ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US-backed Saudi regime beheads 37 political prisoners

அமெரிக்கா ஆதரவளிக்கும் சவுதி அரசாங்கம் 37 அரசியல் கைதிகளின் தலைகளைத் துண்டித்தது

By Bill Van Auken 
25 April 2019

ரியாத், மதீனா மற்றும் மக்கா நகரங்களிலும் அதேபோல் மத்திய காசிம் மாகாணத்திலும், நாட்டின் கிழக்கு மாகாணத்திலும் உள்ள 37 பேருக்கு மரண தண்டனைகளை பகிரங்கமாக நிறைவேற்றியதன் மூலம் சவுதி அரேபியாவின் சர்வாதிகார ஆட்சி செவ்வாயன்று மற்றொரு கொலை வெறியாட்டத்தை நடத்தியதாக அறிவித்தது.

பின்னர் தலையில்லாத சடலங்களில் ஒன்று சிலுவையில் அறையப்பட்டு, ஆளும் அரச குடும்பத்தின் முழு அதிகாரத்தை எதிர்க்கும் எவருக்கும் ஒரு அச்சுறுத்தும் எச்சரிக்கை என்றவகையில் பகிரங்கமாகத் தொங்கவிடப்பட்டது.

“பயங்கரவாத மற்றும் தீவிரவாத கருத்துக்களை ஏற்றுக் கொண்டதற்காகவும் ஊழலுக்காக பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கியதற்காகவும் மற்றும் பாதுகாப்பை ஸ்திரமற்றதாக்கியதற்காகவும்" அவர்கள் பொது இடங்களுக்கு கொண்டு வரப்பட்டு வாள்களால் தலை துண்டிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர் என ஆட்சி அறிவித்தது.

"பொதுமக்கள் ஒழுங்கு முறைக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்", "சமூகத்தின் பாதுகாப்பையும், நாட்டின் ஸ்திரத்தன்மையையும் பாதிக்கும்" அல்லது "அதன் தேசிய ஐக்கியத்தை ஆபத்திற்கு உட்படுத்துகின்ற" எவரும் "பயங்கரவாதி" என சவுதி அரேபியாவில், 2017 ல் நிறைவேற்றப்பட்ட ஒரு பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வரையறுக்கிறது. சவுதி முடியாட்சியை அல்லது அதன் உண்மையான ஆட்சியாளரான முடிக்குரிய இளவரசர் முகம்மது பின் சல்மானை விமர்சிப்பவர் எவருக்கும் மரண தண்டனையை இச்சட்டம் முக்கியமாக விதிக்கிறது.

அரேபிய உலகில் ட்ரம்ப் நிர்வாகத்தின் நெருங்கிய கூட்டாளியான பின் சல்மானின் கீழ், மரணதண்டனை எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. கடந்த வருடத்தில், ஆட்சி 149 பேரின் தலைகளை துண்டித்துள்ள அதேவேளையில், 2019 இல் ஏற்கனவே இதுவரையில் 105 பேரின் தலைகளை துண்டித்துள்ளது.

இந்த வாரம் கொலை செய்யப்பட்ட 37 பேரில் குறைந்த பட்சம் 33 பேர் சவூதி ஷியாக்கள் என்று அறியப்படுகிறது. அவர்களில் 14 பேரின் வழக்குகளில் 2011 ல் சவூதி அரேபியாவின் பிரதான ஷியா கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட எதிர்ப்புகளில் சம்பந்தப்பட்டதே அவர்களின் மீது கூறப்பட்ட "குற்றங்கள்” ஆகும். அதில் அவர்கள் ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் ஆட்சி அதிகாரத்துடன், அரச ஆதரவு பெற்ற தீவிர பழமைவாத சுன்னி பிரிவான வஹாபிசத்தின் உத்தியோகபூர்வ மத கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ள சுன்னி முடியாட்சியின் கைகளில் ஷியா மக்கள் மீதான பாகுபாடு மற்றும் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரினர்.

