ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

මර්දනයට එරෙහිව උද්ඝෝෂනයේ යෙදුනු යාපනය විශ්ව විද්‍යාලයේ අනධ්‍යන කම්කරුවෝ දඩයමට ලක් වෙති

இலங்கை: ஒடுக்குமுறைக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பழிவாங்கப்படுகின்றனர்

By our correspondent 
25 April 2019

கடமை இடத்தில் பொருத்தப்பட்டிருந்த வருகை பதிவு செய்யும் விரல் அடையாள இயந்திரத்தை சேதமாக்கியதாக குற்றம் சாட்டி யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம், குமாரசாமி நவராசா மற்றும் சண்முகலிங்கம் சசிதரன் ஆகிய இரு பாதுகாப்பு ஊழியர்களை ஏப்பிரல் முதலாம் திகதி முதல் இடைநிறுத்தியுள்ளது.

தம்மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்தும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர் சங்கம் மார்ச் 27 அன்று ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தது. இந்தப் போராட்ட நடவடிக்கைகளில் பாதுகாப்பு ஊழியர் நவராசா ஆர்வத்துடன் பங்கு கொண்டதாலேயே அவரையும் அவரது சாகாவான சசிதரனையும் பழிவாங்கும் நோக்கில் நிர்வாகம் செயற்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.

இயந்திரத்தில் மாத்திரம் கையொப்பமிடுமாறு பல்வேறுவகையில் மிரட்டுதல், மேலதிக நேர வேலைக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நியாயமற்ற நிபந்தனைகளை விதித்தல், பகுதித் துறைத் தலைவர்கள் சிலர் தகுதியற்ற வார்த்தைகளால் ஊழியர்களை அழைத்தல், ஊழியர்கள் மீது குற்றம் கண்டு அவை சம்பந்தமாக முறையான விசாரணைகள் மூலம் உண்மையை கண்டறியாமால், ஊழியர்களின் சேமலாப நிதி மற்றும் பணிக்கொடை என்பவற்றைத் தடை செய்தல் அல்லது குறைத்தல், பதவி உயர்வுகளை தடுத்தல் அல்லது தாமதப்படுத்துதல், மேலதிக நேரக் கொடுப்பனவு, விடுமுறை போன்றவற்றை தடுத்தல் மற்றும் தண்டம் அறவிடல் போன்ற ஒடுக்குமுறைகள் கல்விசாரா ஊழியர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுவதாக கல்விசாரா ஊழியர்கள் கூறுகின்றனர்.

இதற்கும் மேலாக, குறித்த ஊதியத்தை விடக் குறைவான தொகை கிடைக்கும் வகையில் சம்பளப் பட்டியலை தயாரித்தல் மற்றும் காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்தாமை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு கோரியே மார்ச் 27 அன்று தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர்.

பாதுகாப்பு ஊழியர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் அந்த முறைப்பாட்டின் படி பொலிசார் தற்போது மல்லாகம் நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு எதிர்வரும் 25ம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது.

பாதுகாப்பு ஊழியர்கள் மீதான இந்தக் குற்றச்சாட்டுச் சம்பந்தமாக எவ்விதமான ஆதாரமும் நிர்வாகத்தினால் முன்வைக்கப்படாத அதேவேளை, அவர்கள் இயந்திரம் இயங்காத அன்று கடமையில் இருந்தமையே குற்றச்சாட்டுக்கு காரணமாக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் இடை நிறுத்தத்தினை இரத்துச் செய்து, இயந்திரம் பழுதடைந்தமை பற்றி உடனடியாக விசாரணையை ஆரம்பிக்குமாறு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஊழியர் சங்கம் நிர்வாகத்திற்கு அனுப்பிய கடித்தின் பிரகாரம், வளாகத்தின் பிற பகுதிகளிலும் உள்ள இயந்திரங்களும் பழுதடைந்தே உள்ளன. 30 மார்ச் 2019 சனிக்கிழமை அன்று, பிரதிப் பதிவாளர் குறித்த இயந்திரத்தை தனது உதவியாளர்களுடன் திறந்து திருத்த முயன்றுள்ளார், என்றும் அந்த கடிதம் மேலும் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பொது நிர்வாக சுற்றுநிருபத்தின்படி விரிவுரையாளர்களும் இயந்திரத்தில் கையொப்பமிட வேண்டும், ஆனால் இங்கு இயந்திரத்தில் கையொப்பமிடும் கட்டளை கல்விசாரா ஊழியர்களுக்கு மட்டுமே திணிக்கப்பட்டிருப்பதால் ஊழியர்கள் இயந்திரத்தில் கையொப்பமிட மறுத்துள்ளனர். நிர்வாகம் கையொப்பமிடும் புத்கங்கங்களை அகற்றியுள்ளதால் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கம் ஒரு புத்தகத்தினை வைத்து அதில் ஊழியர்கள் கையொப்பமிட்டு வருகின்றார்கள்.

கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் சி. கலாராஜ், “நாம் இந்த வேலை இடை நிறுத்தத்தினைக் கண்டிக்கின்றோம், இது இயந்திரம் பழுதடைந்தமை கூட சரியானவகையிலும் சுயாதீனமாக முறையிலும் உறுதிப்படுத்தப்படாமல் ஊழியர்கள் மீது வேண்டுமென்றே மேற்கொண்ட தாக்குதலாகும்,” எனக் கூறினார்.

தங்களை தரங் குறைந்தவர்களாகவே நிர்வாகம் கருதுவதாக இன்னொரு ஊழியர் கூறினார். “அதனால் தான் அனைத்து நடவடிக்கைகளிலும் பாகுபாடு காட்டி ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றது. தங்கள் உரிமைகளுக்காக நிர்வாகத்துக்கு எதிர்ப்புக் காட்டும் அனைவரையும் வேலையில் இருந்து அகற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கையாகவே இதைக் கருதுகின்றோம்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மீதான தாக்குதலானது, நாடுபூராவும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மீதான தாக்குதலதும், ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்தின் மீதுமான தாக்குதலின் பாகமாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் பேரில் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் முன்னெடுக்கும் சிக்கன நடவடிக்கைகளில் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற நலன்புரி சேவைகளுக்கான செலவுகள் வெட்டப்பட்டுள்ளதோடு அதிக வேலைச் சுமைகள் சுமத்தப்பட்டு வருகின்றன.

பெருவிரல் இயந்திரங்கள் பொருத்தப்படுவது வேலைச் சுமைகளை அதிகரிப்பதற்கும் தொழிலாளர்களை ஒழுக்கப்படுத்துவதற்குமான நடவடிக்கையாகும். இத்தகைய வழிமுறைகள் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் ஒத்துழைப்புடனேயே முன்னெடுக்கப்படுகின்றன.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சங்க சம்மேளனத்தின் பிரதிநிதிகள், கடந்த ஏப்பிரல் 10 அன்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்து பாதுகாப்பு ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவது பற்றியும் வழக்கை விலக்கிக்கொள்வது பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தியது. பல்கலைக்கழக நிர்வாகமோ மே 2 முதல் இயந்திரத்தில் விரல்பதிக்கும் நடவடிக்கையை தொடங்குமாறும் அதன் பின்னர் ஏனையவற்றைப் பற்றி யோசிக்கலாம் என பதிலளித்துள்ளது. சம்மேளனத்தின் பிரதிநிதிகள் அங்கு நடந்ததை தொழிலாளர்களிடம் விளக்கியதை மட்டுமே செய்தனர்.

குறிப்பாக இந்த பெருவிரல் இயந்திர முறையை அமுல்படுத்துவதை தொழிலாளர்கள் எதிர்த்தபோது, அந்த எதிர்ப்பை திசை திருப்புவதில் இந்த தொழிற்சங்க சம்மேளனம் முன்னிலையில் நின்றது. 2011 இல் மொரடுவை பல்கலைக் கழகத்தில் பெருவிரல் அடையாள இந்திரத்தை ஸ்தாபிக்க திட்டமிடப்பட்ட போது அதற்கு எதிராக தொழிலாளர்கள் மறியல் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். அப்போது இயந்திரத்தை பொருத்தினால் மேலதிக நேர கொடுப்பனவுகள் வழங்குவது முறையாக இடம்பெறும் எனக் கூறி, தொழிற்சங்கம் இந்த போராட்டத்தை குழப்பியுள்ளது.

கடந்த ஆண்டு ஊழியர்களின் எதிர்ப்பையும் மீறி இந்த விரல் அடையாள இயந்திர முறையை “மிகவும் விரிவாக்குவதற்கு”, அதாவது இயந்திரங்களை பிரதான கதவின் அருகில் பொருத்தாமல், அந்தந்த பிரிவுகளில் இயந்திரங்களை பொருத்தி, ஊழியர்களை மிகவும் நெருக்கடிக்குள் தள்ளுவதற்காக இந்த தொழிற்சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

பல்கலைக்கழக கல்விசாரா தொழிலாளர்கள் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு நீடித்த ஊதியப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். எனினும் தொழிற்சங்கம் எந்த வெற்றியும் இல்லாமல் இந்த போராட்டத்தை காட்டிக் கொடுத்தது.

இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் உள்ள ஏனைய தொழிற்சங்கங்களைப் போலவே பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் தொழிற்சங்கமும், முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தினதுன் அதன் அரசாங்கங்களினதும் நலன்களுக்காகவே மேலும் மேலும் சேவை செய்து வருகின்றது.

தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு போராட்டத்தையும் முன்நோக்கி நகர்த்த வேண்டுமெனில், தொழிற்சங்கங்களில் இருந்து விலகி, தமக்கே உரிய சொந்த அமைப்புக்களை, அதாவது தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை ஸதாபித்துக்கொள்வது அவசியமாகும்.