Print Version|Feedback
Half of all land in England owned by less than one percent of the population
இங்கிலாந்தில் உள்ள மொத்த நிலத்தில் பாதி, மக்கள் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு சொந்தமாக உள்ளது
By Margot Miller
27 April 2019
இங்கிலாந்து பூமியிலுள்ள மிகப்பெரிய சமத்துவமற்ற சமூகங்களில் ஒன்றாகும். இங்கிலாந்தில் உள்ள அனைத்து நிலப்பகுதிகளில் அரைவாசியானது மக்கள் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானோரின் தனிப்பட்ட சொத்தாக உள்ளது என புதிய ஆராய்ச்சியின் மூலம் இந்த அளவு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒரு சதவீதம் வெறும் 25,000 மக்களுக்கு சமன் ஆகும். ஐக்கிய இராச்சியத்தின் மொத்த பரப்பளவில் அரைவாசிக்கும் அதிகமானதை (53 சதவீதம்) இங்கிலாந்து கொண்டுள்ளது.
யாருக்கு இங்கிலாந்து சொந்தம்?: எங்கள் பசுமை மற்றும் இனிமையான நிலத்தை நாம் எப்படி இழந்தோம், எப்படி அதை மீண்டும் பெறுவது? என்ற Guy Shrubsole இன் புதிய புத்தகத்தில் அந்த ஆய்வு காணப்படுகிறது. Shrubsole, Friends of the Earth என்ற வலையமைப்பின் எழுத்தாளரும், பிரச்சாரகரும் மற்றும் புலனாய்வாளரும் ஆவார்.
நிலத்தின் பெரும்பகுதிக்கு ஆளும் உயரடுக்கு சொந்தமானது என்பது பரந்தளவில் புரிந்து கொள்ளப்பட்டாலும், இந்த உண்மை பொதுவாக இரகசியமாக மறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இலத்திரனியல் படம் வரைதலில் புதிய முன்னேற்றங்கள், அதேபோல் சட்டபூர்வமான தகவல் சுதந்திரத்தின் (FOI) கீழ் பிரச்சார குழுக்களினால் வெளியிடப்பட்ட தரவுகளின் படி, பின்வரும் புள்ளிவிவரங்களை வெளிப்படுத்துவதற்கு ஆராய்ச்சியால் சாத்தியமானது:
பிரபுத்துவத்தினரும் மற்றும் அவர்களினது குடும்பத்தினரும் இன்னும் 30 சதவிகித நிலங்களை சொந்தமாக வைத்துள்ளனர்.
18 சதவிகிதம் நிறுவனங்களுக்கு சொந்தமானது.
17 சதவிகிதம் நிதியதன்னலக்குழுக்கள் மற்றும் வங்கியாளர்களின் வசம் உள்ளது.
முடிக்குரிய அரச குடும்பம் 1.4 சதவிகிதத்தையும் மற்றும் இங்கிலாந்து தேவாலயம் 0.5 சதவிகிதத்தையும் சொந்தமாகக் கொண்டுள்ளன
ஆகையால், சமுதாயத்தின் இந்த சிறிய தட்டினர் மொத்த நிலத்தில் கிட்டத்தட்ட 70 சதவிகிதத்தை தனிப்பட்ட ரீதியில் சொந்தமாக்கியுள்ளனர். மேலும், Shrubsole கருத்துப்படி, பிரபுத்துவத்திற்கு சொந்தமான சதவீதம் கணிசமான அளவிற்கு குறைவான மதிப்பீடாக உள்ளது என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். இங்கிலாந்திலும் வேல்ஸ்லிலும் விற்பனை செய்யும் சொத்து மற்றும் நிலத்தை பதிவு செய்யும் ஒரு தரவுத்தளமான Land Registry இல் 17 சதவீத நிலப்பகுதியின் உரிமை வெளியிடப்படாமல் உள்ளது. ஏனெனில் இது திறந்த சந்தையில் விற்கப்படவில்லை. இது பெரும்பாலும் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடந்து செல்லும் பிரபுத்துவத்தின் சொத்து ஆகும். இந்த சதவிகிதம் பல நூற்றாண்டுகளாக மாறவில்லை.
முடியாட்சிக்குச் சொந்தமான பல நிலத் துண்டுகளின் சேர்க்கையே சாண்ட்ரிகம், நோர்ஃபோக்கில் உள்ள மகாராணியின் தனிப்பட்ட எஸ்டேட்டான Crown Estate ஆகும். குரோன்வால் மற்றும் லான்காஸ்டர் இற்கு உட்பட்ட பிரதேசங்கள் அரச குடும்ப உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய அளவில் வருமானத்தை வழங்குகிறது.
