Print Version|Feedback
The European elections and the resurgence of the class struggle
ஐரோப்பிய தேர்தல்களும், வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சியும்
By Alex Lantier
30 May 2019
இந்த ஐரோப்பிய தேர்தல்கள் அரசியல் ஸ்தாபகம் ஆழமாக மதிப்பிழந்து வருவதையும் மற்றும் அரசியல் மாற்றத்திற்காக தொழிலாள வர்க்கத்திடமிருந்து அதிகரித்து வரும் கோரிக்கைகளுக்கு அது சிறிதும் விட்டுக்கொடுக்க தயாரில்லை என்பதையும் வெளிப்படுத்தி உள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம் 1992 இல் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து பின்பற்றப்பட்டுள்ள சிக்கன நடவடிக்கைகள் மற்றும் இராணுவவாத கொள்கைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் சமூக கோபம் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில், ஐரோப்பா எங்கிலும், பாரம்பரிய ஆளும் கட்சிகள் முன்பில்லாதளவு சரிவுகளுடன் தோல்வியடைந்தன. பாரம்பரிய பழமைவாத மற்றும் சமூக-ஜனநாயக கட்சிகளின் வாக்குகள் மொத்தமாக ஜேர்மனியில் 43 சதவீதமாகவும், பிரிட்டனில் 23 சதவீதமாகவும், பிரான்சில் 15 சதவீதமாகவும் மற்றும் இத்தாலியில் 32 சதவீதமாகவும் சரிந்தன. சமூக ஜனநாயகத்தின் கூட்டாளிகளான, ஜேர்மனியின் இடது கட்சி, ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI) மற்றும் ஸ்பெயினின் பொடெமோஸ் போன்ற பெயரளவிற்கான "இடது" கூட்டாளிகள் அனைத்தும் பெரும் பின்னடைவுகளைச் சந்தித்தன.
எவ்வாறிருப்பினும் தேர்தல் இரவில் பெரும் ஆதாயமடைந்தவை, பிரெக்ஸிட் கட்சி மற்றும் பிரான்சின் நவ-பாசிசவாத தேசிய பேரணி போன்ற தீவிர வலதுசாரி கட்சிகள், அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கும் தாராளவாத கட்சிகள் அல்லது சமூக ஜனநாயகத்துடன் தொடர்புபட்ட பசுமை கட்சிகளாகும். பாரம்பரிய ஆளும் கட்சிகளை ஐரோப்பா எங்கிலுமான பத்து மில்லியன் கணக்கான வாக்காளர்கள் கைவிட இட்டுச் சென்ற பிரச்சினைகளில் எதையும் இது தீர்க்கப் போவதில்லை.
ஐரோப்பிய முதலாளித்துவ அரசியலின் கட்டமைப்பு இன்னமும் தயவுதாட்சண்யமின்றி வலதுக்கு நகர்கிறது. கடுமையான சிக்கன நடவடிக்கைகள் மூலமாக நிதி வழங்கப்பட்டு ஒரு பரந்த பொதுக் கடன் கட்டமைக்கப்பட்டதன் மூலமாக, ஐரோப்பிய நிதிய பிரபுத்துவத்தின் செல்வவளம் 2008 பொறிவுக்குப் பின்னர் காப்பாற்றப்பட்டிருந்த நிலையில், இவர்கள் பாரியளவிலான செல்வத்தையும் அதிகாரத்தையும் குவித்துள்ளனர். ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் அச்சுறுத்தல்கள், அணுஆயுதமேந்திய ரஷ்யாவை இலக்கில் வைத்து கிழக்கு ஐரோப்பாவில் தொடர்ச்சியான நேட்டோ இராணுவ கட்டமைப்பு, சீனா மற்றும் ஜேர்மனி இரண்டுக்கும் எதிராக அமெரிக்க வர்த்தக போர் அச்சுறுத்தல்கள், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரவிருக்கும் நாட்களில் பிரிட்டன் வெளியேறுவது என ஐரோப்பிய முதலாளித்துவத்தின் அஸ்திவாரங்களையே பலவீனப்படுத்தும் வெடிப்பார்ந்த புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார மோதல்களுக்கு மத்தியில், ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தும் அவற்றின் ஆயுதப்படைகளையும் பொலிஸ் அரசு எந்திரங்களையும் கட்டமைத்து வருகின்றன. இதுதான் ஐரோப்பிய அரசியலில் தீவிர வலதின் வளர்ச்சிக்கு காரணமாகின்றது.
