Print Version|Feedback
Amnesty International declares Julian Assange “not a prisoner of conscience”
ஜூலியன் அசான்ஜ் "மனசாட்சியின்படி செயல்பட்டதற்காக கைது செய்யப்பட்டவர் இல்லை" என்று சர்வதேச மன்னிப்பு சபை அறிவிக்கிறது
By Laura Tiernan
23 May 2019
பல விருதுகள் பெற்றுள்ள புலனாய்வு பத்திரிகையாளரும் பதிப்பாசிரியருமான விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் இலண்டன் HM பெல்மார்ஷ் சிறையில் தன்னந்தனியாக அடைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவிடம் கையளிக்கப்படும் நடைமுறைகள் தொடங்கி உள்ளன. அமெரிக்காவிடம் கையளிக்கப்பட்டால், அவர் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போர் குற்றங்களை அம்பலப்படுத்திய தகவல்களைப் பிரசுரித்ததற்காக தேசத்துரோக நடவடிக்கையின் கீழ் குற்றச்சாட்டுக்களை முகங்கொடுப்பார்.
அமெரிக்க நீதித்துறை தயாரித்து வரும் குற்றச்சாட்டுக்கள் மரண தண்டனையை உள்ளடக்கியுள்ளன.
விக்கிலீக்ஸிற்குத் தகவல்கள் வழங்கி அமெரிக்க அட்டூழியங்களைத் துணிச்சலாக வெளியில் கொணர்ந்த செல்சியா மானிங் ஏழாண்டுகள் ஓர் இராணுவச் சிறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், அசான்ஜிற்கு எதிராக சாட்சியம் கூற மறுத்ததற்காக கடந்த வாரம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் சர்வதேச மன்னிப்பு சபையின் (Amnesty International) கருத்துப்படி, அசான்ஜோ அல்லது மானிங்கோ "மனசாட்சியின்படி செயல்பட்டதற்காக கைது செய்யப்பட்டவர்கள்" இல்லை என்பதோடு, அந்த மனித உரிமைகள் அறக்கட்டளை செயலூக்கத்துடன் அவர்களின் பாதுகாப்புக்காக செயற்படவும் இல்லை.
மே 17 இல் ஜூலியன் அசான்ஜ் பாதுகாப்பு குழுவுக்கு (JADC) எழுதிய ஒரு கடிதத்தில் இங்கிலாந்து சர்வதேச மன்னிப்பு சபை அறிவிக்கையில், “ஜூலியன் அசான்ஜின் வழக்கை நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றாலும் அதுதொடர்பாக செயலூக்கத்துடன் செயல்படவில்லை. சர்வதேச மன்னிப்பு சபை ஜூலியன் அசான்ஜை மனசாட்சியின்படி செயல்பட்டதற்காக கைது செய்யப்பட்டவராக கருதவில்லை,” என்று குறிப்பிட்டது.
ஜூலியன் அசான்ஜ் பாதுகாப்பு குழுவின் சார்பாக மாக்ஸீன் வோக்கரின் ஒரு அவசர முறையீட்டைத் தொடர்ந்து, சர்வதேச மன்னிப்பு சபையின் அந்த சுருக்கமான வார்த்தைகளை தாங்கிய கடிதம் வந்திருந்தது. மாக்ஸீன் வோக்கரின் கடிதம் அசான்ஜிற்கு எதிரான பல்வேறு மனித உரிமைகள் மீறல்களைக் கவனத்திற்குக் கொண்டு வந்தது. “ஜூலியன் அசான்ஜ் பேராபத்தில் இருக்கிறார் என்பதை இதைவிட பலமாக எங்களால் குறிப்பிட முடியாது,” என்றவர் எழுதினார்.
“விக்கிலீக்ஸில் அவரின் செயல்பாடுகளுக்காக அமெரிக்காவில் அவர் பல்வேறு மனித உரிமைமீறல்களின் நிஜமான அபாயத்தை முகங்கொடுப்பார் என்பதால் அவர் அமெரிக்காவிடம் கைகளிக்கப்படக் கூடாது அல்லது வேறெந்த கைமாற்றல்களுக்கும் உட்படுத்தக் கூடாது,” என்ற சர்வதேச மன்னிப்பு சபையின் ஏப்ரல் 11 அறிக்கையையும் வோக்கர் மேற்கோளிட்டார்.
அதற்குப் பின்னர், “உங்களால் கூடுதலான அறிக்கைகள் எதுவும் வெளியிடப்பட்டதாக தெரியவில்லை... உலக பத்திரிகை சுதந்திர தினத்திற்கான உங்களின் ஆவணங்களிலும் அவர் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று தெரிகிறது, இது இங்கிலாந்து சர்வதேச மன்னிப்பு சபையின் புதிய ஊடகத்திற்கான 2009 விருது ஜூலியன் அசான்ஜிற்கு வழங்கப்பட்டிருந்தது என்பதையும் மற்றும் அவரின் தற்போதைய நிலைமையையும் வைத்து பார்க்கையில் ஓர் அசாதரண புறக்கணிப்பாக உள்ளது,” என்று வோக்கர் சவால்விடுத்தார்.
