ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Muslim victims of violence in Sri Lanka speak to the WSWS

இலங்கை வன்முறையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசினர்

By our reporters
17 May 2019

புதன்கிழமை, இலங்கையின் கம்பஹா மாவட்டத்தில் சுறுசுறுப்பான மினுவங்கொடைக்கு சென்ற உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் ஒரு விகாரமான நகரத்தை கண்டனர். கொழும்பில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த நகரில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைப் பகுதிகள் சிங்கள இனவெறி குண்டர்களால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் மற்றும் இராணுவத்தின் நேரடியான அல்லது மறைமுகமான ஆதரவுடன் நடத்தப்பட்ட ஒரு மூர்க்கத்தனமான தாக்குதலின் பின்னர், கொழும்பு-தேசிய நெடுஞ்சாலை வழியாக உள்ள இந்த நகரத்தை முழு ஆயுதபாணிகளான இராணுவ சிப்பாய்கள் மற்றும் பொலிஸ் அதிரடிப் படையினரும் தற்போது "பாதுகாக்கின்றனர்". திங்கட்கிழமை மாலை அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவுக்கு முன்னும் பின்னும், சுமார் ஒரு மணி நேரம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எரிக்கப்பட்ட பகுதியில் இராணுவத்தினர்

சிலாபம், நிக்கவெரட்டிய, குலியப்பிட்டியா, ஹெட்டிபொல, பிங்கிரிய, கொபய்கனே மற்றும் வாரியபொல ஆகிய இடங்களும் தாக்குதலுக்கு உள்ளான பிரதேசங்களாகும். நாத்தாண்டிய பிரதேசத்தில் கொட்ராமுல்ல மற்றும் தும்மோதரவும் மிக மோசமான வன்முறைகளை சந்தித்துள்ளன. இந்த நகரங்கள் அனைத்தும் வடமேல் மாகாணத்தில் அமைந்துள்ளன. கொட்ராமுல்லவில் 45 வயது முஸ்லிம் நபர் குண்டர்களால் கொல்லப்பட்டுள்ளார். பலர் காயமடைந்துள்ளனர்.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் மினுவங்கொடவுக்கு சென்றிருந்த போது, பதில் பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன முஸ்லிம் அமைச்சர்களோடு நகரத்தை பார்வையிட வந்திருந்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முதல்நாள் இந்த நகரத்தை பார்வையிட்டிருந்தார். நகரவாசிகள், "மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதாக" வாக்குறுதி கொடுத்த அவர்களை கண்டனம் செய்து பேசினர்.

தாக்கப்பட்ட மசூதியின் முன்பக்கம்

மினுவங்கொட நகரம் வெறிச்சோடிப் போய் உள்ளது. பொலிஸ் மற்றும் இராணுவத்தினரை தவிர, ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. ஹலால் ஃபுட்ஸ் மற்றும் பௌஸ் ஹோட்டல் என்ற இரண்டு உணவகங்கள் அடித்து நொருக்கப்பட்டுள்ளதோடு, ஆடை, காலணி மற்றும் மின்னணு பொருட்கள் விற்பனை செய்யப்படும் 50 க்கும் மேற்பட்ட முஸ்லீம்களுக்குச் சொந்தமான கடைகள் முற்றாக அழிக்கப்பட்டன. அதேபோல் அவற்றுக்கு இடையில் இருந்த சிங்களவர்களுக்குச் சொந்தமான சிறிபதி டிரஸ் பொயின்ட், சதுர, ஈக்கோ ஆகிய கடைகளும் சாம்பலாகியுள்ளன. நகரின் மையத்தில் உள்ள மசூதியின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளும் உடைக்கப்பட்டுள்ளன. இலங்கையின் மிகப்பெரிய பாஸ்டா உற்பத்தி தொழிற்சாலையான, 500 தொழிலாளர்கள் வேலை செய்யும் "டயமண்ட் பாஸ்ட்டா" ஆலையும் நாசமாக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலின் போது சுமார் 30 பேர் தங்கள் உயிர்களை காப்பாற்றிக்கொள்ள ஜன்னல்கள் வழியாக குதித்துள்ளனர்.

