ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India: BJP makes indicted Hindu supremacist terrorist a “star” election candidate

இந்தியா: குற்றச்சாட்டிற்கு ஆளான இந்து மேலாதிக்கவாத பயங்கரவாதி ஒருவரை “நட்சத்திர” வேட்பாளராக தேர்தல் களத்தில் பிஜேபி நிறுத்துகிறது

By Keith Jones 
24 April 2019

இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP), நூற்றுக்கணக்கான முஸ்லீம்களை கொன்று குவித்த இந்து மேலாதிக்கவாத பயங்கரவாத வலைப்பின்னலின் தலைமை குற்றவாளி ஒருவரை நாட்டின் பொதுத் தேர்தல்களில் “நட்சத்திர” வேட்பாளராக நிறுத்தியுள்ளது, இத்தேர்தல்கள் இந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம், இந்தியாவின் ஐந்தாவது பெரும் மக்கள்தொகை கொண்ட மாநிலமான மத்தியப்பிரதேஷின் தலைநகர் போபாலில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும் மத்தியப்பிரதேஷின் முன்னாள் முதலமைச்சருமான திக்விஜய சிங்கிற்கு எதிராக சாத்வி பிரக்யா தாகூர் சிங் தேர்தலில் போட்டியிடுவார் என பிஜேபி தலைமை அறிவித்தது – 2008 குண்டு வெடிப்பில் அவரது பங்கு குறித்து குற்றவியல் குற்றச்சாட்டிற்கு இவர் ஆளானவர். அப்போதிருந்து, தேசிய அளவில் அவரது வேட்பாளர்நிலையின் முக்கியத்துவம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிஜேபி கட்சித் தலைவர் அமித்ஷா ஆகிய இருவரால் பெரிதுபடுத்திக் காட்டப்பட்டு வருகிறது.

ஒரு சுய பாணியிலான இந்து பெண் மதகுரு, தாகூர், மஹாராஷ்டிரா, மாலேகானில் ஆறு பேரை கொன்ற செப்டம்பர் 29, 2008 குண்டு வெடிப்பில் அவரது பங்கு குறித்த பயங்கரவாத குற்றச்சாட்டுக்களை தற்போது எதிர்கொண்டுள்ளார். அந்த குண்டு வெடிப்பை நிகழ்த்திய குற்றவாளிகளை தேடி கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருந்ததாக அவர் குற்றம்சாட்டப்பட்டார், ஏனென்றால், அபினவ் பாரத் என்றறியப்படும் இந்திய இராணுவத்துடன் தொடர்புபட்ட ஒரு இந்துத்துவ (இந்து மேலாதிக்கவாத) பயங்கரவாத வலைப்பின்னல் தான் அதை திட்டமிட்டு நடத்தியிருந்தது என்பதுடன், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட  ஒரு மோட்டார் சைக்கிளையும் குற்றவாளிகளுக்கு வழங்கியிருந்தார். இருப்பினும், அபினவ் பாரத் அமைப்பு கட்டவிழ்த்துவிட்டிருந்த ஏனைய குண்டு வெடிப்புக்களிலும் குற்றவியல் நடவடிக்கைகளிலும் தாகூர் ஈடுப்பட்டிருந்தார் என்பதற்கான அசைக்க முடியாத சாட்சிகள் இருக்கின்றன.

தாகூரை வேட்பாளராக நிறுத்தியிருப்பது ஒரு இழிவான மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய ஆத்திரமூட்டலாக உள்ளது. இது, பிஜேபி யின் இந்து மேலாதிக்கவாத ஆர்வலர் தளத்தை கிளர்ச்சியூட்டவும், முஸ்லீம்களை அச்சுறுத்தவும் காரணமாகிறது என்பதுடன், பிஜேபி அதன் அரசியல் எதிரிகள் மீது, அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சி மீது, அதன் வகுப்புவாதத் தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தும் ஒரு “ஆப்பு” போன்றும் வேலை செய்கிறது.

பிஜேபி இல் தாகூர் புதுமுகமாக சேர்ந்த பின்னர் உடனேயே, போபாலில் அதன் வேட்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி இந்துக்களை அவமதிப்பதாகவும், “இந்து நாகரிகத்தை” பழித்துக் கூறுவதாகவும் அதனை குற்றம்சாட்டுவதற்கு அவரது பெயரை பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்.

