Print Version|Feedback
Preparing for World War Three
Global military spending tops $1.8 trillion, highest on record
மூன்றாம் உலக போருக்கான தயாரிப்பு
உலகளாவிய இராணுவ செலவுகள், சாதனையளவுக்கு மிக அதிகபட்சமாக, 1.8 ட்ரில்லியன் டாலரைத் தாண்டுகிறது
Niles Niemuth
30 April 2019
இந்த வாரம் ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி பயிலகம் (SIPRI) வெளியிட்ட ஆண்டு அறிக்கையின்படி, உலகளாவிய இராணுவச் செலவு, 2018 இல் 1.8 ட்ரில்லியன் டாலரைக் கடந்து, பனிப்போருக்குப் பிந்தைய புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது 2017 உலகளாவிய இராணுவ செலவுகளுக்கான முந்தைய வருடாந்தர அளவைக் காட்டிலும் 2.6 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது.
மிகவும் குறிப்பிடத்தக்க விதத்தில், அமெரிக்க இராணுவ செலவுகள் 2018 இல் 4.6 சதவீதம் அதிகரித்து, 649 பில்லியன் டாலராக உயர்ந்தது. இது 2011 க்குப் பின்னர் SIPRI பதிவு செய்ததில் முதல் வருடாந்தர அமெரிக்க செலவு அதிகரிப்பாகும். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2019 இல் 686 பில்லியன் டாலர் வரவு-செலவு திட்டத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையிலும், பென்டகன் 2020 இக்கு 718 பில்லியன் டாலர் கோரியுள்ள நிலையிலும், இந்த போக்கு தொடரவிருக்கிறது. இப்போதைய இந்த நிதி ஒதுக்கீட்டு நிலையே தொடர்ந்தால், அடுத்த தசாப்தத்தில் அமெரிக்கா அதன் இராணுவத்திற்கு 7 ட்ரில்லியன் டாலர் செலவிடும் என்று காங்கிரஸ் சபையின் வரவு-செலவு திட்டக்கணக்கு அலுவலகம் அனுமானிக்கிறது, இது ஒட்டுமொத்தமாக கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் பொது சுகாதார திட்டங்களுக்குச் செலவிடப்படும் தொகைக்கு நிகராகும்.
ட்ரம்ப் நிர்வாகம் இலக்கு வைத்திருப்பவைகளில் முதலாவதாக உள்ள சீனா மற்றும் ரஷ்யாவுடன் "வல்லரசு மோதல்களுக்கு" தயாரிப்பு செய்ய, அமெரிக்க ஆயுத தளவாடங்களை நவீனமாக்குவதற்கும் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கும் அளப்பரிய தொகைகளை அது விரிவுபடுத்தி வருகிறது. பென்டகன் அதன் மூன்று பிரிவுகளின் —கண்டம் விட்டு கண்டம் ஏவும் தொலைதூர ஏவுகணைகள், நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து செலுத்தப்படும் தொலைதூர ஏவுகணைகள் மற்றும் தந்திரமாக குண்டுவீசும் போர்விமானங்கள் ஆகியவற்றின்— அனைத்து அம்சங்களிலும் அணுசக்தி வல்லமையை நவீனமாக்குவதற்காக பத்தாண்டுகளில் 500 பில்லியன் டாலர் செலவிட எதிர்நோக்குகிறது, அதிகமாக "பயன்படுத்துவதற்குரிய" சேதம்-குறைந்த அணுஆயுத ஏவுகணைகளை அபிவிருத்தி செய்வது மற்றும் நிலைநிறுத்துவதும் அதில் உள்ளடங்கும்.