அவரது கடிதம் தொடர்ந்து குறிப்பிட்டது: “ஐக்கிய நாடுகள் செயற்குழுவின் எதேச்சதிகார கைதுக்கான 2015 தீர்ப்பு, அதாவது 'திரு. அசான்ஜின் சுதந்திரத்தைப் பறிப்பது எதேச்சதிகாரமானது என்பதுடன், மனித உரிமைகள் பிரகடனத்தின் ஷரத்து 9 மற்றும் 10 ஐ மீறுவதாகும்' என்பதை ஐக்கிய இராஜ்ஜியம் புறக்கணித்துள்ளது, உண்மையில் அதை அது கேலிக்கூத்தாக ஆக்கியுள்ளது.”
பெல்மார்ஷில் அசான்ஜ் அடைக்கப்பட்டிருப்பது "திரு. அசான்ஜின் சுதந்திரத்தை ஏதேச்சதிகாரமாக கூடுதலாக பறித்திருப்பதாக" ஐக்கிய நாடுகள் சபை செயற்குழு குறிப்பிட்டிருந்ததையும், ஓர் உயர்பாதுகாப்பு சிறையில் அவர் 50 வாரங்களாக அடைக்கப்பட்டிருப்பது "மனித உரிமை தரமுறைகளில் கூறப்பட்டுள்ள அவசியமான மற்றும் பொருத்தமான கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிராக" இருப்பதாக அவர்கள் தீர்மானித்ததையும் வோக்கர் சுட்டிக்காட்டினார்.
வோக்கரின் கடிதம் இவ்வாறு நிறைவு செய்யப்பட்டிருந்தது, “மனித உரிமைகள் குறித்து அக்கறை கொண்ட அமைப்புகள் இந்த வழக்கில் இன்னும் அதிக செயலூக்கத்துடன் குரல் கொடுக்க வேண்டியது மிகவும் அவசரமாகும். ஜூலியன் அசான்ஜ் மீதான அச்சுறுத்தல்களையும், பேச்சு சுதந்திரம், தகவல் வெளியீட்டு சுதந்திரம் மற்றும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு மீதான அச்சுறுத்தல்களின் பரந்த உள்நோக்கங்களை கையாள ஒரேயொரு அறிக்கை போதுமானதல்ல,” என்றவர் முடித்திருந்தார்.
அதற்கு மூன்று நாட்களுக்குப் பின்னர் வோக்கருக்குச் சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் இரண்டு-பத்தி பதில் கிடைத்தது. அது அசான்ஜிற்கு எதிராக இட்டுக்கட்டப்பட்ட "கற்பழிப்பு" குற்றச்சாட்டுகள் மீது சுவீடன் "ஆரம்ப புலனாய்வுகளை" மீண்டும் திறந்திருப்பதை ஆதரித்து, சர்வதேச மன்னிப்பு சபையின் ஐரோப்பிய ஆய்வுகளுக்கான துணை இயக்குனர் மஸ்சிமோ மொராட்டி மே 13 இல் வெளியிட்ட ஓர் அறிக்கையைத் தொடர்புபடுத்தி இருந்தது. “ஜூலியன் அசான்ஜின் கற்பழிப்பு குற்றச்சாட்டுக்கள் முழு தீவிரத்துடன் கையாளப்பட வேண்டும்" என்று தலைப்பிட்டு மொராட்டி அறிவிக்கையில், “குற்றச்சாட்டுக்கள் சுமத்தியவர் மற்றும் விசாரணையின் கீழ் இருக்கும் நபர் இருவரின் உரிமைகளையும் மதிக்கும் விதத்தில் ஜூலியன் அசான்ஜிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முறையாக விசாரிக்கப்பட வேண்டியது இன்றியமையாததாகும்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
இது கேலிக்கூத்தாக உள்ளது.
விக்கிலீக்ஸ் ஸ்தாபகரை அசிங்கப்படுத்தவும் மற்றும் அவரை அமெரிக்காவிடம் கைகளிப்பதை உத்தரவாதப்படுத்தவும் சுவீடனும் பிரிட்டனும் அண்மித்து ஒன்பது ஆண்டுகளாக, அசான்ஜிற்கு எதிரான “கற்பழிப்பு" மற்றும் "பாலியல் துன்புறுத்தல்" ஆகிய போலி குற்றச்சாட்டுக்களைப் பிடித்துக் கொண்டுள்ளன. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க அசான்ஜ் எப்போதும் சுவீடனுக்கு பயணிக்க விருப்பமாக இருந்தார், ஆனால் சுவீடன் அதிகாரிகள் அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள அவசர "தற்காலிக சரணடைவு" ஏற்பாடுகளின் கீழ் அவரைப் பிடித்து ஒப்படைக்க மாட்டோம் என்று உத்தரவாதமளிக்க மறுத்தனர். அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படக்கூடிய அச்சுறுத்தல் தான் அசான்ஜை ஈக்வடோரிடம் அரசியல் தஞ்சம் கோர நிர்பந்தித்தது.
