Print Version|Feedback
May Day 2019: The resurgence of the class struggle and the fight for socialism
மே தினம் 2019: வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சியும், சோசலிசத்திற்கான போராட்டமும்
Joseph Kishore and David North
1 May 2019
சர்வதேச தொழிலாள வர்க்க ஐக்கியத்திற்கான மே தினத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும் (ICFI) உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) உலகெங்கிலும் அதிகரித்து வரும் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
சமத்துவமின்மை, போர் மற்றும் பிற்போக்குத்தனத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் மற்றும் உலகளாவிய ஒழுங்கமைப்புக்கான அவசர தேவையை மே தினத்தின் நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. வெனிசூலாவில் இராணுவத்திற்கு ஜூவான் குவைடோ பகிரங்கமாக அழைப்புவிட்டதையும் மற்றும் நிக்கோலா மதுரோ அரசாங்கத்திற்கு எதிரான ஓர் ஆயுதமேந்திய கிளர்ச்சியை பிரகடனப்படுத்தியதையும் ட்ரம்ப் நிர்வாகம் ஊக்குவித்து, அங்கே அதன் ஆட்சி மாற்றத்திற்கான நடவடிக்கையைக் கூர்மையாக தீவிரப்படுத்தியது. குவைடோ நேற்று அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் வெற்றி பெறவில்லை என்றாலும், அமெரிக்கா, ஒரு பிராந்திய மோதல் அபாயத்தை மட்டுமல்லாது ஓர் உலகளாவிய மோதல் அபாயத்தையே கூட ஏற்படுத்தும் வகையில், வெனிசூலாவில் மட்டுமல்ல, கியூபா மற்றும் ரஷ்யாவுக்கு எதிராகவும், அதன் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த அந்நாட்டைப் பயன்படுத்தி வருகிறது.
விக்கிலீக்ஸின் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் "பிணை நிபந்தனைகளை மீறியதன்" மீது இன்று இங்கிலாந்து நீதிமன்றத்தில் விசாரணையை முகங்கொடுக்க இருப்பதாகவும், அமெரிக்கா சமர்பித்த ஒப்படைப்பதற்கான கோரிக்கை தொடர்பாக வியாழக்கிழமை விசாரணை நடக்கும் என்றும் விக்கிலீக்ஸ் நேற்று அறிவித்தது. கடந்த மாதம், அசான்ஜ் இலண்டனில் ஈக்வடோர் தூதரகத்திலிருந்து பிடித்துச் செல்லப்பட்டார். அமெரிக்கா அவர் மீது கை வைப்பதில் ஜெயிக்குமேயானால், மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச்சாட்டுக்கள் அல்லது காலவரையற்ற சிறையடைப்பை அசான்ஜ் முகங்கொடுப்பார்.
அசான்ஜிற்கு எதிராக சாட்சியம் அளிக்க மறுத்ததற்காக தற்போது சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் நிற்கும் செல்சியா மானிங் உடன் சேர்ந்து, விக்கிலீக்ஸ் ஸ்தாபகர், அமெரிக்க ஏகாதிபத்திய குற்றங்களை வெளியிட்டதற்காக இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.
முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகள் அதிகரித்தளவிலான பகிரங்கமாக எதேச்சதிகார ஆட்சி வடிவங்களுக்கு திரும்புவதற்கு அசான்ஜூம் மானிங்கும் பலிக்கடா ஆகி உள்ளனர். ஜனநாய உரிமைகள் மீதான தாக்குதலில் மத்திய இலக்கில் இருப்பது, மில்லியன் கணக்கான அகதிகள் உட்பட தொழிலாள வர்க்கமாகும். அகதிகள் கைது செய்யப்படுவதற்கும் மற்றும் நாடுகடத்தப்படுவதற்கும் சுற்றி வளைக்கப்பட்டு வருகின்றனர், இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களில் இருந்து மெக்சிக்கோ, மத்தாமோராஸில் வேலையிலிருந்து நீக்கப்பட்ட வேலைநிறுத்தக்காரர்கள் வரையில், தொழிலாளர்களோ, திருப்பி போராடியதற்காக பழிவாங்கப்பட்டு, துன்புறுத்தப்படுகின்றனர்.
இந்த மே தினமானது ஒன்றோடொன்று இணைந்த மூன்று சமூக மற்றும் அரசியல் காரணிகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றது.
