Print Version|Feedback
The Spanish elections and the struggle against authoritarian rule
ஸ்பானிய தேர்தல்களும், எதேச்சதிகார ஆட்சிக்கு எதிரான போராட்டமும்
By the Sozialistische Gleichheitspartei, Socialist Equality Party and Parti de l’égalité socialiste
27 April 2019
ஞாயிறன்று ஸ்பெனில் நடக்கவிருக்கும் பொது தேர்தல், ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் இன்றியமையா அரசியல் பிரச்சினைகளைக் கூர்மையாக வெளிப்படுத்துகிறது.
பாசிசவாத சக்திகளை நிதியியல் பிரபுத்துவம் ஊக்குவிப்பதால் மேலாளுமை செலுத்தப்படும் இத்தேர்தல் பிரச்சாரம், ஒரு தரந்தாழ்ந்த காட்சிப்படுத்தலாகும். இப்பிரச்சாரம் நெடுகிலும், சிக்கன கொள்கைகளுக்கு ஆதரவான ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சி (PSOE), 2017 கட்டலான் சுதந்திரத்திற்கான கருத்துவாக்கெடுப்பின் மீது மூர்க்கமான பொலிஸ் ஒடுக்குமுறை நடத்தியதற்கு மத்தியில் அமைதியான போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்த கட்டலான் தேசியவாத அரசியல் கைதிகள் மீது ஒரு கண்துடைப்பு வழக்கை ஒழுங்கமைத்தது. ஸ்பெயினின் பாசிசவாத சர்வாதிகாரி பிரான்சிஸ்கோ பிராங்கோவைப் புகழ்ந்துரைக்கும் அதிவலது கட்சியான Vox கட்சி, அரசாங்கத்தில் ஒரு சக்தி வாய்ந்த கட்சியாக மேலெழுந்து இருப்பது இப்பிரச்சாரத்தின் மற்றொரு பிரதான பிரச்சினையாகும்.
Vox கட்சி தலைவர் சந்தியாகோ அபஸ்கால் (Santiago Abascal), மூன்றாண்டு கால உள்நாட்டு போருக்கு இட்டுச் சென்ற 1936 ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தொடங்கிய பிராங்கோவினது இராணுவ முன்வரலாறைப் பாராட்டினார், அந்த உள்நாட்டு போர் பிராங்கோவின் வெற்றியிலும் மற்றும் 200,000 அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் இடதுசாரி தொழிலாளர்களின் பாரிய படுகொலையிலும் போய் முடிந்தது. PSOE, பொடெமோஸ் மற்றும் கட்டலான் தேசியவாதிகளின் "மக்கள் முன்னணியை" Vox ஆல் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும் என்று கூறி, மார்க்சிசம் மற்றும் பிரிவினைவாதத்திற்குத் தடைவிதிக்க வேண்டுமென அபஸ்கால் அழைப்புவிடுத்தார். வலதுசாரி மக்கள் கட்சி (PP) தலைவர் பப்லோ கசாடோ, அவர் Vox உட்பட மொத்த ஸ்பானிய அரசியலையும் PSOE யும் விட வலதை நோக்கி ஒருங்கிணைக்க விரும்புவதாக வலியுறுத்தி விடையிறுத்தார்.
இன்றைய நிலையில் தேர்தல் முடிவை முன்கணிப்பது சாத்தியமில்லை. வாக்காளர்களில் ஐந்தில் இரண்டு பங்கினர் முன்முடிவின்றி உள்ளனர். பொடெமோஸ் மற்றும் PSOE முறையே 14 மற்றும் 29 சதவீதத்துடனும், வலதுசாரி மக்கள் கட்சி, குடிமக்கள் கட்சி மற்றும் Vox கட்சி முறையே 20, 15 மற்றும் 11 சதவீதத்தில் இருக்கின்ற நிலையில், ஒரு தொங்கு நாடாளுமன்றம் அமையக்கூடும். இதுபோன்ற இரண்டு உறுதியற்ற தேர்தல்கள் 2015 மற்றும் 2016 இல் நடந்தன. பல்வேறு கூட்டணி அரசாங்கங்கள் (PSOE-பொடேமோஸ்-கட்டலான் தேசியவாதிகள், PSOE-குடிமக்கள் கட்சி, மக்கள் கட்சி-குடிமக்கள் கட்சி-Vox) சாத்தியமாகலாம். ஆனால் இவை அனைத்துமே தற்போதைய PSOE அரசாங்கத்தின் கீழ் நடத்தப்பட்டதையும் விட வேகமாக வலதை நோக்கி திருப்பமெடுப்பதைத் தொடரும்.
