ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French state demands four months’ jail for “yellow vest” protester Eric Drouet

“மஞ்சள் சீருடை" போராட்டக்காரர் எரிக் துருவேக்கு பிரெஞ்சு அரசு நான்கு மாத சிறை தண்டனை கோருகிறது

By Anthony Torres
11 June 2019

வெள்ளிக்கிழமை, 30 வது வாரயிறுதி “மஞ்சள் சீருடை" போராட்டங்களுக்கு முன்னதாக, பிரெஞ்சு அரசு வழக்கறிஞர்கள் "மஞ்சள் சீருடை" இயக்க தலைவர்களில் ஒருவரான எரிக் துருவேக்கு எதிராக நான்கு மாத சிறைத் தண்டனை கோரினர். “வன்முறை அல்லது சீரழிவுக்குத் தயாரிப்பு செய்யும் கண்ணோட்டத்துடன் குழு சேர்த்ததாகவும்" மற்றும் ஓர் ஆர்ப்பாட்டத்தின் போது "தடைசெய்யப்பட்ட D ரக ஆயுதங்களை வைத்திருந்ததாகவும்" அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. துருவேயின் நடத்தை முற்றிலும் அமைதியானதாக இருந்துள்ளது, இந்த குற்றச்சாட்டுக்கள் முழுமையாக ஜோடிக்கப்பட்டவையாகும்.

டிசம்பர் மாத இறுதியில், பொலிஸ் துருவேயைக் கைது செய்தது. "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களில் பொலிஸ் வன்முறையால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த அவர் கொன்கோர்ட் சதுக்கத்தில் ஒரு பேரணியை ஒழுங்கமைத்திருந்தார். ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமையைப் பகிரங்கமாக மறுத்தளிக்கும் விதத்தில் இந்த கைது நடவடிக்கைக்கான காரணம், அந்த பேரணி குறித்து நிர்வாக அதிகார பிரிவுக்கு முன்னதாக தெரியப்படுத்தப்படவில்லை என்பதாக இருந்தது. “சேதம் விளைவிக்க" அவர் மரத்துண்டு ஒன்று வைத்திருந்ததாகவும் துருவே மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

துருவேக்கு ஏற்கனவே மார்ச் 29 இல் 2,000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. “முன்கூட்டி தெரியப்படுத்தாமல்" ஓர் ஆர்ப்பாட்டத்தை "ஒழுங்கமைத்ததற்காக" தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட 500 யூரோ அபராதமும் அதில் உள்ளடங்கும்.


எரிக் துருவே கடந்த டிசம்பரில் கைது செய்யப்பட்ட போது

அவர் வழக்கறிஞரின் தகவல்படி, முதல் தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்த துருவே, பொலிஸ் அவரைக் கைது செய்தபோது "மரத்துண்டு ஒன்று" வைத்திருந்ததற்காக இம்முறை ஆஜராகி இருந்தார். அவரது வழக்கறிஞர் டிசம்பர் 22 ஆர்ப்பாட்டத்தின் அமைதியான தன்மையைச் சுட்டிக்காட்டினார். அரசுதரப்பு வழக்கறிஞர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் நான்கு மாதகால சிறைத் தண்டனை விதிக்க கோரியுள்ளார். நீதிமன்ற தீர்ப்பு செப்டம்பர் 4 இல் வழங்கப்படும்.

துருவேக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்பதுடன், பிரான்சில் பொலிஸ் அரசு அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது என்ற உண்மையை இது சுட்டிக்காட்டுகிறது. டிசம்பர் 22 போராட்டம் ஒரு பாரிய ஆர்ப்பாட்டமாக இருக்கவில்லை, பாரிய ஆர்ப்பாட்டத்தை வழமையாக முன்கூட்டியே பொலிஸிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றாலும் சிறிய ஒன்றுகூடலாக இருந்த அதற்கு அரசு தடை விதிக்க விரும்பியது. இந்த நீதிமன்ற முடிவைக் கொண்டு பார்க்கையில், ஆளும் வர்க்கம் ஒரு சமிக்ஞை அளிக்கிறது: அதாவது எந்தவொரு நிஜமான அரசியல் எதிர்ப்பு நடவடிக்கையும், அது சட்டத்தால் பாதுகாக்கப்பட்டிருந்தாலும் கூட, குற்றகரமாக்கப்பட்டு நீதிமன்ற வழக்கினுள் இழுக்கப்படும்.