சுவீடன் பொலிஸ் மற்றும் வழக்குதொடுனர்கள் ஏற்கனவே —ஆகஸ்ட் 2010 இல் ஸ்டாக்ஹோமிலும் மற்றும் நவம்பர் 2016 இல் இலண்டனின் ஈக்வடார் தூதரகத்திலும்— அசான்ஜை விசாரித்துள்ளனர். அவ்விரு சந்தர்ப்பங்களின் போதும், அந்த ஆரம்ப புலன்விசாரணை ஒரேயொரு குற்றநகலும் தாக்கல் செய்யப்படாமல் மூடப்பட்டது. சுவீடன் சட்டப்படி, ஒப்படைப்பு கோரிக்கை பெறுவதற்கு முன்னரே அசான்ஜ் மீது குற்றஞ்சுமத்த முடியும். ஆனால் இப்போது வரையில், சுவீடன் எந்த குற்றச்சாட்டும் சமர்ப்பிக்கவில்லை என்பதுடன் அப்பட்டமாக அரசியல் நோக்கங்களுக்காக ஓர் ஐரோப்பிய கைது உத்தரவாணையைக் கோரி வருகிறது.
சர்வதேச புவிசார் அரசியல், ஆக்கிரமிப்புக்கான, ஆட்சி மாற்றத்திற்கான சட்டவிரோத போர்கள், அசான்ஜிற்கு எதிராக அமெரிக்க அரசியல்வாதிகளின் படுகொலை அச்சுறுத்தல்கள் என அசான்ஜ் மற்றும் மானிங்கினது சிறையடைப்பின் அரசியல் பின்புலத்தை இவை ஒன்றும் இல்லாததைப் போல சர்வதேச பொதுமன்னிப்பு சபை திட்டமிட்டு மூடிமறைக்கிறது. சுவீடனைச் சுட்டிக்காட்டி, சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிடுகையில், உலகின் மிகவும் தொல்லைக்கு உட்படுத்தப்பட்ட அந்த பத்திரிகையாளரை மனசாட்சியின்படி செயல்பட்டதற்காக கைது செய்யப்பட்டவராக அது கருதவில்லை என்று சர்வசாதாரணமாக குறிப்பிடுகிறது. அவர் "அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படக்கூடாது, விக்கிலீக்ஸில் அவர் செய்த வேலைகளுக்காக அங்கே அவர் பல்வேறு மனித உரிமைமீறல்களின் நிஜமான அபாயத்தை முகங்கொடுக்கிறார்...” என்பதை அது நம்புகிறது. அதனால்தான் அவர்கள் அந்த வழக்கை "செயலூக்கத்துடன்" பின்தொடரவில்லை.
சர்வதேச பொதுமன்னிப்பு சபை அசான்ஜ் விவகாரத்தைக் கைகழுவி விடுவதற்கு சுவீடனின் குற்றச்சாட்டுக்களை ஒரு சாக்குபோக்காக பற்றிக்கொள்கிறது, ஆனால் மானிங்கின் விடயம் என்னாவது? மனசாட்சியின்படி செயல்பட்டதற்காக கைது செய்யப்பட்டவராக மானிங்கை பட்டியலிடவும் ஏன் அது மறுத்தது என்று வினவ செவ்வாயன்று உலக சோசலிச வலைத் தளம் சர்வதேச மன்னிப்பு சபையைத் தொடர்பு கொண்டது. “ஒரு பெருமன்ற நீதியரசர்கள் சபையின் முன்னால் சாட்சியம் கூற மறுப்பதற்காக கைது செய்யப்படுவது சட்டவிரோதமல்ல" என்று மின்னஞ்சலில் விளக்கம் அளிப்பதற்கு முன்னதாக, சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் இங்கிலாந்து பத்திரிகை தொடர்பு அதிகாரி, அவர்களின் அமெரிக்க அலுவலகத்தைத் தொடர்பு கொண்டார். சவூதி அரேபியாவில் தலைகளை வெட்டுவதும் கூட, அந்த விடயத்திற்காக சர்வதேச பொதுமன்னிப்பு சபையைச் செயலூக்கத்துடன் பிரச்சாரம் செய்வதிலிருந்து தடுத்து விடவில்லை.
“இந்த பிரச்சினைகளில் ஏற்கனவே அவர் நீளமாக விளக்கமளித்துள்ள நிலையில், [விளக்கமளிக்க] மறுப்பதற்கான செல்சியாவின் நோக்கங்களை நாங்கள் புரிந்து கொள்கிறோம்,” என்பதை சர்வதேச மன்னிப்பு சபை உலக சோசலிச வலைத் தளத்துக்கு பரபரப்புடன் தெரிவித்தது, “அவரின் முந்தைய சிறைவைப்பில் கொடூரமாக கையாளப்பட்டமை மற்றும் அதீத தண்டனை வழங்கியமை ஆகியவை அதிகாரத்தில் உள்ளவர்கள் மற்றவர்கள் பேசுவதைத் தடுக்க செல்கிறார்கள் என்பதற்கு ஒரு நீண்ட கூர்மையான நினைவூட்டலாக சேவை செய்துள்ளது,” என்பதையும் சேர்த்துக் கொண்டது.
2017 இல் இருந்து அவர்கள் மானிங் குறித்து ஒரேயொரு அறிக்கை கூட பதிவிட்டிருக்கவில்லை.
