Print Version|Feedback
US gears up for World War III with largest defense contract in history
அமெரிக்கா வரலாற்றிலேயே மிகப்பெரிய பாதுகாப்புத்துறை ஒப்பந்தத்துடன் மூன்றாம் உலக போருக்கு ஆயத்தமாகிறது
Andre Damon
13 June 2019
மொத்தம் 34 பில்லியன் டாலர் செலவில் அண்ணளவாக 500 F-35 ரக போர்விமானங்களை வாங்குவதற்கு உடன்பட்டு, பென்டகன் அதன் வரலாற்றிலேயே ஒரு மிகப்பெரிய ஆயுத கொள்முதலை திங்களன்று அறிவித்தது.
இலகுவில் பாதிப்புகளுக்கு உள்ளாககூடிய அந்த போர்விமானத்தை இழிவார்ந்தரீதியில் ஊதாரித்தனமாக பென்டகன் விலைக்கு வாங்குவதில் இந்த தொகை வெறும் முன்பணம் மட்டுந்தான். அந்த ரக போர்விமானத்தின் வடிவமைப்பு இரண்டு மேலோட்டமான முன்னுரிமைகளின் அடிப்படையில் உள்ளது: ரஷ்யா மற்றும் சீனா போன்றவற்றுடன் "வல்லரசு" போரில் சண்டையிடுவதற்காகவும், லாக்ஹீட் மார்ட்டீன் நிறுவனத்தினதும் மற்றும் முன்னாள் காங்கிரஸ் சபை உறுப்பினர்களின் கும்பலினதும் மற்றும் அதன் சம்பள பட்டியலில் உள்ள ஓய்வூபெற்ற தளபதிகளினதும் பைகளை நிரப்புவதற்காகவும் ஆகும்.
அந்த உடன்படிக்கை, முடிவாக ஆயிரக் கணக்கான போர்விமானங்களைக் களத்தில் நிறுத்த திட்டமிட்டு வருகின்ற பென்டகன் அனுப்பிய கேட்பாணைகளில், F-35 ரக போர்விமானங்களின் 12, 13 மற்றும் 14வது தொகுப்புகளாகும். பணத்தைச் சேமிப்பதற்கான ஒரு திட்டமாக 2001 இல் கணக்கில் எழுதப்பட்ட அந்த ஒவ்வொரு விமானத்தின் விலையும், முடிவாக ஆரம்ப மதிப்பீட்டை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.
அமெரிக்க விமானப்படையின் F-22 விமானம் [படம்: அமெரிக்க விமானப்படை]
மொத்த உத்தேச செலவை 1.5 ட்ரில்லியனாக கொண்டுள்ள இந்த ஒரேயொரு ஆயுத அமைப்புமுறைக்கான செலவு மட்டுமே ஒரு கால் நூற்றாண்டுக்கு அமெரிக்க கல்வித்துறைக்கு நிதி வழங்கிவிடும்.
F-35 க்கு வக்காலத்து வாங்குவதில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை விட தலையாயவர் யாருமில்லை, அவர் அவரின் கோல்ப் விளையாட்டு சொத்துக்களில் ஒன்றை போல அதை ஊக்குவிக்கிறார். ட்ரம்ப் புதனன்று மதியம் போலந்து ஜனாதிபதி ஆன்ட்ர்செஜ் டூடா உடனான கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பை, அந்த போர்விமானத்தை ஊக்குவிப்பதற்கான ஒரு புகைப்பட நிகழ்வாக மாற்றி இருந்தார். வெள்ளை மாளிகையின் மேலே ஒரு F-35 விமானம் மிதவேகத்தில் பறந்து சென்ற நிலையில், அவர் 32 போர்விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு போலந்து உடன்பட்டதற்காக அதை பாராட்டினார்.
