ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

With Pakistan’s prime minister at his side,
Trump threatens to wipe Afghanistan “off the face of the Earth”

பாகிஸ்தான் பிரதம மந்திரி அருகில் இருக்க,

ட்ரம்ப் ஆப்கானிஸ்தானைப் "புவியில் இருந்த இடந்தெரியாமல்" துடைத்தழிக்க அச்சுறுத்துகிறார்

By Sampath Perera and Keith Jones
24 July 2019

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், திங்கட்கிழமை பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான் உடனிருந்த வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், அமெரிக்காவின் மிக நீண்ட போரை விரைவாக ஜெயிக்கும் விதத்தில் "ஒரு வாரத்தில்" ஆப்கானிஸ்தானியர்கள் “10 மில்லியன் பேரைக் கொல்ல" அச்சுறுத்தினார்.

அமெரிக்காவின் முப்படைகளின் தலைமை தளபதி, அவர் விரும்பினால் ஆப்கானிஸ்தானைப் "புவியில் இருந்த இடந்தெரியாமல்" அவரால் துடைத்தழிக்க முடியுமென திமிர்த்தனமாக பேசினார். ஆனால் பதினெட்டு ஆண்டுகால ஆப்கன் போரிலிருந்து அமெரிக்காவை அவர் "விடுவித்துக் கொள்ள" விரும்புவதாக தெரிவித்ததுடன், தாலிபான்களுடன் ஒரு "ஏற்பாட்டைச்" செய்து கொள்வதில் உதவுவதன் மூலமாக பாகிஸ்தான் இதற்கு ஒத்துழைக்குமென எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.


ஆப்கானிஸ்தானில் வீசப்பட்ட "அனைத்து குண்டுகளுக்கும் தாய்" (MOAB) என்ற மிகப்பெரிய வெடிகுண்டு

“நாங்கள் பொலிஸ்காரர்களைப் போல உள்ளோம்,” என ட்ரம்ப் பிரகடனப்படுத்தினார். “நாங்கள் போர் புரியவில்லை. ஆப்கானிஸ்தானில் ஒரு போரில் சண்டையிட்டு அதை ஜெயிக்க விரும்பினால், என்னால் அதை ஒரு வாரத்தில் ஜெயிக்க முடியும். நான் 10 மில்லியன் மக்களை கொல்ல விரும்பவில்லை, அவ்வளவு தான்,” என்றார்.

அவர் கருத்துக்கள் ஓர் அச்சுறுத்தலை தான் அர்த்தப்படுத்தின என்பதை அடிக்கோடிட ட்ரம்ப் இதை சேர்த்துக் கொண்டார், “மிகக் குறுகிய கால போரில் ஜெயிப்பதற்கு என்னிடம் திட்டம் இருக்கிறது” என்றதுடன், 10 மில்லியன் மக்களின் உயிரிழப்பைக் குறித்து மீண்டும் குறிப்பிட்டார். பின்னர் அவர் கான் பக்கம் திரும்பி, “வேறு யாரையும் விட நீங்கள் இதை சிறப்பாக புரிந்து கொள்வீர்கள்" என்றார்.

பாகிஸ்தானின் வடக்கு அண்டை நாட்டுக்கு எதிராக இனப்படுகொலை வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதற்கான ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு பாகிஸ்தான் பிரதம மந்திரி எந்த ஆட்சேபனையும் கூறவில்லை. அதற்கு பதிலாக கான் தரந்தாழ்ந்து அமெரிக்க ஜனாதிபதியை "உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாட்டின்" தலைவர் என்று புகழ்ந்தார். பின்னர், “மனம் நிறைந்த அவரின் கரிசனைமிக்க கவனிப்புக்கும்" மற்றும் "எங்களின் ஒட்டுமொத்த பிரதிநிதிகள் குழுவையும் சங்கோஜமின்றி கொண்டு சென்ற அவரின் அருமையான வழிநடத்தலுக்கும்" நன்றி கூறி கான் பணிவடக்கத்துடன் ஒரு ட்வீட் செய்தி வெளியிட்டார்.

