Print Version|Feedback
Greetings to Chinese workers and youth on the centenary of the May 4 movement
மே 4 இயக்கத்தின் நூறாவது ஆண்டில் சீனத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்
By Peter Symonds
7 May 2019
உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான ICFI நடத்திய ஆறாவது வருடாந்தர மே தின பேரணியான 2019 சர்வதேச இணையவழி மே தினப் பேரணியை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) சனிக்கிழமை, மே 4 இல் நடத்தியது. இந்த பேரணியில் அந்த உலக கட்சியினதும் மற்றும் அதன் பிரிவுகளினதும் மற்றும் உலகெங்கிலுமான அதன் ஆதரவான அமைப்புகளினதும் 12 அங்கத்தவர்கள் முதலாளித்துவத்தின் உலக நெருக்கடி மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்க போராட்டங்களின் வெவ்வேறு அம்சங்களைக் குறித்து உரையாற்றினர்.
எதிர்வரவிருக்கும் நாட்களில், உலக சோசலிச வலைத் தளம் (WSWS) அந்த பேரணியில் வழங்கப்பட்ட உரைகளின் எழுத்து வடிவைப் பிரசுரிக்கும். உலக சோசலிச வலைத் தளத்தின் (ஆஸ்திரேலியா) தேசிய ஆசிரியர் பீட்டர் சைமண்ட்ஸ் ஆற்றிய உரை கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளது. திங்களன்று உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவருமான டேவிட் நோர்த் பேரணியில் ஆற்றிய ஆரம்ப உரையை உலக சோசலிச வலைத் தளம் பிரசுரித்தது.
***>
2019 மே தினத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது சீனாவில் மே 4 இயக்கத்தின் நூறாவது ஆண்டின் வேளையில் சீனத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விசேட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது. இது ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் ஒரு வரலாற்று திருப்புமுனையைக் குறிக்கிறது.
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மே 4 அன்று, ஷன்டோங் மாகாணத்தை ஜப்பானிடம் ஒப்படைக்கும் வேர்சாய் சமாதான மாநாட்டின் தீர்மானத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பெய்ஜிங்கின் தெருக்களுக்கு வந்தனர். முதலாம் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வந்த ஒப்பந்தம், சீனாவை ஏகாதிபத்திய சக்திகளுக்கு கீழ்ப்படிய வைத்த காலனித்துவ-பாணியிலான சமத்துவமற்ற ஒப்பந்தங்களையும் பேணியது.
இந்த எதிர்ப்பு, ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு எதிராக மட்டுமன்றி, பெய்ஜிங் அரசாங்கத்தில் உள்ள அதன் கூட்டாளிகளுக்கு எதிராகவும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் தேசிய இயக்கத்தைத் தூண்டி விட்டது. இந்த ஆர்ப்பாட்டங்கள், பொலிஸ் அடக்குமுறையின் மத்தியிலும் வாரக் கணக்காக தொடர்ந்தன. இது, சீன சமுதாயத்தின் திமிர்த்த உயர் மட்டத்தினரின் அத்திவாரமான, முட்டாள்களாக்கும் கன்ஃபியூசனிச (Confucian) மரபுகளுக்கு எதிரான, ஐரோப்பிய அறிவொளியின் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பரந்த கலாச்சார எழுச்சியின் பாகமாக இருந்தது.
1917 இல் ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியை நடத்திய சோசலிச சர்வதேசிய வாதத்தால் ஈர்க்கப்பட்டு, மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகளின் ஒரு அடுக்கு மார்க்சிசம் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் பக்கம் உறுதியுடன் திரும்பியது. 1921 ஜூலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஸ்தாபிக்கப்பட்டது.
இன்று கம்யூனிஸ்ட் கட்சி அது ஸ்தாபிக்கப்பட்ட அனைத்து கொள்கைகளையும் நிராகரித்துள்ளது. நீண்ட காலத்திற்கு முன்பே சர்வதேசியவாதத்திற்கு மாறாக "தனி நாட்டில் சோசலிசம்" என்ற ஸ்ராலினிச பிற்போக்கு தத்துவம் பதிலீடு செய்யப்பட்டது. ஸ்ராலினிசத்தின் சீன வகையறாவான மாவோயிசம், 1949 சீனப் புரட்சியின் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட தொழிலாளர் அரசை சீர்குலைத்து, ஒரு பொருளாதார மற்றும் அரசியல் முட்டுச்சந்தாக அதை நிரூபித்தது. 1972 இல் அமெரிக்க ஜனாதிபதி நிக்சனுடனான மாவோவின் சமரசம், 1978 முதல் முதலாளித்துவ மீட்சிக்கான அடிப்படையை அமைத்தது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியானது தொழிலாள வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக, அரசுக்கு சொந்தமான சொத்துக்களை கொள்ளையடித்து, தொழிலாள வர்க்கத்தை மொத்தமாக சுரண்டுவதன் மூலம் அவர்களின் அபூர்வமான செல்வத்தை குவித்துக்கொண்டுள்ள அதி உச்ச பணக்காரர்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றது. அதன் ஆட்சியானது சித்தாந்த ரீதியில் சோசலிசத்தை அன்றி சீன தேசியவாதத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. எந்தவொரு அரசாங்க எதிர்ப்பு போராட்ட அறிகுறிகளையும் நசுக்குவதற்கான ஒரு பரந்த பொலிஸ் அரச எந்திரத்தைக் கொண்டு அது தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது.