மற்றொரு 11 பேர் ஈரானுக்கு உளவு பார்த்ததாக குற்றஞ் சாட்டப்பட்டனர்.

சித்திரவதை மூலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்த நபர்களில் எவரும் வழக்கறிஞர்களுடன் பேச அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் குடும்பத்தினரால் பார்வையிடுவது மறுக்கப்பட்டதோடு, இந்த விசாரணையின் போது அவர்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டனர். குறைந்தபட்ச வழக்கு நடைமுறைகள் கூட இல்லாத ஒரு மோசடியான பகிரங்க விசாரணைகள் மூலம் அவர்கள் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

ரியாத்தில் ஆட்சி நடத்திய மிருகத்தனமான அரச படுகொலைகள், தேசிய மற்றும் சர்வதேச நோக்கங்களால் உந்தப்பட்ட ஒரு திட்டமிட்ட அரசியல் நடவடிக்கையாக அமைந்தன. இதன் நேரடி நோக்கம், சுமார் 15 சதவீத மக்கள் தொகையை கொண்டுள்ள, கிழக்கு மாகாணத்தில் முக்கிய எண்ணெய் உற்பத்தி செய்யும் பிராந்தியத்தில் செறிந்துள்ள ஷியா சிறுபான்மையினரை அச்சுறுத்துவதாகும்.

மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் குறைந்தபட்சம் மூன்று பேர், குற்றஞ்சாட்டப்பட்ட போது இளம்பராயத்தினராக இருந்தனர் என்பதால் அவர்களின் மரணதண்டனை இளம்பராயத்தினர்களுக்கு மரண தண்டனையை தடைசெய்யும் சர்வதேச சட்டத்தின் ஒரு தெளிவான மீறலாக மாறியது.

கைது செய்யப்பட்ட போது 16 வயதுடைய அப்துல்கரிம் அல் ஹவாஜ், ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்தமைக்காகவும், முடியாட்சிக்கு எதிரான எதிர்ப்பை தூண்டுவதற்காக சமூக ஊடகங்களை பயன்படுத்தியமைக்காகவும் குற்றஞ்சாட்டப்பட்டார். ஆட்சியைக் கண்டிக்க சுலோகங்களைக் கொண்ட பதாகைகளை தயாரிக்க அவர் உதவியதாகவும் கூறப்பட்டது. அவரது கைகள் தலையின் மேலே பிணைக்கப்பட்ட நிலையில் மின் அதிர்ச்சி வழங்கப்படல் உட்பட சித்திரவதை மூலம் பெறப்பட்ட ஒரு வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் தண்டிக்கப்பட்டார்.

அவர் சிறுவனாக இருந்த போது நடந்த குற்றச்சாட்டுகளுக்காக சல்மான் குரீஷ் அவரது 18 வது பிறந்தநாளுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டார். ஒரு பகிரங்கர விசாரணையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு அவரது அடிப்படை சட்ட உரிமைகள் நிராகரிக்கப்பட்டது.


17 வயதில் கைது செய்யப்பட்டு செவ்வாயன்று சவுதி அரேபியாவில் கொல்லப்பட்ட முஜ்தபா அல்- சுகிகத்

17 வயதான முஜ்தபா அல்-சுகிகத், மேற்கு மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் தனது மாணவ வாழ்க்கையைத் தொடங்க அமெரிக்காவிற்கு விமானத்தில் பயணிப்பதற்கு தயாராக இருந்தபோது King Fahd சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் தனது சித்திரவதை மூலம் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் வரைக்கும் அவரது உள்ளங்கால் உட்பட கடுமையாக அடித்து சித்திரவதை செய்யப்பட்டார்.

