Print Version|Feedback
A new stage in the US-China trade war
அமெரிக்க-சீன வர்த்தகப் போரில் ஒரு புதிய கட்டம்
Nick Beams
14 May 2019
உலகின் முதல் மற்றும் இரண்டாவது இடத்திலுள்ள இரண்டு பொருளாதாரங்களான அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான பொருளாதார மோதல், ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகப் போர் தீவிரப்படுத்தலுடன், ஒரு புதியதும் மேலும் அதிக ஆபத்தானதுமான கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த மே மாதம் முதலில் அமெரிக்கா சீனாவின் வர்த்தக மற்றும் பொருளாதார கொள்கைகள் மீது அதன் தொடர்ச்சியான கோரிக்கைகளைச் சீனாவிடமிருந்து கோரியதற்குப் பின்னர், மோதல் எந்தளவுக்கு இருந்தாலும் சரி அமெரிக்காவின் அறிவிப்புகள் எந்தளவுக்கு அதிகரித்தளவில் ஆக்ரோஷமாக இருந்தாலும் சரி, இறுதியில் ஏதோவொரு வகை வர்த்தக உடன்படிக்கை எட்டப்படும் என்பதே முதலாளித்துவ வட்டாரங்களின் பாரம்பரிய அறிவாக இருந்தது. இந்த நம்பிக்கை, பெடரல் ரிசர்வின் அனுசரணையான நாணயக் கொள்கைகளுடன் சேர்ந்து, பங்குச் சந்தை அதிகரிப்பைச் சாதனையளவிலான உயரங்களுக்கு கொண்டு செல்வதற்கான அடித்தளத்தை உருவாக்கியது.
ஆனால் முதலாளித்துவ அமைப்புமுறையின் அனைத்து கண்மூடித்தனமான பகுப்பாய்வுகளைப் போலவே, இந்த மகிழ்ச்சியான சூழலும் அதன் இன்றியமையா உந்துசக்தியாக விளங்கும் இந்த இலாப நோக்கு அமைப்புமுறையின் அடிப்படை புறநிலை முரண்பாடுகளால் ஒன்றுமில்லாமல் போய்விட்டது.
ஒரு தசாப்தத்திற்கு முன்னர், உலகளாவிய நிதியியல் நெருக்கடியின் உடனடி பின்னணியில், பிரதான முதலாளித்துவ சக்திகளின் தலைவர்கள் ஜி20 உச்சி மாநாடு கூட்டத்திற்காக இலண்டனில் ஒன்று கூடினர். அங்கே அவர்கள் —பெருமந்தநிலைமைக்குப் பிந்தைய மிகவும் தீவிரமான அந்த உலகளாவிய நிதியியல் முறிவான— அந்நெருக்கடிக்கு விடையிறுக்கையில், அவர்கள் 1930 களின் வர்த்தக போர் நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்பதில்லை என்றும், அந்த வரலாற்று படிப்பினைகள், குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்கான நிலைமைகளை உருவாக்குவதில் வர்த்தகப் போர் வகித்த பாத்திரம், புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகவும் சூளுரைத்தார்கள்.
அந்த உச்சிமாநாடு குறித்து உலக சோசலிச வலைத் தளம் முன்வைத்த பகுப்பாய்வு அத்தகைய வலியுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதன் அறிக்கை அறிவித்தது, “ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான எதிர்விரோதங்கள் இந்த உச்சிமாநாடு நெடுகிலும் வெளிப்பட்டன" என்பதுடன், அவை தவிர்க்கவியலாமல் கூர்மையடையும். “உலக முதலாளித்துவத்தை மீட்பதற்கான ஓர் ஒருமித்த உலகளாவிய திட்டத்தை வகுப்பதில் இருந்து வெகுதூரம் விலகி,” WSWS குறிப்பிட்டது, “இந்த இலண்டன் உச்சிமாநாடு உலகளவில் ஒன்றோடொன்று பிணைந்த பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான ஒத்துவராத முரண்பாட்டையும், இந்த நெருக்கடிக்கு நிஜமான சர்வதேச அணுகுமுறையை ஏற்பது இந்த எதிர்விரோத தேசிய அரசுகளுக்குச் சாத்தியமில்லை என்பதை மட்டுமே எடுத்துக்காட்டுகின்றன.”
