ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Amid grave concerns for his health, Assange transferred to Belmarsh Prison medical wing

அசான்ஜின் உடல்நலம் குறித்த கடுமையான கவலைகளுக்கு மத்தியில், அவர் பெல்மார்ஷ் சிறையின் மருத்துவப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்

By Oscar Grenfell 
30 May 2019

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் பிரிட்டனின் பெல்மார்ஷ் சிறையின் மருத்துவப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார் என்ற அறிக்கையை விக்கிலீக்ஸ் இன்று வெளியிட்டது. மேலும், “நமது பதிப்பாசிரியரின் உடல்நலம் பற்றி பெரும் கவலைகளை” கொண்டிருப்பதாக அவ்வூடக அமைப்பு தெரிவித்தது.

அவ்வறிக்கை இதையும் தெரிவித்தது: “பெல்மார்ஷ் சிறையில் அவர் சிறை வைக்கப்பட்டிருந்த ஏழு வாரங்களில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டதுடன், பெருமளவு எடை இழப்பும் அவருக்கு நேர்ந்துள்ளது. அவரை மருத்துவப் பிரிவிற்கு மாற்றுவதற்கு சிறை அதிகாரிகள் எடுத்த முடிவு இது குறித்து தெரிவிக்கிறது.”


ஜூலியன் அசான்ஜ்

ஜனநாயக உரிமைகளின் அனைத்து பாதுகாப்பாளர்களுக்கும் இந்த அறிக்கை எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும். இங்கிலாந்தின் குவாண்டனாமோவை ஒத்ததான உயர்பாதுகாப்பு வசதி கொண்ட பெல்மார்ஷ் சிறையில் அசான்ஜை பிரிட்டிஷ் அதிகாரிகள் தடுத்து வைத்திருப்பது, விக்கிலீக்ஸ் ஸ்தாபகரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அழித்துவிடுவதற்கு அமெரிக்க அரசாங்கமும் அதன் கூட்டாளிகளும் மேற்கொண்டிருக்கும் எட்டு வருட பிரச்சாரத்தின் தொடர்ச்சியாகவே உள்ளது.

இது, போர் குற்றங்கள், பெரும் திரளான மக்கள் மீதான உளவுபார்ப்பு மற்றும் உலகளாவிய இராஜதந்திர சதிகள் ஆகியவற்றை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ் மீது முன்சம்பவிக்காத வகையில் அமெரிக்க உளவுத்துறைச் சட்டம் திணிக்கும் குற்றங்களுக்கு எதிராக அதிகரித்தளவில் எந்தவித பாதுகாப்பும் அவருக்கு கிடைத்துவிடாமல் தடுப்பதற்கு நோக்கம் கொண்டு, அசான்ஜிற்கு அடிப்படை சட்ட மற்றும் மனித உரிமைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருவதன் ஒரு பகுதியாக உள்ளது.

உலக சோசலிச வலைத் தளமும் மற்றும் உலகெங்கிலுமான சமூக சமத்துவக் கட்சிகளும் சிறையிலிருந்து உடனடியாக அசான்ஜை விடுவிக்கக் கோருகின்றன.

நல்ல மருத்துவ வசதி கொண்ட மருத்துவமனைக்கு விக்கிலீக்ஸ் ஸ்தாபகரை கொண்டு சென்று அவரும், அவரது சக பணியாளர்களும் மற்றும் வழக்கறிஞர்களும் தெரிவு செய்யும் மருத்துவர் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்பதுடன், அவரது ஆரோக்கியம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டு குணமடைவதற்கும் அனுமதிக்கப்பட வேண்டும்.

அசான்ஜை துன்புறுத்துவதற்கு காரணமாக இருந்த அனைவரும் அவரது ஆரோக்கியமற்ற நிலைக்கு முழுமையாக பொறுப்பாவார்கள் என்பதுடன், அவருக்கு ஏற்படும் எந்தவொரு தீங்கிற்கும் சட்டபூர்வமாக அவர்களை பொறுப்பாளிகளாக்க வேண்டும்.

அசான்ஜின் விடுதலையை பாதுகாக்க, தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சிவில் உரிமைகளின் ஆதரவாளர்கள் ஆகியோர் அடங்கிய ஒரு பரந்துபட்ட அணிதிரட்டல் தற்போது அவசியமாகிறது.

