Print Version|Feedback
Le Pen’s neo-fascist National Rally leads European election polls in France
பிரான்சில் லு பென்னின் நவ-பாசிசவாத தேசிய பேரணி ஐரோப்பிய தேர்தல் கருத்துக்கணிப்புகளில் முன்னணியில் உள்ளது
By Will Morrow
21 May 2019
ஞாயிற்றுக்கிழமை, மே 26 இல் ஐரோப்பிய தேர்தல்கள் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், மரீன் லு பென்னின் தீவிர-வலது தேசிய பேரணி (RN) பிரான்சில் வேறெந்த கட்சியை விடவும் அதிக ஆசனங்களை பெறுமென கருத்துக்கணிப்புகள் முன்கணிக்கின்றன.
வெள்ளிக்கிழமை பிரசுரிக்கப்பட்ட Harris Interactive/Epoka கருத்துக்கணிப்பு, ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் குடியரசை நோக்கிய அணிவகுப்பு (LREM) கட்சி மற்றும் பிரான்சுவா பேய்ரூவின் ஜனநாயக இயக்கம் (MoDem) ஆகியவற்றின் கூட்டு வேட்பாளர் பட்டியலை விட ஒரு சதவீதம் அதிகமாக, லு பென் கட்சிக்கு 23.5 சதவீதம் வழங்கியது. கடந்த வாரம் வெளியான இன்னும் பல கருத்துக்கணிப்புகளும் சிறிய வித்தியாசத்திலான இதே முன்னிலையை மதிப்பிடுகின்றன.
இந்த கருத்துக்கணிப்புகள் ஐரோப்பா எங்கிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தீவிர வலதுசாரி சக்திகள் பலமடைந்து வருவதிலிருந்து தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் அபாயத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. 751 ஆசனங்களுக்கான ஞாயிற்றுக்கிழமை தேர்தல்களில், மத்தேயோ சல்வீனியின் இத்தாலியா லெகா, ஆஸ்திரியாவின் சுதந்திரக் கட்சி மற்றும் நைஜல் ஃபாராஜின் பிரெக்ஸிட் கட்சி உட்பட அதிவலது கட்சிகள் 175 ஆசனங்களை ஜெயிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு இடத்திலும், அவர்கள் "மத்திய-இடது" அல்லது சமூக ஜனநாயக அரசாங்கங்கள் என்றழைக்கப்படுபவையால் பல பத்தாண்டுகளாக பின்பற்றப்பட்ட சிக்கன நடவடிக்கைகள், இராணுவவாத மற்றும் பொலிஸ்-அரசு கொள்கைகள் உருவாக்கிய சமூக நெருக்கடி மற்றும் கோபத்தைச் சுரண்டி வருகின்றன.
பிரெஞ்சு தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களிடையே தீவிர-வலது மீதிருந்த பாரிய கோபத்தின் காரணமாக, 2017 தேர்தல்களின் இரண்டாம் சுற்றில் லு பென்னுடன் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரத்திற்கு வந்த மக்ரோன் அரசாங்கமே கூட, இரண்டாம் உலக போரின் போதிருந்த நாஜி-ஒத்துழைப்புவாத ஆட்சிக்குப் பிந்தைய மிகவும் வலதுசாரி அரசாங்கமாகும்.
அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர் உடனடியாக, “செல்வந்தர்களின் அந்த ஜனாதிபதி" பிரான்சின் நிதியியல் உயரடுக்கின் மீதான சொத்து வரிகளைக் குறைத்தார், தேசிய இரயில்வே வலையமைப்பைத் தனியார்மயப்படுத்தினார், பொதுக் கல்வி மற்றும் மருத்துவக் கவனிப்பில் வெட்டுக்களை அறிவித்தார், பெருநிறுவனங்கள் தொழிலாளர்களைப் பாரியளவில் பணியிலிருந்து நீக்க வசதியாக தொழில் விதிமுறை சட்டங்களைக் கிழித்தெறிந்தார். அடுத்தாண்டு 3,000 வேலைகளை வெட்ட உத்தேசித்துள்ள, பல கிளைகளைக் கொண்ட பல்பொருள் பெருஅங்காடி Carrefour உட்பட பணிநீக்கங்களுக்கான திட்டங்களை அறிவிப்பதற்கு 69 பெரும்பாலும் மிகப்பெரிய பெருநிறுவனங்கள் அந்த புதிய சட்டங்களைப் பயன்படுத்தி இருப்பதாக அரசாங்கம் டிசம்பரில் குறிப்பிட்டது.
