ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ශ්‍රී ලංකාවේ තේ වත්තක තවත් ලයින් කාමර ගින්නක්

இலங்கை தேயிலை தோட்டத்தில் இன்னொரு வரிசை குடியிருப்பு தீக்கிரை

By A. Suresh and R. Shreeharan
11 June 2019


வீடு இழந்தோர் தங்கியிருக்கும் முகாம்

இலங்கையில் தலவாக்கலையில் அமைந்துள்ள ஹொலிரூட் (கிழக்கு) தோட்டத்தில், மே 29 அன்று இரவு ஒரு லயன் குடியிருப்பு (வரிசை வீடுகள்) தீ பற்றியதை அடுத்து, 24 குடும்பங்களின் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் உட்பட நூற்றுக்கும் மேலானவர்கள், ஒரு கலாச்சார மண்டபத்தில் தங்கியுள்ளனர். லயன் குடியிருப்பின் நடுவில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட மின் கசிவால் தீ பற்றியதாக சந்தேகிக்கப்படுகின்றது. விரைவில் தீ இரு பக்கங்களுக்கும் பரவியது.

இது தேயிலை தோட்டங்களில் ஆறு மாதங்களுக்குள் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் மூன்றாவது பேரழிவு ஆகும். டிசம்பர் மாதத்தில், ஹட்டனுக்கு அருகிலுள்ள ஃபோர்டைஸ் தோட்டத்தின் இருபது லயன் அறைகள் மற்றும் ஜனவரி மாதத்தில் பொகவந்தலாவவில் உள்ள ரொப்கில் தோட்டத்திலுள்ள பன்னிரெண்டு லயன் அறைகளும் தீயால் அழிந்து போயின.

உடனடியாக கூரை தீப்பற்றியதோடு ஒன்று அல்லது இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடித்தன. தோட்டத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட நீர் வழங்கல் மட்டுமே உள்ளது. திகைப்படைந்த தொழிலாளர்கள் பீப்பாய்களில் சேகரித்து வைத்திருந்த தண்ணீரைப் பயன்படுத்தி நெருப்பை அணைக்க முயன்றதோடு தண்ணீருக்காக அருகிலுள்ள நீரோடையை நோக்கியும் ஓடினர். இருப்பினும், சுவர்கள் மற்றும் கூரைத் தகடுகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. தலவாக்கலையில் அல்லது அருகிலுள்ள நகரத்தில் தீ அணைப்புப் படை இல்லை.

ஏழைக் குடும்பங்கள் சீலிங்கிற்கு தீப்பற்றக் கூடிய யூரியா உரப் பைகளைப் பயன்படுத்துவதாலும் சீலிங் மீது காய்ந்த விறகுகளை சேர்த்து வைப்பதாலும் இந்த லயன் வீடுகள் விரைவில் தீயில் பாதிக்கப்படக்கூடியவை.

ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு அறைகள் மட்டுமே உள்ளன. சமையலறை அல்லது ஒரு வரவேற்பறை கூட கிடையாது. தொழிலாளர்கள் தங்களது சொந்த பணத்தை செலவழித்து வெளியே தற்காலிக சமையலறை மற்றும் கழிப்பறைகளை கட்டியுள்ளனர்.

தீயில் எரிந்த பின்னர் வெளியில் தெரியும் மண் கற்கள், இந்த வீடுகள் மனித தேவைக்காக கட்டப்பட்டவை அல்ல, மாறாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் குதிரைகள் கட்டுவதற்காக அமைக்கப்பட்டவை என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

இந்த தீ விபத்துகள், தோட்டத் தொழிலாளர்கள் இத்தகைய மோசமான நிலையில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமை சம்பந்தமாக, அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) மற்றும் தேசிய தொழிலாளர் சங்கம் (NUW), ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா.), மலையக மக்கள் முன்னணி ஆகியவை உள்ளடங்கிய தமிழ் முற்போக்கு கூட்டணி போன்ற தொழிற்சங்கங்கள் மீதுமான ஒரு குற்றப் பத்திரிகை ஆகும்.

