Print Version|Feedback
No to war against Iran!
ஈரானுக்கு எதிராக போர் வேண்டாம்!
Bill Van Auken
15 May 2019
மத்திய கிழக்கில் முழு அளவிலான போர் அச்சுறுத்தலானது அமெரிக்காவின் 2003 ஈராக் படையெடுப்புக்குப் பின்னர் வேறெந்த நேரத்திலும் இல்லாதளவில் இன்று மிகப் பெரியளவில் இருப்பதுடன், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் அதிக பயங்கரமானதாக உள்ளன.
ஈரானுக்கு எதிரான ஓர் ஆக்ரோஷமான போருக்கான தயாரிப்பில் 120,000 அமெரிக்க சிப்பாய்கள் மற்றும் போர்க்கப்பல்களை அப்பிராந்தியத்திற்கு அனுப்ப பென்டகன் திட்டங்களை வரைந்துள்ளதாக வரும் செய்தியை தொழிலாள வர்க்கம் மிகத் தீவிரத்தன்மையுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். என்ன தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது என்றால் ஓர் ஆட்சி மாற்றத்திற்கான போராகும், இது மில்லியன் கணக்கானவர்களின் வாழ்வை அச்சுறுத்துகின்ற அளவிடவியலா ஒரு குற்றகர நடவடிக்கையாகும்.
இத்திட்டங்கள் குறித்து விளக்கங்களைப் பெற்றிருக்கும் அரை டஜன் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளை நியூ யோர்க் டைம்ஸ் மேற்கோளிட்ட நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்போ செவ்வாயன்று அந்த செய்தியை "போலிச் செய்திகள்" என்று விவரித்தார். ஈரானுக்கு துருப்புகளை அனுப்ப "திட்டவட்டமாக" தயாரிப்பு செய்து வருவதாக தெரிவித்த அவர், ஆனால் "அதை விட இன்னும் அதிக துருப்புகளின் ஒரு படையை அனுப்புவோம்,” என்றவர் வலியுறுத்தினார்.
USS ஆப்ரகாம் லிங்கன் போர்க்கப்பல், அணுஆயுதங்கள் ஏந்தக்கூடிய B-52 போர்விமானங்கள் உட்பட குண்டுவீசும் போர்ப்படையினது தலைமையில் தாக்கும் விமானந்தாங்கி போர்க்கப்பல் குழு ஈரானிய கடல்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், ஈரானுக்கு எதிராக தொடர்ச்சியாக தீவிரப்படுத்தப்பட்டு வருகின்ற இராணுவ பீதியூட்டும் நடவடிக்கைகளோடு சேர்ந்து இந்த துருப்பு அச்சுறுத்தலும் வருகிறது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க கப்பற்படை சிப்பாய்கள், போர்விமானங்கள் மற்றும் தரையிறங்கும் படை, அத்துடன் பேட்ரியாட் ஏவுகணை தளவாடங்களை ஏந்திய நீர் மற்றும் நிலத்திலிருந்து தாக்கும் போர்க்கப்பலான USS அர்லிங்டன் அப்பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்டன.
பாரசீக வளைகுடாவின் தெற்கு கடற்பகுதியை பல பத்தாண்டுகளாக அமெரிக்க விமானத்தளங்கள் மற்றும் கடற்படை தளங்கள் ஆக்கிரமித்துள்ள ஓர் ஆயுத முகாமாக மாற்றியுள்ள, முடிவில்லா அமெரிக்க ஆக்கிரமிப்பு மற்றும் இராணுவக் கட்டமைப்பால், பதட்டங்கள் அதிக உச்சத்தில் உள்ள ஒரு பிராந்தியத்தில், பல சம்பவங்களில் அல்லது நாடகபாணியிலான ஆத்திரமூட்டல்களில் ஏதோவொன்று ஒரு முற்றுமுதலான மோதலுக்கு தூண்டுதலாக அமைந்து விடக்கூடும்.
ஞாயிறன்று செய்திகள் தெரிவித்தவாறு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கடற்பகுதிக்கு அருகில் இரண்டு சவூதி எண்ணெய் கப்பல்கள் உட்பட நான்கு படகுகள் நாசமாக்கப்பட்டதாக கூறப்படுவது ஈரானின் வேலை அல்லது "ஈரானிய பினாமிகளின்" வேலை தான் என்பதில் அமெரிக்க இராணுவம் தீர்மானமாக இருப்பதாக, அமெரிக்க இராணுவ ஆதாரநபர்கள் ஏற்கனவே —போர் பிரச்சாரத்தின் இழிவார்ந்த கருவியாக சேவையாற்றும்— பெருநிறுவன ஊடகங்களுக்கு கூறி வருகின்றனர். தெளிவில்லாத புதிரான ஒரு சம்பவம் பற்றிய இந்த ஆதாரமற்ற வாதத்திற்கு எந்தவொரு நிரூபணமும் வழங்கப்படவில்லை, ஆனால் ஈரானின் குற்ற நடவடிக்கையாக கூறப்படும் அது எவ்வாறிருப்பினும் "ஒன்றிணைந்த" செய்தி நிறுவனங்களால் உண்மையாக எதிரொலிக்கப்படுகிறது.