அடிப்படையான மற்றும் தீர்க்கமுடியாத முரண்பாடான இது, உலகளாவிய முதலாளித்துவ பொருளாதாரத்தின் இந்த கட்டமைப்பிலேயே வேரூன்றியுள்ளதுடன், இப்போது சீனாவுக்கு எதிராக அமெரிக்க தொடுத்துள்ள வர்த்தகப் போர் வடிவில் வெடித்துள்ளது.
லியோன் ட்ரொட்ஸ்கி முதலாம் உலக போர் குறித்த அவரின் பகுப்பாய்வில், உலக பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாடு ஒவ்வொரு முதலாளித்துவ வல்லரசும் தன்னை உலக மேலாதிக்க சக்தியாக மாற்றிக் கொள்வதற்கான போராட்டத்தில் வெளிப்படும் — இது ஒன்றோடொன்றும் ஒவ்வொன்றுக்கு எதிராகவும் இராணுவ மோதலில் இறங்குவதில் போய் முடியும் என்று விவரித்தார்.
இரண்டு உலகப் போர்கள், பெருமந்தநிலையின் பொருளாதார சீரழிவு மற்றும் நாஜிசத்தின் கொடுமைகள் என இவற்றை உருவாக்கிய இரத்தத்தில் ஊறிய மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், அமெரிக்கா ஏகாதிபத்திய மேலாதிக்க சக்தியாக மேலெழுந்தது. அது ஒரு புதிய பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்கை ஏற்படுத்த அதன் பொருளாதார பலத்தையும் அதன் எதிர்விரோதிகள் மீதான செல்வாக்கையும் பயன்படுத்தியது. ஆரம்பத்தில் மேற்புறத்தில் வெடித்திருந்த முரண்பாடுகள் மறைக்கப்பட்டன என்றாலும், அவை ஒருபோதும் தீர்க்கப்பட்டிருக்கவில்லை.
உண்மையில் இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கான புத்துயிரூட்டலும் அது உருவாக்கிய பொருளாதார வளர்ச்சியும், போருக்குப் பின்னர் எந்த ஒழுங்கின் மீது அடித்தளமிட்டு அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கம் அமைக்கப்பட்டதோ அதற்கே குழிபறிக்க தொடங்கியது. அமெரிக்க வீழ்ச்சியின் பட்டவர்த்தனமான முதல் அறிகுறி ஆகஸ்ட் 1971 இல் வந்தது அப்போது அமெரிக்க ஜனாதிபதி நிக்சன், தங்கத்தின் கையிருப்பில் இழப்பு ஏற்பட்டபோது, அமெரிக்க டாலருக்கும் தங்கத்திற்கும் இடையிலான இணைப்பை நீக்கியதன் மூலம், போருக்குப் பிந்தைய நாணய அமைப்புமுறைக்கு அடிப்படையாக இருந்த பிரெட்டென் வூட்ஸ் உடன்படிக்கையை 1944 இல் கலைத்தார்.
அதற்கு 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 1991 இன் முடிவில் மற்றொரு முக்கிய திருப்புமுனை வந்தது, அப்போது ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பை நடத்தியது. அது முதலாளித்துவத்தின் வெற்றியாக புகழப்பட்ட அதேவேளையில், போருக்குப் பிந்தைய ஒழுங்கின் உருக்குலைவில் அது மற்றொரு கட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியது.
இரண்டு உலக போர்களில் அமெரிக்கா யாருக்கு எதிராக போரிட்டதோ அந்த ஏகாதிபத்திய எதிர்போட்டியாளர்களின் அபிலாஷைகளையும் முனைவுகளையும், சோவியத் ஒன்றியம் இருந்தபோது, பனிப்போரின் முகமூடியின் கீழ், கட்டுப்படுத்தி வைக்க முடிந்திருந்தது. இப்போது ஸ்திரப்படுத்தி வந்த அந்தக் காரணி நீக்கப்பட்டிருந்தது. இந்த உண்மையை உடனடியாக புரிந்து கொண்ட பென்டகன், சோவியத்திற்குப் பிந்தைய அமெரிக்காவின் கொள்கையானது உலக அளவில் அல்லது உலகின் எந்தவொரு பிராந்தியத்திலும் அதன் மேலாதிக்கத்தைச் சவால்விடுப்பதில் இருந்து எந்தவொரு சக்தியையோ அல்லது சக்திகளின் குழுவையோ தடுப்பதாக இருக்கும் என்று அறிவித்து, 1992 இன் தொடக்கத்தில் ஒரு மூலோபாய ஆவணத்தைப் பிரசுரித்தது.
