ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Chauvinist “We Tamil” party seeks to divide working class in Indian elections

பேரினவாத “நாம் தமிழர்” கட்சி இந்தியத் தேர்தலில் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த முனைகிறது

By Athiyan Silva and V. Gnana
1 May 2019

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு மாநிலத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஒரு தமிழ்ப்பேரினவாத பிரச்சாரத்தை முன்வைத்திருக்கிறது. இந்தியாவிலும் மற்றும் உலகெங்கிலும் வர்க்கப் போராட்டங்கள் அதிகரித்துச் செல்வதன் மத்தியில், அத்துடன் பெரும்வீச்சிலான போர் ஒன்றின் அபாயம் பெருகிச் செல்வதன் மத்தியில், நாம் தமிழர் கட்சி இந்தியாவிற்குள் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் இனரீதியாகப் பிளவுபடுத்துவதற்காகவும் அவர்களை ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய அரசுக்கும் கீழ்ப்படியச் செய்வதற்காகவும் தமிழ் தேசியவாதத்தை தளராது ஊக்குவிக்குகிறது.

இந்தியாவின் இரு பெரும் தேசிய பெருவணிகக் கட்சிகளான ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாட்டில் அவற்றின் கூட்டாளிகளாக இருந்து வந்திருக்கும் ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து பல தசாப்தங்களாக பின்பற்றி வந்த கொள்கைகளில் தொழிலாளர்கள் ஆழமான பிரமைவிலகலைப் பெற்றுக்கொண்டிருக்கின்றனர் என்பதைப் புரிந்துகொண்டு, அவர்கள் இடது நோக்கித் திரும்பி விடாமல் தடுப்பதற்கு நாம் தமிழர் கட்சி முயலுகிறது.

தமிழ்நாட்டில் 900,000 அதிகமான பட்டதாரிகள் வேலைவாய்ப்பற்று இருக்கின்ற நிலையிலும், இந்தியாவெங்கிலும் கடன்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது நாள்தோறும் நிகழ்வதன் மத்தியிலும், நாம் தமிழர் கட்சி தலைவரான செபஸ்தியான் சீமான் வட இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிரான வெறுப்பை கிளறி விட முனைகிறார். “நாம் தாய் நிலத்தை இழக்கின்ற நிலைமைக்கு வந்துவிட்டோம். அவர்கள் சென்னை தலைநகரை ஆக்கிரமித்து விட்டார்கள், முதன்மை நகரங்களெல்லாம் ஆக்கிரமித்து விட்டார்கள், ஒரு ஊடகவியலாளர் குறிப்பிட்டதுபோல், 70 இலட்சம் வட இந்தியர்கள் தமிழ் நாட்டுக்குள் வந்திட்டார்கள், நீங்கள் சிறுகச் சிறுக அதிகாரத்தை இழக்கின்றீர்கள், அதிகாரத்தை இழந்தவன் அடிமையாகிவிடுவான்.”

மலையாளம் அல்லது தெலுங்கு போன்ற மற்ற இந்திய மொழிகளைப் பேசும் அரசு அதிகாரிகளை கண்டனம் செய்கின்ற சீமான், “தமிழ்நாட்டை தமிழனே ஆள வேண்டும்” என்ற கோரிக்கையை முன்தள்ளுகிறார்.

இந்த பிற்போக்குத்தனமான வாய்வீச்சு, தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் உழைப்பாளிகளும் முகம்கொடுக்கின்ற அதே பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்ற தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்து வசிக்கின்ற அல்லது இந்தியாவின் அண்டை மாநிலங்களில் வசிக்கின்ற தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுடன் இரத்தக்களரியான மோதல்களை கிளறி விடுகிறது. ஆளும் உயரடுக்கின் மற்ற பிரிவுகளுக்கு எதிராக தமது நலன்களை முன்னே தள்ளுவதற்காக, எல்லாவற்றுக்கும் மேல் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்காக, இன மற்றும் வகுப்புரீதியான பிளவுகளை சுரண்டிக் கொள்கின்ற, பில்லியனர்கள் மற்றும் மில்லியனர்களின் ஒரு குறுகிய, அபகரிக்கும் அடுக்கின் நலன்களையே நாம் தமிழர் கட்சி வெளிப்படுத்துகிறது.

