Print Version|Feedback
On the spot report: Protest outside Westminster Magistrates Court demands freedom for gravely ill Julian Assange
நேரடி அறிக்கை: கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள ஜூலியன் அசான்ஜின் விடுதலைக்கு வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டம்
By our reporters
31 May 2019
விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜை குறி வைப்பதான அமெரிக்காவிடம் கையளிக்கப்படுவதற்கான நடைமுறைகளை எதிர்த்து வியாழனன்று காலையில் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு வெளியே சுமார் 100 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அமெரிக்க உளவுத்துறை சட்டத்தின் கீழ் அசான்ஜிற்கு எதிராக 17 கூடுதல் குற்றச்சாட்டுக்களை அமெரிக்க நீதித்துறை சுமத்தி, அது தொடர்பாக 175 ஆண்டு கால கடும் சிறை தண்டனையும் அவருக்கு விதிக்கப்பட்டதன் பின்னர் நடந்த முதல் நடைமுறை விசாரணையாக நேற்றைய விசாரணை இருந்திருக்க வேண்டியது. ஆனால், அசான்ஜின் வழக்கறிஞர் காரெத் பியெர்ஸ் தனது கட்சிக்காரர் விசாரணையில் கலந்துகொள்ள முடியாதளவிற்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்ததையடுத்து விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
சிறை அதிகாரிகளால் HM பெல்மார்ஷ் சிறையின் மருத்துவமனைக்கு அசான்ஜ் மாற்றப்பட்டுள்ளார் என்பதுடன், காணொளி இணைப்பு ஊடாக கூட தோன்றுவதற்கு முடியாத நிலையில் அவர் இருக்கிறார். லண்டனின் ஈக்வடோரிய தூதரகத்தில் இருந்து பொலிசார் அவரை சட்டவிரோதமாக இழுத்துச் சென்றதற்கு பின்னர் அதிகபட்ச பாதுகாப்புள்ள சிறையில் கிட்டத்தட்ட முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். அதிலும், ஒரு மிகச்சிறிய பிணை மீறல் நடவடிக்கைக்காக அசான்ஜிற்கு 50 வார கால சிறை தண்டனையை குரூரமாக நீதிமன்றம் விதித்ததன் பேரில் பயங்கரவாதிகளும் பெரும் குற்றவியல் குற்றவாளிகளும் பொதுவாக காவலில் வைக்கப்படும் சிறையில் அவரும் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்திற்கு வெளியே நிற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்
நீதிமன்றத்தில், காரெத் பியெர்ஸ் நீதிபதி எமா ஆர்பத்நோட் இடம் அசான்ஜ் “நன்றாக இல்லை” என்று தெரிவித்தார். என்றாலும், அசான்ஜை நாடுகடத்துவதை என்னவிலை கொடுத்தாவது சாதிக்க முனையும் பிரிட்டிஷ் நீதித்துறை ஸ்தாபகத்தின் வழியில் எதுவும் குறுக்கேநிற்க அனுமதிக்கப்பட மாட்டாது. இந்நிலையில், அடுத்த விசாரணை ஜூன் 12 அன்று அல்லது மற்றொரு நாளில் பெல்மார்ஷ் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திலோ அல்லது பெல்மார்ஷ் சிறையிலோ கூட நடத்தப்படும் என்று ஆர்பத்நோட் அறிவித்தார்.
நீதிமன்றத்திற்கு வெளியே, ஜூலியன் அசான்ஜ் பாதுகாப்பு குழு (JADC) ஒழுங்கமைத்த மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) ஆதரித்த ஒரு உறுதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஜூலியன் அசான்ஜின் ஆதரவாளர்கள் பிரசன்னமாகியிருந்தனர். “அமெரிக்காவே, இங்கிலாந்தே – அசான்ஜ் மீது கை வைக்காதே!”, “ஒரே ஒரு முடிவு தான் – ஒப்படைப்பு இல்லை!” மேலும் “உண்மையை கூறுவது ஒரு குற்றமல்ல – ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்” போன்ற சுலோகங்களை கோஷமிட்டனர்.
வீட்டில் தயாரிக்கப்பட்ட சுலோக அட்டைகள், “அசான்ஜை விடுதலை செய், போர் குற்றவாளிகளை சிறையிலிடு,” “ஜூலியன் அசான்ஜை விடுதலை செய், அவர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்” மேலும் “பத்திரிகைக்கு சுதந்திரமளி, அசான்ஜிற்கு சுதந்திரமளி” போன்ற கோஷங்களை கொண்டிருந்தன. SEP இன் பதாகைகளும் சுலோக அட்டைகளும், அசான்ஜ் மற்றும் சிறையிலிடப்பட்டுள்ள இரகசிய செய்தி வெளியீட்டாளர் செல்சி மானிங்கையும் விடுதலை செய்யக் கோரின.