விக்கிலீக்ஸின் தலைமை ஆசிரியர் கிறிஸ்டின் ஹ்ராஃப்ஸன் இன்று இவ்வாறு எழுதியுள்ளார்: “மக்கள் அவர்களது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்; ஏனென்றால், வரலாற்றின் பக்கங்களில் ஒரு கருப்பு கறையை விட்டுச் செல்லும் வகையில் அவர்களது அரசியல்வாதிகளும், அவர்களது நீதிமன்றங்களும், அவர்களது பொலிஸூம் மற்றும் அவர்களது சிறைகளும் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அவமானத்தை தவிர்ப்பதற்கு தயவுசெய்து இப்போதே செயலாற்றுங்கள்.”

அசான்ஜின் உடல்நல நெருக்கடி பற்றிய கவனம் அவரது சுவீடன் வழக்கறிஞர்களில் ஒருவரான பெர் சாமுவெல்சன் மூலமாக செவ்வாயன்று வெளியிடப்பட்டது.

வெள்ளியன்று, ராய்ட்டர்ஸ் மற்றும் ஸ்காண்டிநேவிய ஊடக வெளியீடுகளுக்கு, விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் அசான்ஜ் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், அவருடன் உரையாட முடியாத நிலையில் தான் இருந்ததாக சாமுவெல்சன் தெரிவித்தார். இந்நிலையில், அசான்ஜின் உடல்நிலை மேலும் மோசமடைவதும், கடந்த வியாழனன்று அவருக்கு எதிராக 17 கூடுதல் அமெரிக்க குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, அதிகபட்சமாக 170 வருடங்கள் கொண்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டதும் ஒருங்கே நிகழ்ந்தன.

அசான்ஜ் அவரது வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசிக்க முடியாத நிலையில் இருக்கிறார் என்றாலும், அவரது நிலைமையில் முன்னேற்றம் காணப்படும் வரை அவர் மீதான போலியான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கள் குறித்த ஜூன் 3 விசாரணையை தள்ளி வைப்பது குறித்தும், மேலும் அவருக்கு எதிரான கைது உத்தரவாணையின் ஆங்கில மொழி நகலை அவருக்கு வழங்குவது குறித்தும் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையை ஒரு சுவீடன் மாவட்ட நீதிமன்றம் இந்த வாரம் நிராகரித்துவிட்டது.

விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு எதிராக அரசியல் மற்றும் சட்ட ரீதியாக கட்டவிழ்த்துவிடப்பட்ட சமீபத்திய அநீதியாக இந்த தீர்ப்பு இருந்தது. சுவீடனின் மீட்டுயிர்ப்பிக்கப்பட்டுள்ள “பூர்வாங்க விசாரணை” என்பது, அமெரிக்காவிடம் கையளிக்கப்படும் நடவடிக்கைக்கு எதிராக அசான்ஜை பாதுகாப்பதில் தடையை ஏற்படுத்தவும், அவரது பெயரை கலங்கப்படுத்தவும், மேலும் ஒரு அமெரிக்க சிறைக்கு அவரை மாற்றுவதற்கான ஒரு மாற்று வழியை வழங்கவும் நோக்கம் கொண்டிருந்ததை இது நிரூபிக்கிறது.

ஏப்ரல் 11 அன்று, ஈக்வடோரின் லண்டன் தூதரகத்தில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டு பிரிட்டிஷ் பொலிசார் அவரை கைது செய்து சில மணித்தியாலங்களில், பிணையெடுப்பு விவகாரம் குறித்து 50 வார கால சிறை தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டிருந்த பின்னரே அசான்ஜ் பெல்மார்ஷ் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

அசான்ஜின் பிணை கோரிக்கைகள் மறுக்கப்பட்டதன் விளைவாக பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பிணை தொடர்பான குற்றம் முற்றிலுமாக தீர்க்கப்பட்டிருந்தது, அதைத் தொடர்ந்து தூதரகத்தில் காவலில் வைக்கப்பட்டு பல ஆண்டுகளை அவர் அங்கு செலவழித்தது, மேலும் 2017 இல் சுவீடன் விசாரணையின் முடிவு போன்ற உண்மைகளை பிரிட்டிஷ் நீதிபதி நிராகரித்துவிட்டார்.

சிறியளவிலான குற்றமாக இருந்தாலும், கைதிகளில் தீவிர பாதுகாப்பில் வைக்கப்பட வேண்டிய வகையினராக அசான்ஜ் கருதப்பட்டார். அவர் கடுமையாக தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் தனிப்பட்ட பத்திரிகையாளரான கோர்டான் திம்மாக் என்பவருக்கு அசான்ஜ் எழுதிய ஒரு கடிதத்தில், மாதத்திற்கு இரண்டு பார்வையாளர்களை மட்டும் சந்திப்பதற்கே அவர் அனுமதிக்கப்படுகிறார் என்றும், தொலைபேசி தொடர்புகளுக்கும் கடுமையான தடைகள் விதிக்கப்பட்டிருப்பதுடன், அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குத் தேவைப்படும் தகவல்களுக்கு இணைய தளம், மடிக்கணினி அல்லது நூலகம் போன்ற எதையும் அணுகுவதற்கு முடியவில்லை என்றும் விளக்கமளித்திருந்தார்.