ஒரு “தன்னலமற்ற அன்பான சர்வாதிகாரத்தின் மூலமாக” தமிழ்நாட்டை உலகின் மிகவும் செல்வந்த அரசாக மாற்ற சீமான் வாக்குறுதியளிக்கிறார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், திமுக மற்றும் அதிமுக கட்சிகளால் அமைக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் பன்னாட்டு பெருநிறுவனங்களுக்கு ஒரு கீழ்ப்படிவான மலிவு உழைப்பு வேலைப்படையை வழங்குகின்ற விதத்தில் சமூக எதிர்ப்பை தாட்சண்யமற்று ஒடுக்குவதற்கு அவர் ஆலோசனையளிக்கிறார்.

இந்த தேசியவாத மற்றும் எதேச்சாதிகாரவாத வாய்வீச்சின் பிரதான குறி சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் மேலெழுச்சியே ஆகும். 2019 தொடக்கம் முதலாக, இந்தியாவெங்கிலும் ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், அரசாங்க அலுவலர்கள், மற்றும் விசேட பொருளாதார வலயங்கள் (SEZ) தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களை தொடுத்து வந்திருக்கின்றனர், அத்துடன் இலங்கையிலும் தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களில் இறங்கி வந்திருக்கின்றனர். அமெரிக்காவில் ஆசிரியர்கள் போராட்டம், பிரான்சில் “மஞ்சள் சீருடை” போராட்டங்கள், மற்றும் அல்ஜீரிய மற்றும் சூடான் ஆட்சிகளுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆகிய பாரிய போராட்டங்களது மத்தியில் இவை நடைபெறுகின்றன.

தொழிலாளர்களை பிளவுபடுத்த தமிழ் பேரினவாதத்தை கட்டவிழ்க்கும் அதேவேளையில், சீமான், இந்திய அரசாங்கத்தின் போர்க் கொள்கைகளையும் சீனாவை தனிமைப்படுத்துவதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் அது கொண்டிருக்கும் கூட்டணியையும் ஆதரிக்கிறார். இந்தியா “பல தேசங்களது ஒன்றியம்” என்று வலியுறுத்துகின்ற அதேவேளையில், “பணம் அச்சிடுவது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரத் துறை ஆகிய மூன்று மைய அரசுப் பணிகளுக்கு” ஆதரவளிக்க முடியும் என்று சீமான் கூறுகிறார்.

சீனாவுக்கான எதிர் எடையாக இந்தியாவை கட்டியெழுப்பும் நோக்கம் கொண்ட வாஷிங்டனுடனான இந்திய அரசாங்கத்தின் “உலகளாவிய மூலோபாய பங்காளித்துவம்” குறித்து சீமான் உரத்த மவுனம் காத்து வருகிறார் என்பதுடன், சீனாவின் பிரதான பிராந்தியக் கூட்டாளியான பாகிஸ்தானுடன் இந்திய இராணுவம் காட்டி வந்திருக்கின்ற வரலாற்றுப் பகைமையை ஆதரித்துமிருக்கிறார். இந்த பிப்ரவரி மாதத்தில் இந்திய வசமிருக்கும் காஷ்மீரில் உள்ள புலவாமாவில் நடந்த குண்டு வெடிப்புகள் அணு ஆயுத வல்லமை கொண்ட பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒரு முழுவீச்சிலான போருக்கு மிக அருகில் கொண்டுசென்றதன் பின்னர், சீமான் பாஜக அரசாங்கத்தை தாக்கிப் பேசினார். ஆயினும், பாகிஸ்தான் மீது பொறுப்பற்ற மற்றும் ஆத்திரமூட்டும் விதமான குண்டுவீச்சுக்காக பாஜகவை அவர் விமர்சிக்கவில்லை, மாறாக அதன் “அலட்சியமும் நிர்வாக இடையூறுகளும்” “பல படையினர்களது உயிர்களை அபாயத்தில் நிறுத்தியதற்காக” அதனை விமர்சித்தார்.

மற்ற உரைகளில், சீமான், அவர் அதிகாரத்திற்கு வந்தால், இலங்கை கடற்படையிடம் இருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்க இந்திய கடற்படையை தான் அனுப்பவிருப்பதாக சூளுரைத்தார். இத்தகைய வாய்ச்சவடால் பேச்சுக்கள் பதட்டங்களைத் தூண்டி, 1987 இல் போல, இலங்கையில் இன்னுமொரு அழிவுகரமான இந்திய இராணுவத் தலையீட்டுக்கு மட்டுமே பாதையமைத்துத் தரும்.