தேசியவாதத்தையும் தேசபக்தவாதத்தையும் பாராட்டுவதற்காகவே மே 4 இயக்கத்தை குறிப்பதற்காக இந்த வாரம் ஜனாதிபதி ஷி தனது உரையை பயன்படுத்தினார். 1919 ஆம் ஆண்டின் ஆர்ப்பாட்டங்களைக் குறிக்கும் இசையமைப்பிற்கு முரணாக, இளைஞர்கள் இன்று "தவறான எண்ணங்களை" தவிர்த்து, "கட்சிக்கு கீழ்ப்படிய வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார். கன்ஃபியூசியனிசத்திற்கு எதிரான கிளர்ச்சியில் உருவான கம்யூனிஸ்ட் கட்சி, பல்கலைக்கழகங்களிலும் ஒட்டுமொத்த சமுதாயத்திலும் புத்திஜீவித சூழ்நிலையை அடக்கும் நடவடிக்கையை மீண்டும் திணிப்பதற்கான அதன் திருப்பத்தையே இப்போது முன்னிலைப்படுத்துகிறது.
சீனாவில் முதலாளித்துவ மறு ஸ்தாபிதமானது வெளிநாட்டு முதலீடு பெருக்கெடுக்க காரணமாகியது. குறிப்பாக 1989 ஆம் ஆண்டு தியனன்மென் சதுக்க ஆர்ப்பாட்டங்கள் மீதான ஒடுக்குமுறை, ஸ்ராலினிச இயந்திரம் தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்துவதில் எங்கும் இடைநிற்கப் போவதில்லை என்பதை சமிக்ஞை காட்டியது. சீனப் பொருளாதாரம் ஒவ்வொரு எட்டு ஆண்டுகளுக்கும் இரு மடங்காகி, உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறிவிட்டது.
ஆயினும், தொழிலாள வர்க்கம் துன்பகரமன விலை கொடுத்துள்ளது –குறைந்த ஊதிய தொழில்கள், ஆரோக்கியமற்ற மற்றும் ஆபத்தான நிலைமைகள் மற்றும் உரிமையாளர்கள் சம்பளத்தை தாமதமாக கொடுத்தல் அல்லது கொடுக்காமலேயே இருத்தல் போன்ற நிலைமைகள் நிலவுகின்றன. வேலைநிறுத்தம் அல்லது எதிர்ப்பு காட்டுவதற்கு அங்கு உரிமை இல்லை. கிராமப்புறத்தில் இருந்து புலம்பெயர்ந்த மில்லியன் கணக்கான மக்களுக்கு குடியிருப்பு உரிமைகள் அல்லது நகர்ப்புற சேவைகளை பெறுவதற்கு அனுமதி கிடையாது.
சமூக சமத்துவமின்மை அதிர்ச்சி தரும் வகையிலானதாக உள்ளது. சீனா உலகின் சமத்துவமான சமுதாயம் என்ற நிலையில் இருந்து சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாக ஆகியுள்ளது. அமெரிக்கா தவிர மற்ற நாடுகளைவிட சீனா அதிக டாலர் பில்லியனர்களைக் கொண்டுள்ளது. சீனத் தொழிலாளர்கள் ஒரு மாதத்திற்கு 370 டாலரில் பிழைக்கப் போராடுகையில், டென்சன்ட் தலைவர் போனி மா, கிட்டத்தட்ட 40 பில்லியன் டாலர் தனிப்பட்ட சொத்துக்களை வைத்துள்ளார்.
மேலும், சீனாவின் பொருளாதார வளர்ச்சி, அதை அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு மோதல் போக்கில் வைத்துள்ளது. இது ஒரு பேரழிவுகரமான போருக்கு அச்சுறுத்துகிறது. கம்யூனிஸ்ட் கட்சியிடம் இதற்கு பதில் இல்லை. ஒருபுறம், வாஷிங்டன் கொஞ்சம் காலம் எடுத்துக்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பில் அது தலைகுனிந்து போகின்றது. மறுபுறத்தில், பெய்ஜிங் அமெரிக்காவுடன் ஆயுத போட்டியில் ஈடுபட்டுள்ளது. இது முழு மனிதகுலத்திற்கும் ஒரு அணுவாயுத பேரழிவைத் தரும் ஒரு மோதலில் மட்டுமே முடிவடையும்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இலாப நோக்கு அமைப்பு முறையை பாதுகாப்பதுடன், அதனால் போருக்கான உந்துதலை தடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அறைகூவல் விடுக்க இலாயக்கற்றதாக உள்ளது. இதற்கு முதலாளித்துவத்தை தூக்கி வீசி, உண்மையான சோசலிசக் கோட்பாடுகளுடன் சமுதாயத்தை மறுகட்டமைக்கும் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டம் அவசியம்.