ஆனால் 1990 கள் நெடுகிலும் மற்றும் இந்த புதிய நூற்றாண்டிலும், அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி வேகமாக தொடர்ந்தது, இது போருக்குப் பிந்தைய உடனடி காலகட்டத்தில் அது கொண்டிருந்த தொழில்துறை மேலாதிக்க இடத்தில் இருந்து நிதியியல் ஒட்டுண்ணித்தனம் மற்றும் ஊகவணிகத்தை அதன் பொருளாதாரம் அதிகரித்தளவில் சார்ந்திருப்பதில் குணாம்சப்படுத்தப்பட்டது — இந்த நிகழ்ச்சிப்போக்குத்தான் 2008 நிதியியல் உருகுதலுக்கு இட்டுச் சென்றது.
அதன் ஒப்பீட்டளவிலான பொருளாதார மேலாதிக்கத்தை இழந்து வருகின்ற நிலையில், அமெரிக்கா அதன் உலகளாவிய மேலாதிக்கத்தைப் பேணுவதற்கு இராணுவ வழிவகைச் சார்ந்துள்ளதால், இது கடந்த கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் தொடர்ச்சியான போர்களுக்கு இட்டுச் சென்றுள்ளது.
இதில்தான் சீனாவுடன் ஆழமடைந்து வரும் மோதலுக்கான மூலகாரணம் அமைந்துள்ளது. இது வர்த்தகம் சம்பந்தமான ஒரு மோதல் வடிவத்தை எடுக்கின்ற போதும், அதன் வேர்கள் இன்னும் அதிக ஆழமாக செல்கின்றன. அதன் பழைய எதிர்விரோதிகள் உடனான நேருக்கு நேரான சந்திப்புகளில் ஏற்கனவே அதன் அந்தஸ்து பலவீனமாக இருக்கின்ற நிலையில், எந்தவொரு நாடும் மேலெழுந்து வருவதை அனுமதிக்க அமெரிக்கா தயாராக இல்லை. இதனால் தான் பெய்ஜிங் மீதான அதன் கோரிக்கைகள் வர்த்தகத்தை மீளச்சம்படுத்துவதையும் கடந்து செல்கின்றன. அவை சீனாவின் பொருளாதார முன்னேற்றத்தை, அனைத்திற்கும் மேலாக உயர் தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை அபிவிருத்தி துறைகளில் முன்னேற்றத்தைத் தடுப்பதை நோக்கி உள்ளன, இத்துறைகளை அதன் பொருளாதார மற்றும் இராணுவ நிலைப்பாட்டிற்கு ஓர் இருத்தலியல் அச்சுறுத்தலாக அமெரிக்கா கருதுகிறது.
இது வெறுமனே ட்ரம்ப் மற்றும் அவரின் நிர்வாகத்தில் குவிந்துள்ள சீன-விரோத போர்வெறியர்களின் நிலைப்பாடு மட்டுமல்ல. இதுதான் ஒட்டுமொத்த அமெரிக்க உளவுத்துறை மற்றும் இராணுவ எந்திரத்தினதும் அத்துடன் பெருநிறுவன மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் முக்கிய பிரிவுகளினதும் நிலைப்பாடாக உள்ளது, இது செனட்டின் ஜனநாயகக் கட்சி தலைவர் சார்லஸ் சூமர் சீனாவுக்கு எதிராக தொடர்ந்து "வளைந்து கொடுக்காமல் கடுமையாக" (“hang tough”) இருக்குமாறு ட்ரம்புக்கு உரக்க அழைப்புவிடுப்பதில் இருந்தும் மற்றும் பேர்ணி சாண்டர்ஸ் போன்ற ஜனநாயகக் கட்சிக்குள் உள்ள "இடதுகள்" என்றழைக்கப்படுவர்கள் ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதில் இருந்தும் எடுத்துக்காட்டப்படுகிறது.
