Print Version|Feedback
Tamil nationalists support anti-Muslim witch-hunt in Sri Lanka
இலங்கையில் முஸ்லீம்-விரோத சூனிய வேட்டையை தமிழ் தேசியவாதிகள் ஆதரிக்கின்றனர்
By V. Gnana and K. Nesan
24 May 2019
இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறன்று நடந்த பயங்கரவாத குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, சாதாரண மக்களை, விசாரணைகளோ அல்லது பிணையோ இன்றி கைது செய்து சிறையிலடைப்பதற்கான பரந்த அதிகாரங்களை போலிசுக்கும் இராணுவத்துக்கும் வழங்குகின்ற அவசரகால சட்டத்தினை பிரகடனப்படுத்தினார்.
அவசரகால சட்டத்தின் கீழ் 40,000க்கும் அதிகமான அப்பாவித் தமிழ் மக்களும் பிரிவினைவாத விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒட்டுமொத்தத் தலைமையும் இராணுவத்தால் படுகொலை செய்யப்படுவதில் முடிவடைந்த 1983-2009 தமிழர் விரோத உள்நாட்டுப் போரின் போது நிலவிய நிலைமைகளுக்கு, இலங்கை மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கிறது. போலிசும் இராணுவமும் தீவெங்கிலும் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன. அவர்கள் சாதாரண மக்களைக் குறிவைத்து தெருத் தடைகளையும், சோதனைச் சாவடிகளையும் உருவாக்கியதுடன் சுற்றி வளைத்து தேடும் இராணுவ நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.
வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ், முஸ்லீம் மக்கள் இராணுவத் துன்புறுத்தல்களின் பிரதான இலக்குகளாயிருக்கின்றனர். தீவு முழுமையிலும் வாழும் முஸ்லீம்கள் இனவாதத் தாக்குதல்களுக்கு முகம்கொடுக்கின்றனர். ஒழுங்கமைக்கப்பட்ட சோதனைகளில், கொடுரமான விசேட அதிரடிப் படை (STF) உள்ளிட்ட இராணுவ பிரிவுகள் தனியாட்களின் வசிப்பிடங்களுக்குள் அத்துமீறி நுழைவதும், மசூதிகள் மற்றும் வணிகத்தலங்களை பீதிக்குட்படுத்துவதுமாய் இருக்கின்றன. தீவு முழுவதும் பாதுகாப்புப் படைகள் பொதுப் போக்குவரத்துகளில் பயணிக்கும் முஸ்லீம் பயணிகளை கண்காணிப்பதோடு, அவர்களை துன்புறுத்தலுக்கும் இனரீதியான வசைகளுக்கும் இலக்காக்குகின்றனர்.
முஸ்லீம் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்துக்கும் எதிராக அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வருகின்ற ஒரு தாக்குதலாகும். உலகெங்கும் வர்க்கப் போராட்டங்கள் தீவிரமாக வளர்ச்சியடைகின்ற நிலையில், 2015க்குப் பிந்தைய அரசின் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகள் தொழிலாள வர்க்கத்தை தீவிரமயப்படுத்தியிருக்கின்றன. 100,000க்கும் அதிகமான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் டிசம்பரில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர், அபோட்சிலி தோட்டத்தில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் ஒருங்கிணைப்பில் ஒரு நடவடிக்கைக் குழுவையும் அவர்கள் உருவாக்கினர்.
முதலாளித்துவ தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA), முஸ்லீம், தமிழ் மக்கள் மீதான தாக்குதலில் அரசாங்கத்துடன் கரம் கோர்த்துக் கொண்டிருக்கிறது. தாக்குதல்கள் நடாத்தப்பட்டதை தொடர்ந்து உடனடியாக கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன் செய்த ட்வீட்டுகளில், “இந்த தீவிரவாதிகள் நாட்டை பின்நோக்கி கொண்டு சென்று விடாத வகையில் நாம் ஒன்றுபட்டு வலிமையாக வேண்டும்” என்றும் ”இந்தக் குற்றங்களுக்கு திட்டம் தீட்டித் தந்தது யார் என்று அடையாளம் காண்பதற்கும் அவர்களை சட்டத்தின் முன்பாகக் கொண்டுவருவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை மாண்புமிகு ஜனாதிபதியும் பிரதமரும் எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்தார்.