“வன்முறையை பயன்படுத்தியிராத அல்லது வன்முறைக்கு வக்காலத்துவாங்காத ஒருவர், ஆனால் பாலியல் நோக்குநிலை, இனம், தேசியம் அல்லது சமூக தோற்றுவாய், மொழி, பிறப்பு, நிறம், பாலினம் அல்லது பொருளாதார அந்தஸ்து ஆகிய காரணங்களுக்காகவோ அல்லது மதம், அரசியல் அல்லது ஏதேனும் அவர்களின் மனசாட்சிக்கு உகந்த நம்பிக்கைகளை ஏற்றிருந்ததற்காகவோ கைது செய்யப்படுபவர்களை" மனச்சாட்சியின்படி செயல்பட்டதற்காக கைது செய்யப்பட்டவர் என்று சர்வதேச மன்னிப்பு சபை வரையறுக்கிறது.
உலகின் மிகவும் சக்திவாய்ந்த அரசுகள் நடத்திய போர் குற்றங்கள், அரசு ஊழல், பெருந்திரளான மக்கள் மீதான உளவுபார்ப்பு மற்றும் ஜனநாயக விரோத சதி நடவடிக்கைகளை எல்லா மக்களும் தெரிந்து கொள்ள உரிமை உண்டு என்று "மனசாட்சிப்படி அவர்கள் ஏற்றிருந்த நம்பிக்கைகளுக்காக" அசான்ஜூம் மானிங்கும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். “ஒன்று நான் சிறைக்குச் செல்ல வேண்டும் அல்லது எனது கோட்பாடுகளைக் காட்டிக்கொடுக்க வேண்டும்,” “என் கருத்துக்களை மாற்றிக் கொள்வதை விட பட்டினி கிடந்து இறந்து போவேன்,” என்று மானிங் விவரித்துள்ளார்.
அசான்ஜூம் மானிங்கும் மனசாட்சிப்படி செயல்பட்டதற்கான கைதிகள் இல்லையென்றால், பின் வேறு யார் இருக்கிறார்கள்?
மனச்சாட்சிப்படி செயல்பட்டதற்காக கைது செய்யப்பட்டவர்களின் (prisoners of conscience - POC) ஒரு சர்வதேச பட்டியல் அவர்களிடம் இல்லையென்று சர்வதேச மன்னிப்பு சபை WSWS க்குத் தெரிவித்தது. ஆனால் விக்கிப்பீடியாவில் பிரசுரிக்கப்பட்ட பட்டியலின் ஒரு பகுதி அவர்களில் பெரும்பான்மையினர் ரஷ்யா, ஈரான், சீனா, முன்னாள் சோவியத் குடியரசுகள் மற்றும் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காட்டுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரேயொருவர் மட்டுமே அந்த POC பட்டியலில் உள்ளார், 100,000 இக்கும் அதிகமானவர்களின் வாழ்வைப் பறித்துள்ள இப்போதும் நடந்து வரும் யேமன் போரில் பிரெஞ்சு இராணுவம் ஈடுபட்டிருப்பதை அம்பலப்படுத்தியதற்காக தற்போது சிறைத்தண்டனை கொண்டு அச்சுறுத்தப்பட்டு வருகின்ற பத்திரிகையாளர்கள் உள்ள பிரான்சில் இருந்தும் மற்றும் பிரிட்டனில் இருந்தும் யாருமே அந்த பட்டியலில் இடம் பெறவில்லை.
சர்வதேச பொதுமன்னிப்பு சபை அதன் வலைத் தளத்தில் குறிப்பிடுகையில், “மக்களின் சுதந்திரத்திற்கான, உண்மைக்கான மற்றும் கண்ணியத்திற்கான உரிமையைப் பாதுகாத்து, நாங்கள் மக்களைப் பாதுகாக்கிறோம். துஷ்பிரயோகங்கள் நடக்கும் போது அவற்றை புலனாய்வு செய்து அம்பலப்படுத்துவதன் மூலமாக இதை நாங்கள் செய்கிறோம்,” என்று குறிப்பிடுகிறது. மனித உரிமைகள் பிரகடனம் (UDHR) “சர்வதேச மன்னிப்புச் சபையின் செயல்பாடுகளுக்கு அடிப்படையான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.” “அது எங்களின் பெரும்பாலான பிரச்சாரங்களுக்கு அடித்தளத்தை வழங்குவதுடன், உரிமைகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் போது அதிகாரிகளை அதற்கு பொறுப்பேற்க செய்ய அது எங்களுக்கு உதவுகிறது,” என்று குறிப்பிடுகிறது.
அசான்ஜ் மற்றும் மானிங் என்று வரும்போது, சர்வதேச மன்னிப்பு சபைக்குக் பொறுப்பெடுக்கச்செய்யும் அதிகாரம் இல்லாமல் போய்விடுகிறது, படுபயங்கரமான மனித உரிமைமீறல்களின் முன்னால் மவுனமாக இருந்துவிடுவதுடன், அரசாங்கம் மற்றும் ஊடகத்தின் அருவருக்கத்தக்க எந்திரத்தை பூதாகரமாக காட்ட உதவுகிறது. அசான்ஜ் மற்றும் மானிங்கை கையாள்வதில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சுவீடன் மற்றும் ஈக்வடோரால் மனித உரிமை பிரகடனத்தின் அனைத்து முப்பது ஷரத்துகளும் நடைமுறையளவில் மீறப்பட்டுள்ளன.