ஸ்பெயின் மற்றும் சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் இத்தேர்தலை அவநம்பிக்கையோடு காண்கின்றனர். 2008 பொறிவுக்குப் பின்னர் கடுமையான ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளின் ஒரு தசாப்தத்திற்குப் பின்னரும், தொழிலாளர்களில் 14 சதவீதத்தினரும் மற்றும் இளைஞர்களில் 34 சதவீதத்தினரும் இன்னமும் வேலையின்றி உள்ளனர், ஸ்பானியர்களில் 61 சதவீதத்தினர் தேர்தலின் முக்கிய பிரச்சினையே வேலைவாய்ப்பின்மை என்று நம்புவதாக கருத்துக்கணிப்புகள் கண்டறிந்தன. அதிகரித்து வரும் சமூக கோபத்திற்கு இடையே, அவை ஊழலும் ஸ்பெயினின் அரசியல் கட்சிகளுமே அடுத்த மிகவும் தீவிர பிரச்சினைகள் என்பதை மேற்கோளிட்டன. வெறும் 10 சதவீதத்தினரே கட்டலான் பிரச்சினையை தீவிர பிரச்சினையாக கண்டனர்.
உத்தியோகபூர்வ கட்டலான்-விரோத விஷமப் பிரச்சாரமும் மற்றும் இத்தேர்தல்களில் ஆறு ஓய்வூபெற்ற தளபதிகளை நிறுத்தி உள்ள Vox கட்சியின் வளர்ச்சியும், நவ-பாசிசவாதத்திற்கான பாரிய ஆதரவைப் பிரதிபலிப்பவை அல்ல. மாறாக, இது, ஐரோப்பா எங்கிலும் போலவே ஸ்பெயினிலும், ஊடகங்கள், அரசியல் ஸ்தாபகம், அரசு ஒடுக்குமுறை எந்திரத்தால் அதிவலது ஊக்குவிக்கப்படுவதைப் பிரதிபலிக்கிறது. பேர்லின் வெளியுறவு கொள்கையின் மீள்இராணுவமயப்படலை நியாயப்படுத்த ஜேர்மன் வலதுசாரி தீவிரவாதி பேராசிரியர்கள் ஹிட்லருக்கு மறுவாழ்வளிப்பதைப் போல, மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் பாசிசவாத சர்வாதிகாரி பிலிப் பெத்தனைப் புகழ்ந்துரைப்பது மற்றும் "மஞ்சள் சீருடை" போராட்டங்களை ஒடுக்குவதைப் போல, இந்த ஒட்டுமொத்த ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கமும் அதிகரித்து வரும் சமூக எதிர்ப்புக்கு மத்தியில் பாசிசவாத மற்றும் எதேச்சதிகார ஆட்சி வடிவங்களுக்குத் திரும்புவதன் மூலமாக அதிகாரத்தைத் தக்க வைக்க நோக்கம் கொண்டுள்ளது.
இத்திருப்பம் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கானது. ஸ்ராலினிசத்தின் 1991 சோவியத் ஒன்றிய கலைப்புக்குப் பின்னர் இருந்து, பல தசாப்த கால சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஏகாதிபத்திய போர்களுக்குப் பின்னர், வர்க்க போராட்டத்தை ஒடுக்க முடியாத மட்டங்களுக்கு, சமூக சமத்துவமின்மை மீதான கோபம் அதிகரித்துள்ளது.
அமெரிக்க பள்ளிகளில் இருந்து இந்திய துணைகண்டத்தின் பொதுச் சேவை மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் வரையில் போர்குணமிக்க வேலைநிறுத்தங்கள் பரவி வருகையில், ஐரோப்பிய தொழிலாள வர்க்கமும் நடவடிக்கையில் நுழைகிறது. இதேவேளையில் போலாந்து ஆசிரியர்கள் வேலைநிறுத்தங்கள், பிரெஞ்சு "மஞ்சள் சீருடை" போராட்டங்கள், போர்ச்சுக்கல்லில் பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் அல்ஜீரியாவின் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் வெடித்திருப்பதும் ஐரோப்பா எங்கிலும் தொழிலாள வர்க்க போராட்டங்களின் புரட்சிகர ஐக்கியத்திற்கான புறநிலை சாத்தியக்கூறை எடுத்துக்காட்டுகின்றன.