அமெரிக்கா சீனாவுக்கு கொடுக்கத் தயாராக இருக்கும் ஒரே பொருளாதார பாத்திரம், நடைமுறையளவில் அமெரிக்காவின் அரை-காலனித்துவ நாடாக சீனா செயல்படுவது மட்டுமே.
ஆனால் ஜி ஜின்பிங் தலைமையிலான முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் சீன ஆட்சி இதுபோன்ற கீழ்படிதலை ஏற்க முடியாது. முதலாளித்துவ சொத்துடைமையின் மீட்சி மற்றும் உலக சந்தைக்குள் சீனாவை ஒருங்கிணைத்ததன் மூலமாக 400 மில்லியன் பலமான தொழிலாள வர்க்கத்தை உருவாக்கி விட்டுள்ள அது, பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து உருவாக்கும் வரையில் அரசியல் சட்டபூர்வமான தன்மையை பேண முடியும்.
இந்த முரண்பாட்டின் கட்டுப்படுத்தவியலாத புறநிலை தர்க்கம், போர் ஆகும்.
இந்த மோதல் வெறுமனே சீனாவுடன் மட்டுமல்ல. முன்னதாக அமெரிக்க முதலாளித்துவத்திற்கு ஆதாயமாக இருந்த சுதந்திர வர்த்தகத்தின் அடித்தளத்திலான போருக்குப் பிந்தைய ஒழுங்கு, இப்போது அதன் சொந்த நலன்களுக்கே எதிராக செயல்படுகிறது என்பதை அமெரிக்க ஆளும் வட்டாரங்களுக்குள் உணரப்பட்டிருப்பதில் இருந்து இது எழுகிறது.
வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் வருவதற்கு முன்னரே, ஒபாமா நிர்வாகத்தின் தலைமை வர்த்தக பேச்சுவார்த்தையாளர் மைக்கெல் ஃப்ரொமன் Foreign Affairs சஞ்சிகையின் டிசம்பர் 2014 பதிப்பில் பிரசுரித்த ஒரு கட்டுரையில் குறிப்பிடுகையில், போருக்குப் பின்னர் வடிவமைக்கப்பட்ட உலகளாவிய வர்த்தக முறையில் அங்கே "கட்டுமானரீதியான மாற்றங்கள்" நடந்திருப்பதாக குறிப்பிட்டார். அவர்கள் உலக வர்த்தக "கட்டமைப்பில்" ஒரு மாற்றத்தைக் கோரியதாக அவர் வலியுறுத்தினார். இது ஏனென்றால் அமெரிக்கா போரின் இறுதியில் செய்ததைப் போல, அது "உலகளாவிய பொருளாதாரத்தில் ஒரு மேலோங்கிய அந்தஸ்தை இப்போது கொண்டிருக்கவில்லை" என்பதுடன், “வர்த்தக கொள்கையை வடிவமைப்பதில் முன்னொருபோதும் இல்லாதளவில் கட்டுப்பாடுகளை" முகங்கொடுக்கிறது.
தற்போதைய உலக வர்த்தக முறைக்கு எதிராகவும் மற்றும் நூறு பில்லியன் கணக்கான டாலர்களுக்கு ஏற்ப அமெரிக்காவை "முதிரச் செய்வது" குறித்துமான அவரின் பிதற்றல்களில், ட்ரம்ப் அமெரிக்க ஆளும் வட்டாரங்களில் பரவலாக உள்ள நிலைப்பாட்டை இன்னும் அதிக பகிரங்கமாகவும் இன்னும் அதிக குரூரமாகவும் மட்டுமே வெளிப்படுத்தி வருகிறார்.
