்குள்ளும் பரவுவதற்கு எப்போதும் அச்சுறுத்துவதாய் இருக்கின்றன என்ற உண்மையில் தான் பலவந்தத்திற்கான ஒரு எந்திரமாக ஒரு சோவியத் அரசின் இருப்புக்கான காரணநியாயம் அமைந்திருக்கிறது.

எனவே சோசலிசத்தின் வெற்றி இறுதியானதென்றோ திரும்பவியலாததென்றோ கூற முடியாது.

நுகர்வுப் பொருட்களின் விடயத்தில் சமுதாயத்தின் வறுமை, அதன்விளைவாய் ஒருவர் மற்ற அனைவருடனும் போட்டி போட வேண்டியிருக்கின்ற நிலை இதுதான் அதிகாரத்துவ ஆட்சியின் அடிப்படையாக இருக்கிறது. கடையில் போதுமான பொருட்கள் இருக்குமானால், வாங்குபவர்கள் தாங்கள் விரும்பும் நேரத்தில் வந்து வாங்க முடியும். பொருட்கள் கொஞ்சமாக இருக்கும்போது, வாங்குபவர்கள் வரிசையில் நிற்கும் நிர்ப்பந்தம் நேர்கிறது.

வரிசையின் நீளம் பெரியதாக ஆகும்போது, ஒழுங்கை நிலைநாட்ட ஒரு போலிஸ்காரரை நியமிப்பது அவசியமாகிறது. சோவியத் அதிகாரத்துவத்தின் அதிகாரத்தின் ஆரம்ப புள்ளியும் இத்தகையதே. யாருக்கு ஏதேனும் கிடைக்க வேண்டும் மற்றும் யார் காத்திருக்க வேண்டும் என்பதை அது "அறிந்து வைத்திருக்கிறது".

பொருளியல் மற்றும் கலாச்சார மட்டத்தின் உயர்வு சலுகைகளின் அவசியத்தைக் குறைக்க வேண்டும், "முதலாளித்துவ விதியை” பயன்படுத்தும் துறைகளை குறுக்க வேண்டும், மற்றும் அதன்மூலம் அதன் பாதுகாவலர்களாய் நிற்கும் அதிகாரத்துவத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்பதே மனதில் முதலில் தோன்றக் கூடியதாகும். ஆனால் யதார்த்தத்திலோ, நேரெதிராக நடந்திருக்கிறது: உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியானது இதுவரையில் அதனுடன் சேர்த்து சமத்துவமின்மை, சிறப்புச் சலுகை மற்றும் அனுகூலம் ஆகியவற்றின், ஆகவே அவற்றுடன் அதிகாரத்துவவாதத்தின் அத்தனை வடிவங்களது ஒரு அதீத வளர்ச்சியுடன் கரம்கோர்த்து வந்திருக்கிறது. அதுவும் எதேச்சையானதல்ல.

சோவியத் ஆட்சி அதன் முதல் காலகட்டத்தில், இப்போதிருப்பதை விடவும் மிக அதிக சமத்துவத்துடனும் குறைந்த அதிகாரத்துவமயப்பட்டும் இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது பொதுவான வறுமையிலான சமத்துவமாக இருந்தது. நாட்டின் வளஆதாரங்கள் மிகக் குறைவாக இருந்ததால் வெகுஜனங்களில் இருந்து தனிச்சலுகை கொண்ட பரந்தவொரு அடுக்கு பிரிவதற்கு அங்கே வாய்ப்பு எதுவும் இருக்கவில்லை. அதேசமயத்தில் சம்பளங்களின் "சமப்படுத்தும்" இயல்பு தனிமனித ஆர்வத்தை அழித்து உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு ஒரு பிரேக் (வேகத்தடை) போல் ஆகிவிட்டது. தனிச்சலுகைகள் கொழுத்துத் திரள்வது சாத்தியமாவதற்கு முன்பாக சோவியத் பொருளாதாரம் தன்னை வறுமையில் இருந்து ஓரளவு மேலான மட்டத்திற்கு உயர்த்திக் கொள்ள வேண்டியிருந்தது.. உற்பத்தியின் தற்போதைய நிலை எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதற்கு உத்தரவாதமளிக்கக் கூடிய நிலையில் இருந்து வெகுதூரத்தில் இருக்கிறது. என்றபோதும் ஒரு சிறுபான்மையினருக்கு கணிசமான தனிச்சலுகைகள் வழங்குவதற்கும், பெரும்பான்மையினரை குச்சியால் குத்தி வேலைவாங்குவதற்கான ஒரு சாட்டையாக சமத்துவமின்மையை மாற்றுவதற்கும் போதுமானதாக அது ஏற்கனவே இருக்கிறது. உற்பத்தியின் வளர்ச்சி இதுவரையில் அரசின் சோசலிச அம்சங்களை அல்லாமல் முதலாளித்துவ அம்சங்களை வலிமைப்படுத்தியிருப்பதற்கு இதுதான் முதல் காரணம்.