2008 இல், அபினவ் பாரத் முதலில் வெளிப்பட்ட போது அதை ஒரு “இந்து பயங்கரவாத” குழு என்று தைரியமாக குறிப்பிட்ட காங்கிரஸ் கட்சியின் மீது தனது தாக்குதல்களை பிஜேபி அதிகப்படுத்தியுள்ள நிலையில், மோடி, “இந்து நாகரிகம் என்பது 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு சிறந்த நாகரிகமாகும்… என்ற நிலையில், எந்தவித ஆதாரமும் இல்லாமல், அத்தகையதொரு நாகரிகத்தையா பயங்கரவாத குழு என்று நீங்கள் அழைக்கிறீர்கள்? எனவே இப்போது, அத்தகைய மக்கள் அனைவருக்கும் பதிலடி கொடுப்பதற்கான ஒரு அடையாளமாகவே இது [தாகூரின் வேட்பாளர் நியமனம்] உள்ளது என்பதுடன், இந்த அடையாளம் காங்கிரஸூக்கு தீங்கு விளைவிப்பதாக இருக்கும்” என்று கூறினார்.

திங்களன்று கொல்கத்தாவில் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசுகையில், பிஜேபி தலைவர் அமித்ஷா, தாகூரின் வேட்பாளர் நிலையை பாதுகாத்தார். அத்துடன், “இது முற்றிலும் சரியானதொரு முடிவாகும். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவையாகும்” என்று கூறினார். அதற்கு முன்பாக Indian Express பத்திரிகைக்கு அவரளித்த பேட்டியில், தாகூர் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு பெரும் ஆதரவளித்துப் பேசினார், அதே வேளையில், காங்கிரஸ் “இந்து பயங்கரவாதம் என குறிப்பிட்டு ஒட்டுமொத்த நாட்டையும் அது அவமதித்து வருகிறது”, என்றும் “தங்களது வாக்கு வங்கி அரசியலுக்காக தேசிய பாதுகாப்பை சரிக்கட்டுகிறது”, அல்லது பிஜேபி/ஆர்எஸ்எஸ் பற்றி பேசி “முஸ்லீம்களை சாந்தப்படுத்துகிறது” என்றும் குற்றம்சாட்டினார்.

எதிர்பார்த்தபடி, தாகூர், வகுப்புவாத பிற்போக்கை தொடர்வதற்கு அவரது வேட்பாளர் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்.  அவர் தனது தேர்தல் முயற்சியை ஒரு “தர்ம யுத்தம்” (மத போர்) என்று வர்ணித்ததுடன், 1992 இல் அயோத்தியில் பாபர் மசூதி அழித்தொழிக்கப்பட்ட போது ஆர்எஸ்எஸ்/பிஜேபி இன் மாணவர் அணியில் (அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத்) ஒரு ஆர்வலராக அவர் இருந்துவந்த சமயத்தில், அதில் தனது பங்கு என்னவாக இருந்தது என்பது பற்றியும் விவரித்தார். இந்திய உச்ச நீதிமன்றத்தின் விரைவான உத்திரவுகளை மீறி நடத்தப்பட்ட தாக்குதலாக, கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மசூதி எதிர்பாராத விதமாக திடீரென தகர்க்கப்பட்டமை இந்தியாவில் பெரும் வகுப்புவாத இரத்தக்களரியை அப்போது தோற்றுவித்தது குறிப்பிடத்தக்கது.

“பாபர் மசூதி தகர்க்கப்பட்டதற்கு நாம் ஏன் வருத்தப்பட வேண்டும்?” என்று பிஜேபி யின் போபால் வேட்பாளர் Aaj Tak செய்தி ஊடகத்தில் தெரிவித்தார். “உண்மையில், அதற்கு நாம் பெருமைப்பட வேண்டும்.” மேலும், இந்து அடிப்படைவாத சிந்தனையைத் தூண்டுவதாக, முன்பு பாபர் மசூதி இருந்த இடத்தை புராண கடவுள் ராமரின் பிறந்த இடமாக மதிப்பளித்து தாகூர் பேசியதோடு, ராமர் கோவிலின் சில கழிவுப் பொருட்களின் “நீக்கம்” தான் இந்த மசூதி அழிப்பு (அதாவது பாபர் மசூதி தகர்க்கப்பட்டதை) என்று விவரிக்கவும் அவர் முற்பட்டார். அத்துடன், “இது நமது நாட்டின் சுயமரியாதையை விழித்தெழச் செய்துள்ளது என்பதால் நாம் அங்கு [அயோத்தியில்] மாபெரும் ராமர் கோவில் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும்” என்றும் அவர் தொடர்ந்து கூறினார்.

