ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The US war drive against Iran and the conflict with Europe

ஈரானுக்கு எதிரான அமெரிக்க போர் முனைவும், ஐரோப்பா உடனான மோதலும்

Alex Lantier
17 May 2019

அமெரிக்க போர்க்கப்பல்கள் ஈரானை நோக்கி சென்று கொண்டிருக்கையில், பென்டகன் அப்பிராந்தியத்தில் 120,000 துருப்புகளை நிலைநிறுத்தும் திட்டங்களைப் பரிசீலித்து வரும் நிலையில், வாஷிங்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே கடுமையான மோதல்கள் வெடித்து வருகின்றன.

திங்களன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ புரூசெல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்திற்குள் முரட்டுத்தனமாய் அழைக்கப்படாமலேயே சென்று, ஈரானில் வாஷிங்டனின் ஆட்சி மாற்றத்திற்கான கொள்கையை ஆதரிப்பதற்காக அவரின் ஐரோப்பிய "கூட்டாளிகளை" கடுஞ்சொற்களால் பயமுறுத்த முயன்றார். அதேநாளில், ஸ்பானிய பத்திரிகை, ஐரோப்பிய இராணுவம் ஸ்தாபிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றிய திட்டங்களைக் கண்டித்து பென்டகன் அனுப்பியிருந்த இரகசிய கடிதம் ஒன்றை வெளியிட்டது. ஐரோப்பிய ஒன்றியம் அக்கடிதத்தைப் பெற்று இரண்டு வாரங்களுக்குப் பின்னர், அக்கடிதத்தைக் கசியவிடுவதென்ற முடிவு, கூர்மையான போர் நெருக்கடியுடன் பிணைந்துள்ளது.

அக்கடிதத்தில், பென்டகன் வார்த்தைகளைச் சுருக்கி இருக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றிய இராணுவ திட்டத்தின் மீது அது "ஆழமாக கவலை கொள்வதாக" அறிவித்து, அது அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய உறவுககளில் "வியத்தகு பின்னடைவு" குறித்து எச்சரித்ததுடன், ஐரோப்பிய ஆயுத உற்பத்தியாளர்களுக்கு ஒத்துழைப்பதை நிறுத்துவதற்கும் அச்சுறுத்தியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டங்கள் "ஐரோப்பிய பாதுகாப்பு முன்முனைவுகள் மீது 15 ஆண்டுகளுக்கு முன்னர் நமது ஒப்பந்தங்களில் மேலோங்கி இருந்த பதட்டமான விவாதங்களை மீட்டுயிர்பிக்கும்" என்பதையும் அது சேர்த்திருந்தது, அப்போது பேர்லினும் பாரீசும் ஐக்கிய நாடுகள் சபையில் பகிரங்கமாக அமெரிக்க தலைமையிலான சட்டவிரோத ஈராக் படையெடுப்பை எதிர்த்தன.

அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திகும் இடையிலான பதட்டங்கள், ஓராண்டுக்கு முன்னர் அமெரிக்கா ஏற்றுக்கொள்ள மறுத்த 2015 ஈரான் அணுசக்தி உடன்படிக்கைக்கான ஆதரவை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்வது அல்லது ஐரோப்பிய வாகனத்துறை ஏற்றுமதிகள் மீது வரிவிதிப்புகளை திணிப்பதற்கான அச்சுறுத்தல்கள் என்பவற்றிற்கும் மேலதிகமானவை சம்பந்தப்பட்டிருப்பதை தெளிவுபடுத்துகின்றன.

இரண்டாம் உலக போருக்கு நான்காண்டுகளுக்குப் பின்னர் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக வழிநடத்த 1949 இல் உருவாக்கப்பட்ட நேட்டோ, இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய ஒழுங்கமைப்பின் தூணாக இருந்தது. சந்தைகள், இயற்கை வளங்கள் மற்றும் மூலோபாய ஆதாயங்களைப் பெறுவதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான சண்டை, இதுவேதான் 20 ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவ அமைப்புமுறையை இரண்டு முறை உலக போருக்கு இட்டுச் சென்றிருந்த நிலையில், 21 ஆம் நூற்றாண்டிலும் கட்டுமீறி மீளெழுந்து வருகின்ற நிலையில், நேட்டோ இப்போது உடைவை முகங்கொடுக்கிறது.