அல்-சுகிகத்தின் சிறைத் தண்டனைக்கு பதிலளிக்கும் வகையில் மேற்கு மிச்சிகன் பல்கலைக்கழகம் 2017 ல் ஒரு அறிக்கையை வெளியிட்டது:

"கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களாக, உலகில் எங்கு இருந்தாலும், சுதந்திரமாக பேசுவதற்கும் பயம் இல்லாமல், வெளிப்படையாக பேசுவதற்கும் அனைத்து மக்களுடைய உரிமைகளையும் பாதுகாப்பதில் பெருமைப்படுகிறோம். முஜ்தபா, மற்றும் ஏனைய 13 பேர் எதிர்நோக்கும் மரணதண்டனைக்கும் எதிராக நாங்கள் எமது ஆதரவை வெளிப்படையாக அறிவிக்கிறோம். பொது போராட்டங்களில் தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் எவரினதும் தலைகளை வெட்ட முடியாது.

"ஆங்கில மொழி மற்றும் முன் நிதியியல் கற்கைகளுக்கு ஒரு விண்ணப்பதாரராக முஜத்பா பெரும் ஆர்வத்தைக் காட்டினார். அவர் எங்கள் பல்கலைக்கழகத்திற்கு வருகை தர பறக்க தயாராக இருந்தபோது விமான நிலைய நுழைவாயிலில் அவர் கைது செய்யப்பட்டார். அவரை வரவேற்பதற்கு நாங்கள் தயாராக இருந்தபோது, அவர் சிறைவைக்கப்பட்டு, அடித்து சித்திரவதை செய்யப்பட்டு, மரண தண்டனைக்கு "ஒப்புக்கொள்ள" செய்யப்பட்டார் என்று எங்களுக்குத் தெரியாது.

இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையிலான சவூதி ஆட்சி, இந்த எதிர்ப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமைகள் அமைப்புகளிடமிருந்தும் வந்த எதிர்ப்புக்களை புறக்கணித்து, வாஷிங்டனில் இருந்து பெறும் ஆதரவின் அடிப்படையில் முழுமையாக தண்டனையிலிருந்து தப்பியிருப்பதாக நம்புகிறது.

2016 இல் சதி அரேபியாவின் ஒடுக்கப்பட்ட ஷியா சிறுபான்மையினரின் முக்கிய பேச்சாளரான மதகுரு ஷீக் நிம்ர் பாக்ரல்-நிம்ர் உட்பட, ஒரே நாளில் 47 பேரின் தலைகளை வெட்டிக் கொலை செய்தமைக்குப் பின்னர் செவ்வாயன்று சவுதி அரேபிய ஆட்சி நடத்திய இரத்தக்களரியே மிகப் பெரியதாகும். தெஹ்ரானில் சவுதி தூதரகம் மீது மக்கள் கூட்டம் நடத்திய தாக்குதல் உட்பட, அப்பகுதி முழுவதும் ஆத்திரமூட்டும் ஆர்ப்பாட்டங்களை அரச படுகொலைகள் தூண்டியது. தெஹ்ரானுடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்ளவும், மத்திய கிழக்கு முழுவதும் ஈரானுக்கு எதிரான அதன் பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவதற்கான ஒரு போலிக் காரணமாக ரியாத் இந்த பொதுமக்களின் கோபத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டது.

அன்றிலிருந்து, கிழக்கு மாகாணத்தில் இடைவிடா அடக்குமுறை, யேமனுக்கு எதிரான சவுதி தலைமையிலான படைகளால் முன்னெடுக்கப்படும் இன அழிப்பு போருடன் சேர்ந்து கொண்டது. இதில் குறைந்தது 80,000 யேமானிய உயிர்களைக் கொன்று மக்கள் தொகையில் 80 சதவிகிதமான 24 மில்லியன் மக்களை மனிதாபிமான உதவிக்கான தேவையைபெறும் நிலையிலும், பலரைப் பட்டினியின் விளிம்பிலும் விட்டுள்ளது.