முதலாளித்துவ ஆட்சிக்கு அச்சுறுத்தல் நேரும்போதெல்லாம் ஒன்றுதிரள்வதற்கு இலங்கை முதலாளித்துவ வர்க்கம் கடைப்பிடித்து வருகின்ற ஒரு நெடும் பாரம்பரிய வழக்கமாக இருக்கும் “அனைத்துக் கட்சிக் கூட்டம்” ஒன்றுக்கு சிறிசேன அழைப்பு விடுத்தார். கூட்டமைப்பு இந்தக் கூட்டத்தில் பங்குபற்றி அவசரகால சட்டம் பிரகடனப்படுத்த தனது ஆதரவை வழங்கியது.
அவசரகால சட்டத்தின் பிரிவுகளில் 1978 இல் தமிழ் தீவிரவாதத்திற்கு எதிராக அறிமுகம் செய்யப்பட்ட இழிபுகழ் பெற்ற பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் (PTA) இடம்பெற்றிருந்த பல பிரிவுகளும் இடம்பெற்றிருக்கின்றன. உள்நாட்டுப் போரின் போது, தன்னிச்சையான கைதுகளைச் செய்வதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் மற்றும் அப்பாவி மக்களை காலவரையற்று சிறையிலடைத்து வைப்பதற்கு அரசு பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை பயன்படுத்தி வந்தது. போர் முடிந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும், 100க்கும் அதிகமான அரசியல் கைதிகள் சித்தரவதையின் கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு இன்னும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
2015 தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் கட்ட முயற்சி செய்த குற்றச்சாட்டுகளின் கீழ் ஏராளமான இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் இந்த கைதுகள் தொடர்பாக கூட்டமைப்பு மவுனம் காத்து வருகின்றது. 2016 இல் சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் அவர்களை விடுதலை செய்வதற்கு சிறைக்கதவுகளை திறக்கும் சாவிகள் ஒன்றும் தன்னிடம் இல்லை என்று கூறி அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அழைப்பு விட சிடுமூஞ்சித்தனத்துடன் மறுத்திருந்தார்.
கூட்டமைப்பு அதன் முழு ஆதரவுடன் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்திய சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கு எதிராக வடக்கிலும் கிழக்கிலும் மிகப் பெரும் எதிர்ப்பு பெருகியிருக்கிறது என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கிறது. வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தொழிலாளர்கள் தோட்டத் துறையிலும் மற்றய துறைகளிலுமான வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவளித்தனர். சமூகப் பிரச்சினைகளின் கைகள் மேலோங்கி, தீவில் தொழிலாள வர்க்கம் ஐக்கியப்படுவதற்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. தமிழ் தொழிலாளர்கள் தேசியவாதத்துடன் முறித்துக் கொண்டு ஒரு சோசலிச முன்னோக்கை நோக்கித் திரும்பி விடுவார்களோ என்று கூட்டமைப்பு பீதி கொண்டிருக்கிறது.
அவசரகால நிலைமையின் கீழ், வடக்கிலும் கிழக்கிலும் இராணுவத்தின் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு கூட்டமைப்பு அழைப்பு விடுகின்றது. கூட்டமைப்பின் முன்னிலை உறுப்பினரான மாவை சேனாதிராஜா அவரது மே தின உரையில் “மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் இராணுவ மற்றும் போலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும். முன்பு அவர்கள் இங்கே இருக்கக் கூடாது என்று நாங்கள் விரும்பினோம், இப்போது அவர்கள் எங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.