முதலாவது, உலகெங்கிலும் வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சி உள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா, கொலராடோ, மேற்கு வேர்ஜினியா, கென்டக்கி மற்றும் பிற மாநிலங்களிலும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்கள், 32 ஆண்டுகளில் மிக உயர்ந்த மட்டத்தில் வேலைநிறுத்த நடவடிக்கையை உருவாக்கி உள்ள தொழிலாள வர்க்க போராட்டத்தினது மேலெழுச்சியின் பிரதான கூறுபாடாக உள்ளன. இது நெதர்லாந்து, போலாந்து, இந்தியா, ஈரான், மெக்சிகோ, நியூசிலாந்து, துனிசியா, சிம்பாப்வே மற்றும் பிற நாடுகள் உட்பட ஆசிரியர்களின் ஒரு சர்வதேச வேலைநிறுத்தங்களின் அலையின் பாகமாக உள்ளது.
மெக்சிகோவில் பத்தாயிரக் கணக்கான மக்கில்லாடோரா தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், பிரான்சில் "மஞ்சள் சீருடை" போராட்டங்கள், இந்தியாவில் ஒரு பொது வேலைநிறுத்தம், அல்ஜீரியா, சூடான் மற்றும் சிம்பாப்வேயில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பாரிய மேலெழுச்சிகள், ஹங்கேரியில் வாகனத்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஜேர்மனியில் பொதுத்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ஆகியவை சமீபத்திய மாதங்களது பிரதான போராட்டங்களில் உள்ளடங்குகின்றன.
இரண்டாவது காரணி உலகெங்கிலும் சோசலிசத்திற்கான ஆதரவு அதிகரித்திருப்பதாகும். பாரிய பெருந்திரளான மக்களிடையே இந்த ஒட்டுமொத்த சமூக மற்றும் பொருளாதார அமைப்புமுறைக்கு எதிரான பரந்த வெறுப்புணர்வு, 1930 களுக்குப் பின்னர் இந்தளவுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை மார்க்சிசத்தின் முடிவாக ஆளும் உயரடுக்கு புகழ்ந்தபோதும், அதற்கு முப்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் மில்லியன் கணக்கானவர்களின் சிந்தனைகளில் சோசலிசம் இன்னும் உள்ளது.
இந்த உணர்வுகள் ஆழமாக வரலாற்று அனுபவத்தில் வேரூன்றி உள்ளன. சோவியத் ஒன்றியத்தின் முடிவை அடுத்து, முடிவில்லா போர்களும், ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியும், எப்போதும் அதிகரித்துச் செல்லும் செல்வவள திரட்சியும், ஏதேச்சதிகாரவாதத்தின் மீள்வருகையும் ஒன்றன்பின் ஒன்றாக பின்தொடர்ந்தன. கடந்த 30 ஆண்டுகளில் பிறந்த பில்லியன் கணக்கானோர்களுக்கு மோசமடைந்து வரும் இந்த வாழ்க்கை நிலைமைகளைத் தவிர வேறொன்றும் தெரியாது.
மூன்றாவது காரணி, ஆளும் உயரடுக்கின் கட்டுமீறிய வலதை நோக்கிய திருப்பமாகும். உணரக்கூடிய வகையில் ஓர் அச்ச உணர்வு ஆளும் வர்க்கத்தில் மேலோங்கி உள்ளது. தனியார் முதலீட்டு நிறுவன மேலாளர் Raymond Dalio இன் வார்த்தைகளில் கூறுவதானால், “ஏதோ ஒருவித புரட்சியை" முகங்கொடுத்துள்ள ஆளும் உயரடுக்கு தனிமைப்பட்டிருப்பதை வெளிப்படுத்தும் பில்லியனர்களின் அறிக்கைகளை முதலாளித்துவ ஊடகங்கள் அதிகமாக வெளியிட்டு வருகின்றன. சோசலிசத்தின் "அச்சுறுத்தலை" கண்டிக்காத அல்லது "அமெரிக்கா ஒருபோதும் ஒரு சோசலிச நாடாக ஆகப்போவதில்லை" என்ற சூளுரையை உள்ளடக்காத ஒரேயொரு உரையைக் கூட ட்ரம்பால் வழங்க முடியாதுள்ளது.
மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் புறநிலைரீதியான இயக்கமானது அதிகளவில் சோசலிசத்திற்கான ஆதரவினால் வெளிப்படுத்தப்படுகையில், ஆளும் வர்க்கமானது பொலிஸ் அரசு அணுகுமுறைகளுக்கும் மற்றும் 1920 கள், 1930 கள் மற்றும் 1940 களின் சித்தாந்த மற்றும் அரசியல் அழுக்கினை நோக்கி மிகவும் கூர்மையாக திரும்புவதிலும் வெளிப்பாட்டைக் காண்கிறது.
ஆளும் உயரடுக்கு, உலகெங்கிலும், சுரண்டலைத் தீவிரப்படுத்துவதற்கும் மற்றும் போருக்கான அவற்றின் தயாரிப்புகளுக்கு மக்களை அடிபணிய செய்வதற்கும் ஏதேனும் இயங்குமுறையைக் காண முயன்று வருகின்றன. 2008 நிதியியல் பொறிவுக்கு ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலத்திற்குப் பின்னர், சமூக சமத்துவமின்மை சாதனை மட்டங்களில் உள்ளது, ஒரு புதிய நிதியியல் நெருக்கடி அதிகரித்து கொண்டிருக்கிறது. மத்திய கிழக்கிலும் மத்திய ஆசியாவிலும் ஒரு கால் நூற்றாண்டுக்கும் அதிக காலமாக முடிவில்லா போர்களில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, இப்போது சீனா மற்றும் ரஷ்யாவுடன் "வல்லரசு மோதலுக்கு" தயாரிப்பு செய்து வருகிறது. ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் உலகளாவிய புவிசார் அரசியலில் அவற்றின் இடத்தைப் பாதுகாக்கும் தீர்மானத்துடன் மீள்-ஆயுதமேந்தி வருகின்றன.
அமெரிக்காவில் ட்ரம்ப், ஆளும் வர்க்கத்திற்குள் உள்ளேயான பிளவுகளுக்கும் அத்தோடு அதிகரித்து வரும் சமூக பதட்டங்களுக்கும் இராணுவம் மற்றும் பொலிஸ் உட்பட அதிவலது சக்திகளுக்கு பட்டவர்த்தனமாக முன்பினும் அதிகமாக அழைப்புவிடுவதன் மூலமாக விடையிறுத்து வருகிறார், மரபார்ந்த அரசியலமைப்பு கட்டுப்பாடுகளால் தடுக்கப்படாத வகையில் ஜனாதிபதி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதும் இத்துடன் சேர்ந்துள்ளது. இத்தாலியில், அந்நாட்டின் பாசிசவாத கடந்த காலத்துடன் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளவரும் மற்றும் முசோலினியை விமர்சிக்க மறுத்துள்ளவருமான துணை பிரதம மந்திரி மத்தேயோ சல்வீனி தலைமையிலான லெகா கட்சி, அந்நாட்டின் கூட்டணி அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ளது.
பிரேசில், இந்தியா, பிலிப்பைன்ஸ், ஹங்கேரி, ஆஸ்திரியா மற்றும் இஸ்ரேலில் அதிவலது மற்றும் அதிதீவிர தேசியவாத கட்சிகள் அதிகாரத்தில் உள்ளன. இதுபோன்ற கட்சிகள் ஸ்பெயின், பிரான்ஸ், ஸ்வீடன், பின்லாந்து, எஸ்தோனியா மற்றும் சுலோவேனியாவில் அவற்றின் அரசியல் பிரசன்னத்தை அதிகரித்துள்ளன. ஜேர்மனியில், அதிவலது கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) ஜேர்மன் நாடாளுமன்ற கீழ் அவையில் முன்னணி எதிர்கட்சியாக இருந்து, மகா கூட்டணி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அரசியல் தொனி அமைத்து கொடுக்கிறது.
ட்ரம்ப் மற்றும் ஏனைய முதலாளித்துவ அரசியல் தலைவர்களது வாய்சவடாலில் பகுதியாக ஈர்க்கப்பட்டு —கிறிஸ்துவ தேவாலய படுகொலை, பென்சில்வேனியா மற்றும் கலிபோர்னியாவின் யூதமத வழிபாட்டுதலங்களில் மக்கள் மீதான துப்பாக்கிச்சூடு என— நவ-நாஜிக்கள் நடத்திய பாசிசவாத அட்டூழியங்களின் பிரவாகத்தை சமீபத்திய மாதங்கள் கண்டுள்ளன.