சுன்னி முடியாட்சி, யேமனில் ஹுதி கிளர்ச்சியாளர்களின் எழுச்சியை அதன் சொந்த உள்நாட்டு நிலைமைக்கு ஒரு அச்சுறுத்தலாகக் கருதுகிறது. இது ஒடுக்கப்பட்ட ஷியா மக்களை கிளர்ச்சிக்கு தூண்டுவிடும் என்று அஞ்சுகிறது.

சவுதி ஆட்சியின் குற்றங்களுக்கு முக்கிய பொறுப்பு அதன் முக்கிய ஆதரவாளரான அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆகும். சவுதி அரேபியாவில் உள்ள காட்டுமிராண்டித்தனமான முடியாட்சி அதன் வெளிப்படையான சிரச்சேதத்துடன், வெறுமனே நிலப்பிரபுத்துவத்தின் எச்சம் மட்டும் அல்ல. மாறாக, 1930 கள் மற்றும் 1940 களில் Texaco மற்றும் Standard Oil நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட சலுகைகள் தொடங்கி, இன்று சவுதி முடியாட்சியை அமெரிக்க இராணுவ - தொழில்துறை கட்டமைப்பின் பாரிய ஆயுத விற்பனைக்கு, முதல் நிலை வாடிக்கையாளராக ஆக்குவது வரைக்கும், இது மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்திய தலையீட்டின் நேரடி விளைபொருளாகும்.

சவுதி அரேபியாவில் பகிரங்கமாக தலைகள் துண்டிக்கப்பட்டமைக்கு வாஷிங்டன் அமைதி மூலம் பதிலளித்தது. தலை துண்டிக்கப்படுவதை அறிவிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக, ஈரானுக்கு எதிரான கடுமையான தண்டனைகளை கடுமையாகக் கட்டுப்படுத்தும் வகையில் வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. நாடு "அதன் மக்களுடைய உரிமையை மதிக்க வேண்டும்," ரியாத்தில் அத்தகைய நிலைப்பாடு ஏதும் இல்லை, சிறுவர் குற்றவாளிகளுக்கு பொது இடங்களில் தலை வெட்டப்படுவதைக் கண்டனம் செய்வது மிகக் குறைவு.

சவூதி அரேபிய தாய்நாட்டின் அடக்குமுறைகளில் பென்டகன் மற்றும் CIA ஆகியவை முழு பங்காளிகளாக உள்ளதுடன் அமெரிக்கா, குண்டுகள் மற்றும் இலக்கு தகவல்களை வெளியிட்டுள்ளதுடன் சேர்ந்து, சவுதி அரேபிய போர் விமானங்களின் எரிபொருளை நிரப்பியதுடன், யேமனுக்கு எதிரான குற்றவியல் போரை சாத்தியமாக்கியுள்ளன.

கடந்த அக்டோபர் மாதம் இஸ்தான்புல்லில் சவுதிமுடியாட்சியின் துணைத் தூதரகத்திலுள்ள அதிருப்தியாளரும் சவுதி அரேபிய பத்திரிகையாளருமான ஜமால் கஷோகிஜியின் காட்டுமிராண்டித்தனமான அரச கொலை மற்றும் துண்டாக்கப்பட்ட கொடூரமான குற்றத்தினால் சவுதி அரேபியாவிற்கு எதிராக எழுந்த ஒரு சுருக்கமான எதிர்குற்றச்சாட்டு பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்டது.

கொடூரமான படுகொலைகளை நடத்தியதாக 15 அரச அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற விசாரணை ரியாத்தில் நடந்து கொண்டிருக்கும் அதே வேளையில், கொலை செய்ய உத்தரவிட்ட முடிக்குரிய இளவரசர் பின் சல்மானுக்கு எதிராகவோ அல்லது ரியாத்திலிருந்து ஒரு ஸ்கைப் இணைப்பு வழியாக காஷோகியின் சித்திரவதை, கொலை மற்றும் வெட்டப்படுவதை மேற்பார்வை செய்த அவரது மூத்த ஆலோசகரான சவுத் அல்-குஹ்தானிக்கு எதிராகவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஒரு ஆண்டுக்கு முன்பு, இளவரசர் பின் சல்மான், அமெரிக்க அரசாங்கம், ஹார்வர்ட் மற்றும் MIT, அதேபோல் பில் கேட்ஸ் இலிருந்து ஜெஃப் பெஸோஸ் மற்றும் ஓபரா வின்பிரேய் வரையான பல அமெரிக்க பில்லியனர்களால் "சீர்திருத்தவாதியாக" சித்தரிக்கப்பட்டார்.