இத்தகைய கொள்கைகள், ஏற்கனவே சமூகப் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் ஓர் ஆரம்ப மேலெழுச்சியைத் தூண்டியுள்ளன. 1989 இல் ஸ்ராலினிசத்தின் முதலாளித்துவ மீட்டமைப்புக்குப் பின்னர் போலாந்தில் நடந்துள்ள தேசியளவிலான முதல் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம், போர்ச்சுக்கல்லில் வேலைநிறுத்தங்களின் ஓர் அலை, ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு எதிராக பிரான்சில் தொடர்ந்து கொண்டிருக்கும் "மஞ்சள் சீருடை" இயக்கம், அத்துடன் புவி வெப்பமடைதலுக்கு எதிராக இளைஞர்களின் காலநிலை மாற்றம் சம்பந்தப்பட்ட வேலைநிறுத்தம் ஆகியவற்றை இந்த ஆண்டு கண்டது. இந்த அதிகரித்து வரும் இயக்கத்திற்கு எந்த விட்டுக்கொடுப்புகளையும் வழங்க ஆளும் வர்க்கத்திற்கு உத்தேசமில்லை என்பதை இத்தேர்தல்கள் உறுதிப்படுத்துகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கும் கட்சிகளுக்கும் தேசியவாத அல்லது நவ-பாசிசவாத கட்சிகளுக்கும் இடையிலான ஒரு குறுகிய வட்ட மோதலுக்குள் இத்தேர்தல் பிரச்சாரம் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் தசாப்தங்களாக ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் வலதுக்கு வெகுவாக நகர்ந்த பின்னர், நெருக்கடியில் சிக்கியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலியின் உள்துறை அமைச்சர் மத்தேயோ சல்வீனி அல்லது பிரான்சின் மரீன் லு பென் போன்ற நவ-பாசிசவாதிகள் முன்மொழிந்த "தேசங்களின் ஐரோப்பாவில்" (“Europe of the nations”) இருந்து வெகு சிறியளவே வித்தியாசப்படுகிறது.
பழமைவாதிகள், சமூக ஜனநாயகவாதிகள், கிரீஸின் சிரிசா (“தீவிர இடதின் கூட்டணி”) அரசாங்கத்தின் கூட்டாளிகள் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கும் கட்சிகள் ஆயுதப்படைகளுக்குள் பில்லியன்களை பாய்ச்சி உள்ளதுடன், நேட்டோவின் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க போர்களில் இருந்து தப்பி வந்த அகதிகளை கூட்டம் கூட்டமாக அடைக்கும் முகாம்களின் பரந்த வலையமைப்பையும் மற்றும் பொலிஸ் அதிகாரங்களையும் கட்டமைத்துள்ளன என்பதோடு ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகளையும் திணித்துள்ளன. அதிகரித்து வரும் அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய மோதல்களுக்கு மத்தியில், ஐரோப்பிய ஒன்றியம் இப்போது அனைத்திற்கும் மேலாக வெளியுறவு கொள்கையை துரிதமாக மீள்இராணுவமயப்படுத்தி வருகின்ற பேர்லின் மற்றும் பாரீஸிற்கு வாஷிங்டனில் இருந்து சுதந்திரமான ஐரோப்பிய இராணுவப் படைகளைக் கட்டமைக்க முயல்வதற்குரிய ஒரு கட்டமைப்பாக சேவையாற்றுகிறது. இதன் விளைவாக, ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கும் சக்திகளுக்கும் மற்றும் மிகவும் வெளிப்படையான தேசியவாத சக்திகளுக்கும் இடையிலான மோதல்கள் ட்ரம்ப் நிர்வாகத்துடனான உறவுகள் மீதானதும் மற்றும் ஐரோப்பாவுக்கு உள்ளேயே வல்லரசு சக்திகளின் திசையுடன் தொடர்புபட்ட மாற்றங்கள் மீதான ஒரு வக்கிரமான கன்னை மோதலாக சுருங்கி உள்ளன.