அமெரிக்காவை எதிர்த்தும் சுதந்திரமாகவும் போராடுவது உட்பட நவ-காலனித்துவ போர்களைத் தொடுப்பதற்காக, ஓர் ஐரோப்பிய இராணுவத்தைக் கட்டமைப்பதற்கான மக்ரோனின் கோரிக்கைகளுடன் இந்த தாக்குதல்கள் சேர்ந்துள்ளன.
சமூக சமத்துவமின்மையையும் மற்றும் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளுடன் கூடிய அரசாங்கத்தின் கொள்கைகளையும் எதிர்த்த "மஞ்சள் சீருடை" போராட்டங்களின் வெடிப்புக்கு, அந்த அரசாங்கம் 7,000 இக்கும் அதிகமானவர்களைக் கைது செய்தும், ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வதில் இருந்து தனிநபர்களுக்கு தடைவிதிக்க பொலிஸை அனுமதிக்கும் போராட்ட-விரோத சட்டங்களைத் திணித்தும் மற்றும் போராட்டக்காரர்களை இரப்பர் குண்டுகள், நீர்பீய்ச்சிகள் மற்றும் பாதிப்பேற்படுத்தும் கையெறி குண்டுகளைக் கொண்டு தாக்கியும் விடையிறுத்துள்ளது.
“மஞ்சள் சீருடையாளர்களுக்கு" எதிராக இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கு முன்னதாக, மக்ரோன் கடந்தாண்டு பாசிச ஒத்துழைப்பாளர் பிலிப் பெத்தனின் மரபைப் புகழ்ந்தார்.
இந்த ஐரோப்பிய தேர்தல்கள் மக்ரோனின் வெறுக்கப்படும் அரசாங்கம் மீதான ஒரு "கருத்து வாக்கெடுப்பு" என்ற லு பென் வாதத்தின் அடிப்படையில் தேசிய பேரணியின் பிரச்சாரம் அமைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மக்ரோன் பெரும்பான்மை பெற்றால், அவர் பொலிஸ் வன்முறையைத் தீவிரப்படுத்துவதற்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டிருப்பதாக அதை எடுத்துக் கொள்வார் என்று லு பென் கடந்த வாரம் எச்சரித்தார். “மஞ்சள் சீருடையாளர்களை” தாக்கி வருகின்ற நவ-பாசிச கூட்டணியின் பொலிஸ் சங்கமும் பொலிஸ் சக்திகளும் மிகப் பரந்தளவில் லு பென்னுக்கு ஆதரவான ஒரு முக்கிய அடித்தளமாக உள்ள நிலையில், இந்த நிலைப்பாடு முற்றிலும் எரிச்சலூட்டுவதாகும்.
மறுபுறம் மக்ரோனின் கட்சியோ முஸ்லீம்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மீதான தேசிய பேரணியின் பாசிசவாத தாக்குதல்களின் அடிப்படையையோ, அல்லது அதன் வக்கிரமான தொழிலாள வர்க்க விரோத வேலைத்திட்டத்தையோ எதிர்க்கவில்லை, மாறாக அது லு பென்னை "வெளிநாட்டு சக்திகளின்" ஒரு முகவராக கண்டனம் செய்கிறது. இவ்விதத்தில் அது ஒரு வலதுசாரி தேசியவாதத்தின் மீதிருந்து நவ-பாசிசவாத லு பென்னைத் தாக்கி வருகிறது.
இது அமெரிக்காவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக ஜனநாயகக் கட்சி நடத்தும் பிரச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது. ட்ரம்ப் நிர்வாகம் மீதான தொழிலாள-வர்க்க எதிர்ப்பை ஜனநாயகக் கட்சி ஒரு வலதுசாரி, தேசியவாத திசையில் திருப்பவும் மற்றும் ரஷ்யாவுடன் இன்னும் அதிக ஆக்ரோஷமான மோதலுக்கான அமெரிக்க உளவுத்துறை எந்திரத்தின் கோரிக்கைகளை வெளிப்படுத்தவும், ட்ரம்பை ஒரு ரஷ்ய முகவராக கூறும் வாதங்களில் ஒருமுனைப்பட்டுள்ளது.