அசான்ஜின் உரிமைகள் மீது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் அளவிலான மீறல்கள் பின்வரும் கோட்பாடுகளுடன் சம்பந்தப்படுகின்றன: ஷரத்து 3: ஒருவரின் வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்கான உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு; ஷரத்து 5: யாரொருவரும் சித்திரவதை அல்லது குரூரத்தனத்திற்கு உட்படுத்தப்படக்கூடாது, மனிதாபிமானமின்றி கீழ்தரமாக கையாளப்படக்கூடாது அல்லது தண்டிக்கப்படக்கூடாது; ஷரத்து 9: யாரொருவரும் எதேச்சதிகாரமாக கைது நடவடிக்கைக்கு, சிறையில் அடைக்கப்படுவதற்கு அல்லது நாடுகடத்தப்படுவதற்கு உள்ளாக்கப்படக்கூடாது; ஷரத்து 10: ஒருவரின் உரிமைகள் மற்றும் கடமைப்பாடுகளைத் தீர்மானிப்பதிலும் மற்றும் அவருக்கு எதிரான எந்தவொரு குற்றகரமான குற்றச்சாட்டைத் தீர்மானிப்பதிலும், ஒருவர் ஒரு சுதந்திரமான பாரபட்சமற்ற தீர்ப்பாயத்தால் ஒரு நியாயமான மற்றும் பகிரங்கமான விசாரணையை முழு சமத்துவத்துடன் பெறுவதற்கு உரியவராகிறார்; ஷரத்து 14: தொல்லைப்படுத்தலில் இருந்து தப்பிக்க மற்ற நாடுகளில் தஞ்சம் கோருவதற்கும் தஞ்சம் பெறுவதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு; ஷரத்து 17; யாரொருவரின் சொத்தும் எதேச்சதிகாரமான ரீதியில் பறிமுதல் செய்யப்படக்கூடாது; ஷரத்து 19: ஒவ்வொருவருக்கும் கருத்து சுதந்திரத்திற்கான மற்றும் வெளிப்படுத்தும் சுதந்திரத்திற்கான உரிமை உள்ளது; குறுக்கீடின்றி கருத்துக்களை தாங்கி நிற்பதற்கான சுதந்திரமும் மற்றும் எந்தவொரு ஊடகம் வழியாகவும் நாட்டின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல் தகவல்களை கருத்துக்களைக் கோருவதற்கும், பெறுவதற்கும், கொண்டு செல்வதற்குமான சுதந்திரமும் இந்த உரிமையில் உள்ளடங்குகின்றன.
1948 இல் எழுதப்பட்ட மனித உரிமை பிரகடனத்தின் முகப்புரை குறிப்பிடுகையில், “ஒருவர், கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறையை எதிர்த்து போராட, கடைசி புகலிடமாக, உதவியைப் பெறுவதற்கு நிர்பந்திக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், சட்டத்தின் ஆட்சியால் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது இன்றியமையாததாகும்,” என்று குறிப்பிடுகிறது. 60 மில்லியன் மக்களின் உயிர்களைப் பறித்த உலகப் போர் மற்றும் பாசிசத்தின் அருவருப்பான இரத்தத்திலிருந்து மேலெழுந்த ஏகாதிபத்திய சக்திகள், போர், சமூக மேலெழுச்சி மற்றும் புரட்சிக்குள் புதிதாக வீழாமல் இருப்பதை பாதுகாக்க ஒரு சர்வதேச பொருளாதார, அரசியல் மற்றும் சட்டபூர்வ இயங்குமுறைகளை கட்டமைத்தன.
மனித உரிமை பிரகடனத்தை கட்டமைத்தவர்கள் "கிளர்ந்தெழுவதற்கு" ஆதரவு தேட வேண்டியிராததை உத்தரவாதப்படுத்த விரும்பினார்கள் என்பதால், சர்வதேச மன்னிப்பு சபையை ஸ்தாபித்தவர்களாலும் அந்த நோக்கம் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இதனை ஸ்தாபித்த பாரிஸ்டர் பீட்டர் பெனென்சன் 1960 இல் எழுதுகையில், “ஓர் அரசாங்கம் அதன் சொந்த ஒடுக்குமுறையால் தோற்றுவிக்கப்பட்ட வக்கிரமான சுழற்சியில் சிக்கிக் கொள்வதற்கு முன்னதாகவும் மற்றும் அது அடுத்து வரவிருக்கும் உள்நாட்டு போரை முகங்கொடுக்கப்பதற்கு முன்னதாகவும், பொதுக்கருத்தை விரைவாகவும் பரவலாகவும் அணித்திரட்டுவதே முக்கிய விடயமாகும். மனசாட்சியின்படி நடந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டவர்களை மிகக் கவனமாக தேர்ந்தெடுப்பதும் மிகவும் முக்கியமானதாகும்: “அரசியலுடன் முரண்படுகின்ற பல கைதிகளின் தனிப்பட்ட விடயங்களை பிரசுரிக்கும் நுட்பம் புதிய ஒன்றாகும். அது முந்தைய மன்னிப்பு சபை பிரச்சாரங்களுக்கு ஏற்பட்ட கதியைத் தடுப்பதற்காக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது, அவை மிகவும் பெரும்பாலும் மனிதாபிமான நோக்கங்களுடன் இல்லாமல் கைது செய்யப்பட்டவர்களின் அரசியல் கண்ணோட்டங்களைப் பிரசுரிப்பதில் அதிக அக்கறை கொண்டதாக மாறியுள்ளன.”