இராணுவ பார்வையாளர்கள் முன்னால் உரையாற்றுகையில், ட்ரம்ப் காங்கிரஸ் மூலமாக அவர் முன்நகர்த்தி உள்ள பாரியளவிலான இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கு குறித்து வழமையாக தற்பெருமை பீற்றிக் கொள்வதுடன், குறிப்பாக F-35 மீதான பென்டகனின் பாரிய செலவுகளை ஆர்ப்பரிக்கிறார். கடந்த மாதம் விமானப்படை பயிலக தொடக்க விழாவில் உரையாற்றுகையில், பட்டப்படிப்பு அதிகாரிகளிடம் இருந்து பெற்ற பெரும் கரகோஷத்திற்கு விடையிறுப்பாக, அமெரிக்க ஜனாதிபதி "நாம் விலைக்கு வாங்கும் இந்த புதிய அழகான போர்விமானங்கள் அனைத்தையும் நீங்கள் பெரிதும் விரும்புவீர்கள்" என்று அறிவித்தார்.
ட்ரம்ப் தொடர்ந்து குறிப்பிட்டார்: “கடந்தாண்டு... நமது போர்விமானங்களுக்கு ஆதரவாக நாம் 700 பில்லியன் டாலர்களை ஒதுக்கினோம், அதைத் தொடர்ந்து மற்றொரு 716 பில்லியன் டாலர் —மில்லியன் இல்லை— பில்லியன் டாலர் ஒதுக்கினோம். அதுவும் ஒரு 'B.’ இனை கொண்டு,” என்றார்.
பனிப்போருக்குப் பின்னர் பாதுகாப்புத்துறை செலவினங்களில் மிகப்பெரிய அதிகரிப்புகளைக் கொண்டுள்ள இவ்விரு பென்டகன் வரவு-செலவு திட்டக் கணக்குகளும் பெருவாரியாக இரு கட்சிகளது ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன. செனட் சபை ஜனநாயக கட்சியினரில் எண்பத்தி ஒன்பது சதவீதம் பேர், ரஷ்யா மற்றும் சீனாவுடன் "வல்லரசு" மோதலுக்கு அமெரிக்க இராணுவத்தைத் தயாரிப்பு செய்யும் வெளிப்படையான நோக்கில், சமீபத்திய பாதுகாப்புத்துறை வரவு-செலவு திட்டக்கணக்கை நிறைவேற்ற வாக்களித்தனர்.
வெள்ளை மாளிகை இந்தாண்டு இதை இன்னும் அதிகரிக்க நோக்கம் கொண்டுள்ளது. அடுத்த திங்கட்கிழமை 750 பில்லியன் டாலர் பாதுகாப்புத்துறை வரவு-செலவு திட்டக்கணக்கு முன்மொழிவைச் சமர்பிக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது, இத்தொகை பென்டகன் கோரிய தொகையை விட 18 பில்லியன் டாலர் கூடுதலாகும்.
பாதுகாப்பு தொழில்துறை நிர்வாகிகளின் ஒரு சிறிய படை, "ஆலோசகர்களாக" சேவையாற்றும் முன்னாள் தளபதிகள் மற்றும் இராணுவ-தொழில்துறை கூட்டுக்குத் தரகர்களாக மாறியுள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆகிய இவர்கள், காப்பி தயாரிப்பு இயந்திரங்களுக்கு 7,622 டாலரும் மற்றும் கழிவறை இருப்புகளுக்கு 640 டாலரும் ஒதுக்கியதற்காக இழிபெயரெடுத்துள்ள ஓர் இராணுவத்திற்குள் இந்த தொகைகள் பாய்ச்சப்படுவதற்காக வாயில் எச்சில் ஊற காத்திருக்கின்றனர்.
அமெரிக்க போரால் இலாபமடைபவர்களுக்கான வழமையான தரமுறைகளாலேயே கூட, F-35 திட்டம், படுமோசமான ஊழல் பங்கினை பெறுகிறது. இது எந்தளவுக்கு என்றால் போர்வெறியரும் இராணுவத்திற்கு ஆமாம்-சாமி போடுபவருமான ஜோன் மெக்கெயின் அதை "கொள்முதல் துஷ்பிரயோகத்திற்கான விளம்பர படமாக,” ஒரு "மோசடியாக,” ஒரு "துயரமாக" குறிப்பிடும் அளவுக்கு இருந்தது.