ஐரோப்பிய தேர்தல்களில் LREM-MoDem பிரச்சாரத்திற்கான முன்னணி வேட்பாளர் Nathalie Loiseau மே 16 அன்று Le Monde இக்கு அளித்த ஒரு பேட்டியில், “மரீன் லு பென்னும் அவர் நண்பர்களும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் [ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர்] புட்டினின் பிரதிநிதிகளாக இருப்பார்கள்,” என்றார்.
LREM-MoDem இன் வேட்பாளரான Gilles Boyer மே 14 இல் L’Opinion இக்குக் கூறுகையில், தேசிய பேரணி "நமது விரோதியாக விளையாடி வரும் இக்கட்சி, ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், நமது பொருளாதார எதிரியாக உள்ளது. அது பிரெஞ்சு பாதுகாப்பு நலன்களை விட ட்ரம்ப் மற்றும் புட்டினுக்கு நெருக்கமாக உள்ளது. தேசிய பேரணி தன்னை தேசியவாதியாக குறிப்பிட்டுக் கொண்டாலும், ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், இத்தேர்தலில் அது வெளிநாட்டு கட்சியாக உள்ளது,” என்றார்.
சர்வதேச அளவில் நடந்து வருவதைப் போலவே பிரான்சிலும், தொழிலாள வர்க்கம் போராட்டத்திற்கு நுழைந்து வருவதுடன், வலது நோக்கி அல்ல, இடதை நோக்கி திரும்பி வருகிறது. கடந்த ஆறு மாதங்களாக ஒவ்வொரு வாரமும் நடந்து வருகின்ற நூறாயிரக் கணக்கானவர்களின் "மஞ்சள் சீருடை" போராட்டங்கள், அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை மற்றும் வறுமைக்கு எதிரான எதிர்ப்பினாலும் மற்றும் செல்வவளத்தைச் செல்வந்தர்களிடம் இருந்து தொழிலாள வர்க்கத்திற்கு மறுபகிர்வு செய்வது மற்றும் சிக்கன நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான மேலோங்கிய கோரிக்கைகளாலும் உந்தப்பட்டுள்ளன.
இவை, நான்கு தசாப்தங்களுக்கும் அதிக காலமாக நடத்தப்பட்டு வந்துள்ள சமூக தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச மேலெழுச்சியின் பாகமாக உள்ளன. இந்த காலப்பகுதியில் பெருநிறுவன-ஆதரவு தொழிற்சங்கங்களால் வர்க்க போராட்டம் நசுக்கப்பட்டன.
இத்தகைய நிலைமைகளில் இருந்து லு பென்னின் கட்சி அரசியல்ரீதியில் ஆதாயமடைந்து வருகிறது என்ற உண்மையானது, ஜோன் லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) உட்பட பிரெஞ்சு போலி-இடது கட்சிகளின் அழுகிய மற்றும் வலதுசாரி குணாம்சத்தின் விளைவாகும்.
ஆரம்பத்தில் "மஞ்சள் சீருடை" போராட்டங்களை வலதுசாரியாக கண்டித்த பின்னர், இந்த சமூக தட்டு அந்த இயக்கத்தை மூச்சடைக்கச் செய்வதற்கான ஒரு மூலோபாயத்திற்கு மாறியது. வெளிப்படையாக புரட்சியை எதிர்த்த மெலோன்சோன், டிசம்பரில் அவர் வலைப்பதிவில் அரசாங்கத்தை நாடாளுமன்றத்திலிருந்து அகற்றுவதற்கான வெற்று தீர்மானங்கள் மூலமாக "சம்பவங்களுக்கு ஒரு அமைப்புரீதியிலான தீர்வை நாம் காண வேண்டும்" என்று அறிவித்து, பெருநிறுவனமயப்பட்ட, தொழிலாள வர்க்க விரோத தொழிற்சங்க எந்திரங்களை ஊக்குவித்தார். மெலோன்சோன் 2017 ஜனாதிபதி தேர்தல்களில் 7 மில்லியன் வாக்குகள் வென்றிருந்த போதும், "மஞ்சள் சீருடையாளர்களை" தண்டிக்கும் வகையில் மக்ரோனின் வக்கிரமான பொலிஸ் ஒடுக்குமுறையை எதிர்த்து எந்த பாரிய போராட்டங்களுக்கும் அழைப்பு விடுக்கவில்லை.