தாக்குதல் நடந்தபோது கிட்டத்தட்ட அனைத்து முஸ்லீம் கடைகளும் ரமழான் பிரார்த்தனைக்கு மூடப்பட்டிருந்தன. குண்டர்கள் கடைகளின் முகப்பை உடைத்து, பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்த பின்னர், இறுதியாக அவற்றை எரித்துள்ளனர்.

சிறிபதி சூறையாடப்பட்ட அவரது கடை வாசலில்

மொஹிதீன் ஷூ பெலஸ் உரிமையாளர் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறியதாவது: "தாக்குதல்களில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வெளியே இருந்து வந்துள்ளனர். இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இப்பொழுது எரிந்து சாம்பலாகிவிட்டன. எங்கள் கடைக்கு அருகில் அம்ரா டெக்ஸில் பல கோடி ரூபா பெறுமதியான டெனிம் காற்சட்டைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன."

ஜூவல் மூன் உரிமையாளர், "பண்டிகை காலத்திலேயே எங்களுக்கு அதிக வியாபாரம் நடக்கும். இப்பொழுது, நாங்கள் கொள்வனவு செய்யும் மொத்த விற்பனையாளர்களுக்கு ஒரு பெரிய தொகையை கட்ட வேண்டும்," என்றார்.

இந்தப் பேரழிவின் பின் தங்கள் வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்துவது எப்படி என்ற கேள்வியை அனைவருமே கேட்டனர்.

முஸ்லீம் கடைக்காரர்கள் மற்றும் களஞ்சிய ஊழியர்கள் பெரும்பாலும் நகரத்திலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கல்ஒலுவவில் வசிக்கிறார்கள். தாக்குதலுக்குப் பின்னர், பாதுகாப்புப் படைகள் இப்பகுதி முழுவதும் சுற்றி வளைத்து மக்களை மிரட்டின. "எக்சத் சந்தி" என்ற பகுதியில் சுமார் 30 முஸ்லிம் குடும்பங்களின் வீடுகள் குண்டர்களால் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன.

வீட்டைத் தாக்குவதற்காக குண்டர்களால் தகர்க்கப்பட்ட வாயில் கதவு

ஒரு தொழிலாளி கூறியதாவது: "படையினர் சீருடையில் கறுப்பு துணியால் முகங்களை மூடிக் கட்டிக்கொண்டு வந்தனர். தங்களது துப்பாக்கிகளால் கதவுகளை தட்டினர். அவர்கள் 'தம்பிகளா' (முஸ்லிம்கள்) என்று கூச்சலிட்டனர். நாங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தபோது எங்களை பயமுறுத்துவதற்கு தரையில் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். கிராமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் இன்னமும் பீதியுடனேயே உள்ளனர் ... "

பொலிஸார் முழு கல்ஒலுவ பிரதேசத்திலும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் சோதனை செய்தனர், ஆனால் சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை. "சாதாரண முஸ்லீம் மக்கள் எந்த வன்முறையிலும் தொடர்புபட்டவர்கள் இல்லை. ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்பு உள்ளவர்களே குண்டுத் தாக்குதல்களை நடத்தியிருந்தனர். நாங்கள் அவர்களின் தாக்குதலை கடுமையாக கண்டனம் செய்கிறோம்," என ஒரு தொழிலாளி குறிப்பிட்டார்.

கொழும்பிலும் மற்றும் இரண்டு கொழும்புக்கு வெளியிலுமாக மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும், மூன்று ஆடம்பர ஹோட்டல்கள் மீதும் ஏப்பிரல் 21 அன்று நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு 500 பேர் வரை காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் தேசிய தவ்ஹீத் ஜம்மாத் (NTJ) இஸ்லாமிய அதிதீவிரவாதிகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

குண்டர்களால் எறியப்பட்ட கல்லுடன் சஹாப்டீன்

65 வயதான சஹாப்டீன், நகரில் வடை விற்று மகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு உதவி வருகின்றார். அவரது வீடு கற்களால் தாக்கப்பட்டது: "எனக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அவர்கள் திருமணமானவர்கள். ஒருவருக்கு முச்சக்கரவண்டி ஒன்று உள்ளது, ஆனால் போதுமான வருமானம் கிடைப்பதில்லை. நான் குடும்ப செலவுகளில் பெரும்பகுதியை சம்பாதிக்கிறேன். எங்கள் வீடுக்கு முறையான மின்சார வசதி கூட இல்லை. எம்மைத் தாக்குவதில் என்ன எதிர்பார்க்கிறார்கள்?"