இங்கிலாந்து மண்ணில் வெறும் 8.5 சதவீதம் அரச துறைக்குச் சொந்தமாக உள்ளது, அதற்கு அடுத்தபடியாக வெறும் ஐந்து சதவிகிதம் வீட்டு உரிமையாளர்களுக்குச் சொந்தமானது. தேசிய அறக்கட்டளை உட்பட பாதுகாப்பு அறக்கொடைகளுக்கு இரண்டு சதவீதங்கள் சொந்தமானவை.
வரி செலுத்துதல்களை தவிர்க்க அல்லது பணமாற்று மோசடி நோக்கங்களுக்காக சில வெளிநாடுகளில் உள்ள அல்லது வெளிநாடுகளில் செயற்படுபவை உட்பட இங்கிலாந்தில் உள்ள பெரும்பாலான நிலங்களைக் கொண்டிருக்கும் முதல் 100 நிறுவனங்களை Shrubsole பட்டியலிடுகிறார். 2005 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்திலும், வேல்ஸிலும் நிலத்தை வாங்கிய வெளிநாடுகளில் செயற்படும் நிறுவனங்களின் மிகப் பெரிய தரவுகளை FOI கோரிக்கைக்குப் பின்னர், Private Eye இன் புலனாய்வு பத்திரிகையாளர் கிறிஸ்டியான் எரிக்ஸனுக்கு Land Registry அனுப்பியது. இதில் 170 பில்லியன் பவுண்டுகள் (220 பில்லியன் அமெரிக்க டாலர்) பெறுதியான 113,119 ஹெக்டர் நிலங்கள் உள்ளடங்கியுள்ளது.
1989 ஆம் ஆண்டில் பழமைவாத அரசாங்கம் நீர் தொழிற்துறையை தனியார்மயமாக்கியபோது உருவாக்கப்பட்ட United Utilities நிறுவனம் நில உரிமை நிறுவனங்களின் பட்டியலில் உயர் மட்டத்தில் காணப்படுகிறது. அதனது நீர்த்தேக்கங்களை சுற்றியுள்ள பெருமளவான நிலப்பகுதி அந் நிறுவனத்திற்குச் சொந்தமானது.
பிரெக்ஸிட்-ஆதரவு தொழிலதிபர் சேர் ஜேம்ஸ் டைசன் இந்த பட்டியலில் உயர் நிலையில் உள்ளார். அவர் பல பெரிய எஸ்டேட்டுகள் மற்றும் Beeswax Dyson பண்ணை ஆகியவற்றைக் கொண்டுள்ளார். இங்கிலாந்தின் மிகப் பெரிய பல்பொருள் அங்காடி சங்கிலியான டெஸ்கோ, டாட்டா ஸ்டீல் மற்றும் வீடமைப்பாளர் Taylor Wimpey ஆகியவை மிகப் பரந்த நிலங்களைச் சொந்தமாகக் கொண்ட மற்றைய நிறுவனப் பெயர்கள் ஆகும்.
கார்டியனில் வெளியிடப்பட்ட, யாருக்கு இங்கிலாந்து சொந்தம்? என்பதில் இருந்து ஒரு பகுதியில், Shrubsole நில உரிமையாளரான Peel Holdings மற்றும் அதன் பல துணை நிறுவனங்களின் பரந்த நலன்களைப் பற்றி கலந்துரையாடுகிறார். அந் நிறுவனம் நாடளாவிய ரீதியில் மொத்தமாக 13,000 ஹெக்டர் உள்ள 1,000 பாரிய நில துண்டுகளை கொண்டுள்ளது. இதனுடைய நிலப்பகுதி, இங்கிலாந்தின் வடமேற்குப் பகுதியில், லிவர்பூலில் உள்ள John Lennon airport இலிருந்து, Lancashire இனை பிரிக்கும் நிலப்பரப்பினூடாக, இங்கிலாந்தின் மிகப்பெரிய காற்றாலை பண்ணைகளில் ஒன்று, வணிக வளாகங்கள் மற்றும் லிவர்பூல் துறைமுகம் உள்ளிட்ட துறைமுகங்கள் வரை பரந்துள்ளது.
BBC மற்றும் ITV இன் முக்கிய வடக்கு மையமான சால்ஃபோர்டில் 15 ஹெக்டர் MediaCity UK இன் அபிவிருத்தியாளர் பீல் இற்கு சொந்தமாகும். இது 1993 ஆம் ஆண்டு பீல் வாங்கிய 36 மைல் மான்செஸ்டர் கப்பல் கால்வாய் இற்கு அருகே உள்ளது.