பெல்மார்ஷ் சிறை அதன் கொடூரமான நிலைமைகளுக்கு பேர் போனது. மிக மோசமான கொலை குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானவர்கள், மற்றும் பயங்கரவாத குற்றங்கள் புரிந்தவர்கள் போன்ற கடும் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தான் வழமையாக அச்சிறையில் காவலில் வைக்கப்படுவர்.

சிறையின் தலைமை ஆய்வாளரது 2009 அறிக்கை, கைதிகளுக்கு எதிராக “மிகவுயர்ந்த” அளவிலான வலிமை பிரயோகிக்கப்பட்டது என குறிப்பிட்டார். பெரும்பாலான கைதிகள் பணியாளர்கள் மூலம் பயமுறுத்தப்பட்டு அல்லது அச்சுறுத்தப்பட்டு வந்ததாக தெரிவித்தனர். ஆய்வாளர்களின் 2018 அறிக்கை, பலரும் பரிந்துரைத்ததான வசதி குறித்த “மேம்பாடுகள்” “முழுமையாக” செய்து தரப்படவில்லை, மேலும் சில இடங்களில் “சென்ற முறையை காட்டிலும் விளைவுகள் மிகவும் மோசமடைந்து இருந்ததாக நாங்கள் தீர்மானித்தோம்” என்று தெரிவித்தது.

அசான்ஜ் ஏழு ஆண்டுகளை ஈக்வடோர் தூதரகத்தில் செலவழித்தப் பின்னர் அவரது தற்போதைய சிறைவாசம் தொடர்கிறது. தூதரகத்தை விட்டு அவர் வெளியேறினால் அவரை கைது செய்வதற்கு பிரிட்டிஷ் அச்சுறுத்தல்கள் விடுப்பதாலும், மேலும் அமெரிக்காவிடம் அவர் கையளிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாலும் அந்த கட்டிடத்தில் அவர் கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என ஐ.நா. அமைப்புக்கள் கருதின.

நேரடி சூரிய ஒளியை காண்பதற்கே அசான்ஜ் அனுமதிக்கப்படவில்லை. தேவையான மருத்துவ வசதியை அணுகவிடாமல் தூதரகம் அவரை தடுத்து வந்த நிலையில் தான், அவருக்கு கடுமையான ஈறுக் கட்டிகள், உறைந்த தோள்கள் மற்றும் தொடர்ச்சியான இருமல் போன்ற தீவிரமான உடல்நல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது என்ற காரணத்தை பிரிட்டிஷ் பிடித்துக் கொண்டது.

ஜனவரி 2018 இல் அசான்ஜை சோதித்த இரண்டு மருத்துவர்கள் இவ்வாறு எச்சரித்தனர்: “அவரது தொடர்ச்சியான சிறைவாசம் அவரை உடல் மற்றும் மன ரீதியாக ஆபத்தான நிலைக்குத் தள்ளியுள்ளது, மேலும் உடல் ஆரோக்கியம் குறித்த அவருக்கான மனித உரிமை தெளிவாக மீறப்படுகிறது, இது எங்கள் தொழில் ரீதியான கருத்து.” ஒரு மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்வதற்கான பாதுகாப்பான வழியை வழங்குவது குறித்த மருத்துவர்களின் அழைப்புக்களை பிரிட்டிஷ் அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர்.

தூதரகத்தில் அவர் காவலில் இருந்த கடைசி ஆண்டில், அதாவது மார்ச் 2018 தொடக்கத்தில், அசான்ஜின் தகவல் தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டதுடன், அதிகளவு பார்வையாளர்களை சந்திக்கும் உரிமையும் அவருக்கு மறுக்கப்பட்டது. ஈக்வடோரிய அதிகாரிகள், அமெரிக்க அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு உட்பட்டு செயலாற்றி, கட்டிடத்தை நடைமுறையில் உள்ள சிஐஏ சிறைக்கு மாற்றினர், தனிமைப்படுத்தப்பட்ட சிறைவாச நிலைமைகளில் அசான்ஜை வைத்திருந்தனர், மேலும் அமெரிக்க உளவுத்துறை முகமைகளுக்கு சார்பாக அவரது ஒவ்வொரு அசைவையும் உளவு பார்த்தனர்.