ஐரோப்பாவின் பாரம்பரிய கட்சிகளது ஆட்சியின் தோல்வியானது ஐரோப்பிய முதலாளித்துவத்தின் திவால்நிலைமைக்குச் சான்று பகிர்கிறது. ஆனால் சிக்கன நடவடிக்கைகளைத் திணித்து வருகின்ற மற்றும் புலம்பெயர்ந்தவர்களைக் கொடூரமாக குறிவைக்கின்ற சல்வீனி போன்ற அதிவலது "தேசங்களின் ஐரோப்பா" இன் பாதுகாவலர்களுக்கும் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய எந்திரத்தின் பாதுகாவலர்களுக்கும் இடையிலான ஒரு சண்டையில் தொழிலாள வர்க்கம் வெறுமனே பக்கவாட்டில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவ்விரு தரப்பினருமே பாசிசவாத மற்றும் எதேச்சதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறார்கள். 1930 களைப் போலன்றி, ஆளும் வர்க்கம், இதுவரையில், பாசிசவாத கொள்கைகளுக்கு ஆதரவாக ஒரு பாரிய இயக்கத்திற்கான அடித்தளத்தை இன்னும் அபிவிருத்தி செய்திருக்கவில்லை. ஆனால், தெளிவாக அதுபோன்றவொரு அபிவிருத்திக்கான அபாயம் உள்ளது. அதற்கு எதிராக, ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அதன் சொந்த பதாகையின் கீழ் மற்றும் அதன் சொந்த அரசியல் வேலைத்திட்டத்தின் மீது போராட்டத்தில் அணிதிரட்டுவதே முன்னால் இருக்கும் ஒரே வழியாகும்.
இதற்கு கட்டவிழ்ந்து வரும் நெருக்கடியின் வர்க்க இயக்கவியலைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது, இதற்கு தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை முதலாளித்துவ வர்க்கத்தின் மற்றும் செல்வ செழிப்பான நடுத்தர வர்க்கத்தின் அனைத்து அரசியல் பிரதிநிதிகளிடம் இருந்தும் சுயாதீனமாக சர்வதேச அளவில் ஐக்கியப்படுத்துவது அவசியமாகிறது.
பிரிட்டனில், பிரதம மந்திரி தெரேசா மே இன் பழமைவாத கட்சி 9 சதவீதமாக சரிந்து அவர் அரசாங்கம் பொறிந்த நிலையில், நைஜல் ஃபராஜின் அதிவலது பிரெக்ஸிட் கட்சி 31 சதவீதத்துடன் முதலிடத்தை எடுத்தது. அனைத்திற்கும் மேலாக தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பினின் திவால்நிலைமையின் காரணமாக, ஃபராஜ் ஆல் பிரிட்டனின் வெடிப்பார்ந்த சமூக அதிருப்தியைச் சாதகமாக்கிக் கொள்ள முடிந்தது. அதிகரித்து வரும் சமூக கோபத்தால் கட்சி தலைவர் பதவிக்கு வந்த அவர், தெரெசா மே க்கு எதிராக ஐரோப்பா எங்கிலுமான போராட்டங்களுடன் ஒன்றிணைந்த தொழிலாள வர்க்க போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பதைப் பெருமுயற்சியோடு தவிர்த்து வந்தார். டோனி பிளேயர் தலைமையிலான அவரது கட்சியிலுள்ள ஈராக் போர் குற்றவாளிகளின் பிரிவினருக்கு முடிவின்றி சலுகைகள் வழங்கிய பின்னர், அவர் பிரெக்ஸிட் நெருக்கடியில் மே இற்கு முட்டுக் கொடுக்க அவருடன் இந்தாண்டு பேச்சுவார்த்தைகள் நடத்துவதில் போய் நின்றார்.