அதன் பொருளாதார நிலைமை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்ற போதும் கூட, உலக மேலாதிக்கத்தை தொடரும் நோக்கில், அமெரிக்க ஏகாதிபத்தியம் இராணுவ செலவுகளில் கூட்டாளிகளையும் எதிரிகளையும் ஒருபோல வெகுதூரத்திற்கு விஞ்சி நிற்கிறது. 2018 இல், அமெரிக்கா அதன் பொருளாதார எதிர்விரோதியான சீனாவைக் காட்டிலும் (250 பில்லியன் டாலர்) இரண்டரை மடங்கு அதிகமாகவும், அதற்கு மிகப்பெரிய ஆபத்தாக கூறிக் கொள்கின்ற ரஷ்யாவைக் காட்டிலும் (61.4 பில்லியன் டாலர்) பத்து மடங்கிற்கும் அதிகமாகவும் செலவிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கூறுவதானால், உலகின் இராணுவச் செலவுகளில் 36 சதவீதத்தைக் கணக்கில் ஏற்று, அமெரிக்காவுக்கு அதற்கடுத்திருக்கும் எட்டு நாடுகளின் கூட்டுத்தொகை எவ்வளவோ அந்தளவுக்கு அமெரிக்கா செலவிட்டுள்ளது.
இந்த அளப்பரிய இராணுவ ஆயத்தப்பாடு, ஒரு போராட்ட சாயல் கூட இல்லாமல், அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்து கன்னைகளின் ஆதரவுடன் நடத்தப்பட்டு வருகிறது. உண்மையில், ட்ரம்ப் மீதான ஜனநாயகக் கட்சியின் பிரதான விமர்சனம் வலதில் உள்ளது, அது இன்னும் அதிக இராணுவ ஆயத்தப்பாட்டையும் ரஷ்யாவை நோக்கி இன்னும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டையும் கோருகிறது.
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தலைமை அரபு கூட்டாளியான இரத்தக்கறைப் படிந்த சவூதி முடியாட்சி, அதன் பொருளாதார உற்பத்தி அளவில் இதற்கான பங்கை மிகப்பெரியளவில் விரிவாக்கி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.8 சதவீதம் அல்லது 67.6 பில்லியன் டாலராக உயர்த்தி உலகில் முன்னணிக்கு வந்த பின்னர், இராணுவச் செலவினங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஒபாமா நிர்வாகம் எட்டாண்டுகளாக அந்த மன்னராட்சிக்கு 110 பில்லியன் டாலருக்கும் அதிக மதிப்பிலான ஆயுத தளவாடங்களை வழங்கியது, ட்ரம்பின் கீழும் தொடர்ந்து ஆயுத தளவாடங்கள் வினியோகிக்கப்பட்டதோடு அவற்றில் பயிற்சியும் அளிக்கப்பட்டன. சவூதி அரேபியா நான்காண்டுகளுக்கும் மேலாக யேமனுக்கு எதிராக இடைவிடாது தாக்குதல் நடத்தி வருகிறது, அங்கே அடிமட்டத்திலிருக்கும் நிராயுதபாணியான மக்கள் மீது அது அமெரிக்கா வினியோகித்த குண்டுகள் மற்றும் போர்விமானங்களைத் தான் பயன்படுத்துகிறது, இதில் பத்தாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதோடு மில்லியன் கணக்கானவர்கள் பட்டினியின் விளிம்பில் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இழுபறியில் சிக்கியுள்ள ரஷ்யா இரண்டாவது ஆண்டாக அதன் செலவுகளில் சரிந்துள்ள நிலையில், முதல் ஐந்து நாடுகளில் கூட தகுதி பெறவில்லை, பிரான்சும் (63.8 பில்லியன் டாலர்) இந்தியாவும் (66.5 பில்லியன் டாலர்) அதை விஞ்சி சென்றுள்ளன. இரண்டாவதாக கூறப்பட்ட நாடு அதன் அண்டைநாடான பாகிஸ்தானின் இராணுவ ஆயத்தப்பாட்டை (11.4 பில்லியன் டாலர்) விஞ்சி நிற்கிறது. இவ்விரு தெற்காசிய நாடுகளும் இந்தாண்டின் தொடக்கத்தில் ஒன்றுடன் ஒன்று போருக்கு அருகில் சென்றன.
ஜேர்மன் உலக தரவரிசையில் அதன் ஒன்பதாவது இடத்திலிருந்து எட்டாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது, 2018 இல் அதன் இராணுவ செலவுக்காக அண்மித்து 50 பில்லியன் டாலர் செலவிட்ட அது, 2009 இக்குப் பின்னர் இருந்து 9 சதவீதமாக அதன் செலவுகளை அதிகரித்து வந்துள்ளது. பேர்லினின் கூட்டணி அரசாங்கம், ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமாக அதன் அந்தஸ்தைப் பலப்படுத்துவதற்காக வெளிநாட்டு இராணுவ தலையீடுகளில் அதன் பாத்திரத்தை அதிகரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அது 2025 இக்குள் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவீதத்தை அதன் இராணுவத்திற்காக செலவிட திட்டமிடுகிறது.
ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் கீழ் மாஸ்கோ, கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளுக்கான அதிகரித்து வரும் ஓர் அச்சுறுத்தல் என்று சித்தரிக்கப்பட்டு வருகின்ற அதேவேளையில், இங்கே அமெரிக்க ஜனநாயகத்தின் உயிர்பிழைப்பு சம்பந்தமான சித்தரிப்புகளைக் குறித்து குறிப்பிட வேண்டியதே இல்லை என்றாலும், நேட்டோ கூட்டணி (963 பில்லியன் டாலர்) ரஷ்யாவை விட அண்மித்து 16 க்கு 1 என்றளவில் அதிகமாக செலவிட்டது. உலகின் மிகப்பெரிய அணுஆயுத சக்திகளில் ஒன்றுடனான போருக்கு ஒரு சாத்தியமான வெடி திரியாக சேவையாற்றுவதற்காக, 2016 இக்குப் பின்னர் இருந்து, ஆயிரக் கணக்கான அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய சிப்பாய்கள் நேட்டோ அங்கத்துவ நாடுகளில் அல்லது ரஷ்யாவின் மேற்கு எல்லைக்கு அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
போலாந்து, 2018 இல் அதற்கு முந்தைய ஆண்டை விட 8.9 சதவீதம் அதிகமாகவும் மற்றும் 2009 ஐ விட அண்மித்து 50 சதவீதம் அதிகமாகவும், 11.6 பில்லியன் டாலர் செலவிட்டு, மத்திய ஐரோப்பாவில் இராணுவ கட்டமைப்பின் தாக்குமுகப்பாக ஆகியுள்ளது. ஏறக்குறைய 800 அமெரிக்க சிப்பாய்கள் தற்போது ரஷ்ய குடியேற்ற பகுதியான கலினின்கிராடில் இருந்து வெறும் 50 மைல்கள் தூரத்தில் சுழற்சி முறையில் போலாந்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர், பென்டகன் அங்கே "ட்ரம்ப் கோட்டை" என்று கூறப்படும் ஒரு நிரந்தர இராணுவ தளத்தைக் கட்டமைப்பதை நோக்கி நகர்ந்து வருகிறது.
இராணுவச் செலவுகளில் ஒப்பீட்டளவில் அதிகபட்ச வருடாந்தர உயர்வைக் கண்ட 15 நாடுகளில் எட்டு தென்கிழக்கு அல்லது மத்திய ஐரோப்பாவில் இருந்தன. லாட்வியா அதன் இராணுவ செலவினங்களை 24 சதவீத அளவுக்கு அதிகரித்தது, பல்கேரியா 23 சதவீதமும், உக்ரேன் 21 சதவீதமும், லித்துவேனியா மற்றும் ருமேனியா இரண்டும் செலவினங்களை 18 சதவீதமும் அதிகரித்தன. லித்துவேனியா 156 சதவீதம் அதன் இராணுவ செலவுகளை அதிகரித்து, கடந்த தசாப்த அதிகரிப்பு விகிதத்தில் ஐரோப்பாவிலேயே முன்னிலையில் உள்ளது.
ஆசியா மற்றும் ஓஷியானியாவில் செலவுகள் 500 பில்லியன் டாலரை எட்டியுள்ளது, இது சீனா, இந்தியா, ஜப்பான் (46.6 பில்லியன் டாலர்), தென் கொரியா (43.1 பில்லியன் டாலர்) மற்றும் ஆஸ்திரேலியா (26.7 பில்லியன் டாலர்) முன்னணியில் இருக்க, தொடர்ச்சியான 30 ஆண்டு செலவின உயர்வை குறித்தது. இந்த காலகட்டத்தில், ஒபாமாவினது ஆசியாவில் முன்னிலையின் கீழ் இராணுவ ஆயத்தப்படுத்தலும் மற்றும் தற்போது ட்ரம்பின் வர்த்தகப் போர் கொள்கைகளும் இரண்டின் மூலமாகவும், சீனாவின் வளர்ச்சியை எதிர்கொள்வதே அமெரிக்காவின் ஒருமுனைப்பாக இருந்துள்ளது.