"மினுவங்கொட நகர சபையின் தலைவர், அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தாக்குதலுக்கு மாறி மாறி குற்றம் சாட்டிக்கொள்கின்றனர். ஆனால் எங்களை தாக்கும் போதும் கடைகள் எரிக்கப்படும் போதும் யாரும் வரவில்லை" என மற்றொருவர் கூறினார்.

சர்வதேச நிலைமையை பற்றிய தங்கள் பார்வையை உலக சோசலிச வலைத் தளத்திற்கு ஒரு தொழிலாளர் குழுவினர் விளக்கினர். அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளே அல் கைடா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கிவிட்டு, ஈராக் போன்ற வளம்மிக்க மத்திய கிழக்க நாடுகளை ஆக்கிரமிக்க அவர்களைப் பயன்படுத்துகின்றது. "ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருந்ததாக அமெரிக்கா கூறியது. அவை அனைத்துமே பொய்கள். சமீபத்தில் லிபியாவும் சிரியாவும் அழிக்கப்பட்டன. மில்லியன் கணக்கான மக்கள் அகதிகளாக மாறியுள்ளனர். வரலாற்றில், அமெரிக்க சார்பு அரசாங்கங்களை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு சதித்திட்டங்கள் நடந்துள்ளன."

தாக்குதல் ஆரம்பமான ஹலால் உணவகம் மற்றும் பௌஸ் விடுதி,

குண்டுவீச்சுக்களை விசாரிக்க இலங்கைக்கு சிஐஏ மற்றும் எஃப்.பி.ஐ போன்ற அமெரிக்க உளவு நிறுவனங்களை இலங்கை அரசாங்கம் ஏன் அழைக்க வேண்டும் என மற்றொரு தொழிலாளி கேட்டபோது, ​​"இந்த அரசாங்கம் அமெரிக்காவுடன் சேர்ந்த வேலை செய்கிறது" என்று முதலாமவர் பதிலளித்தார்.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் போர் உந்துதல் மற்றும் சீனாவுடன் மிக நெருக்கமாக இணைந்திருப்பதாக அமெரிக்கா கருதிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஆட்சியை அகற்றுவதற்காக 2015 இல் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையை பற்றியும் கலந்துரையாடினர். இராஜபக்ஷ ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பாளராக இல்லை, இப்பொழுது அவர் வாஷிங்டனை நாடுகிறார்.

ஒரு சிறு வர்த்தகர், "சமாதானத்தை காப்பாற்றுவதற்காகவே பாதுகாப்பு படைகள் இருக்கின்றன என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் நாங்கள் துப்பாக்கிகளால் தாக்கப்பட்டோம்” என்றார். “சிறிவர்களை அசிங்கமான வார்த்தைகளால் பயமுறுத்தினர். ஊடகங்கள் இந்த விஷயங்களைக் காட்டவில்லை."

