Print Version|Feedback
Parti de l’égalité socialiste meeting in Paris demands freedom for Julian Assange
பாரீசில் சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுக்கூட்டம் ஜூலியன் அசான்ஜின் விடுதலையைக் கோருகிறது
By our reporters
25 June 2019
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste – PES), இன்னலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பத்திரிகையாளர் ஜூலியன் ஆசான்ஜ் மற்றும் இரகசிய ஆவண வெளியீட்டாளர் செல்சியா மானிங்கை விடுவிப்பதற்கான ஓர் இயக்கத்தைக் கட்டமைக்க அழைப்பு விடுத்து, ஞாயிறன்று பாரீசில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியது.
இக்கூட்டம், அசான்ஜின் விடுதலையை உறுதிப்படுத்த ஓர் உலகளாவிய பாதுகாப்பு குழுவை உருவாக்குவதற்கு அழைப்புவிடுத்து, ஜூன் 20 இல் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு ஓர் அறிக்கை வெளியிட்டு மூன்று நாட்களுக்குப் பின்னர் நடத்தப்பட்டது.
பாரீஸ் பொதுக்கூட்டம்
நூறுக்கும் மேற்பட்டோர் இந்த பாரீஸ் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பார்வையாளர்கள் ஒவ்வொருவருக்கும் PES ஜூன் 20 அறிக்கையின் நகல்களை வினியோகித்தது. சமூக சமத்துவமின்மை மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக நடந்து வரும் "மஞ்சள் சீருடை" போராட்டங்களில் பங்கெடுத்தவர்கள், தொழிலாளர்கள் மற்றும் மாணவ இளைஞர்கள், மற்றும் அசான்ஜின் விடுதலைக்காக போராடுவதில் பங்குபற்றி வரும் எண்ணற்றவர்களும் அதில் உள்ளடங்குவர். ஈக்வடோரிய தூதரகத்தில் அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிரான போராட்டங்களில் இணைய மே மாதம் இலண்டனுக்கு பயணித்திருந்த பல "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களும் கலந்து கொண்டனர்.
ஒரு சர்வதேச நிகழ்வாக இருந்த அக்கூட்டத்தில், ICFI இன் பிரிட்டன், ஜேர்மனி மற்றும் பிரான்சின் தேசிய பிரிவுகளினது முன்னணி உறுப்பினர்கள் உரையாற்றினர். பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலர் கிறிஸ் மார்ஸ்டன், PES இன் தேசிய செயலர் அலெக்ஸ் லான்ரியே பாரிஸில் கூட்ட மண்டபத்தில் இருந்தனர். ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleicheitzpartei – SGP) உதவி தேசிய செயலர் கிறிஸ்தோப் வாண்ட்ரியர் பேர்லினில் இருந்து காணொளி மூலமாக அக்கூட்டத்தில் உரையாற்றினார்.
வாஷிங்டனுடன் கூட்டு சேர்ந்து பிரிட்டன் அதிகாரிகள் அசான்ஜைத் தொல்லைப்படுத்துவதற்கு எதிராக WSWS இன் பிரச்சாரத்தின் முன்னணி பாத்திரம் வகித்த மார்ஸ்டன், அசான்ஜைக் குறித்தும் மற்றும் ஓர் உலகளாவிய பாதுகாப்பு குழுவுக்கான ICFI இன் அழைப்பை அடித்தளமாக கொண்ட முன்னோக்கு குறித்தும் உரையாற்றி, ஆரம்ப அறிக்கையை வழங்கினார்.
இலண்டனின் ஈக்வடோரிய தூதரகத்திலிருந்து பிரிட்டன் பொலிஸ் அசான்ஜை எவ்வாறு இழுத்துச் சென்றது என்பதைக் குறித்தும், அசான்ஜ் இந்தளவுக்கு யாரை அம்பலப்படுத்த செயல்பட்டாரோ அதே போர் குற்றவாளிகளின் தயவில் அந்த பத்திரிகையாளரை நிறுத்தி அவருக்கு எதிராக குறைந்தபட்சம் 175 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் அமெரிக்க குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதைக் குறித்தும் மார்ஸ்டன் விளக்கினார். அமெரிக்காவிடம் குற்ற விசாரணை கைதியாக ஒப்படைக்கப்படுதல் மற்றும் சாத்தியமான மரண தண்டனையை முகங்கொடுத்து, பெல்மார்ஷ் சிறையின் பயங்கர நிலைமைகளின் கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது, சர்வதேச அளவில் எதேச்சதிகார ஆட்சிக்கான திருப்பத்திற்கு மத்தியில் வருகிறது. பிரெஞ்சு "மஞ்சள் சீருடை" போராட்டங்கள் மீதான வக்கிரமான பொலிஸ் ஒடுக்குமுறை, மற்றும் ஜேர்மன் உளவுத்துறை SGP ஐ ஒரு "இடது தீவிரவாத" அமைப்பாக கரும்புள்ளி குத்துவது ஆகியவற்றையும் மார்ஸ்டன் சுட்டிக்காட்டினார்.
