ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US issues formal request for Assange’s extradition

அசான்ஜ் கையளிக்கப்படுவதற்கு அமெரிக்கா உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது

By Oscar Grenfell 
11 June 2019

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் அமெரிக்காவிடம் கையளிக்கப்படுவது தொடர்பாக, சென்ற வியாழனன்று, பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் ஒரு உத்தியோகபூர்வமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர் என்று வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் இன்று தெரிவித்துள்ளது. இந்த ஆவணம் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.

ஏப்ரல் 11 அன்று பிரிட்டிஷ் பொலிஸ் அசான்ஜை கைது செய்ததிலிருந்து, இங்கிலாந்திடம் ஒரு முழுமையான நாடுகடத்தல் நடைமுறை கோரிக்கையை முன்வைப்பதற்கு 60 நாட்கள் கால அவகாசத்தை அமெரிக்க அரசாங்கம் கொண்டிருந்தது. அசான்ஜ் அமெரிக்காவிடம் கையளிக்கப்படுவது தொடர்பான கோரிக்கை மீது முதல் தனிப்பட்ட விசாரணை ஜூன் 14 அன்று லண்டனில் நடத்தப்படவுள்ளது.


ஜூலியன் அசான்ஜ்

அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சிவில் உரிமைகள் வழக்கறிஞர்கள் மத்தியிலான பரந்துபட்ட எதிர்ப்பு ஒருபுறம் இருப்பினும், அமெரிக்க உளவுத்துறை சட்ட மீறல்கள் தொடர்பான 17 குற்றச்சாட்டுக்கள் உட்பட, மொத்தம் 18 குற்றச்சாட்டுக்களின் பேரில் அசான்ஜ் மீது வழக்கு தொடர்வதற்கான அதன் முயற்சிகளுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமெரிக்க நிர்வாகம் மேலும் அழுத்தம் கொடுத்து வருகிறது என்று செய்தியிதழ் அறிக்கைகள் உறுதி செய்கின்றன.

அமெரிக்க போர் குற்றங்களையும் மற்றும் இராஜதந்திர கூட்டுச் சதிகளையும் அம்பலப்படுத்தியதில் அசான்ஜின் பங்கு குறித்து அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள், அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்த வரைவில் பொறிக்கப்பட்டுள்ள பத்திரிகை சுதந்திர உரிமைகள் மீதான முன்னிலை தாக்குதல்களாக உள்ளன.

போர் எதிர்ப்பு ஆர்வலர்களையும், உளவாளிகள் மற்றும் அரசாங்க இரகசிய செய்தி வெளியீட்டாளர்கள் என கூறப்படுபவர்களையும் இலக்கு வைக்க வரலாற்று ரீதியாக பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு கொடூரமான சட்டமான உளவுத்துறை சட்டத்தின் கீழ், ஒரு பத்திரிகையாளர் மற்றும் வெளியீட்டாளரை குற்றவாளியாக்குவதற்கு இதற்கு முன்னர் எந்தவொரு அமெரிக்க நிர்வாகமும் முனைந்ததில்லை.

பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க சட்டங்களின் கீழ், இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவிடம் கையளிக்கப்படும் தனிப்பட்ட நபர்கள் மீது உத்தியோகபூர்வ நாடுகடத்தல் கோரிக்கையில் உட்படுத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் தவிர, கூடுதலான குற்றச்சாட்டுக்களையோ, அல்லது கோரிக்கை வழங்கப்பட்ட பின்னர் அவர் ஈடுபட்ட குற்றங்களின் பேரிலான குற்றச்சாட்டுக்களையோ சுமத்த முடியாது.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தியின் படி, “Vault 7” என்ற பெயரிலான அமெரிக்க மத்திய புலனாய்வு முகமையின் (CIA) ஒரு ஆவணத் தொகுப்பு பற்றிய விக்கிலீக்ஸ் 2017 பிரசுரம் தொடர்பாக அமெரிக்க நீதித்துறை குற்றம்சாட்டாது. “அரசாங்க அதிகாரிகளை பொறுத்தவரை,” அவ்வாறு நடவடிக்கை எடுப்பது “தேசிய பாதுகாப்பிற்கு மிகுந்த சேதத்தை விளைவிக்கும் என்ற கவலையினால் தான்” அந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

“Vault 7” வெளியீட்டில் இருந்து தான் அசான்ஜ் மீதான படிப்படியான அமெரிக்க பின் தொடர்தல் நடவடிக்கைகள் வேர்விட்டன என்று விக்கிலீக்ஸ் பலமுறை விவரித்துள்ளது. இந்த வெளியீடு, ஏப்ரல் 2017 இல், அப்போதைய சிஐஏ இயக்குநர் மைக் பொம்பியோவை அசான்ஜை ஒரு “பேய்” என்றும் விக்கிலீக்ஸை ஒரு “விரோதமான அரசு சாரா உளவுத்துறை முகமை” என்றும் கண்டனம் செய்யத் தூண்டியது.