நாசவேலைகள் என்று குற்றஞ்சாட்டப்படும் நடவடிக்கைகள், சவூதி முடியாட்சி சர்வாதிகாரத்தின் தேசிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான சவூதி அரம்கோ நிறுவனம் செங்கடலில் செயல்படுத்தி வரும் இரண்டு எண்ணெய் அகழ்வு நிலையங்கள் மீது டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பின்னர் நடந்திருந்தன.
கடந்த நான்காண்டுகளாக யேமனுக்கு எதிராக சவூதி ஆட்சியால் நடத்தப்பட்டுள்ளதும், சுமார் 80,000 பேர் கொல்லப்பட்டு 10 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பட்டினியின் விளிம்புக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதுமான அமெரிக்க-ஆதரவிலான இனப்படுகொலைக்கு நிகரான போருக்குப் பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கையாக அத்தாக்குதல்களை நடத்தியதாக கூறி, யேமனின் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் அதற்கு பொறுப்பேற்றார்கள்.
ஒட்டுமொத்த யேமன் மக்களையும் பீதியூட்டியுள்ள சவூதி முடியாட்சி, கண்மூடித்தனமாக பள்ளிகள், மருத்துவமனைகள், மசூதிகள் மற்றும் வீடுகள் மீதும் குண்டுவீசி வருகின்ற நிலையில், பழிக்குப் பழிவாங்கும் ஹௌதி நடவடிக்கையை "பயங்கரவாத" நடவடிக்கையாக அறிவிக்க அது துணிவு கொண்டிருந்தது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ மற்றும் தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் ஜோன் போல்டன் வழங்கிய இறுதி எச்சரிக்கைகளது வரையறைகளின் கீழ், இத்தகைய நடவடிக்கைகளே கூட ஓர் ஆக்கிரமிப்பு போருக்கான தூண்டுதலாக அமைந்துவிடக் கூடும். இதை போல்டன் குறிப்பிடுவதைப் போல, “அமெரிக்க நலன்கள் மீதான அல்லது எங்கள் கூட்டாளிகளின் நலன்கள் மீதான எந்தவொரு தாக்குதலும் சற்றும் சளைக்காத படைகளைக் கொண்டு எதிர்கொள்ளப்படும்.” ஈரான் அல்லது அப்பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களுக்குச் சவால்விடுக்கும் அதன் பினாமிகள் என்றழைக்கப்படும் நாடுகளது குற்றஞ்சாட்டத்தக்க எந்தவொரு நடவடிக்கைக்கும், “விரைவான மற்றும் தீர்க்கமான" இராணுவ நடவடிக்கையைக் கொண்டு விடையிறுக்கப்படுமென பொம்பியோ சூளுரைத்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான எந்தவொரு அமெரிக்க இராணுவ நடவடிக்கையும் அந்நாட்டுக்கு எதிரான ஒரு பொருளாதார முற்றுகைக்குக் கூடுதலாக இருக்கிறது. “அதிகபட்ச அழுத்த" கொள்கை என்று கூறப்படுவதைக் கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரானின் பொருளாதார குரல்வளையைச் சுற்றி நெரிக்க முயன்று வருகிறது.
2015 ஈரான் அணுசக்தி உடன்படிக்கையை ஒருதலைபட்சமாகவும் சட்டவிரோதமாகவும் விட்டொழித்தப் பின்னர், வாஷிங்டன் அந்த உடன்படிக்கையின் கீழ் நீக்கப்பட்டிருந்த தடையாணைகளை மீண்டும் திணித்தது மட்டுமின்றி, அது ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகளைப் பூஜ்ஜியமாக குறைக்கவும், உலகளாவிய நிதியியல் சந்தைகளில் அதை முடக்கவும் மற்றும் ஏனைய நாடுகளுடனான அதன் வர்த்தகத்தை நிறுத்துமாறு செய்யவும் நோக்கம் கொண்டு முழு-அளவிலான பொருளாதார போர் நடத்தி வருகிறது. அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமையுடன் சேர்ந்து அண்மித்து 50 சதவீத பணவீக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஈரானிய மக்கள் தான் இதற்கு விலை கொடுத்திருக்கிறார்கள்.