எதிலிருந்து மக்ரோன் அரசாங்கம் மேலெழுந்ததோ அதே சோசலிஸ்ட் கட்சியுடன் (PS) சேர்ந்து ஒரு "ஜனரஞ்சக கூட்டமைப்பை" உருவாக்க அவர் தயாராக இருப்பதாக கடந்த மாதம் மெலோன்சோன் அறிவித்தார். மக்ரோன் அவருக்கு முன்பிருந்த சோசலிஸ்ட் கட்சியினது பிரான்சுவா ஹோலாண்டின் தொழிலாள வர்க்க விரோத கொள்கைகளை மட்டுமே தீவிரப்படுத்தி உள்ளார். தசாப்தங்களாக சோசலிஸ்ட் கட்சி வகித்த பாத்திரம், தற்போதைய ஐரோப்பிய தேர்தல் கருத்துக்கணிப்புகளில் அது வெறும் 5 சதவீதமாக சரிவதற்கு இட்டுச் சென்றுள்ளது, அதன் அரசாங்கத்தில் தான் மெலோன்சோன் தனிப்பட்டரீதியில் 2008 வரையில் ஒரு செனட்டராக பங்கெடுத்திருந்தார்.
ஒரு வலதுசாரி முதலாளித்துவ அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தால் அதிவலதின் வளர்ச்சியை எதிர்ப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற மோசடியான அடித்தளத்தில், புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியும் சரி மெலோன்சோனும் சரி, 2017 தேர்தல்களில் மறைமுகமாக மக்ரோனுக்கு வாக்களிக்க அழைப்புவிடுத்தனர். இவ்வாறு ஊக்குவிக்கும் அவர்களின் கொள்கையானது, தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு இயக்கத்திற்கும் விரோதமாக உள்ள தனிச்சலுகை கொண்ட நடுத்தர வர்க்கத்தின் நலன்களைப் பிரதிபலிக்கிறது.
லு பென்னுக்கான வாக்கு அதிகரிப்பது இந்த முன்னோக்கின் திவால்நிலைமையை எடுத்துக்காட்டுகிறது. இது 2017 பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல்களின் இரண்டாவது சுற்றில் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) மட்டுமே முன்னெடுத்த முன்னோக்கின் சரியானதன்மையை உறுதிப்படுத்துகிறது. சோசலிச சமத்துவக் கட்சி (SEP), இந்த ஒட்டுமொத்த முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்திற்கு எதிராகவும் மற்றும் அவை பாதுகாக்கும் இந்த இலாபநோக்கு அமைப்புமுறைக்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான புரட்சிகர இயக்கத்தைக் கட்டமைப்பதே அதிவலதுக்கு எதிரான போராட்டத்திற்கான ஒரே முன்னோக்கிய பாதை என்று வலியுறுத்தி, அத்தேர்தலைச் செயலூக்கத்துடன் புறக்கணிக்குமாறு தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்புவிடுத்தது.
ஒவ்வொரு நாட்டிலும், அதிவலதையும் பாசிசவாத சக்திகளையும் அரசே ஊக்குவிக்கப்பதானது, சர்வாதிகாரத்தின் மூலமாக போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதற்காக ஆளும் வர்க்கத்தின் உந்துதலாலும் மற்றும் சமூக சமத்துவமின்மையின் முடிவில்லா வளர்ச்சியாலும் உந்தப்பட்டுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் போராட்டங்களை ஒரு சோசலிச முன்னோக்கைக் கொண்டு ஆயுதபாணியாக்க, சோசலிச சமத்துவக் கட்சியை (SEP) ஒரு புட்சிகரத் தலைமையாக கட்டமைப்பதே தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் முக்கிய பணியாகும்.