நிறுவன வலைத் தளத்தில் Peel Holdings மற்றும் அதன் துணை நிறுவனங்களையும் Shrubsole தேடினார். "Russian dolls சங்கிலி போலவே, ஒன்று மற்றொன்றுடன் உள்ளே பிணைந்துள்ள" ஒரு நிறுவனம் வேறொரு நிறுவனத்திற்கு சொந்தமாக இருப்பதால் வெளிப்படைத்தன்மை குறித்து ஒரு திட்டமிட்ட பற்றாக்குறையை இது வெளிப்படுத்தியது.
"Peel Holding s... எல்லா இடங்களிலும் பெருநிறுவன நில உரிமையாளர் உள்ளனர் என்பதற்கு எடுத்துக்காட்டாகும்" என்று Shrubsole தொடர்ந்து கூறுகிறார். மேலும் பாரியளவு பணத்தை கொண்டுள்ள நிறுவனங்கள் திட்டமிடும் முறைகளை பெரும்பாலும் தடுத்து பணப்பற்றாக்குறையுள்ள நகரசபைகளையும் தன்னார்வ சமூக உதவிக் குழுக்களையும் மீறி செயற்படுகின்றன.
மத்திய மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களை உள்ளடக்கிய அரசதுறை, அவர்களுக்குச் சொந்தமான நிலத்தை பற்றி இரகசியமாக வைத்திருப்பதில்லை. இது ஏனெனில் சிக்கனக் வெட்டுக்களை ஈடுகட்டுவதற்கு திறந்த சந்தையில் விற்பனை செய்வதற்கு விளம்பரப்படுத்த அவர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாலும் இதனால் இன்னும் கூடுதலான நிலங்கள் தனியார் கைகளுக்கு மாற்றப்படுகின்றது.
அரச நில விற்பனை எனப்படுவது வீடமைப்பு அல்லது சுற்றுச்சூழல் மேம்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட முடியாது. கடந்த காலத்தில், நகரங்கள், நகர்ப்புறங்களிலும் உள்ள பாரியளவு பொது இடங்களும் பூங்காக்களும் தனியார் துறையினரால் உள்வாங்கப்பட்டுள்ளன. பின்னர், இந்த நிலப்பரப்பு பகுதிகள் பொது மக்களுக்கும், குறிப்பாக பொதுமக்கள் எதிர்ப்புகளுக்கும் பயன்படுத்தப்பட முடியாது.
1980 ல், பழமைவாதப் பிரதமர் மார்கரெட் தாட்சர் "வாங்குவதற்கான சட்டஉரிமை" திட்டத்தின் கீழ் பொது வீட்டுவசதி விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டதுடன் நகரசபைகள் வீடு கட்டுதல் கடுமையாக வீழ்ச்சியுற்றது. பிரிட்டன் வெளிப்படையாக "வீட்டு உரிமையாளர்களின் தேசமாக" மாறியது. இருப்பினும், அத்தகைய வீடுகள் சிறிய "காலணிப்பெட்டியளவு" அலகுகளைக் கொண்டுள்ளமையால் இது பிரிட்டனில் உள்ள 15.1 மில்லியன் வீட்டு உரிமையாளர்களுக்கு வெறும் 5 சதவிகிதம் நிலமே சொந்தமாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
இங்கிலாந்தின் மக்கள் தொகை முழுவதும் நிலம் சீராக விநியோகிக்கப்பட்டிருந்தால், ஒவ்வொரு நபருக்கும் மத்திய லண்டனில் பாராளுமன்ற சதுக்கத்தின் அரைவாசியளவான அரை ஏக்கருக்கும் (0.2 ஹெக்டர்) அதிகமான நிலத்தைக் கொண்டிருப்பார்" என்று கார்டியன் குறிப்பிட்டது.
சொந்த வீடு வாங்க விரும்புவோர் அது அமைந்துள்ள நிலத்தை சொந்தமாகக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அது குத்தகைக்கு மட்டும் உரியது. இது நிலத்தின் மீது உரிமை இல்லை ஆனால் நீண்ட கால குத்தகைக்குரியது என்பதை உறுதிப்படுத்துகிறது. இங்கிலாந்திலும் வேல்ஸ்லிலும் உள்ள சொத்துக்களின் 27 சதவிகிதம் குத்தகை சொத்துக்கள் ஆகும். குத்தகை காலத்திற்கான உரிமையாளர் யாரோ அவருக்கு வருடாந்த நில வாடகைக்கு பணம் செலுத்தப்படும். குத்தகை முடிந்தவுடன் இறைமைதாரர் வீடு மற்றும் நிலத்திற்கு உரிமையாளராகி, அனைத்திற்கும் உரிமையாளர் ஆவார்.