டிசம்பர் மாதத்தில் 100,000 தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் தினசரி அடிப்படை சம்பளத்தை 1,000 ரூபாவிற்கு இரட்டிப்பாக்க வேண்டும் என்று கோரி ஒன்பது நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஜனவரியில் தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தை விற்றுத் தள்ளி, சம்பளத்தை 700 ரூபா வரை வெறும் 20 ரூபாவால் அதிகரித்து, முதலாளிகளுடன் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த தொழிற்சங்கத் தலைவர்கள் அனைவரும் அமைச்சர்களாக உள்ள அதே நேரம், NUW தலைவர் பி. திகாம்பரம், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சராக உள்ளார். இந்த அமைச்சு, குறித்த லயன் அறைகளுக்கு புதிய கூரைத் தகரங்களை கொடுத்துள்ளதாக இழிந்த முறையில் விளம்பரப் பலகைகளை மாட்டி வைத்துள்ளது. ஆனால் தொழிலாளர்களோ அதை மறுத்தனர். கூரைத் தகடுகள் தோட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்டது என அவர்கள் தெரிவித்தனர்.

திகாம்பரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகளை அமைப்பதாக உறுதியளித்துள்ள போதிலும், ஒரு வாரம் கழித்தும் எந்த முன் நடவடிக்கையும் காணப்படவில்லை.

திகாம்பரம் அமைச்சின் கீழ், நூற்றுக்கணக்கான சிறிய வீடுகள் இந்திய நிதியைப் பயன்படுத்தி தோட்டங்களில் கட்டப்பட்டு வருகின்றன. தோட்டங்களில் நிலவும் வீட்டுப் பிரச்சனைகளுக்கு எந்தவிதத்திலும் தீர்வுகாண முடியாத இந்த வேலைத் திட்டம் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட திட்டமாகும். இது தொழிலாளர்கள் மத்தியில் வளரும் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. குடும்பங்கள் ஏற்கெனவே குடியேறியிருக்கும் புதிய வீடுகளுக்கு பெயின்ட் அடிக்கப்படவில்லை, சுவர்களுக்கு மற்றும் நிலத்துக்கு சீமெந்து பூசப்படவில்லை மற்றும் சீலிங் அடிக்கப்படவில்லை.

உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் டி. புஸ்பகுமார், 27, ஏனைய அநேக குடும்பங்களைப் போல் தனது குடும்பத்தினராலும் பிறப்புச் சான்றிதழ்கள், அடையாள அட்டை மற்றும் பிற ஆவணங்களை கூட எடுக்க முடியவில்லை என்றார். "என் மனைவியை அவளுடைய முதல் பிரசவத்திற்கு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருந்தது. நான் 16,000 ரூபாய்க்கு வாங்கிய குழந்தைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் அழிக்கப்பட்டுவிட்டன, அவற்றுக்காக நான் மீண்டும் சம்பாதிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

அவருடைய வீட்டில் மூன்று அறைகள் உள்ளன, ஆனால் எட்டு குடும்ப உறுப்பினர்கள் வாழ்ந்தனர். மேலதிக வேலைகளையும் செய்து பணம் சம்பாதித்தும், தந்தையின் ஓய்வூதிய நிதியையும் பயன்படுத்தி அவர் அறைகளை பெரிதாக்கிக் கொண்டுள்ளார். "நாங்கள் வீடுகள் கேட்டோம், ஆனால் பயனில்லை. தொண்டமான் மற்றும் திகாம்பரம் வாக்குறுதி மட்டுமே கொடுத்தனர். இறுதியாக நாங்கள் அகதிகள் ஆகிவிட்டோம்."