நவ-பாசிசவாத வலதுக்கு பெருந்திரளான மக்கள் ஆதரவு இல்லை. அதன் மீளெழுச்சியானது, உயர்மட்டத்திலிருந்தும், தொழிலாள வர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறும் அமைப்புகள் மற்றும் கட்சிகளான சமூக ஜனநாயகக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் முழுமையான திவால்நிலைமையில் இருந்தும் செயலூக்கத்துடன் ஊக்குவிக்கப்படுவதன் விளைபொருளாகும். அமெரிக்காவில், ஜனநாயகக் கட்சி ட்ரம்ப் மீதிருக்கும் மக்கள் எதிர்ப்பை போர், தணிக்கை மற்றும் சிக்கன நடவடிக்கைகளின் வலதுசாரி திட்டநிரலுக்குப் பின்னால் திசைதிருப்ப அதனால் இயலுமான அனைத்தும் செய்து வருகிறது.
போருக்கு எதிரான போராட்டம், பாசிசவாதம் மற்றும் ஏதேச்சதிகாரவாதத்தின் அதிகரிப்பு, முன்பினும் மிகப் பெரியளவிலான செல்வவள திரட்சி, இணைய தணிக்கை, சுற்றுச்சூழல் சீரழிவுக்கு எதிரான போராட்டமும் —அசான்ஜ் மற்றும் மானிங் போன்ற வர்க்க போர் கைதிகளின் பாதுகாப்பும்— பிரிக்கவியலாதவாறு முதலாளித்துவத்திற்கு எதிராக சோசலிசத்திற்கான போராட்டத்துடன் பிணைந்துள்ளது.
சோசலிசம் என்றால் என்ன, அதை எவ்வாறு அடைவது? என்பதே உலகெங்கிலுமான மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முகங்கொடுக்கும் மத்திய கேள்வியாகும். தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று அனுபவங்களில் இருந்து பெறப்படும் அடிப்படை அரசியல் படிப்பினைகளே போராட்டத்தினுள் நுழையும் புதிய தலைமுறைக்குக் கல்வியூட்ட அடிப்படையாக இருக்க வேண்டும். தொழிலாள வர்க்கம், முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு புரட்சிகர போராட்டத்தில், ஒடுக்கப்பட்டவர்கள் அனைவரையும் அதன் பின்னால் அணிதிரட்டி, விடயங்களை அதன் சொந்தக் கரங்களில் எடுக்க வேண்டும்.
இந்த மிக அவசரமான பணிகளைச் செய்வதற்கான இன்றியமையா கருவி புரட்சிகர கட்சியாகும், அதாவது உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவாகும் (ICFI). 80 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்கு முன்னர் ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகத்திற்கு எதிராக மார்க்சிச மரபியத்தைப் பாதுகாக்கும் அடிப்படையில் லியோன் ட்ரொட்ஸ்கியால் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டது. சம்பவங்கள் அதன் வரலாற்று முன்னோக்கை நிலைநாட்டி உள்ளன.
இந்த மே தினத்தில், மே 4 மற்றும் 5 இல் சர்வதேச மே தின இணையவழி கூட்டத்தில் பங்கெடுக்க பதிவு செய்யுமாறும் மற்றும் ICFI ஐ கட்டமைப்பதில் இணையுமாறும் உலகெங்கிலுமான அனைத்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
*** *** ***
ஐந்தாவது வருடாந்தர சர்வதேச மே தின இணையவழி பேரணி கிழக்கத்திய நாள் நேரப்படி மே 4 சனிக்கிழமை மாலை 8 மணிக்கு (ஆஸ்திரேலியா, சிட்னியில் மே 5 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு), இந்திய, இலங்கை நேரப்படி மே 5, ஞாயிறு அதிகாலை 5:30 மணிக்கும் உலகெங்கிலும் நேரடியாக ஒலிபரப்பப்படும். இதில் கலந்து கொள்ள பதிவு செய்யுமாறும் திட்டமிடுமாறும் நாங்கள் அனைத்து தொழிலாளர்களையும் இளைஞர்களையும் வலியுறுத்துகிறோம்.