குத்தகை சொத்துக்களை உருவாக்குவதில் வீடுகட்டுவோர் ஒரு பெரிய வருவாயை ஈட்டுகின்றனர். புதிய கட்டடங்களை குத்தகைக்கு எடுத்தல் 1995 ஆம் ஆண்டில் 7 சதவீதத்திலிருந்து 2016 ஆம் ஆண்டில் 15 சதவீதமாக மாறியதாக ஒரு House of Commons Library அறிக்கை வெளிப்படுத்தியது. ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வாடகைக் கொடுப்பனவு இரட்டிப்பாக்கப்பட்டு குத்தகைக்கு உட்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் இது ஊகவணிகர்களுக்கு விற்கப்படுகிறது.
குத்தகை நில சந்தைகளில் இருந்து பணம் சம்பாதிப்பவர்களுள் ஒன்றான Wallace Estates, ஆயிரக்கணக்கான நில உரிமைகளைக் கொண்டதுடன் ஆண்டு வாடகைக்கு பெரிய குத்தகைகளை விற்பனை செய்கின்றன. Wallace Estates, மூன்றாவது மிக அதிகமான நிலப் பரப்புக்களைக் கொண்டுள்ளதுடன் இது 200 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டுள்ளது. இது தொடர்பான விபரங்கள் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடியதாக இருப்பதுடன், ஒரு அணுகமுடியாத இத்தாலிய நிறுவனத்திற்கு சொந்தமானது.
பரம்பரை வரி அல்லது மூலதன ஆதாய வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்கு நிலத்தை வாங்குதல் கூட வசதியான முதலீடாகும். நிலத்தினை ஊகவாணிபத்திற்கு உள்ளாக்கியமை ஒட்டுண்ணித்தனமான நில வங்கிக்கு வழிவகுத்தது. 1990 களில் மற்றும் 2000 ஆம் ஆண்டின் முற்பகுதியில், டெஸ்கோ, உதாரணத்திற்கு, எதிர்கால புறநகர் வணிக வளாகங்கள் கட்டுமானத்திற்காக பெரிய நிலப் பகுதிகளை வாங்கியது. 15,000 வீடுகள் கட்டுவதற்குப் போதுமான நிலத்தை இந்த வணிக நிறுவனம் கொண்டிருப்பதாக 2014 இல் கார்டியன் மதிப்பிட்டது.
சில நில விற்பனை நிறுவனங்கள் வீடுகட்டுவோருக்கான திட்டமிடல் அனுமதியைப் பெறுவதற்கான வேலைகளைச் செய்வதன் மூலம் வீடமைப்பதற்கு திட்டமிடல் மற்றும் கட்டும்நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதில் நிபுணத்துவம் பெற்றதுடன், இறுதி விற்பனையிலிருந்து தமது பங்கினை எடுத்துக் கொள்கிறது. Gladman நிறுவனம், 2016 ஆம் ஆண்டில் 11.6 மில்லியன் பவுண்டுகள் ஒரு பிரமாண்டமான இலாபம் சம்பாதித்த அதேவேளை அதே ஆண்டில் Gallagher’s 79 மில்லியன் பவுண்டுகள் இலாபம் சம்பாதித்தது.
கட்டிடங்கள் அமைப்தற்காக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அனுமதியளிக்கப்பட்ட தளங்களின் மூன்றில் ஒரு பகுதி இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை என்று கடந்த மாதம் Shelter வீடமைப்பு அறக்கொடை வெளிப்படுத்தியது. மேல்மட்ட பத்து நிலைகளிலுள்ள வீடுகள் உருவாக்குவோர் 400,000 க்கும் அதிகமான வீடுகள் அமைக்கக் கூடியளவு நிலவங்கிகளைக் கொண்டுள்ளனர்.
இங்கிலாந்து ஓய்வூதிய நிதியம் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் பொதுவாக நீண்ட கால முதலீடாக நிலத்தை வாங்குகின்றன. உதாரணமாக, Luton இலிருந்து Cardiff வரை பரந்துள்ள 1,500 ஹெக்டர் நிலம் Legal and General இன் உடைமையாக உள்ளது.
முன்னாள் பழமைவாத பிரதமர் டேவிட் கேமரூனின் நெருங்கிய நண்பரான மேற்கூறப்பட்ட நிறுவனத்தின் தலைவர் டோனி காலெஹர், தனது நில மேம்பாட்டு நிறுவனத்தை மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் 250 மில்லியன் பவுண்டுகளுக்கு உண்மையில் இலாபகரமாக விற்பனை செய்தார் என்று தி டெலிகிராஃப் வெளியிட்டது. இந்த பணம் அவரது மொத்த சொத்துக்களை 850 மில்லியன் பவுண்டுகளுக்கு உயர்த்தியது. பிரிட்டனில் செல்வந்தர்களின் செல்வம் மிகவும் அதிகமாக இருக்கின்றமையால் சண்டே டைம்ஸ் இன் செல்வந்தர்கள் பட்டியலில் காலெஹர் 52 வது இடத்தை மட்டுமே பெற முடிந்தது.