1991 இல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் பொருளாதார வீழ்ச்சிக்கு அதன் இராணுவ பலத்தைப் பயன்படுத்தி எதிர்வினையாற்ற முனைந்தது. அது ஐரோப்பிய ஒன்றியத்தின் சில அதிகாரங்களினது அல்லது அனைத்தினதும் ஆதரவுடன் ஈராக்கில் இருந்து யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியா வரையில் போர்களைத் தொடங்கியது. ஆனால் 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்கு ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், அமெரிக்க பொருளாதார அந்தஸ்து தொடர்ந்து பலவீனமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிப்பத்திய கொள்கைக்கு இடையிலான முரண்பாடுகள் அதிகரித்தளவில் சீர்செய்யவியலாதவையாக உள்ளன.

ஐரோப்பிய ஒன்றியம் அதன் கொள்கையை, கடுமையான அமெரிக்க ஆட்சேபனைகளுக்கு மத்தியில் தான் வரைகிறது. பல்வேறு ஐரோப்பிய சக்திகளும் சீனாவின் யுரேஷிய உள்கட்டமைப்பு திட்டமான பாதை ஒருங்கிணைப்பு திட்டத்தில் (BRI) கையெழுத்திட்டும், ஐரோப்பிய ஒன்றிய தொலைத்தொடர்பு வலையமைப்புகளை சீன நிறுவனமான ஹூவாய் உடன் ஒருங்கிணைத்தும், மற்றும் ரஷ்யா உடனான மத்தியதூர அணுஆயுத படைத்தளவாடங்கள் (INF) மீதான உடன்படிக்கையை வாஷிங்டன் ஒதுக்கித் தள்ளியதற்குப் பின்னர் ஐரோப்பாவுக்குள் அமெரிக்க அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றன. பென்டகன், கூட்டாக முன்னெடுக்கப்படுகின்ற இத்தகைய கொள்கைகளை, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு ஓர் அச்சுறுத்தலாக காண்கிறது.

அனைத்திற்கும் மேலாக இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய அதன் இராணுவ கட்டுப்பாடுகளை உதறித்தள்ளிவிட்டு அதன் வெளியுறவுக் கொள்கையை மீள்இராணுவமயப்படுத்தி வருகின்ற பேர்லின் மற்றும் பாரீஸ் தலைமையிலான ஓர் ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்திற்கான திட்டங்கள், அமெரிக்க மூலோபாயவாதிகளிடையே எச்சரிக்கை மணியை ஒலிக்க செய்கின்றன. “புதிய ஜேர்மன் கேள்வி" என்ற தலைப்பில் ரோபர்ட் காகன் Foreign Affairs சஞ்சிகையில் எழுதிய ஒரு கட்டுரையில், “ஐரோப்பிய அதிகார சமநிலையின் முறிவு தான் இரண்டு உலக போர்கள் உருவாக உதவின, அந்த போர்களில் சண்டையிட்டு மடிய அட்லாண்டிக் எங்கிலும் பத்து மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க சிப்பாய்களைக் கொண்டு வந்தன... ஐரோப்பா இன்று, வெடிக்கக்கூடிய அதன் வெடிமருந்துடன் ஒரு வெடிக்கக் காத்திருக்கும் வெடிகுண்டாக, அதன் வெடிபொருட்களுடன் இன்றும் வெடிக்கக்கூடியதாக இருப்பதை சிந்தித்துப் பாருங்கள்,” என்று எழுதுகிறார்.

ட்ரம்ப் நிர்வாகமோ, ஈரானில் போர் மற்றும் ஆட்சிமாற்றத்துடன் தொடங்கி, யுரேஷிய புவிசார் அரசியலைத் தீவிரமாக மீள்ஒழுங்கமைப்பு செய்ய முயல்வதன் மூலமாக விடையிறுத்து வருகிறது. பெருமந்தநிலைக்குக் கட்டியம் கூறிய வோல்ஸ்ட்ரீட் பொறிவுக்கு ஓராண்டுக்கு முன்னதாக 1928 இல் லியோன் ட்ரொட்ஸ்கியின் அமெரிக்க ஏகாதிபத்தியம் மீதான பகுப்பாய்வு சமகால நிலைமையின் ஒரு பகுப்பாய்வைப் போல எழுதப்பட்டுள்ளது:

அமெரிக்க மேலாதிக்கம் வளர்ச்சிக் காலக்கட்டத்தை விட நெருக்கடி காலக்கட்டத்தில் தான் இன்னும் முழுமையாகவும், இன்னும் பகிரங்கமாகவும், இன்னும் ஈவிரக்கமின்றியும் செயல்படும். ஆசியா, கனடா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பாவிலேயே கூட எங்கே என்றாலும் சரி அல்லது சமாதானமாகவோ அல்லது போர் மூலமாகவோ எந்த விதத்தில் ஆனாலும் சரி, அமெரிக்கா, அதன் சிக்கல்கள் மற்றும் குறைபாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கடந்து வர ஐரோப்பாவை விலையாக கொடுக்க முனையும்.

