Print Version|Feedback
French prime minister announces further social cuts and attacks on immigrants
பிரெஞ்சு பிரதம மந்திரி கூடுதல் சமூக வெட்டுக்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்களை அறிவிக்கிறார்
By Will Morrow
13 June 2019
நேற்றிரவு தேசிய நாடாளுமன்றத்தில் வழங்கிய ஓர் உரையில், பிரெஞ்சு பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப், குறிப்பாக ஓய்வூதியங்கள் மற்றும் வேலையற்றோருக்கான கொடுப்பனவுகளை இலக்கில் வைத்து, நீண்டகால விளைவுகளைக் கொண்ட பல சிக்கன நடவடிக்கைகளையும், அத்துடன் புலம்பெயர்ந்தோர் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான புதிய தாக்குதல்களையும் அறிவித்தார்.
அதுபோன்றவொரு உரை வழங்கப்படும் என்று மே 26 ஐரோப்பிய தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் ஐந்தாண்டு பதவிகாலத்தில் இரண்டாம் அரைப்பகுதியை எடுத்துக்காட்டும் விதமாக அது "நடவடிக்கை II” என்று அர்த்தப்படும். மக்ரோனின் கட்சி சிறிய வித்தியாசத்தில் மரீன் லு பென்னின் அதிவலது தேசிய பேரணியிடம் (RN) ஐரோப்பிய வாக்குகளை இழந்தது. மக்ரோன் மற்றும் அவருக்கு முன்பிருந்த சோசலிஸ்ட் கட்சியின் பிரான்சுவா ஹோலாண்ட் திணித்த சிக்கன நடவடிக்கைகள் மீதும் மற்றும் சமத்துவமின்மை மீதுமான சமூக கோபத்தை தேசிய பேரணி தனக்கு சாதகமாக்கிக் கொண்டது.
மக்ரோன் அரசாங்கத்தின் விடையிறுப்பு இன்னும் கூடுதலாக வலதுக்கு நகர்வதாக இருக்கும் என்பதை பிலிப்பின் அறிக்கைகள் தெளிவுபடுத்தின. சமீபத்திய மாதங்களில் மருத்துவமனை தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் அதிகரிப்பிலும், அத்துடன் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான "மஞ்சள் சீருடை" போராட்டங்களிலும் வெளிப்பட்டவாறு, தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்துவரும் இடதுசாரி எதிர்ப்பை அது முகங்கொடுத்துள்ள அதேவேளையில், மக்ரோன் அரசாங்கம் இன்னும் கூடுதலாக செல்வவளத்தை தங்கள் பைகளுக்குள் பாய்ச்ச வேண்டுமென்ற நிதியியல் உயரடுக்கின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய தீர்மானகரமாக உள்ளது. நேற்று பிலிப் வெளியிட்ட கொள்கை, 20 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு தொழிலாள வர்க்கம் வென்றெடுத்த சமூக உரிமைகளை தொடர்ந்து அழிப்பதை உள்ளடக்கி இருந்தது.
அவர் அரசாங்கத்தினது கொள்கைகள் உருவாக்கிய சமூக கோபத்தைத் திசைதிருப்ப, வெளிநாட்டவர் மீதான விஷமப் பிரச்சாரத்தைத் தூண்டிவிடும் RN இன் புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைகளையும் அது ஏற்று வருகிறது.
நடப்பிலுள்ள ஓய்வூதிய வயதை இரண்டாண்டுகள் அதிகரிப்பது என்பதே பிலிப் அறிவித்த மிகவும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். சட்டபூர்வ குறைந்தபட்ச ஓய்வூதிய வயதை 62 இலேயே வைத்து கொண்டு, அதேவேளையில் புதிய "சமப்படுத்தப்பட்ட வயதை" 64 ஆகவும், 64 வயதுக்கு கீழ் இருப்பவர்களுக்கு ஆதாயங்களை வெட்டுவதன் மூலமாக "நீண்டகாலம் வேலை செய்தாலே ஊக்குவிப்புகள்" என்றும் அரசாங்கம் அறிவிக்க உள்ளது. இது ஏற்கனவே ஓய்வூபெற்ற தொழிலாளர்களை உயிர் வாழ்வுக்காக வறிய-மட்டத்திலான வேலைகளுக்குத் திரும்ப நிர்பந்திக்கும்.
பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் கைத்தேர்ந்த மொத்த பாசாங்குத்தனத்துடன், “சுதந்திரம் மற்றும் பொறுப்புகளில் ஒவ்வொருவரும் அவர்களின் சொந்த விருப்பத்தெரிவைச் தேர்ந்தெடுக்க முடியும்,” என்று பிலிப் தெரிவித்தார். “வயதில் மூத்தவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான மாபெரும் திட்டத்தின்" அறிவிப்பால், வயதானவர்கள் இன்னும் அதிகமாக உழைக்க விடப்படுவார்கள்.
இந்தாண்டு அறிவிக்கப்பட உள்ள தேசிய ஓய்வூதிய திட்ட சீரமைப்பையும் பிலிப் குறிப்பிட்டார். அது தொழில்துறை மற்றும் தொழில்வழங்குனர்களுக்கு இணங்க 42 வெவ்வேறு ஓய்வூதிய தகுதி வகைமுறைகளை நீக்கி, ஒரே தேசிய ஓய்வூதிய முறையைக் கொண்டு அவற்றைப் பிரதியீடு செய்யும். இது தேசிய இரயில்வே தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பொதுத்துறை பணியாளர்கள் உட்பட தொழிலாளர்களின் ஒரு குறிப்பிட்ட பிரிவுகள் வென்றெடுத்த மிகவும் அனுகூலமான ஓய்வூதிய சலுகைகளைக் கிழித்தெறியும். இந்த திட்டங்கள் "புள்ளிகளைக் கொண்ட" ஓய்வூவழங்கல் முறையால் பிரதியீடு செய்யப்பட உள்ளன, அரசு இதன் மதிப்பை எதேச்சதிகாரமாக அதன் நிதியியல் நலன்களுக்கு ஏற்ப, ஒரு தொழிலாளர் அவரின் ஓய்வூ பெறும் காலம் வரையில் மாற்றிக் கொண்டே இருக்க முடியும்.
வேலைவாய்ப்பின்மை சலுகைகள் குறைக்கப்படும். “இந்த சீர்திருத்தத்தின் இரண்டாவது நோக்கமே, செயல்படாமல் இருந்து கிடைப்பதை விட, வேலை செய்து அதிகமாக சம்பாதிப்பதை உறுதிப்படுத்துவதாகும்,” என்றார். இது "பொதுவாக [ஏற்கனவே] அவ்விதத்தில் தான்" உள்ளது என்றாலும், அங்கே "மாதாந்தர சம்பளத்தை விட மாதாந்தர வேலைவாய்ப்பின்மை உதவித்தொகை அதிகமாக இருக்கும் சூழல்களும் உள்ளன. அதை நாம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்,” என்றார்.
பெயர் வெளியிட விரும்பாத அரசு அதிகாரிகளது கருத்துரைகளின் அடிப்படையில், Les Echos வேலையற்றோருக்கான கொடுப்பனவுகளை வெட்டுவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் மீது ஜூன் 7 இல் ஒரு பிரத்தியேக அறிக்கை வெளியிட்டது. இதன் முழு விபரங்கள் ஜூன் 17 இல் வெளியிடப்பட உள்ளன. இத்திட்டத்தில் உதவித்தொகைகள் பெறுவதற்குத் தேவைப்படும் தகுதிகளை அதிகரிப்பது உள்ளடக்கப்படுமென செய்திகள் தெரிவிக்கின்றன: தற்போது ஒரு தொழிலாளி இறுதியான 28 மாதங்களில் நான்கு மாதங்களுக்கு கட்டாயமாக பணியில் இருந்திருக்க வேண்டும் என்றிருக்கையில், இது இறுதியான 24 மாதங்களில் குறைந்தபட்சம் ஆறு மாதங்களாக அதிகரிக்கப்பட உள்ளது.
