Print Version|Feedback
Washington threatens new attack on Syria amid US war buildup in Persian Gulf
பாரசீக வளைகுடாவில் அமெரிக்க போர் கட்டமைப்புக்கு இடையே, சிரியாவை வாஷிங்டன் புதிய தாக்குதலுடன் அச்சுறுத்துகிறது
By Bill Van Auken
22 May 2019
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு "உத்தியோகப்பூர்வமாக முடிவு" கட்ட அச்சுறுத்தி வெறும் ஒருசில நாட்களுக்குப் பின்னர், சிரியாவின் வடமேற்கு மாகாணமான இட்லிப்பில் அல்-கொய்தா தொடர்புபட்ட போராளிகள் குழுக்களுக்கு எதிராக டமாஸ்கஸ் தொடுத்து வருகின்ற இராணுவ நடவடிக்கையில், அது இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வாஷிங்டன் சிரியாவுக்கு எதிராக மீளப்புதுப்பிக்கப்பட்ட இராணுவ ஆக்ரோஷத்தைக் கொண்டு அச்சுறுத்தி உள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ, பாட்ரிக் ஷானஹன், தற்காலிக அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் மற்றும் அமெரிக்க தளபதிகளுக்கான தலைமை தலைவர் ஜெனரல் ஜோசப் டன்ஃபோர்ட் ஆகியோர் செவ்வாயன்று, மூடிய கதவுக்களுக்குப் பின்னால், அமெரிக்க பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை உறுப்பினர்களுக்கு அடுத்தடுத்து வழங்கிய ஈரான் போர் முனைவு மீதான விளக்க உரைகளைத் தொடர்ந்து இந்த புதிய அமெரிக்க அச்சுறுத்தல்கள் வந்துள்ளன.
வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ
இந்த விளக்கங்கள் வழங்குவதற்கான வேட்கை, “அமெரிக்க நலன்கள்" மீது அல்லது பாரசீக வளைகுடா பிராந்திய அதன் கூட்டாளிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஈரானிய அச்சுறுத்தல்களைக் குற்றஞ்சாட்டி, இட்டுக்கட்டப்பட்ட "உளவுத்தகவலை" பாதுகாப்பதற்காக இருந்ததாக செய்திகள் குறிப்பிட்டன, அப்பிராந்தியத்தில் பாரியளவிலான அச்சுறுத்தும் அமெரிக்க இராணுவ நிலைநிறுத்தல்களுக்கு தெஹ்ரானின் திட்டங்கள் என்று கூறப்படுபவை குறுக்கீடாக இருப்பதாக கூறும் வாதங்களும் அதனுடன் சேர்ந்திருந்தன.
இந்த விளக்க உரை கூறப்பட்டுக் கொண்டிருந்தபோதே கூட, அமெரிக்க வெளியுறவுத்துறை மே 19 இல் இட்லிப்பில் குளோரின் விஷவாயுத் தாக்குதல் என்று குற்றஞ்சாட்டப்படும் ஒரு சம்பவம் குறித்து அதற்கு தகவல் கிடைத்திருப்பதாக கூறியும், அத்துடன் "அமெரிக்காவும் மற்றும் நமது கூட்டாளிகளும் விரைவாக உரிய முறையில் விடையிறுப்போம்" என்று ஓர் அச்சுறுத்தலையும் சேர்த்து ஓர் அறிக்கை வெளியிட்டது.
“அசாத் ஆட்சி நடத்தி வருகின்ற இரசாயன ஆயுத தாக்குதல்களுக்கு மற்றவர்கள் மீது பழி சுமத்தும் பொய்யான கதையாடல்களை இட்டுக்கட்ட அசாத் ஆட்சியும் ரஷ்யாவும் தொடர்ந்து பொய் தகவல்களுடன் பிரச்சாரம் செய்கின்றன" என்றவொரு குற்றஞ்சாட்டை உள்ளடக்கி வெளியுறவுத்துறை ஓர் உத்தியோகபூர்வ கடிதம் வெளியிட்டது.
அந்த வரிகள், ஐயத்திற்கிடமின்றி, டமாஸ்கஸ் புறநகர் தௌமா மீது ஏப்ரல் 2018 இரசாயன தாக்குதல் குற்றச்சாட்டு மீது கவனம் செலுத்தி இருந்த, இரசாயன ஆயுதங்கள் தடைகளுக்கான அமைப்பு OPCW இன் மூத்த புலனாய்வாளர் ஒருவர் தயாரித்த ஆவணத்தின் அதிர்ச்சியூட்டும் கசிவுக்கு விடையிறுப்பாக சேர்க்கப்பட்டிருந்தன. சிரியாவுக்கு எதிராக அமெரிக்க தலைமையிலான ஏவுகணை தாக்குதல்களுக்குச் அச்சம்பவம் சாக்குபோக்காக பயன்படுத்தப்பட்டிருந்தது.