அசான்ஜ் மீதான ஆளும் உயரடுக்கின் தாக்குதல், ஜனநாயக உரிமைகள் மீதான அதன் தாக்குதலின் மையப்புள்ளியாக இருப்பதைப் போல, மார்ஸ்டன் தொடர்ந்து குறிப்பிட்டார், “சர்வதேச தொழிலாள வர்க்கம், ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான அனைத்து தாக்குதல்கள் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான ஒரு எதிர்தாக்குதலுக்கு அவரின் பாதுகாப்பை மையப்புள்ளியாக ஆக்க வேண்டும்,” என்றார். அந்த சகாப்த வர்க்க போர் கைதிகளை விடுவிக்க பிரிட்டனில் 1972 தொழிலாளர்கள் போராட்டங்களையும், மறியல் செய்ததற்காக பென்டன்வில் சிறையில் அடைக்கப்பட்ட ஐந்து கடை பணியாளர்களை விடுவிக்க தொழிலாளர்களின் பாரிய அணிதிரள்வையும் அவர் சுட்டிக் காட்டினார்.
கூட்டத்தில் கிறிஸ் மார்ஸ்டன் உரையாற்றுகிறார்
ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்றுள்ள, இயல்பாகவே அரசியல் வலது நீங்கலாக, ஒவ்வொருவர் உடனும் ICFI இணைந்து செயல்படவும், அசான்ஜ் மற்றும் மானிங்கை விடுவிக்க ஒரு பாரிய மக்கள் இயக்கத்தைக் கட்டமைக்கவும் விரும்புகிறது என்பதை மார்ஸ்டன் வலியுறுத்தினார். ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் இலங்கையில் ICFI நடத்திய அசான்ஜிற்கான பேரணிகளைச் சுட்டிக்காட்டிய மார்ஸ்டன், பிரான்சில் இப்போது அசான்ஜை விடுவிப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பவர்களை, ஜேர்மனிக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டுக்களின் பேரில் 1894 இல் அநீதியாக அவமதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிரபல யூத பிரெஞ்சு இராணுவ தளபதி ஆல்பிரட் ட்ரேஃபுஸ் (Alfred Dreyfus) ஐ விடுவிக்க போராடியவர்களுடன் ஒப்பிட்டார்.
ஜேர்மன் இராணுவவாதத்தையும், நவ-பாசிசவாதத்தையும் மற்றும் ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கி போன்ற அதிவலது தீவிரவாத பேராசிரியர்களால் ஹிட்லரும் நியாயபூர்வமாக்கப்படுவதற்கு எதிரான SGP இன் போராட்டம் குறித்து கிறிஸ்தோப் வாண்ட்ரியர் உரையாற்றினார். SGP மீது கரும்புள்ளி குத்துவது மற்றும் வால்டர் லூப்க்க இன் சமீபத்திய படுகொலை, இதில் நவ-பாசிசவாதம் சம்பந்தப்பட்டிருப்பதற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளதற்கு மத்தியில், பாசிசவாத ஆட்சி வடிவங்களை நோக்கி தீவிரமடைந்து வரும் ஒரு திருப்பத்தைச் சுட்டுக்காட்டுகின்றன, இதை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் மீது தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே எதிர்த்து போராட முடியும்.