உலகம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு புதிய எரிமலை வெடிப்புக்கு முன்னால் நேருக்கு நேராக கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், மேலெழுந்து வரும் போரின் இயல்பையும் அதை எதிர்ப்பதற்கான ஒரு மூலோபாயத்தையும் உள்ளீர்த்துக் கொள்வது அதிமுக்கியமாகும்.

ஈராக்கை விட இரண்டு மடங்கை விட பெரியதும் அதன் அளவை விட நான்கு மடங்கு பெரியதுமான ஒரு நாடான, ஈரான் உடனான ஒரு அமெரிக்க போர் ஏற்கனவே பாக்தாத்திற்கு எதிரான 2003 போரின் கொடூரமான இழப்புகளைக் காட்டிலும் எண்ணிக்கையில் இன்னும் அதிகளவிலானதாக இருக்கும்: அங்கே ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஈராக்கிய அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுடன், அமெரிக்கா, பிரிட்டிஷ், ஸ்பானிஷ் மற்றும் ஏனைய நேட்டோ நாடுகளின் பத்தாயிரக் கணக்கானவர்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். வாஷிங்டன், பாரசீக வளைகுடாவின் எண்ணெய் ஷேக் ஆட்சிகள், ஐரோப்பிய சக்திகள், துருக்கி, ஈரான், ரஷ்யா மற்றும் சீனா என அனைத்தும் தலையீடு செய்துள்ள, நடந்து வரும் சிரிய பினாமி போரைக் காட்டிலும் இன்னும் அதிக வேகமாக, முற்றுமுதலான பிராந்திய போராக மற்றும் உலகப் போராக தீவிரமடையலாம். ஒரு பேரழிவுகரமான அணுஆயுத மோதல் அபாயமுமே நிஜமான ஒன்றாக உள்ளது.

தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பதே தீர்க்கமான கேள்வியாகும். மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா எங்கிலும் வர்க்க போராட்டத்தின் சர்வதேச மேலெழுச்சிக்கு மத்தியில், ஈரானுக்கு எதிரான போர் முனைவு கட்டவிழ்ந்து வருகிறது. கடந்த 18 மாதங்கள், சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பாரிய ஈரானிய தொழிலாளர்களின் போராட்டங்களையும், அமெரிக்காவில் முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஆசிரியர்களின் வேலைநிறுத்த அலையையும், மெக்சிகோவில் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி தொழிலாளர்களின் ஒரு கிளர்ச்சியையும், பிரான்சில் "மஞ்சள் சீருடை" இயக்கத்தையும் கண்டுள்ளன. இந்த மேலெழுச்சி போலாந்தில் தேசியளவில் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் மற்றும் அல்ஜீரியாவில் பாரிய அரசாங்க-எதிர்ப்பு போராட்டங்களின் வெடிப்புடன் 2019 இல் தீவிரமடைந்துள்ளன.

இந்த மேலெழுந்து வரும் இயக்கம், சிக்கன நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தை இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்துடன் இணைத்து, அதை சர்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் வகையில் செய்தால் மட்டுமே அபிவிருத்தி அடைய முடியும்.

2003 ஈராக் படையெடுப்புக்கு முன்னர் பாரிய சர்வதேச போர்-எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்த போது, ஊடகங்களும் நடுத்தர வர்க்க போலி-இடது கட்சிகளின் ஓர் அடுக்கும் அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியும் ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியமும் புஷ் நிர்வாகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்ற பிரமைகளை ஊக்குவித்தன. இது பேரழிவுகரமாக பொய்யென ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. ஜனநாயகக் கட்சியின் ஒபாமா அந்த போர்களைத் தொடர்ந்தார் என்பது மட்டுமல்ல லிபியா மற்றும் சிரியாவில் புதிய போர்களையும் தொடங்கினார், ஆனால் அதற்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் உலகின் ஆதாரவளங்களை சூறையாடுவதில் அமெரிக்காவுடன் போட்டியிடும் ஒரு முயற்சியில் அவர்களின் சொந்த இராணுவங்களுக்குள் நூறு பில்லியன் கணக்கான யூரோக்களைப் பாய்ச்சி உள்ளன.