காபூலில் உள்ள அமெரிக்க கைப்பாவை ஆட்சி, ட்ரம்ப் கருத்துக்களுக்கு "விளக்கமளிக்குமாறு" கேட்க நிர்பந்திக்கப்பட்டது, அதேவேளையில் "ஆப்கான் தலைமை இல்லாமல் வெளிநாட்டு தலைவர்கள் ஆப்கானிஸ்தானின் கதியைத் தீர்மானிக்க முடியாது" என மிக பலவீனமான முறையில் எதிர்த்தது. இதற்கு முரண்பட்ட விதத்தில், ஆப்கானிஸ்தான் எங்கிலும் மக்கள் பேரச்சத்துடனும் சீற்றத்துடனும் விடையிறுத்தனர், இதே உணர்வுகள்தான் உலகெங்கிலும் பத்து மில்லியன் கணக்கானவர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

இரத்தம் உறைய வைக்கும் ட்ரம்பின் அந்த கருத்துக்களை அமெரிக்க ஊடகங்கள் குறைத்துக் காட்டின. நியூ யோர்க் டைம்ஸ், "ஆப்கான் சமாதான பேச்சுவார்த்தைகளை வேகப்படுத்துவதற்காக, ட்ரம்ப் பாகிஸ்தானுடனான பதட்டங்களைத் தணிக்க முயல்கிறார்" என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையின் முடிவில் அவரின் கருத்துக்களைக் குறிப்பிடாமல் மறைத்தது.

ட்ரம்பின் திங்கட்கிழமை கருத்துக்கள் ஒரு வெளிநாட்டை நிர்மூலமாக்குவதற்கான அவரின் சமீபத்திய அச்சுறுத்தல் மட்டுமே ஆகும். அமெரிக்க அணுஆயுத தளவாடங்களை 1 ட்ரில்லியன் டாலர் மதிப்பில் "நவீனமயப்படுத்தவும்" மற்றும் மத்திய-தூர அணுஆயுத தளவாடங்கள் மீது ரஷ்யா உடனான உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதற்கும் உத்தரவிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி, உலகளாவிய அமெரிக்க மேலாதிக்கத்தின் பொறிவுக்கு முன்னதாக செயலாற்ற, அணுஆயுத வன்முறையைக் கட்டவிழ்த்துவிட செயலூக்கத்துடன் பரிசீலித்து வருகிறார் என்பதையும் அக்கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன.

ஆகஸ்ட் 2017 இல், ட்ரம்ப், 25 மில்லியன் மக்கள் வாழும் ஒரு வறிய நாடான வட கொரியாவுக்கு எதிராக "உலகம் இதுவரையில் பார்த்திராத நெருப்பு கக்கும் சீற்றத்தைக்" கட்டவிழ்த்து விட அச்சுறுத்தினார். ஜூலை 2018 இல், அவர் ஈரானுக்கு எதிராக திருப்பி விடப்பட்ட இதேபோன்றவொரு ஓர் அச்சுறுத்தலைத் தொடுத்து ட்வீட் செய்கையில், அது "இனிமேல்" வாஷிங்டனை "மீண்டும்" “அச்சுறுத்த" துணிந்தால், “வரலாறு நெடுகிலும் இதுவரை வெகுசில நாடுகளே பாதிக்கப்பட்டுள்ளதைப் போன்ற விளைவுகளால் பாதிக்கப்படும்" என்று ட்வீட் செய்தார்.

ட்ரம்பின் குரூர அச்சுறுத்தல்கள் இரண்டாம் உலக போருக்கு முன்னதாக பெரிதும் அடோல்ப் ஹிட்லரின் வெறித்தனமான ஆத்திரங்களை நினைவூட்டுகின்ற நிலையில், அவை வாஷிங்டன் உயரடுக்கின் பெரும்பாலானவர்களால் வெறுமனே சாமர்த்தியமற்ற நடவடிக்கையாக மட்டுமே பார்க்கப்படுகின்றன. ஆனால் இராணுவ-பாதுகாப்பு எந்திரமும் அமெரிக்க அரசியல் ஸ்தாபகமும், ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஒன்றுபோல, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார வீழ்ச்சியைக் குறை நிரப்ப வன்முறை, ஆக்கிரமிப்பு மற்றும் போரைப் பயன்படுத்துவதற்கு ஆதரவளிப்பதில் கருத்தொற்றுமையுடன் உள்ளன.