சர்வதேச அளவில் நடைபெற்று வருவது போல, சீனாவில் தொழிலாள வர்க்கப் போராட்டம் மீண்டும் எழுச்சியடைவதற்கான அறிகுறிகள் பெருகியுள்ளன. பொலிஸ், கம்பனி குண்டர்கள் மற்றும் அரச அனுமதி கொண்ட தொழிற்சங்கங்களின் அடக்குமுறை நடவடிக்கைகள் இருந்தபோதிலும், தங்களது ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்காகப் போராடுவதற்கு தொழிலாளர்கள் தைரியமாக வேலைநிறுத்த நடவடிக்கைகளையும் ஆர்ப்பாட்டங்களையும் ஏற்பாடு செய்து வருகின்றனர். மே 4 இயக்கத்தின் பாரம்பரியங்களில், பல்கலைக்கழக மாணவர்கள் தொழிலாளர்களுடன் அவர்களது போராட்டத்தில் ஒத்துழைக்கத் தொடங்கியுள்ளதோடு, அதன் காரணமாக பல மாதங்களுக்கு தடுத்தும் வைக்கப்பட்டுள்ளனர்.
முக்கியமான கேள்வி என்னவென்றால்: எழுச்சி பெறும் போராட்டங்களை வழிநடத்தும் அரசியல் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டம் எது? சமூக சமத்துவம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டமானது தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சோசலிச எதிர்காலத்திற்கான போராட்டமாகும். பாதையை முன்னோக்கி தெளிவாக பார்க்க, கடந்த காலத்தை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் பெய்ஜிங்கில் உள்ள ஸ்ராலினிச அதிகாரத்துவ எந்திரம், சீன மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர வரலாற்றை பொய்கள் மற்றும் அரை உண்மைகளினாலும் புதைத்துவிட்டது.
சீனத் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் நாங்கள் சொல்கிறோம்: நீங்கள் அந்த வரலாற்றுக்கு மீண்டும் உரிமை கோர வேண்டும். அதுவே சீனாவிலோ அல்லது உலகின் வேறு எங்கும் ஒரு உண்மையான புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்பக் கூடிய ஒரே வழி. உண்மையை கற்றுக் கொள்ளக்கூடிய ஒரே ஒரு இடம்தான் உள்ளது. அது ஸ்ராலினிசத்தின் அனைத்து குற்றங்கள் மற்றும் காட்டிக் கொடுப்புக்களுக்கு எதிராக தசாப்தங்களாக நீண்ட போராட்டத்தை முன்னெடுத்த சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கமாகும்.
மே 4 இயக்கத்தின் முன்னணி புத்திஜீவி நபரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவருமான சென் துஷியோ, மற்றும் 1925-27 இல் சீனப் புரட்சியை ஸ்ராலினின் காட்டிக் கொடுப்பதை எதிர்த்த ஏனைய சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகளதும் போராட்டங்களில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள், மாவோ சேதுங்கும் அவரது சக ஸ்ராலினிஸ்டுகளும் 1949 புரட்சியை ஒரு முட்டுச் சந்துக்குள் வழிநடத்துவார்கள் என தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை செய்த காரணத்தால் குற்றவாளிகள் ஆக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, கொல்லப்பட்டனர்.
ஜனாதிபதி ஷி மற்றும் அவரது சக கறுப்பு கோட்டு அணிந்த அதிகாரத்துவ நபர்களும், அடக்குமுறையின் ஒரு பரந்த அரச கருவிகளை களஞ்சியத்தில் வைத்துள்ளனர், அவர்கள் அவற்றைப் பயன்படுத்தத் தயங்கப் போவதில்லை. ஆனால், லியோன் ட்ரொட்ஸ்கி 1938 இல் நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணமான இடைமருவு வேலைத் திட்டத்தில் விளக்கியவாறு, "வரலாற்று விதிகள் அதிகாரத்துவ எந்திரத்தை விட வலுவானது."
உலகின் மிகப் பெரிய, நூறூகோடி கணக்கான மக்களைக் கொண்ட சீனத் தொழிலாள வர்க்கம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிராக முற்றுகையிடும். ஆனால், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பகுதியாக, ஒரு புரட்சிகரத் தலைமைத்துவம் முன்கூட்டியே கட்டியெழுப்பப்பட வேண்டும்.
100 ஆண்டுகளுக்கு முன்னர் மே 4 இயக்கத்தில் பங்குபெற்றவர்களின் உறுதிப்பாடு மற்றும் தைரியத்தில் இருந்து படிப்பினைகளைப் பெறுமாறு இன்று -2019 மே தினத்தில்- சீனத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
உலக சோசலிச வலைத் தளத்தை வாசிக்கவும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாறு மற்றும் வேலைத்திட்டத்தை கவனமாக படித்து, எங்களை தொடர்புகொண்டு, சீனாவில் நான்காம் அகிலத்தின் ஒரு பகுதியை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கவும்.