“மஞ்சள் சீருடை" ஆர்ப்பாட்ட இயக்கம் மற்றும் வேலைநிறுத்த போராட்டங்களின் ஓர் உலகளாவிய மீளெழுச்சிக்கு மத்தியில், அசான்ஜை விடுவிப்பதற்கான ஒரு சர்வதேச போராட்டத்திற்கான அழைப்பு, சக்தி வாய்ந்த முறையீடு என்று லான்ரியே குறிப்பிட்டார். 2015 இல் அசான்ஜ் நேரடியாக பிரான்சில் தஞ்சம் கோரி விண்ணப்பித்தார், அது அப்போதைய ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டால் நிராகரிக்கப்பட்டது என்பதை அவர் எடுத்துரைத்தார். பிரான்சில் உள்ள அசான்ஜின் பாதுகாவலர்கள் இந்த உலகளாவிய பாதுகாப்பு குழுவில் இணைவது மிகவும் முக்கியம்; அவர்கள் ஜோன்-லூக் மெலோன்சோன் அல்லது புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி போன்ற பெயரளவிற்கான "இடது" சக்திகள் அசான்ஜைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதற்காக காத்துக் கொண்டிருக்கக்கூடாது என்பதை லான்ரியேர் சேர்த்துக் கொண்டார். பல்வேறு சமயங்களில் அவர்கள் மில்லியன் கணக்கான வாக்குகளைப் பெற்ற போதும், அசான்ஜின் விடுதலையைக் கோரி வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் ஒரு பாரிய இயக்கத்தை அவர்கள் கட்டமைக்க முயலவும் இல்லை அல்லது விரும்பவும் இல்லை.
கூட்டத்தின் ஒரு பகுதியினர்
இவற்றைத் தொடர்ந்து ஒரு நேரடி கலந்துரையாடல் இடம்பெற்றது. பார்வையாளர்களில் போலந்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வகையில் அந்த ஆவணங்களைப் பிரசுரித்ததற்காக அமெரிக்க அரசை கோபப்படுத்திய அந்நடவடிக்கைக்காக, பிரிட்டனில் இருந்து அசான்ஜை அயல்நாட்டிடம் ஒப்படைப்பது என்பது கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்க இராணுவத் தளங்களையும் மற்றும் ரஷ்யாவை இலக்கில் வைத்த அமெரிக்க போர் முனைவையும் எதிர்க்கும் அனைத்து எதிர்ப்பாளர்கள் மீதும் நாசகரமான தாக்கத்தை ஏற்படுத்தும். அசான்ஜ் வழக்கின் மூலமாக, உலகெங்கிலுமான அரசாங்கங்களை எதிர்க்கும் பத்திரிகையாளர்கள் அல்லது அரசியல் எதிர்ப்பாளர்களை அமெரிக்க சிறைச்சாலைகளுக்குப் பாரியளவில் நாடுகடத்துவதற்கான சட்ட நிலைமைகள் உருவாக்கப்பட்டு வருவதாக எச்சரித்தார்.
அசான்ஜை விடுவிப்பதற்கான ஒரு பிரச்சாரத்திற்கு மெலோன்சோன் அல்லது ஐரோப்பா எங்கிலும் உள்ள அவரைப் போன்ற அரசியல்வாதிகள் தலைமை தாங்குவார்களா என்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டன. அசான்ஜ் சிறையில் அடைக்கப்பட்டதை விமர்சித்து மெலொன்சோன் இட்ட சில ட்வீட் செய்திகளைப் போலவே கோர்பினும் பதிவிட்டிருந்த போதினும், அவர் பிரிட்டனின் தொழிற் கட்சி தலைவர் ஆனதும் எந்த நடவடிக்கையையும் ஒழுங்கமைப்பதற்கான எந்தவொரு பாசாங்கத்தனத்தைக் கூட அவர் வேகமாக கைவிட்டிருந்த கோர்பினின் பாத்திரத்தைக் குறித்து மார்ஸ்டன் விவரித்து பதிலளித்தார்.
அக்கூட்டம் முடிந்த பின்னரும் PES உறுப்பினர்கள் உடன் கலந்துரையாடுவதற்காக டஜன் கணக்கான தொழிலாளர்களும் ஓய்வூதியதாரர்களும் நின்றிருந்தார்கள். தகவல்கள் மற்றும் தரவு நிர்வாகத்துறையின் ஓய்வூபெற்ற முன்னாள் தொழிலாளி Josette கூறுகையில், இராஜாங்க ஆவணங்களை அம்பலப்படுத்துபவர்கள் மீதான தாக்குதல்கள் அப்பெண்மணியை அரசியல்மயப்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார். “இந்த பிரச்சினையால் நான் ஏன் இயக்கப்படுகிறேன் என்று எனக்கு புரியவில்லை,” என்றார். “நான் தொலைதூரத்தில் இருந்து அதைக் குறித்து கேள்விப்பட்டேன், ஏனென்றால் நான் இரண்டு குழந்தைகளுக்குத் தனியொரு தாயாக உள்ளேன், அரசியலுக்கான நேரம் எனக்கு ஒருபோதும் கிடைத்ததில்லை. இப்போதோ அவர்கள் நகர்ந்து விட்டார்கள், நானும் வேலையில் இல்லை, என்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைக்கிறது, இது தான் என்னை உடனடியாக நகர்த்திய விடயமாக உள்ளது,” என்றார்.