“இனியும் போருக்குப் பிந்தைய ஒழுங்கமைப்பின் பழைய நிர்பந்தங்கள் பொருந்தாது,” என்று ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் புதனன்று அறிவித்ததுடன், சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்காவும் "பொதுவான நிலைப்பாடுகளைக் காண, எங்களை நேரத்திற்கு ஏற்ப மீண்டும் மீண்டும் நிர்பந்திக்கின்றன,” என்பதையும் சேர்த்துக் கொண்டார். அவர் விவரித்தார், “ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனும் ஈரான் உடன்படிக்கை மீதான பிரச்சினையில் அமெரிக்காவிலிருந்து ஒரு வேறுபட்ட அணுகுமுறையை எடுத்து வருகின்றன... பாதுகாப்பு கூட்டுறவைப் பொறுத்தமட்டில், நாங்கள் நன்கு முன்னேறி கொண்டிருக்கிறோம்,” என்றார்.

ஐரோப்பிய அதிகாரங்களின் நடவடிக்கைகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினது சூறையாடல்களுக்குக் குறைந்தது இல்லை. அனைத்திற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்திடமிருந்து அதிகரித்து வரும் சவாலுக்கு அஞ்சி, அவை 2003 இல் இருந்ததைப் போல ஐக்கிய நாடுகள் சபையில் இனியும் அமெரிக்க ஆக்கிரமிப்பு போர்களின் எதிர்ப்பாளர்களாக காட்டிக்கொள்ள விரும்பவில்லை.

பாரீஸ் வன்முறையானரீதியில் "மஞ்சள் சீருடையாளர்களை" ஒடுக்குகின்ற நிலையில் மற்றும் ஜேர்மனியின் மகா கூட்டணி அரசாங்கம் நவபாசிசவாத AfD ஐ ஊக்குவிப்பதுடன் ஹிட்லர் மற்றும் ஜேர்மன் இராணுவவாதத்தின் குற்றங்களைப் பூசிமொழுகின்ற வலதுசாரி தீவிரவாத பேராசிரியர்களைப் பாதுகாக்கின்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றிய ஆட்சிகள் அனைத்தும் அவற்றின் ஆயுதப்படைகளுக்கு நிதி வழங்க தொழிலாளர்கள் மீது சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்கின்றன. வாஷிங்டன் நேட்டோவில் இருந்து வெளியேறினால், ஐரோப்பா ஒரு கடற்படை கட்டமைப்பின் மீது 110 பில்லியன் டாலரும் ஒரு தரைப்படைக்காக 357 பில்லியன் டாலரும் செலவிட கடமைப்பட்டிருக்கும் என்று பிரிட்டனின் சர்வதேச மூலோபாய ஆய்வு பயிலகம் மதிப்பிடுகிறது.

போரை அதிகரிக்கும் முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் போருக்கு எதிராக போராடும் ஓர் அரசியல் வேலைத்திட்டத்தைக் கொண்டு, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மீளெழுந்துள்ள இயக்கத்தை ஆயுதபாணியாக்குவதே முக்கிய பணியாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதன் 2016 அறிக்கையான "சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்" என்பதில் புதிய சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்திற்கான கோட்பாட்டு அடித்தளத்தை வரைந்தளித்தது:

* போருக்கு எதிரான போராட்டமானது, சமூகத்தின் மாபெரும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கம், மக்களின் அத்தனை முற்போக்குக் கூறுகளையும் தனக்குப் பின்னால் அணிதிரட்டி முன்நிற்பதை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்க வேண்டும்.

* புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, முதலாளித்துவ எதிர்ப்புத்தனமானதாகவும் சோசலிசத்தன்மை உடையதாகவும் இருந்தாக வேண்டும், ஏனென்றால் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்திற்கும், இராணுவவாதம் மற்றும் போருக்கு அடிப்படையான காரணமாக இருக்கின்ற பொருளாதார அமைப்புமுறைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான போராட்டத்தின் வழியாக அல்லாமல் போருக்கு எதிரான எந்த பொறுப்புணர்ச்சி வாய்ந்த போராட்டமும் இருக்க முடியாது.

* ஆகவே, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, அத்தியாவசியமான வகையில், முதலாளித்துவ வர்க்கத்தின் அத்தனை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்தும் முழுமையாகவும் குழப்பத்திற்கிடமின்றியும் சுயாதீனமானதாகவும், குரோதமானதாகவும் இருந்தாக வேண்டும்.

* எல்லாவற்றுக்கும் மேலாக, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது சர்வதேசமயமானதாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு ஒன்றுபட்ட உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த சக்தியை அணிதிரட்டக்கூடியதாக இருந்தாக வேண்டும்.