ஸ்பெயினுக்குள், தொழிலாளர்களின் அதிகரித்தளவிலான அடுக்குகள் போராட்டத்தினுள் வந்து கொண்டிருக்கின்றன. ஸ்பானிய வணிக அமைப்புகளின் கூட்டமைப்பு தகவல்படி, ஸ்பெயினில் வேலைநிறுத்தங்களால் இழந்த வேலை நேரங்கள் இந்தாண்டின் முதல் காலாண்டில் 13,369,478 இல் உள்ளது, இது 2018 இன் இதே காலகட்டத்தை விட 163 சதவீதம் அதிகமாகும். இதில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை —728,186— 54 சதவீதம் அதிகமாகும்.
ஸ்பெயின் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகர தலைமையைக் கட்டமைப்பதன் மூலமாகவே இந்த போராட்டத்தைத் தொடர முடியும் என்பதே தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் முக்கிய பிரச்சினையாகும். இதற்கு, கிரீஸில் சிக்கன நடவடிக்கைகளுக்குச் சார்பான சிரிசா அரசாங்கம் மற்றும் ஸ்பெயினில் பொடெமோஸ் போன்ற, சாந்தால் மூஃப் இன் (Chantal Mouffe) பின்நவீனத்துவ "இடது ஜனரஞ்சகவாத" தத்துவங்களின் அடிப்படையிலான குட்டி-முதலாளித்துவ கட்சிகளுடன் ஈவிரக்கமின்றி அரசியல்ரீதியில் முறித்துக் கொள்வது அவசியமாகும்.
இந்த தேர்தல்கள் பொடெமோஸின் திவால்நிலைமையை உயர்த்திக் காட்டியது. ஸ்ராலினிச பேராசிரியர்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பிரான்சின் பப்லோவாத புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியுடன் தொடர்பு கொண்ட Anticapitalistas கட்சியின் அங்கத்தவர்களின் ஒரு கூட்டணியாக 2014 இல் ஸ்தாபிக்கப்பட்ட அது, தீவிர மாற்றத்திற்கு வாக்குறுதி அளித்தது. ஆனால் அது, 2015 தேர்தல்களில் தொடங்கி, பிராங்கோ சகாப்தத்திற்குப் பிந்தைய காலத்தில் ஸ்பானிய முதலாளித்துவ வர்க்கத்தின் விருப்பத்திற்குரிய ஆளும் கட்சியான PSOE உடனான கூட்டணிகளுக்கு அழுத்தமளித்தது. இந்த தேசியவாத, முதலாளித்துவ சார்பு மூலோபாயம் அதிவலது கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கும் என்று பொடெமோஸ் வலியுறுத்தியது: இனிகோ எர்ரெகோன் (Íñigo Errejón) இன் வார்த்தைகளில் கூறுவதானால், அதன் "ஜனரஞ்சக மற்றும் தேசப்பற்று வனப்புரை", அதிவலதைப் போலவே பொடெமோஸ் கட்சியும் அதே அரசியல் "இடத்தை" ஆக்கிரமித்திருந்ததை அர்த்தப்படுத்தியது.
சான்சேஸின் சிறுபான்மை PSOE அரசாங்கத்தை பொடெமோஸ் நிர்வாகிகள் ஆதரித்து நாடாளுமன்றத்தில் அதற்கு பெரும்பான்மை வழங்கிய போதும் கூட, Vox ஐ முதலாளித்துவ வர்க்கம் ஊக்குவிப்பது இந்த சுயதிருப்தி கொண்ட கண்ணோட்டத்தை மறுத்தளித்தது. ஆளும் வர்க்கத்தின் பலமான சக்திகள், உத்தியோகபூர்வ அரசியலை இன்னும் கூடுதலாக வலதுக்கு நகர்த்துவதற்கு, 2017 கட்டலான் கருத்து வாக்கெடுப்பைச் சாதகமாக்கிக் கொண்டன — அந்த வாக்கெடுப்பே கூட தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்கான மற்றும் மாட்ரிட் உடனும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் அவற்றின் நிதியியல் உறவுகளை இன்னும் சிறந்த நிபந்தனைகளில் பேரம்பேசுவதற்கான சிக்கன நடவடிக்கைகளை ஆதரிக்கும் கட்டலான் தேசியவாத கட்சிகளின் சூழ்ச்சியாக இருந்தது.