அரசு மேற்பார்வை திட்ட அலுவலக தகவல்படி, “வடிவமைப்பிலேயே, [அமெரிக்க இராணுவ] சேவைகள் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த ஆயுத முறைகளை முறையாக பயன்படுத்த அவசியப்படும் மிகவும் அடிப்படை செயல்பாடுகளில் பலவற்றை சுதந்திரமாக செயல்படுத்த முடியாது.” லாக்ஹீட் மார்ட்டீன் "அந்நிறுவனத்திடம் இருந்து அரசு வாங்க வேண்டியிருக்கும் எந்தவொரு உதிரி பாகங்களின் விலையைக் கூட அதற்குத் தெரிவிக்காமல் வைத்துள்ளது.”
ஏற்கனவே வழங்கப்பட்ட நூற்றுக் கணக்கான போர்விமானங்கள், பெரிதும் செயல்படுத்தவியலாத அளவுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளன. Defense News சமீபத்தில் அறிவித்ததைப் போல, “F-35B மற்றும் F-35C விமானிகள் F-35 களின் விமானக் கட்டமைப்புக்கோ அல்லது கண்ணுக்குப் புலனாகாதவாறு மறைக்கும் மேற்பூச்சுக்குக்கோ சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க விமான வேக வரம்புகளைக் கவனிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்,” அதேவேளையில் அந்த விமானம் "தாங்கொணா காது மற்றும் தலை வலியை" உண்டாக்கும் விதத்தில் "விமானிகள் இருக்கும் விமானக்கட்டுப்பாட்டு அறையில் அழுத்தத்தை" உண்டாக்குவதாக உள்ளன.
ஆனால் F-35 திட்டத்தில் நிலவும் கொள்ளை, போட்டித்தன்மையின்மை மற்றும் ஊழல் ஆகியவை அதன் அடிப்படை நோக்கத்திலிருந்து அதை இலாயக்கில்லாமல் செய்துவிடவில்லை: அதாவது ரஷ்யா மற்றும் சீனாவின் வடிவில் "நெருக்கமான-நேரடியான" போட்டியாளருடன் சண்டையிடுவதற்கு இலாயகில்லாமல் செய்துவிடவில்லை.
இம்மாத தொடக்கத்தில், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் வெஸ்ட் பாயிண்ட் பட்டதாரிகள் மத்தியில் உரையாற்றுகையில் அந்த பட்டதாரிகள் அவர்களின் ஆயுள்காலத்தில் பசிபிக், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போரில் சண்டையிடுவார்கள் என்று முன்கூட்டி கூறினார்.
“உங்கள் வாழ்வில் ஏதேனும் ஒரு தருணத்தில் நீங்கள் தோற்றப்பாட்டளவில் நிச்சயமாக ஒரு போர்க்களத்தில் சண்டையில் இருப்பீர்கள்,” என்று அறிவித்தார். “உங்களில் சிலர், சமாதானத்திற்குத் தொடர்ந்து வட கொரியா அச்சுறுத்தல் விடுத்து வருகின்ற கொரிய தீபகற்பத்திலும் மற்றும் இந்தோ-பசிபிக்கில் நமது பிரசன்னத்திற்கு சவால்விடுக்கின்ற அதிகரித்தளவில் இராணுவமயப்பட்ட சீனாவுடன் அப்பிராந்தியத்திலும் சண்டையில் இணைவீர்கள். உங்களில் சிலர் ஐரோப்பாவின் சண்டையில் இணைவீர்கள், அங்கே ஆக்ரோஷமான ரஷ்யா பலவந்தமாக சர்வதேச எல்லைகளை மாற்றி வரைய முயன்று வருகிறது. உங்களில் சிலர் இந்த அரைபூகோளத்தில் சேவையாற்றுவதற்காக கூட அழைக்கப்படலாம்,” என்றார்.
“அந்நாள் வருகையில், நீங்கள் துப்பாக்கி சத்தத்திற்குள் நகர்ந்து, உங்கள் கடமையைச் செய்வீர்கள், நீங்கள் சண்டையிட்டு வெல்வீர்கள் என்பது எனக்குத் தெரியும்,” என்றார்.