காஷோகி படுகொலைக்கு ஊடகத்தின் கவனம் இப்போது குறைந்து வருகின்ற அதேவேளையில், பகிரங்க தலை துண்டிக்கப்படல்களினால் இந்த கட்டுக்கதைகள் மறுபடியும் புதுப்பிக்கப்படுகிறது. மரணதண்டனைக்கு அடுத்தநாள், வோல் ஸ்ட்ரீட்டின் நிதிய உயரடுக்கின் உயர் பிரதிநிதிகள் ரியாத் முடியரசினால் நிதியளிக்கப்பட்ட ஒரு நிதி மாநாட்டிற்கு ஆட்சியின் அதிகாரிகளோடு கலந்து கொண்டனர்.

BlackRock இன் தலைமை நிர்வாக அதிகாரி லாரி பிங்க், HSBC இன் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் ஃப்ளிண்ட், மற்றும், JPMorgan இன் தலைமை செயல்பாட்டு அதிகாரி டேனியல் பின்டோ, மோர்கன் ஸ்ரான்லியின் ஆசியாவின் நிர்வாக இயக்குநர் சின் சோவ் ஆகியோர் தேசிய எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் முன்மொழியப்பட்ட திட்டமிடப்பட்ட பங்குச்சந்தைக்கு செல்வதில் (IPO) இலாபமடைய ஆர்வமாக உள்ளனர்.

BlackRock இன் பிங்க், இந்த பாரிய படுகொலைகள் பற்றிய கேள்வியை உதறித்தள்ளி, “செய்திகளில் உள்ள சில விடயங்கள் ஒரு இடத்திலிருந்து ஒடிவிட வேண்டும் என எனக்கு உண்மையில் கூறவில்லை. மாறாக பல விடயங்களில் நான் முதலீட்டை நோக்கி ஒடவேண்டும் என்றும், ஏனெனில் நாங்கள் கூறப்படாத விடயங்கள் பற்றியே கூடுதலாக அச்சமுறுகின்றோம்” என்றார்.

சவுதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது, மத்திய கிழக்கில் உள்ள அனைத்து அமெரிக்க கொள்கைகளையும் பார்ப்பதற்கு பொருத்தமான முப்பட்டக கண்ணாடியை வழங்குகிறது. படுகொலை என்பது இப்பகுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தொடரும் கொள்ளைநோக்கு நோக்கங்களின் வெளிப்பாடாகும். வாஷிங்டனின் பாதுகாப்பு மற்றும் இந்த அதிதீவிர அதிரடி ஆட்சி மீதான அதன் நம்பிக்கையானது, "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்று அழைக்கப்படுவதிலிருந்து, "ஜனநாயகம்" மற்றும் "மனித உரிமைகளை" ஊக்குவிப்பதாக கூறப்படுவதன் மூலம், அமெரிக்காவின் தொடர்ச்சியான இராணுவத் தலையீடுகளுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து போலிக் காரணங்களையும் அம்பலப்படுத்துகிறது.

இறுதியில், சவுதிகளுடன் கொண்டுள்ள மூலோபாயக் கூட்டணியை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமெரிக்க வெளியுறவுக் கொள்கையானது தவிர்க்க முடியாமல் மத்திய கிழக்கில், அமெரிக்காவில், மற்றும் சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டம் மீண்டும் எழுச்சியுறும்போது பொறிந்துகொட்டும் கடுதாசி வீட்டை போன்றது என்பதையை நிரூபிக்கும்.