ஆனால் அது மட்டுமே ஒரே காரணம் அல்ல. தற்போதைய கட்டத்தில் முதலாளித்துவ ஊதிய வழிமுறைகளை கட்டளையிடுவதாக அமைந்திருக்கும் பொருளாதாரக் காரணிகளோடு சேர்ந்து, அதிகாரத்துவ உருவடிவில் அதற்கு இணையான ஒரு அரசியல் காரணியும் செயல்படுகிறது. அதன் வெகு அடிப்படையிலேயே அதுதான் சமத்துவமின்மையை விதைப்பதாகவும் அதனைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது. ஆரம்பத்தில் அது ஒரு தொழிலாளர் அரசின் முதலாளித்துவ அங்கமாகத் தோன்றியது. ஒரு சிறுபான்மையின் நலன்களை ஸ்தாபிக்கின்ற மற்றும் பாதுகாக்கின்றதான சமயத்தில், அதன் ருசியான மேற்பகுதியை அது தன் சொந்த பயன்பாட்டிற்காய் எடுத்துக் கொண்டு விடுகிறது. எப்போதும் சொத்தை எடுத்து விநியோகம் செய்கின்ற எவரொருவரும் அதில் தன்னை விலக்கிக் கொண்டு விடுவதில்லை. இவ்வாறாக ஒரு சமூக அவசியத்தில் இருந்து உருவான ஒரு அங்கம், அதன் சமூகத்திற்கு அவசியமான செயல்பாட்டளவை விஞ்சி வளர்ந்து, ஒரு சுதந்திரமான காரணியாக, ஆகவே ஒட்டுமொத்த சமூக உயிரினத்திற்கான ஒரு பெரும் அபாயத்திற்கான மூலமாக மாறியிருக்கிறது.

சோவியத் தேர்மிடோர் என்பதன் சமூக அர்த்தம் இப்போது நம் முன் வடிவம் பெறத் தொடங்குகிறது. பரந்த மக்களின் வறுமையும் கலாச்சார பின்தங்கிய நிலையும் சேர்ந்து மீண்டும், தன் கையில் ஒரு பெரிய தடியைத் தாங்கி நிற்கும் ஒரு பயமுறுத்தும் தோற்றமாக அவதாரம் எடுத்திருக்கிறது. வெறுக்கப்பட்ட மற்றும் தூற்றப்பட்ட அதிகாரத்துவமானது சமூகத்தின் சேவகனாக இருப்பதற்குப் பதிலாக மீண்டும் அதன் பிரபுவாகி இருக்கிறது. இந்தப் பாதையில், தன் நடவடிக்கைகளிலோ அல்லது வருவாயிலோ எந்த கட்டுப்பாட்டையும் அனுமதிக்க முடியாத மட்டத்துக்கு பரந்த மக்களிடம் இருந்து அது சமூகரீதியாகவும் தார்மீகரீதியாகவும் தன்னை அந்நியப்படுத்திக் கொண்டு விட்டிருக்கிறது.

"குட்டி ஊகவணிகர்கள், இலஞ்சப் பேர்வழிகள், மற்றும் இரகசிய முணுமுணுப்புக்கள்" குறித்த அதிகாரத்துவத்தின் மர்மமான அச்சமாகத் தென்படக்கூடிய ஒன்று, இவ்வாறாக ஒரு முழு இயல்பானதொரு விளக்கத்தைக் காண்கிறது. மக்களின் மிக அடிப்படையான தேவைகளைப் பூர்த்தி செய்ய இன்னும் இயலாதிருக்கும் நிலையில், சோவியத் பொருளாதாரமானது ஒவ்வொரு படிநிலையிலும் இலஞ்சம் மற்றும் ஊகவணிகத்திற்கான போக்குகளை உருவாக்கவும் மீண்டும் எழுப்பிநிறுத்தவும் செய்கிறது. மறுபக்கத்தில், புதிய பிரபுத்துவத்தின் தனிச்சலுகைகளானவை வெகுஜனங்களிடயே சோவியத்துக்கு-எதிரான "இரகசிய முணுமுணுப்பு”களுக்கு, அதாவது, காதோடு தான் என்றபோதிலும், பேராசை கொண்ட மற்றும் தன்னிச்சையாகச் செயல்படுகின்ற மேலதிகாரிகளை விமர்சிக்கும் எவரொருவருக்கும், காதுகொடுப்பதான போக்கினை உயிர்த்தெழச் செய்கிறது. ஆகவே, இது கடந்த காலத்தின் பூதங்கள் குறித்த பிரச்சினையல்ல, இப்போது உயிருடன் இல்லாதவற்றின் எச்ச்சொச்சங்கள் குறித்த பிரச்சினையல்ல, சுருக்கமாகச் சொல்வதென்றால், கடந்த ஆண்டு வெண்பனிகளின் பிரச்சினையல்ல, மாறாக தனிமனித சொத்துக் குவிப்புக்கான புதிய, வலிமையான, மற்றும் தொடர்ந்து மறுபிறப்பு கொள்கின்ற போக்குகள் குறித்த பிரச்சினையாகும். நாட்டில் முதன்முறையாக எழுந்திருக்கும் செழுமையின் அற்ப அலையானது, அதன் அற்பத்தின் காரணத்தினாலேயே, இந்த மையவிலக்கு போக்குகளை பலவீனப்படுத்தாமல் மாறாக அவற்றை பலப்படுத்தியிருக்கிறது. மறுபக்கத்தில், தனிச்சலுகையற்றவர்கள் தங்களை அணைக்க வருகின்ற புதிய கனவான்களின் கைகளைத் தட்டி விடுவதற்கு விருப்பம் கொள்கின்ற நிலையும் வளர்ச்சி கண்டிருக்கிறது. சமூகப் போராட்டம் மீண்டும் கூர்மையாக வளர்ச்சி காண்கிறது. இத்தகையவைதான் அதிகாரத்துவத்தின் அதிகாரத்துக்கான மூலவளங்களாக இருக்கின்றன. ஆனால் அதே மூலங்களில் இருந்துதான் அதன் அதிகாரத்திற்கான அச்சுறுத்தலும் வருகிறது.