பேரணியின் ஆரம்பத்தில், JADC இன் எமி பட்லன் அங்கு கூடியிருந்தவர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்: “ஜூலியன் அசான்ஜ் உடல்நலமின்றி உள்ளார் என்பதை நீதிபதி ஒப்புக்கொண்டுள்ளார். வெளிப்படையாக, அவரது உடல்நிலை பற்றியும் தற்போது பெல்மார்ஷ் சிறையின் மருத்துவப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டிருப்பது பற்றியும் பத்திரிகைகளில் வெளியிடப்படும் செய்திகள் குறித்து நாங்கள் மிகுந்த கவலையடைகிறோம். நமது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவருடன் இருக்கின்றன.”
ஆர்ப்பாட்டத்தில் கோர்டன் டிம்மாக் உரையாற்றுகிறார்
அடுத்த மாத விசாரணை வேளையில் அதிகளவிலானோரை வருகைதருமாறு பட்லன் விண்ணப்பித்ததுடன், பேச்சாளர்கள் ஒருவருக்கொருவரை அறிமுகம் செய்து வைத்தார்.
தனிப்பட்ட காணொளி வலைப்பதிவாளரான கோர்டன் டிம்மாக் முந்தைய வாரம் ஜூலியன் அசான்ஜிடம் இருந்து தனக்கு வந்திருந்த கடிதத்தை உரக்க வாசித்து, “நான் விடுதலையாகும் வரை, அனைவரும் எனது இடத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்ற அசான்ஜின் வார்த்தைகளை அவர் குறிப்பிட்டதற்கு கைத்தட்டல் பெற்றார்.
கிறிஸ் மார்ஸ்டன் ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்யக் கோரினார்
சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலர் கிறிஸ் மார்ஸ்டன், “இன்று இந்த நீதிமன்றத்தில் ஒரு சட்டரீதியான அருவருப்பு நிகழ்ந்துள்ளது. ஒரு அப்பாவி மனிதன் அமெரிக்காவிற்கு கையளிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறார்… ஜூலியன் அசான்ஜ் கடுமையாக பாதிக்கப்பட்டு, பெல்மார்ஷ் சிறையின் மருத்துவப் பிரிவில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அசான்ஜை மௌனமாக்குவதற்கு அமெரிக்காவுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டுவதற்கான அதன் முயற்சிகளில் இருக்கும் பிரிட்டிஷ் அரசின் மிருகத்தனத்தை யாராலும் நிறுத்த முடியாது. ஆனால், நாம் அதை நிறுத்தியாக வேண்டும். அதனை நிறுத்துவதற்கான ஒரே வழியாக, தொழிலாள வர்க்கத்தின் பாரிய சக்தி ஒன்றுதிரட்டப்பட வேண்டும், மேலும் அதன் மூலம் போருக்கு எதிரான போராட்டத்தில், இந்த அபத்தமான நிகழ்வையும், இதழியலுக்கு எதிரான, உண்மைக்கு புறம்பான இந்த குற்றத்தையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கூறினார்.
மேலும் மார்ஸ்டன், “உலகெங்கிலுமுள்ள மில்லியன் கணக்கான ஜூலியன் அசான்ஜின் பாதுகாப்பாளர்கள், விக்கிலீக்ஸின் பாதுகாப்பாளர்கள் மற்றும் உண்மையின் பாதுகாப்பாளர்கள் சார்பாக நாம் பேசுகிறோம்… அனைத்தும், அரசியல் ஸ்தாபகத்திற்கு எதிராக, முக்கிய ஊடகங்களுக்கு எதிராக, பெருவணிக கட்சிகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் ஒன்றுதிரட்டப்படுவதையும், போர், காலனித்துவம் மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றிற்கு எதிரான ஒரு உண்மையான வெகுஜன இயக்கம் கட்டியெழுப்பப்படுவதையும் சார்ந்திருக்கிறது” என்று கூறி நிறைவு செய்தார்.
வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு வெளியே மாக்ஸின் வோக்கர் பேசுகிறார்
JADC இன் மாக்ஸின் வோக்கர் ஆர்ப்பாட்டக்காரர்களிடம், “ஜூலியன் அசான்ஜூடன் நிற்க இன்று நாம் இங்கே இருக்கிறோம். அவருடன் இணைந்து எதற்காக நாம் நின்று கொண்டிருக்கிறோம்? உண்மைக்காக நாம் நின்று கொண்டிருக்கிறோம், சுதந்திரத்திற்காக நாம் நின்று கொண்டிருக்கிறோம், ஜனநாயகத்திற்காக நாம் நின்று கொண்டிருக்கிறோம். மேலும் எதற்கு எதிராக நாம் நின்று கொண்டிருக்கிறோம்? அசான்ஜையும் விக்கிலீக்ஸையும் தனது சக்தியினால் அரக்கத்தனமாக சித்தரிப்பதற்கும் அழிப்பதற்கும் எதையும் செய்து வரும் ஏகாதிபத்திய போர் எந்திரத்திற்கு எதிராக நாம் நின்று கொண்டிருக்கிறோம். ஏகாதிபத்திய நாடுகளின் போர் எந்திரத்தின் இரகசியங்களுக்கும், பொய்களுக்கும் எதிராக நாம் நின்று கொண்டிருக்கிறோம். மேலும், அவற்றின் கொலை பாதகங்கள், அவற்றின் சித்திரவதைகள், சித்திரவதைக்காக கைதிகளை நாடுகடத்தும் அவற்றின் நடவடிக்கைகள், அவற்றின் ஆட்சிக் கவிழ்ப்பு சதிகள் மற்றும் அவற்றின் போர்கள் ஆகியவற்றிற்கு எதிராக நாம் நின்று கொண்டிருக்கிறோம். அதைத்தான் விக்கிலீக்ஸ் நமக்கு அம்பலப்படுத்தியது” என்று தெரிவித்தார்.
“நாம் ஒரு பக்கத்தை தேர்வு செய்துள்ளோம். நாம் நீதியின் பக்கத்தை தேர்வு செய்துள்ளோம். மேலும், உலகெங்கிலும் ஆட்சி செய்யும் கொடுங்கோலர்களும் மனநோயாளிகளும் அவர்களது சக்தியினால், ஜூலியன் அசான்ஜை அழிப்பதற்கும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நிரந்தரமாக அவரை ஸ்தம்பிக்கச் செய்வதற்கும், அவரை அடக்கம் செய்வதற்கும் மேலும் உண்மையின் பக்கம் நிற்கும் ஏனையோருக்கு அவரின் நிலையை உதாரணமாக்கி இதுதான் நாளை உனக்கும் நடக்கும் என்று அச்சுறுத்துவதற்கும் எதையும் செய்கிறார்கள். அதனால் தான் இந்த போராட்டம் மிகவும் இன்றியமையாதது.”
பேரணி நிறைவுபெற்ற நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர்களது சுலோக அட்டைகளையும், பதாகைகளையும் உயர்த்திப் பிடித்து, Marylebone சாலையை எதிர்கொள்ளும் நடைபாதையில் வரிசையாக நின்றனர். இரண்டு திசைகளிலும் கடுமையான போக்குவரத்து இருந்த நிலையில், டசின் கணக்கான லண்டன் பேருந்து ஓட்டுநர்களும், ட்ரக் ஓட்டுநர்களும், வாடகை கார் ஓட்டுநர்களும் மற்றும் வணிகர்களும் அவர்களது வாகனங்களின் எச்சரிக்கை ஒலிப்பான்களில் கடும் ஒலியெழுப்பியதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஒரு நிரந்தர ஆதரவை வழங்கும் விதமாக வழிவிட்டனர். இதுதான், அசான்ஜின் விடுதலையை வென்றெடுக்கவுள்ள சக்திவாய்ந்த சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தின் குரலாக அங்கு ஒலித்தது.
ஜூலியன் அசான்ஜ் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக வாகனங்களின் ஒலியெழுப்பல்
நீதிமன்றத்திற்கு வெளியே பேரணி கூடிய பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்களின் ஒரு குழு, சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் கார்டியன் பத்திரிகையின் அலுவலகங்களை முற்றுகையிட தீர்மானித்தது. மனசாட்சியின்படி செயல்பட்டதற்காக கைது செய்யப்பட்டவர்களாக அசான்ஜ் மற்றும் மானிங்கின் பெயர்களை பட்டியலில் சேர்ப்பதற்கு சர்வதேச மன்னிப்பு சபை மறுத்ததையும், மற்றும் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் மற்றும் பத்திரிகையாளரைப் பற்றி, கார்டியன் பத்திரிகை இடைவிடாது அவதூறாக செய்தி பரப்புவது, பொல்லாங்கு கூறுவது மற்றும் நடத்தையை தரம்கெடுப்பது ஆகியவற்றையும் எதிர்த்து அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.