கோர்பின் பழமைவாதிகளுடனான அவரது கட்சியின் அணிசேர்க்கையை வெளிப்படையாக எடுத்துக்காட்டி, அவரை எதிர்நோக்கியுள்ள தொழிலாளர்களுக்குப் போராடுவதற்குரிய எந்த வழியும் காட்டாமல், மே அரசாங்கத்தின் ஒரே எதிர்ப்பாளராக ஃபாராஜ் உணர்ச்சிகரமாக முன்நிறுத்திக் கொள்வதற்கு அவருக்கு வாய்ப்பை வழங்கினார். தொழிற்கட்சி 14 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்த நிலையில், ஃபாராஜால் கோர்பின் அசிங்கப்பட்டமை அவரின் சொந்த இஸ்லிங்டன் தேர்தல் மாவட்டத்தில் தாராளவாத ஜனநாயக கட்சியின் வெற்றியால் நிறைவு செய்யப்பட்டது.
ஜேர்மனியில், “மகா கூட்டணி" அரசாங்கத்திற்கான 43 சதவீத முடிவானது ஜேர்மன் வெளியுறவு கொள்கையை இராணுவமயப்படுத்தும் அதன் திட்டநிரல் மீதும் மற்றும் ஹிட்லரிசம், இராணுவவாதம் மற்றும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்காக தீவிர வலது போராசிரியர்களை ஊக்குவிப்பதன் மீதும் மக்களின் மற்றொரு மறுத்தளிப்பாக இருந்தது. அதிவலது கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சிக்கும் மற்றும் ஆளும் கட்சிகளுக்கும் இடையிலான இத்தகைய நெருக்கமான உறவுகள் மற்றும் ஊடகங்கள் அதிவலதைத் தொடர்ச்சியாக ஊக்குவிப்பது ஆகியவற்றுக்கு மத்தியில், AfD இன் 10.5 சதவீத வாக்குகளைப் பசுமை கட்சியினரின் 22 சதவீதம் பெரிதும் விஞ்சியிருந்தன. இது நவ-பாசிசவாதத்திற்கான பரந்த எதிர்ப்பையும் அத்துடன் காலநிலை மாற்றத்திற்கு எதிரான பாரிய போராட்டங்களில் வெளிப்பட்ட சுற்றுச்சூழல் சம்பந்தமான அக்கறையையும் பிரதிபலித்தது.
ஆனால் மகா கூட்டணி கட்சிகளுடன்தான் பசுமை கட்சியினர் நெருக்கமாக செயல்பட்டு வருகின்றனர் என்ற நிலையில், அவற்றிற்குப் பசுமை கட்சி மாற்றீடு கிடையாது. அது 1990 களில் பால்கன்களில் மூர்க்கமான நேட்டோ போர்களை ஆதரித்ததுடன், 2000 களில் வெறுக்கப்பட்ட ஹார்ட்ஸ் IV சிக்கன சட்டங்களைத் திணிக்க சமூக ஜனநாயகவாதிகளுடன் செயல்பட்டது. இப்போதோ, அவர்களின் ஸ்தாபர்களில் ஒருவரும் பிரதான தலைவர்களில் ஒருவருமான முன்னாள் மாணவர் போராட்டக்காரர் டானியல் கோன்-பென்டிட், “மஞ்சள் சீருடையாளர்களை" மக்ரோன் ஒடுக்கி வருகின்ற நிலையிலும், அவரின் நெருக்கமான ஆலோசகராக உள்ளார். அவர்கள் அதிகாரத்திற்கு வந்தால், பசுமை கட்சியும் மகா கூட்டணி தற்போது திணித்துள்ள அதே கொள்கைகளைத் தான் வேறுபாடின்றி பின்தொடரும்.
இந்த தேர்தல்கள் ஸ்ராலினிச கட்சிகளின் வழிவந்தவர்களையும் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தை விட்டோடிய குட்டிமுதலாளித்துவ ஓடுகாலிகளையும் உள்ளடக்கிய செல்வசெழிப்பான நடுத்தர வர்க்கத்தின் "இடது வெகுஜனவாத" கட்சிகளின் ஒட்டுமொத்த அடுக்கையும் அம்பலப்படுத்தியுள்ளது. தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் "இடது" கல்விதுறையாளர்கள் உட்பட "இடது வெகுஜனவாத" கட்சிகள் எங்கே அடித்தளத்தைக் கொண்டிருக்கின்றனவோ, அந்த தனிச்சலுகை கொண்ட சமூக அடுக்குகளுக்கு இன்னும் அதிக ஆதரவான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அவர்களின் முயற்சிகள், பலமிழந்துள்ளன. இத்தகைய போலி-இடது கட்சிகள் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை முடக்க ஏறத்தாழ பிரத்யேகமாக சேவையாற்றுகின்றன என்பதை வெறும் ஒருசில ஆண்டுகால கசப்பான அனுபவமே எடுத்துக்காட்டுகிறது.