மானிங் மற்றும் செல்சியா மீது சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் மவுனத்தில் தெளிவாக எடுத்துக்காட்டப்படுவதைப் போல, அறிவிக்கப்படாத மூலக்கூற்று என்னவாக இருக்கிறது என்றால், அந்த இரண்டு கைதிகளின் "அரசியல் கண்ணோட்டங்களையும்" பிரசுரிக்கக் கூடாது, மேலும் மேற்கத்திய முதலாளித்துவ "ஜனநாயக" அமைப்புகள், மிகவும் குறிப்பாக அடிமட்டத்திலிருந்து மக்களின் எந்தவொரு புரட்சிகர அச்சுறுத்தலில் இருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாக உள்ளது. எட்டாண்டுகளுக்கு முன்னர், சர்வதேச பொதுமன்னிப்பு சபை 2011 அரபு வசந்தத்தைத் தூண்டிய அதுவும் குறிப்பாக துனிசியாவில் ஒரு "வினையூக்கியாக பாத்திரம்" வகித்த ஆவணங்களைப் பிரசுரிப்பதில் விக்கிலீக்ஸூம் கார்டியனும் வகித்த பாத்திரத்திற்காக அவற்றைப் பாராட்டியது. இன்றோ, கார்டியன் வேட்டைதாரி தளபதியாக இருந்து, அசான்ஜை ஒரு ரஷ்ய கைப்பாவை என்றும் "பலாத்காரம் புரிந்தவர்" என்றும் குரூரமாக அசிங்கப்படுத்தி வருகிறது, அதேவேளையில் சர்வதேச மன்னிப்பு சபையோ அசான்ஜையும் மானிங்கையும் இத்தகைய குள்ளநரிகளின் பிடியில் விட்டுவைத்துள்ளது.
ஓர் அரசியல் பிளவு கண்கூடாக தெரிகிறது. பிரிட்டனில், தொழிற் கட்சி, தாராளவாத ஜனநாயக கட்சியினர், பசுமை கட்சியினர், ஸ்காட்டிஷ் தேசிய கட்சி என அனைத்து ஸ்தாபக கட்சிகளும், போலி-இடது சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து அசான்ஜிற்கு எதிராக வரிசைக்கட்டி நிற்கின்றனர், இதனுடன் பல அரசுசாரா அமைப்புகள் மற்றும் மனித உரிமைகள் குழுக்களும் சேர்ந்துள்ளன. சுவீடனின் குற்றச்சாட்டுக்கள் வெறுமனே ஏகாதிபத்தியத்திற்கான அவர்களின் அப்பட்டமான பாதுகாப்புக்கு ஒரு சௌகரியமான சாக்குபோக்காக சேவையாற்றுகின்றன. “அதுபோன்ற குற்றச்சாட்டுக்களில் இருந்து மறைந்து கொள்வதற்கு எங்கும் இடமில்லை என்றும் ஒப்படைக்கக் கோரும் கோரிக்கை பெற்றால் அசான்ஜை சுவீடனுக்கு அனுப்ப வேண்டும் என்றும் ஏப்ரல் 13 இல் ஊடகங்களுக்குத் தெரிவித்த ஜெர்மி கோர்பின் மற்றும் டேனி அபோட் போன்றவர்களுக்கான "ஏசு சிலுவையில் அறையப்படவேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டவராக" சுவீடன் இன்று விளங்குகிறது.
சுவீடனின் மீண்டும் மீண்டும் மீட்டுயிர்ப்பிக்கப்பட்டுள்ள “பூர்வாங்க விசாரணைகளின்” பாத்திரம் குறித்து யாரும் சந்தேகப்படக்கூடாது என்பதற்காக, பிரிட்டனின் மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் பெண்கள் உரிமை பிரிவின் இடைக்கால துணை-இயக்குனர் ஹீதர் பர் ஏப்ரல் 16 அல் ஓர் அறிக்கை வெளியிட்டார், இதை வெட்கக்கேட்டின் பட்டியலில் தான் பதிய வேண்டும்: “விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் அமெரிக்காவில் குற்றங்களை முகங்கொடுக்கும் விதத்தில் கடந்த வாரம் இலண்டனில் அவர் கைது செய்யப்பட்ட போது, அது ஊடக சுதந்திரம் மீது ஆழ்ந்த கவலைகளை எழுப்பியது. ஆனால் இத்தகைய கவலைகளுக்கு மத்தியில், அசான்ஜ் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டும் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்,” என்றார்.
பெல்மார்ஷ் சிறையில் அசான்ஜின் சிறையடைப்பை நீடிக்குமாறு குறிப்பிட்ட பர்ரின் அறிக்கை ("பிரிட்டன், அசான்ஜின் தலைவிதியை தீர்மானிக்கையில், கற்பழிப்பு வழக்கை மதிப்பீடு செய்ய சுவீடனுக்கு காலஅவகாசம் வழங்க வேண்டும்") ஈக்வடோரிய தூதரகத்தில் அசான்ஜ் கைது செய்யப்பட்டதை முன்னர் HRW கண்டித்திருந்ததை கிட்டத்தட்ட ஒன்றுமில்லாது ஆக்கியது, அதேவேளையில் அசான்ஜிற்கு எதிராக பொய்யான மற்றும் அவதூறான அறிக்கைகளையும் வெளியிட்டார். அசான்ஜிற்கு எதிராக கற்பழிப்பு "குற்றச்சாட்டுக்களை" பர் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார்—ஆனால் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் ஒருபோதும் இருக்கவே இல்லை!