போதுமான வருமானம் கிடைத்த காரணத்தால் புஸ்பகுமாரின் பெற்றோர்கள் ஓய்வு பெற்று மற்றும் கொழும்புக்கு வேலைக்குச் சென்றனர். தந்தை ஒரு உணவகத்தில் பணியாற்றும் அதே வேளை, தாயார் ஒரு வீட்டில் வேலை செய்கின்றார். "நான் கூட மாலை நேரத்தில் ஒரு காய்கறி கடையில் வேலை செய்கின்றேன். தோட்டத்தில் வேலை இல்லா நாட்களில் நாங்கள் மாதம் ஐந்து அல்லது மூன்று ஆயிரம் ரூபாய்களை மட்டுமே சம்பளமாக பெற்றிருக்கின்றோம்," என்று அவர் விளக்கினார்.


ஆர். சந்திரபோஸ்

ஆர். சந்திரபோஸ், 38, ஒரு இரும்பு பொருள் கடையில் சாரதியாவார். அவரது எட்டு உறுப்பினர்கள் கொண்ட குடும்பம் இரண்டு வீடுகளை இணைத்துக்கொண்டுள்ளது. தனது கதையை விளக்கிய அவர் கூறியதாவது: "நானும் என் மனைவியும் நான்கு பிள்ளைகளை படிக்க வைக்க உழைக்கின்றோம். நாங்கள் கடுமையாக வேலை செய்து நிறைய பொருட்களை வாங்கினோம்." தீ விபத்துக்கு முதல் நாள் அவர் வாங்கிய புத்தக ராக்கை உட்பட சுமார் 200,000 ரூபாய் இழப்பு அவருக்கு ஏற்பட்டுள்ளது.


ரட்னகுமரி

51 வயதான ரட்னகுமரி, அனைத்து பொருட்களும் அழிந்து போய்விட்டதாக அழுதுகொண்டிருந்தார். ஒரு அலறல் கேட்டதாகவும் திடீரென வீடு தீப்பற்றி எரிந்ததாகவும், 88 வயதான பாட்டியுடன் சற்றே உயிர் தப்பித்துக்கொள்ள முடிந்தது என்றும் ரத்னாகுமரி விளக்கினார். அவரது குடும்பமும் சில அறைகளை சீமெந்து கற்களால் கட்டிக்கொண்டுள்ளது.

"வீட்டு தோட்டத்தில் சில காய்கறிகளுடன் நாங்கள் சமாளிக்கின்றோம். எங்களுக்கு 700 ரூபா மட்டுமே கிடைக்கின்றது. அரசாங்கம் 50 ரூபா கூடுதலாக வழங்குவதாக உறுதியளித்தது. ஆனால் தொழிற்சங்கங்கள் நம்மை கைவிட்டுவிட்டன. எமது தினசரி இலக்கு 18 கிலோ தேயிலை கொழுந்து பறிப்பது. ஆனால் அந்த இலக்கை அடைய நாங்கள் கடும் வேகமாக வேலை செய்ய வேண்டும்.”

பாலங்கொட தோட்டத்திலிருந்து வந்திருந்த ரட்னகுமாரியின் மருமகன், தனது தோட்டத்தில் நிலைமையில் எந்த வேறுபாடும் இல்லை என்றார். "கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க கூட சரியான பாதை இல்லை. தொழிற்சங்கங்கள் எங்களை இந்த லயன்களுக்கு உள்ளேயே வைத்து கொல்லப் பார்க்கின்றன," என அவர் தெரிவித்தார்.


எஸ். கலைச்செல்வன்

எஸ். கலைச்செல்வன், 46, தனது பிள்ளைகளுக்கு படிப்புகளுக்காக அறைகளை ஒதுக்குவதற்காக தனி சமையலறை ஒன்றைக் கட்டினார். அரசியல்வாதிகள் நன்மை அடைவதாக அவர் குற்றம் சாட்டினார். "அவர்கள் தேர்தல் காலத்தில் மட்டுமே வருகிறார்கள். இப்போது மட்டும் நிறைய உணவு விநியோகிக்கின்றனர். முன்னரே வீடுகளை கட்டியிருக்க வேண்டும். எல்லாத் தொழிலாளர்களும் சம்பளப் போராட்டத்தில் பங்கு பெற்றனர், ஆனால் தொழிற்சங்கங்கள் இரகசியமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தொழிலாளர்களை காட்டிக்கொடுத்துவிட்டன," என்றார்.