தற்போது சீனா மோதல் தான் அரங்கின் மத்திய இடத்தில் இருக்கிறது என்றாலும், ஏனைய அமெரிக்க போட்டியாளர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாரம் வர்த்தகத்துறையில் இருந்து அந்த நிர்வாகம் அறிக்கை ஒன்றைப் பெறவிருக்கிறது. ஜப்பான், தென் கொரியா மற்றும், அனைத்திற்கும் மேலாக, ஜேர்மனிக்கு எதிராக வாகனத்துறை இறக்குமதியில் 25 சதவீத வரிவிதிப்புகளைத் திணிப்பதற்கான ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு சட்டபூர்வ அடித்தளத்தை வழங்கும் வகையில், அந்த அறிக்கை வாகனத்துறை இறக்குமதி அமெரிக்காவின் "தேசிய பாதுகாப்புக்கு" ஓர் அச்சுறுத்தலைக் கொண்டிருப்பதாக குறிப்பிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அச்சுறுத்தல் ஏற்கனவே ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை அமெரிக்காவுடன் பன்முக வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்குப் பதிலாக இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு அழுத்தமளிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது, இது இப்போது சீனாவுக்கு எதிராக திருப்பப்பட்டிருக்கும் அதேபோன்ற நடவடிக்கைகளுக்கு அவற்றை உள்ளாக்கும் என்று அஞ்சி அவை அதை எதிர்த்திருந்தன.
அமெரிக்க-சீன வர்த்தக போரின் ஆழ்ந்த முக்கியத்துவத்தை அதன் பரந்த அரசியல் உள்ளடக்கத்தில் வைத்து பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அது ஏதோ கடந்து சென்றுவிடக்கூடிய பூசல் கிடையாது. 1930 களின் பொருளாதார நடவடிக்கைகளைப் போன்ற அதே மாதிரியானவை மீட்டுயிர்ப்பிக்கப்பட்டு வருகின்றன, ஆகவே அந்த காட்டுமிராண்டித்தனமான தசாப்தத்தின் அனைத்து அரசியல் நிகழ்வுப்போக்குகளும் மீண்டுமொருமுறை மேற்பரப்புக்கு வந்து கொண்டிருக்கின்றன.
அமெரிக்கா அதன் நலன்களை பாதுகாக்க —வெனிசுவேலாவில் இருந்து பாரசீக வளைகுடா மற்றும் தென் சீனக் கடல் வரையில்— உலகம் எங்கிலும் அதன் படைகளை நிலைநிறுத்துகின்ற நிலையில் உலக போர் அபாயம் தினசரி அதிகரித்து வருகிறது. முன்பினும் அதிக எதேச்சதிகார ஆட்சி வடிவங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதற்கு மத்தியில், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நிலைநிறுத்தப்படவிருக்கும் பாசிசவாத சக்திகள் அமெரிக்காவில் ட்ரம்பினாலும் மற்றும் உலகெங்கிலுமான முதலாளித்துவ அரசுகளாலும் செயலூக்கத்துடன் ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், பங்குச் சந்தைகளின் ஏற்ற இறக்கங்களோ, 2008 ஐ விட அதிக தீவிரமான மற்றொரு நிதியியல் நெருக்கடி அபிவிருத்தி ஆகி வருவதைச் சுட்டிக்காட்டுகின்றன.
வர்க்க போராட்டத்தின் அதிகரிப்புக்கும், முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் சோசலிச மாற்றீடுக்குத் தொழிலாளர்கள் அதிகரித்தளவில் திரும்புவதற்கும், முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பானது போர், சர்வாதிகாரம் மற்றும் பாசிசமாக உள்ளது.
காட்டுமிராண்டித்தனத்திற்குள் வீழ்ச்சி தீவிரப்படுவதை தொழிலாள வர்க்கத்தின் தலையீடு மட்டுமே தடுக்க முடியும். முதலாம் உலகப் போரின் தொடக்கத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளில் கூறுவதானால்: “உலகப் பொருளாதாரத்தை சோசலிசரீதியில் ஒழுங்கமைப்பதை நாளாந்த நடைமுறை வேலைத்திட்டமாக கொண்டு முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய குழப்பங்களை எதிர்ப்பதே, அவற்றை பாட்டாளி வர்க்கம் எதிர்கொள்வதற்கான ஒரே வழியாகும்.”