அசான்ஜை நோக்கிய அரசியல் அணிவகுப்பு சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் மத்திய கருத்துருவை ஊர்ஜிதப்படுத்துகிறது: அதாவது, அசான்ஜ் மற்றும் மானிங்கின் விடுதலை தொழிலாள வர்க்கத்தைச் சுயாதீனமாக அரசியல்ரீதியில் அணிதிரட்டுவதிலேயே தங்கியுள்ளது. பெருந்திரளான உழைக்கும் மக்களும், இளைஞர்களும் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான நிஜமான பாதுகாவலர்கள் அனைவராலும் தான் அசான்ஜ் மற்றும் மானிங்கை விடுவிப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியும்.
*** ***
பிற்சேர்க்கை: கடித பரிவர்த்தனைகள்
ஜூலியன் அசான்ஜ் பாதுகாப்பு குழுவின் மாக்ஸீன் வோக்கருக்கும் பிரிட்டனின் சர்வதேச பொதுமன்னிப்பு சபைக்கும் இடையிலான கடித பரிவர்த்தனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஜூலியன் அசான்ஜ் பாதுகாப்பு குழு
14 மே 2019
அன்புடன் பிரிட்டன் சர்வதேச பொதுமன்னிப்பு சபையினருக்கு,
ஜூலியன் அசான்ஜ் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதை எதிர்க்கவும் மற்றும் அதற்கான எதிர்ப்பை அணித்திரட்டவும் அமைக்கப்பட்ட ஜூலியன் அசான்ஜ் பாதுகாப்பு குழுவின் சார்பாக நான் இதை உங்களுக்கு எழுதுகிறேன்.
ஜூலியன் அசான்ஜ் மிகப்பெரும் பேராபத்தில் இருக்கிறார் என்பதை எங்களால் இதைவிட பலமாக குறிப்பிட முடியாது. உண்மையில் விக்கிலீக்ஸ் தலைமை பதிப்பாசிரியர் கிறிஸ்டின் கிராஃப்ன்சனும் பாமீலா ஆண்டர்சனும் சமீபத்தில் பெல்மார்ஷில் அவரை சந்தித்த பின்னர் கிராஃப்ன்சன் அளித்த பேட்டியை நீங்கள் பார்த்திருக்கக் கூடும், அதில் அவர், 'இது வாழ்வா சாவா பிரச்சனை, அந்தளவுக்கு இது தீவிரமானது,' என்று குறிப்பிடுகிறார்.
அவர் ஏப்ரலில் கைது செய்யப்பட்ட பின்னர் நீங்கள் ஓர் அறிக்கை வெளியிட்டீர்கள் என்பதை நாங்கள் அறிவோம், அதில் நீங்கள் பின்வருமாறு கூறினீர்கள்:
“ஜூலியன் அசான்ஜ் அமெரிக்காவிடம் ஒப்படைக்க கூடாது அல்லது வேறு எந்தவிதமான கைமாற்றுதலுக்கும் உட்படுத்தக்கூடாது, விக்கிலீக்ஸில் அவரின் செயல்பாடுகளுக்காக அங்கே அவர் நிஜமான மனித உரிமைகள் மீறல்களின் தீவிர அபாயத்தை முகங்கொடுக்கக்கூடிய விவகாரங்கள் உள்ளன என்று சர்வதேச பொதுமன்னிப்பு சபை நம்புகிறது.”
அதுபோன்றவொரு ஒப்படைப்பு நடந்தால் அவரின் வாழ்வுரிமை மீதான உச்சபட்ச மீறல்கள் உட்பட அவர் மீது மனித உரிமைமீறல்கள் நடக்கலாமென அந்த அறிக்கையில் நீங்கள் ஒப்புக் கொண்டீர்கள். லாரன்ஸ்
ஆனால் அதற்குப் பின்னர் இருந்து மேற்கொண்டு எந்த அறிக்கைகளும் உங்களால் வெளியிடப்படவில்லை என்பதையும் நாங்கள் கவனித்தோம். உலக பத்திரிகை சுதந்திர தினத்திற்கான உங்கள் ஆவணத்திலும் அவர் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று தெரிகிறது, இது தற்போதைய சூழலிலும் மற்றும் 2009 இல் பிரிட்டனின் சர்வதேச பொதுமன்னிப்பு சபையினது புதிய ஊடகங்களுக்கான விருது ஜூலியன் அசான்ஜிற்கு வழங்கப்பட்டதையும் கொண்டு பார்க்கையில், அதுவொரு அசாதாரண புறக்கணிப்பாக உள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் போர் குற்றங்களையும் மற்றும் அந்த போர்களில் சித்திரவதை, படுகொலை மற்றும் பெரும் எண்ணிக்கையில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் மீது சுமத்தப்பட்ட நிலைமைகள் உட்பட அங்கே நடந்துள்ள மனித உரிமைமீறல்களையும் அம்பலப்படுத்துவதில் விக்கிலீக்ஸின் முக்கிய பாத்திரத்தை அங்கீகரித்து, ஜூலியன் அசான்ஜ் அதுபோன்ற பல விருதுகளை வென்றுள்ளார்.