வழக்கறிஞர் Kheops Lara நீதிபதிகளை எச்சரித்தார், “நீங்கள் என்ன முடிவெடுக்கப் போகிறீர்களோ அது 'மஞ்சள் சீருடை' இயக்கம் குறித்ததாகும்,” தன் கட்சிக்காரர் பேரணிகளில் "ஒரு முக்கிய பிரமுகர்" என்பதால் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார் என்பதை நீதிபதிகள் "மனதில் வைத்துக் கொள்ள" வேண்டும் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். “நான் ஒரு பயங்கரவாதியை பாதுகாக்கவில்லை, தொடர்ந்து 32 வாரமாக அதிக ஜனநாயகத்திற்கும் சமூக நீதிக்கும் அழைப்பு விடுத்து வருகின்ற ஒருவரையே பாதுகாக்கிறேன்,” என்று கூறிய லாரா, “இந்த இயக்கத்தை ஒடுக்கும் நோக்கில் அரசியலாக்கப்பட்ட ஒரு சட்ட வழக்கு" என்று கண்டனம் தெரிவித்தார்.

அவர் “சேதம் ஏற்படுத்த ஒரு மரத்துண்டை" வைத்திருந்தார் என்ற துருவே மீதான குற்றச்சாட்டை அன்றைய நாள் எடுக்கப்பட்ட காணொளிகள் ஒன்றுமில்லாமல் ஆக்கின. துருவே வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று கூறவும் கூட அரசு முயற்சிக்கவில்லை. ஆனால் "மஞ்சள் சீருடையாளர்கள்" மற்றும் பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் அதிகரித்து வரும் வர்க்க கோபத்தின் முன்னால் விஷமப்பிரச்சாரத்தைப் பற்றியுள்ள இந்த அரசு, பாரீசில் ஒரு கிளர்ச்சியை தொடங்கி எலிசே மாளிகையைக் கைப்பற்றும் நோக்கில் ஒரு தனியார் போராளிகள் குழுவின் தலைவராக துருவே பாரீஸ் வந்திறங்கினார் என்பதைப் போல அவரைக் கையாள்கிறது.

இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டு வரும் Le Monde, அவர் கைது செய்யப்பட்டதைக் குறித்து வழங்கிய அதன் விவரிப்பிலும் கூட, அவர் நடத்தை சட்டபூர்வமானது மற்றும் அமைதியானது என்பதை எடுத்துக்காட்டுகிறது: “ஆர்ப்பாட்டக்காரர்களின் ஒரு குழு அந்த வீதியில் செல்ல அமைதியாக காத்திருக்கிறது அதேவேளையில் பொலிஸ் அவர்களை எல்லா தரப்பிலிருந்தும் சூழ்ந்து கொள்கிறார்கள். அந்த காட்சியைப் படமெடுக்கும் ஓர் ஆர்ப்பாட்டக்காரர் 'CRS க்கு எரிக் வேண்டும், ஆனால் நாங்கள் அவரை எங்களுடன் வைத்திருக்கிறோம்' என்கிறார். ஒரு சுவரில் சாய்ந்தவாறு, எரிக் துருவே அவரின் சில நண்பர்களுடன் பேசியவாறு, அவர் போனில் டைப் செய்து கொண்டிருக்கிறார். அக்குழுவில் ஒரு உறுப்பினர் பொலிஸை அவமதித்த போது, பொலிஸ் அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி, அக்கூட்டம் சிதறிய அடுத்த நொடி, மலைத்து நின்ற கூட்டத்தின் முன்னால் எரிக் துருவேயைக் கைது செய்தது.”

அவர் கைது செய்யப்பட்ட பின்னர், துருவே ஒரு பொலிஸ் வண்டிக்கு அழைத்து செல்லப்பட்டு பார்வையிலிருந்து மறைக்கப்பட்டார். தாக்குதல்கள் நடத்தப்பட்டால் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு டிரக் ஓட்டுனராக அவர் பயன்படுத்தும் ஒரு மரத்துண்டை பொலிஸ் அவர் பையில் கண்டுபிடித்தது. ஆனால் ஊடக செய்திகள் தெளிவுப்படுத்தியதைப் போல, துருவேக்கு வன்முறையில் இறங்க எந்த உத்தேசமும் இருக்கவில்லை. பொலிஸ் அவரைக் கைது செய்த போதும் அவர் எதிர்க்கவில்லை.