அசான்ஜின் நிலைமை, உலகெங்கிலுமுள்ள அரசாங்கங்கள் சர்வாதிகாரத்திற்கும் பொலிஸ் அரசு நடவடிக்கைகளுக்கும் திரும்பியிருப்பதன் கூர்மையான வெளிப்பாடாக உள்ளது.

இது குறித்து அரசியல் சக்திகளிடம் தான் பொறுப்பு உள்ளது. அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினர், குடியரசுக் கட்சியினர் மற்றும் உத்தியோகபூர்வ அரசியல் ஸ்தாபகம் ஆகியவற்றின் மத்தியிலான தலைமை, விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் உலக மக்களுக்கு எதிராக அவர்களது குற்றங்களை அம்பலப்படுத்தியதை கடுமையாக பின்தொடர்கின்றது.

தொடர்ச்சியான சுவீடன் அரசாங்கங்கள் அவற்றின் பங்கிற்கு, அவருக்கு சுதந்திரம் மறுக்கப்பட்டதற்கான ஒரு சாக்குப்போக்கை வழங்கும் விதமாக, போலியான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களை அவர் மீது சுமத்துவதற்கு முனைந்தன. பிரிட்டிஷ் பழமைவாத அரசாங்கங்களும் மற்றும் தொழிலாளர் எதிர்ப்பும், அசான்ஜின் நிலைமையை ஒரு அரசியல் அகதியாக தக்கவைத்திருக்கும், பல ஆண்டு கால தனிமைப்படுத்தப்பட்ட சிறைவாசத்திற்கு அவரை நிர்பந்திக்கும், மேலும் அவரை கைது செய்வதற்கு முன்பு அமெரிக்காவிற்கு அவர் நாடுகடத்தப்படுவதை எளிதாக்கும் ஐ.நா. தீர்ப்புக்களை நிராகரித்தன.

தொழிற் கட்சி மற்றும் தாராளவாத-தேசியக் கட்சி போன்றவை 2010 இல் இருந்து அமைத்து வந்ததான ஒவ்வொரு ஆஸ்திரேலிய அரசாங்கமும் வழங்கிய தீவிர ஆதரவு இல்லாமல் அசான்ஜிற்கு எதிரான தாக்குதல்களை தொடர்ந்திருக்க முடியாது. அனைத்துமே, ஒரு ஆஸ்திரேலிய பத்திரிகையாளரும் குடிமகனுமான அசான்ஜை பாதுகாக்க மறுத்துவிட்டன, மாறாக அவருக்கு எதிரான அமெரிக்க பழிதீர்க்கும் நடவடிக்கையில் இணைந்து கொண்டன.

பெருநிறுவன ஊடகங்கள் ஒரு வெட்ககேடான பாத்திரமேற்றன, அசான்ஜை பற்றி இடைவிடாது அவதூறு பேசின, அவர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை குறைத்து மதிப்பிட்டன, மேலும் அவரது நாட்டின் துன்புறுத்துபவர்களுடன் தங்களை திடமாக பிணைத்துக் கொண்டன. அசான்ஜை பாதுகாக்க முன்னர் கோரிக்கை விடுத்து வந்த, தொழிற் சங்கங்கள் மற்றும் போலி-இடது அமைப்புக்கள் உட்பட, தொகுப்பான சில அமைப்புக்கள், இப்போது அவரை கைவிட்டு விட்டு, ஏகாதிபத்திய போரையும் ஒடுக்குமுறையும் அவை ஆதரிப்பதை சமிக்ஞை செய்கின்றன.

அசான்ஜை பாதுகாக்கக் கூடிய ஒரே சமூக சக்தியாக சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே உள்ளது. சமத்துவமின்மை, சிக்கன நடவடிக்கை மற்றும் போருக்கு எதிரான பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், அசான்ஜை சரியாக ஒரு வீரமிக்க நபராக அடையாளம் காண்கின்றனர். அவரது மோசமான உடல்நிலை அவர்களை உடனடியாக அணிதிரட்டுவதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்நிலையில், அசான்ஜின் உடனடியான மற்றும் நிபந்தனையற்ற விடுதலை குறித்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பிரிவுகளும் முன்னெடுக்கும் பிரச்சாரங்களுக்கு ஆதரவளிக்கும் படி தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் உலக சோசலிச வலைத் தளம் அழைப்பு விடுக்கின்றது.