ஐக்கிய நாடுகள் செயற்குழுவின் எதேச்சதிகார கைதுக்கான 2015 தீர்ப்பு, அதாவது “திரு. அசான்ஜின் சுதந்திரத்தைப் பறிப்பது எதேச்சதிகாரமானது என்பதுடன், மனித உரிமைகள் பிரகடனத்தின் ஷரத்து 9 மற்றும் 10 ஐ மீறுவதாகும்" என்பதை ஐக்கிய இராஜ்ஜியம் புறக்கணித்துள்ளது, உண்மையில் அதை அது கேலிக்கூத்தாக ஆக்கியுள்ளது. ஏப்ரலில் ஜூலியன் அசான்ஜ் கைது செய்யப்பட்ட பின்னர் அந்த செயற்குழு குறிப்பிடுகையில், 'அரசாங்கம் அதன் கருத்துக்கு கீழ்படியவில்லை என்பதுடன் திரு. அசான்ஜின் சுதந்திரத்தை மேற்கொண்டு இப்போது எதேச்சதிகாரமாக பறித்துள்ளதற்காக செயற்குழு வருந்துகிறது,' என்றும் குறிப்பிட்டது. திரு. அசான்ஜ் தீவிரமான குற்றம் புரிந்ததற்காக தண்டிக்கப்பட்டிருப்பதைப் போல 11 ஏப்ரல் 2019 இல் இருந்து ஓர் உயர்பாதுகாப்பு சிறையான பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதன் மீது அது கவலை வெளியிடுகிறது. “இவ்வாறு கையாள்வது மனித உரிமை தரமுறைகளில் பொதிந்திருக்கும் அவசியத்தின் மற்றும் விகிதாச்சார தர கோட்பாடுகளுக்கு எதிராக இருப்பதாக தெரிகிறது.”
மனித உரிமைகள் குறித்து அக்கறை கொண்ட அமைப்புகள் இந்த விடயத்தில் இன்னும் கூடுதலாக செயலூக்கத்துடன் குரல் கொடுக்க வேண்டியது அவசரமாகும். ஜூலியன் அசான்ஜிற்கான அச்சுறுத்தல்களையும், பேச்சு சுதந்திரம், தகவல் வழங்கும் சுதந்திரம் மற்றும் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு மீதான பரந்த உள்நோக்கங்களைக் கையாள ஒரேயொரு அறிக்கை போதுமானதல்ல. உங்கள் பிரசுரங்களிலும் பிரச்சாரங்களிலும் இந்த வழக்கிற்கு முன்னுரிமை அளியுங்கள்; இந்த வழக்கைக் குறித்தும் அவரின் சிறை நிலைமைகள் குறித்தும் கவலைகள் வெளியிடும் (அல்லது அவ்வாறு செய்யாமல் இருப்பதற்காக) நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசுங்கள்; சிறையில் அவருக்கு கடிதம் அனுப்புமாறு உங்கள் ஆதரவாளர்களை ஊக்குவியுங்கள் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
உங்களின் பதிலை எதிர்நோக்கி உள்ளோம்.
நல்வாழ்த்துக்கள்
மாக்ஸின் வோக்கர்
அன்புடன் மாக்ஸின்,
ஜூலியன் அசான்ஜ் சம்பந்தமாக உங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி.
ஜூலியன் அசான்ஜிற்கு எதிரான ஒரு கற்பழிப்பு குற்றச்சாட்டு மீது சுவீடன் வழக்குதொடுனர் ஆணையத்தின் விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டதற்குப் பிந்தைய எங்களின் சமீபத்திய அறிக்கையை இங்கே காணலாம்; https://www.amnesty.org/en/latest/news/2019/05/julian-assange-rape-allegations-must-be-treated-with-utmost-seriousness/
ஜூலியன் அசான்ஜின் வழக்கை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் ஆனால் செயலூக்கத்துடன் செயல்பட்டு வரவில்லை. சர்வதேச மன்னிப்பு சபை, ஜூலியன் அசான்ஜை மனசாட்சியின்படி செயல்பட்டதற்காக கைது செய்யப்பட்டவராக கருதவில்லை. இருந்தாலும் அவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படக் கூடாது, விக்கிலீக்ஸில் அவரின் செயல்பாடுகளுக்காக அனேகமாக அவரின் கைது நிலைமைகளுக்குடன் சம்பந்தப்பட்ட ஒத்த நிலைமைகள் உட்பட நிஜமான மனித உரிமைமீறல்களின் பல்வேறு தீவிர அபாயத்தை அங்கே முகங்கொடுக்கிறார் என்பதை சர்வதேச மன்னிப்பு சபை தொடர்ந்து நம்புகிறது.
இது எங்களின் நிலைப்பாட்டை விளக்குகிறது என்று நாங்கள் நம்புகிறோம்.
இப்படிக்கு,
தகவல்தொடர்பு உதவிக்குழு
சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் பிரிட்டன் பிரிவு,
The Human Rights Action Centre,
17-25 New Inn Yard,
London,
EC2A 3EA