28 மாதங்களில் இருந்து 24 மாதங்களுக்கு கால அளவை மாற்றாமலேயே, கட்டாயம் வேலை செய்திருக்க வேண்டிய காலத்தை நான்கு மாதங்களில் இருந்து அரையாண்டாக உயர்த்துவது 236,000 வேலைவாய்ப்பற்றவர்களின் அல்லது மொத்தத்தில் 11 சதவீத்தினரின் சலுகைகளைத் தானாகவே வெட்டிவிடும் என்று தொழில்துறை மற்றும் வர்த்தக வேலைவாய்ப்புக்கான தேசிய சங்கம் (Unédic) குறிப்பிட்டது.
இத்தகைய சமூக தாக்குதல்கள் ஆண்டுக்கு மொத்தம் சுமார் 5 பில்லியன் யூரோ [5.6 பில்லியன் அமெரிக்க டாலர்] வரிவெட்டுக்களுடன் சேர்கிறது. முழு விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை, அவை ஐயத்திற்கிடமின்றி இன்னும் கூடுதலாக பணக்காரர்களுக்கும் மற்றும் உயர்மட்ட நடுத்தர வர்க்கத்திற்கும் விட்டுக்கொடுப்புகளை வழங்கும். குறைந்த வருவாய் பிரிவில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளவர்களுக்குரியதை மட்டுமே பிலிப் அறிவித்தார், இந்த வெட்டுக்கள் முறையே நகைப்பிற்கிடமாக 350 யூரோ மற்றும் 180 யூரோக்களின் குறைப்புக்கு இட்டுச் செல்லும். அதேநேரத்தில், சொத்து மதிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படும் சொத்து வரி நீக்கப்பட்டு வருவதால், பொறுத்தமற்ற விகிதாசாரத்தில் பணக்காரர்களுக்கு இது ஆதாயமாகிறது.
அதேநேரத்தில் தொழிலாள வர்க்கத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளின் நலன்களுக்குச் செலவிடப்படுவதும் வெட்டப்பட உள்ளன, தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஒடுக்குவதற்குப் பணிக்கப்பட்டுள்ள இராணுவம் மற்றும் பொலிஸ் படைகளுக்குப் பில்லியன் கணக்கான யூரோக்கள் வழங்கவும் அவர் அரசாங்கம் பொறுப்பேற்றிருப்பதாக பிலிப் மீளவலியுறுத்தினார். “கட்டுப்பாட்டைப் பேணுவது என்பது அனைத்திற்கும் மேலாக பொது ஒழுங்கை உத்தரவாதப்படுத்துவது என்று அர்த்தமாகும்,” என்று கூறிய பிலிப், “நமது முதல் முடிவுகளில் ஒன்று நிறைய பொலிஸ் நியமனங்களைச் செய்வதும் மற்றும் ஆயுதமயப்படுத்தும் திட்டத்தைத் தொடங்குவதும் ஆகும்,” என்றார். ஐரோப்பிய ஒன்றிய இலக்குகளுக்கு இணங்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதத்தை இராணுவ செலவுகளில் உயர்த்துவதற்கான மக்ரோனின் சூளுரை, “ஒரு மாபெரும் முயற்சி" என்று கூறிய அவர், “ஆனால் அதில் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம்,” என்றார்.
பிலிப் உரையின் எதேச்சதிகார உள்ளடக்கம், புலம்பெயர்ந்தவர்கள், தஞ்சம் கோருவோர்கள் மற்றும் "இஸ்லாமியவாத" வளர்ச்சிக்கு எதிரான வெறுப்பை அவர் தொடங்கியபோது மிகத் தெளிவாக வெளிப்பட்டது.
அவரின் கருத்துக்கள், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளால் தோற்றுவிக்கப்பட்ட வறுமை மற்றும் போரில் இருந்து தப்பியோடி வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்களின் தஞ்சம் கோருவதற்கான சட்டபூர்வ உரிமையை, "அமைப்புமுறையை" “துஷ்பிரயோகம்" செய்ய பயன்படுத்துவதாக, ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் சர்வதேச அளவில் தீவிர வலதுசாரி கட்சிகள் கூறும் பொய்களில் வரிசையில் இருந்தன.