வலதுசாரி புதிய ஜனநாயக கட்சியால் சிரிசா இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட பின்னர், கிரேக்க பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் புதிய தேர்தல்களுக்கு அழைப்புவிடுத்தார். ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக 2015 தேர்தல்களில் அவர் அளித்த வாக்குறுதிகளை அப்பட்டமாக காட்டிக்கொடுத்து, கிரேக்க தொழிலாளர்கள் மீது பில்லியன் கணக்கான சமூக வெட்டுக்களைத் திணித்துள்ள நிலையில், அதேவேளையில் கிரேக்க தீவுகளில் பத்தாயிரக் கணக்கான அகதிகளைச் சிறையிலும் அடைத்து யேமனில் சவூதி போருக்கு ஆயுதங்களையும் விற்பனை செய்துள்ள சிப்ராஸ், அதிகாரத்தை வலதிடம் ஒப்படைப்பதற்கு அவரால் என்ன செய்ய முடியுமோ மீண்டும் அதையே செய்து கொண்டிருக்கிறார். புதிய தேர்தல்களுக்கு அவர் அழைப்பு விடுக்கையில், கடைசி பொய்யாக, அவர் "சமத்துவம், நல்லிணக்கம் மற்றும் சமூக நீதிக்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை" என்று சூளுரைத்தார்.
ஸ்பெயினில், சிரிசாவின் கூட்டாளி பொடெமோஸ் சிக்கன நடவடிக்கையை ஆதரிக்கும் சமூக-ஜனநாயக அரசாங்கத்தை அது ஆதரித்த பின்னர் மற்றும் 2017 கட்டலான் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பில் பொலிஸ் ஒடுக்குமுறைக்கு எதிராக எந்த நடவடிக்கைக்கும் அழைப்பு விடுக்காததால் மற்றும் கட்டலான் தேசியவாத அரசியல் கைதிகள் மீது வழக்கு தொடுப்பதை உறுதிப்படுத்தியதால், அதன் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற ஆசனங்களில் பாதியை இழந்தது. அதன் தலைவர் பப்லோ இக்லெஸியாஸ், பகிரங்கமான வலதுசாரி குடிமக்கள் கட்சியுடன் தங்கள் பங்கிற்கு ஒரு கூட்டணியைப் பரிசீலித்து வருகின்ற சமூக ஜனநாயகவாதிகளுடன் சேர்ந்து ஒரு புதிய கூட்டணி அரசாங்கம் கட்டமைக்க சூளுரைத்ததன் மூலமாக விடையிறுத்தார்.
இறுதியில் பிரான்சில் மரீன் லு பென் முதலிடத்தில் வந்ததுதான், ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சி, பப்லோவாத புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி, மற்றும் ஸ்ராலினிச தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் பிற்போக்குத்தனமான பாத்திரத்தின் எல்லாவற்றுக்கும் மேலான விளைவாக இருந்தது. 2017 ஜனாதிபதி தேர்தல்களில் மக்ரோனை இரகசியமாக ஆதரித்த அவர்கள், “மஞ்சள் சீருடை" போராட்டங்களுக்கு கடுமையாக குரோதத்துடன் இருந்தனர். 2017 இல் 7 மில்லியன் வாக்குகள் பெற்ற பின்னரும் கூட, “மஞ்சள் சீருடையாளர்களை" இலக்கில் வைத்த உக்கிரமான பொலிஸ் வன்முறை அலைக்கு எதிராக அவர்களைப் பாதுகாக்க மெலோன்சோன் பாரிய போராட்டங்களுக்கு அழைப்புவிடுக்கவில்லை. மேலும் அவர்களுடனான நல்லிணக்கத்தில் அழைப்பு விடுக்கப்பட்ட வேலைநிறுத்தங்களை தொழிற்சங்கங்கள் தனிமைப்படுத்தி விற்றுத் தள்ளின.