1991 இல் இருந்து மத்திய கிழக்கில், மத்திய ஆசியாவில் மற்றும் பால்கன்களில் அமெரிக்கா தொடுத்துள்ள முடிவில்லாத தொடர்ச்சியான போர்களில் ஆப்கான் போர் ஒன்று மட்டுமே. அனைத்திற்கும் மேலாக, உலகளாவிய அமெரிக்க மேலாதிக்கத்திற்கான முனைவு இப்போது அணுஆயுதமேந்திய ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக இராணுவ நிலைநிறுத்தல்கள், வர்த்தகப் போர்கள் மற்றும் பொருளாதார தடையாணைகள் உட்பட மூலோபாய அத்துமீறல்களாக மாறியுள்ளது.

கான், பாகிஸ்தான் இராணுவ தலைமை ஜெனரல் குமர் ஜாவித் பாஜ்வா, அந்நாட்டின் இழிபெயரெடுத்த உளவுத்துறை ISI இன் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் பியஜ் ஹமீத் ஆகியோர் ட்ரம்ப் மற்றும் அவர் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளுடன் நடத்திய விவாதங்களின் மையத்தில் ஐயத்திற்கிடமின்றி ஆப்கானிஸ்தான் இருந்தது என்ற அதேவேளையில், பாகிஸ்தானின் மேற்குப் பகுதி அண்டைநாடான ஈரானுக்கு எதிரான அமெரிக்க போர் முனைவும் கடந்த ஐந்தாண்டுகளில் முதல்முறையாக பாகிஸ்தானின் பிரதம மந்திரியை வாஷிங்டனுக்கு அழைக்கும் முடிவில் ஐயத்திற்கிடமின்றி ஒரு காரணியாக இருந்தது.

கடந்த மாதம், அமெரிக்க போர் விமானங்கள் ஈரான் மீது குண்டுவீசுவதற்கு வெறும் பத்து நிமிடங்களே இருந்தபோது ட்ரம்ப் மத்திய கிழக்கு முழுவதும் வேகமாக பரவி பிற வல்லரசுகளையும் கூட உள்ளிழுக்கக்கூடிய ஈரானுடனான ஓர் இராணுவ மோதலுக்கு அமெரிக்கப் படைகள் இன்னும் போதுமானளவுக்குத் தயாராக இல்லை என்று அஞ்சி அவற்றை பின்வாங்க அழைத்துக் கொண்டார்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க தடையாணைகள், அவையே கூட போருக்கு நிகராக உள்ள நிலையில், பாகிஸ்தான் அந்த தடையாணைகளுக்குத் தலைவணங்கி ஈரானிய இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான குழாய்வழி திட்டங்களை மீண்டுமொருமுறை கிடப்பில் போட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானின் பகுதிகளை, ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்காக இல்லை என்றாலும், ஊடுருவல்களை நடத்துவதற்கான களமாக பயன்படுத்த, பென்டகனும் சிஐஏ உம், ஈரானுக்கு தீவிர விரோதமான சவூதி முடியாட்சியுடன் நெருக்கமான உறவுகளை அனுபவித்து வரும் பாகிஸ்தானுக்கு அழுத்தமளித்து வருகின்றன.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆப்கன் போர் தோல்வி

நிஜத்தில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் போர் தொடுக்கவே இல்லை என்ற ட்ரம்பின் வாதம் அபத்தமானது. கடந்த 18 ஆண்டுகளின் போக்கில், அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் ஆப்கானிஸ்தானில் நூறாயிரக் கணக்கான துருப்புகள், டாங்கிகள் மற்றும் போர்விமானங்களை நிலைநிறுத்தி உள்ளதுடன், கொடூரமான வன்முறையை நடத்தி, எண்ணற்ற அட்டூழியங்களைப் புரிந்துள்ளனர். 2017 இல், ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், இதுவரை பயன்படுத்தியிராத மிகவும் சக்தி வாய்ந்த கொடூரமாக பாதிப்பேற்படுத்தும் அல்லது அணுஆயுதமல்லாத வெடிகுண்டை ஆப்கானிஸ்தான் மீது வீசியமையும் அதில் உள்ளடங்கும்.