SIPRI புள்ளிவிபரங்கள் என்ன எடுத்துக்காட்டுகின்றன என்றால், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு, பனிப்போர் முடிவுற்று, அது முதலாளித்துவ பொருளாதார ஒழுங்கின் "வெற்றியாக" பெரியளவில் பறைசாற்றப்பட்டு அண்மித்து மூன்று தசாப்தங்களுக்குப் பின்னரும், மனிதயினம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கீழ், புதிய ஆயுத போட்டியை முகங்கொடுக்கிறது, இது அணுஆயுத சக்திகளுக்கு இடையே ஒரு பேரழிவுகரமான உலக போர் வெடிப்பை அச்சுறுத்துகிறது.
முதல் மற்றும் இரண்டாம் உலக போர்களின் போது இருந்ததைப் போலவே, ஆதாரவளங்கள் மீதும் திணறடிக்கும் புவிசார் மூலோபாய முனைகள் மீதும் கட்டுப்பாட்டை எடுக்க, போட்டியிடும் தேசிய அரசுகளாக உலகம் பிளவுபட்டிருப்பது, உலகை மீண்டுமொருமுறை பேரழிவுக்குள் இழுக்க அச்சுறுத்துகிறது. போட்டியிடும் ஆளும் உயரடுக்குள் உலகின் தொழிலாள வர்க்கத்தை விலையாக கொடுத்து, அவற்றின் பிராந்திய மற்றும் உலகளாவிய பொருளாதார நலன்களைப் பெறுவதற்கான முயற்சியில் மிகப் பிரமாண்ட அளவிலான ஆதாரவளங்களை அவை வீணடித்து வருகின்றன.
வாஷிங்டன் டிசி இலும் மற்றும் ஐரோப்பாவின் தலைநகரங்களிலும் புதிய போர் குற்றங்களுக்குத் தயாரிப்பு செய்யப்பட்டு வருகின்ற நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கடந்த கால குற்றங்களை அம்பலப்படுத்தியவர்களான விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் மற்றும் இரகசிய ஆவண வெளியீட்டாளர்களான செல்சியா மானிங் மற்றும் எட்வார்ட் ஸ்னோவ்டன் ஆகியோர் மௌனமாக்கப்பட்டு வருகிறார்கள். இன்று உலகின் தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் முக்கிய கேள்வியே, சீர்திருத்தமா அல்லது புரட்சியா என்பதல்ல, மாறாக புரட்சியா அல்லது எதிர்புரட்சியா என்பதாகும். மொத்த மனிதகுலத்தையும் அச்சுறுத்துகின்ற போரை நோக்கிய இந்த பைத்தியக்காரத்தனமான முனைவை முடிவுக்குக் கொண்டு வர சர்வதேச தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்பட வேண்டும்.
சமீபத்திய காலத்தில், சோசலிசம் மீதான ஆர்வமும் சர்வதேச அளவில் வர்க்க போராட்டத்தின் வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது. பிரான்சில் மஞ்சள் சீருடை போராட்டங்களில் இருந்து, அல்ஜீரியாவில் பாரிய ஆர்ப்பாட்டங்கள், அமெரிக்காவில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் மெக்சிகோவில் மக்கில்லாடோரா வேலைநிறுத்தங்கள் வரையில், இந்த இயக்கம் முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் அமைப்புகளுக்கு எதிராகவும், அவற்றிலிருந்து சுயாதீனமாகவும் அபிவிருத்தி அடைந்துள்ளது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே, போரை, அதிவலதின் வளர்ச்சியை, அசான்ஜ் மற்றும் மானிங் வழக்கிற்கு இழுக்கப்படுவதை எதிர்க்க, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை வழங்க போராடி வருகிறது. போர் மற்றும் சமத்துவமின்மையை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகின்ற அனைவரும் சனிக்கிழமை மே 4 ஆம் தேதி 2019 சர்வதேச மே தின இணையவழி பேரணியின் நேரடி ஒலிபரப்பில் கலந்து கொள்ளவும் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தில் இணையவும் பதிவு செய்யவும்!