பிரதம மந்திரி மரியானோ ரஹோய் இன் மக்கள் கட்சி அரசாங்கம் ஒழுங்கமைத்த கட்டலான் ஒடுக்குமுறைக்குப் பின்னால் PSOE அணி சேர்ந்திருந்தது. PSOE, பொடெமோஸ் ஆதரவுடன் கடந்தாண்டு பதவியேற்ற பின்னரும், வலதை நோக்கிய அதன் அணிவகுப்பைத் தொடர்ந்தது. அது சிக்கன நடவடிக்கைகளுக்கு வாக்களித்ததுடன் இராணுவத்திற்கு பில்லியன் கணக்கான யூரோக்களைச் செலவிட்ட நிலையில், அது கட்டலான் தேசியவாதிகள் மீது கண்துடைப்பு வழக்குகளை நடத்தியதுடன் இத்தகைய வழக்குகளில் வழக்கறிஞர்களாக Vox நிர்வாகிகளின் பாத்திரத்தை ஆதரித்தது. 2019 தேர்தல்களில், PSOE பிரதம மந்திரி பெட்ரோ சான்சேஸ், “கட்டலோனியா நம்மை ஐக்கியப்படுத்தியது" என்று — அதாவது கட்டலான் வாக்காளர்கள் மீதான தாக்குதலைச் சுற்றி, ரஹோயின் "அரசுக்கான கடமை உணர்வை" மீண்டும் பாராட்டினார்.
நிதியியல் மூலதனம் PSOE ஐ அதற்கு சொந்தமானதாக அங்கீகரிக்கிறது. பிரிட்டனின் சுதந்திர-சந்தை மற்றும் ஐரோப்பிய-ஒன்றியத்தை ஆதரிக்கும் Economist, "[முன்னாள் மக்கள் கட்சி பிரதம மந்திரி] திரு ரஹோயின் பயனுள்ள பணியைக் கட்டமைத்து" ஸ்பெயினின் "பள்ளி அமைப்புமுறை, அதன் ஓய்வூதியங்கள், அதன் சிக்கலான அரசியல் கட்டமைப்பு மற்றும் தொழில் சந்தையில்" PSOE வெட்டுக்களைச் செய்யும் என்று அனுமானித்து, "சோசலிஸ்டுகளுக்கு ஆளும் பெரும்பான்மை வழங்க" வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தது.
தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை ஏற்கவும் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தைப் பறிமுதல் செய்வதற்கான ஒரு போராட்டத்தில் அதை அணிதிரட்டுவதும் மட்டுமே, ஐரோப்பிய முதலாளித்துவம் பாசிசவாத அரசியலை நோக்கி திரும்புவதைத் தோற்கடிப்பதற்கான ஒரே வழி என்பதை வரலாறு எடுத்துக்காட்டுகிறது. இதற்கு, பொடெமோஸ், PSOE, மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் உட்பட அவற்றின் கூட்டாளிகள் போன்ற கட்சிகளின் பிற்போக்குத்தனமான பாத்திரத்தைக் கடந்து செல்லவும் மற்றும் தொழிலாளர்களுக்குப் புரட்சிகர தலைமையை வழங்கவும், தொழிலாள வர்க்கத்தில் ஒரு ட்ரொட்ஸ்கிச முன்னணிப்படையைக் கட்டமைக்க வேண்டியது அவசியமாகும்.