Josette
“சந்தர்ப்பவசமாக, 2015 இல் நடவடிக்கையாளர் Aaron Swartz குறித்து அறிய வந்தேன், ஏனென்றால் அவரைக் குறித்து ஒரு படம் பார்த்தேன். அவருக்கு என்ன நடந்து வருகிறது என்பது ஏன் யாருக்கும் தெரியவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. அது என் மண்டையில் இருந்தது, பின்னர் ஆறு மாதங்களுக்கு முன்னர், ஜூலியன் அசான்ஜ் அப்போது தூதரகத்தில் இருந்த போது, அவர் குறித்து தெரிந்து கொண்டேன். எனது ஓய்வூ நேரத்தில் வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் மீண்டும், இது குறித்தும் பலருக்கும் தெரியவில்லை என்ற உண்மையால் அதிர்ந்து போனேன்.”
“ஜோன்-லூக் மெலோன்சோன் உட்பட மிக பெரியளவில் ஆதரவாளர்களைக் கொண்ட அரசியல்வாதிகளின் இந்த நிலைமைக்கான பொறுப்புறுதி குறித்து, இங்கே உரையாற்றியவர்கள் கூறியவற்றுடன் நான் உடன்படுகிறேன்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வது அல்லது பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சியுடன் தொடர்பில் வருவது இதுவே முதல்முறை என்று விவரித்த Josette, “அசான்ஜைப் பாதுகாக்க ஒரு சர்வதேச கட்டமைப்பை அபிவிருத்தி செய்யக்கூடிய நிறைய கட்டமைப்புகள் இன்று இல்லை என்பது இப்போது தெளிவாக உள்ளது. அதை PES செய்ய முடியுமேயானால், பின் நான் அவர்களுடன் இருப்பேன். அதற்கடுத்து, பார்ப்போம்,” என்றார்.
Alexeï இக்கும் இதுவே அவரின் முதல் PES கூட்டமாக இருந்தது. “அரசியலுக்கு வருவது ஒருபோதும் எனது நோக்கமாக இருந்ததில்லை,” என்று அக்கூட்டம் முடிந்ததும் தெரிவித்த அவர், “ஆனால் அவர்கள் இருக்கக்கூடாத ஒரு நிலைமையில் தங்களைக் காண்பவர்கள், இராஜாங்க ஆவண அம்பலப்படுத்துனர்கள், இருக்கிறார்கள் என்பதை நீங்கள் உணரும் போது, நமது சமூகம் குறித்து பேசுபவர்களைப் பாதுகாப்பது என்பது அரசியலாகி விடுகிறது,” என்றார்.
“அசான்ஜால் பேசவோ, தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளவோ வழியே இல்லை. இதுவொரு உண்மையான வழக்கு இல்லை. அவர் மனோரீதியில் சித்திரவதை செய்யப்படுகிறார் என்பதை நாம் அறிவோம். சர்வதேச அளவில் நாம் எதிர்க்க வேண்டிய ஒரு விடயம் இது என்பதில் நான் உடன்படுகிறேன். ஒருவரின் கருத்துக்களை வெளிப்படுத்துவது முக்கியமானது—அதனால் தான் எப்போதும் நான் அசான்ஜின் பக்கம் நிற்கிறேன்,” என்றார்.
“அசான்ஜைப் பாதுகாக்க ஆரம்பத்தில் இருந்தே நான் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன், என்று கூறிய ஓர் ஓய்வூதியதாரர் Frédérique, “நான் வெவ்வேறு குழுக்களுடன் இரண்டு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டேன். ஆனால் இன்று வேறெதுவும் ஒழுங்கமைக்கப்பட்டு வருவதைக் காணவில்லை. இந்த எதிர்ப்பு மிகவும் பிரிந்து கிடக்கிறது, நான் எந்தவொரு அரசியல் மதிப்பீட்டையோ அல்லது முன்னோக்கையோ காணவில்லை. அதனால் தான் இன்று நான் இந்த கூட்டத்திற்கு வந்தேன். இக்கூட்டம் மிகவும் தெளிவாக இருந்தது, நீங்கள் என்ன உரையாற்றினீர்களோ, உங்கள் பகுப்பாய்வு உறுதியாக உள்ளது,” என்றார்.