“உடல் ஆரோக்கிய காரணங்களை” முன்னிட்டு ஏப்ரல் 2017 இல் பிணையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தாகூர், அபினவ் பாரத் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருந்ததாகத் தோன்றிய மூன்றாண்டு காலம் உட்பட, ஆர்எஸ்எஸ் – பிஜேபி வட்டாரங்களுடன் நீண்டகால தொடர்புகளை கொண்டிருந்தார். இது, ஆர்எஸ்எஸ் உடன் இணைந்த மகளிர் பிரிவான விஷ்வ ஹிந்து பரிஷத் (World Hindu Council) என்பதான துர்கா வாஹினியில் அவரின் அங்கத்துவத்தையும் உள்ளடக்கியதாகும்.

வகுப்புவாத குற்றவாளிகளுக்கு தண்டனை விலக்கு

2008 இல் அபினவ் பாரத் முதலில் வெளிச்சத்திற்கு வந்த போது, குற்றம்ச்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து தன்னை விலக்கிக் கொள்ள பிஜேபி ஆர்வத்துடன் முனைந்தது, அதே வேளையில் இந்து மேலாதிக்கவாத பயங்கரவாதம் தான் அதற்கான காரணமாக இருந்தது என்ற அல்லது இருந்திருக்கலாம் என்ற எந்தவொரு ஆலோசனையையும் ஆவேசத்துடன் கண்டித்தது.

ஆனால், அரசு எந்திரத்திற்குள் இருந்துவந்த தடையின் காரணமாக, இந்து பயங்கரவாத வலைப்பின்னலில் தொடர்புபட்டிருந்தவர்களுக்கு எதிராக ஒரு வழக்கிற்கு அடுத்ததாக மற்றொரு வழக்கு என்ற வகையில் நிகழ்ந்த கட்டவிழ்ப்பின் மூலம் இது ஊக்கமடைந்து வந்துள்ளது. கடந்த மாதம், மோடியும் ஷாவும், 68 பேரை பலி கொண்ட பிப்ரவரி 2007 சம்ஜௌதா விரைவு இரயில் குண்டு வெடிப்பு தொடர்பான நான்கு குற்றவாளிகளுக்கு எதிராக இந்திய நீதிமன்றம் ஒரு வழக்கை அறிவித்தபோது, அது நிரூபிக்கப்படவில்லை என கடந்த மாதம் பகிரங்கமாக கூச்சலிட்டனர். இவ்வழக்கு குறித்து நீதிபதி தனது தீர்ப்பை வழங்குகையில், தேசிய புலனாய்வு முகமை (NIA) வழக்கின் முக்கிய தடயங்களை பின்பற்றத் தவறிவிட்டது என்று கண்டித்தார்.

உள்துறை அமைச்சரும் பிஜேபி தலைவருமான ராஜ்நாத் சிங், உயர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட எந்தவொரு மேல்முறையீட்டையும் திட்டவட்டமாக நிராகரிப்பதன் மூலம் இந்த தீர்ப்புக்கு பதிலிறுத்தார். மேலும், இந்தியாவின் முஸ்லீம்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினரை எதிர்ப்பது உட்பட, அவரது வகுப்புவாதத்தை தம்பட்டம் அடித்து, சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்துவதாக பெயரளவிற்கு அமைச்சர் குற்றம்சாட்டியதுடன், “அத்தகைய பயங்கரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் தான் எப்போதும் பொறுப்பாளியாக உள்ளது” என்பது தனது “சொந்த நிலைப்பாடு” என்றும் தெரிவித்தார்.

உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றும் ஒரு திட்டமிடப்பட்ட முயற்சி என ஒரு நீதிபதி விவரிக்கையில், ஏழை முஸ்லீம்கள் மீது அபினவ் பாரத் தொடுத்த குண்டு வெடிப்புக்களில் பெரும்பாலானவற்றை இந்திய பொலிஸூம் மற்றும் வழக்கறிஞர்களும் ஆரம்பகட்டத்தில் தடுக்க முயன்றனர் என்று விவரித்துள்ளார்.

“சட்டம் மற்றும் ஒழுங்கின்” முன்னணி ஆதரவாளனாகவும் மற்றும் “பயங்கரவாத”த்திற்கு எதிரான சமரசமற்ற எதிரியாகவும் தன்னை காட்டிக்கொள்ளும் ஒரு கட்சி, பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் கீழ் உள்ள ஒரு வேட்பாளரை ஏன் நிறுத்துகிறது என்று பத்திரிகையாளர்கள் கேள்விகளை எழுப்பிய நிலையில், வகுப்புவாத அட்டூழியங்கள் குறித்து குற்றம்சாட்டுகள் முன் வைக்கும் போதெல்லாம் காங்கிரஸின் குற்றங்களை பிஜேபி வேறுவழியின்றி சுட்டிக்காட்டுவது போன்று மோடியும் சுட்டிக்காட்டினார். மத்தியப்பிரதேஷின் தற்போதைய காங்கிரஸ் முதலமைச்சர் கமல்நாத், 1984 இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் சீக்கியர்களைத் தாக்குவதற்கு கலக கும்பல்களைத் தூண்டினார் என்ற நீண்டகால குற்றச்சாட்டிற்கு உட்பட்டிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், காங்கிரஸ் கட்சித் தலைமைக்கும் பிரதம மந்திரி பதவிக்கும் வாரிசுரிமை கொண்ட தற்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி சீக்கிய விரோத படுகொலையை நியாயப்படுத்தி, “ஒரு பெரிய மரம் வீழும் போது, பூமி அதிரத்தான் செய்யும்” என்று துடுக்காக பேசிய இழிபுகழ்பெற்ற அறிக்கையையும் அவர் நினைவுகூர்ந்தார்.

உண்மை என்னவென்றால், இந்திய அரசு திட்டமிட்டே குற்றம்சாட்டத் தவறியதுடன், முஸ்லீம்களுக்கும் ஏனைய சிறுபான்மையினருக்கும் எதிரான வகுப்புவாத அட்டூழியங்களைத் தூண்டிவிடுவதற்கும், அவர்களுக்கு உதவுவதற்கும் அரசியல் தலைவர்கள் தான் பொறுப்பு என்று நிரூபனமாகிய மிக அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே அவர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். மோடியை பொறுத்தும் இது உண்மை, குஜராத் முதலமைச்சராக அவர் இருந்தபோது 2002 குஜராத் முஸ்லீம் விரோத படுகொலையை தூண்டிவிட்டார், மேலும், மூன்று கொலைகார நாட்களில் படுகொலை சம்பவங்கள் கட்டவிழ்த்துவிடப்படுவதை அனுமதிக்க அங்கு பாதுகாப்பு படைகளை நிலைநிறுத்துவதற்கும் தீவிரமாக உத்திரவிட்டார். மோடிக்கு முன்பு பதவி வகித்தவரான பிஜேபி தலைவர் எல்.கே.அத்வானியைப் பொறுத்தும் இது உண்மை. டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதியில் கலக கும்பல்களை குவித்து, பின்னர் உச்ச நீதிமன்ற உத்திரவை மீறி மசூதியை இடித்து தகர்க்க அவர்களைத் தூண்டி விடுவதற்கு தலைமை வகித்தவரான அவரும் பல முன்னணி பிஜேபி தலைவர்களில் ஒருவராக இருந்தார்.

பிஜேபி யும் இந்திய அரசியலின் தூய்மைக்கேடும்

அவ்வாறு கூறினாலும், தாகூர் வேட்பாளராக நிற்பது இந்திய அரசியல் சாக்கடையில் ஏதோவொரு வகையில் புதிதாக உள்ளது. இதற்கு முன்பு ஒருபோதும், வகுப்புவாத அட்டூழியங்கள் புரிந்ததாக பயங்கரவாத குற்றங்களின் பேரில் குற்றம்சாட்டப்பட்ட ஒரு வேட்பாளரை ஒரு இந்திய அரசியல் கட்சி தேர்தல் களத்தில் நிறுத்தியது இல்லை.