காங்கிரஸ் கட்சி, ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) ஆகியவற்றின் பலதசாப்தகால பிற்போக்குத்தனமான செயல்வரலாற்றின் காரணத்தினாலேயே நாம் தமிழர் கட்சி ஒரு செவிமடுப்பை வெல்ல முடிந்திருக்கிறது. 1991 இல் சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவம் முதலாளித்துவத்தை மீட்சி செய்ததை CPI மற்றும் CPM வழிமொழிந்த வேளையில், இந்தியாவை உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தில் ஒரு மலிவு உழைப்பு மூலவளமாக காங்கிரஸ் கட்சி ஸ்ராலினிச ஆதரவுடன் ஒருங்கிணைத்தது. அப்போதிலிருந்து அவை சிக்கன நடவடிக்கைகள் மற்றும் இராணுவவாதத்தின் கொள்கைகளை பின்பற்றி வந்தன, அவை சீமான் போன்ற பிற்போக்கு வாய்வீச்சாளர்கள் பேரினவாத ஜனரஞ்சகவாதத்தின் பின்னால் தமது வலதுசாரி வேலைத்திட்டத்தை மறைத்துக் கொள்வதற்கு பாதை திறந்து விட்டிருக்கிறது.

இலங்கையின் தமிழ் சிறுபான்மையினரது ஜனநாயக உரிமைகள் ஒடுக்கப்படுவதற்கு தமிழ்நாட்டில் உண்டாகின்ற ஆழமான கவலைகளை சுரண்டிக் கொள்வதன் மூலமாக தனது அரசியலுக்கு ஒரு வெகுஜன பூச்சு அளிக்க முயலுவதில் சீமான் சிறப்புத்திறன் காட்டுகிறார்.

26 ஆண்டு கால இலங்கை உள்நாட்டுப் போரின் முடிவில் 2009 மேயில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் பிரிவினைவாத விடுதலைப் புலிகள் அமைப்பின் கொலை செய்யப்பட்ட தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் படங்கள் சீமானின் பிரச்சாரங்களில் முன் இடம்பிடித்தன. சீமான் தனது தேசியவாத முன்னோக்கை சுருங்கக் கூறுகையில் “எனக்கு தகப்பன் என்பவன் என்னை பெத்தவனாக இருக்க வேண்டும், என் தலைவன் என்பவன் என் இரத்தவனாக இருக்க வேண்டும். இதுதான் எமது நிலைப்பாடு. பரந்து விரிந்து கிடக்கின்ற இந்த பூமிப் பந்தில் தமிழ் தேசிய இனத்துக்கு என்று தனித் தமிழ்தேசம் என்று அடைகின்றோமோ அன்றுதான் எமது இலட்சிய தாகம் அடங்கும்” என்றார்.

உண்மையில், வட இலங்கையில் ஒரு தனி தமிழ் அரசைக் கட்டியெழுப்பும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொள்கை அழிவுகரமான முறையில் முடிவுக்கு வந்தது. அதன் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கில் வெகுஜன ஆதரவை இழந்துவிட்டிருந்த நிலையில், 2009 இல் விடுதலைப் புலிகளின் உயர்மட்ட தலைமை உட்பட 40,000 க்கும் அதிகமான அப்பாவிப் பொதுமக்கள் இலங்கை இராணுவத்தால் காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்யப்பட்டனர். ஒரு முதலாளித்துவ இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள், இலங்கை இனவாத அரசின் அடக்குமுறை சட்டங்களையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்ப்பதற்கும், தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கும் இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு கோரிக்கை விட இயல்பிலேயே இலாயக்கற்றதாக இருந்தது.

மாறாக, LTTE, இந்திய முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதையே நீண்டகால நோக்கமாக கொண்டிருந்தது. அதன் முடிவு நெருங்கிய வேளையில், LTTE, அமெரிக்கா, முக்கிய ஐரோப்பிய சக்திகள் மற்றும் இந்திய அரசாங்கங்களிடம் இருந்து உதவிக்காக நிராசையுடன் விண்ணப்பித்தது. ஆனால், இந்தியா உள்ளிட்ட இந்த அத்தனை சக்திகளும், கல்மனதுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டதுடன் LTTE ஐ படுகொலை செய்த இலங்கை ஆட்சியின் பின்னால் அணிவகுத்து நின்றன.