இது இந்த முனைவை நவ-பாசிசவாதிகளிடம் ஒப்படைத்தது. நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சி வழிவந்தவர்களின் பாரம்பரியத்தை அவர்கள் கொண்டிருக்கின்ற போதினும், அவர்கள், வெறுக்கப்படும் மக்ரோன் ஜனாதிபதி ஆட்சியின் சிறந்த எதிர்ப்பாளர்களாகவும் —வீதிகளில் "மஞ்சள் சீருடையாளர்களை" நவ-பாசிசவாத பொலிஸ் அடித்து முடக்கியுள்ள போதினும் கூட— "மஞ்சள் சீருடையாளர்களது" போராடும் உரிமையின் பாதுகாவலர்களாகவும் தங்களை எரிச்சலூட்டும் விதமாக காட்டிக் கொண்டார்கள்.
இந்த ஐரோப்பிய தேர்தல், பழைய ஆளும் உயரடுக்கினது உடைவினது முன்னேறிய நிலையாலும் மற்றும் வர்க்க போராட்ட மேலெழுச்சியின் இப்போதைய ஆரம்ப நிலைகளாலும் குறிக்கப்பட்டவாறு, மாற்றத்தினதும் மற்றும் நெருக்கடியினதும் ஒரு காலக்கட்டத்தில் நடந்துள்ளது. பல தசாப்தகால அரசியல் பிற்போக்குத்தனத்திற்குப் பின்னர், சமூக ஜனநாயகமும் போலி-இடது கட்சிகளும் தொழிலாள வர்க்கத்துடனும் அல்லது சமூக போராட்டத்துடனும் வைத்திருந்த எந்தவொரு தொடர்புகளையும் வெட்டியுள்ளன. தொழிலாளர்கள் இனியும் அவற்றை எதிர்ப்புக்கான ஒரு சக்தியாக பார்க்கவில்லை என்பதோடு, போராட்டத்தை அவர்களின் சொந்த கரங்களில் எடுக்க தொடங்கி உள்ளனர். ஆளும் உயரடுக்கு வலதுக்கு மாறி வந்தாலும் கூட, பாரிய போராட்டங்களின் வெடிப்பும் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக சமூக ஊடகங்கள் மூலமாக ஒழுங்கமைக்கப்பட்ட வேலைநிறுத்தங்களும் பரந்தளவில் இடதுக்கு நகர்வதைச் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த நிலைமை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) முன்னோக்குகள் மற்றும் பகுப்பாய்வுகளை நிரூபணம் செய்கின்றன. ஸ்ராலினிசத்தால் முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்டமை "வரலாற்றின் முடிவை" உம் மற்றும் ரஷ்யாவில் 1917 அக்டோபர் புரட்சி திறந்துவிட்ட முதலாளித்துவத்திற்கு எதிரான சர்வதேச வர்க்க போராட்ட சகாப்தத்தின் முடிவையும் குறிக்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சி நிகழும் வடிவத்தை, அதாவது பழைய சமூக ஜனநாயக, ஸ்ராலினிச மற்றும் பப்லோவாத அதிகாரத்துவங்கள் மற்றும் அவற்றின் தொழிற்சங்க கூட்டாளிகள் அனைத்திற்கும் எதிராக ஒரு கிளர்ச்சியின் வடிவத்திலேயே எழும் என்பதை ICFI சரியாக முன்கண்டது.