துருவேயின் வழக்கு எல்லா போராட்டக்காரர்களையும் பீதியூட்டவும், அதேவேளையில் அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளை நசுக்கவும் ஒரு முன்னுதாரணத்தை அமைக்க நோக்கம் கொண்டுள்ளது. அது பிரான்சுவா ஹோலாண்டின் முந்தைய சோசலிஸ்ட் கட்சியின் கீழ் கொண்டு வரப்பட்ட பொலிஸ்-அரசு நடவடிக்கைகளைப் பயன்படுத்தி வருகிறது.

துருவேயின் அமைதியான நடவடிக்கைகளுக்கும் வன்முறையான பொலிஸ் தாக்குதலுக்கும் இடையிலான இடைவெளி, பிரான்சிலும் ஐரோப்பா எங்கிலுமான அசாதாரண சமூக சமத்துவமின்மை மட்டங்களின் விளைவாகும். நிதியியல் பிரபுத்துவம் ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் வர்க்க போராட்டத்தின் ஒரு மீளெழுச்சியை எதிர்கொண்டு வருகிறது. எல்லா தரப்பிலிருந்தும் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதை உணரும் ஆளும் வர்க்கம் அதிகரித்து வரும் தொழிலாளர்கள் எதிர்ப்பாலும் மற்றும் "மஞ்சள் சீருடை" போராட்டங்களை முன்னறிகுறியாக கொண்ட தொழிலாள வர்க்க போராட்டத்தின் இன்னும் அதிக பலமான வெடிப்பைக் குறித்தும் பீதியூற்றுள்ளது.

துருவே மீதான வழக்கு, நாஜி ஆக்கிரமிப்புக்குப் பின்னர் பிரான்சில் மிகப் பெரிய கைது நடவடிக்கைகளைக் கண்டுள்ள "மஞ்சள் சீருடையாளர்கள்" மீதான வன்முறையான ஒடுக்குமுறையின் பாகமாகும். 7,000 க்கும் அதிகமான "மஞ்சள் சீருடையாளர்கள்" கைது செய்யப்பட்டுள்ளனர், சுமார் 2,000 பேர் பொலிஸால் காயமடைந்துள்ளனர், டஜன் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் LBD களுக்கும் (சிறுகுண்டு துப்பாக்கிகள்) மற்றும் கண்ணீர்புகை குண்டுகளுக்கும் கண்களையோ அல்லது கரங்களையே இழந்துள்ளனர்.

இப்போது, பொலிஸ் ஒரு சிறிய கூட்டத்தைக் கூட சட்டவிரோதமானதாக அறிவிக்க பேஸ்புக் அல்லது சமூக வலைத் தளங்களின் கருத்து பதிவுகளைக் கையிலெடுக்கிறது. எந்தவொரு ஆர்ப்பாட்டமும் பொலிஸின் எதேச்சதிகார முடிவால் சட்டவிரோதமாக அறிவிக்கப்படலாம், இது அரசின் கொள்கையை எதிர்க்கும் எவரொருவருக்கு எதிராகவும் சட்டபூர்வ குற்றச்சாட்டுக்களுக்கு இட்டுச்செல்லும்.

துருவே வன்முறைக்காக கைது செய்யப்படவில்லை, அவரின் பையிலிருந்து அந்த மரத்துண்டை பொலிஸ் அவரை கைது செய்த போது எடுக்கவில்லை. தெளிவாக அவர் மீதான குற்றத்தீர்ப்புக்கு ஒரு சாக்குபோக்கைக் காண்பதற்காக அவரைச் சோதனையிட்டு கைது செய்ய உத்தரவிட்டிருந்தது.

மக்ரோனின் மதிப்பற்ற பேரம்பேசல்களுக்கான முன்மொழிவுகளை எதிர்த்த "மஞ்சள் சீருடையாளர்களின்" ஒரு பிரிவுக்கு அவர் செய்தி தொடர்பாளராக ஆகியிருந்தார் என்பதற்காகவே அரசாங்கம் துருவேயை இலக்கில் வைத்தது. செப்டம்பர் மாத தொடக்கத்தில், நேரடியாக எலிசே மாளிகைக்கு அணிவகுக்கும் ஒரு போராட்டத்திற்கு அவர் பகிரங்கமாக அழைப்பு விடுத்த பின்னர், அரசாங்கம் துருவேயின் வீட்டைச் சோதனையிட்டது, அவரின் மனைவியை மிரட்டும் ஒரு முயற்சியாக அவரை விசாரித்தது. அப்போதிருந்து அரசும் நீதித்துறையும் அவருக்கு எதிராக தொடர்ந்து அழுத்தமளிக்கும் மற்றும் மிரட்டும் ஒரு பிரச்சாரத்தை நடத்தி வந்துள்ளன.