“ஐரோப்பாவில் கடந்தாண்டு தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்தது என்றாலும், பிரான்சில் 22 சதவீத அளவில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது,” என்றார். பிரான்ஸ் “இந்த புலம்பெயர்வோர் பெருக்கெடுப்பின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க" வேண்டும் என்றவர் அறிவித்தார். “தஞ்சம் கோருவதற்கான உரிமை என்பது ஒரு பொக்கிஷம்,” என்று கூறிய பிலிப், “ஆனால் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நாம் உறுதியாக போராட வேண்டும்... தஞ்சம் கோருவோர் பிரான்சின் மதிப்புகளுக்காகவும், அதன் வரலாறு, அதன் மொழிக்காகவும் அதை தேர்ந்தெடுக்க வேண்டுமே ஒழிய, ஐரோப்பாவில் நம் அண்டைநாடுகளில் இருப்பதை விட நமது அமைப்புமுறை மிகவும் சாதகமாக இருக்கிறது என்பதற்காக தேர்ந்தெடுப்பதாக இருக்கக்கூடாது என்பதை நாம் உறுதிப்படுத்தி வைக்க வேண்டும்,” என்றார்.
இது பிரான்சில் புலம்பெயர்ந்தவர்களின் நிலைமைகளை அரசாங்கம் கூடுதலாக தாக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது, இதை ஏற்கனவே மக்ரோன் ஐரோப்பிய தேர்தல்களின் போது அறிவுறுத்தி இருந்தார். “நிர்வாக உத்தரவு மூலமாக புலம்பெயர்ந்தவர்கள் மீது புதிய தாக்குதல்" என்று தலைப்பிட்டு, மக்ரோன் அரசாங்க அதிகாரிகளிடம் இருந்து வந்த அநாமதேய கருத்துக்களின் அடிப்படையில், Le Monde திங்கட்கிழமை ஒரு செய்தி வெளியிட்டது. உள்துறை அமைச்சர் கடந்த வார உள்துறை அமைச்சக கூட்டத்தில், புலம்பெயர்ந்தவர்களை "பிரான்ஸ் மிகவும் ஈர்ப்பதைக் குறித்து" பேசியதாக அது குறிப்பிட்டது.
மக்ரோன் ஏப்ரல் 30 இல் அமைச்சர்களுடன் ஒரு கூட்டம் நடத்தினார், அப்போது அவர் "புலம்பெயர்வு சம்பந்தமான பிரச்சினை மீண்டுமொருமுறை எங்கள் முன்னால் வந்துள்ளது,” என்று அவர் அறிவித்தார்.
"தஞ்சம் மற்றும் குடியேற்றம்" மீது மக்ரோன் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் ஒரு வருடாந்தர விவாதத்தைக் கொண்டு வருமென பிலிப் அறிவித்தார், இதன் முதல் அமர்வு செப்டம்பரில் நடத்தப்படும், ஏனென்றால் அது "நமது இறையாண்மை மற்றும் நமது கோட்பாடுகளின் அடிப்படைகளில் செல்கிறது,” என்றார். இது ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் புலம்பெயர்ந்தவர்களைக் குறைகூறுவதற்கும் மற்றும் வெளிநாட்டவர் விரோத மனோபாவத்தைத் தூண்டிவிடுவதற்கும் ஒரு களம் என்பதற்கும் சற்று கூடுதலாக இருக்கும்.
பிலிப்பின் உரை, பிரான்சிலும் சர்வதேச அளவிலும் அரசியல் ஸ்தாபகம் அதிவலது போக்கில் சென்று கொண்டிருபதற்கான ஓர் எடுத்துக்காட்டாக இருந்தது. ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான சமூக தாக்குதல்களுக்கு எதிராகவும் பிரதான போர்களுக்குத் தயாரிப்பு நடந்து வருவதற்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் போராட்டங்களால் பீதியுற்று, ஆளும் வர்க்கம் ஒரு பொலிஸ் அரசைக் கட்டமைத்து வருவதுடன், தேசியவாதத்தையும் மற்றும் புலம்பெயர்ந்தோரைப் பலிக்கடா ஆக்குவதையும் ஊக்குவித்து வருகிறது.