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பதாக சீமான் காட்டும் நடிப்பு ஒரு அரசியல் மோசடியாகும். அவரது நாம் தமிழர் கட்சியானது LTTE இன் தோல்வியின் முதலாவது ஆண்டு நிறைவில் மே 18, 2010 அன்று ஸ்தாபிக்கப்பட்டது. 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தலையீடு செய்த அது, அப்போது அதிகாரத்தில் இருந்ததும், இலங்கை ஆட்சியாளர்களின் இனவாத யுத்தத்திற்கு ஆதரவை வளங்கியிருந்ததுமான திமுக-காங்கிரஸ் கூட்டணியை தோல்வியடையச் செய்ய அழைப்பு விடுத்தது.

ஆயினும் சீமான், திமுக-காங்கிரஸ் கூட்டணியின் ஒரு விதத்திலும் குறைவில்லாத பிற்போக்கான இலங்கை கொள்கையைக் கொண்ட அதிமுக-இந்து மேலாதிக்கவாத பாஜக இடையிலான கூட்டணியை ஆதரிப்பதில் சென்று முடிந்தார். 2010 ஜூலை 7 அன்று, அதிமுக தலைவர் ஜெ. ஜெயலலிதா தினமலர் பத்திரிகைக்கு கூறினார்: “போரின் போது அப்பாவி மக்கள் உயிரிழப்பது தவிர்க்க முடியாதது என்று நான் சொன்னது உண்மையே. இன்றும் கூட போரில் LTTE அழிக்கப்பட்டதை நான் கண்டனம் செய்யவில்லை”. இந்த அறிக்கை பிரசுரமாகிய சமயத்தில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக 2003 இல் வேலைநிறுத்தம் செய்த 170,000 அரசு அலுவலர்களை இழிபுகழ்மிக்க விதத்தில் வேலைநீக்கம் செய்தவரான ஜெயலலிதாவை, சீமான் ஆதரித்துக் கொண்டிருந்தார்.

இலங்கைக்கு எதிரான சீமானின் சண்டித்தன மிரட்டல்கள் பிராந்தியத்தில் எந்த ஜனநாயகப் பிரச்சினைகளையும் தீர்க்க முதலாளித்துவ வர்க்கம் திறனற்று இருப்பதில் இருந்து பிறப்பவையாகும். எல்லாவற்றுக்கும் மேல் முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச அணிதிரள்வைக் கண்டு அஞ்சுகின்ற இந்தியாவின் தமிழ் தேசியவாதிகளுக்கு, இராணுவத் தலையீடு மற்றும் இனவாத யுத்தத்தின் அச்சுறுத்தல் தான் இலங்கையில் தலையீடு செய்வதற்கான ஒரே பொறிமுறையாக இருக்கிறது.

இத்தகைய தலையீடுகளின் கசப்பான அனுபவத்தை தொழிலாள வர்க்கம் ஏற்கனவே பெற்றிருக்கிறது. 1987 ஜூலை முதல் 1990 வரையான காலத்தில், முன்னதாக கொழும்புக்கு நெருக்குதலளிக்க LTTE மற்றும் பிற தமிழ் தேசியவாதக் குழுக்களை பயன்படுத்தி வந்திருந்த புது டெல்லி, தனது பாதையை மாற்றி, இலங்கையின் தமிழர் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை ஆக்கிரமிக்க இந்தியாவின் இராணுவத்தை அனுப்பிய சமயத்தில், ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். அந்த காலகட்டத்தில், அப்பிராந்தியத்தின் பகுதிகளை இலங்கை இராணுவமும் ஆக்கிரமித்திருந்தது, அது பின்வாங்கப்பட்டு தெற்கின் சிங்களத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளுக்கு எதிராய் திருப்பப்பட்டது. 60,000க்கும் அதிகமான சிங்கள இளைஞர்கள் கொழும்பு ஆட்சியால் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள அத்தனை இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட, போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியமே இன்றியமையாத பிரச்சினை ஆகும். லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை வரலாறு மீண்டும் மீண்டும் ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது. பிராந்தியத்தில் ஜனநாயக உரிமைகளை நிறுவுவதற்கும் தேசிய மற்றும் இனப் பிளவுகளை வெல்வதற்குமான போராட்டமானது, சர்வதேசத் தொழிலாள வர்க்கம், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளை தனக்குப் பின்னால் அணிதிரட்டி, சோசலிசத்துக்காக நடத்துகின்ற ஒரு புரட்சிகரப் போராட்டமாக மட்டுமே நடத்தப்பட முடியும்.