இரண்டு நாட்களுக்கு பின்னர், தான் கூறியதன் முக்கியத்துவத்தை குறைத்துக் காட்டும் முயற்சியில் தமிழ் மக்களைப் பாதுகாக்க “சர்வதேச சமூக”த்திற்குத்தான் அவர் அழைப்பு விடுத்ததாக அறிவித்தார். “தாக்குதலில் ஏராளமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பதாலும், இந்தத் தாக்குதலை நடத்தியதற்கு இஸ்லாமிய அரசு (ISIS) பொறுப்பேற்றிருப்பதாலும், வடக்கு மற்றும் கிழக்கின் மக்களின் பாதுகாப்பதை உறுதி செய்வதில் உதவ சர்வதேச உளவு அமைப்புகள் நாட்டிற்கு அழைக்கப்பட வேண்டும் என்றே நான் கூறினேன்.” என தெரிவித்தார்.
சேனாதிராஜாவின் பிரகடனங்கள் தமிழ் தேசியவாதத்தின் ஏகாதிபத்திய ஆதரவு குணாம்சத்தினையும் அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் போர்த் தயாரிப்புகளுக்கு அதன் உறுதியான ஆதரவையும் வெளிப்படுத்துகின்றன. ISIS என்பது மத்திய கிழக்கில் பல தசாப்தங்களாய் நடத்தப்பட்ட ஏகாதிபத்தியப் போர்களது அரசியல் விளைபொருளாக இருக்கிறது. வாஷிங்டனும் நேட்டோவும் லிபியப் போரில் அல்கெய்தாவுடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்களை தரைப்படை படைகளாய் ஆதரித்தன. சிரியாவுக்கு எதிரான போரில் ISIS மற்றும் பல பிற இஸ்லாமியக் குழுக்கள் அமெரிக்காவினாலும் அதன் ஐரோப்பிய மற்றும் பாரசீக வளைகுடா கூட்டாளிகளாலும் நிதி வழங்கப்பட்டு இராணுவரீதியாக கட்டியெழுப்பப்பட்டன.
படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலி தலைவரின் புகைப்படத்தை அலுவலகத்தில் மாட்டியிருந்தனர் என்று குற்றம்சாட்டப்பட்டு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவரும் செயலாளரும் மே 3 அன்று பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் கைதாகினர். பல்கலைக்கழக நிர்வாகிகளே ஒரு தேடுதல் வேட்டை நடத்துவதற்கு இராணுவத்தை அழைத்திருந்தனர் எனக் கூறி கூட்டமைப்பின் இன்னொரு தலைவரான சுமந்திரன் இக் கைதுகளை நியாயப்படுத்தினார். இராணுவம் அப்புகைப்படத்தை அங்கு கண்டதால் அவர்களை கைது செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது. இராணுவம் அது பெறுகின்ற தகவல்களின் அடிப்படையில் செயல்படுகிறது, தன் கடமையைச் செய்கிறது என்பதால் மாணவர்கள் தான் கவனத்துடன் இருந்திருக்க வேண்டும் என்றார் அவர்.
இராணுவத் தளபதிகள் 50க்கும் மேற்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் காரியாளர்களை ஏப்ரல் 30 அன்று யாழ்ப்பாணம் 512வது பிரிவு தலைமையகத்திலான ஒரு கூட்டத்திற்கு சமூகமளிக்குமாறு கட்டளையிட்டிருந்தனர். கூட்டத்தில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டதாக பலர் பின்னர் தெரிவித்தனர். முன்னாள் காரியாளர்களில் அநேகம் பேர் இன்னமும் இடைவிடாத இராணுவத் துன்புறுத்தலின் கீழ் இருக்கின்றனர்.
“மறுநிவாரணம் பெற்ற” முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் காரியாளர்களால் உருவாக்கப்பட்ட ஜனநாயகத்திற்கான புனிதப் போராளிகள் (Crusaders for Democracy) கட்சியின் செய்தித் தொடர்பாளரான கே. துளசி, கூட்டம் நடந்ததை பிபிசி தமிழ் சேவைக்கு உறுதிப்படுத்தினார். அவர் இலங்கை அரசுக்கு ஆதரவளிக்க உறுதியளித்தார்: “எங்களது நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராயிருக்கிறோம்; பயங்கரவாதத்தை தடுப்பதில் அரசாங்கம் எங்களிடம் ஏதேனும் உதவி கோருமானால் எந்த சமயத்திலும் உதவுவதற்கு நாங்கள் தயாராயுள்ளோம்.”
முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் காரியாளர்கள் இலங்கை அரசாங்கத்தின் கூலிப்படையாக உருமாற்றம் கண்டிருப்பதென்பது புலிகளின் முதலாளித்துவ சார்பு அரசியல் மற்றும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு சுயாதீனமான புரட்சிகர இயக்கம் எழுவதற்கு அது கொண்டிருந்த தேசியவாத விரோதம் ஆகியவற்றின் தர்க்கரீதியான விளைபொருளாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாறு முழுமையும் அது இந்தியா மற்றும் ஏகாதிபத்திய மத்தியஸ்தத்தில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விண்ணப்பம் செய்தவாறு, போர் நடவடிக்கைகளை நடத்தியதாகவே இருந்தது வந்தது. அத்துடன் முஸ்லீம் சிறுபான்மையினர் மீது தொடர்சியாக தாக்குதல் நடத்தி வந்திருந்தது.
1990 அக்டோபரில், வட மாகாணத்தில் 10,000 க்கும் அதிகமான முஸ்லீம்களை அவர்களது பூர்வீக வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றிய தமிழீழ விடுதலைப் புலிகள், அவர்கள் வீடுகளை காலி செய்து செல்வதற்கு 48 மணி நேர அவகாசம் மட்டுமே கொடுத்திருந்தது. 2002 யுத்த நிறுத்தத்திற்குப் பின்னர், சில நூறு முஸ்லீம்கள் வீடு திரும்புவதற்கு அது அனுமதித்தது.
2009 இல் இந்த அமைப்பும் அதன் தலைமையும் அழித்தொழிக்கப்பட்டனர். 2009 இல் உள்நாட்டுப் போர் முடிந்தது முதலாக, ஒரு சில ஆயிரம் முஸ்லீம் மக்கள் யாழ்ப்பாணம் திரும்பி தங்களது பூர்வீக வீடுகளையும் வணிகங்களையும் மறுநிர்மாணம் செய்ய தலைப்பட்டனர். இன்று, புலிகளின் முன்னாள் காரியாளர்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இலங்கை இராணுவத்திற்கு உதவ தாங்கள் ஆயத்தமாய் இருப்பதை வெளிப்படுத்துகின்ற நிலையில், அவர்கள் இப்போதும் முன்னர் புலிகளினால் தூண்டி விடப்பட்ட முஸ்லீம் விரோத மனோநிலையையே கொண்டிருக்கின்றனர்.
வடக்கு மற்றும் கிழக்கில், முஸ்லீம் விரோத மனோநிலைகளை கிளறி விடுவதில் கூட்டமைப்பும் ஏனைய தமிழ் தேசியவாதிகளும் அரச படைகளுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கின்றனர். கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினரான சரவணபவனுக்கு சொந்தமான பரவலாய் வாசிக்கப்படும் தமிழ் தினசரியான உதயன், யாழ்ப்பாண மசூதியில் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தது கறுப்பு தேயிலைப் பொட்டலங்களையே என்பதை நன்கு அறிந்திருந்தும் அவர்கள் அங்கு வெடிமருந்துகளைக் கண்டெடுத்ததாக குற்றம்சாட்டி செய்தி வெளியிட்டது என்பது தெரிய வந்து பாரிய வெறுப்பினை உருவாக்கியது.