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது அந்த உடன்படிக்கையில் இருந்த கடுமையான நிபந்தனைகளை அது முழுமையாக பின்பற்றி வந்திருப்பது மீண்டும் மீண்டும் கண்டறியப்பட்டிருந்த போதினும், வாஷிங்டனோ, தெஹ்ரான் அணுஆயுதங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கலாம் என்பது —இதை அது எப்போதும் மறுத்து வந்துள்ள நிலையில்— இராணுவ நடவடிக்கைக்கு சாதகமாகிவிடும் என்று அச்சுறுத்துகிறது.
அமெரிக்க முற்றுகையை நடைமுறையளவில் எதிர்கொள்ளவும் மற்றும் வாக்குறுதியளிக்கப்பட்டவாறு தடையாணைகளில் இருந்து விடுவிப்பை வழங்கவும், அந்த அணுஆயுத உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள ஏனைய நாடுகள் தவறியதற்கு —குறிப்பாக ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன்— யுரேனியத்தை உயர்மட்டத்தில் செறிவூட்டுவதை மீண்டும் தொடரவிருப்பதாக அச்சுறுத்தியதன் மூலமாக ஈரான் சமீபத்தில் விடையிறுத்தது. அந்த உடன்படிக்கையின் கீழ் அனுமதிக்கப்பட்டிருந்த போதினும், இந்நடவடிக்கையும் வாஷிங்டனால் இராணுவ ஆக்ரோஷத்திற்கான ஒரு சாக்குபோக்காக எடுத்துக்கொள்ளப்படக்கூடும்.
ஈராக்கை விட நான்கு மடங்கு பெரியதும் இரண்டு மடங்கு அதிக மக்கள்தொகை கொண்ட ஒரு நாடான ஈரானுக்கு எதிரான அமெரிக்க போரின் விளைவுகள் என்னவாக இருக்கும்? புஷ் நிர்வாகத்தால் 16 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட ஈராக் போரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஈராக்கிய அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர், அதேவேளையில் அண்மித்து 4,500 அமெரிக்க துருப்புகள் உயிரிழந்ததுடன், 30,000 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இம்முறை இந்த மனித படுகொலைகள் இன்னும் அதிகளவில் இருக்கும் என்பது மட்டுமல்ல, மாறாக ஈரானுக்கு எதிரான ஒரு போர் தவிர்க்கவியலாமல் ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் உள்ளீர்க்கும் என்பதுடன், பெய்ஜிங்கிற்கு எதிராக அமெரிக்கா முழுஅளவிலான ஒரு வர்த்தகப் போரைத் தொடங்கியுள்ள நிலைமைகளின் கீழ் அணுஆயுதமேந்திய ரஷ்யா மற்றும் சீனா உட்பட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் "வல்லரசு" போட்டியாளர்கள் என்று வாஷிங்டனின் இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரம் குறிப்பிடும் நாடுகளையும் உள்ளிழுக்கும்.
அமெரிக்க கொள்கையானது உடனடியான அர்த்தத்தில் படிப்படியாக இராணுவத் தீவிரப்பாட்டாலேயே பெரிதும் உந்தப்பட்டுள்ளது என்ற அதேவேளையில், உலகளாவிய ஏகாதிபத்திய நலன்கள் மற்றும் கூர்மையடைந்து வரும் உள்நாட்டு சமூக அரசியல் முரண்பாடுகளின் ஒரு கலவை அதற்கடியில் அமைந்துள்ளது.
வாஷிங்டன் ஒரே சமயத்தில் ஈரான் மற்றும் வெனிசுவேலா இரண்டையும் அச்சுறுத்தி வருகிறது என்பது தற்செயலானது அல்ல. முதலாவது நாடு மத்திய கிழக்கில் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் வயல்களைக் கொண்டுள்ளது, அதேவேளையில் இரண்டாவது நாடு உலகின் மிகப்பெரிய எண்ணெய் வயல்கள் இருப்பதாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருப்பதைப் பெருமைப்பீற்றுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் உலக பொருளாதார அந்தஸ்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் வீழ்ச்சியை ஈடுகட்டும் ஒரு முயற்சியில், உலகின் எரிசக்தி வயல்கள் மீது எதிர்ப்பில்லாத அதன் பிடியைப் பலப்படுத்த நோக்கம் கொண்டுள்ளது. இது அதன் போட்டியாளர்களுக்கு, முதல் எடுத்துக்காட்டாக சீனாவுக்கும், அடுத்து ஐரோப்பாவுக்குமான, வினியோகங்களைக் குறைக்க —அல்லது ஒட்டுமொத்தமாக வெட்ட— அதை பலப்படுத்தும். இத்தகைய பேராசைகள் தான் மூன்றாம் உலகப் போருக்கு வழி வகுக்கின்றன.