உழைக்கும் மக்களின் சமூக நிலைமைகளை மேம்படுத்துவதற்கான அடிப்படை மாற்றமாக கருதப்படும் புரட்சியும் சோசலிசமும் உலகெங்கிலும் அதிகரித்தளவில் மக்களின் செல்வாக்கைப் பெற்றுள்ளன. ஆனால் லியோன் ட்ரொட்ஸ்கி அவரின் தலைச்சிறந்த படைப்பான ரஷ்ய புரட்சியின் வரலாற்றில் குறிப்பிட்டதைப் போல தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் தீவிரப்படல் நிகழ்வுபோக்கு இன்னமும் ஆரம்ப கட்டங்களில் தான் உள்ளது:
பெருந்திரளான மக்கள் சமூக மறுகட்டமைப்புக்கான ஒரு முன்தயாரிப்பான திட்டத்துடன் புரட்சியில் இறங்குவதில்லை, மாறாக பழைய ஆட்சியைச் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்ற கடுமையான உணர்வுடன் செல்கிறார்கள். ஒரு வர்க்கத்தின் வழிகாட்டும் அடுக்குகள் மட்டுந்தான் ஓர் அரசியல் வேலைத்திட்டத்தைக் கொண்டிருக்கும், இதுவுமே கூட சம்பவங்களினூடாக சோதனைக்கு உட்படுவதுடன், பெருந்திரளான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது அவசியமாகிறது. இவ்விதத்தில் புரட்சியின் அடிப்படை அரசியல் நிகழ்வுபோக்கு சமூக நெருக்கடியிலிருந்து எழும் பிரச்சினையை ஒரு வர்க்கம் படிப்படியாக புரிந்து கொள்வதில் தங்கியுள்ளது — வெற்றிகரமான மதிப்பீட்டு முறையின் மூலமாக பெருந்திரளான மக்களைச் செயலூக்கத்துடன் நோக்குநிலை கொள்ளச் செய்வதாகும்.
இப்போது, தொழிலாள வர்க்கத்தின் மீளெழுச்சியின் ஆரம்ப கட்டங்களில் உள்ளபோது, பல விடயங்கள் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. எதிர்ப்பானது இன்னமும் முந்தைய சகாப்தத்தில் செல்வச்செழிப்பான நடுத்தர வர்க்கத்தின் அரசியல் "இடது" என்று இருந்த தடங்களை இன்னும் சுமக்கின்றது. அந்த சகாப்தத்தில் அவை ஜனநாயக மறைப்பின் கீழ் வர்க்கப் போராட்டத்தை எதிர்த்து வந்தன. அதிக மனிதாபிமான முதலாளித்துவ அரசியலுக்கு உறுதியளிக்கும் பசுமைக் கட்சி அல்லது தாராளவாத கட்சிகளுக்கு பின்னால் எதிர்ப்பு வாக்குகள் செல்கின்றன அல்லது மக்களைப் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சியினால் அல்லாது தேசிய அரசு பாதுகாக்கும் என வாக்குறுதியளிக்கும் நவ-பாசிசவாதிகளின் பின்னாலும் கூட செல்கின்றன.
எவ்வாறிருப்பினும் சம்பவங்கள் வர்க்க நனவை வேகமாக நகர்ந்தி, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நோக்குநிலையில் வெடிப்பார்ந்த மாற்றங்களைத் தயாரிப்பு செய்கின்றன. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் தீவிரமயப்படல், நிதியியல் பிரபுத்துவத்தின் இரும்புப்பிடியின் கீழ் கொள்கையை மாற்றுவது சாத்தியமே இல்லை என்பதோடு சேர்ந்து, ICFI இன் நிலைப்பாட்டையும் வர்க்க அடிப்படையிலான கொள்கைக்கான அதன் அழைப்பையும் பலப்படுத்தும். ICFI இன் ஐரோப்பிய பிரிவுகளான பிரிட்டனின் சோசலிச சமத்துவக் கட்சி, பிரான்சின் சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l'égalité socialiste) மற்றும் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) ஆகியவை அதுபோன்றவொரு அபிவிருத்திக்குத் தயாரிப்பு செய்யவே ஐரோப்பிய தேர்தல்களில் பிரச்சாரம் செய்தன.
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கை, அதாவது முதலாளித்துவ வர்க்கத்தை பறிமுதல் செய்வதற்காக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் முழு பலத்தை அணிதிரட்டுவது, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி சோசலிசத்தைக் கட்டமைப்பது ஆகியவற்றைக் கைவரப்பெறுவதே முன்னே உள்ள ஒரே வழி என்பதை அனுபவம் எடுத்துக்காட்டும். ஐரோப்பிய முதலாளித்துவ நெருக்கடிக்கான தீர்வு, ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது ஒரு பாசிசவாத "தேசங்களின் ஐரோப்பாவோ" அல்ல, மாறாக ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளைக் கட்டமைப்பதற்கான தொழிலாள வர்க்கத்தின் போராட்டமாகும்.