கிழக்கு மாகாணத்திலும் கூட்டமைப்பின் தலைவர்கள் முஸ்லீம் விரோத மனோநிலையை கிளறி விட்டுக் கொண்டிருக்கின்றனர். மட்டக்களப்பு தொகுதியின் கூட்டமைப்பு பாராளுமன்ற அங்கத்தவர் யோகேஸ்வரன் “உளவுத்துறை அதிகாரிகள் கடந்த காலத்தில் தமிழர்களுக்கு எதிராக அவர்கள் எடுத்து வந்திருந்த எந்த நடவடிக்கைகளையும் முஸ்லீம் மக்களுக்கு எதிராக ஏன் எடுப்பதில்லை என்பது ஒரு கேள்வியாக இருக்கிறது” என்றார். இத்தகைய வசனங்களின் அர்த்தம் சந்தேகத்திற்கிடமில்லாதது. உள்நாட்டுப் போர் காலத்தினைப் போன்று, முஸ்லீம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைக் கடத்துவதற்கும், சித்திரவதை செய்வதற்கும், கொலை செய்வதற்கும் வெள்ளை வேன்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக இருக்கிறது.
தீவின் உழைக்கும் மக்களில் பெரும்பான்மையோர் அவசரகால நிலையையும் தேசிய அளவிலான முஸ்லீம் விரோத சூனியவேட்டையையும் எதிர்க்கின்றனர். அவசரகால நிலைக்கு கூட்டமைப்பு ஆதரவளிப்பதற்கு எதிராகவும் கூட்டமைப்பு தலைவர்களது முஸ்லீம் விரோத அறிக்கைகளுக்கு எதிராகவும் வடக்கு மற்றும் கிழக்கில் கோபம் அதிகரித்து வருகிறது. போலிஸ் பிரதித் தலைவர் சந்தன விக்கிரமசிங்க மே 7 அன்று விடுத்த ஒரு அறிக்கையில் “பொதுமக்கள் அச்சமின்றி தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். தீவு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்றபோதும் தாக்குதலில் நேரடியாக சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டார்கள் அல்லது மரணமடைந்து விட்டார்கள்” என்று தெரிவித்தார்
இந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து இதுவரை கிடைத்திருக்கும் அத்தனை தகவல்களும், ஈஸ்டருக்கு குறைந்தது இரண்டு வாரங்கள் முன்பாகவேனும் தாக்குதல்களின் அச்சுறுத்தல் குறித்து ஜனாதிபதி, பல அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் உள்ளிட அரசாங்கத்தின் உயர்-நிலைத் தலைமைக்கு தொடர்ந்து தகவலளிக்கப்பட்டிருந்தது என்பதையே வெளிப்படுத்துகின்றன. 260 பேர் கொல்லப்படவும் 500 பேர் காயமுறவும் காரணமான இத்தாக்குதல்களை அரசாங்கம் ஏன் தடுக்கவில்லை என்பது ஒரு உலகளாவிய உள்ளடக்கத்தில் மட்டுமே விளங்க கூடியதாகும். தொழிலாள வர்க்கத்தில் பெருகிச் செல்லும் எதிர்ப்புக்கு எதிராக உலகெங்கும் அரசுகளால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் போலிஸ் அரசு ஒடுக்குமுறை என்னும் ஆயுதத்தெரிவை நோக்கி கொழும்பு திரும்பிக் கொண்டிருகின்றது.
இந்தத் தாக்குதல்கள், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கம் அதிகரித்துச் செல்வதுடனும் சீனாவுக்கு எதிரான ஏகாதிபத்தியப் போரில் ஒரு அரங்கமாக இலங்கையைப் பயன்படுத்துவதற்கு அது செய்கின்ற முயற்சிகளுடனும் நேரடியாகத் தொடர்புடையவை. சர்வதேச அளவில் உலகப் போருக்கு தயாரிப்பு செய்யவும் சொந்த நாட்டில் வர்க்கப் போரை நடத்தவும் ஒரு தேசியளவிலான அவசரகால நிலையை திணிப்பதற்கும் எதேச்சாதிகார ஆட்சியை ஸ்தாபிப்பதற்கும் இந்தத் தாக்குதல்கள் பயன்படுத்தப்படுகின்றன. ISIS தாக்குதல்கள், போலிஸ் அரசு பயங்கரம் மற்றும் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் என்னும் இந்த கலவை சமீப ஆண்டுகளில் ஐரோப்பிய அரசியலை கவனிக்கும் எவருக்கும் மிகவும் பரிச்சயமானதொரு ஒரு பழைய கதையாகவே இருக்கும்.