அந்த ஆய்வானது, விஷவாயு உருளைகள் ஓர் அடுக்குமாடி வீட்டு மொட்டைமாடியில் கண்டறியப்பட்டதை நிரூபித்துக் காட்டியதுடன், 49 பேர் கொல்லப்பட்டதற்கு சிரிய அரசாங்கத்தின் மீது பழிசுமத்தி குற்றஞ்சாட்டப்பட்டதைப் போல வான்வழியில் இருந்து அவை வீசப்படவில்லை என்றும், மாறாக அவற்றை யாரோ தான் அங்கே வைத்திருக்க வேண்டும் என்றும் குற்றஞ்சாட்டி, அவ்விதத்தில் அது அமெரிக்க தாக்குதலுக்குச் சாக்குபோக்கை வழங்குவதற்காக, அந்த சம்பவத்தை அரங்கேற்றிய மேற்கத்திய-ஆதரவிலான "கிளர்ச்சியாளர்களின்" குற்றகரத்தன்மையைச் சுட்டிக்காட்டியது.
வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டாளிகள் இட்டுக்கட்டும் சிரியாவில் புதிய இரசாயன ஆயுத தாக்குதல் சம்பவங்கள், ஈரானுக்கு எதிராகவோ அல்லது வேறெந்த முன்னணிக்கு எதிராகவோ அமெரிக்க பிரச்சாரத்தை முன்னெடுக்க ஒரு வழிவகையாக சேவையாற்றும்.
அணுசக்தி தகைமை கொண்ட B-52s மற்றும் பேட்ரியாட் ஏவுகணை குண்டுகள் உட்பட ஒரு குண்டுவீசி செயற்படை, USS ஆப்ரகாம் லிங்கன் தலைமையிலான விமானந்தாங்கி போர்க்கப்பலின் போர்கப்பல் படைப்பிரிவை அப்பிராந்தியத்தில் வாஷிங்டன் நிலைநிறுத்தியதைப் பின்தொடர்ந்து, சிரியா மீதான இந்த அச்சுறுத்தல் வருகிறது.
இந்த விமானந்தாங்கி போர்க்கப்பல் படைப்பிரிவு, ஈரானிய கடற்பகுதிக்கு அருகாமையில் அதிக ஆத்திரமூட்டும் பல போர் ஒத்திகைகளில் ஈடுபட்ட அமெரிக்க சிறுவிமானங்கள், போர்விமானங்கள் மற்றும் தரையிறங்கும் தளங்களைக் கொண்ட நீரிலிருந்தும் நிலத்திலிருந்தும் தாக்கும் போர்க்கப்பல்களின் ஒரு செயற்படையுடன் சேர்ந்திருந்தது. அந்த ஒத்திகைகள் குறித்து அமெரிக்க கப்பற்படை தளபதி கூறுகையில் அவை "அச்சுறுத்தல்களுக்கு விடையிறுப்பதற்காக நமது தாக்கும்திறனையும் செயல்விரைவையும் அதிகரிப்பதை" நோக்கமாக கொண்டவை என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, ஈரானுடனான ஒரு முற்றுமுதலான போருக்கு வெளிப்படையான தயாரிப்பாக அப்பிராந்தியத்திற்கு ஏறக்குறைய 120,000 அமெரிக்க துருப்புகளை அனுப்புமாறு அழைப்புவிடுத்து பென்டகன் போர் திட்டங்களை வரைந்துள்ளது—இந்த எண்ணிக்கையானது ஈராக் படையெடுப்புக்கு முன்னதாக அப்பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்ட அதே எண்ணிக்கையாகும்.
அப்பிராந்தியத்தில் நடைமுறையளவில் ஏதேனுமொரு சம்பவம் —அது நிஜமாக ஏற்படுவதாக இருந்தாலும் சரி அல்லது தோற்றுவிக்கப்பட்டதாக இருந்தாலும் சரி—அமெரிக்காவின் ஈராக்கிய போருடன் ஒப்பிட்டால் மனிதப் படுகொலைகளில் அதையும் விஞ்சி விடக்கூடிய ஒரு கொடூரமான இராணுவ மோதலைத் தூண்டிவிடும் என்கின்ற நிலையில், இத்தகைய இராணுவக் கட்டமைப்புகள் மத்திய கிழக்கை மீண்டுமொருமுறை கத்தி முனையில் நிறுத்தி உள்ளன.
ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவித் சரீஃப் செவ்வாயன்று தெரிவிக்கையில், வளைகுடவில் அதன் இராணுவ கட்டமைப்புகளைக் கொண்டு வாஷிங்டன் "ஓர் அபாயகரமான விளையாட்டை விளையாடி" வருகிறது என்றார்.
“குறிப்பாக அசம்பாவிதங்களில் ஆர்வம் கொண்டவர்கள் இருப்பதால், ஒரு சிறிய நீர்வழிச்சாலையில் இத்தகைய அனைத்து இராணுவ உடைமைகளையும் நிலைநிறுத்தி இருப்பதே அசம்பாவிதத்திற்கு இழுப்பதாக உள்ளது. மிக அதிக கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளது, அமெரிக்கா மிகவும் மிகவும் ஆபத்தான விளையாட்டை விளையாடிக் கொண்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம்,” என்று சரீஃப் தெரிவித்தார்.
எந்தவித ஆதாரமும் இல்லாமல், வாஷிங்டன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) கடற்பகுதிக்கு அருகில் கடந்த வாரம் சவூதிக்குச் சொந்தமான இரண்டு எண்ணெய் கப்பல்கள் உட்பட நான்கு கப்பல்களைச் சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்படும் சம்பவத்திற்கும் அத்துடன் பாக்தாத்தில் பலமாக பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலத்திற்குள் Katyusha ராக்கெட் வீசப்பட்டதற்கும், இது அமெரிக்க தூதரகத்திற்கு ஒரு மைலில் மூன்றில் ஒரு பங்கு தூரத்தில் விழுந்த நிலையில், அதையும் சேர்த்து ஈரான் மீது பழிசுமத்த முயல்கிறது.
முன்னதாக செவ்வாயன்று பெயர்வெளியிடாத ஒரு குழு, ஈராக்கில் ஒரு சிறை கைதியான அலி மன்சூர் மொஹமத்தை 2008 இல் நீதிவிசாரணையின்றி படுகொலை செய்ததற்காக 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமெரிக்க இராணுவ லெப்டினென்ட் இற்கு ட்ரம்ப் பூரண மன்னிப்பு வழங்கியதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக அந்த ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி அதற்கு பொறுப்பேற்றது.
நான்காண்டுகளுக்கு முன்னர் அண்மித்து மனிதயினப் படுகொலைக்கு நிகரான சவூதி தலைமையிலான மற்றும் அமெரிக்க ஆதரவிலான யேமனுக்கு எதிரான போர் ஒரு முழு அளவிலான போரை ஏற்படுத்தக்கூடிய மற்றொரு வெடிமுனையாக உள்ளது, அதில் 80,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், அதேவேளையில் சுமார் 10 மில்லியன் மக்கள் பட்டினியின் விளிம்புக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் மதிப்பிடப்படுகிறது.
யேமனில் பெரும்பாலான பகுதியைக் கட்டுப்படுத்துகின்ற ஹௌதி-கிளர்ச்சி இயக்கமும் சவூதி முடியாட்சியும் இரண்டுமே, யேமனில் இருந்து வீசப்பட்ட ஒரு வெடிக்கும்-அளவிலான டிரோன் சவூதி அரேபியாவின் தெற்கு நாஜ்ரன் பிரதேசத்தின் விமான நிலையத்தைத் தாக்கியதாக செவ்வாயன்று குறிப்பிட்டன. ஹௌதி நடத்தி வரும் அல்-மசிராஹ் தொலைக்காட்சி சேனல் குறிப்பிடுகையில் யேமனில் பாரிய பெரும்பான்மை அப்பாவி மக்களைக் காயப்படுத்திய சவூதி விமானத் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக அத்தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டது.
சவூதி ஆட்சி அந்த டிரோன் தாக்குதலை "அப்பாவி மக்களை இலக்கில்" வைத்த ஒரு தாக்குதலாக முத்திரைக் குத்தியதுடன், ஹௌதியர்களை "ஈரானின் பயங்கரவாத போராளிகள் குழு" என்று குறிப்பிட்டது. யதார்த்தத்தில், அந்த விமான நிலையம் ஓர் இராணுவ தளத்தின் இடமாகும் அங்கிருந்து தான் யேமன் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன. சவூதி தலைமையிலான குற்றகரமான போருக்கு உதவுவதற்காக முன்னர் அங்கே தான் அமெரிக்க துருப்புகள் நிறுத்தப்பட்டிருந்தன, ஆனால் டிரோன் தாக்குதல் நடந்த போது அங்கே யாரும் இருக்கவில்லை என்று பென்டகன் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஹௌதியர்கள் தெஹ்ரானின் ஒரு பினாமி என்ற வாதம் அப்பட்டமான பொய் என்ற போதும், வாஷிங்டனும் ரியாத்தும் இரண்டுமே அதையே திரும்ப திரும்ப இடைவிடாது கூறுகின்றன.