உள்நாட்டு போர் தான் ஸ்பானிய அரசியலில் அடிப்படை குறிப்பு புள்ளியாக ஆகிறது என்றாலும், பிராங்கோவின் 1936 ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு விடையிறுப்பாக எழுதிய லியோன் ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகள் ஆழ்ந்த சமகாலத்திய தொடர்புகளை கொண்டிருக்கின்றன. அவர் ரஷ்யாவில் 1917 அக்டோபர் புரட்சிக்கு அடித்தளமாக இருந்த உலக சோசலிச புரட்சியின் மார்க்சிச முன்னோக்கை, சமூக ஜனநாயகவாதிகள், ஸ்ராலினிசவாதிகள் மற்றும் அரசு மறுப்பு அராஜகவாதிகளின் மக்கள் முன்னணி முன்னோக்கில் இருந்து பிரிக்கும் இணைக்கவியலாத பிளவை வலியுறுத்தினார்.
பிராங்கோவின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை முன்கூட்டியே உணர்ந்து தடுக்க தவறிய மக்கள் முன்னணி அரசாங்கத்தின் தோல்வி, “முற்றிலும் இந்த அல்லது அந்த அமைச்சர் அல்லது தலைவரின் அறிவு சம்பந்தமான கேள்வி அல்ல, மாறாக அந்த கொள்கையின் பொதுவான திசை சம்பந்தப்பட்டு" இருந்தது என்று ட்ரொட்ஸ்கி எழுதினார். மக்கள் முன்னணி (PP) முதலாளித்துவ அரசை நடத்துவதன் மூலமாக, அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தொடங்க அவர்கள் தயாராகும் வரையில் பாசிசவாத அதிகாரிகளைப் பாதுகாத்தது என்பதை ட்ரொட்ஸ்கி சுட்டிக்காட்டினார்: “மக்கள் முன்னணி அரசாங்கம், அதாவது குறிப்பிட்டு கூறுவதானால், முதலாளிகளுடனான தொழிலாளர்களின் கூட்டணி அரசாங்கம், அதன் சாரத்திலேயே அதிகாரத்துவம் மற்றும் அதிகாரிகளுக்கு அடிபணிந்த ஓர் அரசாங்கமாகும். இது தான் ஸ்பெயின் சம்பவங்களின் மகத்தான படிப்பினைகள், இப்போது இதற்கு தான் ஆயிரக் கணக்கான மனித உயிர்கள் விலை கொடுக்கப்பட்டு வருகின்றனர்.”
சமூக ஜனநாயகவாதிகளும் ஸ்ராலினிசவாதிகளும் ட்ரொட்ஸ்கியின் காலத்தில் கொண்டிருந்த தொழிலாள வர்க்க அடித்தளத்தை இழந்துள்ள நிலையில், இந்த பகுப்பாய்வு, முழு பின்னடைவில் உள்ள பொடெமோஸின் பாத்திரத்தை இன்னும் பிரகாசமாக எடுத்துக்காட்டுகிறது. 2016 இல் 5 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை வென்றதற்கு இடையே, அது கட்டலான் ஒடுக்குமுறை அல்லது கண்துடைப்பு வழக்குகளுக்கு எதிராக எந்த பாரிய போராட்டங்களையும் ஒழுங்கமைக்கவில்லை. பிராங்கோயிச பாசிசவாதிகள் ஏற்றுக் கொண்ட 1978 அரசியலமைப்பைப் புகழ்ந்துரைத்து ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டு, அது மாற்றத்திற்கான சக்தியாக அல்ல மாறாக இப்போதிருக்கும் சமூக ஒழுங்கை பாதுகாக்கும் சக்தியாக சேவையாற்றுகிறது. அது இந்த தேர்தல்களில் அதன் ஆசனங்களில் அரைவாசி இடங்களின் இழப்பை முகங்கொடுக்கிறது.
தொழிலாள வர்க்கத்தில் ட்ரொட்ஸ்கிச புரட்சிகர முன்னணிப்படையைக் கட்டமைப்பதே இப்போதைய தீர்க்கமான பிரச்சினையாகும். ஸ்பெயினிலும் ஐரோப்பா எங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தலைமையாக ICFI இன் பிரிவுகளைக் கட்டமைப்பதற்கான போராட்டமே 2019 ஐரோப்பிய தேர்தல்களில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பிரச்சாரத்தின் இதயதானத்தில் உள்ளது. இவ்விதத்தில் தான், பாசிசவாத-எதேச்சதிகார சர்வாதிகாரத்தை நோக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் முனைவுக்குத் தொழிலாளர்கள் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுக்கான தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர போராட்டத்தை எதிர்நிறுத்த முடியும்.