ஐரோப்பாவில் 2015 முதல் 2017 வரையான காலத்தில் பாரிஸ், புரூசெல்ஸ், பேர்லின், மான்செஸ்டர் மற்றும் பார்சிலோனாவில் நடத்தப்பட்ட ISIS பயங்கரவாதத் தாக்குதல்கள் அரசு இயந்திரத்தை வலுப்படுத்துவதற்கும் தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக போலிஸ் அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்குமாய் பயன்படுத்தப்பட்டன. அன்று பிரான்சில் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம் அவசரகாலநிலை அதிகாரங்களைத் திணித்து பிரான்சை ஒரு போலிஸ் அரசாக உருமாற்றியது. பிரெஞ்சு வணிகங்கள் மற்றும் உளவுத்துறை அமைப்புகள் சிரியாவிலான அவர்களின் போரின் பாகமாக இரகசியமாக நிதியாதாரமளித்து வந்த இஸ்லாமிய வலைப்பின்னல்கள் இந்த அவசரகால நிலையின் பிரதான இலக்குகளாய் இருக்கவில்லை. மாறாக, தொழிலாள வர்க்கத்தையும் வெகுஜன எதிர்ப்பையும் அச்சுறுத்துவதையே அது நோக்கமாக கொண்டிருந்தது.
இலங்கையில் போலவே, ஐரோப்பாவெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களும், முதலாளித்துவ-ஆதரவுக் கட்சிகள் அனைத்தினது எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களுக்கான முயற்சிகளை எதிர்க்கின்றனர். பிரான்சில் “மஞ்சள் சீருடை” இயக்கம் மற்றும் அதனை ஒடுக்குவதற்கு பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனால் முன்னெடுக்கப்படும் வன்மையான ஒடுக்குமுறை ஆகியவற்றில் இந்தப் போராட்டம் ஒரு வெடிப்பான வடிவத்தை எடுத்திருக்கிறது. உலகெங்கிலும் வர்க்கப் போராட்டம் மீண்டும் எழுச்சி காண்பது வளர்ந்து செல்வதன் பாகமாக, இலங்கையிலும் பிறவெங்கிலும் இருக்கின்ற தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய முன்னோக்கைக் கொண்டு ஆயுதபாணியாக்குகின்ற நோக்கில் இலங்கை, ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் சோசலிச சமத்துவக் கட்சியை (SEP) கட்டியெழுப்புவது அவசியமாக இருக்கிறது.
மேலதிக வாசிப்புகளுக்கு
தமிழ் மக்கள் பேரவை இலங்கை தொழிலார்களுக்கு புதிய தேசியவாத பொறிக்கிடங்கு
இலங்கை அரசாங்கம் சித்திரவதையினை தொடர்வதை தமிழ் தேசியவாதிகள் மூடிமறைக்கின்றனர்[PDF]
இலங்கையின் சிறிசேன-விக்கிரமசிங்க-சம்பந்தன் ஆட்சிக்கு எதிராய் தொழிலாளர்களை அணிதிரட்டுவோம்! [PDF]
தமிழ் மக்கள் பேரவை அமெரிக்க ஆதரவு இலங்கை ஆட்சிக்கு அரசியல் மூடுதிரை இடுகின்றது [PDF]
இலங்கையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களது கொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் படிப்பினைகள் [PDF]
புலம்பெயர் தமிழ் தேசியவாத குழுக்கள் ஐக்கிய நாடுகள் சபையில் ட்ரம்புடன் உடன்பாட்டுக்கு முயலுகின்றன [PDF]
தமிழ் தேசியவாதிகள் இலங்கையில் பொலிஸ்-அரச அடக்குமுறை நடவடிக்கைகளை ஆதரிக்கின்றனர் [PDF]