எரிந்துகொண்டிருக்கும் கடைகள்

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் இலங்கை ஆளும் உயரடுக்கின் பேரினவாத அரசியலை விளக்கினர். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுடனான 30 ஆண்டுகால இனவாத யுத்தத்தில் தமிழர் விரோத பாரபட்சம் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஒவ்வொரு முதலாளித்துவ அரசாங்கமும் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான போராட்டங்களை நசுக்குவதற்காக பிரித்தாளும் வழிமுறையை பயன்படுத்தியதோடு, தொழிலாளர்களுக்கு எதிராக அரசாங்கப் படைகள், பொலிஸ் மற்றும் குண்டர்களை அனுப்புவதில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பேர் போனவை.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலுக்கு பின்னர், இனவாத அடிப்படையில் தொழிலாளர்களை பிளவுபடுத்த, முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகம் மற்றும் முதலாளித்துவ ஊடகங்களால் பரப்பப்படும் இனவாத பிரச்சாரத்தால், இலங்கை முழுவதும் முஸ்லீம்-எதிர்ப்பு தாக்குதல்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல்கள், பின்னணியில் ஸ்தாபக அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் நன்கு திட்டமிடப்பட்டுள்ளன. குருநாகல் மாவட்டத்தில் பிரதான பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளருமான தயாசிறி ஜயசேகர, பிங்கிரிய பொலிசுக்குச் சென்று கைதுசெய்யப்பட்ட பல வன்முறையாளர்களை விடுவித்துக்கொண்டு செல்லும் வீடியோ காட்சிகள் உள்ளன. பின்னர் அவர் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தி, கலவரத்தை தணிப்பதற்கே தான் அங்கு சென்றதாக கூறினார்.

சூறையாடி நிர்மூலமாக்கப்பட்ட கடைகள்

இராஜபக்ஷவின் நண்பரும், பிவித்துரு ஹெல உறுமய (பி.எச்.யூ.) அமைப்பின் தலைவருமான மதுமாதவ அரவிந்தவும் அந்த வீடியோவில் உள்ளார். பின்னர் அவர் தான் அந்த வழியாக வேறு ஒரு பயணம் போய்க்கொண்டிருந்ததாக கூறினார்.

ஸ்தாபகத்துடன் பிணைந்த பேர்போன பேரினவாதியான நாமல் குமார மற்றும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திகனவில் நடந்த இனவாத வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபட்டதாக கூறப்படும் மஹாசோஹோன் பாலக்காய படையின் அமித் வீரசிங்கவும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் கிட்டத்தட்ட நூறு பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த காலத்தில், இத்தகையவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டிருந்னர்.

சூறையாடி எரிக்கப்பட்ட கடைத் தொகுதி

புதனன்று ஒரு ட்விட்டர் செய்தியில், இராஜபக்ஷ "தன்னுடைது உட்பட அனைத்து அரசியல் கட்சியினதும் உறுப்பினர்களையும், சட்டத்தையும் ஒழுங்கையும் பராமரிக்க வேண்டும், ஏற்கனவே நிலவும் பதட்ட சூழ்நிலையை மோசமாக்க வேண்டாம்" என்று வலியுறுத்தினார். இது ஆளும் வர்க்க கட்சிகளின் ஈடுபாட்டை விளைபயனுள்ள வகையில் ஒப்புக்கொள்வதாகும்.

வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியை எதிர்கொண்டுள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள் போலவே, இலங்கை ஆளும் உயரடுக்கும் சர்வாதிகார ஆட்சி வடிவத்தை நோக்கி துரிதமாக திரும்புகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு ஸ்தாபகமும் பயங்கரவாத தாக்குதலின் வெளிப்படையான எச்சரிக்கையை புறக்கணித்துவிட்டன. இப்போது இது கடுமையான அவசரகால நிலைமை உள்ளிட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகளை திணிப்பதற்கும் வர்க்கப் போராட்டங்களையும் கிராமப்புற அமைதியின்மையையும் அடக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

அனைத்து ஸ்தாபகக் கட்சிகளும் தங்களது சொந்த பொலிஸ்-அரசு வேலைத் திட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகளுக்கு கேள்விக்கிடமற்ற அங்கீகாரம் கொடுத்துள்ளன. பின்னர் இராணுவம் மேலாதிக்கம் செலுத்த முனைகிறது. தொழிலாளர்கள் முஸ்லீம்-விரோத வன்முறை, பிரச்சாரம் மற்றும் அவசரகால நிலையையும் எதிர்ப்பதோடு, இனப் பாகுபாடுகளுக்கு அப்பால் ஐக்கியப்பட்டு, தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புவதோடு சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராட வேண்டும்.