பழைய புள்ளிவிபர மதிப்பீடுகளின்படி, அப்போரில் 175,000 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மறைமுக உயிரிழப்புகளையும் சேர்த்தால், இந்த எண்ணிக்கை அனேகமாக ஒரு மில்லியனுக்கு நெருக்கத்தில் இருக்கும். மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அவர்களின் வீடுகளை விட்டு வெளியேற தள்ளப்பட்டனர். இந்த எண்ணிக்கையுடன், அண்மித்து 2,300 அமெரிக்க இராணுவ சிப்பாய்கள் மற்றும் 1,100 ஏனைய நாடுகளது துருப்புகளின் உயிரிழப்புகளும் சேர்க்கப்பட வேண்டும்.

இருப்பினும் கூட, 2001 இலையுதிர் காலத்திய அமெரிக்க படையெடுப்புக்குப் பின்னர் இருந்து, வேறெந்த காலத்தையும் விட அதிகமாக இன்று அந்நாட்டின் பெரும்பகுதிகளை தாலிபான் தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

தாலிபானின் பிற்போக்குத்தனமான இஸ்லாமியவாத சித்தாந்தம் இருந்தாலும், அது அமெரிக்க ஆயுத பலத்தின் முன்னால் அவர்களது கிளர்ச்சியைத் தொடர்ந்து நடத்த முடிகிறது என்றால், ஏனென்றால் ஆப்கானிஸ்தானை அமெரிக்க-நேட்டோவைச் சார்ந்திருக்கும் மத்திய ஆசியாவின் புறக்காவல் இடமாக மாற்றுவதையும்; போரிலிருந்து இலாபமடைபவர்கள், பழங்குடியின தலைவர்கள், மற்றும் மரபார்ந்த ஆப்கான் உயரடுக்கின் ஏனைய பிரிவினரை உள்ளடக்கிய முற்றிலும் ஊழல்பீடித்த காபூல் அரசாங்கத்தை ஐந்தாம் படை ஆட்சியாக மாற்றுவதையும் நோக்கமாக கொண்ட ஒரு நவகாலனித்துவ படையெடுப்பாக அந்த போர் கருதப்படுகிறது என்ற காரணத்தினால் தான்.

ஆப்கான் தோல்வி —18 ஆண்டுகால போர் மற்றும் ஒரு ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவிட்ட பின்னரும் ஆப்கானிஸ்தானை அடிபணிய வைப்பதில் வாஷிங்டனின் தோல்வி— அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ-மூலோபாய ஸ்தாபகங்களுக்குள் மிகப் பெரும் பிளவுகளை உருவாக்கி உள்ளது.

ஈரான், வெனிசூலா, அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இன்னும் பல குறிப்பிடத்தக்க போட்டியாளர்களுக்கு எதிராகவோ, ஏனைய இடங்களிலும் ஆக்கிரமிப்பை பின்தொடர்வதற்காகவோ பென்டகன் அதன் ஆதார வளங்களை மீளநிலைநிறுத்த அனுமதிக்கும் வகையில், தாலிபானை ஓர் அரசியல் ஏற்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு ட்ரம்ப் முயன்று வருகிறார்.

ஆனால் அமெரிக்க ஆளும் உயரடுக்கின் பெரும்பான்மை, மிகக் குறிப்பாக இராணுவ-பாதுகாப்பு எந்திரம், எந்தவொரு ஏற்பாடும் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து இராணுவம் பிரசன்னம் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென வாதிடுகிறது. இது, முதலும் முக்கியமாகவும், ஏனென்றால் அதன் மூலோபாய முக்கியத்துவத்திற்காக ஆகும்: ஆப்கானிஸ்தான் எரிசக்தி வளம் மிக்க மத்திய ஆசியாவின் இதயதானத்தில், ஈரான் மற்றும் சீனா இரண்டினது எல்லைகளைத் தொட்டவாறு, ரஷ்யாவுக்கும் அருகே அமைந்துள்ளது.

அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகள் சிதைவுறுதல்

போரின் தீர்வை வாஷிங்டனுக்கு சாதகமான வரையறைகளில் பெறுவதற்காக தாலிபான் மீது இராணுவ மற்றும் அரசியல் அழுத்தங்களை செலுத்த பாகிஸ்தான் "இன்னும் அதிகமாக செய்ய" வேண்டுமென்று வாஷிங்டன் நீண்டகாலமாக கோரி வருகிறது.

சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான அமெரிக்க முனைவின் பாகமாக ஆப்கானிஸ்தானில் 1980 களில் முஹாஜிதீன் கொரில்லா கிளர்ச்சியை சிஐஏ ஊக்குவித்ததில், பாகிஸ்தானின் இராணுவ-பாதுகாப்பு எந்திரம் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது, பின்னர் அதன் தாலிபான் துணைஅமைப்பு அதிகாரத்திற்கு வருவதையும் அது ஆதரித்தது.

வாஷிங்டன் தாலிபான் ஆட்சியுடன் ஓர் உடன்படிக்கையை எட்டுவதற்கான அதன் சொந்த முயற்சிகளை கைவிட்டு, மத்திய ஆசியாவில் அமெரிக்க காலடியை ஸ்தாபிக்க அது 9/11 சம்பவங்களைச் சாதகமாக்கிய பின்னர், பாகிஸ்தான் வாஷிங்டனுக்கு முக்கிய தளவாட பரிவர்த்தனை உதவி வழங்கியதுடன், அதனையடுத்து அதன் கூட்டாட்சியால் நிர்வகிக்கப்படும் அதன் சொந்த பழங்குடியினர் பகுதிகளில் தாலிபானுடன் அணிசேர்ந்த படைகளுக்கு எதிராக மூர்க்கமான கிளர்ச்சி-ஒடுக்கும் போரையும் நடத்தியது.

ஆனால் பாகிஸ்தானிய இராணுவம், சிஐஏ கையேட்டின்படி முன்நகர்ந்து, போரை நிறுத்துவதற்கான எந்தவொரு அரசியல் ஏற்பாட்டிலும் இஸ்லாமாபாத்தின் குரல் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, தாலிபான் உடனான அதன் அனைத்து உறவுகளையும் வெட்டுவதிலிருந்து ஒதுக்கி கொண்டது.

இஸ்லாமாபாத்துடனான அதன் உறவுகளை வாஷிங்டன் குறைத்துக் கொண்டமை மற்றும் இந்தியாவைச் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவினது முன்னணி அரசாக மாற்றும் நோக்கில் அதை அதன் பிரதான தெற்காசிய கூட்டாளியாக ஊக்குவித்தமை ஆகியவை ஆப்கானிஸ்தானில் அதன் நலன்களைப் பெறுவதன் மீது பாகிஸ்தானுக்கு முன்பினும் அதிக கவலையை உண்டாக்கியதுடன், சீனாவுடனான அதன் நீண்டகால இராணுவ-பாதுகாப்பு பங்காண்மையை விரிவாக்கி கொண்டது. இந்த இரண்டாவது அபிவிருத்தி 60 பில்லியன் டாலர் சீன-பாகிஸ்தான் பொருளாதார பெருந்திட்டத்தில் எடுத்துக்காட்டப்பட்டதுடன், அது வாஷிங்டன் மற்றும் இஸ்லாமாபாத்திற்கு இடையே பாரியளவில் பதட்டங்களை அதிகரித்துள்ளது.

கடந்த தசாப்தத்தில், குறிப்பாக 2011 இக்குப் பின்னர் இருந்து, அங்கே அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகள் சிதைந்துள்ளன.

கானுக்கு முன்பிருந்த நவாஸ் ஷெரீஃப் போலவே கானும், அமெரிக்காவுடனான உறவுகளை மீளமைக்கும் முயற்சியில் வாஷிங்டனுக்கான ஒரு அழைப்புக்காக நீண்டகாலமாக அழுத்தமளித்து வந்தார். பொருளாதார மற்றும் புவிசார்அரசியல் காரணங்கள் இரண்டுக்குமாக, இஸ்லாமாபாத் அது கடந்த காலத்தில் செய்ததைப் போலவே சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எப்பாடுபட்டாவது சமப்படுத்துவதற்கான ஒரு வழியைக் காண முடியுமென நம்பி வருகிறது.