ஈரானுக்கு எதிரான போர் கட்டமைப்பு அமெரிக்காவுக்கு உள்ளேயே தீவிரமடைந்து வரும் சமூக மற்றும் அரசியல் நெருக்கடியாலும் பலமாக உந்தப்படுகிறது, இது நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தின் அடிப்படையில் அமைந்த பொருளாதாரத்தால் தோற்றுவிக்கப்பட்ட தாங்கொணா சமூக சமத்துவமின்மை மட்டங்களால் குணாம்சப்படுகிறது.
மூன்று தசாப்தத்திற்கும் அதிகமான ஆண்டுகளில் இல்லாதளவில் அமெரிக்காவில் அதிகபட்ச எண்ணிக்கையிலான வேலைநிறுத்தங்களில் பிரதிபலித்த, வர்க்க போராட்டம் அதிகரித்திருக்கும் நிலையில், முதலாளித்துவ செல்வந்த தட்டுக்கள் சமூக பதட்டங்களை வெளியில் திருப்பி விடுவதற்கு போரை ஒரு வழிவகையாகவும், அதேவேளையில் அதிகரித்தளவில் எதேச்சதிகார ஆட்சி வடிவங்களுக்கான நிலைமைகளை உருவாக்குவதற்கான சரியான தருணமாகவும் பார்க்கின்றன. அமெரிக்க போர் குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக ஜூலியன் அசான்ஜூம் செல்சியா மானிங்கும் வேட்டையாடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைப் போலவே, வெளிநாடுகள் மீதான இராணுவவாதத்தின் ஒரு தீவிரமயப்படுத்தல் அமெரிக்காவில் போர் மற்றும் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் குற்றகரமாக்க பயன்படுத்தப்படும்.
ஈரானுக்கு எதிரான போர் முனைவு பெரிதும் அமெரிக்க மக்களின் முதுகுக்குப் பின்னால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஈராக்கிற்கு எதிரான தூண்டுதலற்ற 2003 போரில் “பாரிய பேரழிவுகரமான ஆயுதங்கள்” குறித்த மோசடியில் செய்யப்பட்டதைப் போலவே, ஈரானிய ஆக்ரோஷம் குறித்து வாஷிங்டனின் ஜோடிக்கப்பட்ட ஆதாரமற்ற வாதங்களை காங்கிரஸின் ஒப்புதலுக்கு கொண்டு செல்வது ஒருபுறம் இருக்கட்டும் (இதை ஜனநாயகக் கட்சியினர் வழங்கிவிடுவார்கள்), இந்த வாதங்கள் மீது ஐக்கிய நாடுகள் சபையில் சட்டரீதியான ஒப்புதல் கோருவதற்கான ஒரு பாசாங்குத்தனம் கூட அங்கே இல்லை. அல்லது லிபியா மற்றும் சிரியாவுக்கு எதிரான போர்களில் செய்யப்பட்டதைப் போல "மனித உரிமைகள்" மூடிமறைப்பை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியும் கூட அங்கே இல்லை.
ஈரானுக்கு எதிராக ஒரு போரைத் தொடங்குவது மக்களிடையே அதிர்ச்சியையும் சீற்றத்தையும் உருவாக்கும். அங்கே போருக்குப் பரந்த எதிர்ப்பு நிலவுகிறது என்பதுடன் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த பிரிவுகளிடையே அரசியல் ஸ்தாபகம் மற்றும் ஊடகங்கள் மீது ஆழ்ந்த ஐயுறவும் வெறுப்பும் தங்கியுள்ளது.
எவ்வாறிருப்பினும் மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால் இந்த பாரிய சமூக எதிர்ப்பு அரசியல்ரீதியில் ஒழுங்கமைக்கப்படவில்லை, அதேவேளையில் உத்தியோகபூர்வ அரசியலின், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டினதும், முழு செல்வாக்கு வட்டாரமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பேரழிவுகரமான போர் கொள்கையை ஆதரிக்கின்றன.
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலின் உடனடி விளைவு என்னவாக இருந்தாலும், சம்பவங்கள் இடைவிடாது உலக போரின் திசையில் நகர்ந்து வருகின்றன. இந்த யதார்த்தமானது, ஏகாதிபத்தியத்திற்கு ஒரு முடிவு கட்டவும் மற்றும் சோசலிச அடித்தளங்களில் சமூகத்தை மறுஒழுங்கமைக்கவும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல்ரீதியில் நனவுபூர்வமான தலையீட்டுக்காக ஓர் அவசர சர்வதேச போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.