மேலும், தாகூரின் வேட்பாளர்நிலை என்பது, இராணுவவாத மற்றும் வகுப்புவாத விண்ணப்பங்களை சுற்றிச் சுற்றி வரும் பிஜேபி பிரச்சாரத்தில் குறிப்பாக விஷமத்தனமான மற்றும் ஆத்திரமூட்டும் ஒரேயொரு கூறாக உள்ளது. பாகிஸ்தான் உள்ளே இராணுவத் தாக்குதல்களுக்கு மோடி உத்திரவிட்டதை பிஜேபி கொண்டாடுகிறது, மேலும் இது, 2016 இலையுதிர் காலத்திலும் அடுத்து இந்த பிப்ரவரியிலும் அணுவாயுதம் ஏந்திய தெற்காசிய போட்டியாளர்களை ஒட்டுமொத்த போரின் விளிம்பிற்கு இட்டுச் சென்றது; அதே வேளையில் பாகிஸ்தானை சமாதானப்படுத்தும் மற்றும் இராணுவத்தை கீழறுக்கும் எதிர்க்கட்சியை பிஜேபி கண்டிக்கிறது. பிரிவினை ஏற்படும் வரை இந்தியாவின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த பங்களாதேஷில் இருந்து இந்தியாவிற்கு தஞ்சம் புகுந்த முஸ்லீம்களை அமித்ஷா கண்டனம் செய்தார், மேலும் அவர்கள் “கரையான்கள்” போன்றவர்கள் என்று கூறி வங்காள விரிகுடாவில் அவர்களை தூக்கியெறிவதற்கு உறுதிபூண்டார். பிஜேபி இன் தேர்தல் அறிக்கையானது, பாபர் மசூதி அழிக்கப்பட்ட இடத்தில் ஒரு இராமர் கோவிலை விரைவாக கட்டுவதற்கு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உறுதிபூண்டது முதல் ஜம்மு காஷ்மீரைப் பொறுத்தவரை அதன் சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்தை நீக்குவது வரையிலுமான முழுவதும் இழிவான வகுப்புவாத உறுதிமொழிகளால் நிரம்பியிருந்தது. இந்தியாவின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமான ஜம்மு காஷ்மீர், கடந்த மூன்று தசாப்தங்களாக, பிஜேபி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கங்கள் எதுவானாலும் அதன் ஆட்சியில், அரை மில்லியன் (5 இலட்சம்) பாதுகாப்பு படையினரின் ஆக்கிரமிப்பின் கீழ் தான் பெரும்பாலும் இருந்து வருகிறது.      

பிஜேபி பிரச்சாரம் அதன் பயம் மற்றும் தண்டனை விலக்கு பற்றிய உணர்வு என இரண்டு குறித்தும் பேசுகிறது

மோடியும் எஞ்சியுள்ள பிஜேபி தலைமையும், தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழை மக்களிடம் இருந்து அதிகரித்துவரும் எதிர்ப்பை எதிர்கொள்வதில் கடும் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் மற்றும் பிற்போக்குதனத்தை தூண்டிவிடவும் நோக்கம் கொண்டுதான், இந்து மேலாதிக்கவாத முரசை அவர்கள் தீவிரமாக கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த விஷயத்தில் இந்து மேலாதிக்கவாத வலதுசாரிகள், அவர்களது (இந்திய அரசியல்) நிறுவன எதிர்ப்பாளர்களின் கோழைத்தனத்தால் தைரியமடைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாமல், “பிஜேபி எதிர்ப்பு” பிராந்தியக் கட்சிகள், ஸ்ராலினிச சிபிஎம் மற்றும் சிபிஐ என அனைத்தும் மக்களுக்கு விரோதமான முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் உடந்தையாக இருந்து வந்த காரணத்தினால் பரவலாக மதிப்பிழந்து போயின. அவை அனைத்தும், இந்திய முதலாளித்துவத்தின் வல்லரசாகும் அபிலாஷைகளுக்கு ஆதரவளிக்கின்றன என்ற நிலையில், பாகிஸ்தான் மீதான இந்திய இராணுவத்தின் “துல்லிய தாக்குதல்” குறித்த மோடியின் கொண்டாட்டத்துடன் தம்மை இணைந்து கொண்டன, எனவே சாதிய மற்றும் வகுப்புவாத அரசியலில் அவர்களும் மூழ்கிப் போயுள்ளனர். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரையிலும் இது உண்மை தான், அது தேர்தல் களத்தில் மென்மையான இந்துத்துவ பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்து வருவதாக பல ஊடகப் பிரிவுகள் வர்ணித்துள்ளன.