அமெரிக்க மேலாதிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) பாகிஸ்தானுக்கு அவசரகால கடன்கள் வழங்க கடந்த மாதம் உடன்பட்டது. செப்டம்பர் 2016 மற்றும் இந்தாண்டு பெப்ரவரியில் புதுடெல்லி நடத்திய "அதிநுட்ப" இராணுவ தாக்குதல்கள் தெற்காசியாவின் அந்த எதிர்விரோத அணுஆயுத சக்திகளைப் போர் விளிம்புக்குக் கொண்டு வந்திருந்த நிலையில், அவற்றுக்கு வாஷிங்டன் அதன் ஆதரவை வழங்கியதாலும் இஸ்லாமாபாத் கதிகலங்கி இருந்தது.

கானின் அமெரிக்க பயணம் உண்மையில் அமெரிக்க-பாகிஸ்தானிய உறவுகளின் சீரழிவைத் தடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆப்கான் போர் ஒத்துழைப்புக்கான தொகை மற்றும் பிற உதவித்தொகைகளை உடனடியாக மீட்டமைக்க வேண்டுமென்ற கானின் முறையீடுகளை ட்ரம்ப் நிராகரித்ததுடன், “நாங்கள் அந்த பணம் செலுத்திய போது" இருந்ததை விட இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சிறப்பாகவே இருக்கின்றன என்று அகந்தையோடு அறிவித்தார். பின்னர் அவர் அறிவுறுத்துகையில், வாஷிங்டனின் கட்டளைகள் மாற்றப்படலாம் என்றாலும் அவற்றுக்கு இஸ்லாமாபாத் அடிபணிந்தால், “நாம் எவற்றில் செயல்படுகிறோம் என்பதைப் பொறுத்து, ஒருவேளை அவை திரும்பக் கிடைக்கலாம்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

காஷ்மீர் சம்பந்தமான இந்திய-பாகிஸ்தானிய மோதலில் ஒரு "மத்தியஸ்தராக" அல்லது "நடுவராக" இருக்க அவர் "மனமுவந்து விரும்புவதாக" கூறி ட்ரம்ப், கானைச் சந்தோஷப்படுத்தினார். புது டெல்லி உடனான அதன் கருத்துவேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு, தசாப்தங்களாக, பாகிஸ்தான் வெளி அதிகாரங்களை, குறிப்பாக வாஷிங்டனை, அதில் சம்பந்தப்படுத்த முயன்றுள்ளது.

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து உதவ வேண்டுமென இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதாக கூறிய கருத்துக்கள் உட்பட ட்ரம்பின் கருத்துக்கள் உடனடியாக இந்தியாவில் ஓர் அரசியல் கொந்தளிப்பைத் தொடங்கிவிட்டது. மோடி அதுபோன்றவொரு அறிவுறுத்தலை ஒருபோதும் வெளியிடவில்லை என்று புது டெல்லி கோபத்துடன் மறுத்தது.

தாலிபான் உடனான பேச்சுவார்த்தைகளில் எந்தவொரு பாத்திரமும் வகிப்பதில் இருந்தும் மற்றும் ஆப்கன் போரில் ஓர் அரசியல் ஏற்பாடு என்றழைக்கப்படுவதைக் குறித்த விவாதங்களிலும் இந்தியா தவிர்க்கப்படுவதைக் குறித்து இதுவரையில் இந்தியாவின் ஆளும் உயரடுக்கு திருப்திகரமாக இல்லை. ஆனால் கானைப் போலவே, மோடியும் பத்து மில்லியன் கணக்கான ஆப்கானிஸ்தானியர்களை, அனுமானித்தக்க வகையில் அணுஆயுதங்களைப் பிரயோகித்து, நிர்மூலமாக்குவதற்கான ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் மீது முற்றிலும் மவுனமாக இருந்தார்.