இத்தகைய இரத்தம் கொதிப்பேற்றும் உணர்வுகள், ட்ரம்ப் நிர்வாகத்திற்கே உரியது என்பதற்கு அப்பாற்பட்டு, பரவலாக இருகட்சியின் அடித்தளத்திலும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. செவ்வாயன்று லோவாவில் பேசுகையில், முன்னாள் கடற்படை உளவுத்துறை அதிகாரியாக இருந்து ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மாறிய Pete Buttigieg கூறுகையில், “நமது இராணுவத் தகைமை ஒரு காரணத்திற்காக இருக்கிறது... நாங்கள் படையைப் பயன்படுத்த தயாராக இருக்கிறோம்,” என்றார். அமெரிக்கா "எதிர்கால போர்களுக்கு" தயாரிப்பு செய்ய வேண்டும் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
அடிப்படை அரசியலமைப்பு பாதுகாப்புகளை நீக்குவது, புலம்பெயர்ந்தோர் குழந்தைகளை இராணுவ தளங்களில் தடுப்புக்காவலில் வைப்பது மற்றும் நிர்வாக அதிகாரத்தைக் கொண்டு உத்தரவிடுவது ஆகியவற்றை ட்ரம்ப் மேற்கொண்டு வருகின்ற போதும் கூட, ஜனநாயகக் கட்சியினரோ உள்நாட்டில் அரசியல் நல்லிணக்கத்தை மீளப்பலப்படுத்துவதற்காக வெளிநாட்டு எதிரியின் மதிப்பைப் புகழ்கிறார்கள், Buttigieg இவ்வாறு அறிவிக்கிறார்: “சீனாவின் இந்த புதிய சவால், அரசியல் பிளவைக் கடந்து நாம் ஒன்றிணைந்து வருவதற்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது,” என்றார். “சண்டையில் குறைந்தபட்சம் பாதியாவது உள்நாட்டிலேயே நடக்கிறது" என்பதால், இது இன்றியமையாததாக உள்ளது என்றவர் அறிவுறுத்துகிறார்.
சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு அமெரிக்க மேலாதிக்கத்தின் "ஒருமுனை காலகட்டம்" பிரகடனப்படுத்தப்பட்டு மூன்று தசாப்தங்களுக்கு பின்னர், இராணுவ வழிவகைகளைக் கொண்டு அதன் உலகளாவிய மேலாதிக்கத்தைப் பேணுவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் ஒரு அழிவையே உண்டாக்கி உள்ளது. Foreign Affairs இன் சமீபத்திய பதிப்பின் பிரதான கட்டுரையில், பரீக் ஜகாரியா "அமெரிக்க சக்தியின் சுய-அழிப்பு" குறித்து எழுதுவதுடன், “கடந்த இரண்டாண்டுகளில் சில சமயங்களில், அமெரிக்க மேலாதிக்கம் மரணித்திருந்தது,” என்று நிறைவு செய்கிறார்.
ஆனால் ஒவ்வொரு தோல்வியும், பின்னடைவும் மற்றும் பேரழிவும் அதன் பொருளாதார மிரட்டல் மற்றும் இராணுவ ஆக்ரோஷத்தை இரட்டிப்பாக்குவதற்காக மட்டுமே அதை இட்டுச் சென்றுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் படையெடுப்புகள் மற்றும் லிபிய, சிரிய போர்கள் உள்ளடங்கலாக “பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்" தோல்விக்குப் பின்னர், ரஷ்யா மற்றும் சீனா உடனான ஒரு மோதல் மீது வாஷிங்டன் அதன் பார்வையை அமைத்துள்ளது. அதுபோன்றவொரு போர்களின் விளைவுகள், ஓர் அணுஆயுத மூன்றாம் உலக போரின் அச்சுறுத்தலுடன் சேர்ந்து, மத்திய கிழக்கில் சிந்திய இரத்தத்தை விட ஒப்பிடவியலாதளவில் இன்னும் மிகப் பெரியளவில் ஒரு பேரழிவாக இருக்கும்.
ஸ்ராலினிச ஆட்சியின் சோவியத் ஒன்றிய கலைப்புடன் பொருந்திய வகையில், முதலாம் வளைகுடா போரில் தொடங்கிய அமெரிக்க இராணுவவாதத்தின் மனிதப்படுகொலை வெடிப்பு சர்வசாதாரணமாக தணிந்துவிடாது. தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய சோசலிச இயக்கத்தின் மேலெழுச்சியால் தடுக்கப்படாவிட்டால், அது தீவிரமடைய மட்டுமே செய்யும்.