இந்நிலையில், அசான்ஜிற்கு புகலிடம் வழங்குவதை இரத்து செய்யும் படியும், தூதரகத்திலிருந்து அவரை வெளியேற்றும் படியும் ஈக்வடோரிய அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான அவர்களது பிரச்சாரத்தை அமெரிக்க அதிகாரிகள் உடனடியாக அதிகரித்து வந்தனர். உளவுத்துறை சட்ட குற்றச்சாட்டுக்களின் உச்சக்கட்ட நடவடிக்கையாக, அதனுடன் கூட FBI விசாரணையையும் அவர்கள் தொடங்கினர்.

குற்றகரமாக தரவுகளை திருடும் வல்லமையிலும், மற்றும் தீங்கிழைக்கும் கணினி வைரஸ்களை பரப்புவதிலும் சிஐஏ கண்டிருந்த அபிவிருத்தியை “Vault 7” அம்பலப்படுத்தியது. அந்த ஆவணங்கள், ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் போன்ற எதிரிகளை குற்றம் சுமத்தும் வகையில், கணினி அமைப்புக்களை இரகசியமாக ஊடுருவி அதில் “இரகசிய அடையாளங்களை” புகுத்துவதில் அதன் திறமையை இந்த முகமை வளர்த்துக் கொண்டுள்ளதை நிரூபித்தன.

smart தொலைக்காட்சிகள் போன்ற வீட்டு உபயோக சாதனங்களை இரகசியமாக ஊடுருவும் திறமையையும் சிஐஏ கொண்டுள்ளமை, பரந்த பொதுமக்கள் உளவு பார்ப்பு நடவடிக்கையை எளிதாக்குவதை சாத்தியப்படுத்துகிறது என்பதை ஏனைய சாதனங்கள் சுட்டிக்காட்டின. சில ஆவணங்கள், நவீன கார்களில் உள்ள கணினி அமைப்புக்களை –ஒரு படுகொலைத் திட்டத்திற்கு பயன்படுத்தப்படக் கூடிய கருவி- இரகசியமாக ஊடுருவுவதற்கான திறைமையை வளர்த்துக் கொள்ள அந்த முகமை முனைந்ததை எடுத்துக் காட்டின.

உத்தியோகபூர்வ நாடுகடத்தல் நடைமுறை கோரிக்கையில் உள்ள குற்றச்சாட்டுக்களைத் தவிர்த்து அசான்ஜ் மீது கூடுதல் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கான தடைகள் ஒருபுறம் இருப்பினும், அவருக்கு எதிரான அமெரிக்க விசாரணைகள் நடைபெற்று கொண்டிருப்பதற்கான பல அறிகுறிகள் காணப்படுகின்றன.

2010 இல், விக்கிலீக்ஸிற்கு செய்திகளை கசியவிட்ட இரகசிய செய்தி வெளியீட்டாளரான செல்சியா மானிங், ட்ரம்ப் நிர்வாகத்தின் மூலம் இன்னமும் சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். விக்கிலீக்ஸை விசாரணை செய்வதற்கென ஒரு மாபெரும் தீர்ப்புக் குழு நியமனம் செய்யப்படுவதற்கு முன்னர், அசான்ஜூக்கு எதிராக பொய் சத்தியம் செய்து சாட்சியம் வழங்குவதற்கு அவரை நிர்பந்திக்கும் முயற்சிக்காக, எந்தவொரு குற்றச்சாட்டுமின்றி அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சென்ற வெள்ளியன்று, விக்கிலீக்ஸ், 2011 இல் ஐஸ்லாந்தில் “கணினி தரவு திருட்டு” நடவடிக்கையில் ஈடுபட்டதாக அசான்ஜ் மீது குற்றம் சுமத்த மத்திய புலனாய்வு அமைப்பின் (FBI) ஒரு முயற்சியை மீட்டுயிர்ப்பிக்கவும் அமெரிக்கா முனைந்து வந்தது என்று எச்சரித்தது.

மோசடி மற்றும் கையாடல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டார் என முன்னர் குற்றம்சாட்டப்பட்டவரான ஐஸ்லாந்தைச் சேர்ந்த FBI உளவாளி Sigurdur Thordarson, அசான்ஜூக்கு எதிரான கூடுதலான இட்டுக்கட்டல் குற்றச்சாட்டுக்களுக்கு வழிவகுக்கும் சாத்தியமுள்ள கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு சென்ற மாதம் கடைசியில் வாஷிங்டன் டிசி க்கு சென்றிருந்தார் என்று செய்தி ஊடக அமைப்புக்கள் தெரிவித்தன. அசான்ஜை விசாரணை செய்த FBI விசாரணைக் குழு மே முற்பகுதியில் ஐஸ்லாந்தில் Thordarson ஐ விசாரணை செய்தது.

உத்தியோகபூர்வமான நாடுகடத்தல் கோரிக்கையை அமெரிக்கா முன்வைப்பதும் அசான்ஜின் உடல்நலம் மிகவும் மோசமடைந்து வருவதாக அறிக்கைகள் வெளிவருவதும் ஒரே சமயத்தில் நிகழ்கின்றன. அசான்ஜின் “உடல் நிலை” பற்றிய “மிகுந்த கவலைகளுக்கு” மத்தியில், பெல்மார்ஷ் சிறையின் மருத்துவப் பிரிவிற்கு அவர் மாற்றப்பட்டுள்ளார் என்பதை விக்கிலீக்ஸின் மே 30 அறிக்கை உறுதி செய்தது.