டி. நமசிவம்

61 வயதான டி. நமசிவம், தனது உறவினர்களைக் காண தலாவக்கலை தோட்டத்திலிருந்து வந்திருந்தார். அவர் வாழ்க்கை நிலைமைகளைப் பற்றி பேசினார். "இந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கு சில மாதங்கள் ஆகலாம், அதுவரை அவர்கள் மண்டபத்தில் தங்க வேண்டும். எப்படி அவர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது, வேலைக்குப் போவது? அவர்கள் தனியாக சமைத்துக்கொள்ள வசதிகள் இல்லை. பிள்ளைகள் படிப்பை எப்படி தொடரப் போகிறார்கள்?"

"ஒவ்வொரு தோட்டத்திலும் பிரித்தானிய ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட இத்தகைய லயன்கள் உள்ளன. அமைச்சு புதிய வீடுகளை ஏழு பேர்ச்சஸ் நிலங்களில் உருவாக்குகிறது. சமையலறையை பெரிதாக்க கூட இடம் இல்லை. வாசல் அல்லது முன்னறை ஒரு சவப் பெட்டியை வைக்க கூட போதுமானதாக இல்லை.

"ஒரு குடும்பத்தில் இரண்டு திருமணமான மகன்கள் இருந்திருந்தால் மூன்று அறைகளும் சரியான சமையலறை மற்றும் பிற வசதிகளும் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் புதிய வடிவிலான வீடுகளை கட்டுவதாக கூறி வருகிறார்கள். இந்த வீடுகள் லயன் அறைகளை விட வேறுபட்டவை அல்ல.

"அமைச்சர் மனோ கணேசன் கொழும்பில் வசிக்கிறார். நம்முடைய வாழ்க்கையைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? ராதாகிருஷ்ணனும் ஒரு அமைச்சர்தான். யாரும் நம்மை கணக்கெடுப்பதில்லை. எங்கள் வாக்குகளால் தான் அவர்கள் அதிகாரத்தில் உள்ளனர். மக்கள் முடிவு எடுத்து அவர்களை நிராகரிக்கவேண்டும்.

ஏப்ரல் 21 நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் இராணுவ நடவடிக்கைகளைப் பற்றி அவர் கவலை தெரிவித்தார். தாக்குதல்கள் மலையகத்திலும் நடக்கலாம் எனக் கூறி ஒரு பீதியைக் கிளப்பி விட்டுள்ளது.


ஆர். மனோன்மணி

வேலை செய்யும்போது தொழிலாளர்கள் சாப்பாட்டைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று இரண்டு பிள்ளைகளின் தாயான ஆர். மனோன்மணி, 46 கூறினார். "என் சம்பளம் ஒன்றும் இல்லை, என் கணவரின் வருமானத்துடன் சமாளிக்கின்றேன். அவர் கொழும்பில் வேலை செய்கின்றார். 8 மணிக்கு தேயிலை மலையில் கட்டாயமாக இருக்க வேண்டும். பகல் சாப்பாட்டுக்குப் போகாமல், தொடர்ந்து வேலை செய்தால்தான் கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம். எங்களுக்கு பணம் தேவை. நாங்கள் 10 மணிக்கு ஒருதடவை சாப்பிட்டுவிட்டு பின்னர் தண்ணீர் குடித்துக்கொண்டே வேலை செய்வோம். மாலையில் வீடு திரும்பும்போது பசியைப் பற்றி மறந்துவிட்டு வீட்டு வேலையை பார்க்க வேண்டும்.

"நாங்கள் 18 கிலோ எடுக்காவிட்டால் அரைநாள் சம்பளம் போட்டு விடுவார்கள். ஆனால் இன்று, நாங்கள் தொடர்ந்து 2 மணி வரை வேலை செய்து 18 கிலோ எடுத்து விட்டு அதன் பின்னர் மேலதிக கிலோ பறிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதாவது அட்டை கடிப்பதை கூட கணக்கெடுக்காமல் நாங்கள் இயந்திரங்ள் போல் வேலை செய்ய வேண்டும்."