சிரியா மற்றும் ஈரான் இரண்டுக்கும் எதிரான ஆத்திரமூட்டும் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை இரண்டினது பெரும்பான்மையினரை உள்ளடக்கிய இருகட்சிகளது காங்கிரஸ் குழு ஒன்று, அப்பகுதியில் அதுவும் குறிப்பாக சிரியாவில் இன்னும் ஆக்ரோஷமான கொள்கையை ஏற்க வலியுறுத்தி ஜனாதிபதி ட்ரம்புக்கு ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டு அனுப்பியது.
ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்துடனும் அத்துடன் ஈரான் மற்றும் ரஷ்யாவுடனும் மோதலை தீவிரப்படுத்தியும் அந்நாட்டின் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை நிபந்தனையின்றி ஆதரித்தும், ட்ரம்ப் நிர்வாகம் சிரியாவில் ஒரு பலமான இராணுவ பிரசன்னத்தைப் பேண வேண்டுமென அக்கடிதம் கோருவதாக இருந்தது.
பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை இரண்டினதும் முன்னணி ஜனநாயக கட்சியினர் உள்ளடங்கலாக காங்கிரஸின் அண்மித்து 400 அங்கத்தவர்கள் அதில் கையெழுத்திட்டிருந்தனர். அக்கடிதம் பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரங்களுக்கான குழு தலைவர் Eliot Engel மற்றும் அதன் இரண்டாம் நிலை முக்கிய அங்கத்தவர் Michael McCaul, செனட்டின் வெளியுறவுகள் குழுவின் தலைவர் செனட்டர் James Risch மற்றும் அதன் இரண்டாம் நிலை முக்கிய அங்கத்தவரான செனட்டர் Bob Menendez ஆகிய பிரதிநிதிகளின் பெயரில் அனுப்பப்பட்டது.
சிரியாவில் அல் கொய்தா மற்றும் ISIS தொடர்ந்து இருந்து வருவதாக சுருக்கமாக குறிப்பிட்ட அக்கடிதம், "ஈரானிய ஆட்சியின் அச்சுறுத்தும் நடத்தை" மற்றும் அந்நாட்டில் "ரஷ்யாவின் நிலைகுலைக்கும் பாத்திரம்" குறித்து கவனம் செலுத்தும் குற்றச்சாட்டுக்களை மையப்படுத்தி இருந்தது. அது, “அமெரிக்க நலன்களுக்கும், இஸ்ரேலும் மற்றும் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரப்பாட்டுக்கும் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை நிறுத்துவதற்காக" நிர்வாகம் "சிரியாவில் ஈரான் மற்றும் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்காக அவற்றின் மீது அழுத்தத்தை அதிகரிக்க" கோரியது.
அந்த கடிதம், சிரியாவில் அமெரிக்க துருப்புகளின் பிரசன்னத்தை ட்ரம்ப் நிர்வாகம் பேண வேண்டுமென இருகட்சியினரது கோரிக்கையாக இருந்தது, அங்கே உத்தியோகபூர்வமாக 2,000 துருப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இருந்தாலும், ஐயத்திற்கிடமின்றி அது கணிசமானளவுக்கு அதை விட அதிகமாகவே இருக்கும். கடந்த டிசம்பர், ட்ரம்ப் அறிவிக்கையில் அவர் அந்நாட்டிலிருந்து அனைத்து அமெரிக்க படைகளையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார், என்றாலும் ஒருசில வாரங்களுக்குள் நிர்வாகம் அந்த நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கி, சில நூறு துருப்புகள் அங்கே நீடித்திருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டியது.
ட்ரம்பின் பொறுப்பற்ற ட்வீட் சேதிகள் சம்பந்தமாக ஜனநாயகக் கட்சியினர் என்ன மாதிரியான விமர்சனங்களை வைத்தாலும், இந்த காங்கிரஸ் கடிதம் மட்டுமே கூட ஈரானுக்கு எதிரான போர் முனைவு இருகட்சிகளினது கொள்கையின் செயல்பாடு என்பதை உறுதிப்படுத்துகிறது என்பதோடு, இது மில்லியன் கணக்கானவர்களின் வாழ்வை விலையாக கொடுத்து பாரசீக வளைகுடா மற்றும் அதன் பரந்த எரிசக்தி ஆதாரவளங்களின் மீது அமெரிக்க மேலாதிக்கத்தை இராணுவரீதியில் வலியுறுத்துவதற்காக, பல தசாப்தங்களாக அடுத்தடுத்து வந்த ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்களால் ஒருபோல பின்பற்றப்பட்டுள்ளது.