குற்றம்சாட்டப்பட்ட இந்துத்துவ பயங்கரவாத தாகூரை, பிஜேபி முன்நிறுத்துவது தொடர்பாக ஊடகங்களின் எதிர்வினை, அரசியல் ரீதியான கேடுகெட்ட தன்மையையும் அதன் நன்கு வெளிப்படுத்தியும் காட்டியள்ளது. பிஜேபி ஒரு தவறான பாதையை முன்னெடுத்துள்ளது என முன்னணி தினசரி நாளிதழ்கள் கையை பிசைகின்றன, தாகூரின் வேட்பாளர் விண்ணப்பத்தை திரும்ப பெறுவதன் மூலம் மட்டுமே அதை சரிசெய்ய முடியும் என்றும் குறிப்பிட்டன. குறிப்பிடத்தக்க வகையில் Hindustan Times பத்திரிகை எழுதியது, “அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்ட நிலையில், பிரயாக் தாகூரின் தேர்வு தவிர்த்திருக்க கூடியது,” என்ற தலைப்பின் கீழ் எடுத்துரைத்ததுடன், பாரதிய ஜனதா கட்சி, அவரை [தாகூரை] கட்சிக்குள் சேர்ப்பது, மேலும் போபாலில் அவரை வேட்பாளராக நிறுத்துவது என ஒரு ஆரோக்கியமற்ற முன்மாதிரியை உருவாக்கியுள்ளது” என்றும் கூறியது.

உண்மையில், பிஜேபி, அதன் தீவிர வலதுசாரி, பாசிச குணாம்சம் மற்றும்  “உலகின் மிகப்பெரிய ஜனநாயக”த்தில் ஆளும் கட்சி அரசியலின் உண்மையான நிலை என்னவாக இருக்கின்றது என்பதைத் தான்  வெளிப்படுத்தி வருகின்றது.     மற்றும் உலகளாவிய முதலாளித்துவ முறிவு, சமூக  சமத்துவமின்மையின் இடைவிடா வளர்ச்சி, மேலும் உழைக்கும் மக்களிடம் இருந்து வரும் இலாபத்தை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்வதற்கான உலகம் முழுவதிலுமான முதலாளித்துவ உயரடுக்கின் உந்துதல், மேலும் வணிகப் போர், மீள்இராணுவமயமாதல் மற்றும் இராணுவ மோதல்கள் ஆகியவற்றின் மூலமாக அவர்களது பெருவணிக போட்டியாளர்களுக்கு அவர்கள் அழுத்தம் கொடுத்து வரும் நிலைமைகளின் கீழ் தான் இவ்வாறாக நடந்து வருகின்றது.

இந்திய நிறுவன அரசியல் தூய்மைக்கேடு என்பது கோடிட்டுக் காட்டுவது என்னவென்றால், வகுப்புவாத பிற்போக்கிற்கு எதிரான மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம் ஆகிய அனைத்துக்கும் தேவையானது ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகள் மற்றும் முதலாளித்துவ இலாப அமைப்புமுறைக்கும் எதிராக ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது தான்.

ஆசிரியர் பின்வரும் கட்டுரையையும் பரிந்துரைக்கிறார்:

சம்ஜௌதா விரைவு இரயில் குண்டு வெடிப்பு: வன்முறைமிக்க இந்து மேலாதிக்கவாதிகள் தண்டனையின்றி தப்பிக்க இந்திய நீதிமன்றம் அனுமதிக்கிறது

[9 April 2019]