அடுத்த நாள், சித்திரவதை தொடர்பான ஐ.நா. அமைப்பின் சிறப்பு அறிக்கையாளர் நில்ஸ் மெல்ஸர் விடுத்த அறிக்கை, விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் “உளவியல் சித்திரவதைக்கு ஆளானதன் நீண்டகால வெளிப்பாட்டிற்கான பொதுவான அனைத்து அறிகுறிகளையும் கொண்டுள்ளார்” என்று எச்சரித்தது.

அமெரிக்கா, பிரிட்டிஷ், சுவீடன் மற்றும் ஈக்வடோரிய அரசாங்கங்கள் அசான்ஜை துன்புறுத்துவதை மெல்ஸர் கண்டித்தார். மேலும், அசான்ஜ் நடைமுறை உரிமைகளைப் பெறுவதையும், அவர் அமெரிக்காவிடம் கையளிக்கப்படுவாரானால் மேலதிக சித்திரவதைகளுக்கும், மேலும் ஏனைய மனித உரிமை மீறல்களுக்கும் உட்படுத்தப்படுவதற்கான அபாயத்தை விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் எதிர்கொண்டுள்ளார் என்பதை பிரிட்டிஷ் நீதிமன்றங்கள் குறைத்து மதிப்பிடுகின்றன என்று எச்சரித்தார்.

ஐ.நா. அறிக்கையும் மற்றும் அசான்ஜின் உடல்நல நெருக்கடியும் அமெரிக்காவிற்கு அவர் நாடுகடத்தப்படுவது குறித்த எதிர்ப்பை மேலும் தீவிரப்படுத்துவதாக உள்ளன.

வெள்ளியன்று, மெக்சிகன் பிரஸ் கிளப் அசான்ஜை பாதுகாப்பதற்கான கூட்டு நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கும் ஒரு அறிக்கையை விடுத்துள்ளது. அதன் பொதுச் செயலர் Celeste Saenz de Miera இவ்வாறு அறிவித்தார்: “நம்மால் முடிந்த எதிர்ப்பைக் காட்டுவதற்கு நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நாம் அசான்ஜை இழப்போமானால், நம்மை நாம் இழந்துவிடுவோம். இது நடக்கக் கூடாது.”

சர்வதேச நிகழ்வுகளை தொடர்ந்து வெளியான இந்த அறிக்கை, அசான்ஜ் மீதான தாக்குதல்கள் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான ஒரு பரந்த குற்றவியல் தாக்குதலுக்கான மடைதிறப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை நிரூபிக்கிறது.

கடந்த வாரம், ஆஸ்திரேலிய மத்திய பொலிஸ், ஆப்கானிஸ்தானில் போர் குற்றங்கள் மற்றும் அரசாங்க கண்காணிப்புத் திட்டங்கள் பற்றிய தகவல்களை அம்பலப்படுத்தும் கட்டுரைகளை வெளியிட்டது குறித்து, News Corp ஊடக செய்தியாளரின் வீட்டிலும், ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்தின் சிட்னி அலுவலகங்களிலும் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதேபோல, பிரெஞ்சு அரசாங்கமும், யேமனுக்கு எதிரான சவுதி அரேபிய போரில் அது உடந்தையாக இருப்பது பற்றி அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்களை குற்றவாளிகளாக்குவதற்கு முயன்று வருகிறது.

KPFA வானொலியில் பேசுகையில், ஆஸ்திரேலிய புலனாய்வு பத்திரிகையாளர் ஜோன் பில்ஜெர், “தாராளவாத ஜனநாயகங்கள் என்றழைக்கப்பட்டவை மாறிவிட்டன,” என்பதுடன் “சர்வாதிகார ஆட்சி” முறைகள் அதிகரித்தளவில் ஏற்கப்பட்டு வருகின்றன என்ற அசான்ஜின் எச்சரிக்கைகளை இந்த நடவடிக்கைகள் நிரூபித்துவிட்டன என்று கூறினார். மேலும், அசான்ஜை பாதுகாப்பதற்கு மிகப்பரந்தளவில் அணிதிரள்வதற்கு பில்ஜெர் அழைப்பு விடுத்தார்.

இந்த வாரம் பிரிட்டனிலும் மற்றும் பல இடங்களிலும் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று, சோசலிச சமத்துவக் கட்சி, ஒரு ஆஸ்திரேலிய குடிமகனும் பத்திரிகையாளருமான அசான்ஜ் அமெரிக்காவிடம் கையளிக்கப்படமாட்டார் என உத்தரவாதமளித்து, பிரிட்டனில் இருந்து விடுவித்து ஆஸ்திரேலியாவிற்கு திரும்பச் செய்து அவரை பாதுகாப்பதன் மூலம் அதன் கடமைகளை ஆஸ்திரேலிய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, சிட்னி, மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் போன்ற நகரங்களில் ஒரு தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதற்கு அறிவித்துள்ளது.